சந்திப்பு

This entry is part 13 of 26 in the series 9 டிசம்பர் 2012

தாம்பரம் தொடர் வண்டி நடைமேடையில் நான் நடந்துகொண்டிருந்தேன் மின்சார ரயிலை விட்டிறங்கி இன்னும் ஐந்து கிலோமீட்டருக்கு ச்சென்றாக வேண்டும். அங்கு தான் வீடு என்று சொல்லிக்கொள்ள ஒன்றைக்கட்டிக்கொண்டு மிச்ச வாழ்க்கையை ஒட்ட எனக்கு சாத்தியமாயிற்று. பணம் படுத்தும் பாடுதானே எல்லாமும்.
‘ அது சரி எதிரே வருகிறவன் நண்பன் சிவா போலே தெரிகிறான்.சிவா என்கிற அந்த சிவசுப்பிரமணியன் என் நண்பன். அவனைப்பார்த்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருக்கும், நானும் அவனும் ஒரே அறையில் வசித்தவர்கள். ஒரே அலுவலகத்தில் பணியாற்றினோம்.அவன் பதவி உயர்விலே மும்பைக்குச் சென்றவன். அவனைப்பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என மனம் கிடந்து எப்போதும் அடித்துக்கொள்ளும். மனம் அது அப்படித்தான்.’
‘ சிவா’ நான் தான் ஒங்கி அழைத்தேன்.
‘யாரு ராம் ராமு தானே’ பதில் பேசினான்.
இருவரும் கையை ப்பிடித்துக்கொண்டு குலுக்கி க்குலுக்கி அன்பை வெளிப்படுத்தினோம். எத்தனை ஆண்டுகள் ஒடிவிட்டன. அன்பின் வெளிப்பாடு எப்படிச்சொல்வது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் அந்த வள்ளுவப்பெருந்தகை சொன்னது நினைவுக்கு வந்தது. எத்தனை முறை இந்த சிவாவை க்காணவேண்டும் என ஏங்கி இருப்போம். சிவாவைப்பார்க்காமலேயே பணி ஒய்வு பெற்று விடுவோமா. இல்லை ஒருமுறையேனும் அவனைப்பார்க்கத்தான் நமக்கு வாய்க்குமா.
அவன் திருநெல்வேலிக்காரன். தச்சநல்லூர் அருகேயுள்ள சத்திரம் புதுக்குளம் அவன் கிராமம். அவன் அப்பா சிதம்பரகைலாசநாதம் பிள்ளை, அம்மா கோமதி,, தம்பி மாறியாடும் பெருமான், தங்கை ரேவதி நான் அவன் திருமணத்தை முன்னிட்டு பாளையங்கோட்டைக்குச் சென்றபோது மேற்சொன்ன எல்லாரையும் பார்த்திருக்கிறேன். பேசிப்பழகியிருக்கிறேன்.எத்தனை நல்ல மனிதர்கள் எப்படிமறப்பது. ஏன் மறக்க வேண்டும். அன்பை விட உயர்ந்த ஒரு பொருள் இவ்வுலகில் இருக்கிறதா என்ன. என் மனம் அதிர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தது.
சிவாவும் என் ஊருக்கு வந்திருக்கிறான். அவன் ஊர் தச்சநல்லூர் என்றால் என் ஊர் தர்மநல்லூர்.
என் அம்மா என் தங்கை என் அப்பா எல்லாரையும் அவன் அறிவான். எங்களூர் தருமைநாதன் கோவிலுக்கு அவனை அழைத்துச்சென்று அந்தக்கோவில் முழுதும் சுற்றி க்காட்டியிருக்கிறேன். தருமாம்பாள் சந்நதியில் எத்தனை அழகாகப்பாடினான். அபிராமி அந்தாதியை நெட்டுருச்செய்து வைத்திருந்தவன் ஆயிற்றே. ‘தனம் தரும் கல்வி தரும் ‘ என்று ஆரம்பித்து எத்தனை க்கம்பீரம் சிவா பாடியது. கல்யாணசுந்தரக்குருக்கள் சிவா பாடியதுகேட்டு கண்களை மூடியபடி அப்படியே அசந்து போய் நின்றுகொண்டு இருந்ததை இன்றும் என்னால் நினைத்துப்பார்க்கமுடிகிறது.
‘ எத்தனை நாளா உன்னை பார்க்கணும் உன்னை ப்பார்க்கணும்னு நெனச்சிட்டே இருப்பன் தெரியுமா. எப்பிடியும் சிவா உன்னை ப்பார்த்துடணும் உங்கிட்ட ப்பேசிடணும்னு மனம் என்கிட்ட சொல்லிகிட்டே கிடக்கும். இண்ணைக்கித்தான் அதுக்கு நேரம் வந்திருக்கு. இதைவிட எனக்கு வேற என்ன வேணும் சொல்லு’
இருவரும் காலியாக இருக்கும் சிமென்ட் பெஞ்சொன்றில் அமர்ந்து கொண்டோம். என் குடும்பக்கதையெல்லாம் சிவா கேட்டான். நான் எல்லாம் சொல்லி முடித்தேன் அப்பா அம்மா என் தங்கை எல்லாரும் இறந்துபோய் விட்ட நெடுங் கதை சொன்னேன்
‘ தங்கை வர்தினி இறந்திடிச்சா’
‘ ஆமாம் அவள் இறந்து போனாள்’ என்றேன்.
‘ ஏன் என்ன ஆச்சு’
‘ கணவன் சரியில்லை. ஒரு பெண்ணுக்கு வேறு என்ன வேண்டியிருக்கிறது. அவளுக்கும் சர்க்கரை நோய் என்று வந்தது. சரியாக கவனிக்க முடியவில்லை. தொய்ந்த மனம் எழும்பவேயில்லை மனம் எழும்பினால்தானே உடல் தேறும் அவள் போய் ச்சேர்ந்தாள். அதுதான் என் தங்கையின் சோகமான வாழ்க்கை’
சிவா வருத்தப்பாட்டான். அவன் முகம் மாறிப்போயிற்று.
அவனே சொன்னான். ‘ என் அப்பா இறந்துபோனார் தம்பி மாறியாடும் பெருமான் இறந்துபோனான். தங்கை திருமணமாகி அவள் கணவன் வீட்டில் இருக்கிறாள். அம்மா மட்டும் தனியாக இருக்கிறாள்.’
‘ உனக்கும் இவ்வளவு நடந்துவிட்டிருக்கிறது’
‘ இன்னும் உண்டு சமீபமாய் என் மனைவியும் காலமானாள். என் ஒரே மகளைத்திருமணம் செய்து கொடுத்தேன்.நான் தனியாகத்தான் வாழ்கிறேன். மூன்று அறை கொண்ட பிளாட் ஒன்றை வாங்கி ஒரு மூலையில் உறங்கி எழுகிறேன். இப்போது சென்னையில் ஆர் கே நகரில் இதே இலாகாவில் உதவி மானேஜர் பணி’
‘ அம்மா’
அவன் எதுவும் பேசவில்லை. அவன் கண்கள் இடுங்கிக்கொண்டு வந்தது பார்த்தேன். கண்கள் கூடுதலாய் ஈரமாகின.
‘சொல்லிவிடுகிறேன். உன்னிடம் சொல்லாமல் யாரிடம்தான் இதைச்சொல்வது. நான் என் மனைவியோடு மும்பை சென்றேன். உனக்குத்தெரிந்த விஷயன்தான். பின்பு ஒருநாள் என் தம்பி மாறியாடும் பெருமாள் மும்பை வந்தான். அவனுக்கு ஒரு வேலை வேண்டும் என்றான். பாலிடெக்னிக் முடித்திருந்த அவனுக்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலை வாங்கிக்கொடுத்தேன். அவனும் வேலைக்குப்போனான். அவன் என்னிடம் எந்தக்குறையும் சொன்னதில்லை. ஒரு முறை ஊருக்குச்சென்றான். பின் திரும்பவே இல்லை.
ஊரிலிருந்து எந்தத்தகவலும் எனக்கு வரவே இல்லை. என் மனைவிக்கும் என் தம்பிக்கும் இடையே ஏதோ பிரச்சனை, அவன் சொன்னால்தானே எனக்குத் தெரியும். என் மனைவி மட்டும் என்னிடம் ஏதும் சொன்னாளா என்ன. அவரவர்கள் விளக்கம் என்ற ஒன்றை மனப்பெட்டியில் பூட்டிவைத்திருப்பார்கள் ஆண்டுகள் பல ஒடிமுடிந்தன நானே ஒருமுறை தச்சநல்லூர் கிராமம் சென்றேன். அம்மா மட்டும் இருந்தாள். அப்பா வைத்துவிட்டுப்போன வெற்றிலைப்பாக்குக்கடையில் அமர்ந்திருந்தாள்.
அம்மாவைப்பார்த்ததும் அப்பா இல்லை இறந்துபோய்விட்டார் என்பது தெரிந்தது. அப்பாவின் படம் ஒரு மூலையில் மாட்டியிருந்தது. சந்தனப்பொட்டு வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் மாறியாடும் பெருமானின் படம் அதற்கும் ஒரு மாலை போட்டிருந்தார்கள். இருவருமே இல்லை.என்பது அறிந்து துடிதுடித்தேன். என் அம்மாவைக்கட்டிக்கொண்டு என்னால் எத்தனை ஒங்கி அழ முடியுமோ அழுது முடித்தேன். அம்மாவுக்குப்பேச்சு சரியாக வரவில்லை.. வாய் குழறிக்கொண்டே இருந்தது.. அம்மாவை என்னோடு அழைத்துவர எத்தனையோ முயன்றேன்.முடியவில்லை. ரேவதியின் திருமண ஆல்பம் பழசாகிக்கிடந்தது. அம்மா எடுத்துக்கொடுத்தாள். அதனைப்புரட்டிப்பார்த்தேன். அதனுள் அப்பா அம்மா தம்பி எல்லோரும் எத்தனை அழகாக இருக்கிறார்கள். ரேவதி பள்ளி க்கூட ஆசிரியரை த்திருமணம் செய்து கொண்டதாக அம்மா சொன்னாள். அவள் .குழந்தைக்குட்டிகளோடு இருப்பதாய் அம்மா சாடை சாடையாய் என்னிடம் காட்டினாள்
தான் எங்கும் வரமுடியாது என்பதில் அம்மா உறுதியாக இருந்தாள். நான் செய்வதறியாது திகைத்தேன்.
‘ சிவா நீ பதவி உயர்வுகள் எத்தனையோ பெற்று இன்று ஒரு உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டாய் என்பதறிந்து மகிழ்ச்சியாயிருந்த எனக்கு த்துயரத்தை மட்டுமே அல்லவா அள்ளித் தந்துவிட்டாய்’
‘ ஆமாம் பதவி உயர்வு பெற்றேன். ஆனால் வாழ்க்கையில் எதை எதை இழந்தேன் எப்படி இழந்தேன் ஏன் இழந்தேன் என்பதையெல்லாம் சொல்லி ஒருமுறை அழக்கூட ஒரு ஆளில்லை. நேரமும் இல்லை .பணம் பதவி அதிகாரம் எல்லாம் உண்டு ஆனால் ஒரு மனிதனாகத்தான் என்னால் வாழமுடியாமல் போனது’
நான் எத்தனை காலமாய் ஏங்கிகொண்டிருந்த ஒரு நண்பனின் சந்திப்பு. இது இத்தனை சோகமாய் முடியும் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்..
சிவா முகத்தைத்துடைத்துக்கொண்டான். சப்வேயில் நடந்து இருவரும் அம்பேத்கர் சிலை பின்புறமாயிருந்த அந்த வசந்த பவனுக்கு வந்தோம். சர்க்கரை இல்லா காபிசாப்பிட்டுவிட்டு அவன் கிழக்குத்தாம்பரம் நோக்கிச் செல்லவேண்டும். நண்பன் சிவாவிடம் விடை பெற்றுக்கொண்டு நான்
நான் மேற்குத்தாம்பரம் முடிச்சூர் சாலையில் நடந்துகொண்டிருந்தேன் அவனை வீட்டுக்கு அழைத்துச்செல்ல பெரிய கொழுக்கட்டை சைசில் ஒரு கார் வந்து. காத்திருந்தது. அவன் அந்த காரில் ஏறிக்கொண்டான்.
‘ என் தச்சநல்லூர் சிவசுப்பிரமணியன் ஏப்போதோ தொலைந்துபோய் விட்டான். இவனும் கூட சிவாதான் ஆனால் நான் தேடிய அந்த சிவா இல்லையே இவன்’ என் மனம் என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தது.
————————————————————————————.

Series Navigationநினைவுகளின் சுவட்டில் (105)வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *