மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012

This entry is part 20 of 31 in the series 4 நவம்பர் 2012

சந்திப்பும் இருநோக்கும்….

 

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

 

காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் வேறெவரேனும் உலகில் இருப்பார்களா? கடந்த வெள்ளியன்று பாரீஸில் நண்பர் ஒருவர் மகளின் திருமண வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். புதன்கிழமையன்றே பாரீஸ் புறப்பட்டாயிற்று. பிரான்சு நாட்டில் ஓரளவு எனது நட்புவட்டம் என்பது பெரிதும் பாரீஸில் வசிக்கும் நண்பர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரும் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தி நடத்திவருபவர்கள். அவர்களில் ஒரு சிலருடன் நெருக்கமாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இன்று அப்படியில்லை. ஏற்பட்ட இடைவெளிக்கு அல்லது சந்திப்பு தாமதத்திற்கு ஒருவகையில் இரு தரப்புமே பொறுப்பேற்கவேண்டும்.

 

மனிதர் வாழ்க்கையில் சந்திப்பு உயிருக்குச் சுவாசம்போல. தினசரியும், தொலைக்காட்சி பெட்டிகளும், வலைத்தளங்களும் இல்லாத காலங்களில் சந்திக்கிற மனிதர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருந்தன. எங்கள் கிராமத்தில் தேனீ£ர்க்கடையில் அறுவடை முடிந்தகாலங்களிலும், வயல்வெளி வேலைகள் அதிகரிக்கிறபொழுது பிற நேரங்களிலும் கூடுவார்கள். தேனீர்க்கடைகள் தவிர்த்து சிலர் வீட்டுத் திண்ணைகளும் உபயோகத்திற்கிருந்தன. இச்சந்திப்பின் போது ஒருவரையொருவர் உறவுமுறைவைத்து விளித்துக்கொள்வார்கள். இவர் அவரை மாமா என்பார், அவர் இவரை ‘இல்லை மச்சான்’ என மறுதலித்துப் பேசுவார். பேசப்படும் பொருள் அவர்கள்வாழ்க்கையின் அன்றையதின குறுக்கீடுகளை நினைவூட்டுவதாக அமையும். தெற்குவெளிக்கு தண்ணீர் எட்டமாட்டேங்குது, நட்ட நடவு நாலு நாளா தண்ணீர்வரத்தின்றிகாயுது, உரக்கடைக்குப் போயுட்டுவந்தேன், யூரியா வர ஒரு வாரமாகுமாம்’, இப்படி அப்பேச்சு அமையும். இத்திண்ணைபேச்சும், உறவின் முறையும் அவர்கள் அடிப்படையில் உள்ளூர் விவசாயிகள் என்ற சரடால் உருவானது. அதிலொரு விவசாயிக்குப் பார்த்தவிவசாயம் போதும், நெல்லை வாங்கி அவித்து, அரைத்து அரிசியாக குப்பங்களுக்குக் கொண்டு சென்று விற்று சிறிது பணம் பார்க்கலாமென எண்ணம் வந்ததெனில் அன்று முதல் அவ்விவசாயியின் சந்திப்பும் நட்பும் அவரைப்போன்று தொழிலில் ஈடுபடும் மற்றொரு மனிதரிடம் என்றாகிவிடுகிறது. ஆக வாழ்க்கை உறைந்து போய்விடுவதில்லை. கடலைச்சென்றடையும்வரை, கடக்க வேண்டியவைகளை கடந்தே ஆகவேண்டும்.

 

பிரமிப்பாக இருக்கிறது, பிறந்ததுமுதல் சந்தித்த மனிதர்கள்தான் எவ்வளவுபேர்? குடும்பம், உறவுகள், வீட்டுத் திண்ணைகள், கூடங்கள், பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், பருவகால நண்பர்கள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் கடைகள், பயணங்களில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள்… இவர்களில் எத்தனைபேரை நட்பின்பேரால் இன்றும் சுமக்கிறோம் சந்திக்கிறோம், உரையோடுகிறோம், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம், துன்பத்தை இறக்கிவைக்கிறோம். எங்கள் கிராமத்து நெல் வியாபாரிபோல நேற்றுவரை என்னோடிருந்த மனிதர் பலரை இழந்திருக்கிறேன். வினை சார்ந்து, உரிப்பொருள் அல்லது கருப்பொருள் சார்ந்து சந்திப்பில் இடம்பெறும் பங்குதாரர்கள் வேறாக இருப்பார்களென்பது வாழ்க்கைப் பயணம் போதிக்கும் அறம்.

 

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட இடத்தில் எதேச்சையாக அல்லது ஏற்கனவே தீர்மானித்தபடி கூடுவது சந்திப்பு. இச்சந்திப்பிற்கு பங்கேற்கிறவர்களின் பொதுநலன் மையமாகவிருக்கலாம். அவரால் இவருக்கும் இவரால் அவருக்கும் ஏதேனும் பலன்களிருக்கலாம். இரகசியமாக அல்லது பிறர் அறியவந்தால் பாதகமில்லை எனச்சந்திக்கிறவர்கள் ஒருபுறமெனில் மூன்றாவது நபரை சீண்டவேண்டுமென்பதாக அல்லது அவரது நித்திரையைக்குலைக்க வேண்டுமென்பதற்காகச் சந்திக்கிறவர்களுமிருக்கிறார்கள். அண்மையில் சில தே.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டு முதலைமைச்சரைச் சந்தித்ததைப்போல. விளம்பரத்திற்காகவும் சில சந்திப்புகள் நிகழ்வதுண்டு. டெசோ தீர்மானத்தை கோட்டு சூட்டுடன் தி.மு.க புள்ளிகள் ஐநா துணைக்காரியதரிசியை ஓர் ஐந்து நிமிடம் தயவுபண்ணச்செய்து சந்தித்தது (ராஜபக்ஷே வயிற்றில் புளியைகரைக்க அல்ல அவர் கல்லுளிமங்கனென்று தி.மு.க தலைவர் நன்றாகவே அறிவார்.  வேண்டுமானால் மத்திய ஆளும் காங்கிராஸாருக்கு எரிச்சலூட்டவென்று கருத இடமுண்டு) எதிர்காலத்தில் காங்கிரஸ¤க்கு எதிராக ஓர் அணியை ஏற்பாடு செய்யவந்தால் தமிழ்த் தேசியவாதிகளை வளைத்துப்போட கையாளும் தந்திரம். கூடுதலாக ஊசிப்போன பண்டத்தை சொந்த ஊடங்களில் கூவியும் விற்கலாம். இனி எதிர்வரும் தேர்தலுக்கு முன்பாக மரியாதை நிமித்தமாக கருணாநிதி, வைகோ, ராமதாஸ் சந்திப்பு நிகழலாம். 

 

தமதிருப்பின் மீது நம்பிக்கைவைத்து உறைந்த இரு உயிர்களை இளக்கி ஒன்றிணைத்து இயங்கச் செய்வது சந்திப்பு என்பது உளவியலாளர்கள் கருத்து. சமுதாய ஒழுங்கமைவு, சமூகக் கட்டுமானம், சமூக இயக்கம் என பல வழிநடத்தல்களுக்கு சந்திப்புகள் உதவியாயிருக்கின்றன. எவ்வகையான சந்திப்புகளிலும் முதல்சந்திப்புக் கிளர்ச்சியூட்டக்கூடியவைகளாகவும், ஆவலும் எதிர்பார்ப்புமாக அலைக்கழிக்கவும் செய்யும். காதலன் காதலி சந்திப்பு, தம்பதிகளின் முதலிரவு, உத்தியோகத்திற்கான நேர்முகத் தேர்வு… ஆகியவை உதாரணத்திற்கு இருக்கின்றன. இச்சந்திப்புகளில் கள்ளம் கலக்கிறபோது கூடுதலாக போதைதருமோ என்னவோ பங்குதாரர்களில் எளிதில்சுயமிழந்துபோகிறார்கள். சில நேரங்களில் சந்திப்பு மௌனியின் மனக்கோட்டை மனிதர்களைப்போல நம்மைக் கடந்து முன் சென்று என்றோ நம்மைக் கண்டதை நினைவுகூர்ந்து “என்னப்பா சௌக்கியமா?” என விசாரிக்கலாம். ஒருவர் “உன்  சிரிப்பு கூட மாறிவிட்டது”, எனலாம். மற்றொருவர், நேற்றுகூட நாங்கள் சங்கரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உன் நினைவுகூடவந்து, உன்னைப்பற்றியும் பேசினோம்” எனச் சமாளிக்கலாம். சந்திப்புகளில் சில சலவைக்குறிகளாகும் அதிசயமிது.

 

சந்திப்பு என்பது இருமனிதர்களுக்கிடையேயானதாக இருக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருக்கிறதாவென்ன?

 

பாரீஸ¤க்கு வருகிறபோதெல்லாம் அவளைச்சந்திக்கிறேன். சந்திப்பின் இலக்கணங்களில் 90விழுக்காடுகள் பொருந்துகின்றன. என் மகன் வீட்டிலிருந்து பாரீசின் பிறபகுதிகளுக்கு பயணிக்கிறபோது நிகழ்கிறது. Cite Universitaire என்ற இரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த ஐந்தாண்டுகளாக வெயில், மழை, பனியென காலங்களை வென்று அவள்  எனக்காகக்காத்திருக்கிறாள். சந்திப்பின் முடிவில் பங்குதாரர்கள் எதிர்பார்ப்புகள் சமதளத்தில் வைத்து திருப்தியுறக்கூடியவை என்ற விதி எங்கள்வரையில் சரியாதென்பதென் அனுமானம். ஒரே ஒரு குறை அவள் ஊர்பேர் தெரியாத ஓவியன் கிறுக்கிய கிரா·பிட்டி எனும் சுவரோவியம். தற்போதைக்கு அவள் ஆயுட்காலம்வரை எங்கள் சந்திப்புகள் தொடரலாம். குறள் சொல்வதுபோல, “இருநோக்கு இவளுண்கண் உள்ளது”.

 

—————————————————————————

Series Navigationஅருந்தும் கலைநம்பிக்கை ஒளி! (5)
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *