நெத்திலி மீன்களும் சுறாக்களும்

This entry is part 9 of 27 in the series 23 டிசம்பர் 2012

படைப்பாளி படைப்புச்  செயல்பாடுகளோடுமட்டுமின்றி  தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வது, குழு அரசியலை முன் வைப்பது, தன் படைப்புக்ளுக்கான மார்க்கெட்டை  நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது,  அதிர்ச்சி மதிப்பீடுகளின் மூலம் தன் படைப்புகளுக்கான நிலையை முன் நிறுத்துவது என்று குறுகி போய்விட்டான்.  ஆனால் படைப்பாளி படைப்புச்  செயல்பாடுகளோடுமட்டுமின்றி  சக எழுத்தாளர்களின் படைப்புகளை ரசிப்பதை எடுத்துரைப்பது,  தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு அவர்களின்  படைப்புச் சூழலை முன் வைப்பது, தான் சார்ந்த  அரசியலை முன் வைப்பது, தன் படைப்புகளுக்கான சூழல்  முயற்சிகளை நிறுவ  ஈடுபடுவது,  அதிர்ச்சி மதிப்பீடுகளை புறந்தள்ளி நிதானமானப்  படைப்புகளின் மூலம் தன்  நிலையை முன் நிறுத்துவது, சமூகப் போராட்டங்களில் தன்னை எந்த வகையிலாவது இணைத்துக் கொள்வது என்று நிமிர்ந்து நிற்கவேண்டும்.
மலேசியா எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு அவர்கள் 5 நாவல்கள் , நூற்றுக்கணக்கானச் சிறுகதைகள் மூலம் தன்னை மலேசிய தமிழ் இலக்கியச் சூழலில் நிறுவிக்கொண்டவர்.மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்க செயல்பாடுகளோடு இணைத்துக் கொண்டவர். தமிழ் எழுத்தாளர் சங்க போட்டிகள் மூலம் பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருப்பவர். கணிணித்தமிழ், அறிவியல் புனை கதைகளில் இன்னொரு வித்தியாசமான முகத்தைக் காட்டுபவர்.வானொலிபணி, ஓய்வு வாழ்க்கைப்பணிகளில் நவீன இலக்கியத்தை முற்றிலுமாகப்  பற்றிக் கொண்டு நவீன இலக்கியம்தான் நாம் வாழும் உலகை நமக்குச் சொல்லி உணர்த்துவதாக இருக்கிறது என்று தான் தோய்ந்து போன மரபு இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், காப்பியங்களை சற்றே தள்ளி வைத்து விட்டு நவீன இலக்கியச் செயல்பாட்டில் ஈடுபட்டு  வருபவர். படைப்பிலக்கியம் அவருள் நிகழ்த்தும் பல் வேறு விவாதங்களை கட்டுரைகளாகி இருப்பதை இந்நூலில் தொகுத்திருக்கிறார்.இவற்றில்
பல்வேறு இலக்கிய ஆளுமைகள், தான் படித்த நூல்கள், தான் வாழும் மலேசியா சமூகத்தின் வரலாறு  பற்றிய விபரங்கள், பல்வேறு விவாதங்களின் ஊடான கடிதங்கள், நேர்காணல்கள் ஆகியவற்றைத் தொகுத்திருக்கிறார்.
இந்த விவாதங்களை தமிழ் சமூகம் பற்றி மட்டும் அவர் எடுத்துக் கொள்வதில்லை.மலாய்கார்ர்கள், சீனர்கள் பற்றியும் எடுத்துக் கொண்டிருக்கிறார். மலேசியாவில் சீனர்கள் குடியேறிய சமூதாயமா என்ற விவாதம் சீனர்களின் பெருமையை அவர்கள் சார்பில் நின்று பேசுவது.இதற்குத்தான் எவ்வளவு பெருந்தனமை வேண்டும்.மலாய்க்காரர்களுக்கு எதிரான கோபமான நியாயமானக் குரலாகவும் இதை எடுத்துக் கொள்கிறார். அவர் முன்பு வசித்து வந்த பினாங்கு நகரம் பற்றி பத்துக்கட்டுரைகளை இந்நூலில் எழுதியுள்ளார்.” ஏன் இப்படி பினாங்கை வளைத்து வளைத்து எழுதிகிறீர்கள். சலிப்பாக   இருக்கிறது “ என்று சிலர் குறிப்பிடும் அளவுக்கு எழுதியவர்..பினாங்கு பற்றிச் சொல்ல அவர் எடுத்துக் கொண்ட தலைப்பு “பழங்கலத்தில் பழங்கள்’ . பாரதிதாசனின் கவிதை வரி . அதற்கும் ஒரு கதை,பினாங்குத் திருவிழாக்கள் பின்னணியில் உள்ள மத நம்பிக்கைகள், தொன்மக் கதைகள், நாட்டுக் கோட்டை சமூகத்தினரின் வியாபாரப் பாங்கு,தமிழ்  முஸ்லீம்களின் அயராத உழைப்பு,சீர்திருத்தவாதிகள், பழைய தமிழ் படங்கள் திரையிடப்பட்ட அரங்குகள், அச்சூழல், ஜாதிக்காய் கிராமத்து தமிழர்களின் இழப்புகள் பற்றி அவை சுவாரஸ்யமாகப் பேசுகின்றன.பினாங்கு வள்ளல் சகோதரர்கள், இராமதாசர், செந்தமிழ்க்கல்வி நிலையங்கள் பற்றியும், பாலா, துன் சம்பந்தன் மற்றும் சில வேறு ஆளுமைகள் பற்றியும் விரிவாக எடுத்திரைத்திருக்கிறார்.

மலேசியத்தமிழ் எழுத்தியக்கங்களின் முன்னோடி சி. வேலுசாமி முதல் சை. பீர்முகமது, இன்றைய இளம் எழுத்தாளர்கள் தேவராஜன் வரை பலரின் படைப்புகளைப் பற்றி சொல்லி சிபாரிசு செய்திருக்கிறார். சிங்கப்பூர் படைப்பாளிகளில் அமரர் நா.கோவிந்தசாமி முதல் ஜெயந்தி சங்கர் வரை பலர் சரியாக அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்கள் ,தமிழ்ப்படைப்பாளிகள்  பற்றியக்குறிப்புகள் அங்கங்கே காணப்படுவது அவரின் தமிழகப் படைப்பு வாசிப்பு விஸ்தாரத்தையும் சொல்கிறது. இரா.முருகனின் மூன்று விரல், எஸ்.சங்கர நாராயணனின் நீர்வலைகள் உட்பட பல நல்ல நாவல்கள் பற்றின விமர்சங்கள் இவரின் தன்னிலையான, நடுநிலை வாசகப் போக்கைச் சொல்கின்றன.
மலேசியாவில் மலாய் மொழி எழுத்தாளர்கள் தங்களை வருணித்துக் கொள்ள பயன் படுத்தும் “ நெத்திலி மீன் “ பற்றிச் சொல்கிறார். அது பொடிதான். ஆனாலும் அது முழு மீன். தமிழ் நவீன இலக்கியம் என்னும் பெருங்கடலில் பெரிய மீன்களுக்கிடையே சுதந்திரமாக நீந்திக் களிக்கும்  இந்த நெத்திலி மீன்கள் பற்றிய  சிலாகிப்புகள் உள்ளன.அவற்றில்
அ. ரெங்கசாமி, சீ.முத்துசாமி,பெ.ராஜேந்திரன் முதல் தேவராஜிலு வரை பல எழுத்தாளர்களின் படைப்புகள் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சில    விவாதங்களை அவர் எதிர் கொண்டிருக்கும் விதம் நயமானது. நாகரீகமானது.” எதிகாலத்தில் அழியக் கூடிய மொழிகளில் ஒன்று தமிழ்” என்ற புரளி  கருப்பு கருப்பாய் வாந்தி எடுத்த கதை காக்காய் காக்கயாய் வாந்தி எடுத்தது போல் மருவி இருப்பதைச் சொல்கிறார். தமிழில் நடக்கும் நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்றி இலக்கியத்தைத் தனிநபர் விவகாரமாய் நடத்தும் மோசடித்தன்மை பற்றிச் சாடுகிறார்.கடந்த பத்தாண்டாகக் கோலோச்சும் தனிநபர் மையம் கொண்ட இலக்கியச் சர்ச்சையை நிராகரிக்கிறார். மலேயா மொழி எழுத்தாளரான உதயசங்கர் பத்து ஆண்டுகளுக்கு முந்திய  மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகள் குறிப்பிடத்தக்கதாய் இல்லை என்ற குற்றச்சாட்டைதமிழ் படைப்புகளை முன்னிருத்தி மறுக்கிறார். இது போன்ற கருத்தை தமிழவன் சொல்லியிருப்பதற்கும் பதில் தந்திருக்கிறார். மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் தாழ்மையான குரலாகவும், அது அமைந்துள்ளது.
தமிழ் எழுத்துக்கு உலகப் பொது அடையாளம் இருக்க வேண்டும் என்பதில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாதவர் கார்த்திகேசு அவர்கள் .தமிழகச் சிறுபத்திரிக்கைகள் அங்குள்ளவர்களைக்  கண்டு கொள்ளாமல் இருக்கிற காரணங்கள்  எவையும் அவர்களின் இலக்கிய அடையாளத்தைக் குறித்தவை அல்ல என்கிறார். அவற்றில் முற்போக்குச் சிந்தனைகளுக்கு அவர்கள் ஈடு கொடுக்க முடியாமல் இருக்கலாம்.மலேசியக் கருப்பொருள்கள் பொதுவான தமிழ் நாட்டு வாசகர்களுக்கு ஈர்ப்புடையனவல்ல என்ற கருத்து இருக்கலாம். அங்கு தங்கள் எழுத்தைப் பதிப்பதில் முயற்சி குறைவு உடையவர்களாக இருக்கலாம் என்பது பற்றிய அவரின் வாதங்கள் முக்கியமானவை.
இலக்கிய ரசனை என்பது தனிபட்டவரின் உள்ளார்ந்த் அனுபவம் என்று உணர வைக்கிறார்.இலக்கியக் கோட்பாடுகள் என்று எதையும் முன் வைக்காமல், அவற்றை வகைபடுத்தி கூறு போட்டு காட்டாமல் இலக்கிய வாசிப்பு சார்ந்த உண்மைகளை நேர்மையாக வெளிபடுத்துவதே  இக்கட்டுரைகளின் நோக்கமாக இருக்கிறது.இவை இலக்கியத்திற்கான இயக்கங்களின் அடித்தளங்களை இடுபவையாக இருக்கின்றன.மலேசியா வாழ்வும், மலேசியா மக்களின் வாழ்க்கை அனுபவங்களும் அவர் அறிந்தவற்றை உள்ளார்ந்த உணர்வுடன் முன் வைக்கப்படிருக்கின்றன.
இதில் இடம் பெற்றுள்ள சில பேட்டிகள், கடிதங்களில் அவரின் எழுத்து சார்பு சரியாக விளக்கப்பட்டிருக்கிறது.  அது குழப்பத்தில் உள்ள எந்த புதிய எழுத்தாளருக்கும்  வழிகாட்டியாகவே இருக்கும் .” என் படிப்புகளில் உள்ள புதுமை  அவற்றின் உள்ளடக்கம்தான். நான் சம கால வாழ்க்கையைப் பேசுகிறேன். இன்றைய வாழ்வும் சிக்கல்களையும் பேசுகிறேன். அவற்றின் நுண் உணர்வுகளைச் சொல்கிறேன். வாழ்க்கை நவீனமாகி வருகையில் நம் பாரம்பரிய கலாச்சாரத்தை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் எனபதைப் பற்றிப் பேசுகிறேன். சமகால  வாழ்க்கைச் சிக்கல்களைப் பதிவு செய்வதில் என் சொந்த அனுபவங்களை நான் பதிவு செய்ய முடியும். சமூகக் கருத்தாக்கங்களைக் கொண்டு அவற்றை அலச முடியும். என்னை நான் காட்ட முடியும்.”
அவரின் இலக்கியம் பற்றிய இன்னொரு கருத்தை முன்மொழிந்து இந்தத் தொகுப்பின் விவாதங்களை மனதில் நானும் அசை போட்டுக் கொள்கிறேன்
”  நவீன் இலக்கியம்தான் நாம் வாழும் உலகை நமக்குச் சொல்லி உணர்த்துவதாக இருக்கிறது மரபு இலக்கியங்கள் பல அன்றைய வாழ்வைப் பேசுவன. ஆனால் இன்றைக்கு நாம் வாழ்கின்ற வாழ்வின் நயங்களையும் சிக்கல்களையும் நம் மனதுக்குள் விவாதிக்க வைப்பன நவீன இலக்கியங்களே”

-சுப்ரபாரதிமணியன்

( விலை மலேசியா ரூபாய் (ரிங்கிட் ) 25, உமா பதிப்பகம், கோலாலம்பூர் , மலேசியா ) .,   &  kobo books  வழியாகவும் பெறலாம்
==============================================================================
.                                               subrabharathi@gmail.com

Series Navigationஎழுத்துலக வேந்தர் இளம்பாரதிதாகூரின் கீதப் பாமாலை – 45 கானம் பாட வேண்டும்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *