கடவுளும், கலியுக இந்தியாவும்

This entry is part 12 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

தசவதாரங்களைத் தாண்டி
தானெடுத்த அவதாரமொன்றில்
பிறந்தார் இறை மத்தியத்தரக்
குடும்பமொன்றில் புத்திரனாய்

பந்தய வாழ்க்கையில்
வாடகை சுவர்களுக்குள்
அலாரங்களின் ரீங்காரங்களுக்கிடையே
சீராய் வளர்ந்தான்.

****

டொனேஷன் படிப்பாயினும்
கருத்தாய் பயின்று
முதல்வனாய் பவனி

அந்தோ பரிதாபம்!
‘கோட்டா’க் கூறு போட்டதில்
திசை மறந்த பந்தாய்
கிடைத்த கல்லூரியில் தொடர்ந்தது
இத்திருநிறைச் செல்வனின்
பயணம்.

****

படித்த மிதப்பில் தந்தையின்
நிலத்தில் கால் பதியாது
இறுமாந்திருந்தான்.
சொல்லிச் சலித்த தந்தையின் ஆவி
சொல்லாது ஒரு நாள் ஆகாயம் கிளம்பிட
அயர்ந்தமர்ந்தான்.

தகப்பனின் பெயருக்கு நினைவு நாளில்
அர்ச்சனை செய்ய சிறப்பு வரிசையில்
இருபது ரூபாயில் தன்னையே
கொஞ்சம் பிரசாதமாக வாங்கி வந்தான்.

****

துவங்கிற்று வேலை தேடும் வனவாசம்.
பதினான்காண்டுகள் காத்திருக்கச் சொல்லவில்லை
கருணை பொங்கும் கலியுகம்.
வனவாசம் துறந்து வேலை தேடல்
கையூட்டுப் பல்லக்கில் நாடடைய
தயார் நிலையில்.

கொடுக்க ஏதுமின்றி அமர்ந்தழுது
தேசத்தைப் பழித்து
குற்றம் சொன்னான் இறைவன்.

பெருங்குரலெழுப்பி அரற்றிய அவனை
“சுற்றியிருக்கும் செவிகளில் விழுவதற்கு
உன்னுடையதொன்றும்
மேற்தட்டு குரலன்று’, எனும்
பேருண்மையை போதித்தார்
ஏட்டறிவற்ற ஒரு கிழவர் பட்டறிவோடு.

வேண்டிக் கொண்டான் இறைவன்
தன்னையே !
இன்னுமொரு சுதந்திரம் வாய்த்திட.

– வருணன்.

Series Navigationஇது…இது… இதானே அரசியல்!ஆழி – ஜாகீர்ராஜா நூல்கள் வெளியீடு
author

வருணன்

Similar Posts

Comments

  1. Avatar
    இளங்கோ says:

    என்ன இறைவன் இவன்? எதற்கு “‘கோட்டா’க் கூறு போடும்” குலத்தில் பிறப்பானேன்? பிறகு கதறுவானேன்? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா பிறக்கும் முன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *