சிவாஜி ஒரு சகாப்தம்

This entry is part 9 of 37 in the series 2 செப்டம்பர் 2012

நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது அவர் தந்தை பெரியார் என்று சொன்னார்.

வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள்.

மிகச் சரியாகச் சொல்லப்போனால் இயக்குநர்களின் நடிகர் அவர். அவரே அப்படித்தான் சொல்வார் என்றுதான் அறியப்படுகிறது.

யப்பா, எப்டிச் செய்யணும்னு சொல்லு …செய்துடறேன்…இதுதான் அவரின் வார்த்தைகள்.  இயக்குநர்கள் தங்கள் மனதில் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தியிருந்தார்களோ அதற்கு முழுமையான, திருப்திகரமான, நிறைவான, அழகான, அற்புதமான, கலைவடிவம் கொடுத்தவர் நடிகர்திலகம். அந்தக் காலகட்டத்திற்கு எது பொருத்தமானதாய் இருந்ததோ அதை அவர் செய்தார். அவர் செய்ததை மற்றவர் செய்தபோது, அல்லது செய்ய முயன்றபோது காப்பி அடிக்கிறான்யா…இதெல்லாம் அவரு ஏற்கனவே செய்துட்டாரு… என்றுதான் கமென்ட் விழுந்தது. ஆக அவர் செய்தது முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்தது என்பதுதான் உண்மை.

மிகை நடிப்பு, மெலோ ட்ராமா என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு (ஐம்பது அறுபதுகள் எழுபதுகளின் ஆரம்பம்) அதுதான் பொருந்தி வந்தது. அதுவும் அவருக்கு மட்டும்தான் பொருந்தி, பொருத்தமாய் அமைந்தது என்பதுவே சத்தியமான உண்மை. ஒரு கதாபாத்திரத்தை அதன் உச்சபட்ச மேன்மைக்குக் கொண்டு நிறுத்திவிட்டு, இனி இந்தக் கதாபாத்திரம் என்றால் அவரின் நினைப்பு மட்டுமே வருவதுபோல் செய்தது நடிகர்திலகம் மட்டும்தான் என்றால் அது மிகைக் கூற்று என்று யாராலும் சொல்ல இயலாது. அவரின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களே அதற்குச் சான்று. அந்தந்தப் போஸ்டர்களில் அவரின் முகத்தை மட்டுமே பார்த்துவிட்டு, அது எந்தப் படம் என்று சொல்லிவிடலாம். இந்தப் பெருமை வேறு யாருக்கும் உகந்ததாகாது.வேறு எந்த வகையிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரின் நடிப்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் சிறைப்பட்டுப் போனார்கள் என்பதுதான் இங்கே உணர வேண்டிய உண்மை.   அவரை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள். தங்கள் திறமையை முன்னிறுத்திக் கொண்டார்கள். கலைநயம்மிக்க, கற்பனா சக்தி மிகுந்த, திரைவடிவத்தை அந்தக் காலத்திற்கேற்றாற்போல் வடிவமைக்கத் தெரிந்த திறமையான இயக்குநர்கள் அவருக்கு அமைந்தார்கள். அதனால் அவர் மேலும் மேலும் தன்னின் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றின் மூலம் தன்னை ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடிந்தது.

மிகை நடிப்பு என்பதற்கான ஒரு நிகழ்வு இங்கே முன் வைக்கப்படுகிறது. தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தன் மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து எஸ்.பி., சௌத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவார். தள்ளாடியபடியே மாடிப்படியேறி மனைவியின் சடலத்தின் முன் நின்று கதறுவார். சில வரிகள் அவர் பேசும் அந்த நேர வசனம் பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒரு சின்சியரான, நேர்மையான உயர்ந்த நோக்கங்களுள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு  இப்படியான ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டதே என்று பார்வையாளர்கள் மனதை அந்தக் காட்சி கலங்கடித்து விடும். அந்த நேரத்தில் மனைவியின் சடலத்தின் முன் நின்று அவர் சோகமே உருவாய்க் கதறிப் பேசும் அந்த வசனங்களும், அப்படியே ஓகோகோ என்று கதறிக்கொண்டே மனைவியின் முன் விழுந்து அவர் அழும் அந்தக் காட்சியும் யாராலும் மறக்க இயலாது. ஆனால் இந்தக் காட்சி படு செயற்கை, எந்த மனிதன் இப்படி மனைவியின் சடலத்தின் முன் நின்று வசனம் பேசுகிறான், எவன் இப்படிக் கதறி அழுகின்றான், கொஞ்சங்கூட யதார்த்தமில்லாத காட்சி இது…சுத்த மெலோ ட்ராமா என்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.

விமர்சனம் செய்தவர் பத்திரிகையாளரும், நடிகருமான மதிப்பிற்குரிய திரு சோ அவர்கள். இப்படி அவர் சொன்னபோது, நீ எப்டி செய்யணும்ங்கிறே…இப்டித்தானே…என்று சொல்லியவாறே அந்தக் காட்சிக்கான யதார்த்த நடிப்பை உடனே நடிகர்திலகம் அவர்கள் செய்து காட்ட அந்த அமைதியான, கொஞ்சங்கூடச் செயற்கையில்லாத, படு யதார்த்தமான நடிப்பைப் பார்த்துவிட்டு அசந்து நின்று விட்டாராம் திரு சோ அவர்கள். உடனேவா ஒரு நடிகரால இப்படிச்செய்து காட்ட முடியும் என்று நான் அசந்து போனேன் என்கிறார் அவர்.

நம்ம ஜனங்களுக்கு இப்டிச் செய்தாத்தான் புரியும்யா…மனசுல பதியும்…அவுங்களுக்கு இப்டித்தான் பிடிக்கும்…அதத் தெரிஞ்சிக்கோ…என்றாராம் தன்னின் வழக்கமான நடிப்பு குறித்து.

இன்று பல நடிகர்கள் காமிராவின் க்ளோஸப் காட்சிகளில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க முடியாமல், காங்க்ரீட் போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பதும், அல்லது சட்டென்று தலையைத் திருப்பி முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல செய்வதுவும், அல்லது எதற்கு வம்பு என்று காமிரா அதுவே அவர்கள் முகத்திலிருந்து நகர்ந்து விடுவதும், நாம் காணும் நடிப்புத்திறன்கள். இந்த மாதிரி எதையுமே செய்யாமல் எந்த பாவத்தையுமே வெளிப்படுத்தாமல் வந்து போகும் காட்சிகள்தான், அல்லது நின்று போகும் காட்சிகள்தான், சிறந்த நடிப்பு என்பதாக இன்று பார்க்கப்படுகிறது. படுயதார்த்தமான நடிப்பு என்பதாகவும் விமர்சிக்கப்பட்டு, கேடயங்களும் பரிசுகளும் வேறு கொடுக்கப்பட்டு விடுகிறது.

ஆனால் மாய்ந்து மாய்ந்து நடித்த, சரித்திரம் படைத்த அந்த மாபெரும் நடிகனை ஆத்மார்த்தமாக அடையாளம் கண்டு கொண்ட பொது ஜனம் தவிர வேறு எந்தப் பரிசுகள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தேடி வந்தன. மக்களின் அங்கீகாரம்தான் கடைசிவரை நிமிர்ந்து நின்றது அந்தப் பெரும் கலைஞனுக்கு.

பழைய திரைப்படமான பெற்றமனம் என்ற படத்தில் நடிகர்திலகம் ஏறக்குறைய அந்த வேடத்திலேதான் இருப்பார். அதாவது பெரியாரை அடையாளப்படுத்தும் விதமாக. அந்தத் திரைப்படத்திற்கான ஒரு கதாபாத்திரத்திற்குரிய வேடத்தில் தொண்டு கிழவனாகத் தோற்றம் தருவார். அதில் அவர் அமர்ந்தமேனிக்கு வாயை மூடிக்கொண்டு தாடையும் வாயும் அசைய அசையப்  பேசுவதும், உடல் மெல்லக் குலுங்கச் சிரிப்பதுவும், அசலாகப் பெரியார் அவர்களை நமக்கு நினைவு படுத்தும்.

நடிகர்திலகத்தை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனைக்கு வளம் சேர்த்து அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவர் திறமையை படத்துக்குப் படம் மெருகேற்றி வெளிக்கொணர்ந்தார்கள்.

இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் திரு சிவாஜி அவர்கள்.

உடன் நடிப்பவர்கள் நன்றாக நடித்தால்தான் தனக்கும் தடையின்றி நடிப்பு வரும் என்று வெளிப்படையாகச் சொன்ன நடிகர்திலகத்துடன் ஐம்பது, அறுபதுகளில் கைகோர்த்த ஜாம்பவான்கள் அநேகம்.

திரு எஸ்.வி.ரங்காராவ், திரு நாகையா, திரு எஸ்.வி.சுப்பையா, திரு எம்.என் நம்பியார், திரு பாலையா, திரு சகஸ்ரநாமம்,திரு டி.ஆர்.இராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள், திரு சாரங்கபாணி, திரு வி.எஸ்.ராகவன், திரு பூர்ணம் விஸ்வநாதன் என்று இன்னும் பல முக்கியஸ்தர்களோடு இணைந்து அவர் பணியாற்றிய காலம் தமிழ்த்திரைப்படத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.

அத்துடன் அவரோடு இணைந்து நடித்த கதாநாயகிகள், பத்மினி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா மற்றும் அம்மா நடிகைகளான எம்.வி.ராஜம்மா, கண்ணாம்பா, சி.கே.சரஸ்வதி, பண்டரிபாய், என்று இந்தப் பட்டியலும் நீளும்தான்.

இந்த நடிகர்களின் கூட்டணியில் வந்த பல தமிழ்த் திரைப்படங்கள் இன்றும் மறக்க இயலாதவை. ஒவ்வொருவரும் அந்தந்தத் திரைப்படங்களில் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை. தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியான நடிப்பும், அழுத்தமான வசன உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களுடே வெளிப்பட்ட கச்சிதமான பாவங்களும், பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகத்தான் அமைந்தன. அய்யோ, இந்தக் காட்சி முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி படம் முடிந்து வெளி வருகையில் இன்னொரு முறை எப்பொழுது பார்ப்போம் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தின. அதனால்தான் ஐம்பது, அறுபதுகளில் வந்த படங்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதிய மெருகுகுலையாத காப்பி என்று திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டபோது ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்த்து அனுபவிக்கப்பட்டது. சிவாஜி வாரம், என்று போட்டு தினசரி ஒரு படம் என்று வசூலை அள்ளிக் குவித்த காலங்கள் அவை. ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீசில் சிவாஜி படமா என்று அறிந்து ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒரே காட்சியில் ஒரே டிக்கட்டில் மூன்று திரைப்படங்கள் என்று அந்தக் காலத்தில் போஸ்டர் ஒட்டினால் கையில் சப்பாத்தி, தோசை, சட்னி, சாம்பார் என்று அடுக்கிக் கொண்டு போய் உட்கார்ந்த தாய்மார்கள் கூட்டம். சொல்லப்போனால் ஐம்பது, அறுபதுகளில் வந்த திரைப்படங்களோடே அந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவர்களின் ஆழமான ரசனை ஐக்கியமாகிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களால் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. வேறு வழியில்லாமல் ஒன்றிரண்டைப் பார்த்து வைக்கிறார்கள் என்பது வேறு. பொழுது போவதற்கான முக்கியமான சாதனமாயிற்றே அது. ஆனால் அந்த சக்தி வாய்ந்த ஆயுதம், சினிமா என்கிற ஊடகம் ஒரு காலத்தில் எத்தனை செம்மையாகச் செயல்பட்டது. சரியாகச் சொல்வதானால் இனி எல்லாமே வண்ணப்படங்கள்தான் என்று வர ஆரம்பித்த கால கட்டத்தில்தான் திரைப் படங்கள் படிப்படியாக மோசமாக ஆரம்பித்தன எனலாம். நடிகர்திலகத்தின் பல படங்களும் இந்த வரிசையில் சேரும்தான். அவரது படங்கள் பாதிக்குப் பாதி பாடாவதி என்கிற ரகம்தான். அவருக்கு அது தொழில். அதைச் செய்தார் அவர். நாம் அதில் குறைகாண முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் தன்னைக் கடுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர் ஒதுங்கவில்லையே! எந்த வேஷத்தையும் என்னால் செய்ய முடியும், மற்றவரைவிட முதல்தரமாய்ச் செய்து நிலை நிறுத்த முடியும் என்கிற நிலையில்தான் அவர் இருந்தார். கடைசிவரைத் தன் முதல்நிலையை விட்டு அவர்  கீழே இறங்கவில்லை என்பதுதான் அவரது பெருமை. விட்டது தொட்டது என்று அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது திரையுலகம்தான்.

திரைப்படங்கள் மனித வாழ்க்கையின் மேன்மைக்குப் பயன்பட்டது ஒரு காலம். ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என்னென்ன சிறந்த குணங்களை உடையவனாக மிளிர வேண்டும், எப்படித் தன் வாழ்க்கையைச் சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டும், மேம்பட்டு உயர என்னெல்லாம் செய்ய வேண்டும், என்று கற்றுக் கொடுத்தன எழுபது வரையிலான (ஆரம்பம் வரை) திரைப்படங்கள். பிறகு அவைகள் படிப்படியாக மாறிப்போயின.

போதும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல அந்த மூத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்திவிட்டன உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க வாழ்க்கை நெறி முறைகளை வரைமுறைப்படுத்தும் அந்தக் கால கறுப்பு, வெள்ளைத் திரைப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் அமைபவை. மதிப்பு மிக்க, காலத்தால் அழிந்து விடக் கூடாத விழுமியங்களை, நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லித் தருபவை பழைய திரைப்படங்கள். அம்மாதிரித் திரைப்படங்களில் பல நடிகர்திலகத்தின் பெயர் சொல்லும் அழியாத காவியங்கள் ஆகும். அவர் ஏற்றுக்கொண்டு நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நின்று நிலைப்பவை.

மொத்தம் 282 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர்திலகம் அவர்கள். இதுபோக உறிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றும் நடித்திருக்கிறார். கௌரவப் பாத்திரங்களும் ஒன்றிரண்டு என்று ஏற்றிருக்கிறார். ஆனால் அவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை. நடிப்பு என்கிற கலைக்குள் நுழைபவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள அவரிடம் ஏராளமான பாடங்கள் உள்ளன. அந்த மாபெரும் கலைஞன் வேஷமிட்டு நடிக்காமல் போன சில பாத்திரங்களும் உள்ளனதான். சமீபத்தில் தினமணிக் கதிர் அந்தப் படங்களை வெளியிட்டிருந்தது. அதை இங்கே தருவதில் மனம் இங்கே மகிழ்ச்சி கொள்கிறது. யதார்த்த நடிப்பிலும் திலகமாகத் திகழ முடியும் என்பதற்கு தேவர் மகனில் அவர் ஏற்றுக் கொண்ட தேவர் பாத்திரம் ஒரு சான்று. முதல் மரியாதையிலும் அதை நிரூபித்த அவருக்கு என்றுமே முதல் மரியாதைதான். இந்தக் கட்டுரையை இத்தோடு முடிப்பதில் எனக்கு நிறைவில்லைதான். அவர் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தன்னைத் திறம்பட ஸ்தாபித்த எத்தனையோ கதாபாத்திரங் களை அங்கம் அங்கமாக விஸ்தரித்து, அனுபவித்து எழுதி என் உயிரோடு ஒன்றிவிட்ட அந்த மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதே என் தீராத அவா. அது இத்தோடு நிற்காது. இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடரும்.

 

Series Navigationகுரானுக்கான தப்சீர் எழுத்தியல் வரலாறு6 ஆகஸ்ட் 2012
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

12 Comments

 1. Avatar
  punaipeyaril says:

  மிகை நடிப்போ புகை நடிப்போ… இவர் ஒரு தங்கச் சுரங்கம். கரியெடுத்தவர்களும் உண்டு… வைரம் கண்டவர்களும் உண்டு. தேவர் மகனின் ….”.. ஆனா… விதை…” என்ற வசனகாட்சி போதும், நம்ம அய்யாவின் திறமைக்கு… தீனி போடத்தான் நல்ல இயக்குனர்கள் அரிதாக இருந்தார்கள். நினைவுகளில் நித்தம் என் தாய் தந்தை போல் வருபவரே… என்றும் உன் நினைவுண்டு…

  1. Avatar
   ushadeepan says:

   நினைவுகளில் நித்தம் தாய் தந்தையர் போல் வலம் வருபவரே என்று சொல்லி மனதை உருக்கி விட்டீர்கள். எனக்கும் அப்படித்தான். இன்றும் கூட கையில் இருக்கும் செல்பேசியில் தினமும் ஒருமுறையாவது வலைத்தளம் போய் யூ ட்யூப்பில் அவரது படக் காட்சி ஒன்றையேனும் பார்த்து விடுவது என் வழக்கம். குறிப்பாக நான் அடிக்கடி பார்ப்பது உயர்ந்த மனிதன் படக் காட்சி. அதில் மல்லிகைப் பூ வாங்கிக் கொண்டு வந்து சௌகாருக்குக் கொடுப்பார். அதை வாங்கி ஒரு முறை பார்த்து விட்டு, பக்கத்து டீபாயில் வீசுவார். அவரின் கோபம் புரியும் இவருக்கு. பிறகு பேச்சு ஆரம்பிக்கும். கடைசியாக அவரை ஓங்கி ஒரு அரை அரைந்துவிட்டு அதற்காக வெட்கி, அடித்த கையைப் பார்த்துவிட்டு சங்கடப்பட்டு, வேகமாக வெளியேறுவார். இந்த ப் பத்து நிமிடக் காட்சியை வேறு எந்த நடிகரேனும் இதனினும் சிறப்பாக நடித்துக் காட்டி விடட்டும். நான் என் தலையை மொட்டை போட்டுக் கொள்கிறேன் என்கிறேன் சவாலாக. மிகுந்த மனச்சுமையோடு கூடிய நடைபிணமாய் வாழ்க்கை நடத்தும் ஒரு பெரிய தொழிலதிபரின் பாத்திரத்தை இந்தப் படத்தில் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் சித்தரித்திருப்பதுபோல் நடிகர்திலகத்தின் உச்ச பட்ச நடிப்பிற்கு வேறு எதையும் சொல்ல இயலாது. இன்னொரு பிறவி எடுத்து வந்தால்தான் தகும். அப்படி வந்தால் நமக்கும் அவர் வாழ்நாளின் முழு வயதும் வேண்டும். கடவுள் நம்மையும் வாழ வைக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை அர்த்தப்படும். அன்பன், உஷாதீபன்

 2. Avatar
  லெட்சுமணன் says:

  சிவாஜியின் எதார்த்த நடிப்பை பற்றி முன்பே திரு.நாசர் தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டார்.

  சிவாஜியின் கடைசி 10 வருடங்களை திரை உலகம் வீணடித்துவிட்டது – திரு. மதன்.

  சிவாஜிக்கு “லாபி” பண்ணத் தெரியாமல் போய்விட்டது. இன்று பல நடிகர்களுக்கும் உலக அளவில் தங்கள் படங்களை எடுத்து செல்ல தெரிந்திருக்கிறது. இன்றைய திரை உலகினர் பலரும் அதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அன்று, சிவாஜியை அப்படி உலக அளவில் கொண்டு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எவருக்குமே இருந்ததாக தெரியவில்லை. (அட!? இந்தியா அளவிற்கே போகவில்லை).

  Sivaji is referred to as “The Marlon Brando of Indian Cinema”

  எளிய ஆங்கில வசனங்களை உதடு பிரியாமல் பேசிய மர்லின் பிரான்டோ எங்கே? கடுமையான தமிழ் நடை வசனங்களை உதடு துடிக்க பேசிய நம்ம சிவாஜி எங்கே?

  ///திரைப்படங்கள் மனித வாழ்க்கையின் மேன்மைக்குப் பயன்பட்டது ஒரு காலம்///

  அப்படி எல்லாம் சொல்லி விட முடியாது. எல்லாம் எல்லா காலத்திலும் இருக்கிறது. இருந்திருக்கிறது. இருக்கும். நாம் தான் எது வேண்டும் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். அளவுகள் வேண்டுமானால் வேறு படலாம்.

 3. Avatar
  punaipeyaril says:

  ஆறு மனமே ஆறு என்ற பாட்டில் தலையை தொங்க போட்டு… ஊதி ஊதி கடலை தின்பாரே….. , அதே மனநிலையில் ஒரு நாள், நான் தலையை ஆட்டி ஆட்டி தொங்கப்போட்டு நடந்த போது தான் புரிந்தது… இவ்ர் மகா கலைஞன் என்று… எப்படி அவருக்கு அப்படி நடிக்க தோன்றியது… அய்யா , கணேசா…. எங்க ராசா போன…

 4. Avatar
  smitha says:

  Written like a true fan.

  But sivaji’s downfall as an actor began with tirissolam. He started romancing heroines like sridevi & sripriya. It is surprising that when in his 30s & 40s he played an old man in many films (eg : motor sundaram pillai), he played a 30 year old in his 60s & 70s.

  He could have refused such films.

  Even sivaji fans can only remember thevar magan & mudhal mariyadhai amongst his later films. Why?

 5. Avatar
  smitha says:

  உடன் நடிப்பவர்கள் நன்றாக நடித்தால்தான் தனக்கும் தடையின்றி நடிப்பு வரும் என்று வெளிப்படையாகச் சொன்ன நடிகர்திலகத்துடன் ஐம்பது, அறுபதுகளில் கைகோர்த்த ஜாம்பவான்கள் அநேகம்.

  Yes, he never chopped his co stars’ roles, but he was insecure. I will relate 1 incident. Writer aarurdas was woken up in the middle of the night by the director (I forget his name) & they went to sivaji’s house. he asked the director as to what the matter was. The Director told him that when they were watching the rushes of the film when someone commented “It is going to be a toss up bewteen sivaji & ranga rao”.

  This was the reason for his anger & he had summoned both of them.

  When aarur dass & the director enterd his house, sivaji was very angry & questioned them on this. They hastily replied that ranga rao’ character would die soon & sivaji would walk away with the honours in the climax.

  The above film in question was ‘padithal mattum podhuma”.

  This incident shows sivaji’s insecurity.

  There is no doubt that he was a very good actor but in his later years he became too hot to handle. That is why later day directors never dared to approach him.

  Also, his punctuality was a source of irritation to some. It is fine to report early. But it is too much to report at 6 am for a 7 am shoot & question other artists who come at 6.45 am as to why they were late.

 6. Avatar
  punaipeyaril says:

  Even sivaji fans can only remember thevar magan & mudhal mariyadhai amongst his later films. Why?– இரண்டிலும் சிவாஜிக்கென்று ஒரிரு காட்சிகளே வைக்கப்படன… மு.மவில்- சிவாஜியின் காலை பிடித்துக் கொண்டு அவளது பெண்ணெனப்பட்டவள் கதறும் போது, “எத்தனை ஜன்மம் எடுத்தாலும்… “ என்ற காட்சி. தேவரில் … உங்களத் தானப்பு நம்பி இருக்கிறோம்… என்ற காட்சி. இது தவிர மத்த எல்லா காட்சிகளிலும் , கதாபாத்திரத்திற்குள் சிவாஜி ஆன்மாவாக இறங்கியிருப்பார். சிவாஜியின் காலடியில் அமர்ந்து கிளாஸ் ஊற்றின ஏ.சி .திருலோகசந்தர் போன்ற அடிப்பொடிகளின் மயக்கத்தில் சிவாஜி மங்கினார்… ஆனால், தேவரிலும் மரியாதையிலும் நாம் அந்த இயக்குனர்களின் தரங்களால் சிவாஜி நடிப்பில் மயங்கினோம்…

 7. Avatar
  Kavya says:

  ‘அந்த மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி’ இப்போது ஏன்? அவருக்கு என்ன நினைவு நாளா வருகிறது இவ்வாரத்தில். பாரதியாருக்கும் வ உ சிக்கும்தான் இவ்வாரம்.

  போகட்டும். பழையதைப்போற்றலாம். அதற்காக புதியதை இகழவேண்டத்தேவையில்லை. இன்றைய படங்களை அந்த காலத்து ஆசாமிகள் பார்க்கவிரும்பாதது ஒரு மனித சுபாவமே. இதில் மட்டுமன்றி, எதிலுமே இக்காலத்தில் அக்காலத்தவரைக் காணலாம். நான் புதுப்படங்கள் பல பார்த்துவருகிறேன். நல்ல படங்கள் பலவருகின்றன. அதில் திறமையான கலைஞர்கள் வெளிவருகிறார்கள்.

  நானும் சிவாஜியும் பலபடங்களைப்பார்த்திருக்கிறேன். அவரின் பின்னாள் படங்களைப்பற்றி, அவை தொழிலாகச்செய்யப்பட்டதால், விமர்சனத்துக்குள்ளாகத்தேவையில்லை.

  ஒரு கதாபாத்திரத்தை சிவாஜியை விட நன்றாக எவருமே செய்யவியலாது. அவர் நடிப்பே இறுதிச்சொல் என்பது ஏற்றுக்கொள்ளவியலா வாதம்.

  ஸ்டீவன்ஸன் சொல்வார்: செகப்பிரியர்தான் மஹாபெரிய நாடகாசிரியர் என்று எப்படி அடித்துச்சொல்ல முடியும்? அவர் காலகட்டத்துள் பலர் எழுதவில்லை. அவர் அன்றில்லாவிட்டால், இன்னொருவர் எழதியிருப்பார்! ஒருவேளை அவரைவிட சிறப்பாக எழுதியிருப்பார் !!”

  அதைப்போல சிவாஜி ஒரு கதாபாத்திரத்துக்கு தன்னால் முடிந்த பரிமாணத்தைத்தான் கொண்டு வந்தார். அதே பாத்திரத்தைப் பலரைச்செய்யச்சொல்லிப்பார்த்தால், அவர்கள் வெவ்வேறு பரிமாணங்களைத்தரமுடியும். இவற்றுள் எப்பரிமாணம் நம்மை ஈர்க்கிறது அல்லது பலரை ஈர்க்கிறது என்பதைப்பார்த்துத்தான் சொல்லவியலும். எ ஹிப்போதட்டிக்கல் சிட்சுவேஷன். இல்லையா?

  ஒரு பெண்ணை ஓவியம் போடுங்கள் என்று ஓவியர்களிடம் சொன்னால், அர்ஸ், கோபுலு, மணியன், ஜெ…,மாருதி என்று பல ஓவியர்கள் பலவிதமாக தங்கள் பரிமாணத்திலே அல்லது கற்பனையிலே வரைந்துவிடுவார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒரு வகையில் அழகாகத்தான் இருப்பாள். ஆனால் விதம் விதமான அழகு. ஜெயின் பெண் ஒல்லியாக, மாருதியின் பெண் புஷ்டியாக, ஒவ்வொரு ஓவியருக்கும் தமிழ்நாட்டில் இரசிகர்கள் உண்டு. அல்லது ஒருவரை வெறுத்து இன்னொருவரையும் விரும்புவோரும் உண்டு.

  சிவாஜியின் நடிப்பைத்தனியாகப்பார்த்து இரசிப்பது, நாம் மற்றவர்கள் அதைச்செய்யாமிலிட, அதன் வேறுபரிமாணம் எஃதென்று தெரிய வாய்ப்பில்லாமல் போக, சிவாஜியின் நடிப்பே இலக்கணமென்று கொள்வதாக அமையும். His is not the last word in histrionics on Tamil screen. Many many characters he portrayed would have been portrayed by other actors far better. Perhaps such actors might not have been available at the time here; or they would have been prevented for different reasons. Once an actor has established his Brand overwhelming all, others leave the scene for him wholly in Kollywood.

  A Hoffman, a Hopkins or some one else – would have made Shivaji Ganesan a pygmy :-P

 8. Avatar
  Kavya says:

  My comments need to b correctly understood. In a no- contest situation, it s difficult to adjudge the best,or the bettere. W/o Ravananan, there wd b no Ramayanam. Raman s purudoththaman (the ideal hero) only in comparision. If Ravananan too were an ideal man, then Ramayanam wd have 2 heroes, wdnt?

  Shivaji Ganesan strode like a colassus on Tamil screen for decades in histrionics essaying vareity of roles. Other actors neither tried them, nor r unavailable, nor r given at all. Thus Shivaji was undisputed. And we never know whether he is the best among the actors.

  He rated Tamil film watchers low. When counterd why he puts in exaggerated performance, he replied to Cho, as quoted in the essay, “I know it is exaggeration; but the Tamilians accept only such larger than life performances only. I can do the performance which you have in mind: realistic and artisitc in that way. (He actually demonstratied on in front of Cho)”

   1. Avatar
    Kavya says:

    I haven’t submitted my comments to u for approval/acceptance. Y do u approve?

    The readers of Thinnai post their comments on any article or certain points therein. Where they feel their comments may b misunderstood, they clarify with alacrity. No author shd either approve or disapprove the reader’s comments: that wd b an arrogant behaviro manner in a forum. But they may agree or disagree. Still it wd b better if the agreement/disagreement s backed / buttressed with reasons. Simply putting in one liner with malice towards the commenter or the author s cowardice. It s being exhibited by many in this forum. Similarly, “I laugh at u; I pity u…etc.” r forms of school boyism or girlism: i.e. running away with a complacent feeling of victory; to escape arguments; or to make others fall silent. Let’s not indulge in these childish behvaior.

    One liners r, however, ok if it s an interjection of wonder or pity, Not ok if it out of malice. Write fully and confidently. If someone s adamant to ignore ur reasoning, don’t bother: coz u don’t post ur comments for him or her alone but for all to ponder over. V r being watched and read. Take care.

    I post my comments on any article appearing in Thinnai mainly when I don’t accept it or certain points therein, as I fear the author has a motive to defraud the readers; or cleverly pushing in an anti-social view. I shd drag him out to hold up and pillory; I mean, his article or his points. Sometimes, he or she may b innocently positing an incorrect view and the gullible readers r taken for a ride.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *