நினைவுகளின் சுவட்டில் (91)

This entry is part 4 of 32 in the series 1 ஜூலை 2012

நாங்கள் அடுத்து பயணம் சென்றது கல்கத்தாவுக்கு. பஞ்சாட்சரம், மணி, இருவரைத் தவிர எங்களில் வேறு யாரும் பெரிய நகரத்தைப் பார்த்திராதவர்கள். அந்த நாட்களில் அப்படித்தான். எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் தஞ்சாவூர், திருநெல்வேலி, மாயவரம் போன்ற டவுன்கள் தான். வாஸ்தவம். சென்னை என்ற பெரு நகரம்  ஹிராகுட்டுக்கும் எங்கள் அவரவரின் சொந்த கிராமம் அல்லது ஊருக்குமான இடையில் இருந்தது தான். அதைக் கடந்து தான் ஹிராகுட் வந்தோம். ஆனால் யார் சென்னையைக் கண்டது? எக்மோர் ஸ்டேஷன் தெரியும், செண்ட்ரல் ஸ்டேஷன் தெரியும். அதிகம் போனால்  மாம்பலத்திலோ தாம்பரத்திலோ பயணத்தின் இடையே ஒரு நாள் தங்கியிருந்திருப்போம். ஆனால் கல்கத்தா..? ஆக, கல்கத்தா போய் பார்த்துவிட வேண்டும். ரொம்ப பெரிய நகரம். டபுள் டெக்கர் பஸ் ஓடும் நகரம். . இன்னமும் ட்ராம் ஓடிக்கொண்டிருக்கும் நகரம். எல்லாவற்றுக்கும் மேல், மிருணால், ரஜக் தாஸ், செக்‌ஷன் ஆபீஸர் பாட்டாச்சார்யா, புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் இரண்டு பெண்கள், இருவரும் வங்காளிகள், மணமானவர்கள். அவர்களில் ஒருத்திக்கு மஞ்சு சென் குப்தாவுக்கு என்னிடம் மிகுந்த ஒட்டுதலும் மரியாதையும் (இதற்கு மிருணால் தான் காரணமாக இருக்க வேண்டும். அவன் அவளிடம் என்னைப் பற்றி ஏதோ நிறைய அளந்து வைத்திருக்க வேண்டும், ஒரு புகழ் மாலையே பாடியிருப்பான்) – இவர்களிடம் எல்லாம் நானும்  கல்கத்தா போய் வந்திருக்கிறேன். எனக்கும் கல்கத்தா தெரியுமாக்கும்  என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாமே. ஒருத்தனுக்கு கல்கத்தா தெரியாவிட்டால் அவன் பின் தங்கியவன் தான். இந்தியாவிலேயே பெரிய நகரம். இலக்கியத்தில், கலைகளில் இந்தியாவில் முன் நிற்கும் நகரமாயிற்றே.

இவ்வளவு உற்சாகம் எனக்கிருந்த போதிலும், இது முதலில் யார் மூளையில் உதித்த திட்டம் என்பது தெரியாது. எங்களில் இங்கு யாருக்கும் கல்கத்தாவில் தெரிந்தவர்கள் இல்லை. நான் இருந்த ப்ளாக்கிற்கு எதிரே கடைசி வீட்டில் ஒருவர் இருந்தார். தமிழர். அவரும் அவர் மனைவியும். கடைசியாக அவர் நினைவு எனக்கு இருப்பது, அவர் மனைவி அவருக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு பிரசவத்தில் இறந்து விட்டாள். அவர் தான் வீட்டை விட்டு வெளியா வந்து எங்களிடம் வந்து பேசிக்கொண்டிருப்பார். அவர் வயதுக்கு அவர் தந்தையானது மிகத் தாமதமாகத்தான். வருஷங்கள் பல காத்திருந்து குழந்தை பாக்கியம் கிடைத்தது சந்தோஷம் தரும் விஷயமாயில்லை. மனைவியை இழந்தாயிற்று. குழந்தையைக் கொடுத்துவிட்ட மனைவி மறைந்து விட்டால், என்ன செய்வார் பாவம்?. அவர் வீட்டுக்கு யாரும் உறவினர்கள், நண்பர்கள் வருவதையோ போவதையோ நாங்கள் கண்டதில்லை. “பாருங்க சாமிநாதன். இவ்வளவு பெரிய விஷயம் நடந்து போச்சு. குழந்தையைப் பெத்துக் கொடுத்துட்ட அவ போயிட்டா? நான் என்ன செய்யப் போறேனோ என்னவோ தெரியலை. அமைதியாகத் தான் இருக்கேன். ஏன் எனக்கு அழுகையே வரவில்லை? ஏன் என்று என்னையே கேட்டுக்கறேன். தெரியலை சாமிநாதன்” என்ற அவர் அமைதியாக சன்ன குரலில் சொல்லிக்கொண்டிருந்தது எனக்கு இப்போது கேட்டுக்கொண்டிருப்பது போலத் தான் இருக்கிறது. அதன் பிறகு எதுவும் எனக்கு நினைவில் இல்லை. வெகு சீக்கிரம் அவர் அந்த வீட்டிலும் இல்லை. புர்லாவிலும் இல்லை.  அவர்தான் எங்களில் யாருக்கோ கல்கத்தாவுக்கு போகும் பயணத்துக்கு அங்கு தங்கும் வசதிகளுக்கு உதவியவர் என்று சொல்ல வந்த போது மடை திறந்து பாயும் நினைவுகளை, இது தேவையில்லை என்று ஒதுக்க முடியவில்லை. மனித வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்கள், மகிழ்ச்சிகளோடு வரும் இழப்புகள், கண் முன்னால் நடந்தவை. எப்படி இதற்கு இங்கு இடமில்லை என்று தள்ளுவது? எல்லாமே மடைதிறந்த நினைவுகளின் பாய்ச்சல் தான்

இங்கேயே அவருக்கு நண்பர்களோடோ உறவினர்களோடோ நெருக்கம் என்பது எங்கள் கண்களில் படும்படி ஏதும் இல்லாத போது அவருக்கு எங்களுக்கு உதவச் சொல்லும்படியான ஒரு மனிதரோ வீடோ கல்கத்தாவில் இருந்தது எப்படி என்று இதை எழுதும்போது தான் எனக்கு ஆச்சரியப்படத் தோன்றுகிறதே தவிர, அப்போது இந்த சிந்தனைகள் எதுவும் எங்கள் மனதில் அலையாடியதாக நினைவு இல்லை. ஆச்சரியம் தான். எப்போதும் அவர் கண்களில் பட்டுக்கொண்டு எதிர் சாரி வீட்டில் இருந்த எங்களில், என் வீட்டில் அப்போது ஆறு பேர் இருந்தோம், யாரிடமும் இது பற்றி பேசிய நினைவும் இல்லை. எங்களை மீறி எங்கள் நண்பர் ஒருவருக்கு அந்த உதவியை அவர் சொல்லியிருக்கிறார், என்பதும் புரியாத விஷயம் தான். மனித உறவுகளில் தான் எவ்வளவு ஆச்சரியங்கள்.! புரியாத்தன்மைகள்!

என் நினைவில் வரும் கல்கத்தா ரயில் பயணம் அவ்வளவு ஒன்றும் சுகமானதாக இருக்க வில்லை. கூட்டம் நெரிபடும் இரவுப் பயணம். உட்காரக் கூட இடமில்லை. ரிஸர்வேஷன் என்கிற ஒரு சமாசாரம் வராத தெரியாத காலம். வழக்கம் போல ஜெர்ஸகுடா ஜங்கஷனில் காத்திருந்து பம்பாய் – கல்கத்தா மெயில் வந்ததும் முன் நின்ற பெட்டியில் ஏறிக்கொண்டோம். கொஞ்சம் நகர்ந்து இடம் கொடுக்காதவர்களுடன் சண்டை. இனி இரவு முழுதும், வண்டி விடிகாலையில் தான் கல்கத்தா போய்ச்சேரும். அது வரை இப்படியே தான் என்று வேதனைப் பட்டோமே தவிர எப்போதோ உட்கார இடமும் கிடைத்து தூங்கவும் செய்தோம்

கல்கத்தா என்று தான் பேசிக்கொண்டாலும், வண்டி போய்ச்சேர்வது ஹௌரா என்னும் ஸ்டேஷனுக்குத் தான். கல்கத்தா என்று ரயில்நிலையம் ஏதும் கிடையாது. மேற்கிலிருந்து கல்கத்தாவுக்கு வரும் வண்டிகளுக்கு ஹௌரா ரயில் நிலையம். இன்னொரு ரயில் நிலையம் ஸியால்டா வில் உண்டு. அது கிழக்கே போகும் ரயில்களுக்கு. அந்தக் காலத்தில் கிழக்கு பாகிஸ்தானி (பங்களாதேஷ்) லிருந்து வரும் ரயில்களுக்கான நிலையம். பின்னர் 1961-ல் நான் கல்கத்தா சென்றிருந்த போது கிழக்கு பாகிஸ்தானிலிருந்து, மேற்குப்  பாகிஸ்தான் பஞ்சாபி ராணுவம் விரட்டி அடித்த ஹிந்துக்கள் ஸியால்டா ஸ்டேஷனிலேயே குழுமியிருந்த கோரக் காட்சியை நான் பார்த்தேன்.

ஹௌராவுக்கு விடிகாலையில் வந்து சேர்ந்தோம். உடனே நேர் எதிரே எங்களுக்குப் பார்க்கக் கிடைத்தது ஹௌரா பாலம். ஹூக்லி நதியின் மேல் கட்டப்பட்ட மிகப் பழம் பாலம். பாலத்தைத் தாங்க நதியின் நடுவே தூண்கள் ஏதும் இல்லை. நதியில் நீராவிப்படகுகள் செல்லத் தடையாக ஏதும் இல்லை. மிக அகன்ற நதியின் இரு கரைகளையும் நதியில் கால் ஊன்றாது இணைக்கும் பாலம். அதைக் கடந்து தான் அக்கரையில் இருப்பது கல்கத்தா நகரம். சென்னை ரயில் நிலையத்தையும் எதிரில் டாக்டர் ரங்காசாரி சிலை நின்று வரவேற்கும் ஜெனரல் ஹாஸ்பிடலையும் அகன்ற சாலைகளையும் பார்த்து அதிசயித்த உடையாளூர்/நிலக்கோட்டை வாசியான எனக்கு..ஹௌரா ரயில் நிலையத்திலிருந்து ஹௌரா பாலத்தைக் கடக்கும் காட்சியே ஆனந்தமாக இருந்தது. கடந்து பாலிகஞ்ச் போகவேண்டும்

பாலிகஞ்ச் கல்கத்தாவில் தமிழர்கள் அதிகம் குழுமியிருக்கும் பகுதியாக என்று இருந்தது. இன்று எப்படியோ தெரியாது. ஒரு நீண்ட நெடிய சாலை. மௌண்ட் ரோடு மாதிரி. ஆனால் மௌண்ட் ரோடு மாதிரி வளைந்து செல்வதல்ல. சௌரிங்கீ ஒரு பக்கம் பெரிய வியாபார ஸ்தலங்களும் சினிமா அரங்குகளுமாக வரிசையாக அணிவகுக்க எதிர்ப்புறம் நீண்ட பெரிய பார்க். விக்டோரியா மெமோரியல் ஹால் ஏதோ அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மாதிரி கம்பீரமாக, ஒரு ராஜ தோரணையோடு காலையின் பால் நிற ஒளியில் அதன் பளிங்கும் மிக அழகான தோற்றத்தில் கண்ணெடுக்காத கவர்ச்சி தந்தது. சாலையின் ஒரு பக்கம் பிரம்மாண்ட கட்டிடங்கள். மறு பக்கம் நெடுந்தூரம் நீண்டு கொண்டே செல்லும் அகன்ற புல்வெளி. புல்வெளியின் இடையிடையே மரங்கள். ஓரு நகரம் இப்படியும் 300 வருடங்களாக கற்பனையில் தோன்றி வடிவமைக்கப்பட்டிறதே.  அதுவும் சுரண்ட வந்த, சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்களின் மனதில்.

பாலிகஞ்சில் ஒரு வீட்டின் முதல் தளத்தில் எங்களுக்கு ஒரு பெரிய கூடம் தரப்பட்டிருந்தது. அந்த வீட்டு விலாசம் தான் எங்களுக்குத் தெரியும். அந்த வீட்டுக்குச் சென்றதும் அந்த வீட்டில்.எங்களை வரவேற்று எல்லா வசதிகளையும் செய்தது ஒரு முப்பது வயது இளைஞர். நாங்கள் ஐந்து பேரோ ஆறு பேரோ நினைவில் இல்லை.

காலையில் அன்று எங்கள் முதல் தரிசனம் கோமள் விலாஸ் என்ற ஹிராகுட்டிலும் எங்களுக்குத் தெரிய வந்த தென்னிந்தியர் ஹோட்டல். இட்லியும் காபியும் தோசையும் கிடைக்குமிடம். பாலிகஞ்சிலேயே ராஷ் பீஹாரி அவென்யுவில் இருந்தது. என்னமோ ராஷ் பீஹாரி அவென்யு என்ற பெயர் பார்த்ததுமே ஏதோ சரித்திர காலத்தில் கால் வைத்தது போன்ற உணர்வில் தான் மிதந்தேன். ஹௌரா ப்ரிட்ஜைப் பார்த்து வியந்து கண்கள் விரிந்தது போலத்தான். ராஷ் மீஹாரி என்றதுமே சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசீய ராணுவம் எல்லாம் ராஷ்பீஹாரியோடு உடன் வந்தன. இதெல்லாம் தான் இப்பொது எனக்கு இனிய நினைவுகளைத் தருகின்றனவே தவிர கோமள விலாஸில் சாப்பிட்ட இட்லியோ காபியோ அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கவில்லை..

நாங்கள் கல்கத்தாவிலிருந்த ஐந்தோ ஆறோ நாட்கள் எங்களுடனேயே இருந்தார். நாங்கள் எங்கே போகவேண்டும் என்று சொல்கிறோமோ அங்கு அழைத்துச் செல்வார். அவரே பார்க்க வேண்டிய இடங்களைச் சொல்வார். அவர் அழைத்துச் செல்லுமிடங்கள் எல்லாம் நாங்கள் போனோம். பெங்காளி தெரிந்தவர்.

நாங்கள் போன சமயம் நவராத்திரி தினங்கள் என்று நினைக்கிறேன். அன்றே அவர் எங்களை கொலு வைத்திருந்த ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த வீட்டைச் சேர்ந்தவர் என்று தோன்றியது.  எனக்கு சந்தோஷமாக இருந்தது. கல்கத்தாவில் தமிழர்கள் வீட்டில் கொலு? கொலு வைக்க இடம் வேண்டாமா?. ஒரு பெரிய அறையையே அல்லவா இதற்காக ஒதுக்க வேண்டும். சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்குத் தான் இது சாத்தியம். என் சொந்த பந்தங்கள் யார் வீட்டிலும் கொலு வைத்து நான் பார்த்ததில்லை. அந்தந்த வீட்டு சம்பிரதாயத்தைப் பொருத்தது.  சிறு வயதில் ஒரு முறை உடையாளுர் போயிருந்த போது (அப்போது நான் மாமாவோடு நிலக்கோட்டையில் இருந்தேன்) சித்தப்பாவும் பாட்டியும் இருந்த வீட்டில் கொலு வைத்திருந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. அப்பா இரண்டு மூன்று வீடுகள் தள்ளி ஒரு வாடகை வீட்டில் இருந்த போதிலும், பாட்டி இருந்த வீட்டு கொலுவே போதும் என்று இருந்து விட்டார் போலும். பாட்டி இறந்த பிறகு அந்த கொலு பாரம்பரியம் தொடரவில்லை. ரொம்பவும் சாஸ்திரீகமாக இருந்த எங்கள் வீட்டிலேயே அந்த பழக்கம் ஒரு கட்டத்தில் விட்டுப் போன நிலையில், கல்கத்தாவில் வாழ்பவர்கள் இட நெருக்கடியிலும் இதைப் பாதுகாத்து வருவது சந்தோஷமாக இருந்தது.  ஆனால் எங்களுக்கு உதவியவர் காளி பூஜை செய்யும் எந்த பந்தலுக்கும் அழைத்துச் செல்லவில்லை.

நிறைய சுற்றினோம். சினிமா தியேட்டர்களுக்குப் போனோம். ஒவ்வொரு நாளும் சினிமா பார்த்தோம். எல்லாம் சௌரிங்கீயிலேயே அருகருகில் இருந்தன. கிதர் பூர் போனோம். அங்கு தான் கல்கத்தா துறைமுகம் இருந்தது. அங்கு இருந்த மிருகக் காட்சி சாலைக்குப் போனோம். அப்போது கிரிக்கெட் பிராபல்யம் பெறாததால் ஸ்டேடியம் பற்றி யாருக்கு நினைப்பில்லை.  வெளியூரிலிருந்து வருபவர்கள் என்னென்ன பார்க்க விரும்புவார்கள் என்று எங்களுக்கு உதவியாக இருந்தவர் நினைத்தாரோ அங்கெல்லாம் அழைத்துச் சென்றார்.

அவற்றில் எனக்கு மிக முக்கியமாகத் தோன்றியது விக்டோரியா மெமோரியல் ஹாலும் காளி கோயிலும்.

விக்டோரியா மெமோரியல் ஹால் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட ஒரு பிரும்மாண்டமான கட்டிடம். அங்கு தான் முதன் முறையாக நான் ஒரிஜினல் பெயிண்டிங்குகளைப் பார்த்தேன். இங்கு நான் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியிலும் மார்க் பத்திரிகையிலும் பார்த்துத் தெரிந்து கொண்ட நவீன கால இந்திய ஓவியர்கள் சிற்பிகள் யாருடைய ஓவியங்களையும் பார்க்கக் கிடைக்கவில்லை. இங்கு பிரிட்டீஷ் காலனியாதிக்க காலத்தில் புகழ் பெற்றவர்களையே சேகரித்து வைத்திருந்தார்கள். ராஜா ரவி வர்மா, பின் கம்பெனி ஒவியங்கள் என்று புகழ் பெற்ற டேனியல் சகோதரர்களின் ஓவியங்களையும் முதன் முறையாகப் பார்த்தேன். டேனியல் சகோதரர்களின் ஓவியங்கள் அவர்கள் கால இந்தியாவை பதிவு செய்வனவாக இருந்தன. மறைந்து போன அக்கால காட்சிகளையும் புராதன சரித்திரச் சின்னங்களையும் மக்கள் தோற்றங்களையும் பதிவு செய்துள்ள ஓவியங்களும் புகைப்படங்களும் எனக்கு மிகுந்த கவர்ச்சியூட்டு[ம். எனக்கு அதில் ஒரு மோகம் உண்டு என்றே சொல்ல வேண்டும்

ராஜா ரவி வர்மாவின் ஓவியங்கள் இருந்தன அங்கு.  தில்லி காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்டில் கூட ராஜா ரவி வர்மா ஓவியங்களைப் பார்த்த நினைவு இல்லை. திருவனந்தபுரத்தில் ஒரு ஹால் முழுதும் ராஜா ரவி வர்மாவின் ஓவியங்கள் இருந்தன. ஒரு வேளை அப்போது ரவி வர்மாவின் அகாடமிக் பாணி ஒவியங்களை இந்திய மரபில் சேர்க்கத் ஒரு மனத்தடை இருந்தது போலும். .

கல்கத்தா நகரக் காட்சிகளும் சுவாரஸ்யம் மிகுந்தவை தான். அதிலும் ரோட்டின் நடுவே ட்ராம் ஓடும் காட்சிகள். மெதுவாக கட்டை வண்டி மாதிரிதான் நகர்ந்துதான் சென்றன. ஓடின என்று சொல்லக் கூடாது. அது என்றும் எங்கும் நின்று ஜனங்களை ஏற்றிச் சென்றதாக பார்த்த நினைவில்லை. அது ஓடிக்கொண்டே இருக்கும் போதே ஜனங்கள் வெகு சாவதானமாக இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தனர்.  ட்ராமில் யாரும் டிக்கட் வாங்குவதாகத் தெரியவில்லை. நான் முதன் முதலில் சென்னை வந்த போது 1949-ல் ட்ராம் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். பின் வெகு சீக்கிரம் மூர் மார்க்கெட் மறைந்தது போல ட்ராமும் மறைந்தது.

அலுவலகத்தை மறந்து நாள் பூராவும் நண்பர்களோடு எந்தக் கவலையுமில்லாமல் புதிய இடங்களைச் சுர்றிப் பார்த்துக்கொண்டு நாட்களைக் கழிப்பது சந்தோஷமாகத் தான் இருந்தது.  ஆனால் சுற்றிக் காண்பிக்க உதவுகிறவருடைய கல்கத்தா இன்னும் நிறைய உன்னத விஷய்ங்களைக் கொண்டது எனபது பின் வருடங்களில் நானே வேலை தேடியும், தில்லியிலிருந்து அலுவலக விஷயமாகவும் கல்கத்தா சென்ற போது தான் தெரிய வந்தது.  அப்போது பார்த்த பேலூர் மடம், தக்ஷிணேஷ்வர் கோயிலும், ஹூக்லி நதிக்கரையில் அவை அமைந்திருந்த அழகும், ஹூக்லி நதிக்கரையும் பார்க்க மிக ரம்மியமான காட்சிகள். அவற்றோடு தில்லியில் அப்போது தொடங்கப்பட்ட சங்கீத நாடக், சாஹித்ய அகாடமிகளோடு லலித் கலா அகாடமியின் All India Arts Exhibition கல்கத்தா வந்திருந்தது. அங்குதான் முதன் முதலாக நான் இந்திய ஓவியர்கள் சிற்பிகளின் படைப்புக்களைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. கல்கத்தா காலேஜ் ஸ்ட்ரீட்டின் நடைபாதையோர புத்தகக் கடைகளையும் பார்த்தேன். அவை பர்றியெல்லாம் பின்னர் அவற்றின் இடத்தில்.      .  . .

————

Series Navigationமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 32ஏகாலி
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *