கம்பனின் காவியம்” இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?”

This entry is part 10 of 32 in the series 15 ஜூலை 2012

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

தமிழிலக்கிய உலக மாநாடு

07.07.2012 சனிக்கிழமை

‘காப்பியங்கள் ‘ அமர்வில் ஆற்றிய தலைமை உரை

 

முன்னுரை :
கம்பன் –
கன்னித் தமிழுக்குக் காவிய மாளிகை கட்டி எழுப்பியவன்!

பல்லாயிரம் வீரர்களோடு படையெடுத்துச் சென்று
பல்லாயிரம் பேர்களைக் கொன்று
புவிச் சக்கரவர்த்தியானவர் பலருண்டு!
பன்னீராயிரம் பாடல்களால் படையெடுத்து வந்து
பல்லாயிரம் பேர்கள் உள்ளம் புகுந்து
கவிச் சக்கரவர்த்தி ஆனவன்.கம்பன் !
கம்பனின் காவியத்தை ஓரங்கட்டிவிட்டுத்
தமிழிலக்கிய வரலாற்றை (ஏ) மாற்றி எழுதமுடியுமா?
எழுதினால் அந்த வரலாறுதான் விடியுமா?
காலம் பல மறைந்தாலும் புதுக்
கோலம் சிறிதும் குறையாமல் தமிழ்
ஞாலம் போற்றும் வண்ணம்
ஆலம் விழுதெனக் காலூன்றி நிற்கும் ‘கம்பனின் காவியம்’
இன்றும் என்றும் காலத்தை வென்றும் வாழும் ! ஏன்?’

காலமெல்லாம் கம்பனுக்குக் கடும் எதிர்ப்பு :

இரவென்றும் பகலென்றும் ஓராமல் மெய்வருத்தம் பாராமல் பசி நோக்காமல் கண்துஞ்சாமல் எவ்வெர் தீமையும் மேற்கொள்ளாமல் செவ்வி அருமையும் பாராமல் அவமதிப்பும் கொள்ளாமல் கருமமே கண்ணாகி ஒருமுக மனத்தொடு அரிய காவியம் தீட்டி முடித்த கம்பனுக்குக் காவியத்தை அரங்கேற்ற முடிந்ததா? அன்னை எனத் தன்னை ஆதரித்த வெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலை நாடிச் செல்லுகிறான் கம்பன். இதுவரை உதவிய வள்ளலோ முதுமையைக் காரணம் காட்டிக் கம்பனைச் சோழ மன்னனிடம் ஆற்றுப்படுத்துகிறார். மன்னவன் முன் வந்து நின்றான் கம்பன். தன்னரசுச் சிக்கல்களை முன்னிறுத்தி அரசவை அரங்கேற்றம் இயலாதெனக் கை விரித்த காவலன் திருவரங்க ஆசார்யாளுக்குத் திருவோலை வரைந்தனுப்புகிறான். அக்காலத்தில் திருவரங்கப் பெரு நகரில் பெரும் புகழோடு வீற்றிருந்த பெருந்தகை .ஸ்ரீ மந்நாதமுனிகள். கம்பன் காவியம் அங்காவது அரங்கேறியதா? இல்லையே! தில்லை வாழ் தீட்சிதர்கள் மூவாயிரம் பேர்களின் ஒப்புதல் பெற்று வா எனக் கம்பனைப் பணிக்கிறது அந்த வைணவக் கொழுந்து. அதனை விழுந்து வணங்கி எழுந்து கம்பன் ஓடுகிறான் தில்லையை நோக்கி! அங்கே, நாகம் தீண்டிய பாலகன் ஒருவனைத் தன் நாகபாசப் படலத்துப் பாடல்கள் சில பாடி உயிர்ப்பித்தானாம் கம்பன். அது கொண்டு கம்பன் காவியத் திறங் கண்டு தம் ஒப்புதலை அளித்தனராம் தீட்சிதர்கள். அதோடு தீர்ந்ததா கம்பனின் அலைச்சல்!.அடுத்து, திருநறுங்கொண்டை திருத்தலத்தில் வாழ்ந்த அருக சமயத்தினரையும் அணுகி அவர்கள் ஒப்புதலையும் பெறுகிறான். இப்படி அங்கும் இங்கும் அலைகழிக்கப்பட்டு இறுதியில் மறுபடி திருவரங்கம் சேர்ந்த கம்பனின் காவிய அரங்கேற்றம் தொடங்கும் வேளை. அப்போதும் அவனுக்குப் புதுச் சோதனை! ‘நஞ்சடகோபனைப் பாடினையா?’ என்றொரு குரல் அரங்கேற்றத்தைத் தடுக்கிறது! வேறு வழி இன்றிச் சடகோபரந்தாதி பாடி முடித்தானாம் கம்பன். (காண்க : நஞ்சடகோபனைப் பாடினையோ வென்று நம்பெருமாள் விஞ்சிய வாதரத்தால் கேட்பக் கம்பன் விரித்துரைத்த செஞ்சொலந்தாதிக் கலித்துறை நூறும்’ – சடகோபரந்தாதிப் பாயிரம்).

அரங்கேற்றம் தொடங்குகிறது. தொடர்வதற்கும் ஆயிரம் இடையூறுகள் ! குறுக்குக் கேள்விகள்! அத்தனையையும் தீர்த்து வைத்துக் காவிய அரங்கேற்றத்தைத் தொடர்வற்குள் கம்பன் பட்ட பாடு தறி படுமோ தாளம் படுமோ! இரணிய வதைப் படலத்துக்கு வந்த போது எழுந்தது எதிர்ப்புச் சுனாமி ! வைணவ அறிஞர்களும் ஆசார்யர்களும் அரங்கேற்றத்தைத் தொடர விடாமல் மறித்தனர். கைகளை நெறித்தனர்! கம்பனுக்கு எதிராக ஆர்ப்பரித்தனர். வால்மீகி பாடாத ஒன்றைக் கம்பன் எப்படிப் பாடலாம் என்று! கம்பன் பிறந்த தேரழுந்தூர் ஆமருவியப்பன் ஆலயத்தில் ஸ்ரீ ராமன் சன்னதியில் பிரகலாதனும் நரசிம்ம மூர்த்தியும் அருகருகே இருந்து சேவை சாதிப்பதை யாவரும் அறிவர். அவதார மூர்த்தியாக இருந்து இராமர் சாதித்ததை விடச் சாதாரண பிறவியாக இருந்து பிரகலாத ஆழ்வார் சாதித்த காட்சிகளே தன்னை அதிகம் ஆட்கொண்டதாகக் கம்பன் கூறுகிறான். அதனால்தான் அப்படலத்தைப் படைத்ததாகக் கம்பன் விளக்கம் கூற ஸ்ரீமந்நாதமுனிகள், குறுக்கிடுகிறார் : பிரகலாதன் வரலாறு நாராயண மூர்த்தியையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இரணிய வதைப் படலத்தைக் கேட்டுப் பின் முடிவு செய்யலாம் என்றார். அரங்கேற்றம் தொடர்ந்தது. “அங்கிருக்கிறானா? இங்கிருக்கிறானா? எங்கிருக்கிறான் நாராயணன் “என்று அகங்காரத்தோடு இரணியன் வினவப் பிரகலாதன் , “தூணிலும் உளன் அணுவினைச் சத கூறிட்ட கோணிலும் உளன்” என்றான். கேட்ட இரணியன் சினத்தோடு தூணை உதைக்க, ‘இசைதிறந் தமர்ந்த கையா லெற்றினா லோடும் திசைதிறந்த அண்டங் கீறிச் சிரித்தது சீயம்’ என்று கம்பன் பாடினான். உடனே, எதிர் சன்னதியில் எழுந்தருளி இருந்த மோட்டழகிய சிங்கர் சரக் கம்பம் கரக் கம்பம் செய்தருளினாராம். இதனால், எடுத்த கை நரசிங்கர் எனப் பெயர் பெற்றாராம். ஸ்ரீமந்நாதமுனிகள், ‘இரணிய வதைப் படலம் ஒன்றே போதும் கம்பரது தமிழ்க் காப்பியம் தெய்வீகக் காப்பியம் தான் என்பதற்கு ஐயமே இல்லை.இனி இப்படலம் காவியத்தில் இடம் பெறத் தடை இல்லை என்றாராம். (காண்க : அபிதான சிந்தாமணி ; காஞ்சி முனைவர் மா. வரதராசன் எழுதிய ‘கவிச் சக்கரவர்த்தி கம்பர் வாழ்க்கை வரலாறு’ : பக்கம்-111 – 112).

இங்கே குறிப்பிட்ட எதுவும் வரலாறு எனக் கொள்வதற்கில்லை. ஆனால், இக்கதைகள் கம்பனுக்கு அவன் காலத்திலே இருந்த எதிர்ப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன, பட்டியல் இடுகின்றன.

கம்பனுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சிகள் வெளியில் இருந்து மட்டுமல்ல வைணவத்துக்கு உள்ளிருந்தும் தலைவிரித்தாடி இருக்கின்றன. ”நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை போன்ற வைணவப் பெரியார்கள் கம்பரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் ; அக் கவிஞர் பெருமானின் சொல்லையும் பொருளையும் மேற்கொண்டு ஆண்டிருக்கிறார்கள் ; உத்தமச் சமயக் கொள்கைகளும் பக்தித் திறமும் விளங்க இயற்றப்பட்ட இவ்விராமாவதார நூல், திருமால் அடியார்களுடைய அருளிச் செயல்கள் போலக் கொள்ளத்தக்க பெருமை உடையதெனினும் சமயாசாரியர்களும் பக்திமான்களும் அவ்வாறு கொண்டு வழிபட்டுப் போற்றவில்லையே ! ” – சொல்லுபவர் பெரும் பேராசான் மு இராகவ ஐயங்கார் . அவர்தம் தமிழ்ப் புலமை வளத்தையும் வைணவப் பற்று உளத்தையும் ஆய்வுத் திறத்தையும் ஊர் அறியும் பார் அறியும். கம்பரின் இராம அவதாரம் , வால்மீகம் போலப் புனித நூலாக ஏற்கப்படவில்லை. வைதீக வைணவர்கள் ஏற்கவில்லை! ஆகவே கம்பன் காவியத்துக்கு வைதீக வைணவர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியே வந்துள்ளனர். காரணங்களை அலச வேண்டிய நேரம் இதுவல்ல. சுருங்கச் சொல்லின் வால்மீகத்துக்குத் தரும் ஏற்றத்தைக் கம்பரின் காப்பியத்துக்குத தர மறுக்கும் வீர வைணவர்கள் வையகத்தில் உண்டு. (காண்க : முனைவர் ம. ரா. போ. குருசாமி : ‘கம்பர் முப்பால்’ பக்கம் – 182-183).

இருபதாம் நூற்றாண்டில் இராமாயண எதிர்ப்பைத் தமிழகத்துள் நுழைத்த ‘பெருமை’ ஈரோட்டுப் பெரியார் ஈ.வே. ராமசாமிக்கே உரியது. இருபத்து நான்கு மணிநேரமும் இராமனையே நினைத்துக் கொண்டிருப்பவர் ஈ.வெ.ரா என்று கூடக் கூறுவர். பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையிலே பட்டை தீட்டப்பட்ட கூர் வாள் அறிஞர் அண்ணாதுரை. இவ்விருவரும் கம்பனுக்கு எதிராகப் போர் தொடுத்தவர்கள் என்றே சொல்லலாம். பின்னவரின் நூல்களான கம்ப ரசமும், தீ பரவட்டும் நூலும். அக்கால அரசினரால் தடை செய்யப்பட்டு இருந்தாலும் அக்கால இளைஞர்கள் இடையே புழங்கி வந்துள்ளன. இவர்களின் வழித் தோன்றலான தி.க பெருமக்கள் கி வீரமணியும் கொளத்தூர் மணியும் கம்பன் (இராமாயண) எதிர்ப்பில் இன்றும் ஈடுபடும் முன்னணி வீரர்கள். (காண்க : கம்பனுக்குக் காவடியா? விடுதலை தலையங்கம் தேதி: 27-05-2010 http://www.viduthalai.com/20100527/news05.html ).
இவ்வண்ணம் காலம் தோறும் கம்பனின் காவியம் காழ்ப்புணர்ச்சிக்கும் கடும் எதிர்ப்புக்கும் உள்ளானாலும் கம்பனின் காவியமோ கம்பனின் புகழோ காலக் காற்றில் கரைந்து போகும் கற்பூரங்களாக ஆகவில்லை! எதிர்க் காற்றில் ஏறிப் பறக்கும் காற்றாடிகளாகவே அவை விளங்குகின்றன!

காலமெல்லாம் கம்பனுக்குக் கைகொடுக்கும் ஆதரவுகள் :

எத்தனை எத்தனை எதிர்ப்புகள் கம்பனுக்கு எனச் சுருக்கமாகப் பார்த்தோம். அத்தனை அத்தனை எதிர்ப்புகளுக்கு இடையிலும் கம்பன் கொடி பறக்கக் காற்றாக உதவியவர்கள் காலம் தோறும் இருந்தே வந்திருக்கிறார்கள். திருவரங்கத்தில் நடந்தேறிய கம்பன் காவிய அரங்கேற்றத்துக்கு வர இயலாத சடையப்ப வள்ளல், தம் திருவெண்ணெய் நல்லூரில் கம்பரை அழைத்து வந்து முழுக் காவியத்தையும் முற்றோதிப் பொருள் விளக்கச் செய்தார். கேட்டார்ப் பிணிக்கும் தகையதாய்க் கேளாரும் வேட்பக் கம்பன் மொழிந்த காவியம் வீடு தோறும் முழங்கியது ; அக்கம் பக்கம் உள்ள நாடுகளிலும் புழங்கியது. கம்பனின் புகழ் எங்கும் பரவியது. வைதீக வைணவர்கள் எதிர்ப்பையும் மீறி வைணவ ஆசார்யர்களாகிய பெரியவாச்சான் பிள்ளையாலும் நம்பிள்ளையின் உபந்நியாசப் பட்டோலை கொண்டருளிய வடக்குத் திருவீதிப் பிள்ளையாலும் இக்காவியம் ஆதரிக்கப் பெற்றது. ‘நாலாயிரத் திவ்விய பிரபந்த வியாக்கியானங்களில் மேற்கோளாகவும் காட்டப்பட்டுள்ளது. எனவே ’13 -ஆம் நூற்றாண்டுகளில் மிகவும் பிரசாரம் பெற்று விட்டது ‘ என உரையாசிரியர் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் குறிப்பிடுகிறார். (காண்க : கம்ப ராமாயணம் – பால காண்டம் பக்கம் XVI). புத்தமித்திரர் எழுதிய வீரசோழியம் என்னும் இலக்கண நூலுக்கு உரை எழுதிய பெருந்தேவனார் 17 -ஆம் வரியில் கம்பரைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். நன்னூல் விருத்த உரையாசிரியர் சங்கர நமச்சிவாயர் ‘கரியன் கம்பர்’ என்கிறார்.

கடந்த காலங்களில் இப்படிப் பல புலவர்கள் கம்பனுக்குத் தம் ஆதரவுக் கை நீட்டினர் என்றால் 20 – நூற்றாண்டிலும் ஆதரவுக்குக் குறைவு இல்லை. கம்ப ராமாயணத்தை எரிக்க முயன்ற போது, அதை எதிர்த்துத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார் பேராசிரியர் ரா.பி.சேதுப் பிள்ளை. இதே கால கட்டத்தில் “சிலம்புச் செல்வர்” ம.பொ.சி. “இலக்கியத்தின் எதிரிகள்” என்னும் தலைப்பில் கட்டுரை எழுதிப் பெரியாரின் போக்கைக் கண்டித்தார். (காண்க : http://www.projectmadurai.org/). இவர்களுக்கு எல்லாம் முன்னதாகக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ‘

அம்புவிக்கு வாய்த்த அருட்கவி; ஐயமின்றி
உம்பரமு தொத்த உயிர்க்கவி-கம்பனும் தன்
மந்திரச் சொல்லால் வனைந்த கவி; என்றேனும்
வெந்திடுமோ தீயால் விளம்பு.

என்று இராமாயண எரிப்புக்கு வெண்பாவில்எதிர்க்குரல் எழுப்பினார். மேலும்

ஓலை எரியும் தாளெரியும்
உள்ளத் தெழுதிவைத்து நிதம்
காலை மாலை ஓதுகவி
கனலில் வெந்து கரிந்திடுமோ.
என்று கேட்கின்றார்.
கம்பருடைய காப்பியத்தின் சுவைகளை யெல்லாம் திரட்டிக் ‘கம்பராமாயண சாரம்’ என்ற பெயரால் நூல் இயற்றினார் வெ.ப. சுப்பிரமணிய முதலியார். கம்பருடைய காப்பியத்தைப் போற்றிப் புகழ்வதற்கென்றே தம் வாழ்நாள்களை யெல்லாம் அர்ப்பணம் செய்தார் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்.கம்பர் தமிழில் இயற்றிய ராமாயணத்தின் பெருமையை ஆங்கிலத்தில் எழுதி அகில உலகுக்கும் அறிவித்தார் வ.வே.சு. ஐயர். அரசியல் மேடைகளில் தமிழைத் தென்றலாகத் தவழவிட்ட சீவானந்தம் கம்பனைப் போற்றியவர் ; கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்த்த அறிஞர் கூட்டம் ஒன்று “இரசிகமணி” டி.கே.சிதம்பரநாத முதலியார் தலைமையில் இயங்கியது. “இரசிகமணி”யின் “வட்டத்தொட்டி” நண்பர்களில் ஒருவரான “கம்பனடிப்பொடி” சா.கணேசன் காரைக்குடியில் கம்பன் கழகம் தொடங்கி, ஆண்டுதோறும் “கம்பன் விழா” நடத்தத் தொடங்கியபோது, அசுர வளர்ச்சி கண்டது அந்த இயக்கம். மீ.ப.சோமு, அ.சீனிவாசராகவன் ஜஸ்டிஸ் மகராஜன் போன்றவர்கள் . கம்பனுக்குத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர்கள். (காண்க :https://groups.google.com/forum/?fromgroups#!topic/mintamil/Ea3hOXYlBkQ). பெரியாரைப் பெரிதும் பின் பற்றிய பாவேந்தன் பாரதிதாசன் கூடப் பெரியாரின் இராமாயண எரிப்புக்கு உடன்படவில்லை. ரசிக மணி டி கே சி கம்பனின் பன்னீராயிரம் பாடல்களில் ஈராயிரம் இடைச்செருகல் எனத் தள்ளிய போது துள்ளி எழுந்து, ‘கம்பன் பாட்டில் கை வைக்க டி கே சி யார் ?’ என்று கேட்டவன் பாவேந்தன். இப்படிப் பலருடைய ஆதரவைப் பெற்ற கம்பனும் அவன் காவியமும் மேலும் பரவக் கம்பன் அடிப்பொடி எனத் தன் பெயரையே மாற்றிக்கொண்ட கம்பன் அன்பர் சா கணேசன் காரணமானார். காரைக்குடியில் அவர் கம்பன் கழகம் தொடங்கப் புதுச்சேரியிலும் அதே பெயரில் கழகம் தொடங்கப் பெற்றது. இவ்விரு கழகங்களும் கம்பன் விழாவை ஆண்டு தோறும் நடத்திக் கம்பன் புகழை பரவச் செய்தனர் ; கம்பன் கொடி வானளாவப் பறக்கத் தொடங்கியது. பிற நகரங்களிலும் கம்பன் கழகங்கள் தலை எடுக்கத் தொடங்கின. இந்தப் பேராதரவுகளால் கம்ப இராமாயண எரிப்புப் போராட்டம் என்னும் பகைமூட்டம் இருந்த இடம் தெரியாமல் புகையாகிப் போனது! கம்பன் எதிர்ப்பும் மங்கி மறைந்து வருகிறது. எதிர்த்தவர்களும் எரித்தவர்களும் மறைந்துவிட்டார்கள்! ஆனால் கம்பனும் அவன் காவியமும் கடல் கடந்து ஈழம், மலேசியா, பிரான்சு, சுவிசு… என உலகை வலம் வந்துகொண்டிருக்கின்றன. ஈழத்திலே கம்பனுக்குக் கொடி நாட்டியவர் கம்ப வாரிதி இலங்கை செயராசு! பிரான்சில் கம்பனைக் குடியமர்த்தியவர் கவிஞர் கி பாரதிதாசன் . சுவிசில் திரு வாகீசன் தொடங்கி வைத்தார். இது இன்னும் தொடர்கிறது இனியும் தொடரும்.

கம்பன் காவியப் பெருமைகள் :

இவ்வண்ணம், கம்பன் காவியம் காலம் எல்லாம் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி வந்தாலும் அதையும் மீறி அனைவர் ஆதரவையும் பெற்று உயிர் வாழ்ந்து வருகிறது. கம்பன் இட்ட பெயர் ‘இராமவதாரம்’ ; ஆனால் அந்தப் பெயரே இன்று இல்லை! கம்பனையும் இராமாயணத்தையும் இணைத்த ‘கம்ப இராமாயணம் ‘ என்பதே இன்று நிலைத்து விட்டது. இது ஒன்றே போதும் கம்பன் புகழையும் அவன் காவியத்தின் பெருமையையும் கூற. அவன் காலத்துக் கவிஞர்கள் புலவர்கள் முதல் இக்காலத் தமிழ் அறிஞர்கள் வரை சூட்டியுள்ள புகழாரங்களைத் தொகுத்தால் அதுவே பெரிய நூலாகும். ‘கம்ப நாட்டாழ்வான் ‘, தெய்வப் புலமைக் கம்ப நாட்டாழ்வார்’, கம்ப நாடுடைய வள்ளல்’, ‘கவிச்சக்கரவர்த்தி’… இவை கம்பன் காலத்துப் புலவர்கள் சூட்டிய அடை மொழிகள். ‘கம்ப நாடன் கவிதை போல் கற்றோர்க் கிதயங் களியாதே’ என அக்காலக் கவிஞன் அக்களிக்கிறான். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களும் அவனை வாயாரப் புகழ்கிறார்கள் : திருமணம் செல்வக் கேசவராயர் கம்பரை முதன்மையாக வைத்துத் திருவள்ளுவரை அடுத்து வைத்து இவர்கள் இருவருமே தமிழுக்குக் ‘கதி’ ஆனவர்கள் எனப் புகழுகிறார்.

‘கல்வி சிறந்த தமிழ் நாடு புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ் நாடு ‘ யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் … யாங்கணுமே கண்டதில்லை ‘ இவை மகா கவி பாரதியின் வாக்குகள்.

‘கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மது உண்டு 
வையம் தருமிவ் வனமின்றி வாழும் சுவர்க்கம் வேறுண்டோ!’ என்று கேட்பவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் ‘ புவி அறிந்த பழமொழி. கம்பனைச் சுவைத்துப் படித்து அவற்றின் சாற்றை எல்லாம் வடித்துத் தன் திரைப்படப் பாடல்களில் நிறைத்துத் தந்தவர் கவியரசர் கண்ணதாசன். கம்பனைப் பற்றிய அவர் வரிகள் :
‘பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு 
இன்னும் வித்தாகவில்லை என்று பாடு’ கம்பன் புகழுக்கு மணி மகுடம்! 
‘சொல்லுக்குள் வாக்கியத்தைச் சுருக்கிவச்ச கவிப்புலவன்’ – இது வைரமுத்துவின் வருணனை.

கம்பன் காவியம் அன்றும் இன்றும் என்றும் காலத்தை வென்று நிற்பதன் காரணங்கள் :

ஆயிரம் எதிர்ப்புகள் ஆயிரம் காழ்ப்புகள் …பல்லாயிரம் தடைகள் எனப் படை எடுத்த போதும் அவற்றை வென்று நின்ற காவியம் கம்ப இராமாயணம். முதல் காரணம் அதன் கதை.இராமனின் கதை பாரத நாடறிந்த கதை. இக்கதை பற்றிய குறிப்புகள் புறநானூறு, அகநானூறு முதலிய சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு சிலப்பதிகாரம் ஊடாகப் பலவற்றில் உள்ளன. பழங்காலம் தொட்டே இராமாயணக் கதை பல வேறு செய்யுள் வடிவங்களில் வழங்கி வந்த வகையினைத் தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி ‘Á¨ÈóÐ §À¡É ¾Á¢ú áø¸û’ என்ற தம் நூலில் குறிப்பிடுகிறார். அகவற்பாவால் இயற்றப்பட்ட இராமாயணம் இருந்தது என்பதை ‘ஆசிரிய மாலை’ என்னும் நூல் தெரிவிக்கிறது. யாப்பருங்கல விருத்தி உரை ஆசிரியர், பஃறொடை வெண்பா பற்றிச் சொல்லும் போது, (‘பாதம் பலவரின் பஃறொடை வெண்பா” யாப்பருஙகலம் 62) இராமயண வெண்பா என்றொரு நூலைக் குறிப்பிடுகிறார். (காண்க : “þýÛõ ÀÄÅÊ¡ý Åó¾ À·¦È¡¨¼ ¦ÅñÀ¡ þáÁ¡Â½Óõ, Òá½ º¡¸ÃÓ Ó¾Ä¡¸×¨¼Â ¦ºöÔð¸Ç¢ü ¸ñΦ¸¡û¸”).. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணாச்சலக் கவிராயர் எழுதிய ‘இராம நாடகக் கீர்த்தனைகள்’ புகழ் பெற்றவை. இப்படிப் பல இராமாயணங்கள் தமிழில் இருந்திருந்தாலும் நிலைத்து நின்றது எது? கம்பனின் காவியமே!

இதற்குப் பல காரணங்கள். கம்பனின் சொந்தக் கை வண்ணம், படிக்கும் போதே நாவையும் மனத்தையும் பந்தாடச் செய்யும் சந்த வண்ணம், மொழி வண்ணம், மொழி இயல் வண்ணம், இயல் இசை நாடகம் இயைந்த முத்தமிழ் வண்ணம் , கற்பனை வண்ணம், உண்மைகளை, வாழ்வின் தத்துவங்கள், மாளாத விழுமியங்கள உரைத்த வண்ணம், உளவியல் நிலவியல் முதற்கொண்டு பலப்பல அறிவியல் கலைகளைப் பொதிந்து வைத்துள்ள வண்ணம் … என இவ்வண்ணம் பலவித வண்ணங்களை குழைத்துக் கம்பன் தன் காவிய ஓவியத்தைத் தீட்டி இருக்கிறான். எனவேதான் காலத்தின் கறை படாத ஓவியமாய் நின்று ஒளிரிகிறது அவன் காவியம். இன்னும் பல காரணங்களை அடுக்கிகொண்டே போகலாம் : பழஞ்சொல் புதுக்கல் புதுச் சொல் ஆக்கல், பல துறைக் களஞ்சியமாக விளங்கல், தமிழ் மரபைப் பேணல், சமயங்களில் ஒற்றுமை காணல்…என்று. காலம் இன்மை கருதியும் விரிவஞ்சியும் அவற்றை விடுக்கிறேன். இறுதியாகக் கருத்தொன்றைச் சொல்லி முடிக்கின்றேன்

படிப்பவன் மனத்தில் எந்தப் படைப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்தப் படைப்பே உயர்வான படைப்பு. மகத்தான படைப்பு, உயிர் வாழ்வது வெறும் ஏடுகளிலோ ஓலைகளிலோ தாள்களிலோ இல்லை! மக்கள் மனத்திலேதான்! மக்கள் மனத்திலே பதியும் படைப்பு மறைவதில்லை.அதுவே காலத்தை வென்று காலமெல்லாம் நின்று வாழும். குறை ஒன்றும் இல்லாத தமிழிலே இப்படிப்பட்ட படைப்புகள் நிறையவே உண்டு. கம்பனின் காவியமும் அப்படிப்பட்ட படைப்புதான். மக்களின் மனத்திலே மலையாக நின்று நிலைத்து விட்ட படைப்பு. எதிர்ப்பு என்ற சுனாமிகளோ காழ்ப்பு என்னும் ஆழிப் பேரலைகளோ அழிக்க முடியாத படைப்பு ‘கம்பனின் இராமகாதை’. ஓலைகளில் வடிக்கவில்லை கம்பன் தன் காவியத்தை! மக்கள் மனத்திலே அழியா அழகாய்த் தீட்டிவிட்டான் அந்த ஓவியத்தை !

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்கல்லாத கலையும் வேதக்
கடலுமே என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற்று அன்றே!’ என அனுமனைப் பற்றி இராமன் கூறுவான். அச்சொற்கள் கம்பனுக்கும் பொருந்தும்.’Shakespeare was not of an age, but for all time ‘ என்று அவன் நெருங்கிய நண்பன் பென் ஜான்சன் (Preface to the Firdt Folio) கூறுவது நூற்றுக்கு நூறு கம்பனுக்குப் பொருந்தும்.

தன் காவியம் காலத்தை வென்று நிற்கும் அழியாத தமிழ் போலத் தன் தமிழும் அழியாமல் நிற்கும் என்பதைக் கம்பன் ‘என்றுமுள தென் தமிழ்’ என்று குறிப்பாலே உணர்த்திவிட்டான். பெருங் கவிஞர்களின் வாக்கு பொய்ப்பது இல்லை. எனவே, மக்கள் மனத்திலே அரியணை இட்டு அமரந்து விட்ட காரணத்தால் அன்றும் இன்றும் அன்றும் காலத்தை வென்று நிற்கும் கம்பனின் காவியம் என்று சொல்லி உரையை நிறைவு செய்கிறேன்.

கம்பன் வாழ்க ! கன்னித் தமிழ் வாழ்க!

கட்டுரை உதவி : நன்றி – வல்லமை http://www.vallamai.com/literature/articles/23304/

படத்திற்கு நன்றி:

http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/index.html

Series Navigationநகரமும் நடைபாதையும்மணக்கால் எஸ் ரங்கராஜன் – ஆவணப்படம் வெளியீடு அழைப்பிதழ்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *