கம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )

author
0 minutes, 2 seconds Read
This entry is part 42 of 43 in the series 24 ஜூன் 2012

இரா. குணசேகரன்.
நடவு வெளியீடு,
269 காமராஜ் நகர்,
ஆலடி ரோடு,
விருத்தாசலம் – 606 001

நவீன இலக்கியம் தனிமனிதர்களை மையமாகக் கொண்டிருக்கும். இதற்கு எதிர்வினையாக பிறந்த புதுவகை இலக்கியம் சமூகத்தை மையமாகக் கொண்டிருக்கும். நவீன எழுத்தில் அழுத்தமான ஒரு திருப்பம் உண்டு. மனிதன் சுயம்பு ஆனவன் இல்லை.அவனுக்குப்பின்னால் நீளும் நிழல் உண்டு. கானல்காடு ஆறுமுகம் என்ற தனித்த ஆளுமையை மட்டும் கூறவில்லை, அந்த ஆளுமைக்கு பின்னால் நிழலான மனிதர்கள் மூலம் சமூகத்தைப் பற்றி விமர்சிக்கும் நாவல். கொடுக்கூர் ஆறுமுக நாட்டார் மாபெரும் ஆளுமையாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒற்றை ஆளுமைகளின் காலம் முடிந்துபோனது. இது எல்லோருக்குமான காலம். சமுதாயத்தில் மதிப்பீடுகள் எந்த அளவுக்கு ஆழமாக ஊன்றியிருக்கின்றன என்பதும் முக்கியம்.

ஆறுமுகம் தன் தந்தை வழியில் சமூக மதிப்பீடுகளைப் பெற்றவர். தந்தை வழியிலேயே நடக்க முயன்று தோற்றவர். அன்பு, நட்பு, பாசம் எல்லாம் நம்மைப் போன்றவர்களுக்கு விலைமதிக்க முடியாத அம்சங்கள். நவீனத்துவத்தின் ஆன்மாவான தன்னிரக்கம் அல்லது தாழ்வுணர்ச்சி என இரண்டுமே பிடிக்கவில்லை. ஆறுமுகம் தன்னிரக்கம் கொண்டு கதறும் ஒரு நிகழ்வு கானல் காட்டில் உண்டு. எழுத்தாளன் ஆறுமுகத்தை கழிவிரக்கத்திலிருந்து விடுவித்து, மீட்டெடுக்கும் நிகழ்வு கதைசொல்லலில் சிறப்பான ஒரு தருணம்.

கானல் காட்டில் காட்டப்படும் உலகம் தமிழ்ச்சூழலுக்கு முகவும் புதியது. புதியது என்றால் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வுதான். கால மாற்றத்தில் நாம் மறந்துபோன, மறக்கடிக்கப்பட்ட தமிழ்வாழ்வு. இதில் சொல்லப்படும் வெகுமக்கள் நம்பிக்கைகள், பழமொழிகள், சொலவடைகள், திணைதொடர்பான வழக்கொழிந்த சொற்கள் தமிழ் இலக்கிய உலகம் அறியாதது. என்று மார்க்வெஸ் சொல்வதை நினைவூட்டுகிறது. அப்படிப் பார்க்கும்போது எண்ணற்ற நுட்பமான தகவல்களோடு எழுதப்பட்டிருக்கும் ஒரு சமூக ஆவணம் இந்நாவல்.

கானல்காடு நாவல் ஒரு நிறுவனம் சார்ந்த ஒடுக்குமுறையையும் அதனுடன் இணைந்து செயல்படும் அமைப்பு ரீதியான வன்முறைகளையும் தெளிவுபடுத்துகிறது. இரண்டு மூன்று சாதிகளுக்கிடையிலான சிக்கலாகவோ அல்லது சில மேல்சாதியினரின் ஒடுக்குமுறையாகவோ சித்தரிக்கப்டவில்லை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தில் அதன் பலதரப்பட்ட சாதிப் பின்புலத்திலிருந்து உருவாகும் மனிதர்கள் எவ்வாறு சாதி அதிகாரத்தை ஒரு இயந்திரமாகச் செயல்படுவார்கள் என்று சித்தரிக்கிறது. இந்த அதிகார இயந்திரம், அதன் பாகங்களை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காததோடு, அந்தக் அமைப்பைக்கடந்து போகத் தூண்டும் உந்துதல்களையும் வேரறுக்கிறது.

ஆங்கிலேயர் இந்த தேசத்தை ஆட்சி செய்யும்படி வைத்தது எது? முதல் காரணம் கெட்ட அகங்காரம்.இருளில் மூழ்கியிருக்கிற மக்களை திருத்தப் போகிறோம் என்ற அகங்காரம். எனவே மக்கள் தங்கள் தலைமீது ஏற்றிவிட்ட சுமையாகக் கருதினார்கள், வெள்ளைக்காரர்கள்.  காலங்காலமாக மக்களின் விரோதியாய் சிவில் நிர்வாகத்தை நடத்திவந்த பிராமண, வேளாள சக்திகளிடமே சிவில் நிர்வாகத்தை ஒப்படைத்தனர். இச்சக்திகள் மக்களை ஒடுக்குவதை கண்டும் காணாமல் இருந்தனர் அல்லது துணைபோயினர். ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் அவமதிக்கப் படுவதை அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. இரண்டாவது காரணம் பேராசை. இந்நாட்டின் உணவுப்பெருக்கமும், வனச்செல்வமும், கனிம வளமும் கண்ணை உறுத்தியது. எல்லாவற்றையும் தானே, தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை. அதிகார வர்க்கத்துக்கு துணைபோக இந்த ஆசைதான் காரணமாயிருந்திருக்க முடியும். ‘வர்க்க விரோதிகளை கட்டுக்குள் வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்து அரசு தோன்றியதால் அதுமிகவும் வலிமை வாய்ந்த பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் அரசாக அமைகிறது’ என்பார் ஏஞ்சல்ஸ்.

நாட்டார் வன்னியர் எனினும் சைவ சித்தாந்த முறையில் வளர்க்கப்பட்டவர். சைவ உணவுக்காரர். அவரப்பா அசைவ உணவு சமைத்த தன் மனைவியையே ஒதுக்கி வைத்தவர். சைவ உணவு முறையே வன்முறைக்கான விதையென்று அவர் அறிந்திருக்கவில்லை. தலைமுறைகளாக வந்த பழக்கங்களுக்கு அடிமையானவர். பழக்க வழக்கங்களை மீறும் துணிவு அவரிடம் இல்லை. வாழும் சமூகம் உருவாக்கி வைத்திருந்த மதிப்பீடுகள் வழியில் வாழ்ந்தவர். இது அவரின் ஒருபக்கம்.

நாட்டார் வீரன், துணிச்சலானவர், நேர்மையான நிர்வாகி, சாதுரியமாக செயல்படும் வீரர், கூர்ந்தறிவு கொண்டு நடுநிலை தவறாது தீர்ப்பு வழங்குபவர். எல்லாவின மக்களோடும் கலந்து பழகி நட்புணர்வோடு வாழ்ந்தவர் என்பதெல்லாம் மக்களின் பொதுப்புத்தியில் உறைந்து போன பிம்பங்கள். நாவலிலும் அவ்வாறே இடம் பெறுகிறார்.

நாட்டார் என்பது அதிகாரத்தின் மையம். ஒரு கிராமத்தின் தலைவர் என்றாலும் கூட அவர் வழங்கும் நியாயத் தீர்ப்புகள் நேர்மையானவை. மற்றவர்களால் பாராட்டுதலுக்கு உள்ளானவை. அதிகாரமும் போதை, புகழும் போதை. வெகுமக்கள் காவலனாக ஒரு ஒடுக்கப்பட்டவன் வருவதை சிறுபான்மை  ஆதிக்க வர்க்கம்.  அதிகார அமைப்பு ஏற்றுக் கொள்ளுமா? உள்ளூரில் வாழும் இனங்களிடையே பகைமையில்லைதான். வெளியூர் மேல்தட்டு வர்க்கம், மையத்திலிருந்து நாட்டாரை விலக்கவே விரும்புகிறது. மையத்தை விட்டு விளிம்புக்கு விலக நாட்டார் தயாரில்லை. தன்னையே மையப்படுத்தி வாழ்ந்த நாட்டாருக்கு சாதியின் அடையாளமான கோபத்தில் இரைந்து விடுகிறார். பொறி கிடைத்துவிட்டது. அவரைச்சுற்றி பின்னப்படுகிறது வலை. தான் தவறிழைக்கவில்லை என்று கருதினாலும் மக்கள் மதிப்புக்கு தலைவணங்கி சிறை செல்லத் தயாராகிறார். அவர் சிறைபடும் நாளிலிருந்து தொடங்குகிறது, நாவல்.தன்னகங்காரச் சிறைக்குள் முடங்கி உள்சுருங்கி போன தந்தை தன் மகனை மீட்க முனையாமல், தன் குடும்பப் பாரம்பரியம் குலைந்து விட்டதே என்று ஓடி ஒளிகிறார். அவருக்கும் மையத்தை விட்டுவிலக மனமில்லை.

மன உலகை எதிர்கொள்வதும் புறவுலகை எதிர்கொள்வதும் நல்ல கலைஞனுக்கு ஒன்றுக்கொன்று எதிரான குணங்களல்ல. படைப்பாளி தன் மன உலகத்துக்குள் இயங்கினாலும் புறவுலகை எதிர்கொள்ளும் போது மனவுலகத் தேடலை ஒதுக்கி விடுவதில்லை. மனவுலகிலேயே உழன்று கொண்டிருக்கும் நாட்டாருக்கு புற உலக யதார்த்தத்தைப் புரியவைப்பவர்கள் குற்றவாளிகளான சிறைச்சாலை நண்பர்கள். பாளையக்காரர்கள் சிறுபான்மை சமூகத்தின் வாழ்வுக்காக உழைக்கும் மக்களின்,நாவல்.

உரிமைகளைப்பறிப்பது, சிவில் சமூகமான கிராம நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் நபர்கள் உழைக்கும் மக்களை எப்படி சுரண்டுகிறார்கள். அதே நேரம் நிர்வாகத் தலைமைகளை தந்திரமாக ஏமாற்றி எவ்வாறு நிலவுடைமையாளர் ஆனார்கள். ஆட்சியாளர்களின் வரிக்கொடுமை, வரிகொடுக்க முடியாமல் கொள்ளையர்களாக மாறும் ஜமீன்தார், சுட்டுக் கொல்லும் ஆங்கில அரசு, எதிர்த்துக் குரல் கொடுக்கும் இனத்தினரை குற்றப்பரம்பரையாக்கி நசுக்கும் உத்திகள் உப்புக்கு வரியிட்ட போது தாங்கள் காய்ச்சிய உப்பை சகோதர கமூகத்துக்கு பரிமாற்றம் செய்ததனால் குறவர்கள் குற்றப்பரம்பரையினர் ஆக்கிய கொடுமை, காட்டிக்கொடுக்கும் சிறுபான்மையினருக்கு ஆங்கில அரசு வழங்கிய நிலக்கொடைகள், சர்தார் பட்டம் என புற உலக யதார்த்தத்தை பலபலவாக உணர்த்துகிறார்கள்.சட்டப்படி திருட, அரசாங்க அதிகாரி இருக்காங்கப-79 சட்டப்படி திருடுறவன் குற்றப்பரம்பரையில்லே. வயித்துப் பசிக்கு திருடியவன் குற்றப்பரம்பரை. இவனது அரசாங்கத்துக்கு எதிரான குரல். அவனது அரசோட எணைஞ்ச போற குரல்ப-80 சனங்க எப்போதும் நல்லவங்க. மாத்தினது அரசு நிர்வாகம். ஏன் திப்புவும் சரி, கும்பெனிக்காரனும் சரி வேற்று மொழிக்காரனை அதிகாரத்துக்கு கொண்டு வரணும். சிறுபான்மை பேரிட்டே கொடுத்தா தான் தனக்கு லாபமின்னு நெனைச்சான். வெகுசனம் அடிமாடா போறதிலே தான் இருவருக்கும் ஆதாயம்.ப-81

‘உம், இவ்வளவையும் தாங்கிகிட்டு எப்படி சும்மா இருக்க முடிஞ்சுது? நாம இன்னும் வேட்டுவச் சமூகந்தான். அதனாலேதான் இன்னும் இறைச்சி மீனுன்னு அலையிறோம். ஒங்க அப்பா தன்னை பார்ப்பான்னு நினைச்சிட்டுருக்காருபோல. அவன் ஆயுதம் எடுக்க மாட்டான். அவனுடைய ஆயுதம் தந்திரம், வஞ்சகமின்னு புரிஞ்சுக்காம வெளியே போயிடலாம். எதிர்த்து நின்னுதாம் சமாளிக்கணும்.ப-90 அதிகாரத்துக்கு கட்டுப்படுறவன், எதிர்த்து நிக்காதவன் எல்லோரும் திருடன்தான்.ப-107 ‘அதிகாரத்துக்கு எதிராதிரெண்டெழும் கூட்டத்தை ஒழிக்க எப்போதும் திருட்டுப் பட்டமிடு. வன்முறைகாரன்னு சொல்லு, கலவரக்காரன்னு சொல்லுங்கிறது மேல்ஜாதி மனோபவம். சரியா புரிஞ்சிக்கிற சக்தி நமக்கில்லாம அடிச்சுட்டாங்க.ப-108

இன்னும் கனமான வார்த்தைகளால் தன்னைச் சுற்றியுள்ள உலகம் பற்றி புரியவைக்கிறார்கள். அவர்களிடம் இரக்கம் ஏற்பட்டாலும் நாட்டாரின் மனம் பழகிப்போன விழுமியங்களிலேயே திளைத்து நிற்கிறது. நாட்டார் தப்பிக்க முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் நிலையில் ஆசிரியர் சொல்லும், நண்டுபிடிக்கும் உவமானம் நன்று. பாராம்பரிய சமூக மதிப்பீடுகள் ஒருகாலின் மேற்பகுதியென்றால், கீழ்ப்பகுதி காசியும் நண்பர்களும் காட்டும் வாழ்வின் யதார்த்தங்கள்.

‘தன் வெதுவெதுப்பான தசைகளைப் பிராண்டி, காயமாக்கி, இரத்தம் குடிக்கவும், தன் அழுகிப்போன இறக்கைகளைப் பிடுங்கி எறியவும், எஞ்சி உள்ள தோலைக்கூட தங்களுக்காக குளிர்காய எடுத்துக்கொள்வார்கள் அவர்கள். உடலில்லா உயிரை பூமியின் கர்ப்ப வயிற்றில் புதைத்துவிடத் தவிக்கிறார்கள். தன் உயிர்ப் மூச்சுப் பறிக்கப்படுமுன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை உண்டு’ என்கிறான் காசி, ஆறுமுகத்தின் மனவோட்டத்தை நேர்த்தியாகப் படம்பிடிக்கிறார் ஆசிரியர்.

கதை சொல்லும்போது நாம் அந்த சொல்லலின் அழகில் மயங்கி பின்தொடர்கிறோம். ஒருகதை சொல்லிக்கு சொல்லப்படுவதன்  முக்கியத்துவத்தைப் போலவே சொல்லும் முறையும் முக்கியமாகிவிடுகிறது. அவ்வளவு ரசித்து சிந்திக்கத் தூண்டி கதையைச் சொல்லிச் செல்ல சொல்லின் ருசியறிந்த ஒரு மனதாலேயே முடியும். சிறுகதைகள், கட்டுரைகளில் கையாளப்படும் மொழியை விட கானல்காட்டின் மொழி சுவையானது, எளிமையானது.

ஆறுமுகம் என்ற தனிமனிதனின் கதையாக இல்லாமல், ஆறுமுகம் சார்ந்த சமூகத்தின் வரலாறு கானல்காடு. ஆறுமுகம் ஒரு குறியீடு மட்டுமே. ஆறுமுகம் தப்பிய பிறகு அவரை, குற்றவாளியாகப் பார்ப்பது அரசியல் பார்வை. தங்களின் ஒருவனாகக் கருதி, அடைக்கலம் தந்து ஆதரவுக்கரம் நீட்டுபவர்களுடையது சமூகப்பார்வை.  சாதிப்பேதமில்லை. இறுதிவர அவரது மெய்க்காப்பாக திகழும் காசிநாதன் என்ற குறவன், ஊரில் நடப்பதை அத்தனையும் தேடிவந்து சொல்லும் கணேசன் – அவரது சொத்தை, ரகசியமாக பாதுகாக்கவும் செய்கிறான். தந்தையின் நண்பராக அறிமுகமாகி நாட்டானின் பாதுகாப்பு கருதியே செயல்படும் முத்துசாமி கொத்தனார், தாயின் மரணத்தின் போது தான் அறிமுகம் ஆகும் சொக்கலிங்க உடையார். இரு அத்தியாயங்களில் வந்தாலும் அவர்காட்டும் மனிதநேயம். உற்ற நண்பனாய் இருந்து, அரணாக விளங்கி ஆவினங்குடி துப்பாக்கி சூட்டில் காலில் குண்டு பாய்ந்து காலம் முழுக்க விந்திவிந்தி நடக்கும் குழந்தைவேலு (இறப்பு 2003), மௌனமாய் இருந்து நண்பனின் பெயரைக் காவல்துறையில் சொல்ல மறுத்து காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சுழிவேலன் (1916) எந்த எதிர்ப்புமின்றி பாதுகாக்கும் வேட்டக்குடி சின்னதம்பி, பொன்னுசாமி.

சிறையில் ஒரு சகோதரனாய் பழகி, நண்பனாய் நெருங்கி மரம்வெட்டும் குழிக்குள் வைத்துக் காப்பாற்றும் தென்னூர் குமாரசாமி. குற்றப்பரம்பரையாயிருந்த குமாரசாமி காட்டும் உலகம்தனி, ஆறுமுகத்தின் நட்பு கிடைத்தவுடன் தனது தொழிலையே மாற்றிக் கொண்டவர் குமாரசாமி. பணிக்கனாக மரம் அறுக்கும் தொழிலாளியாக தச்சனாக தன்னை மாற்றிக் கொள்கிறார். வயது அதிகமிருந்தாலும் தோழனாக, ஆலோசகனாக, தந்தையைப் போல் நடந்து கொள்கிறார். அவரது பேச்சு மிகவும் சாமர்த்தியமானது மட்டுமல்ல. உலக நடப்பை புரிந்துகெண்ட ஒருவனின் நிதானம் காத்திருக்கிறது.

ஆசிய வகைப்பட்ட சமூகங்களில் அதன் உறுப்பினர்கள் தனிமனிதர்களாக இல்லாமல், ஏதோவொரு கூட்டு அடையாளத்தின்( ) குறிக்கப்படுகின்றனர். உடைமை சார்ந்த உறவுகளில் மட்டுமல்லாமல் சமூகக் கட்டமைப்பிலேயே, அத்தகைய கூட்டு அடையாளங்கள் முன்னுரிமை பெறுகின்றன. கூட்டுக் குழுமம் என்ற அமைப்பு உடைமை உறவுகளால் உருவான ஒருவிளைவாக இல்லாமல் எல்லாவகைச் சமூக உறவுகளுக்குமான முன் நிபந்தனையாகக் கூட அமைகிறது. (  ) இவ்வகைச்  சமூகத்தில் பொருளாதார உற்பத்தியின் இலக்கு வணிகமோ, பணப்பரிமாற்றமோ அல்ல. மாறாக கூட்டுப் பயன்பாட்டு மதிப்புகளை உற்பத்தி செய்வது மட்டுமே என்பார் கார்ல் மார்க்ஸ்.

கானல்காடு நாவலில் கீழணை, வெள்ளாற்றில் பெலாந்துறை அணை, தொழுதூர் அணை, வெலிங்டன் ஏரி, மணிமுத்தாற்றில் விருத்தாசலம் அணை தோற்றுவிப்பது கூட்டுக் குழும உறவுகளாலாலேயே  சாத்தியப்பட்டது. மக்களின் உழைப்பு கூட்டுப் பயன்பாட்டு மதிப்புகளை உற்பத்தி செய்வதற்கே பயன்பட்டது. சமூக உறவுகளே முன்னுரிமை பெறுகிள்றன. தப்பித்து வந்த காசி, ஆறுமுகம், தோழர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது சமூக உறவுகளிலிருந்து அவர்களால் தனித்திருக்க முடியாத தன்மைதான். இது ஒருவகையான மாற்றுலகக்கட்டமைப்பு.நீர்வளப் பெருக்கத்தாலேயே பொட்டாங் காட்டிலிருந்து வளம்தேடி குடியேறுகிறார்களே ஒழிய, நாட்டாரோ, அவரைச் சார்ந்தவர்களோ விரட்டியடித்தார்கள் என்பதில்லை. ஆனால் பாமரசனங்கள் அப்படித்தான் கூறித்திரிகிறார்கள். 1990 வரை பிள்ளைமார்கள் தங்கள் நிலங்களை, வீடுகளை விற்கவில்லை. அவற்றில் பயிரிட்டு கொடுக்கூர் மக்கள் குத்தகையை ஒழுங்காகக் கொடுத்து வந்திருக்கிறார்கள். சமூக உறவுகளில் குழப்பம் எழவில்லை.

உண்மையில் நாவல் வெறும் கதை சொல்லல் மட்டும் தானா? ஆறுமுகம் என்ற நாட்டாரின் கதையை மட்டும் கூறிவிட்டுப் போய்விடலாம்தான். கானல்காடு இருபதாம் நூற்றாண்டில் தொடக்க கால மக்களின் வாழ்நிலையை, சமூக பொருளாதார நிலையை, திணைக்கூறுகளின் நிலைமையை தெளிவாகச் சொல்லுகிறது. யதார்த்தவாத நாவல்கள் நாட்டார் கலை வடிவங்களின் சாரத்தை எடுத்துக்கொள்கின்றன. இங்கே சிலம்பாட்டம், புலியாட்டம், காளியாட்டம், நாட்டார் பாடல்கள், விடுகதைகள் அவற்றின் தனித்தன்மையோடு இயைந்து வருகின்றன. தலைமறைவு வாழ்க்கையில் இருக்கும் நாட்டாரை தப்பவைக்க முகமூடிகளாக மக்கள் அதனைப் பயன்படுத்துகின்றனர். வேர்களைத் தேடிப்போகும் பண்பாக இவற்றை கருதலாம். தமிழ்வாழ்வை மக்களின் உணர்வுகளோடும், வலியோடும்கட்டுக்கோப்போடும் இரசனையோடும் பேசுகிறது நாவல்.

சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், குடும்ப வன்முறை, பாலியல் சிக்கல்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை மிகுந்த வலிமையோடு பேசுகிறது நாவல். நாட்டார் தீர்த்து வைக்கும் சில வழக்குகளில் உறவுச்சிக்கல்கள், பாலியல் சிக்கல்கள் போலத் தோன்றலாம். அவற்றினடியே புதைந்து கிடக்கும் சமூகச் சீரழிவு, பொருளாதார பிரச்சினைகளோடு புரிந்துகொண்டு தீர்க்கும்போது வாசகன் நெகிழ்ந்து போகலாம். நாவலின் மொழி அதுவல்ல. ஒரு நல்ல வாசகனால் எதிர்காலம் குறித்த கருத்தியல்களையும் புரிந்து கொள்ளலாம்.இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வட்டார மொழியை, கதை மாந்தர்களின் பேச்சு வழக்கில் மட்டுமே காணமுடியும். நாவல் முழுக்க நாட்டான் நடமாடும் திணை சார்ந்தே பேசப்படும். நாட்டார் ஒடுக்கப்பட்ட ஒரு இனக்குழுவின் அடையாளம் எனினும், இனக்குழுவின் பெருமை ஓரிடத்திலும் இல்லை. அவ்வினக்குழுவின் வீழ்ச்சிக்கு இனக்குழுச் சமூகமே காரணம் என்பதை நாவல் முழுக்க ஆய்வுக்குட்படுத்துகிறார். அவற்றை புரிந்துகொண்டாலே தெளிவு பிறக்கும்.

பதிமூன்று ஆண்டு  கால தலை மறைவு வாழ்க்கையில் நாட்டான் சந்திக்கும் தனிமை, அச்சம், பயத்தின் விளைவாகத் தோன்றும் கோபம், சூழ்ந்திருக்கும் வெறுமை மிக நுட்பமாக விவரிக்கப்படுகிறது. அவர் எதிர்கொள்ளும் மக்கள் ஆறுமுகத்தை உயர்வான இடத்தில் வைத்தே பேசுகின்றனர், நடத்துகின்றனர். உழைக்கும் மக்களின் மனப்பாங்கு தங்களின் ஒருவனாகவே கருதச்செய்கிறது. ‘போடா, ஒனக்குன்னு தனி ஓலையா வைக்கிறோம்’ இந்த ஒட்டுதல் தான் தலைமறைவு வாழ்க்கையைச் சலிப்பில்லாமல்  நடத்த உதவுகிறது.

நாட்டானை நாட்டானாகவே பார்க்க முடிந்தவர்கள், நாட்டான் என்று அதிகார மையத்தை சிதற வைப்பவர்கள் வெளியுலகப் பெண்களே. கலாவின் சமவயதுத்தோழன். இளம் பருவ காய்ச்சலுக்கு உள்ளாகிறாள். மணமாகி விட்டது தெரிந்ததும் மதம் மாறிவிட்டாள். ஆனால் நாட்டான் கலாவை எழுத்தறிவித்த குருவாகவே எண்ணுகிறான். நாட்டார் வம்சக்கொடி அவன் உடலைப் பின்னிப் பிணைத்துவிடுகிறது. சுந்தரவல்லி வயதில் பெரியவள். பாலா ஒருசில ஆண்டு மூத்தவள். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வழித்தவறிப் போகும் பாலா, ஆறுமுகத்திடம் உலக நடப்புகளைப் பற்றி பேசும் பேச்சுக்கள் வலிநிறைந்தவை. முள்ளால் கீறிய இரத்தகசிபவை. அவளுக்கு ஆறுதலாக உடலை தட்டிக்கொடுப்பதில் காமம் இல்லை. வலியை பகிர்ந்து கொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறான்.அவளுக்கு உதவும் பொருட்டு  பிள்ளைமார்களிடமே உதவிகோரிச் செய்கிறான். திருப்பனந்தாள் மாணிக்கம் பிள்ளை, ராயநல்லூர் வேலாயுதம் பிள்ளை, நாகூர் வடிவேல் பிள்ளை போன்றவர்கள் ஆறுமுக நாட்டானின் பண்பை புரிந்து கொண்டவர்கள். கேட்கும்போதும் கேளாதபோதும் ஆறுமுகத்திற்கு பண உதவி செய்பவர்கள். இனத்துக்காரன், குறவன், இஸ்லாமியர் எவரும் தாராளமாக எவ்வித எதிர்பார்ப்புமின்றி உதவுகிறார்கள். அவரும் அவரது தந்தையும் செய்த உதவிகளை மறந்துவிடவில்லை எவரும்.

பாலியல் ஈர்ப்பில் வழிதவறிச் சென்றுவிடத் துணியும் அனைத்து இனப்பெண்களையும் மீட்டுத்தந்தவர் என்பது மேட்டுக்குடி மக்கள் அவர்மீது மதிப்பு வைக்கக் காரணம். நேர்மையும் நாணயமும் வேறுகாரணம். கதைநாயகன் பார்வையிலேயே சொல்லப்படும் கதையே பெரும்பாலாக சில இடங்களில் துணைப்பாத்திரம் மூலமாகவும் கதை சொல்லப்படுகிறது. கதாபாத்திரங்கள் தங்கள் மனஉணர்வுகளைப் பேசுவது கவிதை தன்மை நிறைந்ததாக உள்ளது. அவை உழுகுடிச் சமுதாயத்தின் தொன்மையான பண்பாட்டுச் சித்திரங்கள். இவ்வகை கட்டமைப்பு நாவலுக்கு ஒரு சரளத்தன்மையை வழங்கியிருக்கிறது. நாவல் தன்னை வேகமாக முன்னகர்த்தும் உத்தி.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை எழுதும்போது எழுத்தாளனுக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை. ஒருசில பாத்திரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருப்பினும், அவையும் அடையாளம் காணக் கூடியவையே. பிறபாத்திரங்களின் மூன்றாம் நான்காம் தலைமுறை வாரிசுகள் வாழ்ந்துகொண்டிருக்கையில் எழுத்தாளனின் கைகள் கட்டப்பட்டுள்ளன. கேட்டு, அனுபவித்து அவர்களுடன் உரையாடி எழுதும்போது எழுத்துக்கான சுதந்திரம் பறிபோய்விடுகிறது. தான் சொல்லவந்த காலத்தை மிகச்சரியாக தரிசனப்படுத்தி நாவலின் மையமான உணர்ச்சியை வாசக மனதில் அழுத்தமாகப் பதிய வைத்ததன் மூலம் வெறும் சம்பவக் கோர்வையாக மாறிப்போகிற விபத்திலிருந்து சுவாரசியமாக தப்பிவிடுகிறார்.

நாவல் எழுதும் போது நக்கீரனில் ஒரு கட்டுரை வருகிறது. ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் தனது வேட்டைத் துப்பாக்கியை ஆறுமுகம் பிடுங்க முயற்சித்ததாகவும், தான் பயந்துபோய் போலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் சொல்கிறார். கவிஞர் பழமலைக்குக் கூட வருத்தம் அந்நிகழ்ச்சி நாவலில் இடம்பெறவில்லையே என்று. அவர் 2009 இல் தனது 98 ஆம் வயதில் இறந்து போகும்போது அவர் பிறந்த வருடமே நாட்டார் கைது செய்யப்பட்ட காலம். நாட்டார் கொல்லப்படும் போது அவருக்கு 13 வயதுதானிருக்கும். இவ்வாறு பொருத்தமில்லாததை எவ்வாறு சேர்க்க முடியும்? வடலூரில் ஒரு பெரியவர் நாட்டார் பெருமாளை வெட்டிய கத்தியை தான்தான் வைத்திருந்ததாகக் கூறினார். அவரது வயது 79 (2008). வயதை ஒட்டிப் பார்க்கும்போது நாட்டார் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகே அவர் பிறந்திருக்க வேண்டும். நாட்டாரைப் பற்றி கேள்விப்பட்டிருக்க பலருக்கு வாய்ப்புண்டு. கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு தன்னையும் கதைக்குள் திணித்துக் கொள்ளும் கற்பனை எல்லா மனதிற்கும் உண்டு. ஒரு ஆய்வாளன் பலதையும் யோசிக்காமல் எழுதிவிட முடியாது.

தன் நிலம் பறிபோன கோபத்தில் பெருமாளை கொன்றுவிடத் துடிக்கிறார் ஆறுமுகம். அவரது முடிவை ஒன்றரையாண்டுகள் தள்ளிப்போட வைக்கிறது காசியின் பேச்சு. போ நாட்டாரே போ. உனக்கிருக்கிற ஆத்திரத்திலே பெருமாளை வெட்டிட்டு வா. அங்க ஒங்கப்பன் வீட்டு போலிசு கையக் கட்டிக்கிட்டுத்தானேயிருக்கும்? உனக்கு குறிவைச்சுட்டு ஊர்சனங்களையே அலங்க மலங்க அடிச்சிட்டிருக்கானுங்க அவங்களை இன்னும் சிரமப்பட வச்சுப்பாரு. ஒனக்கும், ஒங்க அப்பனுக்கும் நீங்க நினைக்கிறது நடக்கணும். ஊர்சனங்க என்ன நினைச்சாலும் துயரப்பட்டாலும் கவலையில்லே. அதையெல்லாம் பார்க்கிற புத்தியுடையவனாய் இருந்தா சரணடைஞ்சிருப்பியா? போ வெட்டிப்போட்டுட்டு வா. இதுவரையிலும் ஒன் சுகதுக்கத்திலே பங்குபோட்டுக்கிட்ட என்னையும் மத்தவங்களையும் காட்டிக்கொடு. அப்புறம் ஆகிறது ஆகட்டும். கௌம்புப்பா கௌம்பு. காசியின் சாதுரியமான பேச்சு கட்டிப்போடுகிறது. ஆத்திரம் அடங்க மனைவி நீலாவிடம் அனுப்பும் காசி கூறுவது மிக யதார்த்தம். ‘நம்பி வந்தவளுக்கு நீங்க வெறும் சூனியம். வீட்டிலே அமைதியிருந்தா தான், ஊருமெச்சுறதிலேயும் அர்த்தம் இருக்க முடியும். வீட்டிலே மனநிறைவு கிடைக்காதவன்தான் வெளியிலே ஆத்திரமா செயல்படத் தொடங்குவான்’  பாலியல் சம்பந்தமான ஒரு நுட்பத்தையும் கூறுகிறான்.

தான் கொல்லப்படக் கூடும் என்றுணர்ந்த பெருமாளின் நிலையையும் தெளிவாக சித்தரித்துள்ளார். ‘மனுச சென்மம் ஒரே நிலையில்  நிலைக்க முடியாது. ஏற்றமும் இறக்கமும் மாறிமாறித்தான் வரும். நாட்டான் ஒனக்கு சரிவு காலம் எப்பவோ தொடங்கிருச்சு. சினேகமும் விரோதமும், துக்கமும் சந்தோஷமும், சதிச்செயலும் மன்னிப்பது எல்லாமே மாறிமாறி நடக்கும். அது ஆட்டத்தோட விதி’.

இரண்டாவது கொலை கொளத்தூர் இராமச்சந்திரன். தன்னை போலிசில் காட்டிக் கொடுத்துவிட்டான் என்று ஆத்திரம். இராமச்சந்திரனுக்கு ஏற்படும் நெருக்கடியையும் ஆசிரியர் முன்வைக்கத் தவறுவதில்லை. கொலைக்கு முன்னால் தன்னிடம் வரும் ஆறுமுகத்திடம் குமாரசாமி கூறுவதைப் பார்ப்போம். ‘அவனை போலிஸ் மிரட்டியிருக் கலாமில்லே? ஆசை வார்த்தை காட்டியிருக்கலாம். பணம் தரக்கூடச் செய்வாங்க. தன்னாலே முடியாததை தந்திரத்தாலே முடிக்கிற சூழ்ச்சித் திறன் மிக்கவன் ஆங்கிலேயன். வெறுமனே சந்திரனை மட்டும் குறையா எண்ணக்கூடாது. என்ன நடந்ததுன்னு முழுசா விசாரிக்காம தவறான முடிவுக்கு வரக்கூடாதுப்பா என்கிறார். நாட்டார் நிதானமிழந்து செய்துவிட்ட கொலையாகவே சித்தரிக்கப்படுகிறது.

அடுத்த பட்டம் பக்கிரியின் கொலை. கொலைவெறியுடன் துரத்தும் அவனிடமிருந்து தப்பிக்கவே நண்பர்களுடன் முயற்சிக்கிறான் ஆறுமுகம். தஞ்சை கலெக்டரிடம் பணம் வாங்கியவன்தான். அவன் தனது  நண்பர்களைப் பார்த்து சுடுவது பொறுக்காமல் அவனது துப்பாக்கிக் கட்டையால் அடித்துக் கொன்றுவிடுகிறான். மனம் சோர்ந்து விசும்புகையில் ஆறுமுகம் சொல்வதைப் பார்ப்போம்.‘கலா சொன்ன கதையில வரமாதிரி தம்பி அண்ணனைக் கொன்னுட்டான். காயின் மனதிலெழுந்த பகைமை, பயங்கரம் எலும்புத்துண்டே ஆயுதமா மாறி அபெலைக் கொன்னுடுத்து. இங்கே எலும்புத்துண்டுக்கு பதிலா மரக்கட்டை. ஏனிந்த வன்மம் என்மீது கவியணும்?  சகோதரனைக் கொல்கிற வன்மம் எனக்குள்ளே எப்படி நுழைஞ்சது?’ கழிவிரக்கத்தில் கரைகிறான்.

‘அது உன்னுள்ளேயும் இருக்கு, என்னுள்ளேயும் இருக்கு. எச்சில் பால் உண்ணும்போதே வன்மமும் ஊட்டப்படுகிறது. அது வெளிப்படாமல் போயிடணும். உனக்கு இந்நேரத்திலே வெளிப்பட்டிருக்கு. நடந்தது நடந்து போச்சு எழுந்து வருவியா?’என்கிறான் காசி. சூழ்நிலையில் இறுக்கத்திலிருந்து அச்சமயம் விடுபட காசி அப்படித்தான் பேசியாக வேண்டும். அவனுக்கும் உடன்பாடில்லை. எப்படியாவது மீட்டெடுக்க முயல்கிறான். தா.பழூரைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் நிறுத்தி நிதானமாக வாசிக்கும் போது பல விஷயங்களை விளக்கும். (கள ஆய்வின்போது பல ஊர்களுக்கு ஆசிரியருடன் சென்று பலமக்களுடன் உரையாடினோம். அவர்கள் மனதில் நாட்டானைத் தெய்வமாகவேக் கருதும் மனநிலையை உரையாடும்போது அறிந்தோம்)

இந்த தர்க்கத்தின் கொடுமுடியை கொடைக்கானலில் பொன்னுத்தேவர் பேசுவதைப் பார்க்கலாம். ‘உன் முகமூடி பறக்கும். என்ன சொன்னே? பிறந்த சாதிக்கு துரோகம் செய்யுறவன் என்ன மனுசப்பிறவி. உண்மையான வார்த்தை. நானாவது சொந்த இனத்திலே திருடினேன். பொருள்தான் நஷ்டம். அவங்க சமாளித்து எழுவாங்க. நீ சொந்த சகோதரன் இரத்தத்தையில்லே குடிச்சிருக்கே… அவங்க குடும்பமே நிர்மூலமா போயிடுமே’‘தேவர் அப்படியில்லே, அவங்க எனக்கு துரோகம் செய்தாங்க’

‘என்னத் துரோகம்? ஒனக்கு மட்டும் உயிர் கெட்டியாய் இருக்கணும். அதுக்காக இனத்துக்காரனையே அழிப்பே… நாம ஒருவரில் சகோதரனைக் காண்கிறோம். இல்லே அன்னியர்கள் நிறைந்த உலகத்திலே வாழ்ந்துகிட்டிருக்கோம். அன்னியருன்னு யாருமே கெடையாது. நான் என் சகோதரனைக் காத்துவரணும். பஞ்சகாலத்திலே கஞ்சித்தொட்டி வச்சதும், இப்போ யுத்த காலத்திலே ரேஷன்கடை பிறந்ததும் அன்னியனுடைய சகோதர வாஞ்சை: மன்னிக்க முடியாததில்லே மனுஷ சுபாவம். மன்னிக்கத் தெரிஞ்சவனுக்குத்தான், மன்னிப்பின் மகத்துவம் புரியும். ஆமாம் மண்ணைவிட்டு, வேரைவிட்டு துரத்தப்படுவதற்கு அவர்களா காரணம்?’ மேலும் பொன்னுத்தேவர் கூறுவதைப் பார்க்கலாம். காயின் ஏன் அபெலைக் கொலை செய்தான்? அவன் மீது பொறாமைன்னு சொல்லிவிட முடியாது. இருவரும் மனம்திறந்து பேசிக்கலே.மனுசன் ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசணும். ஒருவருக்கொருவர் உண்மையாகவும், நேர்மையாகவும், மரியாதையோடும் உரையாடிருந்தா சகோதரனைக் கொலைபண்ண மனம்வராது. எங்கு பார்த்தாலும் வெறுப்பும் சந்தேகமும் நம்பிக்கையின்மையும் விரவியிருக்கு. எல்லோருக்கும் சகோதரனாக முடியும். இன்று சகோதரனை அன்னியனாகக் கருதி கொன்னுட்டே. நாளைக்கு அவன் சிந்திய இரத்தம் விதைகளாய் மாறி, வனமாய் வளரும். சகோரத் துரோகம்தான் கோரையாய் மாறி கண்ணனை அழிச்சுது.

நாவல் இங்கே முடிந்து போயிருக்கவேண்டும். நாட்டானின் மனவெறுமையும், பாலைத்தன்மையும் தான் கானல்காடு. கானல் வீசும் பொட்டல்காடு மட்டுமே  கானல்காடல்ல. நாவலின் மையம் இங்கே நிறைவுறுகிறது. மக்கள் நினைத்துக் கொண்டுள்ள நாட்டானின் அகம் பற்றிய பிம்பம் இங்கே உடைந்து சிதறுகிறது. வரலாறு நாவல் என்றால் வெறும் சம்பவக் கோர்வையல்ல. இவ்வேளையில் தமிழ்நாடன் தன் முன்னுரையில் கூறுவதை நினைவிற்கொள்ள வேண்டும். வரலாறு நிகழ்த்தியவர்களுக்கோ நிகழும்போது இருந்தவர்களுக்கோ சொந்தம் இல்லை. வரலாறு தன்னை ஆக்கியவர்களையே இல்லாமல் ஆக்கிவிடுகிறது. நிகழ்ந்த காலத்தவர்க்கு உரிமையற்றுப்போன வரலாறு, நிகழ்காலத்தவர் வழியாக நாளை வாழ்வார்க்குச் செல்கிறது. நிகழ்காலத்தவர் காலம் என்ன? அதன் பரிமாணம் அல்லது அளவு என்ன? நீர்க்குமிழிகளாக மறையும் நொடிகள் ஓடை நீராக ஓடும் நாட்கள். அருவி நீராக இழையும் ஆண்டுகள். உடைந்த மனதுடன் சன்னியில் பிதற்றும் ஆறுமுகத்திடம் சுந்தரவல்லி கூறுகிறாள்.

‘என்னோட ஆறுமுகம் கல்மனம் படைச்ச ஆம்பளைன்னு நெனைச்சிருந்தேண்டா. இப்படி திடீருன்னு ஒடைஞ்சுப் போயிடுவேன்னு நெனைக்கலே. பாவியாயிட்டேன்னு நீ பொலம்பலாம். ஒன்னாலே  எப்போதும் பாவம் செய்ய முடியாதுடா. அப்படியே செய்திருந்தாலும் அதுக்கு ஒரு காரணமிருக்கும். காரணமில்லாம எதையும் செய்யமாட்டான் என்கண்ணு. நீ சொல்றத நம்பறதுக்கு நான் தயாரில்லே. தூங்கு கண்ணு’ என்று ஆற்றுப்படுத்துகிறாள். இதுதான் நாட்டான் என்ற பிம்பம் மக்களின் மனதில் உறைந்து கிடக்கும் பிம்பம். உண்மை வேறு. உண்மையை நம்ப மறுப்பது கூட நமது பொதுப்புத்தியில் உறைந்து போய்க் கிடக்கிறது.

கலைப்படைப்பில் மானுடச்சித்தரிப்பு என்பதுதான் என்னவாக இருக்கும்? தனது தேர்ச்சியின் மூலம் ஆடும் மொழிவிளையாட்டுத்தான் என திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. மொழியின் வழி கலைஞன் தனது படைப்பில் உருவாக்கும் அறியப்படாத மனித அறம்தான் கலை மேதமை என்றும் சொல்லப்படுகிறது. அதிகாரமும், ஒடுக்குமுறை உணர்வும், பழிவாங்கும் வெறியும் கொண்டவர்களிடமிருந்து கலியாணி ஆச்சியை மீட்டெடுப்பது அறியப்படாத மனித அறம்தான். பிரதிபலனாக அவரிடம் பாலியல் எழுச்சி உருவாவது இயற்கை. அதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தாதது மனித அறம்.

பாலுறவு சித்தரிப்பு என்பது கலைஞர்களை கவிழ்த்துப்போடும் மலைஉச்சி. மானுட உறவும் அதன் நெகிழ்ச்சியும் பரவசமும் கொண்டது பாலுறவு அனுபவம். தனிமையும் சுயபச்சாதாபமும் நிறைந்த கலங்கும் ஆறுமுகத்திற்கு சுந்தரவல்லியிடம் ஏற்படும் முதல் தொடர்பு இவ்வகையான நெகிழ்ச்சியான தருணம்தான். மனதளவிலும் சோர்ந்தும், விடுதலையை நேசிக்கிற அதிகாரமற்ற ஏழைகளிடமும் கலவியென்பது வலி மீட்சியாகவும், ஆண் பெண் சங்கமத்தின் ஆன்மீக விடுதலையாகவும் சித்தரிக்கப்படுகிறது. தனிமனிதர்களின்  அவல வாழ்வு குறித்த சித்தரிப்பு கலவி குறித்த இந்தத் தரிசனம் மிக இயல்பாக நமக்குள், நமது வாழ்வில் ஒரு மந்திரம் போல் இறங்குகிறது. சகலவிதமான ஒடுக்கு முறைகளிலிருந்தும் ஆன்மாவும் உடலும் விடுதலை பெறவேண்டும் என்று நினைக்கிற கலைஞனால் சாத்தியமாயிருக்கிறது.

காலனியாதிக்கம் என்பது எப்போதுமே ஒரு நாட்டில் உள்ள சகோதர சக்திகளை பகைச் சக்திகளாக்கி அவர்களை மோதவிட்டுத் தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளும். இந்தியாவில் முன்பேயிருந்த ஆதிக்கசக்திகளிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு அவர்கள் மூலம் தன்னை நிலைநாட்டிக் கொண்டது. பகை சக்திகள் பெருமாள் கொலை வரையிலும் செயல்பட்டு பின் விலகிவிட்டனர். பின் அதிகார சக்திகளிடம் சென்றுவிடுகிறது. அவர்கள் விரிக்கும் தந்திரமான சூழ்ச்சி வலையில் கொலையாளிகள் இருவர் சிக்கி விடுகின்றனர். ஒரு தந்தையைபோல் கவனம் கொண்ட குமாரசாமியே கூற நேரிடுகிறது. ஐந்து வருடம் தலைமறைவா இருந்தியே அது உத்தமம். இன்னும் கொஞ்சகாலம் தலைமறைவா இருந்துடேன். யாரையும் நம்பறதை விட்டுடு. ஏன்னா நானே கூட மாறிடலாம். போலிஸ் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிஞ்சுதான் ஆகணும்.

ஆறுமுகம் தன்னிரக்கம் கொண்டு, உணர்ந்து விரக்தியோடு பக்கிரியிடம் பேசுவது தனது நிலையை உணர்த்துகிறான். நீயுள்பட என் நிலைமையை உணர முடியாது பக்கிரி.  வேலை, தூக்கம், ஓய்வு காமம் புத்துணர்வுன்னு பழகிப்போன தடத்திலேயே வாழ்ந்துக்கிட்டிருக்கீங்க. தனிமை, போராட்டம், ஓட்டம், ஏமாற்றம், துரோகம், பழிவாங்கல், பின்னே தன்னையே மறந்துபோன சின்னச்சின்ன ஆறுதல். அவைதான் வாழணுங்கிற வெறியை உண்டாக்கும் கணங்கள். இருமனிதர்களுக்கிடையே கவுரவத்தை காப்பாற்றிக்க ஒரு எல்லையிருக்கு. உலகத்தில் நடைமுறைக்குச் சில நியதிகள் இருக்கு. மீறிட்டுப் போகமுடியாது. சட்ட வலையிலிருந்து விடுபட ஒரு சட்டப்பூர்வமான நடத்தை வேணும். ஆனால் சட்டம் அதிகாரம் உள்ளவனுக்கு சாதகமாகவே எப்பவும் இருக்கு. இப்பேச்சு வெளிப்படும் தருணம் கூட தண்ணியில் விழும் தருணம். முதல் கொலையாளியான சின்னராமசாமியின் வாக்குமூலத்தில் பகையுணர்வு இல்லை. எல்லாமே வரம்பு மீறிப்போயிடுச்சு, அவங்களே நினைச்சாலும் திரும்பப் பெறமுடியாது. தானியமா,தவசமா கொட்டிட்டு அள்ளிக்க? மானப்பிரச்னை, தன்மானப்பிரச்சினை. நாட்டான் போராடுறான். அரசாங்கமே அவன் உயிரை எடுக்கத் துடிக்கிறது. எல்லாமே கைமீறிப்போச்சு. தூண்டிலுக்குள்ளே மாட்டிக்கிட்டாச்சு. மீனு துடிச்சு என்னவாகப்போறது? சட்டிக்குள்ளேதான் கொதிச்சு ஆகணும். ஆசை யாரை விட்டது. சொத்து மோகம் யாரை விட்டது. தனது நிலைமையையும் சேர்த்தே சொல்கிறார்.

வாழ்வு மறுக்கப்பட்டவர்களின் கதையை, தமிழ்தேசத்தின் வேறுவேறு பிரதேசங்களுக்கும் மொழியின் இருளடர்ந்த நுண் பரப்புகளுக்கும் ஊடே சென்று ஆசிரியரால் கொண்டுவர முடிகிறது. சமூக அமைப்பின் தோற்றுவிட்ட ஏழைத்தனிமனிதர்களின் வாழ்வின் துயரங்களிலிருந்து அவர்கள் தம்மளவில் மீட்சிபெறுவதற்கான சாத்தியங்களின் தேடலாக எழுகிறது நாவல். வரலாறும் மரபும் தம்மீது சுமத்திய அரசியல் அமைப்பின் முன் தோற்றுப்போய்க்கொண்டிருக்கும் தனிமனிதர்கள் தம்மீதான சுமைகளை உதறியபடி தமது விடுதலையை அடைவதற்கான சாத்தியங்களை மறைமுகமாகச் சுட்டிச் சொல்கிறது நாவல். எழுத்தின் எவ்வடிவமாயினும் ஒரு ஆளுமையாக கலைஞன் மலர வேண்டும். ஒரு கலைஞன் தனது தொடர்ச்சியான தேடல்கள் வழியாக வாழ்வு பற்றிய தனது தேடல்களை, தரிசனங்களை, தர்க்கங்களை தன்மொழிக்குள் கொண்டு வருவதன் மூலம் அம்மொழியின் ஒட்டுமொத்த மானுட அறிவை மேம்படுத்துவது அல்லது விரிவுபடுத்துவதன் சாத்தியமாகும். இந்நாவல் ஆளுமை நிறைந்த எழுத்தாகும். அவ்வகையில் தேர்ந்த படைப்பு கானல்காடு.

நாவலின் முன்னுரையில் தமிழ்நாடனின் தரிசனத்தோடு நிறைவு செய்யலாம். ‘மரணம் வரை நீளும் நாவலின் ஒவ்வொரு பக்கத்தை தாண்டும் போதும் ஆறுமுகம் அகப்பட்டு விடக்கூடாது என்று அங்கலாய்க்கிறது மனசு’. ஆறுமுகத்தின் அவலவாழ்க்கையை அழியா இலக்கியமாகப் படைத்திருக்கிறார் தெய்வசிகாமணி. சுலபமான எழுத்து, சந்தோஷமான வாசிப்பு என்பதே காலப்போக்கு. இதை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறார் அவர். யூத மற்றும் ஆப்பிரிக்க, அறிவு ஜீவிகள் தங்களின் வேர்கள்  பட்ட காயங்களை தங்கள் விழுதுகள் அறியவேண்டும் என்று, தேடித்திரட்டி ஆராய்ந்து தருகிறார்கள், கவிதை, நாவல், சினிமா என்று பலவடிவங்களில். அப்படி நம் இன மீட்சிக்கான இலக்கியமிது. கானல்காடு ஒவ்வொரு கிராமத்திலும் படிக்கப்பட வேண்டும், படித்துக்காட்டப்பட வேண்டும். அத்தகையதொரு வாசிப்புக்கு வாய்ப்புக் கோருகிறது மனம். எனில் நம்மக்களின் அறியாமை அகன்று அறிவு ஒளிவிடத்தொடங்கும். தமிழ்நாடனின் சொற்களை வழிமொழிவதை விட, வேறு மதிப்பீடு என்னிடம் இல்லை.

நவீன இலக்கியத்தின் படைப்பாளிகள் தங்கள் சுய அடையாளங்களை மீள் பரிசீலனை செய்வது, மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கவே. தங்கள் பூர்வ குடிமகனின் இன்றைய வாழ்நிலையை மேம்படுத்தவும் அவர்களின் கலாச்சாரப் பங்களிப்பை உறுதி செய்யவும், காப்பாற்றவும் போராடுவதுதான் எழுத்தாளனின் கடமை. மக்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்து நாவலில் பதிவு செய்திருக்கிறார். வெறும் தனிமனித வழிபாடு கவைக்குதவாது. பிரச்சனைக்கு தீர்வை சொல்லுவது எழுத்தாளனின் வேலையில்லை. வாசகன் தான் புரிந்து கொள்ள வேண்டும். எழுத்தாளனின் செயல்பாடு அரசியலில், அரசியல்வாதியின் செயல்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எழுத்தாளன் அரசியலை அதன் அறவுணர்வு, அழகியல் உணர்வு போன்ற தளங்களிலிருந்து எதிர்வினை கொள்கிறான். அரசியல் எதிர்வினை என்பது கேள்விகளாகத் தொடர்ந்து படைப்பாளர்களால் வெளிப் படுத்தப்பட்டு வருகிறது.அரசியலில் கேள்விகளை விட தீர்வுதான் முக்கியம் என்ற நிலைப்பாடு இருக்கிறது. அரசியல் தீர்வுகள் பலமுறை அதிகாரத்தினை மட்டுமே உருவாக்குவதால், படைப்பாளர் தேர்ந்தெடுக்கும் தீர்வு அதுவல்ல. சமூக, பண்பாட்டு, பொருளியல் தளங்களின் இயங்க வேண்டும் என்பதே படைப்பாளனின் விருப்பம். கானல்காடு நாவல் இத்தளத்தில் இயங்கும், தனுத்தன்மை மிகுந்த படைப்பு. வாசகன் அணுகும் முறைக்கேற்ப தீர்வினை கண்டறியலாம். எழுத்தாளன் வெறும் கோஷங்களை எழுப்புவதோ அல்லது கோட்பாடுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து விட்டு விமர்சனப் பார்வையின்றி எழுதுவதோ இல்லை. எழுத்தாளனின் அரசியல் பார்வையை  வாசகன் தான், தனது உள்வாங்கும் திறனால் கிரகிக்க வேண்டும். அனைவரும் படித்து சுய விமர்சனம் தேடும் படைப்பு கானல்காடு.
—————–

Series Navigationசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *