சவுதி அரேபியாவின் அடக்குமுறையினால், ஷியா புரட்சி உருவாகிறது.

author
2
0 minutes, 4 seconds Read
This entry is part 14 of 33 in the series 11 நவம்பர் 2012

கிரிஸ் ஸாம்பெலிஸ்

அரபு நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் புரட்சிகளின் பின்னணியில், சவுதி அரேபியாவில் வளரும் கலவரங்கள் பார்க்கப்படாமலேயே போய்விட்டன. அரசியல் பகிரங்கமாக்கப்பட்டுகொண்டிருக்கும் சுழ்நிலையில், வெகுகாலமாக இருந்துவரும் சர்வாதிகார ஆட்சிகளின் முன்னால் அரபு மக்கள் தங்களது அபிலாஷைகளை வெளிப்படுத்துவது அதிகரித்துகொண்டிருக்கிறது. இந்த பின்னணியில், இதுவரை சமூகத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டு, குறிவைத்து தாக்கப்பட்டுகொண்டிருந்த இன, மத சிறுபான்மையினர் தங்களது குரல்களையும் வெளிப்படுத்த இறங்கியுள்ளனர்.

2011இலிருந்து சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் (அல் மிண்டாக் அல் ஷார்கியா) ஷியா சிறுபான்மையினர் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தியதும், அவர்கள் மீது சவுதி அரசாங்க ராணுவப்படை கடுமையாக அடக்குமுறை தாக்குதல்களை நடத்தியதும், சவுதி அரேபியாவின் மன்னராட்சியும், மற்ற அரபு நாடுகளில் நடந்த கலவரங்கள் போன்றே கலவரங்களை எதிர்கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியமாக இருக்கிறது.

ஷேக் நிம்ர் பாக்ர் அல் நிம்ர் அவர்களை ஜூலை 8ஆம் தேதி தேசத்துரோகத்துக்காக கைது செய்ததும், சவுதி அரேபியாவின் உள்ளே மதப்பிரிவு பதட்டம் பரவி வருகிறது என்பதற்கு சாட்சியாக இருக்கிறது. அல் நிம்ர் ஒரு முன்னணி ஷியா பிரிவு மதத்தலைவர். இவர் சவுதி அரச குடும்பத்தையும், இந்த அரசாங்கம் அதன் ஷியா பிரிவு குடிமக்களை அடக்குமுறை கொடுமைகள் செய்வதையும் தொடர்ந்து கண்டித்து வந்திருக்கிறார். கிழக்கு பிராந்தியத்தில், அல் அவாமியா என்ற கிராமத்தில் அவரை கைது செய்தபோது அவரது காலில் ராணுவப்படை சுட்டிருக்கிறது.

அல் நிம்ர் சவுதி அரேபியாவின் ஷியா பிரிவினரின் ஆன்மீகத்தலைவராக கருதப்படுகிறார். இவர் சவுதி கட்டுப்பாட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுகொண்டிருக்கிறார். தன்னுடைய கைதை எதிர்த்து அன்றிலிருந்து அல் நிம்ர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த ஷேக் அவர்களின் கைது கிழக்கு பிராந்தியத்தின் முழுவதும், கதிஃப், அல் அவாமியா, அல் ஹாசா, சஃவா பகுதிகளில் மக்கள் போராட்டத்தை தூண்டிவிட்டிருக்கிறது.

இந்த போராட்டக்காரர்கள், நீதி, சமத்துவம், அரசியல் கைதிகளை விடுவிப்பது, அரசியல் சீர்திருத்தங்களை சவுதி அரேபியாவில் கொண்டுவருவது ஆகியவற்றை கோருகிறார்கள். இந்த போராட்டக்காரர்கள், சவுதி மன்னர் குடும்பம் கீழிறங்க வேண்டும் என்றும் கோருகிறார்கள். சவுதி ராணுவப்படைகள் இந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடுகளை நடத்தியுள்ளனர். இந்த போராட்டக்காரர்கள் மீது சவுதி ராணுவம் சுட்டதில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு பிராந்தியம் முழுவதும் ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கதிஃப் மற்றும் இதர போராட்டமையங்களில் வாழும் மக்கள் மீது பொது தண்டனையாக அவர்கள் அங்கிருந்து வெளியேறக்கூடாது போன்ற இயங்கும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியுள்ளது. அங்கிருப்பவர்கள் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது.

அல் நிம்ர் அவர்களது சமீபத்திய கைது (ஷேக் அவர்கள் முன்னர் 2004 இலும் 2006இலும் இதே குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்) சவுதி அரேபியாவில் உள்ள ஷியா பிரிவினருக்கு தைரியத்தை கொடுத்திருக்கிறத். ஷியா பிரிவினருக்கு சம உரிமை, சவுதி மன்னராட்சி மீதான விமர்சனம் போன்ற அல் நிம்ர் அவர்களது முன்னால் கருத்துக்களை ரியாத் அரசாங்கம் இதுவரை தூக்கி எறிந்தே வந்திருக்கிறது. கிழக்கு பிராந்தியம் தனி நாடாக வேண்டும் என்று அல் நிம்ர் கூறுவதாக சவுதி அரசாங்கம் அவரை குற்றம் சாட்டி வந்திருக்கிறது.

ஷியா பிரிவினரின் எதிர்க்குரலுக்கு சவுதி அரேபியா எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பது அது எவ்வாறு மத்திய கிழக்கை பார்க்கிறது என்பதற்கான ஒரு விடையாக இருக்கிறது. பரந்த நோக்கில், அரபுகளின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கான குரல்களை தனது நீண்டகால ஆட்சிக்கு ஒரு அச்சுருத்தலாக பார்க்கிறது. இந்த பகுதியில் ஷியா பிரிவினரின் குரல்களை ஈரானியர்களின் வேலையாகவும் பார்க்கிறது. மார்ச் 2011இல் சவுதி அரேபிய ராணுவப்படைகளை பஹ்ரேனில் நிறுத்தி வைத்து அங்கு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட பெரும்பான்மையான ஷியா பிரிவினரின் போராட்டத்தை நசுக்கவும், அந்த நாட்டை ஆளும் சவுதி அரேபிய ஆதரவு சுன்னி ராஜ குடும்பத்தை பாதுகாக்கவும் அனுப்பி வைத்தது. அதன் எதிர்வினையாக சவுதியில் இருக்கும் ஷியா பிரிவினர் தனக்கு எதிராக எழுவார்கள் என்று அச்சப்படுகிறது.

சவுதியில் வாழும் ஷியா பிரிவினர் பஹ்ரேனில் வாழும் ஷியா பிரிவினரோடு, ஜாதி ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் நெருங்கிய தொடர்புடையவர்கள். தங்கள் ஜாதி ஷியா பிரிவினருக்கு ஆதரவாக சவுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு சவுதி அரேபியா தனது ராணுவத்தை பஹ்ரேனிலிருந்து விலக்கிகொள்ளவேண்டும் என்று கேட்டுகொண்டார்கள். இந்த பின்னணியில், சவுதி அரேபியா இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த ஷியா பிரிவு போராட்டத்தை, ஈரானுடன் தான் கொண்டிருக்கும் போட்டியின் பின்னணியிலேயே பார்க்கிறது.

அல் நிம்ர் அவர்களது புகழை குலைக்கும் விதமாக, சவுதி உள்துறை அமைச்சர் இளவரசர் அஹ்மது பின் அப்துல் அஸீஸ் அவர்கள் அல் நிமர் மனநிலை சரியில்லாதவர் என்று கருத்துதெரிவித்தார். சவுதி செய்தி பிரிவு கொடுத்த அறிக்கையின் படி, இளவரசர், “நிம்ர் போராட்டத்தையும் கலவரத்தையும் உருவாக்கக்கூடியவர். அவர் பேசுவதை கேட்டால், மனநலம் குன்றியவர் போலவும், சமநிலை தவறியவர் போலவும் தெரிகிறது” என்று அறிவித்தார். அல் நிம்ர் அவர்களது ஆதரவாளர்கள் இவற்றை மறுக்கிறார்கள். விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட ஷியா பிரிவினர், அரசாங்கத்தில் இருக்கும் எதேச்சதிகார சர்வாதிகார போக்கு ஆகியவை போன்ற கையிலிருக்கும் முக்கியமான விஷயங்களை சவுதி அரசாங்கம் தவிர்க்க நினைக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

சவுதி அரேபியா உலகத்தின் முதன்மையான பெட்ரோலிய ஏற்றுமதி நாடு. அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்ட நாடு. அதே நேரத்தில் கலாச்சார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உலகத்திலேயே கடுமையான அடக்குமுறை நாடு. அதன் அதிகாரப்பூர்வமான சுன்னி இஸ்லாம் பிரிவு மற்ற சுன்னி இஸ்லாமிய சிந்தனைகளை வழி தவறி சென்றவர்கள் என்றும், ஷியா முஸ்லீம்களை காபிர்கள் என்றும் கருதுகிறது. சவுதியின் அதிகாரப்பூர்வமான இஸ்லாமிய அமைப்பு ஷியா முஸ்லீம்களை ரஃபிடா (மறுத்தவர்கள்) என்று கேவலமாக குறிப்பிடுகிறது. சவுதி அரேபியாவின் 29 மில்லியன் மக்களில் 10-15% சதவீதம் இருக்கும் ஷியா பிரிவினர் கிழக்கு பிராந்தியத்தில் குழுமி உள்ளார்கள். ஆனால் இங்கேதான் சவுதி அரேபியாவின் பெரும்பான்மை எண்ணெய் வயல்களும் குழுமி இருக்கின்றன.

பல பத்தாண்டுகளாக கிழக்கு பிராந்தியமே சவுதி அரச குடும்பத்தின் முதன்மை எதிர்ப்பையும் விளைவித்துகொண்டிருக்கிறது. சவுதி அரேபியாவில் தொடர்ந்த சமூக பொருளாதார பிரச்னைகள் பகிரங்கமாக ஒத்துகொள்ளப்பட்டாலும், மற்ற அரபு நாடுகளை போல இல்லாமல், ஓரளவுக்கு அமைதியான நாடு என்றே கருதப்பட்டு வந்திருக்கிறது. சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தி நாடாக இருப்பதாலும், உள்நாட்டில் ஓரளவுக்கு சமூக சேவை செய்வதாலும், அமெரிக்காவுடனான ராஜரீக உறவினாலும், இவ்வாறு கூறப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், கிழக்கு பிராந்தியத்தில் சமீபத்திய நிகழ்வுகள் வேறுமாதிரி கூறுகின்றன.

கிழக்கு பிராந்தியத்திலிருந்து செய்தி கசியக்கூடாது என்று சவுதி அரச குடும்பம் கடுமையான முயற்சிகளை எடுத்துவந்திருக்கிறது. ஆனால், ”கிழக்கு பிராந்திய புரட்சி” போன்ற அரசியல் அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் தங்களது செய்திகளை உலகுக்கு எடுத்து சொல்லிவருகின்றன. மனித உரிமை மீறல்கள், ஷியா பிரிவினர் மீதான அடக்குமுறை, துப்பாக்கி சூடுகள், பொதுமக்கள் போராட்டங்கள் போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் பதிந்து வருகிறார்கள். ”கிழக்கு பிராந்திய புரட்சி” என்ற அமைப்பு, “மக்கள் வாக்கெடுப்பின் மூலம் ஆளும் அமைப்பை” உருவாக்க விழைகிறது. இது”மக்கள் போராட்டங்கள் மூலமும் சட்டப்பூர்வமான முயற்சிகள் மூலமும், சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர” விழைகிறது.

சவுதி அரசின் அடக்குமுறை இருந்தாலும், இதுவரை மக்கள் போராட்டங்கள் அமைதி போராட்டங்களாகவே இருந்து வந்துள்ளன. ஆகஸ்ட் 3ஆம் தேதி சவுதி ராணுவ ப்படை மீது போராட்டக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதாக செய்திகள் வந்தது, இனி இந்த போராட்டங்கள் உக்கிரமாக அதிகரிக்கும் வாய்ப்பையே காட்டுகின்றன. போராட்டத்தில் சுட்டதில் ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டதாகவும், ஒரு சவுதி ராணுவ வீரர் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் தெரிகிறது. இந்த சமீபத்திய நிகழ்வுகளின் பின்னணியில், சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் கலவரம் தொடருமென்றே கருத வேண்டியிருக்கிறது.

 

குறிப்புகள்

Eastern Province Revolution, யுட்யூப் சேனல் இது 

 ஃபேஸ்புக் பகம் இது

ட்விட்டர் பக்கம் இது

http://www.atimes.com/atimes/Middle_East/NH16Ak01.html

 பஹ்ரேனில் சவுதி துருப்புகளால் இடிக்கப்பட்ட 43 மசூதிகள்

கிழக்கு பிராந்தியத்தில் மக்கள் போராட்ட ஊர்வலம்

பஹ்ரேனில் சவுதி துருப்புகள் மசூதியை இடித்து குரானை எரித்த செய்தி

Series Navigationஎன்னை மன்னித்து விடு குவேனிஅலையின் திசையில் மாற்றம் தேடி..-வாஸந்தியின் “ மீட்சி” சிறுகதைத்தொகுப்பை முன் வைத்து….
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    பா. ரெங்கதுரை says:

    சவுதி அரேபியா என்ற பாசிச பயங்கரவாத நாடு வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் ஒழிந்தால்தான் பாகன் மதத்தினர் நிம்மதியாக வாழ இயலும். இஸ்ரேலை இனி நம்பிப் பிரயோஜனமில்லை. ஷியாக்களுக்கு உதவி நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.

  2. Avatar
    தங்கமணி says:

    ஷியாக்களுக்கு உதவுவது இன்னொரு வஹாபியத்துக்கு ஆதரவு என்பது போலத்தான்.
    இந்திய அரசு நிச்சயம் உதவாது. ஆனால் ஈரான் உதவும் என்று நினைக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *