குரு

This entry is part 26 of 31 in the series 2 டிசம்பர் 2012

விழுப்புரம் பேருந்து நிலையத்தில்தான் வண்டி நிற்கிறது தாம்பரம் செல்ல இன்னும் குறைந்தது மூன்று மணி ஆகலாம். முன் இரவுக்குள் இந்த வண்டி மாநகரம் சென்றுவிட்டால் நிம்மதி. தாண்டிப்போனால் ஆட்டோக்காரர்கள் வைத்ததுதான் வரி..

நாமும் ஒரிடம் நடந்து சென்றுவிடமுடியாது. நடந்து சென்றுவிடும் தூரத்தில் எதுவும் யாருக்கும் இல்லாமல் எப்படியோ ஒரு நகரம் தன்னை அமைத்துக்கொண்டுவிடுகிறது. அதுதானே வேடிக்கை. இதனை ஒரு வேதனை என்றுமே கூறலாமா.

பேருந்தில் பயணிப்பவர்களின் மனோ கதியில் எப்போதும் அந்த வண்டியின் டிரைவரும் கண்டக்டரும் இருப்பதில்லை. இருந்துவிட்டால் வண்டியை ஒட்டுவது என்பது ஆகாத காரியம் ஆகிவிடலாம்.

விழுப்புரம் பேருந்து நிலைய மூத்திர  நெடியை என்னவென்று சொல்வது. ஏன்தான் இப்படி மனிதக்கழிவு நாறுகிறதோ.  மக்கள் ஆயிரம் ஆயிரமாய் தினம் புழங்கும் இப் பேருந்து நிலையத்தில் .கழிப்பிடம் என  ஒன்று இருந்தாலும் அது அனாதையாய்  கோபித்துக்கொண்டே கிடக்கிறது. யாரும் அங்கே செல்வது இல்லை. சென்று திரும்பும் சூழ்நிலையில் மக்களும் இல்லை அப்படியே  கழிப்பறைக்குச் சென்று வந்து அந்தக்களேபரத்தில் நாம்  அமர்ந்த வண்டியை மீண்டும் தேடிப் பிடித்து அதே இடத்தில் போய் அமரவேண்டுமே.. அது ஒன்றும் லேசுபட்ட காரியமாகவும் இல்லை. இறங்கிப் போனவர்கள் எல்லாம் வந்து மட்டுமே வண்டி புறப்படும் என்று யார் சொன்னால் தான் என்ன யாருக்குமே நிம்மதி இல்லை..

அந்தக் கழிப்பறைகளும் பேருந்துநிலையம் வருவோர் போவோர் யாரையும் கூப்பிட்டு கொஞ்சம் எங்களை உபயோகியுங்கள் அய்யா என்று சொல்லும் நிலையில் ஆரோக்கியமாய்த்தான் இருக்கிறதா..பாருங்கள் போய் தெரியும்.

இறந்துபோய்விட்டவர்களின் படத்தோடு இரண்டு குத்துவிளக்குகள் நான்கு சொட்டு கண்ணீர் விடும்  ஒரு ஜோடிக்கண்கள் இந்த  சுவரொட்டியை  ஒட்டிக்கொள்ளத்தான் பிறவி எடுத்தன கழிப்பறைச்சுவர்கள். வேறெங்கும் ஒட்டினால் தோலை உறித்துவிடுவார்கள். ஆனால்  என்ன அந்த இறப்பு ஒன்று மட்டுமே என்றும் சாசுவதம்

நான் வண்டியை விட்டு இறங்காமல் இருக்கையில் அமர்ந்திருந்தேன். அப்படி இருப்பது  கூட ஒரு சாமர்த்தியம் தான் என்று எண்ணினேன். வண்டியிலிருந்து இறங்கி நின்று வெளியில் வீசும் காற்று கீற்று ஏதும் கொஞ்சம் வாங்கி பின் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டாலும் அதுவும்  நம் சாமர்த்தியம்தான் என்று எண்ணிக்கொண்டிருப்பேன்.

நேராகத் தெரிவது டிரைவருக்கு முன்னால் எழுதியிருக்கும் ஒரு குறள். திருக்குறளைப் . பேருந்து நிர்வாகம்தான் எழுதி வைத்துள்ளது. அதனை ப்படித்துக்கொண்டேன்.

‘ அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆறிருள் உய்த்து விடும்’

அடக்கம் என்கிற பண்பு ஒருவனை அமரருள் சேர்ப்பிக்கும். அடக்கம் இல்லாதிருந்தால் அது அவனை கொடிய நரகத்திற்கு இட்டுச்செல்லும். ஆக அடக்கம் என்கிற உயரிய பண்பு இந்த உலகத்திலே ஒருவன்  நல்ல முறையிலே வாழ்ந்து முடிப்பற்கு ஒன்றுக்குமே உதவி செய்யாதா என்று யோசித்தேன். அமரருள் என்கிற போது ஏனோ சிறிது அச்சமாகவே இருந்தது. அமரர் ஊர்தி, அமரர் அறை என்பதெல்லாம் புழக்கத்திற்கு வந்து எத்தனையோ காலமான பிறகு அமரர் என்ற சொல் ஒன்றும் மகிழ்ச்சி தருவதாகவும் இல்லை.

‘சாரு சாரு’

யாருடைய குரல் இது. திரும்பிப்பார்த்தேன். நரிக்குறத்தி ஒருத்தி அருகில் நின்றுகொண்டிருந்தாள்.  ஏதோ சில மணிகள் கைககளில் மாட்டி வைத்துக்கொண்டிருந்தாள். வயது பதினைந்துக்குள் இருக்கலாம்.

நான் திரும்பி அவளைப்பார்த்தேன்.

‘சாரு சாரு நரிப்பல்லு வாங்கிக சாரு நெனச்ச காரியம் செழிக்கும்.  அய்யா போவுற இடம் எல்லாமே பாலா  தேனா பொங்கும். எதிரின்னு ஒருத்தன் அய்யா மின்னாடி வந்து நின்னு கினு பேருசொல்ல இருக்கமட்டான். அய்யா தொட்டது எல்லாம் தொலங்கும் வச்சது எல்லாம் வெளங்கும். வாங்கிக ஒரு நரிப்பல்லு’

நான் யோசித்துப்பார்த்தேன். ஏன் இதனை அவளிடமே கேட்டுவிட்டால் என்ன என்று தோன்றியது.

‘ ஏம்மா நீ நெறய நரி பல்லு வச்சிரிப்பியே அப்புறம் ஏன் உனக்கு  ஒரு கஷ்டம் வருது நீ ஏன் இப்படி கத்தி கத்தி நரிப்பல்லுவ விக்கணும் சொல்லு’

‘ப்படி கேக்குலாமா சாரு அது உனக்கே நல்லா இருக்குதா ‘ அவள் பதில் சொன்னாள்.

சுருக்கென்றது. எனக்கு. இப்படி எல்லாம் அவள் பேசுவாள் என நான் எதிர்ப்பார்க்கவில்லை.

அவளே தொடர்ந்தாள்.

‘மிஞ்சிப்போனா ஒரு ரெண்டு ரூவா இல்லகாட்டி அஞ்சி ரூவா குடுப்ப அதுக்கு இம்மாம் பேசுறதா சாரு. வாங்கிக ஒரு நரிப்பல்லு’

அதை வாங்கி நாம் என்ன செய்வது என்று யோசித்தேன்.

‘ன்ன யோசனை சாரு சும்மா சட்டபையில நரிப்பல்ல வச்சிகிட்டு பேசிப்பாரு எப்படி உம் பேச்சுக்கு சனம் மஷங்குதுன்னு எதுவுமே ஒண்ண சேஞ்சிப்பாக்குணும் சாரு’

ஒரு ரெண்டு ரூபாயை எடுத்து அது ரெண்டு ரூபாய்தானா¡ என்று பார்த்தேன்.

‘ப்ப என்னா பாக்குற சாரு   கூட எதானா காசி எனக்கு வந்துடப்போவுதான்னா’

ரெண்டு ரூபாய் துட்டை அவளிடம் கொடுத்தேன்.

‘ இந்தா நரிப்பல்லு’

‘காசி வச்சிக  எனக்கு நரிப்பல்லு வேணாம் இந்த நரிப்பல்லு  வாங்கிகினுபோயி நான் என்ன செய்யுவன்’

‘ந்தப்பேச்சு வேணாம் சாரு. என் நரிப்பல்லு நீயி வேணான்னா உன் காசிம் எனக்கு வேணாம். நானு ரோசங் கொண்ட சாதியில வந்தவ. யாசகம் வாங்கி வவுறு பொழக்கிற சாதின்னு நெனச்சிகினயா’

‘யாசகம் மட்டுமே வாங்கிப்பொழக்கிற சாதி ஏதும் இருக்குதா’ நான் எப்படியோ அவளைக்கேட்டுவிட்டேன். சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக்கொண்டேன். இப்படி எல்லாம் சாதாரணமாய் யாரையும் கேட்பவன் இல்லைதான்.

‘ ஏன் இந்த பாப்பார மக்க எல்லாம் பின்ன என்ன சாதி.  யாசகம் கேக்குறது மட்டுந்தானே அவுங்க தொழிலு. அது மாதிரி எங்க கொற எனத்துல ஒரு சனம் காட்டு சாமி. நாங்க பிச்சைன்னு கேக்க மாட்டம். யாருக்கும் எதனா ஒரு பொருள குடுத்தாதாம் காசின்னு ஒண்ணு வரும் எங்களுக்கு. ஆகாஷத்தைப்பாத்துகிட்டு அப்படியே ஏணிக்கணக்கா நின்னுகினு சும்மாவே ஒருத்தரை காசி கொடுன்னு காசி கொடுன்னு கேக்குறது மட்டும் ஆவாது எங்க சாதிக்கு. ‘

நரிப்பல் அவள் வசமும் என் காசு என் வசமும் பத்திரமாயின.

‘வண்டியில இறங்கிப்போனவங்க எல்லாம் வந்தாச்சா. அப்படி அப்படியே  ஒருதரம் அக்கம் பக்கத்துல கொஞ்சம் பாத்துகுங்க.. ரைட் ரைட்’ என்று பேருந்தை ஒருமுறை நோட்டம் விட்டுக்கொண்டே கண்டக்டர் சொல்லி நிறுத்தினார். வண்டி சென்னை சாலையில் லேசாகத் திரும்பிக்கொண்டது.

‘ அதுவ கிட்ட ஒரு ஜோலியும் வச்சிகாதிங்க. பிலி பிலின்னு வந்து அப்படியே புடுங்கிடும்னு தெரியாதா’ என்றார் கண்டக்டர் என்னிடம்.

‘ அவுரு கொட்டி கிட்டி எங்கிட்ட அளந்துடுவாருன்னு இவுரு வந்துட்டாரு குறுக்கால’ கண்டக்டரை நோக்கிச்சொல்லிய நரிக்குறத்தி என்னை ஏதோ திட்டிக்கொண்டேதான் நகர்ந்துபோனாள்.

அதுவும் சரி என்றுமட்டுமே என் மனம் எனக்குள்சொல்லியது.

——————————————–

.

Series Navigationகவிஞர் சிற்பியின் சில படைப்புகள்என்னைப் போல் ஒருவன்
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

  1. Avatar
    தேமொழி says:

    யாரிடம் இருந்து நமக்கு அறிவுரை கிடைக்கும் என்பதை சொல்ல இயலாதுதான். அவர் யாராக இருந்தாலும் ‘குரு’ என்ற தலைப்பின் மூலம் அறிவுறுத்தி விட்டீர்கள்.
    நாம் நாடோடியாக வாழும் குறவர்கள் என அவர்களை குறைத்து மதிப்பீடு செய்வதும், அவர்கள் யாசகம் பெறாமல் உழைத்து உண்ணும் தங்கள் வாழ்க்கையை உயர்வாகக் கருதுவதும் நம் அறியாமையை உணர்த்தும் கலாச்சார பாடங்கள்.
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *