அடங்கி விடுதல்

1
0 minutes, 7 seconds Read
This entry is part 21 of 31 in the series 2 டிசம்பர் 2012

 

சில நாட்கள் நமக்கானதே அல்ல என்போதுபோல் ஆகிவிடும். ஒன்றும் சரியாக நடக்காது. எல்லா வேலைகளும் நம் தலையிலேயே விழும்.  நம்மை எல்லோரும் அன்று  நாம் ஒரு தவறும் செய்யாதிருந்தாலும்  திட்டித் தீர்ப்பார்கள்.

 

அன்று மாட்டுக்கு புல் வாங்கி வரவேண்டியது என்னுடைய முறையே இல்லை. என் தம்பிதான் போகவேண்டும். ஆனால் அவனோ ,  காலையில் எழுந்ததிலிருந்து ரொம்பத்தான் படம் காட்டிக்கொண்டிருந்தான். பல்துலக்கி வாய் கழுவும்போது வேண்டுமென்றே விரல்களைத்  தொண்டைக்குள்விட்டு அடிபட்ட நாய் அழுவதுபோல ஒரு சத்தத்தை உண்டுபண்ணி, அம்மா கொடுத்த காஃபியை மிக மெதுவாக தொண்டைக்குழிக்குள் ” கலக் கலக் ”  என்று மழைத்தண்ணீர் சறுக்கிக் கொண்டு ஓடுவதுபோல சப்தம் கொடுத்து வயிற்றுக்குள் இறக்கிக் கொண்டிருந்தான். பின் டாய்லெட் போய் வெளிவரும்போது அடிமைப் பெண் எம்ஜியார் மாதிரி குனிந்துகொண்டே வந்து ஹாலில் தடாரென்று விழுந்து சண்டித்தனம் பண்ணும் வண்டிமாடு மாதிரி படுத்துக்கொண்டுவிட்டான்.

 

” ஐயைய்ய்ய்….யோ ! கொழந்தைக்கு என்னடா ஆச்சு ? ” என்று அம்மாவும் அவனது நாடகத்தை அறியாது பதறிப்போய் அவன் தலையை மடியில் எடுத்து வைத்துக்கொண்டு புலம்ப ஆரம்பித்துவிட்டாள். அம்மா எப்பவும் இப்படித்தான். யாருக்காவது உடம்பு கிடம்பு சரியில்லாது படுத்திருந்தால்,  உடனே  படுத்திருப்பவர்களின் தலையை மடியில் எடுத்துவைத்துக்கொண்டு தலையையும் முகத்தையும் தடவிக்கொடுத்துக்கொண்டே, ” ஒடம்பு அனலா கொதிக்கறதே என்றோ  இப்படி துவட்டி எடுக்கறதே என்றோ படுத்திருப்பவர்களைச் செல்லம் கொஞ்சுவதுபோல  பேச ஆரம்பித்துவிடுவாள்.  இதற்காகத்தான் காத்திருந்தவன் போல என் தம்பியும் மெல்ல கரகரத்த குரலில், ” வயித்த ரொம்ப வலிக்குதும்மா ” என்று படு நிதானமாக கேரளாவில் கிடைக்கும் புழுங்கரிசி சாதம்போல ஒவ்வொரு எழுத்தையும் தனித்தனியாய் ஒட்டாமல் சொன்னபோது அம்மா , ” டேய் ரமணி ! அந்த வெளக்கெண்ணை பாட்டில எடுடா ” என்றாள். எங்கே விளக்கெண்ணையைக் குடித்துவிடச் சொல்லிவிடுவாளோ எனப்பயந்து ஒருக்களித்துப் படுப்பதுபோல் திரும்பி லேசாகக் கண்ணைத் திறந்துபார்த்து , அப்படி ஒன்றும் இல்லாது வயிற்றில் மாத்திரம் விளக்கெண்ணையைத் தடவிவிடப்  போகிறாள் எனத் தெரிந்துகொண்டு மீண்டும் நேராகப் படுத்துக்கொண்டுவிட்டான். ” ஒடம்பு சூடோ என்னவோ ? வாரா வாரம் சனிக்கிழமை எண்ணையத் தேச்சுண்டு குளிங்கோடான்னா  ஒரு கடங்காரனும் கேட்க மாட்டேங்கறானுங்க ” என்று பக்கத்திலிருந்த என்னைப் பார்த்துக்கொண்டே சொல்லிவிட்டு என் தம்பி வயிற்றில் எண்ணையைத் தேய்த்துவிட்டு , ” சித்த படுத்துக்கோடா ” என்று செல்லமாக ஆணையிட்டுவிட்டு, என்னைப் பார்த்து ” என்னடா மசமசன்னு நிண்ணுண்டு ? போ! என்ன வேலை உண்டோ அதப் பாக்க வேண்டியதுதானே ? ” என்று என்னை சூசகமாகப் புல் வாங்கிவர அதட்டினாள்.

 

பொன்மலை ரயில்வே காலனியின் குறுக்காக எவ்வளவு சந்து பொந்துகளில் புகுந்து சென்றாலும் கிழக்குக் கோடியில் இருக்கும் புல் விற்கும் இடமான பம்பிங்க் ஸ்டேஷன் போக இருபது நிமிடம் ஆகிவிடும். அங்குதான் யானைப் புல் விற்பார்கள். மாடு தின்பதற்கு ஏன் யானைப் புல் என்று தெரியவில்லை. இந்தப் புல்லை மாடுகளுக்குக் கொடுத்தால், பால்  ” திக்காக ” இருக்கும் என்று அம்மா அழுத்திச் சொல்வதற்காகவே அதை வாங்கிவரலாம். ஆனால் இன்று சோதனையாக பில் கொடுப்பவன் எட்டு மணிவரை வராதிருக்க, சரி இன்று வரமாட்டான் போய்விடலாம் என எல்லோரும் கிளம்பி அந்தப் புல்காட்டைத் தாண்டி வந்துகொண்டிருந்தபோது அந்த ஆள் அவசர அவசரமாக பங்க்ச்சரான சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தான். பின் புல்லை வாங்கிக்கொண்டு உடம்பெல்லாம் அதன் கூரிய ஒரம் கிழித்த எரிச்சலோடு வீட்டுக்கு வந்தபோது  ஹாலில் படுத்துக்கொண்டிருந்த தம்பி எங்கே காணோம் என்று  யாரையும் கேட்காமல் கண்களாலேயே தேடினேன். அம்மா நான் என்ன தேடுகிறேன் என்று புரிந்துகொண்டவளாவாக , ” இன்னிக்கி ஏதோ முக்கியமான டெஸ்ட் இருக்குன்னு வலியோட போயிருக்கான் பாவம் ” என்றாள்.

 

அம்மா உண்மையிலேயே அவனை நம்பும் அளவுக்கு அப்பாவியா அல்லது என்னைப் பிடிக்காதுதான் இப்படிச் சொல்கிறாளா என்று எனக்குப் புரியவில்லை. நான் குளித்துவிட்டு சாப்பிட வந்தபோது  அம்மா என் தட்டில் போட்டிருந்த பழைய சாதத்தைப் பார்த்தவுடன் இதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் கொப்பளித்து  , ” எனக்கு சோறும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் ” என்று கொஞ்சம் மட்டுமே மழை பெய்து ஏமாற்றிவிட்டுப்போன கையாலாகாத புயல் மாதிரி என் கோபத்தின் அளவிற்கு சம்பந்தமே இல்லாமல் கொஞ்சூண்டு எதையோ சொல்லிவிட்டு அவசரமாகக் காலேஜுக்குக் கிளம்பினேன்.  ”  மதியானத்திற்காவது டிஃபன் பாக்ஸ் வேண்டுமா இல்லை அதுவும் வேண்டாமா ? ” என்று நக்கலாகக் கேட்டதில் ” எனக்கு ஒரு எழவும் வேண்டாம் ” என்று கிளம்பி  நான் வாசலைத் தாண்டும்போது அம்மா, ” ராத்திரிக்கு சாப்பிட இங்கதான் வரணும் ஞாபகம் இருக்கட்டும். ” என்று சொன்னது இன்னும் என் கோபத்தை அதிகமாக்கியதில் நான் தேவையில்லாமல் வேகமாய் நடந்தேன்.  அப்படி நடந்ததில் என் செருப்பின் வார்தான் அறுந்தது. சட்டையில் பட்டன் அறுந்திருந்ததைச் சரிக்கட்ட உதவிக்கொண்டிருந்த சேஃப்டி பின்னை ஜெ அரசின் மந்திரி மாற்றம் போல உடனடியாக இட மாற்றம் செய்துவிட்டேன்.

 

நான் பஸ் ஸ்டாண்டை அடைந்தபோது வழக்கத்திற்கு மாறாக அங்குக் கூட்டமே இல்லை. ரயில்வே சினிமாவில் ” இன்றே இப்படம் கடைசி ” என்று என்று அச்சடிக்கப்பட்ட சின்ன பிட் நோட்டீசை ஒரு ஆள் ஏற்கனவே ஒட்டியிருந்த பட போஸ்ட்டரில் கால்களையும் கைகளையும்  நடனத்திற்குச் சம்பந்தமேயில்லாத வகையில் பரப்பிக்கொண்டிருந்த கவர்ச்சி நடிகையின் மேல் ஒட்டிவிட்டு அடுத்த போஸ்ட்டர் நோக்கி பசைக் கைகளோடு விரைந்தான். ஒரு நாய் இயற்கை உபாதைக்காக நாயர் கடையின் கூரையைத் தாங்கிக்கொண்டிருந்த இரும்புப் பட்டையைத் தேர்ந்தெடுத்து ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்ததைக் கடைசி வினாடியில் பார்த்த நாயர், ” சே! ஓடு ” என்று கையிலிருந்த டீ க்ளாசைக் கழுவிக்கொண்டிருந்த வென்னீரை அந்த நாயை விரட்ட  அதன் மீது வீசிஎறிந்தார். வென்னீர் வருவதற்கு முன் நாயரின் பல்லில்லாத வாயினின்று புறப்பட்ட வார்த்தைகளே நாயை உஷாராக்கிவிட அது அடுத்த இலக்கை நோக்கி அலட்டிக்கொள்ளாமல் நகர்ந்தது. ஆனால் நாயர் வீசியெறிந்த வென்னீர் சினிமா போஸ்ட்டரைப் பார்த்துக்கொண்டு நின்ற என் பேண்டைதான் நனைத்தது. ” ஐயைய்யோ!  ஒம் மேலப் பட்டுடுச்சா ஐயரே ! கொஞ்சம் தள்ளி நிக்கக்கூடாது ?  அப்டி வெய்யில்ல தள்ளி நின்னுக்கோ . சீக்கிரம் காஞ்சுடும் ” என்று மலிதான ஒரு தீர்வைச் சொல்லிவிட்டு  ஓடிப்போன நாயைப் போலவே கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளமல் அடுத்த டீயைப் போட நகர்ந்துவிட்டார். வென்னீரைக் கொட்டியதற்குப் பரிகாரமாக , ” ஒரு டீ சாப்பிடறீயா ”  என்று கேட்டிருந்தாலாவது பசியில் இரைய ஆரம்பித்திருந்த வயிறு கொஞ்சம் சமாதானமாக ஆயிருக்கும்.

 

அப்போது புதிதாக வந்த ஒருவர் நாயரைப் பார்த்து , ” பதினேழாம் நம்பர் பஸ் எப்ப வரும் ? ” என்று கேட்டார். அந்த பஸ்ஸிற்காகத்தான் நானும் காத்துக்கொண்டிருக்கிறேன். நாயர் அவரின் கேள்விக்குப் பதில் சொல்லாதிருக்க வந்தவர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, ” அது போய் பத்து நிமிட் ஆச்சு ” என்று சாவகாசமாய் நாயர் சொன்னார். அடப்பாவி! பத்து நிமிஷம் ஆச்சா ? இப்போ எப்படி நான் காலேஜுக்குப் போவது?  பதினேழாம் நம்பர் பஸ் மட்டும்தான் காலேஜ் போவதற்கான நேர் பஸ் .  அதில் போவதற்குதான் பாஸ் வாங்கியிருக்கிறேன். அதை விட்டால்,  நான் இரண்டு பஸ் மாறிப் போகவேண்டும்.  காசு வேறு ஜாஸ்தி.  அம்மா கணக்காகத்தான் காசு கொடுத்திருக்கிறாள்.  நான் க்ளாசைக் கட் செய்துவிட்டு சினிமாவிற்கெல்லாம் போகமாட்டேன் என்று தெரியும்.  இருந்தாலும் ,  கையில் கூடக் காசு இருந்தால் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு அதிகமென்று கொடுக்க மாட்டாள்.  கொடுக்க நினைத்தாலும் முடியாது என்பது வேறு விஷயம்.  பசியின் தாக்கம்  வேறு கொஞ்சம் அதிகமாகி இருந்தது.  இப்போது என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே வேறு ஒரு பஸ் வந்துவிட்டது.

 

எப்படியோ அடித்துப் பிடித்துக் கல்லூரியின் முதல் கேட்டைத்தாண்டி வந்தாயிற்று.  இல்லாவிட்டால், வாட்ச்மேன் நிறுத்திவிடுவான்.  அட்டெண்டன்ஸ் எடுப்பதற்குள் க்ளாசுக்குப் போய்விட வேண்டும். இல்லையென்றால் வெளியே நிற்க வேண்டியதுதான். உள்ளே போகவேண்டுமென்றால் பிரின்சிபாலிடம் அனுமதி வாங்கிவர வேண்டும்.  முதல் வகுப்பு  மனோகரன் சாருடையது.  நல்ல மனிதர்.  பாடம் சுமாராக எடுத்தாலும் மாணவர்களை அதிகம் தொந்தரவு செய்யமாட்டார். போன தடவை நாங்களெல்லாம்  செமெஸ்டருக்கு முந்தைய உள் தேர்வை எழுதமாட்டோம் என்று அடம்பிடித்த போது எங்களுக்கெல்லாம் டிஃபன் வாங்கிக்கொடுத்து ,  கேள்விகளையும் முன்னதாகவே சொல்லி எங்களைப் பரீட்சை எழுத வைத்தவர். அதனால் எப்படியும்  வகுப்பிற்குள் போய்விடலாம் என்று நினைத்துக்கொண்டே  க்ளாசினுள் நுழைந்தபோது ,  மனோகரன் சாருக்குப் பக்கத்தில் பிரின்சிபால் நின்றுகொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்ததும் ஏதோ தவறான வகுப்பிற்கு வந்தவனைப்போலத் திரும்ப யத்தனித்தபோது, ”  நில்லு மேன்! எங்க போறே? ” என்றார்.  நான் என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென்று முழித்தேன். ” மீட் மி திஸ் ஈவ்னிங்க் இன் மை ரூம் ” என்று வகுப்பிற்குள் அனுமதித்தார்.  படபடப்பில் உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்ட , பசி இப்போது கிள்ள ஆரம்பித்துவிட்டது .

 

வகுப்பிற்குள் வந்துவிட்டாலும் எந்தப் பாடமும் மனதில் பதியவில்லை. பிரின்சிபல் சென்ற பிறகு மனோகரன் சார் ரொம்பவும் வருத்ததிலிருந்தது அவர் முகத்திலேயே தெரிந்தது.  பக்கத்தில் உட்கார்ந்திருந்த சந்த்ருவிடம் ஒரு பின்னை வாங்கி பட்டன் பிய்ந்து போயிருந்த இடத்தில் குத்திக்கொண்டேன்.  ” ஏண்டா ப்ரின்ஸி நம்ம க்ளாசுக்கு வந்தாரு ? ” என்று மனோகரன் சார் போர்ட் பக்கம் திரும்பிய போது கேட்டேன்.  ” மனோகரன் சார் வரதுக்கு மூணு நிமிஷம் லேட் ஆயிடுச்சி . அதுக்குள்ள பசங்க எல்லாம்  பாட்டும் கூத்துமா சத்தம் போட்டுக்கிட்டிருந்தானுவ . சத்தம்  ஜாஸ்தியா இருந்ததினால இந்தப் பக்கம் போன ப்ரின்ஸி உள்ள நுழஞ்சிட்டாரு ”  என்று மெல்லத்தான் சொன்னான்.  வகுப்பு மிக அமைதியாய் இருந்ததால்,  நாங்கள் கிசுகிசுத்துக்கொண்டிருந்ததை மனோகரன் சார் கவனித்து ” பேசறதாயிருந்தா வெளியில போயிடலாம் ” என்றார். இதுதான் அவர் முதன்முதலில் எங்களிடம் கோபமாகப் பேசியதாக இருக்கும். என்ன செய்வது?  அவர் அப்படிச் சொல்லியதால், சந்த்ரு வேறு என்னிடம் முறைத்துக்கொண்டு என் பக்கமே திரும்பாமலிருந்தான். எப்போதும் டிஃபன் பாக்சில் சாப்பிடச் சுவையாகக் கொண்டுவரும் சந்த்ருவும்  முகத்தைத் திருப்பிக்கொண்டதால் மதிய இடைவேளையின் போது அவனிடமும் டிஃபன் பாக்சைக் கேட்க முடியாது.  பசியின் உக்ரம் நேரமாக ஆக அதிகரித்துக்கொண்டிருந்தது.  கண்னை வேறு சுழற்றிக் கொண்டு வந்தது. மதியம் பேசாமல் க்ளாசைக் கட் பண்ணிவிட்டு  கல்யாணப் பரிசு தங்கவேலு மாதிரி எங்கேயாவது பார்க்கில் போய்ப் படுத்துக்கொண்டுவிட்டு சாயங்காலமாய் வீட்டுக்குப் போய்க்கொள்ளலாம் என்றால், பிரின்சிபால் வேறு  சாய்ந்தரம் ரூமில் பார்க்கச் சொல்லியிருக்கிறாரே ?

 

ஆனால் நல்ல வேளையாக , மத்யானம் வரவேண்டிய லெக்சரர் பூமி நாதன் லீவ் என்ற செய்தி காதில் தேனாகப் பாய்ந்தது.  நேராக பிரின்சிபால் ரூமுக்குப் போய் அவரைப் பார்த்துவிடலாம் என்று போனபோது அவரும் எங்கோ அவசரமாய் யுனிவர்சிட்டிக்குப் போயிருப்பதாகவும்  மறு நாள்தான் பார்க்க முடியும் என்று கேள்விப்பட்டதில், நேராக பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தேன்.  காலையில் பத்து நிமிடம் முன்னாலேயே போய்விட்ட பதினேழாம் நம்பர் பஸ்  இப்போது  கால் மணி நேரமாகியும் வரவில்லை. பக்கத்தில்  அழுக்காக இருந்த பிச்சைக் காரர்கள் கூட  சேகரித்திருந்த உண்வை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.  மூன்று மணிக்கு பதினேழாம் நம்பர் பஸ் வந்தது.  பஸ் பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் தாண்டியதும், இப்போது அவ்வளவு சீக்கிரம் வீட்டுக்குப் போவது உசிதமில்லை; சோத்துக்குக் காஞ்சுபோய்த்தான் சீக்கிரம் வந்ததாக அம்மா நினைக்க இடம் கொடுத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில்  ரயில்வே சினிமாக் கொட்டகை தாண்டி வந்த யானைப் பார்க் ஸ்டாப்பில் இறங்கிக்கொண்டேன். நேராக முரளி வீட்டுக்குப் போகலாம். முரளி என்னோடு ஹை ஸ்கூல் வரை ஒன்றாகப் படித்தவன். பின்பு ,  டிப்ளமா படித்தால் சீக்கிரம்  ரயில்வேயிலேயே சார்ஜ்மேனாக சேர்ந்துவிடலாம் , அதன்பின்  ரீஜினல் இஞ்சினீயரிங்க் காலேஜில் பி.ஈ படித்து பெரிய பதவிக்குப் போய்விடலாம் என்ற அவன் அப்பாவின் யோசனையின் பேரில் அம்பிகாபுரம் தாண்டி இருக்கும் எஸ்.ஐ.டி என்னும் சேஷசாயீ  இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலாஜியில் படித்துக்கொண்டிருந்தான்.  கொழுகொழுவென்ற முகத்துடன் அந்தக் காலத்து நீதிபதிகளின் விக் போல அலைஅலையான தலைமுடி பக்கவாட்டில் வழிய நெற்றியில் காலையில் வைத்துக்கொண்ட சந்தனப் பொட்டு சாயங்காலம் வரை அழியாமல்  துலங்க , பார்த்தவுடனேயே நன்றாகப் படிக்கக் கூடிய பையன் என்ற எண்ணம் தோன்றுமளவிற்குத் தோற்றம் கொண்டவன்.

 

இப்போதைக்கு அவனைப் பற்றி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது ? அவன் அம்மாதான் இப்போது முக்கியம். வியட்னாம் வீடு படத்தில் வரும் பத்மினி போல இருப்பார்கள். என்ன வாய்தான் கொஞ்சம் ஜாஸ்தி. ஆனால், அந்தக் கை சமையலுக்கு எதையும் பொறுத்துக்கொள்ளலாம். நான் இரண்டு மூன்று முறை முரளி வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். உண்மையிலேயே தேவாமிர்தம்தான். அவன் அம்மா ஒன்றும் அவனைப்போலக் கஞ்சமும் இல்லை .  ” என்ன இப்படிப் பூச்சி பிடிக்கற மாதிரி சாப்டுண்டு ! வளர்ற பசங்க நறுக்க  சாப்பிட வேணாமோ ? ” என்று  சொல்லிக்கொண்டே எடுத்துக்கொண்டு வந்த தட்டில் இருப்பதையெல்லாம் என் இலையில்  போட்டபோது முரளிக்கு ஏனோ மூச்சு வாங்கியது. சாப்பாடு மாத்திரம் இல்லை. டிஃபன் ஐட்டங்களும் , நொறுக்குத் தீனியும் கூட அதிகச் சுவையோடுதான் இருக்கும். முரளியின் அப்பா அவ்வளவு பருமனாக இருந்தது ஒன்றும் ஆச்சர்யம் இல்லைதான்.

 

முரளி வீட்டுக்குப் போனால், ஏதாவது தின்பதற்குக் கிடைத்துவிடும்.  முரளியும் இப்போது வீட்டில் இருக்க மாட்டான். அவனைப் பார்க்கத்தான் வந்தேன் என்றும் அவனைப் பார்த்து விட்டுத்தான் போக வேண்டும் என்றும்  ஆறு மணிவரை அங்கு உட்கார்ந்திருந்தால் ஏதாவது சாப்பிடக் கிடைக்காமலா போய்விடும் ?  என்று முரளி வீட்டை நோக்கி நடையைப்  போட்டேன். சாப்பிட ஏதாவது கிடைத்துவிடும் என்ற எண்ணமே கொஞ்சம் தெம்பைக் கொடுத்துவிட்டது.  செருப்பிலிருந்து பின் கழண்டுவிடாத அளவிற்கு கொஞ்சம் வேகமாகக் கூட நடந்தேன்.  ரயில்வே இன்ஸ்டிட்யூட்டைத் தாண்டி வரும் வண்டி ஸ்டாண்டிலிருந்து வலது பக்கம் திரும்பினால் அவன் வீடு வந்துவிடும். வண்டி ஸ்டாண்டில் நோஞ்சானாக ஒரு குதிரையும் அதைவிட நோஞ்சானாக வண்டிக்காரனும் இருக்க அவர்களுக்கு யாரும் முரளி போன்ற நட்பு இல்லாது போனது எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. வண்டிக்காரன் பீடி குடித்துக் கொண்டிருக்க , குதிரையோ என்னைப்போலவே எப்போதோ சாப்பிட்டதை நினைத்து அசை போட்டுக் கொண்டிருந்தது. முரளியின் வீட்டுத் தோட்டக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்லும்போதே , முரளியின் அக்கா வெளியே வந்து அதே வேகத்தில் உள்ளே சென்று , ” ரமணி வந்திருக்கான் ” என்ற சொன்னது காதில் விழுந்தது.

 

முரளியின் அம்மா வெளியே வரும்போதே , ” அடுப்பப் பாத்துக்கோடி ” என்று அந்த அக்காவிடம்  உத்தரவிட்டு பின் என்னைப் பார்த்து, ” என்னடா! இன்னிக்கு இந்த நாழிக்கு வந்திருக்கே ? காலேஜ்லேந்து நேர வர்றயா ? என்ன சமாச்சாரம் ? ” என்று கேட்டாள்.  நானும், ” ஒண்ணுமில்ல மாமி! முரளியப் பாத்து ரொம்ப நாளாச்சு. அவங்கிட்ட கேல்குலஸ் நோட் வாங்கணும். அப்படியே உங்களையெல்லாமும் பாக்கணும்னுதான் . அப்புறம் ஆத்துக்குப் போயிட்டா இவ்வளவு தூரம் வந்துட்டுப் போக முடியல. அதான் இப்படியே காலேஜ்லேந்து வரும்போதே பாத்துடலாம்னு … ” என்று ஓரளவுக்கு நம்புகிற பொய்யைச் சொன்னேன்.  அப்போது , மீண்டும் வாசலில் சத்தம் கேட்டது.  செருப்பைத் தேய்த்துக்கொண்டே யாரோ  வரும் சத்தம் கேட்டது.  நான் யாரென்று பார்ப்பதற்காக எழுந்த சமயம் ,  ” நீ ஒக்காரு. எல்லாம் முரளையோட அப்பாவாத்தான் இருக்கும். வேற யாரு இப்படி செருப்பத்தேச்சுண்டே வருவா ” என்றாள்.  முரளியின் அப்பா அந்தச் சமயத்தில் என்னை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதோடு நான் அங்கிருப்பதையும் ரசிக்கவில்லை என்பதை அவர் என்னைப் பார்த்து எதுவும் கேட்காத அலட்சியத்திலேயே தெரிந்தது.

 

உள்ளே அடுப்பங்கரையிலிருந்து  புளிக்காய்ச்சலின் மணம்  பரவிக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் முன்பு பக்கோடா வாசனை வந்தது. இப்படி ஒரு மணம் மிகுந்த தருணத்தின் நிழலில் நான் அங்கு ஒதுங்கியிருப்பது இவ்வளவு நேரம் நான் சாப்பிடாமல் இருந்ததில் லேசாகக் அடங்கிகொண்டிருந்த பசியை அடங்கவிடாமல் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தது. இப்படி ஓர் நிலையில் முரளியின் அப்பா என்னைக் கவனித்தால்தான் என்ன கவனிக்காமல் உதாசீனப் படுத்தினால்தான் என்ன ? . முரளியின் அம்மா என்னை அனுக்ரஹித்தால் போதும் என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே  அவளுக்கு அன்னபூரணி என்ற பெயர் எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்றும் ஒரு யோசனை மின்னலடித்தது.

 

முரளியின் அப்பா ஏதோ பரபரப்பாய் இருந்தார். மீண்டும் ஏதோ வெளியில் கிளம்பத் தயாராகிறார் போலிருந்தது.  அவர் பாட்டுக்குப் போகட்டும். அவர் போகும்போது எப்படியும் மாமி ஏதாவது அவருக்குச் சாப்பிடக் கொடுக்காமலா இருந்து விடுவாள் ?  அப்போது வீட்டிற்கு வந்த என்னை விட்டு விட்டு அவருக்கு மட்டுமா தனியாகச் சாப்பிடக் கொடுப்பார்கள்? தமிழன் பண்பாடு இன்னும் அவ்வளவு தேய்ந்துபோய் விடவில்லை என்று எண்ணிக்கொண்டே இப்போதுதான் அந்த வீட்டை முதல் முதலாகப் பார்ப்பது போல் நோட்டமிட்டேன்.  பக்கத்து அறையில் முரளியின் அம்மாவும் அவன் அப்பாவுடன் சேர்ந்து கொண்டு பெட்டியை இழுப்பதும் திறப்பதும் பின் மூடுவதுமாகச் சப்தம் வர பேச்சு வேறு மிகவும் மெதுவாகத் தெளிவற்று வந்து கொண்டிருந்தது. பின் முரளியின் அப்பா மட்டும் வெளியே வந்தார். அவர் இப்போது வேறு உடைக்கு மாறி இருந்தார். ட்ரெஸ் புதிதாக இருந்தது. தீபாவளிக்குத் தைத்ததை  அன்று மாத்திரம் போட்டுக்கொண்டுவிட்டுக் கழற்றி வைத்துவிட்டு மீண்டும் இப்போதுதான் போட்டுக்கொள்கிறார் போலிருந்தது. கொஞ்ச நாழியில் முரளியின் அம்மாவும்  அந்த ரூமிலிருந்து வெளிவரும்போது ஒரு சூட் கேஸ் கையிலிருந்தது.  ” சரி ! ஜாக்ரதையாப் பாத்துப் போங்கோ ! பராக்குப் பாத்துண்டே நிக்காம பொட்டியிலேயும் கவனம் இருக்கட்டும் ” என்றாள்.

 

முரளியின் அப்பா இப்போதுதான் என்னைப் பார்ப்பது போல ஏறிட்டுப் பார்த்து பின் சமையலறைப் பக்கம் சென்றார்.  எனக்கு  நான் எதிர்பார்த்திருந்த நேரம் வந்துவிட்டாற் போல இருந்தது. புஸ்தகங்களை  எல்லாம் பக்கத்தில் இருந்த ஸ்டூல் மீது வைத்துவிட்டு கை அலம்பிக்கொள்ள ரெடியானேன். உள்ளே  முரளியின் அப்பா , ” நான் ரமணியை அழைச்சுண்டு  சைக்கிளிலேயே போய் ஆர்மரிகேட்டுல இறங்கிண்டு பஸ் பிடிச்சுடறேன், அப்பதான் ஒக்கார இடம் கிடைக்கும் ”  என்று  எனக்குக் கேட்கும் படியாகவே சொன்னார். அதனால் என்ன ? எனக்கும் அது சௌகரியம்தான். நடை மிச்சம் . சாப்பிட்ட உடனேயே நடப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தானே இருக்கும் என எண்ணிக்கொண்டேன்.

 

ஒரு ஐந்து நிமிடத்தில், முரளியின் அம்மாவுடன் அவரும் வெளிவந்து என்னைப் பார்த்து, ” கிளம்பலாமா ? ” என்று கேட்டுக் கொண்டே  சிரித்தது என் அம்மா சிரிப்பது போலவே   இருந்தது .

 

 

— ரமணி

 

 

 

 

Series Navigationஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு!ஆமைகள் புகாத உள்ளம் …!
author

ரமணி

Similar Posts

Comments

  1. Avatar
    s.ganesan. says:

    good one 2 read…சட்டையில் பட்டன் அறுந்திருந்ததைச் சரிக்கட்ட உதவிக்கொண்டிருந்த சேஃப்டி பின்னை ஜெ அரசின் மந்திரி மாற்றம் போல உடனடியாக இட மாற்றம் செய்துவிட்டேன்.ramani’s naiyaandi….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *