இருள் மனங்கள்.

author
0 minutes, 9 seconds Read
This entry is part 19 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

முகில் தினகரன்

நகரின் அந்த பிரதான சாலை ஜன சமுத்திரமாய்க் காட்சியளித்தது. எங்கும் பெண்கள் கூட்டம்.

பேரணி துவங்கியதும் அதைத் தலைமையேற்று நடத்தும் மாதர் சங்கத் தலைவி சுஜாதா தேவநாதன் முன் நடக்க ஆயிரக்கணக்கிலான பெண்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்.

‘பெண் குல எதிரி ‘நிலாஸ்ரீ’….ஒழிக”

‘கேள்…கேள்…மன்னிப்புக் கேள்”

‘தமிழ்ப் பெண்களைக் கேவலமாய்ப் பேசிய தரங்கெட்ட நடிகையே…உடனே ஓடு..உன் மாநிலத்திற்கு”

‘துரத்துவோம்…துரத்துவோம்…தமிழச்சியை இழிவ படுத்திய வட இந்திக்காரியைத் துரத்துவோம்…துரத்துவோம்”

ஆவேசப் பெண்களின் ஆக்ரோஷ கோஷம் ஆகாயம் வரை அதிர்ந்தது.

நடந்து கொண்டிருக்கும் சுஜாதா தேவநாதனின் கூடவே நடந்து வந்த பத்திரிக்கையாளர்கள் தங்கள் கேள்விக் கணைகளை சரமாரியாய் அவர் மீது எறிய சிறிதும் சளைக்காமல் நடந்தவாறே அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் அவர்.

‘எங்கள் குறிக்கோள் அந்த நடிகையை எதிர்ப்பதோ….அவமானப்படுத்துவதோ அல்ல!…எங்கிருந்தோ வந்து நம் தமிழ்நாட்டில் நடிகையாகி…நிறைய சம்பாதித்து விட்டு…இங்கிருக்கும் நம் தமிழ்ப் பெண்களைப் பற்றியும்…அவர்களின் கலாச்சாரம் பற்றியும்…கேவலமாகப் பேசியதைக் கண்டிப்பதோடு….அப்பேச்சிற்காக அவரை மன்னிப்பும் கேட்க வைக்க வேண்டு;ம்….” சுஜாதா தேவநாதன் ஓங்கிய குரலில் சொல்ல மொத்தக் கூட்டமும் அதை ஆமோதிப்பது போல் கத்தியது.

‘ஸோ…நடிகை நிலாஸ்ரீ மன்னிப்புக் கேட்கணும்….அதுதான் உங்க தேவை….அப்படித்தானே?”

‘நோ…இவங்களை இன்னிக்கு கேட்க வைக்கிற இந்த மன்னிப்புல…நாளைக்கு வேற யாரும்…நம் தமிழ்ப் பெண்களைப் பற்றிக் கேவலமாய்ப் பேசக் கூடாது…அதுதான் முக்கியம்”

‘மேடம்…அந்த நடிகையும் நீங்களும் சில வருஷங்களுக்கு முன்னாடி நல்ல தோழிகளாமே?,” ஒரு பெண் ரிப்போர்ட்டர் குருஞ்சிரிப்புடன் கேட்க,

‘ஸோ வாட்?…அதுக்காக அவங்க நம் தமிழ்ப் பெண்களைப் பற்றி என்ன வேணாலும் பேசுவாங்க….அதைக் கேட்டுட்டு நான் சும்மா இருக்கணுமா?….எப்படி முடியும?;…நான் மாதர் சங்கத் தலைவி….சமூகத்தில் பெண்ணுரிமையைக் காக்கவே பிறப்பெடுத்து வந்தவ…என்னால பொறுமையா இருக்க முடியமா?” கோபமாகிக் கத்தினார் சுஜாதா தேவநாதன்.

பின்னால் வந்து கொண்டிருந்த கூட்டம் அவரது கோபப் பேச்சை ரசித்து கைதட்டி ஆரவாரம் செய்தது.

பத்திரிக்கைகாரர்களைத் தொடர்ந்து தொலைக்காட்சிக்காரர்களுக்கும் நடந்தபடியே பேட்டியளித்தார் சுஜாதா தேவநாதன். நாலாப்புறமிருந்தும் வீடியோக் காமிராக்கள் அவரையும் அந்தக் கூட்டத்தையும் பல் வேறு கோணங்களில் வைத்து விழுங்கித் தள்ளின.

‘மேடம்…நாளைக்கு எல்லாப் பத்திரிக்கைலேயும்…எல்லா டி.வி.லேயும்…உங்க முகமும்…உங்க பேட்டியம்தான் கலக்கப் போவது…” உடன் வந்து கொண்டிருந்த மாதர் சங்க துணைக் காரியதரிசி தலைவியின் தலையில ஐஸ் மலையையே வைத்தாள்.

‘பின்னே,…நான் யாருன்னு அந்த நடிகைக்குக் காட்ட வேணாமா?…நம்மைத் தொடர்;ந்து தமிழ்நாடு முழுவதும் இருக்கற எல்லா மாதர் சங்கங்களும் ஆங்காங்கே இதே மாதிரி பேரணி நடத்தி, அந்த நடிகையை ஓட..ஓட விரட்டப் போறாங்க”

கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் நடைப் பயணத்திற்குப் பிறகு அப் பேரணி வ.ஊ.சி.திடலை அடைந்தது. அங்கு போடப்பட்டிருந்த பிரம்மாண்டமான மேடையில் பல்வேறு மகளிர் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்மணிகள் அமர்ந்திருக்க சுஜாதா தேவநாதன் மிடுக்கோடு மேடையேறினார். அவர்களனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க அலட்சியமாய் பதில் வணக்கம் சொன்னார்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர் பேச அழைக்கப்பட கூட்டம் சுறுசுறுப்பானது.

சாட்டையடி வார்த்தைகளாலும்…சவக்கடிப் பேச்சாலும் நடிகை நிலாஸ்ரீயை அக்கு வேறு ஆணி வேறாகப் பிய்த்தெறிந்து விட்டு இறுதியில் தமிழ்ப் பெண்களுக்கு உத்வேகமூட்டும் விதத்திலான ஒரு பாடலையும் பாடி விட்டு அமர்ந்தார் சுஜாதா தேவநாதன்.

பாதுகாப்புக்காக வந்திருந்த காவல் துறையினரும், பார்வையாளர்களாக வந்திருந்த பொது மக்களும் உறைந்து நின்றனர்.

‘இனி அந்த நடிகை அவ்வளவுதான்…சொந்த ஊருக்குப் போய்..ஊறுகாய் வியாபாரமோ…உருளைக் கிழங்கு வியாபாரமோ பண்ண வேண்டியதுதான்…” கூட்டத்தில் எவனோ ஒருத்தன் சொல்ல,

‘யப்பா…இனிமே நாம கூட பொம்பளைங்களைப் பத்திப் பேசும் போது பாத்து ஜாக்கிரதையாப் பேசணும் போலிருக்கே…” என்று உள்ளுக்குள் கவலைப்பட்டான் ஒரு குட்டி அரசியல்வாதி.

இரவு.

தொடர்ந்து போன் மேல் போன் வந்து பாராட்டு மழையைக் கொட்டிக் கொண்டிருக்க அதில் ஆசை தீர நனைந்து சுகானுபவம் பெற்றுக் கொண்டிருந்தார் சுஜாதா தேவநாதன்.

‘என்ன சுஜி….கலக்கிட்டியாமே?….என்னொட பிசினஸ் நண்பர்களெல்லாம் கூப்பிட்டு என்னைப் பாராட்டித் தள்ளுறாங்க…” மனைவியிடம் சொல்லி மெய் சிலிர்த்தார் தேவநாதன்.

நடு நிசி.

நடிகை நிலாஸ்ரீயின் பர்ஸனல் மொபைல் இசையாய்ச் சிணுங்கியது. தூக்கக் கலக்கத்துடன் எடுத்துப் பார்த்தாள் நடிகை நிலாஸ்ரீ.

சுஜாதா தேவநாதன்.

உற்சாகமானாள். ‘சுஜா…ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டி…”

‘தேங்க்ஸ் இருக்கட்டும்…டி.வி.நிய+ஸ்ல பாத்தியா?”

‘ம்…ம்…பார்த்தேன்…பார்த்தேன்…கிட்டத்தட்ட எல்லாத் தமிழ்ச் சேனல்லேயம் பேரணியைக் காண்பிச்சிட்டாங்க….ஒண்ணு ரெண்டு ஆங்கிலச் சேனல்லே கூட காட்டினாங்க” சந்தோஷமாய்ச் சொன்னாள் நிலாஸ்ரீ.

‘எப்படியோ…ஜனங்க மறந்தே போயிருந்த உன்னோட பேரை ஓரளவுக்கு பிரபலமாக்கிட்டோம்…இதே மாதிரி தமிழ்;நாடு முழுவதும் ஆங்காங்கே பேரணி நடத்தச் சொல்லியிருக்கேன்….அப்படி நடக்கும் போது தமிழ்நாடு முழுவதும் மறுபடியம் உன் பெர் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாய்டும்….துவண்டு போய்க் கெடக்கற உன் மார்க்கெட்டும் ஓரளவுக்கு உயர்ந்திடும்…என்ன சரிதானே?”

‘கண்டிப்பா…அது இப்பவே ஆரம்பமாயிடுச்சு…”

‘ஹேய்…என்ன சொல்றெ நிலா?”

‘ஒரு பழைய நிறுவனம்….எப்பவோ எடுத்த என்னோட ஒரு படத்தை ரிலீஸ் பண்ணாம கிடப்புல போட்டு வெச்சிருந்தது….நான்தான் மார்க்கெட் போன நடிகையாச்சே!….இப்ப…இப்ப ஜஸ்ட்….அரை மணி நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி….’மேடம்…இப்ப அதை நாங்க ரிலீஸ் பண்ணிடலாம்னு இருக்கோம்….டப்பிங் பேச வர முடியுமா?”ன்னு கேக்கறாங்க…..” நிலாஸ்ரீயின் குரலில் மகிழ்ச்சி மத்தாப்பு.

‘வாவ்….அப்ப நம்ம ஐடியா…நல்லாவே ஓர்க் அவுட் ஆயிட்டுதுன்னு சொல்லு…”

‘எக்ஸாட்லி!…..சரி சுஜா…நான் பேசின மாதிரி உனக்கு ஒரு ரெண்டு லட்சத்தை நாளைக்கு அனுப்பிடறேன்….தொடர்ந்து இதே மாதிரி தமிழ்;நாடு முழுவதும் நடக்கட்டும் அதுக்கேத்த மாதிரி அப்பப்ப அமௌண்ட் செட்டில் பண்ணிடறேன்….ஓ.கே?”

‘ஓ.கே….ஓ.கே….வெச்சிடறேன்….அடுத்த மீட்டிங்ல உன்னை எப்படியெல்லாம் திட்டிப் பேசறதுன்னு பாயிண்ட்ஸ் நோட் பண்ணனும்” சொல்லி விட்டுச் சிரித்தார் சுஜாதா தேவநாதன்.

அன்றைய பேரணியில் கத்திக் கத்தி தொண்டை கமறிப் போன பெண்கள் பலர் அந்த இரவை இருமி…இருமிக் கழித்துக் கொண்டிருந்தனர்.

(முற்றும்)

mukildina@gmail.com

Series Navigationபிணம்இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சி- ஒரு கண்ணோட்டம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *