சுரேஷ்குமார இந்திரஜித் ”நானும் ஒருவன்” (புதிய சிறுகதைத் தொகுப்பு) ஒரு வாசிப்பனுபவம்

This entry is part 30 of 32 in the series 13 ஜனவரி 2013

sureshkumar2013-01-09 05.39.33

    சிறுகதைத் தொகுதிகள் எவ்வளவோ வந்தாயிற்று. படித்தாயிற்று. தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. வரத்தான் செய்யும். படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். வாசிப்பை உழைப்பாய்க் கருதிப் பழக்கப்பட்டதனால் வந்த வினை இது. அப்படியிருப்பதனால்தான் இன்னொரு வசதியும். கொஞ்சம் படிக்க ஆரம்பிக்கும்போதே இது இப்படித்தான், இவ்வளவுதான் என்று புரிந்துகொள்வதும், ஒதுக்கி விடுவதும், குறிப்பிட்ட சிலதாய்ப் படிப்பதும்.

    இன்னொன்று, பலவற்றிலும் இருக்கும் ஒரு ஒற்றுமை. ஒரு தொகுதியின் மொத்தக் கதைகளில் நான்கு அல்லது ஐந்து மட்டுமே சிறந்த கதைகளாய்த் தென்படுவது. மற்றவை இவரின் இன்னொரு தொகுப்பில் இதேபோல் ஒன்று கண்டோமே…படித்திருக்கிறோமே என்று தவிர்க்கமுடியாமல் நெருடுவது. இப்படியாகத்தான் வதவதவென்று வந்து குவிகின்றன பலதும். போட்டுத் தள்ளுகிறார்கள் எல்லாவற்றையும். எனக்கும் புத்தகம் வந்து விட்டது, நானும் புத்தகம் வெளியிட்டிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். அவனவன் மனதுக்குத்தான் தெரியும் உண்மை.

    ஒரு நல்ல இலக்கிய வாசகன், படைப்பாளி, தன் மனதுக்கு நேர்மையாக இருந்தானானால் இதை உணர முடியும். எத்தனை பேர் இருப்பார்கள் என்பது கேள்வி. எத்தனை பேர் உணர்ந்தாலும் வெளியில் சொல்லிக் கொள்வார்கள் என்பதும் கேள்வியே. தன்னையும் தன் படைப்பையும் வலிய உயர்த்திப் பேசிக் கொள்வதில் ஒரு அபத்தப் பெருமை. மற்றவரைப் பேச வைப்பதில் ஒரு பொய்யான மகிழ்ச்சி. திருப்தி. மனதுக்கு நேர்மையா? என்ன சொல்ற நீ? அதெல்லாம் அந்தக்காலம்யா. என்ற குரல்கள் காதில் விழுகின்றன. ஆனாலும் இப்படிச் சொல்வதுதான் உண்மை.

    இந்த உண்மைகளுக்கு எதிர் சாட்சியாய் அனைவராலும் பேசப்படுவதுபோல், பேச வேண்டியதுபோல் அவ்வப்போது சில நல்ல புத்தகங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை அவர்களின் பெயர் சொல்லக் காத்திருக்கின்றன. காலத்தால் நிற்பதற்குத் தயாராய் இருக்கின்றன. தானே நின்று விடும் தகுதியையும் பெற்றிருக்கின்றன.  எவனும் தூக்கி நிறுத்தவும் வேண்டியதில்லை என்று தலை நிமிர்ந்து பார்க்கின்றன.

    வெளியிட்ட நான்கு தொகுதிகளிலும் ஒன்றிலிருந்து இன்னொன்று முற்றிலுமாய் மாறுபட்டு, வெவ்வேறு ரூபத்தில் பரிணமிப்பது என்பது துர்லபம். ஒரு கதைக்களம், அல்லது கரு இன்னொரு கதைக்குப் பாய்ந்து விடாமல், ஒவ்வொன்றும் விதவிதமாய், மாறுபட்ட விஷயங்களைத் தாங்கி, இதுவரை யாராலும் சொல்லப்படாத நடையில், உத்தியில், தனக்கேயுரிய தனித்துவத்தோடு (இந்தத் தனித்துவத்தை எப்படிக் கொண்டுவந்தார் என்பதுதான் ஆற்றாமை)  சிறுகதைகளை வழங்கியிருக்கும் பெருமையும், தலை நிமிர்வும் இவருக்கு நிச்சயம் உண்டு. அவர் திரு சுரேஷ்குமார இந்திரஜித்.

    இவரது அலையும் சிறகுகள், மறைந்து திரியும் கிழவன், (இரண்டும் சேர்ந்து மாபெரும் சூதாட்டம் என்ற தலைப்பில் காலச்சுவடு தொகுப்பாக வந்துள்ளது காண்க) அவரவர் வழி ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு அடையாளம் கூட இல்லாமல், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான கதைக்கருவையும், களனையும் உள்ளடக்கி முற்றிலும் வேறுவிதத்தில் கச்சிதமான, புதுமையான சிறுகதைகளாய் ”நானும் ஒருவன்” என்ற தலைப்பில் தற்போது ஒரு தொகுதி வந்துள்ளது. காலச்சுவடு வெளியீடாக.

    குறைவாக எழுதியிருப்பவர்தான் இவர். ஆனால் நிறைவாக எழுதியிருப்பவர். எண்ணிக்கையில் நிறையப் புத்தகங்களை அடுக்கி என்ன பயன்? எத்தனை மனதில், நினைவில் பதிந்திருக்கிறது, காலத்தால் நிற்கிறது, நிலைக்கிறது  என்பதுதானே முக்கியம்.

    மொத்தமே 24 சிறுகதைகள்தான் எழுதியிருப்பவர் மௌனி. அவை இன்றும் பேசப்படுவதும், தொடர்ந்து வாசிக்கப்படுவதும், புரிந்து கொள்ள முயலப்படுவதும், திரும்பத் திரும்ப வாசிப்பிலான வேளையில் வெவ்வேறு அர்த்தங்களை, புரிதல்களை உணர்த்துவதும் யாரால் மறுக்க முடியும்?

    தொடர்ந்த வாசிப்புப் பழக்கம் உள்ள ஒரு இலக்கிய வாசகன் அவனுக்கான  எழுத்துப் பயிற்சியில் ஒரு குறிப்பிட்ட வகையான எழுத்து முறைமைக்கு ஆளாகியிருக்கக் கூடும். வாசிப்பைக் கடுமையான உழைப்பாய்ச் செய்து பழகியவர்களுக்கு இது சாத்தியம். அப்படியான ஒருவகை எழுத்து கைகூடி வந்த பிறகு, அந்த இடத்தில் ஒரு படைப்பாளி தன்னை இனம் காண வேண்டும். அது முக்கியம். தனக்கென்று ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொள்வது அவசியம். (இந்த “பாணி“ என்ற வார்த்தை சி.சு.செ. அவர்களுக்குச் சொந்தமானது) அப்படித்தான் சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்கள் என்னால் அடையாளம் காணப்படுகிறார். தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு கோலோச்சுகிறார். அதனால்தான் இலக்கியப் பத்திரிகைகளும், பதிப்பகங்களும் இவரின் படைப்புக்களுக்காகக் காத்திருக்கின்றன.

    இவர் படைப்பில் அலங்காரமான நடை கிடையாது. அதீதமான பெரும் கற்பனைகள், பகட்டான சொற்கள்,  வலிந்த வார்த்தைகள், என்று எதுவும் இல்லை. ஆனாலும் எடுத்த எடுப்பிலேயே என்னவோ புதிய விஷயம் சொல்லப் போகிறார் போலிருக்கிறதே என்று, வாசகன் படித்துக் கொண்டே நகர்ந்து செல்லத்தான் வேண்டியிருக்கிறது. இதுவரை படிக்காத ஒன்றைச் சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே தவிர்க்க முடியாமல் நமக்கு வந்து விடுகிறது. அவரும்  வாசகனை ஏமாற்றுவதில்லை. அங்கங்கே அவ்வப்போது மனிதர்களுக்கிடையே வெளிப்பட்டு மறையும் போக்குகள்தான் எனினும், அம்மாதிரியான வெவ்வேறுவகையினர் சந்திக்க முற்படும்போது ஏற்படும் விபரீதங்கள், அதனால் உண்டாகும் விளைவுகள் நம்மை அதிரச் செய்கின்றன. ஒருவகையில் பார்த்தால் இம்மாதிரியானவற்றிலிருந்தெல்லாம் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வினை இவை ஏற்படுத்துகின்றன என்று கூடச் சொல்லலாம். எந்தவகையான சூழலிலும், இவ்வகைப்பட்ட ஜீவன்களிடம் நாம் சிக்கிக் கொண்டு விடக் கூடாது என்ற தற்காப்பு நிலையையும் நாம் பலப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

    வாழ்க்கை முரண்களின் அடையாளங்களாய் இருக்கும் கதாபாத்திரங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவிர்க்க முடியாமல் சிக்கல்களில் மாட்டிக் கொள்வதும்,  இக்கட்டுகளில் வலியத் திணித்துக் கொண்டு விடுபடமுடியாமல் மேலும் மேலும் தவறுகளைச் செய்துகொண்டே நகர்ந்து செல்வதும், எதிர்பாராமுடிவுகளைக் கண்டடைவதும், ஏன் இப்படியும் இருத்தல் ஆகாது என அங்கொன்றும் இங்கொன்றுமாக இவ்வாறும் சில சாட்சிகள் இருந்துகொண்டுதானே இருக்கின்றன என்று நிறுவுவதும், இவ்வகையான சிந்தனைகள் இவருக்கு எழுத எழுதத் தோன்றினவா, அல்லது முன் முடிவுகளில்தான் இந்த எல்கைகளைக் கண்டடைந்தாரா என்பதான வியப்போடே அடுத்தடுத்த படைப்புக்களை நாம் எதிர் நோக்கி நிற்கிறோம்.

    மனிதர்கள் அவர்களின் வாழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களாக மாறுகிறார்கள். அடிப்படையான பிறவிக்குணங்கள் என்பவையும் முரணாக நின்றால் அங்கே தவறுகள்  தோன்றுவதற்கு வாய்ப்புகள் அமைகின்றன.

    இந்த சமூகத்தில் எத்தனையோவிதமான மனிதர்களை நாம் பார்க்கிறோம். மாறுபட்ட மனநிலைகளைக் கொண்ட மனிதர்களுக்கிடையே எண்ண முரண்கள் ஏற்பட்டு, விலகல் உண்டாகி, மனதுக்குள் அது பகையாகி, அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமாகி, வெவ்வேறுவிதமான சிதைவுகளை எதிர்நோக்குகிறார்கள். இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையான மனநிலை அவர்களை பயங்கரமான செயல்களுக்கு ஆட்படுத்துகின்றன.

    சத்வ, ரஜோ, தமோ குணமுள்ள மனிதர்கள் அவரவர் குணங்களுக்கு ஏற்றாற்போல் நடந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஒவ்வொருவிதமான குணங்கள் இருக்கின்றன. சத்வ குணமுள்ள மனிதனிடத்தில் அவ்வப்போது ரஜோ குணமும், தமோ குணமும் தலையெடுக்கின்றன. ரஜோ குணமுள்ள மனிதனிடத்தில் அவ்வப்போது சத்வ குணமும், தமோ குணமும் தலையெடுக்கின்றன. தமோ குணமுள்ள மனிதனிடத்தில் சத்வ, ரஜோ குணங்களும் தலையெடுக்கின்றன.

    ஒருவன் சத்வ குணத்துக்கு ஆட்பட்ட மனிதனாக இருந்தால் அவனிடம் சுயநலச் சிந்தனைகளும், காம இச்சைகளும் தோன்றாது விலகிவிடும். அவன் ஞான வேட்கை உள்ளவனாக இருப்பான்.

    தவறான ஆசைகள், பொருள்களை அடைய வேண்டும் என்ற முடிவற்ற வேட்கை, அடைந்து விட்ட பொருள்களின் மேல் அளவில்லாப் பற்று, இவற்றினால் முடிவற்ற செயல்களில் ஈடுபாடு –  இவ்வாறு முழுமையாய் இவ்வுலகச் செயல்பாடுகளில் உழல வைக்கும் மனம் ஆகியவையே ரஜோ குணத்தின் வெளிப்பாடுகள்.

    அறிவு வேட்கை அற்றவர்களாக, தெளிவில்லா குணத்துடன், அசட்டை, சோம்பல், உறக்கம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தமோ குணமுள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.

    இவ்வாறாக சுயநலச் சிந்தனை அற்று, தன் கடமை ஆற்றும் பரிசுத்த மனமுடையவர், சுயநல சிந்தனையுடன், ஆசையே வடிவெடுத்து செயலாற்றும் மனமுடையவர், செயலற்றவராக குழப்பத்துடன் உறங்கிக் கிடக்கும் சோம்பேறி என மூன்றுவிதமாக மனித இனத்தைக் கணித்திருக்கிறார்கள்  வேதகால மகரிஷிகள்.

    இந்த மூன்று வகையான குணங்களின் கலவை ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதுதான் உண்மை. இதன் அடிப்படையிலான மனிதர்களே இவரின் கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள்.

    அடுத்தவர்களோடு சண்டை போடுவதையே தன் குணமாகக் கொண்டிருக்கும் ஒருவன், சண்டைக்கான வாய்ப்பு எங்கு, எப்பொழுது கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருப்பவனாய் ஒரு பாத்திரத்தைப் படைத்து உலவவிட்டு, அவனின் வாழ்க்கைப் போக்கு எப்படியெல்லாம் அவனைக் கொண்டு செல்கிறது, சிக்கல்களைச் சந்திக்க வைக்கிறது, அதனால் எத்தகைய ஆபத்தை அவன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதுவுமாயும், அம்மாதிரியான குணம் கொண்டவன் தான் எதிர்கொள்ளும் விபரீதங்களை குண முரண்பாட்டுப் பழக்கங்களால் எதிர்கொண்டு மேலும் மேலும் சிக்கல்களை உருவாக்கிக் கொள்வதும்,  ஒரு சிலர் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டவர்களாய் எப்படி தப்பிப் போகிறார்கள் என்கிறவிதமாயும் இருவேறு முடிவுகளை ஒரு கதைக்குத் தந்து, இப்படியும் ஒன்றிரண்டு இருக்கத்தானே செய்கிறது என்பதாகத் தன் கதைக்கு முடிவாய் ஒரு யதார்த்தத்தை பலமாய் நிறுவுகிறார்.  புத்தகத்தின் தலைப்புக் கதையாய் அமைந்துள்ள நானும் ஒருவன் என்கிற சிறுகதை இதை நமக்கு உணர்த்துகிறது.

    இங்கே ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லித்தான் ஆக வேண்டும். சற்றும் இலக்கிய  வாசிப்புக்குப்,  பரிச்சயமில்லாத ஒரு சாதாரண சராசரி வாசகன் இதைப் புரிந்து கொள்வது கடினம். கதையின் முடிவிற்கான வித்தியாசத்தை உணர முடியாமல், முடிவைத் தவறாக இரண்டு முறை அச்சேற்றிவிட்டார்களோ என்று குழம்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இம்மாதிரியெல்லாமும் கதைகளைச் சொல்லலாம் என்ற முறைமையை, எழுந்திருக்கும் நவீனத்துவத்தின்  புதிய நடைமுறையை, படைப்பாளி தோற்றுவித்திருப்பதை  ஒரு வாசகன் உணரப்புகுந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்த முறையை ஏற்படுத்திய பெருமை திரு சுரேஷ்குமார் அவர்களையே  சாரும்.

    மனிதர்கள் இந்த உலகத்தை, எவ்வெவ்வகையிலோ ஏமாற்றுகிறார்கள். குறிப்பாக ஆன்மீக வேஷம் இதற்கு நன்றாகப் பொருந்துகிறது. மக்களின் உண்மையான இறை நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த வேஷம்தான் இங்கு பலிக்கும்  என்று போலிச் சாமியார்கள் பலர் அவ்வப்போது தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆன்மீகத்தின் அடையாளமாகத்  தங்களைப் பலமாக ஊன்றிக் கொண்டு, மக்களைச் சதும்ப ஏமாற்றி அதன் மூலம் செல்வச் செழிப்புள்ளவர்களாக மாறி போலி இன்பங்களில் திளைக்கிறார்கள். அம்மாதிரியான ஒரு கதாபாத்திரத்தைப் படைத்து, மெல்ல மெல்ல மக்களின் பக்திச் சிந்தனைகளுக்கேற்ப தன்னை சாமர்த்தியமாய் மெருகேற்றிக் கொண்டு எப்படி உச்சிக்குச் சென்று வசதியாய் உட்கார்ந்து கொள்கிறார் என்பதான ஒரு மெல்லிய பின் நவீனத்துவ பாணியிலான கதையை படு சாமர்த்தியமாய் புனைவாய்ச் சுருட்டி நம்முன்னே விரித்து விடுகிறார். திரும்பத் திரும்ப ரசித்துப் படிக்கத் தூண்டும் ஒரு கதை மட்டாஞ்சேரி ஸ்ரீதரமேனன்.

    என் நண்பர் ஒருவரிடம் ஒரு பழக்கமிருந்தது. அவர் ஒரு அலுவலகத்தில் பணிபுரிபவர். அவரது மனைவி தொலைபேசி இலாகாவில் பணிபுரிகிறார்கள். இவர் அலுவலகம் முடித்து மாலை ஆறு ஏழுமணிவாக்கில் வழக்கமாய் வீடு வந்துவிடுவார். மாலை நாலு மணிக்கு மேலான ஷிப்ட்டுக்குச் சென்றிருக்கும் அவரது துணைவியார் இரவு பதினோரு மணிக்கு மேலும், சமயங்களில் பன்னிரெண்டு, ஒரு மணிக்கு மேலும் பணி முடித்து வெளியேறுவார்கள். அலுவலகத்தின் ரெஸ்ட் ரூமில் உடன் பணியாற்றும் பெண்மணிகளோடு படுத்து உறங்கிவிட்டு காலையில் வரலாம்தான். ஆனால் என் நண்பருக்கு வீட்டில் தனியே இருக்க மனமில்லை. எனவே பதினோரு மணிக்கு மேல் போய், அவரது துணைவியாரைக் கூட்டி வருவார். அப்படி வீடு திரும்புகையில் கடந்து வரும் வழி அத்தனை பாதுகாப்பில்லை என்பார். இதற்காக தற்காப்புக்கு என்று இடுப்பிலே ஒரு கத்தி செருகியிருப்பார். இது அவர் துணைவியாருக்குக் கூடத் தெரியாது.

    என்னடா, அந்தளவுக்கு நீ தைரியசாலியா? கேட்டேன் நான். அசட்டுத் தனமாய் அதை எடுத்துக் கையில் பிடிக்க, அந்த நேரம் வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தேன். அவருக்கு அது பொருந்தாது என்பது என் எண்ணம். அவர் சொன்னார். அது என்னிடம் இருப்பது என் மனதுக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. நான் தைரியமாக இருட்டில் வழிகளைக் கடந்து வருவதற்கும், பாதுகாப்பாக வீட்டை அடைவதற்கும் எனக்குப் பேருதவியாக இருப்பது அதுதான் என்றார். நான் சொன்னேன். இது சரியல்ல. பேசாமல் ஆபீசிலேயே படுத்திருந்துவிட்டு காலையில் புறப்பட்டு வரச்சொல். அதுதான் சரி என்று. வாராவாரம் ஷிப்ட் மாறத்தானே போகிறது. ஏதேனும் ஒரு வாரம் அல்லது இருவாரம்தானே இம்மாதிரி. என் சரியான முடிவை அவர் கேட்கவில்லை என்பது வேறுவிஷயம். அதை விடுங்கள். இன்றுவரை அந்த விஷயம் என் மனதை உருத்திக் கொண்டிருக்குகிறது. இதே போன்ற ஒரு மனநிலை உள்ள ஒரு கதாபாத்திரத்தை இத்தொகுதியில் உள்ள ஒரு கதையில் உருவாக்கியிருக்கிறார் கதாசிரியர். கதைக்குப் பெயர் உறையிட்ட கத்தி. தன் மகனைக் கொன்றவர்களுக்கு நல்ல சாவு கிடையாது , விபத்திலேதான் செத்துப் போவார்கள் என்று மனதார நம்புகிறார் அந்தப் பெரியவர். அவர் எப்போதும் கையிலே கத்தி வைத்திருப்பவர். மனைவி இறந்து போய்விட்டாள். மகன் கொலை செய்யப்படுகிறான். மகள் தற்கொலை செய்து கொள்கிறாள். மிஞ்சியிருப்பது மருமகள் மட்டும்தான். மகனைக் கொன்றவர்களுக்கு நல்ல சாவு கிடையாது என்று நினைத்திருந்தவருக்கு எதிர்மறையான விளைவுதான் எதிரே வந்து நிற்கிறது. அவரது மருமகள்தான் விபத்திலே மாட்டி மரிக்கிறாள். கத்தியை என்னிடமிருந்து பிடுங்கிவிட்டால் நான் தைரியமிழந்து இறந்து விடுவேன் அல்லது பைத்தியமாகிவிடுவேன் என்று நினைத்துக் கொள்கிறார். ரொம்பவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் இந்தக் கதையில் உலா வருகிறது. இப்டியெல்லாமா கதை எழுதறாங்க என்று உடனே வாங்கிப் படிக்கத் தோன்றுகிறதல்லவா? இலக்கிய ஆர்வலர்கள் உடனே படிக்கத் துடிப்பார்கள்

    மூன்று பெண்கள் என்று ஒரு கதை. ஒரு பிராமணக் குடும்பம். அதில் உருப்படாத அப்பா. பையனும் அப்படி வீணாய்ப் போய் விடக்கூடாதே என்ற பயத்தில் கவனமாய் வளர்க்கும் அம்மா.

    வாழ்க்கையற்றுப்போய், சாபக்கேடுக்கு ஆட்பட்ட குடும்பமும், அது வளர்ச்சியற்றுப்போன கதையும் ஊடாடுகிறது இதில்.

    வாழ்க்கையிழந்த இரு பெண்கள், அதற்கான காரணநிகழ்வுகளை நம்பும் மூத்த தலைமுறை, இவை அப்படியல்ல, எல்லாமும் தற்செயல் நிகழ்வுகளே என்று சொல்லி, அப்படியான ஒரு குடும்பத்தில் துணிந்து பெண் எடுத்து, இப்பிரபஞ்சமே புதிர், சமயங்களில் வாழ்க்கையும் அப்படித்தான் என்று ஒரு குழந்தையைத் தத்தெடுக்கத் துணியும் அவன். வீட்டில் ஆண்மகனின் துணையின்றி அல்லல்பட்டு பையனை நன்கு வளர்த்தெடுத்த தாய். ஆக மூன்று பெண்களின் கதை கச்சித வடிவம். சொல்ல வந்தது வாசிப்போர் மனதில் பச்சென்று உட்கார்ந்து கொள்கிறது. சொல்ல வந்த விஷயத்தை நறுக்கென்ற பேசி  அநாயாசமாய் நகர்ந்து முடிந்து விடும் கதை.

    ரெட்டைக் கொலை என்று ஒரு கதை. ஒரு சூழலை எப்படி வர்ணிப்பது என்பதற்கு இவர் மெனக்கெடுவதேயில்லை. ஏற்கனவே படித்ததுபோலவோ, இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று வகுத்துக் கொண்டது போலவோ இவர் சொல்வதில்லை. கண் முன் காணுவதை படு சாதாரணமாய், ஒரு சாதாரண மனிதனின் பார்வையில், எழுத்தாளனுக்கான எந்தப் பவிசும் இல்லாமல் சொல்லிச் செல்வது பளிச்சென்று பதிந்து போகிறது மனதில். உதாரணத்திற்கு ஒன்று பாருங்கள்.

    வக்கீல் அலுவலகத்திற்கு முன் ஒரு பெரிய அரசமரம் இருப்பது அந்த அலுவலகத்திற்கு ஒரு தோற்றத்தையும், நிறைய வாடிக்கையாளர்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று மந்தை வீரன் நினைத்துக் கொண்டான். அங்கு இருந்த கூட்டத்தைப் பார்த்ததும், ஜெயித்துவிடலாம் என்று தோன்றியது. பணம் நிறைய செலவாகுமோ என்ற எண்ணமும் ஏற்பட்டது. கருப்புக்கண்ணாடி அறைக்குள் வக்கீல் இருந்தார். வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் மந்தை வீரன் அமர்ந்திருந்தார். வரவேற்பில் இருந்த பெண் அடிக்கடி வரும் தொலைபேசி அழைப்புகளுடன் பேசிக்கொண்டே வருகிறவர்கள் பெயர்களைப் பதிவேட்டில் குறிப்பதையும், சுறுசுறுப்பாகச் செய்து கொண்டிருந்தாள். அவள் இடது புருவத்திற்கு மேல் ஒரு மரு இருந்தது..

    வரிகளைக் கடந்து செல்லச் செல்ல ஸ்வாரஸ்யம் தானாகவே வந்து விடுகிறது. ஏனென்றால் சும்மா சும்மா அம்மா, அப்பா, தங்கை, அண்ணன், தம்பி, என்று ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே உப்புச் சப்பில்லாத பிரச்னைளை வைத்து திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கும் கதைகளைவிட, எழுதியதையே எழுதிக் கொண்டிக்கும் படைப்பாளிகளை விட, புதிய களம், புதிய கரு, புதிய கதை சொல்லல் என்று காண முற்படும்போது, ஒரு இலக்கிய வாசகனின் தேடலில் இனம் புரியாத உற்சாகமும், உத்வேகமும், வந்து சேருகிறது. படைப்பாளியை அவன் படைப்பை வைத்து மதிப்பிடுதலில் தீர்மானங்கள் தோன்றுகின்றன. கசடுகளை உடனுக்குடன் புரிந்து கொண்டு ஒதுக்கித் தள்ளும் மனோபாவம் பழக்கப்படுத்தப் படுகிறது. இப்படித்தான் இந்தத் தொகுதியில் உள்ள அனைத்துக் கதைகளும் நம்மைத் திரும்பத் திரும்பப் படிக்க வைக்கின்றன.

    ஒரு திருமணம் என்கின்ற சிறுகதையில் ஆண்டாள் கோதை நாச்சியாரின் அரங்கனுடனான திருமணம் பற்றி ஒரு யதார்த்தத்தோடு அணுகி எப்படி சாத்தியம் என்பதாக ஒரு கேள்வியை வாசகர்கள் முன் வைத்து, எப்படி சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்கின்ற வகையிலான ஒரு புனைவை முன்னிறுத்தியிருக்கிறார்.

    டைம்ஸ் இன்று இதழில் வெளிவந்த அப்பத்தா என்கிற சிறுகதை நம் மனதை மிகவும் நெருடச் செய்யும் படைப்பு. மனித வாழ்க்கையில் மன மாற்றங்கள், செயல் மாற்றங்கள் பலருக்கும் ஏதோவொரு எதிர்பாராப் புள்ளியில்தான் நிகழ்கின்றன. அதற்கு மிகச் சாதாரணமான ஒரு விஷயம் கூடக் காரணமாக அமைந்து விடக் கூடும். நம் நடைமுறை வாழ்க்கையில் நம் அம்மாவைப் போலவோ தந்தையைப் போலவோ இருப்பவர்களிடம் நாம் நம்மையறியாமல் மரியாதை கொள்வதுவும், நம் சகோதரியின் சாயல்களில் இருப்பவர்களிடம் நம்மை மீறிய அன்பினைப் பகிர்ந்து கொள்வதுவும் தவிர்க்க முடியாமல் பலரின் வாழ்விலும் நிகழக் கூடிய ஒன்று. அப்படியான ஒரு நடிகையின் மீதான அதீதப் ப்ரீதி காலம் கடந்த பொழுதின் ஒரு நிகழ்வின் நேர்பார்வையில் மனமாற்றத்தை ஏற்படுத்துகிறது ரத்னகுமாருக்கு. வாழ்க்கையின் ஓட்டத்தில் இம்மாதிரியான ஒரு புள்ளியில் ஏற்படும் மாற்றங்களைப் பலரும் குறிப்பாய் உணருவதில்லை. அம்மாதிரி ஒன்றைக் கண்டுணர்ந்து அதை அந்த நுணுக்கம் குன்றாமல் படைத்தளிப்பதுதானே படைப்பாளியின் வேலை.

    நவீனத் தமிழ் இலக்கியத்தில் பின் நவீனத்துவம் என்பது பலரும் புரிந்தும் புரியாமலும் உபயோகப்படுத்தும் சொல்லாட்சியாக உள்ளது. அவரவர் அவரவரின் மனப்போக்கிற்கேற்றாற்போல் வாசிப்பு அனுபவத்திற்கேற்றாற்போல், புரிதலுக்கேற்றாற்போல் இதுபற்றி சிலாகித்துச் செல்கிறார்கள். சென்றிருக்கிறார்கள். அப்படிப் புரிந்து கொண்டதாகக் கருதிக் கொள்பவர்கள், அல்லது உண்மையிலேயே புரிந்து கொண்டவர்கள் வெளியே சொல்லத் தயங்கும் விஷயங்களையும், இதுதான் பின் நவீனத்துவம் என்று அறுதியிட்டு நிலைநிறுத்த முயலுவதுமாகிய செயல்கள் நிறைய நடைபெறுகின்றன. இந்தப் பின் நவீனத்துவம் ஒருவகையான எரிச்சலில் எதற்கு இந்தப் போலித்தனம் என்பதுபோல் இங்கே பகடியாக்கப் படுகிறது. அப்படித்தான் பின் நவீனத்துவ்வாதியின் மனைவி என்ற ஒரு சிறுகதையைப் புரிந்து கொள்ள முடிகிறது. இக்கதையைப் படித்துவிட்டும் ஏற்றுக் கொண்டும், ஏற்றுக் கொள்ளாமலும் பலரும் முரண்பட்டுச் செல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படியேதான் பின்நவீனத்துவமும் இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

    அடுத்ததாகக் கணியன் பூங்குன்றனார். அற்புதமான கதை. இக்கதையைச் சொல்வதற்கு முதலில் படைப்பாளிக்கு ஒரு துணிச்சல் வேண்டும். எழுத்து என்பதன் உண்மையான அர்த்தம் இங்கே பரிபூரணத்துவம் பெறுகிறது. கதையின் ஊடாக ஊன்றி நிற்கும் ஒரு கருத்து எப்படி எதிர்மறையான பகுதியில் இருந்து தவிர்க்க முடியாமல் வெளிப்படுகிறதோ அப்படியே படைப்பாளியின் கருத்தும் ஊன்றி நிலைத்து நின்றிருந்தால்தான் இக்கதையை எழுதி நிரூபிக்கத் தோன்றியிருக்கும்.

    யாதும் ஊரே யாவரும் கேளீர். இது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. ஏழ்மை நிலையில் வாழ்க்கைப் போராட்டத்தில் இருப்போர் எல்லோருமே ஓர் ஜாதிதான். அதில் ஏற்றத்தாழ்வு காண்பதற்கில்லை என்கிறார் ஆசிரியர் இப்படைப்பில். இக்கருத்தை ஓர் திராவிடக் கட்சியைச் சேர்ந்த அல்லது திராவிடக் கொள்கைகளில் பற்றுள்ள ஒரு அரசியல்வாதியின் மூலமாகச் சொல்லிவிடுவதில் படைப்பாளிக்கு ஏற்பட்ட உண்மையான முனைப்புதான் இக்கதையின் சாரம். திராவிட இயக்கக் கோட்பாடுகளில் ஆழ்ந்தவன் மனித நேயம் மிக்கவனாக இருக்கக் கூடாதா?

    மனித நேயம் என்பது மனித சமுதாயத்திற்குப் பொதுவானதுதானே? இருக்கலாம்தான். ஆனால் அதை வெளிப்படுத்தக் கூடாது என்பதுதான் கோட்பாடு. நம்முள்ளேயே இன்னும் அப்படிப் பலரும் இருக்கும்போது, செய்யும் உதவியை அவர்களுக்குச் செய்வதுதானே நியாயம். அதை உயர்ந்த ஜாதியைச் சார்ந்த ஒருவனுக்கு (அவன் ஏழ்மை நிலையில் இருந்தாலும் கூட) ஏன் செய்ய வேண்டும்? என்கிற கேள்வியும்  கதையின் முடிவாக வீசப்பட, கோட்பாட்டைத் தாங்கி நிற்கும் உங்களிடம் இல்லாத முரணா?  என்று பதில் கேள்வியும் கேட்கப்பட்டு இறுதியில் மனித நேயமே உயர்ந்தது என்கின்ற கருத்து நிறுவப்படுகிறது.

    பேனாவின் முனை கூர்மையானது என்பது உண்மையாக இக்கதையில் வெளிப்பட்டிருக்கிறது.

    நாம் நம் வாழ்க்கையில் பிறர் மேல் இரக்கப்பட்டு உதவி செய்து அதனாலும் கூட எதிர்பாரா சங்கடங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அப்படியான ஒரு சிறு சம்பவத்தின் தாக்கமாகத்தான் மினுங்கும் கண்கள் என்ற தலைப்பிலான சிறுகதை இத்தொகுப்பில் நம்மை மிகவும் நெருக்கமாக வாசிக்க வைத்து பயமுறுத்துகிறது. உதவிகள் செய்வதைக் கூட, ஒருவர் மேல் இரக்கம் கொண்டு ஆதரிப்பதைக் கூட இடம், பொருள், ஏவல் பார்த்துப் பாதுகாப்பாகச் செய்ய வேண்டிய காலம் இது என்பதைக் கழுத்தில் கத்தியை வைத்து மார்பில் அமர்ந்து மிரட்டும் அந்தச் சிறுவனின் மினுங்கும் கண்கள் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு சிறு சம்பவம்தான். ஆனால் அதைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் தோரணமாய் கதை விரியும்போது, புனைவுகள் நிகழ்வுகளோடு யதார்த்தமாய்ப் பொருந்தி நகர்ந்து எப்படி இலக்கிய விசாரமாய் வடிவம் கொள்கிறது என்று அருமையாக உணர்த்துகிறது இக்கதை. கதையின் கடைசிப் பத்தி இது.

    அந்தோணிராஜூக்கு அந்தச் சிறுவன் வேண்டுமென்றே கத்தியைத் தொண்டையில் அழுத்தி வெட்டாமல், லேசாகக் கீறியிருப்பதாகத் தோன்றியது. சாப்பாடு போட்ட நன்றிக்காக, லேசாகக் கீறியிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டார். ஆனால் அவர் சந்தித்த அந்தச் சிறுவனின் மினுங்கும் கண்கள் அவரை அச்சப்படுத்திக் கொண்டிருந்தன. அச்சம் அவருக்கு மட்டுமல்ல. நமக்கும்தான்.

    மனைவிகள் என்பது ஒரு கதையின் தலைப்பு. குடும்பங்களில் மனைவிகள் பல தரப்பட்டவர்களாயிருக்கிறார்கள். தன் குணத்திற்குக் கணவன் இணங்கி வர வேண்டும் என்பதாயும், கணவனின் குணத்திற்குத் தன்னை சமன் செய்து கொள்ளும் போக்காகவும், அவனின் பலவீனங்களை அணைத்துச் செல்லும்விதமாகவும், தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும் வகையிலும், ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்க்கையின் விதியே என்றும், குடும்ப அமைப்பின் கட்டுக்களை அறுக்க இயலாதபடியும், சமூகத்திற்கு பயந்தும் என்று பலவகைப்பட்ட மனைவிகளை நாம் காண்கிறோம். இப்படியான பலவற்றில் ஒன்றிரண்டைக் குறிப்பாகக் கவனித்து நேர்த்தியான சம்பவங்களோடு சேர்த்து மாலையாகக் கோர்க்கப்படும்பொழுது அது தேர்ந்த ஒரு படைப்பாக உருவாகிப் பரிணமிக்கிறது. அப்படியொரு அவசியமான படைப்புதான் மனைவிகள்.

    சுமாரான தோற்றத்திலிருக்கும் பெண்ணைக் கூர்ந்து கவனித்தால் அழகையும், கவர்ச்சியையும் கண்டுபிடிக்க முடியும் என்று ரயிலில் மனைவி கூடவே பயணம் செய்கையில் பிறிதொரு பெண்ணை ரசிக்கும் கணவன். அது அவர் பழக்கம், அதுக்கென்ன செய்றது என்று அதை சகஜமாக எடுத்துக் கொள்ளும் மனைவி! எப்படி இந்த சகஜம் வெளிப்படுகிறது. வண்டியில் செல்கையில் ரோட்டைக் கவனிச்சு ஓட்டுங்க…என்கிறாள் அவள்.

    சிறுநீர் பாதையில் ஏற்பட்ட பிரச்னைக்கு மருத்துவமனையில் இருக்கும்போதும் நர்சுகளை ரசிக்கிறான் கணவன். அறுவை சிகிச்சையின்போது வலி தெரியாமல், உணராமல் நர்சுகளைப் பார்த்தே பொழுதைக் கழித்துவிட்டு அதை மனைவியிடம் சொல்லவும் செய்கிறான். ஆப்பரேசனுக்கெல்லாம் பொம்பளை நர்சுகளையா வைக்கிறாங்க? என்கிறாள் அவள்.

    nஉறரிடிட்டரி என்கிறோம். ஜீன்ஸ் என்கிறோம். அது எப்படி சரியில்லாமல் போகும். பையன் இப்படியிருந்தால் தந்தை? தந்தையைவைத்துத்தான் பையன் என்பதை இங்கே மாற்றிப் பாருங்கள். கதை அப்படித்தானே வருகிறது.

    அவர் இறந்தபோது “அவள்“ வருகிறாள். பிணத்தைப் பார்க்கக் கூடாது என்று மாமன் சொல்ல, அந்தத் தேவடியாள் வந்து பார்த்துவிட்டுப் போகட்டும் என்கிறாள் அம்மா. அங்கேயும் ஒரு பெண்ணின் அதாவது மனைவியின் தன்மை வித்தியாசப்படுகிறது. கணவனுக்கு சமன் செய்து கொண்டு சென்ற போக்கு வெளிப்படுகிறது.

    பார்த்துவிட்டுத்தான் போகட்டுமே…! என்று பையன் நினைக்கிறான். அது அப்பாவின் குணமாய் அடையாளம் சொல்கிறது. அப்பன் வைப்பு வைத்திருந்தால் பையன் திருமணத்திற்குப் பின்பும் பிற மாதர்களை ரசிக்கும் பழக்கமுடையவனாய், பலவீனனாய் இருப்பது என்பது விட்டகுறை தொட்டகுறைதானே? ஏதேனும் ஒரு அடையாளம் வேண்டாமா?

    கணவனும் மனைவியும் சாவுக்குப் போன இடத்தில் துக்கமின்றி நிற்கிறாள் அந்த மனைவி. கணவன் இறந்த வருத்தத்தின் அடையாளம் தேடவேண்டியிருக்கிறது. ஆனாலும் சமூகத்தின் முன்னால் துக்கத்தில் இருப்பவள் போல் நடிக்கக் கூட இல்லையே…? இப்படி ஒரு மனைவியா? என்று நாமும் கேட்டுக் கொள்கிறோம். மனைவிகள் பலதரப்பட்டவர்கள்தான். ஆனால் கணவன்களும் அப்படித்தான் என்பதுவும் உள்ளே பொதிந்திருக்கிற உண்மைதான். இது மனைவிகளைப் பற்றி மட்டுமான நல்ல கதை.

    கொலை செய்யும் கூலிப்படை மனிதர்களைப்பற்றிய கதைதான் அந்த மனிதர்கள். இன்ன இடத்தில் இந்தத் தேதியில், இந்த நேரத்தில் இவனைத் தீர்த்து விடு என்று திட்டமிட்டால் அதை அப்படியே மூர்க்கமாக ஏற்று, நிறைவேற்றிவிடுபவர்கள்தான் அவர்கள். மூளையையும், மனதையும், மழுங்கடிக்கச் செய்யும் போதையின் உச்ச நிலையில் குறி வைத்தவனின் வேதனைகள் மதியில் தோன்றாமல் கொடூரங்களைச் செய்பவர்கள்.

    ஆனாலும் ஏதேனும் ஒரு கணத்தில் இந்தப் பாபச் செயலை உணராமலா இருப்பார்கள்? இதற்கு மன்னிப்பே கிடையாது என்பதை நினையாமலா போவார்கள்? மனித மனம் என்பது அவர்களுக்குள்ளும் இருக்கிறதுதானே?

    அப்படி ஒரு கொலைக்குத் திட்டமிட்டுக் கிளம்பும் ஒரு கும்பலில் குறிப்பிட்ட இடத்திற்குப் போய்ச் சேரும்முன் வழியில் விபத்தில் மாட்டிய ஒருவனுக்கு உதவி செய்ய முனைகிறான் ஒருவன். கொலை செய்பவனே ஆனாலும் அவனுக்கும் மனிதாபிமானம் என்பது உண்டுதான் என்று சொல்ல முனைந்திருக்கும் கதை. எடுத்துக்கொண்ட கருவும், சொல்லும் முறையினாலும் இக்கதை சுவாரஸ்யப்படுகிறது.

    இப்படியான மாறுபட்ட படைப்புக்களைத் தாங்கி நிற்கும் இத்தொகுதி கவனிக்கப்படவேண்டியது.  நிச்சயம் கவனிக்கப்படும். இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் இந்தப் புதுமையான கதை சொல்லியைப்  பாராட்ட வேண்டும். மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகளைத் தன்னகத்தே கொண்டு ஜம் ஜம்மென்று பயணிக்கிறது இத்தொகுதி. ஒரு படைப்பாளியைத் தலைநிமிர்ந்து நிற்க வைக்கும் தொகுதியாகப் பரிணமிக்கிறது.

    புதிதாக எழுத முனைபவர்களும், ஏற்கனவே எழுதிக் கொண்டிருப்பவர்களும், பார்த்துப் படித்து, பிரமித்து, இம்மாதிரியான ஒரு உத்தியில் நாம் இதுவரை எழுத முனையவில்லையே என்று வியப்படையக் கூடும். நாமும் இப்படிப் புதுமைகளை எழுத்தில் கொண்டுவர வேண்டும் என்று முனையக்கூடும். அப்படிப்பட்டதொரு மனநிறைவளிக்கும், மாறுபட்ட, புதுமையான, விறுவிறுப்பான, நவீனத் தமிழிலக்கியத்தின் சிறுகதைப் பரப்பின் முன்னோடிகளின் சாயலில்லாத, எல்கைகளை விரிவுபடுத்திய, தனித்துவம் வாய்ந்த சிறுகதைத் தொகுதிதான் காலச்சுவடு வெளியீடாக ஜனவரி 2013 ல் வெளிவந்துள்ள திரு சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களின் நானும் ஒருவன்.

 

            ————————————————————————

 

 

Series Navigation“சின்னப்பயல் எண்டால் சரியாகத்தானிருக்கு”ஐன்ஸ்டைனின் பிண்ட சக்தி சமன்பாடு (E=mc^2) வளைந்த பிரபஞ்சக் கால வெளியில் பயன்படுமா ?
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *