வேர்கள் (உருது மூலம்- இஸ்மத் சுக்தாய்)

This entry is part 3 of 43 in the series 17 ஜூன் 2012

தமிழில் ராகவன் தம்பி

அனைவரின் முகங்களும் வெளுத்திருந்தன.  வீட்டில் அன்று சமையல் எதுவும் நடக்கவில்லை.   பள்ளிக்கூடங்களில் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்ட ஆறாவது நாள் அது.  குழந்தைகள் வீட்டை அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.   குழந்தைகள் வீடு முழுதும் அலைந்து திரிந்தார்கள்.  சிறுபிள்ளைத்தனமான சண்டைகள், கூச்சல்,  ஆரவாரம் என ரகளைகளில் ஈடுபட்டும் அங்கங்கு தாவித் தாவி குட்டிக்கரணங்கள் அடித்தும் வீட்டை இரண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்.    பதினைந்து ஆகஸ்டு வந்து போனதே தெரியாதது போலக் குதித்துக் கொண்டிருந்தார்கள்.   ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறியதையும் அப்படி வெளியேறிய போது பல ஆண்டுகளுக்கு ஆறாத ரணங்களைக் கிளறி விட்டுச் சென்றதையும் இந்தக் குட்டிப் பிசாசுகள்  உணர்ந்திருக்க வில்லை.   அந்த நேரத்தில்   சில விகாரமான கரங்கள்  மழுங்கிப்போன கத்திகளை வைத்து இந்தியாவை  அறுத்துப் போட்டன.   அதன் விளைவாக பல்லாயிரம்  ரத்தக் குழாய்கள் அரக்கத்தனமாக வெட்டித் திறந்து விடப்பட்டன.   எங்கும்  குருதி ஆறுகள் வழிந்தோடின.  அங்கங்கு திறந்து போட்ட  காயங்களைத் தைக்க எவருக்கும் வலுவின்றிப்  போனது.

சாதாரணமான நாட்களாக இருந்திருந்தால் இந்தக் குட்டிப் பிசாசுகளை  வெளியில் விளையாட அனுப்பியிருக்கலாம்.  ஆனால் சில நாட்களாக நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.  முஸ்லிம்கள் அந்த நகரத்தில் ஏதோ ஒருவகையான முற்றுகையால் சூழப்பட்டது போல வீடுகளுக்குள்  முடக்கப்பட்டார்கள்.  வீடுகள் அனைத்தும் வெளிப்புறமாகத் தாளிடப்பட்டு  காவலர்கள் தெருக்களில்  ரோந்து சுற்றிக்கொண்டிருந்தார்கள்.  அதனால் வீட்டுக்கு உள்ளேயே  என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ஊரெங்கும் பதட்டம் நிலவினாலும் சிவில் லைன்ஸ் பகுதி மட்டும் எப்போதும் உள்ளது போலவே அப்போதும் அமைதியாகவே இருந்தது.  ஆனாலும் குழந்தைகள், வறுமை, அறியாமை போன்ற விஷயங்கள் எங்கெல்லாம் அளவுக்கு மீறிப் போகிறதோ அந்த இடங்கள் எப்போதும்  மதவெறியர்களின்  வேட்டைக்களங்களாக மாறிவிடுகின்றன.   இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, பஞ்சாபில் இருந்து இங்கு வந்து குடியேறும் அகதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்தது.  அதனால் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தில் பதற்றம் நிலவத் துவங்கியது.  குப்பைத் தொட்டிகள் கிளறப்பட்டு குப்பைகளும் கூளங்களும் வீதிகளெங்கும் சிதறடிக்கப்பட்டன.

இரண்டு இடங்களில் சச்சரவு வெளிப்படையாக வெடித்தது.  ஆனாலும், மேவார் மாகாணத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தங்களின் பெயர்கள், உருவங்கள் மற்றும் ஆடைகளால் ஒருவருக்கு ஒருவர் அதிகம் வேறுபாடு கொண்டிருக்கவில்லை.  வெளியில் இருந்து மேவாருக்கு  வந்த முஸ்லிம்கள் எளிதாக அடையாளம் காணப்பட்டார்கள்.  ஆகஸ்டு பதினைந்தாம் தேதி என்ன நடக்கப்போகிறது என்கிற விஷயம் அரசல் புரசலாத் தெரிந்திருந்ததால் அவர்கள் ஏற்கனவே பாகிஸ்தான் எல்லையைக் கடந்து விட்டார்கள்.  ஆனால் அந்த மாகாணத்தில் நீண்ட காலம் வசித்த வந்தவர்களுக்கு இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிலவும் சிக்கலான பிரச்னைகள் குறித்து அறிந்து வைத்திருக்கவோ அது குறித்து விவாதிக்கவோ போதிய ஞானமோ தகுதியோ இல்லாமல் இருந்தார்கள்.  யாருக்கெல்லாம் விஷயம் பிடிபட்டதோ அவர்கள் எல்லாம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுக்கத் துவங்கினார்கள்.  மீதி இருந்த ஒரு சிலர், பாகிஸ்தானில் நான்கு சேர் கோதுமை ஒரு ரூபாய் மட்டுமே என்றும் ஒருமுழ நீளமுள்ள நான் ரொட்டி வெறும் காலணாவுக்குக் கிடைக்கும் என்பது போன்ற வதந்திகளையும் நம்பினார்கள்.  இவை போன்ற வதந்திகளால் கவரப்பட்டு இங்கிருந்துவெளியேறி பாகிஸ்தானில் குடியேறத் தீர்மானித்தார்கள்.  ஆனால் அந்த நான்கு சேர் கோதுமையை வாங்க ஒரு ரூபாயும் ஒரு முழ நீளமுள்ள நான் ரொட்டியை வாங்குவதற்குக் காலணாவும் மிக அவசியம்  என்பதை உணர்ந்து சிலர் மீண்டும் இங்கு திரும்பினார்கள்.  அந்த ரூபாயும் காலணாவும் இலவசமாகக் கிடைக்காது என்பதையும் அவை வயல்களில் விளையும் பொருட்கள் அல்ல என்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.  அவற்றைப் பெறுவது என்பது தன்னுடைய இருத்தலுக்கான போராட்டம் போலவே மிகவும் கடினமான விஷயம் என்பதையும் அறிந்து கொண்டார்கள்.

எனவே, சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களை வெளியில் தூக்கி எறியவேண்டும் என்று வெளிப்படையாகத் தீர்மானம் செய்த  பல சிக்கலான பிரச்னைகள் வெளிவந்தன.  அந்த ஊரின் டாகூர்கள் அதிகாரிகளிடம் மிகவும் தெளிவாகச் சொன்னார்கள்.     “ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் சொல்ல வேண்டும்.  இங்கு ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டறக் கலந்திருக்கிறாம்.  அவர்களைத் தனிதனியாகப்  பிரித்து அடையாளம் காணுவதற்கு நீங்கள் நிறைய அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.  அந்த வேலை அரசாங்கத்துக்குத் தேவையற்ற  செலவை அதிகரிக்கும்.  ஆனால் இங்கு குடியேறும் அகதிகளுக்கு நிலம் ஒதுக்க அரசாங்கத்துக்குப் பணம் தேவை என்றால் அதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.  காடுகளில் வசிக்கும் மிருகங்களைத்தான் எந்த நேரத்தில் வேண்டுமானால் வெளியேற்றலாம்.  மனிதர்களை அப்படிச் செய்ய முடியாது” என்று உறுதியாக நின்றார்கள்.

வெகுசில குடும்பங்கள் மட்டுமே அங்கு தங்கி நின்றன. அவர்களில் பெரும்பாலானோர் மஹாராஜாவிடம் ஊழியத்தில் இருப்பவர்கள்.  எனவே அவர்கள் அங்கிருந்து வெளியேறுவது என்ற கேள்விக்கே இடமில்லாமல் போனது.  அவர்களில் ஒருசிலர் தங்கள் உடமைகளைக் கட்டிக் கொண்டு கிளம்புவதற்கும் ஆயத்தமாக இருந்தார்கள்.  எங்கள் குடும்பமும் அவற்றில் ஒன்றாகும்.  பர்ரே பாய் அஜ்மீரில் இருந்து திரும்பி வரும்  வரை அவசரம் ஒன்றும் இல்லை.  ஆனால் அவர் திரும்பி வந்த அடுத்த கணம் பீதியைக் கிளப்பினார்.  ஆனாலும் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.  சொல்லப்போனால், சப்பன் மியான் (அல்லா அவருக்கு எல்லா வளங்களும் அருளட்டும்) சில தந்திரமான காரியங்கள் செய்திருக்காவிட்டால் இவரை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள்.  பர்ரே பாய், தன் குடும்பத்தினர் பாகிஸ்தானில் குடியேற வேண்டும் என்று வற்புறுத்தியது எவ்விதப் பயனும் அளிக்கவில்லை.    பர்ரே பாய் கிட்டத்தட்ட அந்த எண்ணத்தைக் கைவிடத் துவங்கிய நேரம், சப்பன் மியான் பள்ளிக்கூடச் சுவரில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று எழுதலாம் என்று  தீர்மானித்தார்.  ரூப்சந்த்ஜியின் பிள்ளைகள் அந்தச் சுவரில் “அகண்ட் ஹிந்துஸ்தான்” என்று எழுதத்  தயாராக இருந்தார்கள்.  இது பெரும் சண்டையிலும்  அச்சுறுத்தலிலும் பரஸ்பரம் கொலை மிரட்டலிலும் முடிந்தது.  நிலைமை மோசமானதும், போலீஸ் வரவழைக்கப்பட்டது.  போலீசார் முஸ்லிம் சிறுவர்களை லாரியில் ஏற்றி அவரவர் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பினார்கள்.

இந்த சிறுவர்கள் தங்கள் வீடுகளை அடைந்ததும் அவர்களை எப்போதும் காலரா, வாந்திபேதி வாரிக்கொண்டு போகவேண்டும் என்று சாபமிடும் தாய்மார்கள் வீதிக்கு ஓடிவந்து அவர்களை மார்புறத் தழுவிக் கொண்டார்கள்.  சகஜமான நிலைமை இருந்தபோது ரூப்சந்த்ஜியின் பிள்ளைகளுடன் சண்டையில் ஈடுபட்டு சப்பா வீடு திரும்பினான் என்றால், துல்ஹன் பாய் அவன் கன்னத்தில் சில அறைகள் விட்டு ரூப்சந்த்ஜி வீட்டுக்குப் போய் காயத்துக்கு விளக்கெண்ணெய் தடவிக்கொண்டு கொஞ்சம் கொயினா மருந்தையும் வாங்கிக் குடித்து வரச்சொல்லி  உதைத்து அனுப்பி இருப்பாள்.  ரூப்சந்த்ஜி எங்கள் வீட்டின் குடும்ப வைத்தியர் மட்டுமல்லாது அப்பாவின் நீண்டகால சிநேகிதரும் கூட.  அவருடைய மகன்கள் என்னுடைய சகோதரர்களின் நண்பர்களாகவும் அவருடைய மருமகள்கள் என்னுடைய அண்ணிமார்களின் சிநேகிதிகளாகவும் இருந்தனர்.  இந்த நெருங்கிய நட்பு குழந்தைகளிடையிலும் நிலவியது.  இரு குடும்பங்களும் மூன்று தலைமுறைகளுக்கு மேல் ஒருவருக்கு ஒருவர் நெருங்கிய உறவை வளர்த்திருந்தோம்.  நாட்டின் பிரிவினை இந்த உறவில் என்றாவது பிளவை ஏற்படுத்தும் என்ற சிறிய சந்தேகம் கூட எங்களில் யாருக்கும் இருந்தது இல்லை.

முஸ்லிம் லீக், காங்கிரஸ் மற்றும் ஹிந்துமஹாசபாவின் தீவிர உறுப்பினர்கள் இரு குடும்பங்களிலும் இருந்தார்கள்.  அவர்கள் மதம் மற்றும் அரசியல் தொடர்பான காரசாரமான விவாதங்களிலும் பலமுறை ஈடுபட்டிருக்கிறார்கள்.  ஆனால் இந்த விவாதங்கள் எல்லாமே எப்போதும் ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டி அல்லது கால்பந்துப் போட்டி போலத்தான் காட்சியளிக்கும்.  அப்பா காங்கிரஸ்வாலாவாக இருந்தால் டாக்டர் சாஹிப்பும் பர்ரே பாயும் லீகின் ஆதரவாளர்களாக இருந்தார்கள்.  கியான் சந்த் மஹாசபா ஆதரவாளராக இருப்பார்.  மஞ்ஜ்லே பாய் கம்யூனிஸ்டாகவும் குலாப் சந்த் சோஷலிஸ்டாகவும் இருப்பார்கள்.  பெண்கள் தங்கள் கணவன்மார்களின் கட்சியை ஆதரித்தார்கள்.  குழந்தைகள் தகப்பன்மார்களின் கட்சியை ஆதரித்தார்கள்.   விவாதங்கள் பலவற்றுக்கும் காங்கிரஸ்வாலாக்களே அடிகோலியிருப்பார்கள்.  கம்யூனிஸ்டுகள் மீதும் சோஷலிஸ்டுகள் மீதும் வசைமாரி பொழியப்படும்.  ஆனால் அவர்கள் இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் பக்கம் சேர்ந்து விடுவார்கள்.  இது, மஹாசபா மற்றும் லீகின் ஆதரவாளர்களை ஒன்றாகப் பேச வைக்க வழிவகுக்கும்.  இந்த இரு கோஷ்டியும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக இருந்தாலும் காங்கிரஸ்வாலாக்களை தாக்குவதற்கு ஒன்றாக சேர்ந்து விடுவார்கள்.  எப்படியோ சில ஆண்டுகளாக லீக், மஹசபா இரண்டுக்கும் ஆதரவு அமோகப் பெருகிக் கொண்டிருந்தது.  காங்கிரசின் பாடு சற்று கந்தரகோளமாகிப் போனது.  பர்ரே பாயின் தலைமையில் இருகுடும்பங்களிலும் இருந்த காங்கிரஸ்வாலாக்கள் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் காக்க முன்வந்த பாதுகாவலர்கள் போல நடந்துகொண்டார்கள்.  இன்னொருபுறம் கியான்சந்த் தலைமையில் ஒரு சிறு குழுவாக சேவக் சங் துவங்கியது.  ஆனால் இது பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் கொண்டிருந்த நட்பிலும் பாசத்திலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

“என்னோட லுல்லு முன்னியைத்  தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ளமாட்டான்” என்று மஹாசபா கியான்சந்த், லீக் ஆதரவாளரான முன்னியின் தந்தையிடம் சொல்வார்.  “ரொம்ப நல்லது.  போய் உன் மருமகளுக்கு தங்கக் கொலுசு வாங்கி வா” என்று லீக் காரர், மஹாசபாவிடம் கேலியாக சொல்வார்.

“யப்பா, அந்தக் கொலுசு தங்க முலாம் பூசினதாக இல்லாமல் சுத்தத் தங்கமாக இருக்கும்னு நினைக்கிறேன்” என்று கியான் சந்தின் தொழிலைக் கேலி செய்து  உசுப்பேற்றுவார் பர்ரே பாய்.

நேஷனல் குவார்டுகள், சுவர்களில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று எழுதினால் சேவக் சங் ஆட்கள் அதை முற்றாக அழித்து விட்டு, “அகண்ட் ஹிந்துஸ்தான்” என்று எழுதி வைப்பார்கள்.  பாகிஸ்தான் என்கிற தேசம் உருவாகும் என்ற விஷயம் பற்றிய ஹேஷ்யங்களும் வதந்திகளும் உலவிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இப்படி எல்லாம் நடந்து கொண்டிருந்தது.

அப்பாவும் ரூப்சந்திஜியும் இவற்றையெல்லாம் கேட்டுவிட்டு லேசாகப் புன்னகைப்பார்கள்.  ஒருங்கிணைந்த ஆசியாவைப் பற்றிய திட்டங்கள் குறித்து அவர்கள் எப்போதும் பேசிக் கொண்டு இருப்பார்கள்.

இந்த அரசியல் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் அம்மாவும் சாச்சியும் கொத்துமல்லி விதை பற்றியும் மஞ்சள் கிழங்கு பற்றியும் மகள்களின் சீர்வரிசைகள் பற்றியும் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள்.     மருமகள்கள் தங்களுக்குள் மற்றவர்களின் அலங்காரம் பற்றிக் கேலியாகப் பேசுவதில் தீவிரமாக இருப்பார்கள்.  உப்பு, மிளகு தவிர மருந்துகளும் டாக்டர் சாஹிப் வீட்டில் இருந்து எங்களுக்கு வந்து கொண்டிருந்தன.  ஒருத்தர் தும்மினால் அடுத்தவர் அங்கு போய் நிற்பார்.  யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் அம்மா வாய்க்கு ருசியாக இருக்கட்டும் என்று சப்பாத்தியும் கெட்டியான பருப்பு மற்றும் தயிர் வடையை செய்வாள்.  டாக்டர் சாஹிப்புக்கு அழைப்பு செல்லும்.  அவர் தன்னுடைய பேரப்பிள்ளைகளைத் தாங்கலாகப் பிடித்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுப் போவார்.

“அங்கே எல்லாம் சாப்பிடாதே” என்று அவருடைய மனைவி தடுப்பாள்.

“அப்புறம் அவங்க கிட்டே இருந்து மருந்துக்கு பணம் எப்படி வசூலிக்கிறது?  லாலாவையும் சன்னியையும் கூட சாப்பாட்டுக்கு அங்கே அனுப்பி வை” என்று அம்மாவிடம் சொல்வார்.

“ஹே ராம்.  அநியாயத்துக்கு வெட்கம் கெட்ட ஜென்மங்களாக  இருக்கே” என்று தலையில் அடித்துக் கொள்வாள்.

அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டால் பெரும் வேடிக்கையாக இருக்கும்.   “அந்தக் கோமாளி எனக்கு சிகிச்சை அளிக்க நான் விடமாட்டேன்” என்று சொல்வாள்.  ஆனால் பக்கத்து நகரம் வரை பயணம் செய்து மருத்துவரைக் கூட்டி வருவதற்கு யாரிடம் நேரமிருக்கிறது.  வீட்டிலேயே மருத்துவரை வைத்துக் கொண்டு எதற்கு வெளியில் போகவேண்டும்?  அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததைக் கேள்விப்பட்ட அடுத்த நிமிடம் டாக்டர் சாஹிப் வீட்டுக்கு விரைந்து வந்துவிடுவார்.

“இவ்வளவு அதிகமாகப்  புலாவ்-ஜர்தாவை முழுங்கினால் அப்புறம் உடம்பு கெடாமல் என்ன ஆகும்? என்று அம்மாவை கேலி செய்வார்.  பர்தாவின் பின்னால் இருந்து அம்மா கர்ஜிப்பாள்.  “எல்லோரையும் உன்னைப் போல நினைச்சியா?”

“ஏன் இப்படி நடிக்கணும்?  என்னைப் பார்க்கணும்னா சொல்லி அனுப்பு.  நான் வந்துடறேன்.  அதுக்காக இப்படி உடம்பு சரியில்லைன்னு ஏன் நடிக்கணும்? என்று குறும்புத்தனம் கலந்த புன்னகையுடன் டாக்டர் சாஹிப் அம்மாவை சீண்டுவார்.  அம்மா கையை வெடுக்கென்று இழுத்துக் கொள்வாள்.  முணுமுணுவென்று சாபமிடுவாள்.  அப்பா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அனுபவித்து சிரிப்பார்.

டாக்டர் சாஹிப் எங்கள் வீட்டில் யாராவது நோயாளியைப் பார்க்க வந்தால் எல்லோரும் ஏதேனும் ஒரு வியாதியைப் பற்றிய புகாருடன் தன்னைப் பரிசோதிக்க வேண்டும் என்றவேண்டுகோளுடன்  அவர் முன்பு வரிசையில் நிற்பார்கள்.  என்னை என்ன மிருக வைத்தியன்னு நினைச்சீங்களா?  எல்லோரும் இப்படி என் மேலே பாயறீங்களே?” என்று சோதனை செய்தவாறே டாக்டர் சாஹிப் முணுமுணுப்பார்.

எங்கள் வீட்டில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் போதெல்லாம், “ஹூம். உங்களுக்கு ஒரு மருத்துவன் இலவசமா கிடைச்சுட்டான்.   எப்போ எல்லாம் முடியுமோ, எத்தனை முடியுமோ  விவஸ்தை இல்லாமல் பெத்துத் தள்ளுங்க.  வாழ்க்கையை நரகமாக்குங்க”என்று வெடிப்பார்.

பிரசவ வலி துவங்கியதும் எங்கள் வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் இடையில் உள்ள வெராண்டாவில் பதற்றத்துடன்  வேகமாக நடந்து கொண்டிருப்பார்.  தன்னுடைய கூச்சல்களாலும் அலறல்களாலும் அண்டைவீட்டார்கள் யாரும் அருகில் வரமுடியாத படி செய்து விடுவார்.  குழந்தைக்குத் தகப்பனாகப் போகிறவனை அழைத்து பளாரென்று அறைவிழும்.  இந்த முட்டாள்தனத்துக்காகவே இவனைக் காயடிக்க வேண்டும் என்று கத்திக் கொண்டிருப்பார்.

ஆனால் பிறந்த குழந்தையின் அழுகுரல் அவருடைய காதில் விழுந்ததுமே அவர் வெராண்டாவில் இருந்து அந்த அறைக்குத் தாவிச் செல்வார்.  உடன் பதட்டத்தில் இருக்கும் அப்பாவையும் கையோடு இழுத்துச் செல்வார்.  பிரசவித்த பெண்மணி அவர்களை பார்த்ததும் கடுமையாகத் திட்டிவிட்டு பர்தாவுக்குள் முகத்தை இழுத்துக் கொள்வாள்.   பிரசவித்த தாயின் நாடியை சிறிதுநேரம் பிடித்துப் பார்த்து விட்டு, “என் சிங்கக் குட்டி, பிரமாதப் படுத்திட்டே” என்று அவள் முதுகை ஆதுரத்துடன் தடவிக் கொடுப்பார்.  குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்துவிட்டு குளிப்பாட்ட எடுத்துச் செல்வார்.  அவரைப் பின்தொடரும் அப்பா, ஒரு அசட்டு செவிலியைப் போல சிறிய  உதவிகள் ஏதாவது செய்வார்.  “நாசமாப் போச்சு.  ஆம்பிளைகளுக்கு இங்கே என்ன வேலை?” என்று அம்மா கூச்சலிடத் துவங்குவாள்.  இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஏதோ விஷமத்துக்காக தண்டிக்கப்பட்ட சிறுவர்களைப் போல இருவரும் தலையைக் குனிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறுவார்கள்.

அப்பா வாதம் தாக்கிப் படுத்தபோது, ரூப்சந்த்ஜி தொழிலில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.  அவருடைய வைத்தியத்தை தன் வீட்டோடும் எங்கள் வீட்டோடு மட்டும் கட்டுப்படுத்திக் கொண்டார்.  அப்பாவுக்கு வேறு மருத்துவர்கள் வைத்தியம் செய்தார்கள்.  ஆனால் டாக்டர் சாஹிப் அம்மாவுடன் நின்று கொண்டு அந்த வைத்தியர்களையும் செவிலியர்களையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.  அப்பா இறந்ததும் எங்களுடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் கவனமாகப் பார்த்துக் கொள்வதை தனக்கு அளிக்கப்பட்ட புதிய பொறுப்பைப் போல நினைத்து நடந்து கொண்டார்.  குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடங்களுக்குச் சென்று கட்டண விலக்கு வாங்கித் தருவதற்கும், பெண்களின் வரதட்சணைக்கான நகைகள் செய்வதற்கு கியான் சந்திடம் கூலி விலக்கு வாங்கித் தருவதற்கும் அலைந்தார்.  எங்கள் வீட்டில் அவரிடம் ஆலோசிக்காமல் எந்தக் காரியமும் நடக்காது.  வீட்டின் மேற்குப் புறத்தில் புதிதாக இரண்டு அறைகள்  கட்ட வேண்டும் என்று தீர்மானித்தபோது அந்தத் திட்டத்துக்கு  டாக்டர் சாஹிப் ஒப்புதல் அளிக்காததினால்   மேற்கொண்டு எதுவும் நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

“இதற்குப் பதிலாக மேலே ஏன் இரண்டு அறைகள் கட்டக்கூடாது?” என்றார் டாக்டர் சாஹிப்.  அப்படியே கட்டப்பட்டது.  எஃப்ஏ பாடத்துக்கு விஞ்ஞானப் பாடம் எடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான் ஃபஜ்ஜன்.   டாக்டர் சாஹிப் அவனைத் தன்னுடைய ஷூவினால் விளாசினார்.  பிரச்னை சுமுகமாக முடிவுக்கு வந்தது.  ஃபரீதா கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு பிறந்தகம் வந்தபோது அவளுடைய கணவன் டாக்டர் சாஹிப்பின் உதவியை நாடினான்.  அவருடைய இளைய மகனைத் திருமணம் செய்து கொண்டு ஷீலா என்னும் பெண் அவருடைய குடும்பத்தில் இணைந்தபோது எங்கள் குடும்பத்தில் பிரசவங்கள் பார்க்க செவிலித்தாயைத் தேடிச் செல்லும் வேலை குறைந்தது.  எப்போது செய்தியைக் கேள்விப்பட்டாலும் அவள் மருத்துவமனையில் இருந்து தலைதெறிக்க ஓடிவருவாள்.  அவளுக்குத் தரவேண்டிய சன்மானத்தை மறந்து குழந்தை பிறந்த ஆறாம் நாள், அதற்கு குல்லாயும் புதிய குர்த்தாவும் வாங்கி வந்து பரிசளிப்பாள்.

ஆனால் இன்று, சப்பா சண்டை போட்டு  முடித்து வீட்டுக்கு வந்தபின் ஏதோ ஒரு பெரிய புனிதப் போரில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாவீரனைப் போல நடத்தப்பட்டான்.  எல்லோரும் அவனுடைய தீர சாகசங்கள் பற்றி விவரமாகக் கேட்டுக்கு கொண்டிருந்தார்கள்.  ஆனால் அம்மா மட்டும் அமைதியாக இருந்தாள். அவள் பதினைந்து ஆகஸ்டு கொண்டாட்டங்களை பார்த்து விட்டு வந்திருக்கிறாள்.  அன்று டாக்டர் சாஹிப்பின் வீட்டின் கூரையில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டபோது எங்கள் வீட்டுக் கூரையில் லீகின் கொடி ஏற்றப்பட்டது.  இந்த இரு கொடிகளுக்கு இடையிலும் உள்ள இடைவெளி பல மைல் நீளத்துக்கு அகண்டு விரிந்து சென்றது.    அதன் முடிவற்ற ஆழத்தைக் கண்டு துயரம் நிறைந்த கண்களுடன் நடுங்கிக் கொண்டு நின்றாள்.  பிறகு, ஏதோ பிரளயம் வந்தது போல அகதிகள் இங்கு வரத்துவங்கினார்கள்.  மூத்த மருமகளின் உறவினர்கள் பவல்பூரில் எல்லாவற்றையும் அங்கேயே போட்டது போட்டபடி விட்டு விட்டு எப்படியோ தப்பித்து இங்கு வந்தபோது அந்த இடைவெளி இன்னும் அதிகரித்தது.  அதற்குப் பிறகு, நிர்மலாவின் உறவினர்கள் பவல்பூரிலிருந்து குற்றுயிரும் கொலை உயிருமாக வந்து சேர்ந்தபோது அந்த இடைவெளி விஷம் கக்கும் கொடிய பாம்புகளால் நிரப்பப்பட்டது.

எங்கள் சோட்டி பாபி (இளைய அண்ணி) தன்னுடைய மகனுக்கு வயிற்று வலி அதிகரித்து விட்டது என்று சொல்லி அனுப்பியபோது ஷீலா பாபி எங்கள் வீட்டு வேலைக்காரனை கடுமையாகத் திட்டி விரட்டிவிட்டாள். ஒருவருடைய வலியைப் பற்றி இன்னொருவரிடம் சொல்வதை இருவீட்டாரும் நிறுத்திக் கொண்டார்கள்.  பர்ரே பாபி தன்னுடைய ஹிஸ்டீரியா வலிப்புக்களைப் பற்றி மறந்து அவசரஅவரசமாகத் தன்னுடைய உடைமைகளை ஓரிடத்தில் கட்டிவைத்துக் கிளம்புவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள்.

“என்னுடைய டிரங்குப் பெட்டியைத் தொடாதே”-  அம்மா தன் மௌனத்தைக் கலைத்தாள். எல்லோரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.

“நீங்கள் எங்களுடன் வரமாட்டீர்களா?” என்று பர்ரே பாபி கேட்டாள்.

“நான் வரமாட்டேன்.  அங்கே போய் அந்த சிந்தி ஆட்களோடு என்னையும் மாரடிக்கச் சொல்கிறீர்களா?  என்ன கருமாந்திரமோ. புர்காவையும் பைஜாமாவையும் தூக்கி எறிஞ்சிட்டு அலையறாங்க” என்றாள்.

“டாக்காவில் இருக்கிற   சின்ன மகனோடு இவங்க ஏன் போகமாட்டேன்றாங்க?”

“ஐய்யே… அவங்க எதுக்கு அங்கே போகணும்?  அந்த தலையைத் தின்கிற பெங்காலிகள் வெறும் கையால் சாதத்தைப் பிணைஞ்சி விழுங்குவாங்க.  இவங்க எதுக்கு அங்கே போகணும்?” என்று ஸஞ்ஜ்லே பையாவின் மாமியார் முமானி பீபி நிஷ்டூரியம்  நிறைந்த குரலில்   சொல்லிக் காட்டினாள்.

அப்படின்னா ராவல்பிண்டிக்குப் போய் ஃபரீதாவோட தங்கலாமே?” என்றாள் காலா.

“மஹாபாவம்.  அந்த பஞ்சாபிகளிடம் இருந்து அல்லாதான் நம்மைக் காப்பாற்றணும்.  அவங்க ஏதோ நரகத்துலேயே குடியிருக்கிற பேய்கள் மாதிரி பேசுவாங்க”, எப்போதும் அதிகம் பேசாத அம்மா அன்றைக்கு ஏதோ மிகவும் சரளமாக, அளவு மீறிப் பேசிக் கொண்டிருந்தாள்.

“ஐயோ அத்தை, நீ ஏதோ இன்னிக்கு ஜனங்களே இல்லாத பாலைவனத்துலே குடியேறப் போகிறவள் போல பாசாங்கு பண்ணிக்கிட்டு இருக்கே.  யாரோ மஹாராஜா யானைகளையும் குதிரைகளையும் அனுப்பி வச்சி உன்னை வா  வான்னு கூப்பிட்டு அனுப்பற மாதிரி பேசிக்கிட்டு இருக்கே”.  அங்கு நிலவிய இறுக்கமான சூழலையும் மீறி சிரிப்பலைகள் முத்துக்கள் போல அறையெங்கும் சிதறின.  அம்மாவின் முகம் வாடிப்போயிற்று.

“குழந்தைகள் போல நடந்து கொள்கிறீர்கள்.  நிறுத்துங்கள்”என்று நேஷனல் கார்ட்ஸின் தலைவன் சர்தார் அலி  அனைவரையும் கண்டித்தான்.

“நீதான் மடத்தனமா பேசுறே.  இங்கேயே தங்கி  எங்களையும் யாராவது கொன்னு போடணுமா?”

“நீங்க எல்லோரும் போங்க.  இந்த வயசுலே நான் எங்கே போக முடியும்?”

“கடைசியிலே இந்தக் காஃபிர்கள் கையாலேதான் நாங்க சாகணும்னு எழுதியிருக்கா?”

காலா பீபி பெட்டி படுக்கைகளை எண்ணிக் கொண்டிருந்தாள்.  தங்கம் மற்றும் வெள்ளி சாமான்களோடு அவள் ஆட்டு எலும்புத் தூள், காய்ந்த வெந்தயம், முல்தானி மிட்டி என்னும் சந்தன நிறம் கொண்ட மண் கட்டிகளையும்  சின்னஞ்சிறிய கட்டுக்களாக ஒன்று சேர்த்து அடைத்துக் கொண்டிருந்தாள்.  இவை எல்லாம் இல்லை என்றால்  பாகிஸ்தான் வங்கிகளில் ஏதோ பணவீக்கம் ஏற்பட்டு விடும் என்பதுபோன்ற தீவிரத்தில் அந்த சாமான்களை அடைத்துக் கொண்டிருந்தாள்.  பர்ரே பாய்க்கு எக்கச்சக்கமாகக் கோபம் வந்தது.  மூன்று முறை இந்த பண்டில்களை அவர் தூக்கி தூர எறிந்தார்.  ஆனால் இந்தப் பொருள்கள் இல்லாமல் போனால் பாகிஸ்தான் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு விடும் என்பதுபோல  அவள் பதட்டத்துடன்  கூச்சலிட்டு மீண்டும் அவற்றை தன்னுடைய சாமான்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டாள்.  முடிவில் குழந்தைகள் சிறுநீர் கழித்து ஈரமாகிப் போன மெத்தைகளின் பருத்தியைக் கூடக் கிழித்து அதனைக் கட்டாகக் கட்டி எடுத்துப் போகத் தயாராக வைத்துக் கொண்டார்கள்.  பாத்திரங்கள் கோணிப்பையில் கட்டப்பட்டன.  கட்டில்களை தனித்தனி பாகங்களாகப் பிரித்து அவற்றை ஒன்று சேர்த்து கயிற்றால் கட்டினார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் கண்ணெதிரே எல்லா வகையிலும் வளமையாக இருந்த அந்த வீட்டில் கட்டிவைத்த பெட்டிகளும், துணிமூட்டைகளும், பாத்திர மூட்டைகளும் அசந்தர்ப்பமாக இறைந்து கிடந்தன.

அங்கு பரப்பி இருந்த பெட்டி, படுக்கை, மூட்டைகளுக்கு ஏதோ கால்கள் முளைத்து வீடெங்கும் அவை நடனம் ஆடிக் கொண்டிருந்தது   போல இருந்தது.

அம்மாவின் டிரங்குப் பெட்டி மட்டும் அசையாமல் இருந்தது.

“இங்கேதான் சாகணும்னு நீ தீர்மானித்து இருந்தா, யாரும் உன்னைத் தடுக்க முடியாது” என்று பாய் சாஹிப் இறுதியாகச் சொன்னார்.  என்னுடைய எளிமையான, அப்பாவியான அம்மா  தன் அலைபாயும் கண்களால் வானத்தை வெறித்துப் பார்த்து, தன்னையே கேட்டுக் கொள்வது போல, “என்னை யாரால் கொல்ல முடியும்?  எப்போது அது நடக்கும்?” என்றாள்.

“அம்மாவுக்கு மூளை பிசகிவிட்டது.  அம்மா இப்போது தன்வசத்தில் இல்லை” என்று பாய் சாஹிப் கிசுகிசுத்தார்.

“அந்த காஃபிர்கள் அப்பாவிகளை எப்படி சித்திரவதை செய்தார்கள் என்று இவளுக்கு என்ன தெரியும்?  நமக்கென்று சொந்தமான ஒரு இடத்துக்குப் போய்விட்டால் நம்முடைய உயிரும் உடமைகளும் பத்திரமாக இருக்கும் இல்லையா?”

அத்தனை அதிகமாகப் பேசாத என்னுடைய அம்மாவுக்குக் கூர்மையான நாவு இருந்து இந்த வார்த்தையைக் கேட்டிருந்தால் திருப்பிக் கொடுத்திருப்பாள், “நம்முடைய சொந்த இடம்” என்று நீ சொல்கிற அந்த விசித்திரமான  பறவையின் பெயர் என்ன?”  அது எங்கே இருக்கு என்று என்னிடம் சொல்.   இங்கேதான்  உயிரும் உடலுமாக நாம் பிறந்து    வளர்ந்தோம்.   இது நம்முடைய சொந்த இடமாக இல்லாமல் போய்விட்டால் நாம் வெறுமனே சில நாட்களுக்குப் போய்க் குடியேறும் ஏதாவது ஒரு இடத்தை சொந்த இடம் என்று சொல்ல முடியுமா?  அங்கிருந்தும் யாராவது விரட்ட மாட்டார்கள் என்று எப்படி நம்புவது?  அங்கும் யாராவது திடீரென்று முளைத்து, இது உன்னுடைய இடம் கிடையாது, உன்னுடைய புதிய இடத்தைத் தேடிக் கண்டுபிடித்துக்கொள் என்று விரட்டினால் என்ன செய்வீர்கள்?  மிகச் சீக்கிரமாக அணையப்போகிற விளக்கு நான்.  கொஞ்சம் பலமான காற்று வீசினால் எல்லாம் முடிந்து போகும்.  எனக்கான சொந்த இடம் என்று தேடுகிற சிக்கல்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும்.  ஒருத்தரோட சொந்தமான பூமி திடீரென்று அவர்களுக்கு சொந்தமில்லாமல் போவதும் திடீரென்று ஒரு அந்நியமான பூமி ஒருவருக்கு சொந்தமாவதும் அத்தனை சுவாரசியமான விளையாட்டு கிடையாது.  ஒரு  காலத்தில் முகலாயர்கள் தங்கள் பூமியை விட்டு வேறு புதிய நாட்டில் குடியேறக் கிளம்பினார்கள்.  ஏதோ அவர்கள் இருந்த பூமி காலுக்கு சேராத செருப்பு போலவும் அதைக் கழற்றி எறிந்து விட்டு வேறு செருப்பு வாங்கிக் கொள்வது போலவும் அவர்கள் சொந்த நாட்டை மாற்றுவதற்குக் கிளம்பினார்கள்”.  அம்மா அமைதியானாள்.  அவளுடைய முகம் முன்பு இருந்ததை விட அதிகமாகக் களைத்திருந்தது.  ஏதோ பல நூற்றாண்டுகளாக தனக்கான சொந்த இடத்தைத் தேடிக் களைத்தவள் போல இருந்தது அவள் முகம்.   அந்தத் தேடலில் தொலைந்துபோனவள் போலக் களைத்துக் காணப்பட்டாள்.

நேரம் கடந்தது.   புயல், சூழிக்காற்று போன்ற எதற்கும் கலங்காது அசையாது நிற்கும் ஆலமரம் போல அம்மா தன்னுடைய நிலையிலேயே உறுதியாக இருந்தாள்.  ஆனால், அவளுடைய மகன்கள், மகள்கள், மாப்பிள்ளைகள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் மூட்டை முடிச்சுக்களை சுமந்து கொண்டு  அகண்ட வாயிலின் அருகில் போலீஸ் காவலுடன்  காத்துக் கொண்டு நிற்கும் லாரிகளில் ஏறிய போது அவளுடைய இதயம் படபடத்தது. விரிந்து பரந்த வெளியின் அப்பால் அவளுடைய கலவரமான பார்வை பதிந்திருந்தது.  அந்தப் பக்கத்தில் இருந்த வீடு காற்றில் கலைந்து கரையும் மேகங்கள் போலப் பார்வையில் இருந்து சிறிதுசிறிதாக தூரத்து வானத்தில் மறைந்து கொண்டிருந்தது.  ரூப்சந்த்ஜியின் வீட்டு வராந்தா வெறிச்சோடியிருந்தது.  ஓரிருமுறை யதேச்சையாக குழந்தைகள் வெளியில் ஓடி வந்தபோது மிகவும் அவசரமாக உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டார்கள்.  ஆனால் குளமாக வழிந்து கொண்டிருந்த அம்மாவின் கண்களுக்கு, மூடிய கதவுக்கு அப்பால்,  திரைகளின் இடுக்குகளிலும் கலக்கத்துடன் விழித்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தைகளின் கண்ணீர் பொங்கி வழியும்  கண்களைக் காணத் தவறவில்லை.

தன் வாழ்வின் செல்வங்கள் அனைத்தையும் ஆண்டவனுடைய  கருணையை நம்பி ஒப்படைத்து விட்டு வெறிச்சோடிக் கிடந்த முற்றத்தில் தனியாக நின்றிருந்தாள்.    மிகவும் கலவரம் அடைந்திருந்தாள்.  சிறு குழந்தையைப் போல பயந்திருந்தாள்.  ஏதோ அவளைச் சுற்றி பயங்கரமான பேய்கள் சூழ்ந்து கொண்டு தன்னைத் தாக்க வருவது போன்ற அச்சம் அவளைச் சூழ்ந்தது.  தலை சுற்றியது.  அருகில் இருந்த கம்பத்தைத் தாங்கிக் கொண்டு சரிந்து தரையில் அமர்ந்தாள்.  அவள் வீட்டின் முன்னறைக்குத் திரும்பிய போது தொண்டை அடைத்துக்   கொண்டது.  இதயம் வாய் வழியாக வெளியில் வந்துவிடுவது போன்ற வேதனை அவளை வெருட்டியது.  இந்த அறையில்தான் முற்றிலும் நம்பி முழுதாகத் தன் வாழ்க்கையை யாரிடம் ஒப்படைத்தாளோ அந்த ஆண்மகன், அவளுடைய கணவன், நிலவு போன்ற அழகிய முகத்துடன் இருந்த அந்த மணப்பெண்ணின் முக்காட்டை மெல்ல விலக்கிப் பார்த்தான்.  பக்கத்து அறையில்தான் அவளுடைய மூத்த மகளைப் பிரசவித்தாள்.  அந்த மகளின் நினைவு  நெஞ்சில் மின்னலாகப் பிளந்து பாய்ந்தது.  அந்த மூலையில்தான் மகளின் தொப்புள் கொடி புதைக்கப்பட்டது.  சொல்லப்போனால் அவளுடைய எல்லாப் பிள்ளைகளின் தொப்புள் கொடிகளும் அங்குதான் புதைக்கப்பட்டன.  ரத்தமும் சதையுமான பத்து உருவங்கள் – பத்து மனித ஜீவன்கள் இந்த அறையில்தான், இன்று ஆதரவற்று தனித்து விடப்பட்டுள்ள  இந்தப் புனிதமான கருப்பையில் தான்   ஜனனம் எடுத்திருக்கின்றன.

பாம்பு தான் உரித்த சட்டையை முட்புதரில்  விட்டுச் செல்வது போல பிள்ளைகள் இவளை உதறிவிட்டுப் போயிருக்கிறார்கள்.  அமைதியையும் திருப்தியான வாழ்க்கையையும் தேடிப்  போயிருக்கிறார்கள்.  பிள்ளைகளின் குரல்கள் அந்த அறையை நிறைத்தன.  குரல்கள் வந்த திசைகளை நோக்கிக் கைகளை விரித்துப் பாய்ந்தாள்.  ஆனால் அவளுடைய மடி  என்னவோ வெறுமையாகவே இருந்தது.   இந்த மடியைத்தான் புதிதாகத் திருமணம் செய்து கொண்டு வந்த பல  பெண்கள் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  அதிருஷ்டம் பொங்கி வழியும் மடி அது என்றும் அதனைத் தொட்டு வணங்குவதால் தங்கள் கருப்பை என்றும் பாழடையாது இருக்கும் என்றும் அவர்கள் நம்பினார்கள். இன்று  அந்த அறை பாழடைந்து கிடந்தது.  மிகவும் கலவரம் அடைந்தவளாக அவள் அந்த அறையில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

ஆனாலும் சிறகடித்துப் பறக்கும் நினைவுகளை அவளால் நிறுத்த முடியவில்லை.  தடுமாறிக் கொண்டே அவள் அடுத்த அறைக்குச் சென்றாள்.  அந்த அறையில்தான்  தன்னுடன் ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்து முடித்த அவளுடைய சகஜீவன் தன் இறுதிமூச்சை விட்டது.  அவருடைய பிணத்தை கோடித்துணியால் சுற்றி அங்குதான் அந்தக் கதவுக்கு அருகில்தான் கிடத்தியிருந்தார்கள்.  குடும்பத்தில் உள்ள அனைவரும் பிணத்தைச் சுற்றி நின்றிருந்தார்கள்.  தனக்கு வேண்டியவர்கள் தனக்காக அழுவதற்காக அவர்கள் கூட இருந்தபோதே செத்துப்போன அந்த மனிதர் மிகவும் அதிருஷ்டம் செய்தவர்.  ஆனால் இன்று கேட்பாரற்ற பிணமாகத் திரியும் என்னை  இப்படி நிராதரவாக விட்டுப் போய்விட்டாரே என்று கலங்கினாள்.  கால்கள் தளர்ந்தன.  கணவரைக் கிடத்திய இடத்தில் தலைப்பக்கம் அவர் படுத்திருந்த அதே இடத்தில் சரிந்து விழுந்தாள்.  கடந்த பத்தாண்டுகளாக கைநடுக்கத்துடன் தினமும் விளக்கேற்றும் இடம் அது.  அந்த விளக்கில் இன்று எண்ணெய் இல்லை.  திரியும் முற்றாக எரிந்து தீய்ந்திருந்தது.

ரூப்சந்த்ஜி தன்னுடைய வீட்டு முற்றத்தில் மேலும் கீழுமாக நடந்து கொண்டிருந்தார்.  அவர் எல்லோரையும் சபித்துக் கொண்டிருந்தார்.  தன்னுடைய மனைவி, மக்கள், அரசாங்கம்,  அவர் முன்பு பிரம்மாண்டமாக விரிந்து பரந்து செல்லும் அமைதியான சாலை, செங்கற்கள், கருங்கற்கள், கத்திகள், குறுங்கத்திகள் போன்ற அனைத்தையும் சபித்தார்.  அவருடைய சாபங்களின் முன்பு  இந்தப் பிரபஞ்சம் முழுதும் அஞ்சி நடுங்கி அவர் முன்பு மண்டியிடுவதைப் போலத் தோன்றியது.  அவருடைய வீட்டுக்கு அந்தப் பக்கம் முற்றிலும் காலியாகிப் போன வீடுதான் அவருக்கு மிகவும் கலக்கத்தைத் தந்தது.    அந்த வீட்டை  ஏதோ தன்னுடைய கரங்களால் அவரே செங்கல் செங்கல்லாக  உடைத்து எறிந்ததைப் போல மனது சங்கடப்பட்டது.  தனக்கு உள்ளே ஆழமான வேர்களைப் போல ஊடாடிப் போன நினைவுகளை முற்றாகப் பிடுங்கி வெளியில் எறிய வேண்டும் என்று முயற்சித்தார்.  ஏதோ நரம்புகளையும் ரத்தக்குழாய்களையும் உடலில் இருந்து முற்றாக வெட்டி எறிவது போன்ற வேதனை கிளர்ந்தது.  இறுதியாக சத்தமான முனகலுடன் விக்கித்து நின்றார்.  அவருடைய வசவுகளும் சாபங்களும் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.  அவர் நடந்து கொண்டிருந்ததை  நிறுத்தி சடாரென்று காரில் ஏறிக்கொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக எங்கோ சென்றார்.

இரவு முற்றாக இருளைத் தரையில் இறக்கிய பின்பு, தெருவெல்லாம் வெறிச்சோடிப் போன பிறகு, ரூப்சந்த்ஜியின் மனைவி எங்கள் வீட்டின் பின்கதவு வழியாக சத்தமின்றி பிரவேசித்தாள்.  இருகரங்களிலும் தட்டுக்களில் உணவை ஏந்தி வந்தாள்.  இரு கிழவிகளும் எதிர்எதிராக அமைதியுடன் உட்கார்ந்திருந்தனர்.  நீண்ட நேரம் மௌனமாக இருந்தாலும் இருவரின் கண்களும் பல விஷயங்களை பரிமாறிக் கொண்டன.  இரண்டு சாப்பாட்டுத் தட்டுக்களும் தொடப்படாமல் அப்படியே இருந்தன.  இரண்டு பெண்மணிகள் வம்புப் பேச்சுக்களில் ஈடுபடும்போது அவர்களின் நாவுகள் கத்திரியைப் போலச் சீறிக் கொண்டிருக்கும்.  ஆனால் உணர்ச்சி வசப்பட்ட சூழலில்  அவர்களுடைய உதடுகள் இறுக்கமாகத் தாழிடப்பட்டிருக்கும்.

வீட்டின் தனிமையில் இரவு முழுதும் உறக்கமின்றி வலிமிகுந்த துயரமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டாள் அம்மா.   வழியில் அவர்களை யாரும் ஏதும் செய்யாமல் இருக்கவேண்டும்   என்று பதட்டப்பட்டாள்.  இப்போதெல்லாம் ஆட்களைக் கொன்று குவித்து ரயில் வண்டிகளில் பிணங்களாகக் குவித்து அனுப்பி வைக்கிறார்கள் என்று சொல்கிறார்களே என்றெல்லாம் எண்ணி  மருகினாள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தப் பயிர்களைத் தன் குருதியை ஊற்றி வளர்த்திருக்கிறாள்.  அந்தப் பயிர்கள் எல்லாம் வளமாக செழிப்பதற்காக சொந்த நிலத்தை விட்டு வெளியேறி  வேறு புதிய நிலத்தைத்  தேடிப் போயிருக்கின்றன.  “அந்தப் புதிய நிலத்தில் இந்தக் குருத்துக்கள் எல்லாம் செழிப்பாக வளருமா அல்லது வாடிப்போகுமா என்று யாருக்குத் தெரியும்? பாவம் அந்த இளங்குருத்துக்கள், இளைய மருமகள் – அல்லாஹ் அவளை ரட்சிக்கட்டும்.  அவளுக்கு எந்நேரமும் குழந்தை பிறக்கலாம்.  எந்த வனாந்திரத்தில் அவள் குழந்தையைப் பெற்றுக் கொள்கிறாளோ யாருக்குத் தெரியும்?  வீடு, வாசல், தொழில், வியாபாரம் என எல்லாவற்றையும் உதறிவிட்டுக்  கிளம்பியிருக்கிறார்கள்.  அவர்கள் போகும் புதிய நிலத்தில் அங்கு ஏற்கனவே சுற்றிக் கொண்டிருக்கும் வல்லூறுகள் இவர்களுக்காக எதையாவது விட்டு வைத்திருக்குமா?  ஒருவேளை அவர்கள் மீண்டும் இங்கேயே விரைவில் திரும்பி வரவேண்டியிருக்குமோ?     அப்படித் திரும்பி வரும் தருணத்தில் அவர்களுடைய வேர்கள் மீண்டும் இங்கு தழைக்க வாய்ப்பு கிட்டுமா?  யாருக்குத் தெரியும், என்னுடைய மட்கிப் போன எலும்புக்கூடு மீண்டும் திரும்பும் வசந்தத்துக்கு சாட்சியமாக இருக்குமா என்று?

வீட்டின் தாய்ச்சுவர்களையும் கைப்பிடிச் சுவர்களையும் கதவுகளையும் இருகரங்களாலும் பற்றிக் கொண்டு மணிக்கணக்கில் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.  தன்னுடைய இளம்வயது மகளையும்  இளைய மருமகளையும் நிர்வாணமாக நடக்கவிட்டு பேரப்பிள்ளைகளை துண்டு துண்டாக வெட்டி எறிவது போன்ற துர்சொப்பனங்கள் கண்டு விழித்ததால் இரவு முழுதும் தூக்கம் என்பதே இல்லாமல் போயிற்று.  எப்போதாவது சற்றுக் கண்ணயர்ந்தபோது வீட்டு வாசலில் பெரும் கூச்சலும் கோஷங்களும் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருந்தன.  உயிரின் மீது அதிகம் கவலை கொள்ளாவிட்டாலும் எண்ணெய் தீர்ந்து   அணையப் போகும் விளக்கு கூட ஒருவகையான படபப்புடன்தான் அணைந்து போகும்.   ராட்சசர்களாக மாறிய  மனிதர்களின் உருவில் வருவதை விட இயற்கையாக வரும்  மரணம் சற்றுக் குறைந்த அளவில் பயமளிப்பதாக இருக்குமோ?  வயதான கிழவிகளைக் கூட இரக்கமின்றி அவர்களுடைய முடியைப் பற்றித் தெருவில் இழுத்துக் கொண்டு போகிறார்களாம்.  அவர்கள் இழுத்துச் செல்லும் முரட்டுத்தனத்தில் அந்தக் கிழவிகளின் தோல் வழண்டு எலும்புகள் வெளியில் தெரியும் வரை விடுவதில்லை என்று யாரோ அன்று பேசிக்கொண்டார்கள்.  அங்கு  தலைவிரித்தாடும் பயங்கரங்கள், நரகத்தில் நடப்பதாகக் கேள்விப்பட்டவற்றை விட அதிபயங்கரமாக இருக்கும் என்றும் சொன்னார்கள்.

வெளியில் கதவின் மீது முரட்டுத்தனமான தட்டல்கள் மேலும் வலுவாக அதிகரித்தன. மரணத்தின் தூதுவன், மாலிக்-உல்-மௌத், ஏனோ சற்று அவசரப்படுவது போலத் தோன்றியது.  விளக்கின் வெளிச்சங்கள் அவளைச் சூழ்ந்தன.   வெகுதூரத்தில் இருந்து ஒரு குரல், ஏதோ கிணற்றின் ஆழத்தில் இருந்து வருவது போலக் கேட்டது.  ஒருவேளை மூத்த மகன் அவளைக் கூப்பிடலாம்.  இல்லையே.  மறைவான வேறு ஒரு உலகத்தில் இருந்து இளைய மகன் தன்னைக் கூப்பிடுவது போல இருக்கிறதே.

எல்லோரும் அந்தப் புதிய இடத்துக்குப் போய் சேர்ந்து விட்டார்கள் போலிருக்கிறதே.  இத்தனை சீக்கிரமாகவா?  அவளுடைய இளைய மகனும் கடைசி மகனும் தங்கள் மனைவி பிள்ளைகளோடு நின்று கொண்டிருப்பதை அவளால் தெளிவாகப் பார்க்க முடிகிறதே.  திடீரென்று வீடு முழுதும் ஜீவகளை நிரம்பியதைப் போல இருந்தது.  அந்த ஆன்மாக்கள் அனைத்தும் விசனப்பட்டுக் கொண்டிருக்கும் தாயைச் சுற்றி நின்று கொண்டிருக்கின்றன.  முற்றிப் போன கரங்களும் இளந்தளிரான கரங்களும் அவளை மிருதுவாக ஸ்பரிசித்தன. மக்கள் கூட்டத்தின் ஆரவாரமான மகிழ்ச்சியில்  அச்சங்கள் சுழலாகக் கரைந்து மறைந்தன.

கண்களைத் திறந்த போது அவளுடைய நாடியை மிகவும் பரிச்சயமான கரம் ஒன்று பற்றியிருந்தது.  “மன்னிக்கணும் பாபி.  என்னைப் பார்க்கணும்னா ஒரு வார்த்தை சொல்லி அனுப்பு போதும். நான் இங்கே இருப்பேன்.  அதுக்காக நீ உடம்பு சரியில்லை என்று பாசாங்கெல்லாம் செய்ய வேண்டாம்” ரூப்சந்த்ஜி திரைமறைவில் இருந்து சொன்னார்.  “பாபி, இன்னிக்கு நீ எனக்கான ஃபீஸ் கண்டிப்பாக கொடுத்தே ஆகணும்.  இதோ பார்,   உன்னுடைய உதவாக்கரை பிள்ளைகளை லோனி ஜங்ஷனில் இருந்து திரும்ப அழைத்து வந்திருக்கிறேன்.    அயோக்கியப் பயல்கள். விட்டு ஓடப் பார்த்தார்கள்.  போலீஸ் சூப்பிரண்டைக் கூட நம்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை”

அந்தக் கிழட்டு உதடுகளில் மென்மையான சிரிப்பு மீண்டும் மெல்ல மலர்ந்தது.  எழுந்து உட்கார்ந்தாள்.  சில நொடிகள் அமைதி நிலவியது.  முத்துக்களைப் போன்ற இரு கண்ணீர்த்துளிகள் ரூப்சந்த்ஜியின் கரங்களின் மீது கசிந்து உருண்டன.

உருது மூலம் – இஸ்மத் சுக்தாய்

தமிழில் ராகவன் தம்பி

kpenneswaran@gmail.com

Series Navigationஉகுயுர் இனக் கதைகள் (சீனா)துருக்கிப் படை வீரர்களுக்கான மயானம்
author

ராகவன் தம்பி

Similar Posts

2 Comments

  1. Avatar
    Innamburan says:

    நான் 1947யை பார்த்தவன். 1955ல் பஞ்சாப் முழுதும் சுற்றியவன். அட்டாரி பார்டரில் பாகிஸ்தான் சிப்பாய்கள் பரிவுடன் பழகினார்கள். எனக்கு இஸ்மதி சுக்தாய், மாண்டோ ஆகியவர்களின் எழுத்துக்களுடன் பரிச்சியம் உண்டு. அந்த பின்னணியில், உங்கள் யதார்த்தமான மொழியாக்கத்தைப் பாராட்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *