இன்னொரு வால்டனைத் தேடி…..

author
1
0 minutes, 8 seconds Read
This entry is part 27 of 32 in the series 13 ஜனவரி 2013

Henry David Thoreau Walden PondWalden Pond

எஸ்.எம்.ஏ.ராம்

 

தொடர்பு சாதனங்கள் பல்கிப் பெருகிய காலத்தில் வாழ்கிற நாம், உண்மையிலேயே சக மனிதர்களோடு தொடர்பு கொண்டிருக்கிறோமா? தொடர்பு என்பது என்ன? தொடர்பு என்றால் தீண்டுதல் என்று பொருள் கொள்ளலாமா? எப்படி என் சக மனிதனை நான் தீண்டுவது? உடலாலா? மனத்தாலா? அரூபமான மனம் எப்படி இன்னொரு அரூபத்தை ஸ்பரிசிக்கும்?

 

முதலில் இந்தத் தொடர்பு நிகழ்ந்தாக வேண்டிய அவசியமே தான் என்ன? தொடர்பே இல்லாமல் போனால் தான் என்ன கெட்டு விடும்? என்னைச் சுற்றி உள்ள வஸ்துக்களோடு எனது தொடர்புகளை நான் அறுத்துக் கொள்கிற நிலையில் நான் ஒரு தீவாகி விடுகிறேன் என்பது உண்மை தானா?  அப்படி ஒரு தீவாகி நான் மடிந்து போவதில் எனக்கு சம்மதம் தானா?.

 

ஹென்றி டேவிட் தோரோ, ஒரு கட்டத்தில் தனது சக சமூக மனிதர்களிடமிருந்து  தன்னைப் பெரிய அளவுக்குத் துண்டித்துக் கொண்டு ஒரு பரிசோதனையாய், ஊருக்கு வெளியே  மனிதர்களே இல்லாத ஒரு வனாந்திரத்தில், வால்டன் என்ற ஓர் அழகிய ஏரிக்கரையில் போய்க் குடிசை அமைத்துக் கொண்டு இரண்டு வருஷங்களும்  இரண்டு மாதங்களும் இரண்டு  நாட்களும் வாழ்ந்தார். அந்தத் தீவு வாழ்க்கை முடிந்து மறுபடியும் ஊருக்குள் பிரவேசித்த போது, தனது தனிமை வாழ்க்கையில் தான் கற்றுக் கொண்ட அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொல்ல ‘வால்டன்’ என்ற பெயரிலேயே  புத்தகம் ஒன்று எழுதி வெளியிட்டார். அவர் தற்காலிகமாக மனிதர்களிடமிருந்து தொடர்புகளைச் சுருக்கிக் கொண்டு தனியே வாழ்ந்த அந்த வன வாசத்தில் மனிதர்களிலும் மேம்பட்ட இயற்கையோடு அவர் தொடர்பு கொண்டிருந்தார்.

 

தோரோ அந்தப் புத்தகத்தில் தனது வன வாசத்தின் நோக்கத்தைத் தெளிவாக அறிவிக்கிறார். அவரது, வனவாசம், அந்தச் சொல் இந்தியக் கலாச்சாரப் பின்னணியில் புரிந்து கொள்ளப் படுகிறார்ப் போல, வாழ்க்கையிலிருந்து தப்பித்து ஓடிப்  போதல் அன்று. மாறாக வாழ்க்கையின் சரியான அர்த்தங்களை இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்டு மீண்டும் வாழ்க்கைக்கே திரும்பி வந்து அதைச் செம்மையாய் வாழ்வதே ஆகும்.

 

அந்தத் தற்காலத் தனிமைப் பரிசோதனைக்குப் பிறகு தோரோ நிறையப் புத்தகங்கள் மூலம் சக மனிதர் களைத் தொடர்பு கொண்டார். அவர் எழுதிய எழுத்துக்கள் பின்னால் கிட்டத்தட்ட அறுபது வருஷங்- களுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கச் சிறையில் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்னும் வேறொரு மனிதரின் உள்ளக் கனலைத் தீண்டி உசுப்பி விட்டது. வால்டன் ஏரி உயிர் பெற்று நீண்டு தோரோ வாழ்ந்த கான்கார்ட் நகரின் எல்லைகளையும் கடந்து இநதிய கங்கையைத் தீண்டியது போல் இருந்தது அந்த நிகழ்வு.

 

தொடர்புகள் எந்த ரூபத்திலும் நிகழலாம். மனிதப் பரிணாம வளர்ச்சியின், பல ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட- தொடர்பு சாதனங்கள் அறவே கண்டு பிடிக்கப் படாத-கற்கால வாழ்க்கையிலும் மனிதனின் சக மனிதத் தொடர்புக்கான தீவிர வேட்கை இருக்கவே செய்தது. கல் வெட்டுக் காலத்திலும் ஓலைச் சுவடிக் காலத்திலும் பின் பிற்காலத் தொழில் புரட்சி யுகத்தின் அச்சு இயந்திரக் காலத்திலும் அது வெவ்வேறு பரிமாணங்கள் கொண்டு புதுப் புது அவதாரங்கள் எடுத்தது.

 

வெறும் தகவல் பரிமாற்ற அளவில் அது தன்னைக் குறுக்கி கொண்டு நின்று விடுவதில் திருப்தி அடைந்து விடவில்லை.ஒரு தகவலையும் மீறி ஓர் உள்ளார்ந்த அனுபவப் பரிவர்த்தனையாய் அது விகசித்தது. இன்றைய நவீனத் தொழில் நுட்ப வளர்ச்சியின் விஸ்வரூபப் பரிமாணமான மின்னணு ஊடகங்களில் அதன் புது அவதாரம் எந்த வீச்சில். எந்தத் திசையில் யாரை இலக்கு வைத்துத் தன் பரப்பை விரிக்கப் போகிறதோ, நாம் அறியோம். ஆனாலும், ஊடக வடிவங்கள் தான் வேறுபட்டிருக்கின்றனவே ஒழிய, மனிதனின் உள் மனத்து அடி நாதங்கள் இன்னும் உருக்குலைந்து போய் விடவில்லை என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

ஒரு புறம் பிரமிக்க வைக்கும் அதி நவீனத் தொழில் நுட்பக் கருவிகளுக்கும்,  இன்னொரு புறம் இன்னும் மாறாத அந்த அதி பழைய கற்காலத்து விலங்கு உணர்வுகளுக்கும் இடையே அகப்பட்டுக் கொண்டு தனது மெய்யான அடையாளத்தைக் கண்டறிய முடியாமல் தவிக்கிறவனாகவே இன்றைய நவீன மனிதன் எனக்குத் தெரிகிறான். அவன் கண்டறிந்த, அவன் அடிமையாகி விட்ட அதி நவீனக் கருவிகளைப் போலவே, அவனது அன்றாட வாழ்க்கையும்  சிக்கலும் மன அழுத்தங்களும் நிறைந்ததாகி விட்டது. இன்றைக்குக் கிட்டத்தட்ட நூற்றைம்பது வருஷங்களுக்கு முன், வெறும் மூவாயிரம் பேர்கள் கூட மக்கள் தொகை இல்லாத ஓர் அமெரிக்கக் கிராமத்தையே துறந்து, தன்னை அறியப் பக்கத்தில் உள்ள காட்டை நோக்கிப் போன தோரோ இன்றைய நகர நெரிசலில் வாழ நேரிட்டிருந்தால் என்ன செய்திருப்பார்? அவர் புறப்பட்டுப் போக கண்ணுககெட்டிய தூரம் வரை காடே இருந்திருக்காது! காடென்ன, ஒரு மரம் கூடத் தென்பட்டிருக்காது. தூர்ந்து போன குளங்களும், காணமல் போன ஏரிகளும், தரிசாக்கப் பட்டு மனைகளாகிப் போன வயல்களுமே அவரை எதிர்கொண்டிருக்கும். இந்தக் கான்கிரீட் வனத்தின் மத்தியில் தோரோ தன் வால்டனை நிரந்தரமாய்த் தொலைத்துப் பறிகொடுத்திருப்பார்.

 

அப்போதும் தோரோ சோர்ந்து போயிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில், “A living dog is better than a dead lion” என்று ‘வால்ட’னில் எழுதியவர் அவர். செத்துப் போன சிங்கத்தைக் காட்டிலும் ஜீவித்திருக்கிற நாய், அப்படி ஜீவனோடு இருப்பதாலேயே என் கவனிப்புக்கு உள்ளாகிறது. சிங்கம் என்பதால் என்னால் அதன் பிணத்தைக் கட்டிக் கொண்டு அழ முடியாது. இப்போதைக்கு, ஜீவித்திருப்பவைகளோடு எனது தொடர்பை ஸ்தாபித்துக் கொள்வதே எனக்கு அவசரமும் அவசியமும் ஆகும். உயிர்த்திருப்பவைகளும் மரணித்துப் போய் இந்த மண் மலடாகி விடுவதில் எனக்கு சம்மதம் இல்லை.

 

பத்தொன்பதாம்  நூற்றாண்டில் வந்த ஒருவர், ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்று சொல்லித் தான் விரித்த கடையைச் சுருட்டிக் கொண்டார். இந்த நூற்றாண்டில் நம்முடனேயே சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கம்பீரமான மூத்த எழுத்தாளரோ, ” நான் கண்டதைச் சொல்லுகிறேன்..நீ அதைக் கவனிக்காமல் போனால் எனக்குத் தம்பிடி நஷ்டமுண்டோ?’ என்கிற தொனியியில்  ஒரு முப்பது வருஷங்களுக்கு  முன்னமேயே ஞானச் செருக்கோடு பாட்டு எழுதி வைத்தார். முன்னவருடையது விரக்தி. பின்னவருடையதோ கோபம். எனக்கு விரக்தியும் இல்லை; கோபமும் இல்லை. மாறாய் இது ஒரு அவஸ்தை. நான் பெற்றதை,பெறாததை,பெற எத்தனித்துப் பக்கம் வரைப் போனதை, இழந்ததை, ஈட்டியதை,

ஈட்டத் தவறியதை,ஈட்டி இழந்ததை, ஈட்ட முடியாததை, அறிந்ததை,அறிய முடியாததை, அறிய அலைந்ததை, அறிந்து மறந்ததை-இன்னும் அனைத்தையும் என் சக மனிதனோடு நான் பங்கிட்டுக் கொள்ளும் அவஸ்தை. எனது அடுத்த தலைமுறைக்கு நான் விட்டுச் செல்ல நினைக்கும் பிதுர்ரார்ஜிதமும் இதுவே. எனது அனுபவங்கள் அடுத்தவர்களுக்கு உபதேசங்கள் அல்ல. அவை அத்தகைய  தோற்றம் கொண்டு விடுகிற ஆபத்து நேரவும் கூடும் தான். ஆனால் அத்தகைய ஆபத்துகள் நேரா வண்ணம் அவற்றின் தூய்மையைக் கவனமாயும் பொறுப்பாயும் பாதுகாப்பாய் எனது சக இளைஞனுக்கு விட்டுச் செல்லவே நான் ஆசைப் படுகிறேன்.

 

இது நான் சமூகத்துக்குச் செய்கிற சேவையன்று. அத்தகைய  அகம்பாவங்கள் எதுவும் எனக்கு இல்லை. மாறாக எனது இருப்பைப் பிறர் மத்தியில் அடையாளம் காட்டிக் கொள்வதும், கூடவே பிறருக்கு அவர்களின் அடையாளங்களைக் காட்ட முயல்வதுமே இப்போதைக்கு எனது அவசியங்கள். அவை எந்த ஊடகத்தின் மூலம் நிகழ்ந்தாலும் எனக்கு சம்மதமே.

 

தொலைந்து போன அடையாளங்களை எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து தேடுவோம் வாருங்கள்!

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -1 மூன்று அங்க நாடகம் [முதற் காட்சி]சாய்ந்து.. சாய்ந்து
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *