ராஜூ பார்க்க அமைதியாய் இருந்தாலும் சிலவிஷயங்களில் மிகவும் தீவிரமானவன். ஆனால் பலவிஷயங்களில் மிகவும் மேம்போக்காய் இருப்பான். திருநெல்வேலியில் இருந்து பொன்மலை ரயில்வே பள்ளிக்கூடத்தில் அவன் ஆறாவது சேர்ந்ததில் இருந்து அவனை எனக்குத் தெரியும். அவன் முதன் முதலில் என் வீட்டிற்கு வந்திருந்தபோது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த தென்னந்தோப்பிற்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கென்று இருந்த மிக ஆழமானதும் அகலமானதுமான கிணற்றைக் காட்டி, ” டேய்! இது பயங்கரமான கெணறுடா! நெறையா பேத்தை இது காவு வாங்கியிருக்கு தெரியுமா” என்று ஏற்கனவே பெரிதாயிருக்கும் என் முட்டைக் கண்களை மேலும் பெரிதாக்கி, உடம்பு அச்சத்தில் உதற , கடன் தொல்லையாலும், காதல் தோல்வியாலும் மற்றும் இன்னபிற காரணங்களாலும் அந்தக் கிணற்றில் விழுந்து தங்களை மாய்த்துக்கொண்டவர்களின் பட்டியலை நான் சொல்லிக்கொண்டே இருக்கும்போதே படபடவென சட்டை டிராயரைக் கழற்றிக் கிடாசி விட்டு ஒரு நொடிக்குள் அந்தக் கிணற்றினுள் பாய்ந்துவிட்டான். நான் என்னசெய்வது என்று தெரியாமல் ” ஐயோ ” என்று கத்தியதுகூட யார் காதிலும் விழுந்திருக்காது. ஏனெறால், அந்தத் தோப்பும் கிணறும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்தது. இப்படிச் செய்துவிட்டானே , இதை யாரிடம் போய் எப்படிச் சொல்வது? ” உன்னை என்ன மயித்துக்குடா அவனை அந்த சாய்ந்தர நேரத்துல அங்கக்கூட்டிண்டு போகச்சொன்னது?” என்று அப்பா தான் புதிதாக வாங்கிவைத்திருந்த பெல்ட்டால் அடிக்கப்போகும் காட்சி என் கண்முன்னே விரிந்தது. சரி, திரும்பிப் போகவேண்டியதுதான். நாளைக்கு எப்படியும் ஸ்கூலுக்கு லீவு உண்டு என்று நினைத்தவாறு திரும்பும்போது, ” டேய் ! இங்கன பாருடா லூஸு ” என்று கிணற்றுக்குள்ளிருந்து ராஜுவின் குரல் கேட்டது. குதித்து உயிர்போன ஐந்து நிமிடத்திற்குள் ” இன்ஸ்டண்டாக ” ஆவியாகிடமுடியுமா என்றும் அந்த ஆவிக்கு உடனே குரலும் வந்துவிடுமா என்று தெரியாமல் கிணற்றுக்குள் பார்த்தபோது ராஜு கிணற்றின் எல்லா எல்லைகளையும் ஏதோ சர்வே டிபார்ட்மெண்ட்காரன் போல அளவெடுத்துக்கொண்டிருந்தான். ” ” நீயும் குதிடா ! நான் உனக்கு நீச்சல் சொல்லித்தாறேன் ” என்றவனை மன்றாடி, ” தயவுசெஞ்சு மேலே வந்துடுடா ! ரெண்டு பேர் செத்தாலும் ஒரு நாள்தான் லீவு விடுவாண்டா அந்த ஹெட்மாஸ்ட்டர் ” என்று கெஞ்சி அவனை மேலே வரவழைக்க நான் படாதபாடு படவேண்டியிருந்தது.
இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமாய் செய்வான் ராஜு. மற்ற எல்லா பாடங்களிலும் சுமார் என்றாலும் கணக்கில் அவனுக்கு அதிக ஆர்வம். ரொம்ப எக்ஸ்பெரிமெண்ட் எல்லாம் செய்வான். பத்தாம் வகுப்பில் அல்ஜீப்ராவில் ரொம்ப கஷ்டமான ” ரைடர் ” உள்ள தியரத்தைதான் பரீட்சையில் எடுத்துக்கொள்வான். பழைய மிலிடரி ஆளான கணக்கு வாத்தியார் லோகையன் அவனை மிகவும் பாராட்டி, ” வெரி குட்றா! இப்படித்தான் இருக்கணும்! யாரும் தொடாத ஏரியாவை இவன் தொட்ராம் பாரு! நீ ஒரு அட்வெண்ட்சரிஸ்ட் டா!” என்று பாராட்டுவதோடு நிற்காமல் அவன் சரியாகச் சால்வ் செய்யாமல் போயிருந்த ரைடருக்கு முழு மதிப்பெண்களும் கொடுத்திருப்பார். இந்த மாதிரிப் பாராட்டுக்கள் அவனை ரொம்ப உற்சாகப்படுத்த அதிக அளவில் தாறுமாறான வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டான் ராஜு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடும் ஊரின் மத்தியில் இருந்த சந்தையில் ஒருமுறை வேப்ப மர நிழலில் உட்கார்ந்து ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தவரின் லென்ஸ் கண்ணாடியை அவருக்குத் தெரியாமல் எடுத்து வந்து, சவுக்குத் தோப்பில் நாங்கள் சுருக்குக் கம்பி வைத்துப் பிடிக்கும் ஓணாண்களை ப்ளேட் வைத்து அறுத்து, திருடிக் கொண்டுவந்த அந்த லென்ஸை வைத்து ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்று என்னையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு எனக்குக் கொஞ்ச நாள் சாப்பாடு செல்லாமல் அடித்துவிட்டான்.
இவ்வளவு செய்தும் நான் அவனை விட்டுப் போகாமல் அவன் கூடவே ஏன் இருந்தேன் என்பது இப்போதுகூடப் புரியாமல்தான் இருக்கிறது. லோகையன் சார் சொன்னதுமாதிரி அவன் ஒரு அட்வெண்ட்சரிஸ்ட் என்றாலும்கூட எனக்கு அவனோடு என்ன வேலை? நான் என்ன அசிஸ்டண்ட் அட்வெண்ட்சரிஸ்ட்டா? என்பாட்டுக்கு சால்வ் பண்னக்கூடிய ரைடரையும் தியரத்தையும் போட்டுக்கொண்டு அம்மா கொடுக்கும் மோர்சாதத்தை ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு ஒரு பத்து ரேங்கிற்குள் வந்துவிட முயற்சிக்காமல், இந்த மாதிரி அரைக்கிறுக்கு – இல்லையென்றால் ஷம்சுதீன் போன்ற ரவுடிகள் என்று ஏன் நட்பு பாராட்டிகொண்டிருக்க வேண்டும்? என் ஜீனில் எங்கு கோளாறு? என் வீட்டில் யாரும் இப்படி இல்லையே ? இதைப் பற்றியெல்லாம் கேட்பதென்றாலும் ராஜுவிடம்தான் கேட்கவேண்டும்.
எப்படியோ ஒருவழியாய் எஸ்.எஸ்.எல்.சி யில் கரையேறிவிட, காலேஜிலும் நான் ராஜுவிடமே விரும்பி மாட்டிக்கொண்டேன். இரண்டு பேரும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலேயே பி.யூ.சியை முடித்து பின் பட்டப் படிப்பையும் தொடர்ந்தோம். கல்லூரிக் காலங்களில் அவன் போல பேண்டுக்குள்ளேயே பத்தடி நடக்கும் அளவிற்கு பெல்பாட்டமெல்லாம் போட்டுக்கொள்ள எனக்கு பெர்மிஷன் கிடையாது. என் மூத்த அண்ணனின் வம்சாவளிச் சொத்தான இரண்டு பேண்ட்டுகள் எனக்கு மேலிருந்த இரண்டு அண்ணன்களின் கால்வழி தாண்டி எனக்கு வரும்போது கருப்பு கலர் நரைத்து லேசான வெள்ளை நிறத்திற்கு வந்திருந்தது. சட்டைகளும் பல மாற்றங்களுடன் ( முழுக்கை சட்டை அரைக்கை ஆவது உள்பட ) எனக்கு வரும்போது அதுவே ஒரு ட்ரெண்டாகக்கூட நேர்ந்திருக்கிறது. இந்த நாகரிக ஏற்றத்தாழ்வுகளெல்லாம் நாங்கள் ஒன்றாகச் சுற்றுவதை ஒன்றும் செய்ய முடியவில்லை.
கல்லூரியின் இரண்டாம் ஆண்டு முடியும் வரை என்னுடன் சாதாரண அட்வெண்ட்சரிஸ்ட்டாக அலைந்துகொண்டிருந்த ராஜு, திடீரென்று மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் எல்லோரையும் இளமையில் தாக்கும் கொடிய நோயான காதலால் பீடிக்கப் பட்டான். அது ஒன்றும் சாதாரணக் காதலாகவும் இல்லை. அந்தக் காதலில்கூட ஒரு துணிகரம் இருக்கத்தான் செய்தது. அவன் காதலித்த பெண் ஹோலி க்ராஸ் கல்லூரியில் எம்.ஏ இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்ததுகூட ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அந்தப் பெண் அடிக்கடி மேற்கோள் காட்டும் ஷேக்ஸ்பியரேகூடத் தன்னைவிடப் பெரியவளைத்தான் கல்யாணம் செய்துகொண்டதாய் சமாதானம் செய்துகொள்ளலாம் என்று நம்பிக்கையாய் இருந்தான். ஆனால், அந்தப் பெண்ணின் அப்பா, பொன்மலை சரகத்திற்கு மாற்றலில் வந்திருந்த போலிஸ் இன்ஸ்பெக்டர் என்பதுதான் எனக்குப் பயத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது.
அந்தப் பெண்ணின் தம்பி எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருந்ததுதான் ஒரே ஆறுதல். அவனும் பெரியவனாயிருந்தால் நாங்கள் எத்தனை பேரைச் சமாளிக்க முடியும்? அவள் அப்பாவோ தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி பெரிய மீசையெல்லாம் வைத்துக்கொள்ளாவிடினும் ஆறு அடிக்கு மேல் ஆஜானுபாகுவாய் இருந்தார். ரொம்ப ஸ்டிரிக்ட் என்று அங்கிருந்த கான்ஸ்டபிள்களெல்லாம் சொல்லக்கேள்வி. யாராயிருந்தாலும், தப்பு என்று தெரிந்துவிட்டால், லாக் அப்பில் தள்ளிவிட்டுப் பிறதான் விசாரணையாம். தன் மனைவியே தவறு செய்தால்கூட, விசாரிப்பதற்கு முன் பூட்டிவைக்க தனியாக வீட்டில் ஒரு லாக் அப் ரூமை செட் அப் செய்துவைத்திருப்பதாக வேறு சொல்லிக்கொண்டார்கள். இது ஒன்றும் சரியாக இருக்கும் என்று எனக்குப் படவில்லை. ஒழுங்காக மாரியம்மன் கோவில் ஸ்டாப்பில் பஸ் ஏறிக்கொண்டிருந்தவன் , என்னை லொங்கு லொங்கென்று இரண்டு கிலோ மீட்டர் நடக்க வைத்து பார்க் ஸ்டாப் வரைக்கும் அலைக்கழிக்கும்போதே , ” அப்பா ராஜு! என்னை விட்டுடுப்பா! போலிஸ் அடிக்கெல்லாம் என் ஒடம்பு தாங்காது ” என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் அவன் லாஜிக்கோடு , ” நாந்தானடா லவ் பண்றேன். நீ ஏண்டா பயப்படணும்?” என்று கேட்ட கேள்விக்குள் ஒளிந்துகொண்டு அவன் பின்னாலேயே அலைந்து கொண்டிருந்தேன். இருந்தாலும் பஸ் ஸ்டாண்டில் அவனுடன் நிற்கும்போதெல்லாம் எங்களைச் சுற்றி நிற்பவர்களெல்லாம் மஃப்டியில் நின்று எங்களை வேவு பார்க்கும் போலிஸ்காரர்களாகவே எனக்குத் தோன்றியது. இதை அவனிடம் சொன்னபோது , ” போடா லூஸு! போலிஸ்னா என்னோட ஆளுக்குத் தெரியாதாடா ?” என்றான். அவனுக்கு ஏற்றவாறு, பஸ் ஸ்டாண்ட் டீக்கடையிலும் ‘ என்னை முதன் முதலாகப் பார்த்தபோது என்ன்ன நினைத்தாய்? ‘ என்று விவித பாரதியில் டி.எம்.எஸ் சற்றே அழுத்திக்கேட்க கேட்க, ‘ நா ஆ ஆ ஆன் உன்னை நினைத்தேன் ‘ என்று சுசிலா கொஞ்சம் கூட யோசிக்காமல் நீட்டி பதில் சொல்லிக்கொண்டிருந்தார். காதலர்கள் இருவரும் மொத்த பஸ் ஸ்டாண்டையே மறந்து முறுவலித்துக் கொண்டிருந்தார்கள்.
நாளாக ஆக அவர்கள் காதல் முத்திக்கொண்டிருந்தது. ராஜுவின் காதலோடு அதன் உப அவஸ்தையாக அவன் அடிக்கடி எழுதிக்கொடுக்கும் காதல் கவிதைகளையும் நான் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. நிறைய எழுத்துப் பிழைகளோடு ( குறிப்பாக ஒற்றுப் பிழைகள் அதிகம் ) இவன் கொடுத்த கவிதைகளை அவள் ஆங்கிலத்தில் பெயர்த்துக்கொடுக்க அவர்களின் காதல் ஒருவிதமான மகோன்னதத்தை நோக்கிப் போய்க்கொண்டிருப்பாதாக அவ்வப்போது என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான். எப்படி இவர்கள் இருவரும் இவ்வளவு தைரியமாகத் தங்களை அடுத்தவர்கள் பார்த்து என்ன நினைத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்று இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. எல்லோரிடமும் கறாராக இருக்கும் அந்த இன்ஸ்பெக்டர் ஒரே பெண் என்பதால் மகளுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்கிற தைரியம்தான் என்று அவன் பேச்சிலிருந்து புரிந்தது. காதலிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே ராஜு என்னிடம் இருந்து விலக ஆரம்பித்துவிட்டான். என்னைக் கூடவே இருக்கவேண்டுமென்று அதிகமாய்த் தொந்தரவு செய்வதில்லை. மாதக் கணக்கில் ஷேவ் செய்யாமல் பாரதிராஜா படத்தில் வரும் சந்திரசேகர் மாதிரி தாடியோடு அலைந்துகொண்டிருந்தவன் இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு முறை மழித்துக்கொள்பவன் போல் பளபளப்பாயிருந்தான். ராத்திரியில்கூட கூலிங்க்ளாஸ் போட்டுக்கொண்டு அலைந்தான் ( அவள் வாங்கிக்கொடுத்ததாம்).
சரி இவன் நம்மைவிட்டால் போதும் என்றிருந்த ஒரு சமயத்தில்தான் விதி என்னை விளையாட்டுக்கு அழைத்தது. இந்தப் பயலின் பஸ் ஸ்டாண்ட், போக்குவரத்துக் கழகம் என்றிருந்த காதல் அடுத்தடுத்த கட்டங்களை காலக்கிரமத்தில் எட்ட, ஒன்றிரண்டு சினிமா விஜயங்கள், மலைக்கோட்டை தரிசனம், முக்கொம்பு கல்லணை போன்று கலந்துகட்டி செய்த காதல் சுற்றுலாக்களுக்குப் பிறகு எப்போது கல்யாணம் என்ற பேச்சு வந்தபோதுதான், இன்ஸ்பெக்டர் சுதாரித்துக்கொண்டதாகத் தெரிந்தது. அந்த வருட தீபாவளிக்குப் போனால் போகிறதென்று சொந்தமாக என் பெயருக்கே புதிதாக பேண்ட் சட்டை வாங்கிக்கொள்ள எங்கள் வீட்டுப் பார்லிமெண்ட் வெடிகளுக்கான பட்ஜெட்டைக் குறைத்து ஜவுளி பட்ஜெட்டுக்கு அதிக ஒதுக்கீடு செய்திருந்த சந்தோஷத்தில் நான் டவுனில் புதிதாக முளைத்திருந்த கடைகளுக்குள் ஏறி இறங்கிக்கொண்டிருந்தேன். சினிமா சங்கீதங்கள் எனக்குள்ளும் ஒரு மயக்கத்தை ஏற்படுத்த டிஎம் எஸ்ஸோடும் எஸ்பிபியோடும் நானும் சேர்ந்து பாடிக்கொண்டிருந்தேன். துணிமணிகளை வாங்கிய பின் யாரிடம் தைக்கக் கொடுக்கலாம் என்று என் மனதில் நான் யோசித்துக்கொண்டிருந்ததை எப்படியோ கண்டுபிடித்த என் அம்மா , ” யார்கிட்ட வேணும்னாலும் தைக்கக்குடுத்துக்கோ ; ஆனா, தெருவையே பெருக்கிற மாதிரி கால் பக்கம் தொள தொளன்னு தெச்சுண்டேன்னா, வீட்டுப்பக்கம் வந்துடாதே ” என்று எச்சரித்த குரல் என் ரத்த நாளங்களில் எதிரொலிக்க , காசு கொஞ்சம் அதிகம் போனாலும் பரவாயில்லை என்று லோக்கல் தையல்காரர்கலை நிராகரித்து டவுனில் பிரபலமான எலிகண்ட் டைலர்ஸிடம் தைக்கக் கொடுத்து எப்படி வருமோ என்று நெர்வசாகக் காத்துக்கொண்டிருந்த நேரம் அது.
தீபாவளிக்கு முதல் நாள்தான் எனக்குத் தைத்ததைத் தர முகூர்த்தம் குறித்திருந்தான். கல்கண்டார்கோட்டை, பொன்மலைப்பட்டி போன்ற எங்கள் ஊரின் வர்த்தக மையங்களில் தீபாவளி நிலவரம் எப்படி என்று பார்த்துவிட்டு மதியம் வாக்கில் டவுனுக்குப் போய் ட்ரெஸ்களை வாங்கி வந்துவிடலாம் என்று ப்ளான் செய்திருந்தேன். ராஜுவையும் பார்த்து நாளாகியிருந்ததால், ஒரு நடை அவன் வீட்டிற்கும் போய் அவன் காதல் நிலவரத்தையும் தெரிந்துகொண்டுவிட எண்ணி நடந்துகொண்டிருந்தபோது, லௌட்ஸ்பீக்கர்களில் எதெதையோ வாங்கச் சொல்லி அலறிக்கொண்டிருந்தார்கள். வான் கோழி பிரியாணி அதில் பிரதானமாயிருந்தது. வான் கோழிக்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. நரகாசுரன் கதையில் அப்படி எதுவும் வருவதாக இதுவரை எந்தப் புராணத்திலும் யாரும் சொல்லியிருக்கவில்லை. இப்படி நினைத்துக்கொண்டே நடந்துகொண்டிருக்கையில், எவனோ ஒருவன் ஒரு லக்ஷ்மி வெடியின் திரியில் நெருப்பு வைத்துவிட்டு வெடிக்கக் காத்திருந்தது தெரியாமல் அதன் மேல் நான் கால் வைக்கவிருந்த சமயத்தில் சுற்றியிருந்தவர்களெல்லாம் அலற, நான் பயந்து இடதுபக்கம் உயிருக்குப் பயந்து குதித்துப்போனபோது ஒரு கட்டுமஸ்தான ஆள் என்னை வான் கோழியைப் பிடிப்பதுபோல் அமுக்கிப் பிடித்தான். ” தம்பி ! எங்கேயோ ஷோக்காக் கிளம்பிட்டமாதிரி இருக்கு! எங்கடா ஒன் டியரெஸ்ட் ஃப்ரெண்ட் “? என்று அன்பும் மிரட்டலும் சமவிகிதத்தில் கலந்து செல்லமாகக் கழுத்தில் கைபோட்டபோது பிடியில் போலிஸை உணர்ந்தேன். பின் , என் வசத்தில் நான் இல்லை. அந்தக் கட்டுமஸ்தான போலிஸ் என்னை நேராக ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கொண்டுபோவான் என எண்ணியிருந்தது தவறாக நான் அந்த இன்ஸ்பெக்டர் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்பட்டேன்.
வீட்டின் ஏதோ ஒரு மூலையிலிருந்து விசும்பல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தப் பெண்தான் எங்கேயோ இருந்து அழுதுகொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவள் வெளியில் வந்தாலாவது, ” அம்மா தாயே ! தயவுசெய்து உங்கப்பனிடம் சொல்லிவிடு! எனக்கும் உங்கள் காதலுக்கும் என்ன சம்பந்தம் ? நான் உன்னிடம் ஒரு வார்த்தையாவது பேசி இருப்பேனா? அவ்வளவு ஏன், நான் உன்னை ஏறெடுத்தாவது பார்த்திருப்பேனா? சொல் ! உன் உயிர்க்காதலனின் கவிதைத் தமிழை அவ்வப்போது கொஞ்சம் ரிப்பேர் செய்துகொடுத்ததைத் தவிர நான் வேறு ஒன்றும் செய்ததில்லையே ! என்னை விட்டுவிடச் சொல் ” என்று ராமாயணக் காலத்துத் தமிழில் கதறி விடுதலை வாங்க முயற்சி செய்யலாம். ஆனால், அவள் விசும்பல் மாத்திரம் தானே வருகிறது. அவளைக்காணோமே ! என்று கண்களைச் சுழற்றிப் பார்த்தபோது, ” என்ன , எப்படித் தப்பிக்கலாம்னு பாக்கறயா ? சுட்டுடுவேன் ஜாக்ரதை ” என்று அவனை விடப் பெரியதான ஒரு துப்பாக்கியைக் காண்பித்தான் வாசலில் நின்ற வேறு ஒரு போலிஸ்காரன். எனக்கு வாயெல்லாம் ஒட்டிப்போய் நாக்கு உலர்ந்திருந்தது. கண்கள் சுழற்றி அடிக்க நான் அப்படியே அந்த மர நாற்காலியில் சாய்ந்துவிட்டேன். பின் யாரோ என் முகத்தில் தண்ணீரை அடிக்கக் கண் திறந்த போது என் முன் அந்த இன்ஸ்பெக்டர் நின்றுகொண்டிருக்க, பக்கத்தில் என்னைப் பிடித்துக்கொண்டு வந்திருந்த போலீஸ்காரர் , ” நான் அடிக்கக்கிடிக்க ஒண்ணும் செய்யலங்க ஐயா ! சும்மாத்தான் பிடிச்சு கூட்டியாந்தேன். தம்பி ஏன் மயக்கமாச்சுன்னு தெரியலங்க ஐயா” என்று நடுங்கிக்கொண்டிருந்தார். சற்றுத் தள்ளி ராஜுவும் அந்தப் பெண்ணும் நின்றுகொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணையும் ராஜுவையும் அப்போதுதான் அந்த இன்ஸ்பெக்டர் எங்கிருந்தோ அழைத்து வந்திருந்தார் போலிருந்தது.
இன்ஸ்பெக்டர் மிகவும் கூலாகத்தான் இருந்தார். எனக்கும் அங்கிருந்த மற்றவர்களுக்கும் காஃபி வரவழைத்துக் கொடுத்தபின், ராஜுவைப் பார்த்து, ” ஸோ! தலை தீபாவளி வரைக்கும் போயாச்சு ! ஒனக்கு அசாத்திய தைரியந்தான், தம்பி! ஆனா, தைரியம் இந்த விஷயத்துல இந்த வயசுக்கு இருக்கக்கூடாது. என் பொண்ணே ஒன்னைக் கூப்பிட்டிருந்தாக்கூட நீ இவ்வளவு தூரம் கல்யாணம் வரைக்கும் போயிருக்கக் கூடாது. நீயும் படிச்சு முடிக்கல ! ஒன்னய விட வயசுல பெரியவளான இவளுக்கும் இன்னும் படிப்பு இருக்கு ! ஒங்க வீட்டிலயும் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க . எந்தத் தைரியத்துல இப்படிச் செய்ய ரெடியானீங்க, ம்? ” என்று கேட்டுக்கொண்டிருந்தபோது, அடுத்த ரூமிலிருந்து வெளிவந்த ஒரு மத்திம வயதினள், ” அவனோட என்ன பேச்சுவார்த்த நடத்திக்கிட்டு இருக்கீங்க? நாலு தட்டுத் தட்டி உள்ள போடுவீங்களா? ” என்று ஆவேசமாகக் கேட்டாள். அவள்தான் இவ்வளவு நேரம் விசும்பிக்கொண்டிருந்தவளாய் இருக்கவேண்டும். அந்தப் பெண்மணியைப் பார்த்து இன்ஸ்பெக்டர், ” உஷ்! சத்தம் போடாதே ! தப்பு நம்ப பேர்லேயும் இருக்கு! பொண்ணுக்கு சுதந்திரம் கொடுத்தமே தவிர அவ அத சரியா உபயோகப்படுத்தறாளான்னு பாக்க உட்டுட்டோம். எவ்வளவோ பேர் நம்மகிட்ட இவங்களப் பத்தி நம்மகிட்ட சொன்னப்போ, நாம ஏன் அவளக் கூப்பிட்டு ஒரு வார்த்த கூடக் கேக்கல? நம்ம தப்புதானே?” என்றபோது அந்தப் பெண்மணி பேசாது நின்றாள்.
அதுவரை சும்மா நின்றுகொண்டிருந்த ராஜு, இன்ஸ்பெக்டரைப் பார்த்து, ” என்னை மன்னிச்சுடுங்க சார். நான் பண்ணினது தப்புதான் ” என்றான். பின், இன்ஸ்பெக்டர் ராஜுவிடம், ” யூ ஆர் வெரி யங்க். யூ ஹாவ் லாட் ஆஃப் லைஃப் அஹெட். நல்லா படி. வாழ்க்கையில நல்லா முன்னேறு. அப்புறம் நீ நினைக்கிறதெல்லாம் தானா நடக்கும். கல்யாணத்துக்கு இப்ப வயசும் இல்ல , அதுக்கு இப்ப அவசரமும் இல்ல, ஓகே? ” என்றதற்கு அவன் தலை அசைத்தான். பின் இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து, ” நீ ஐயர் வீட்டுப் பையன்தானே ? நீயாவது இவனுக்கு இதெல்லாம் எடுத்துச் சொல்ல வேணாமா? யு ஹாவ் ஆல்சோ ஃபெயில்ட் இன் யுவர் ட்யூட்டி ஆஸ் அ ஃப்ரெண்ட் ” என்றார். நான் பக்கத்தில் நின்ற போலிஸ்காரரைப் பார்த்துக்கொண்டே ” எஸ் சார், சாரி சார் ” என்றேன். பின் அவர் எங்களை வீட்டுக்குப் போக அனுமதித்தார். அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்க்காமல் ராஜு என்னுடன் நடந்து அந்தத் தெருக்கோடி வரை ஒன்றும் பேசாமலேயே வந்துகொண்டிருந்தவன், பஸ் ஸ்டாண்ட் வந்ததும் , . நான் டவுனுக்கு எலிகண்ட் டைலர்ஸிடம் தைக்கக்கொடுத்தவற்றை வாங்கக் கிளம்பவேண்டும் என்றேன். “சரி , பாப்போம்டா ” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். அதன்பின் அவனை நான் பார்க்கவே முடியவில்லை.
— ரமணி
- ஆப்கானிஸ்தான் இந்துக்களும் சீக்கியர்களும் தங்களது கிராமத்தை மீட்டெடுக்க விரும்புகின்றனர்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 44) கவலைச் சின்னம்
- பூனை மகாத்மியம்
- விடுமுறை நாள்
- கண்காணிப்பு
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.4.. லா.ச.ராமாமிருதம் – கங்கா
- பழமொழிகளில் ‘காடு’
- வீடு
- நைலான் கயிறு…!…?
- நம்பிக்கை ஒளி! (6)
- க.நா.சு.வும் நானும்
- அவம்
- என்னை மன்னித்து விடு குவேனி
- சவுதி அரேபியாவின் அடக்குமுறையினால், ஷியா புரட்சி உருவாகிறது.
- அலையின் திசையில் மாற்றம் தேடி..-வாஸந்தியின் “ மீட்சி” சிறுகதைத்தொகுப்பை முன் வைத்து….
- நூறு மசலாவும் நூறாயிரம் வாசல்களும்
- தலைதப்பிய தீபாவளி
- வீதி
- இது தான் காலேஜா – நிஜங்கள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (நான்காம் அங்கம்) அங்கம் -4 பாகம் -2
- தீபாவளியின் முகம்
- அகாலம்
- நுகராத வாசனை…………
- குன்றக்குடியில் கார்த்திகை முதல். சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்
- தாகூரின் கீதப் பாமாலை – 39 என் காலம் முடியும் தருணம்
- களரி தொல்கலைகள் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
- குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்
- மணலும் நுரையும்! (3)
- நானும் அவனும்
- தீபாவளிப் பரிசு!
- கடிதம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – செவ்வாய்க் கோள் இழந்த சூழ்வெளிப் புதிரை விடுவிக்கப் போகும் நாசாவின் தளவுளவி
- அக்னிப்பிரவேசம் -9