செவ்விலக்கியங்களில் உழவும் உழவரும்

This entry is part 17 of 32 in the series 3 பிப்ரவரி 2013

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

பழந்தமிழகத்தில் மக்களின் தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது. உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. அனைத்துத் தொழில்களும் உழவை மையமிட்டே அமைந்திருந்தன. உழவர்கள் சமுதாயத்தில் மதிப்புக்குரியவர்களாக வாழ்ந்தனர். இவ்வுழவுத் தொழல் குறித்தும் உழவர்கள் குறித்தும் பல்வேறு பதிவுகள் செவ்விலக்கியங்களாகிய சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இப்பதிவுகள் அவ்வுழவர் பெருமக்களின் வாழ்க்கை நிலையையும் அவர்களின் அறவாழ்வையும் காட்சிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.

உழவர்கள் நிலை

மனிதன் விலங்குகளை வேட்டையாடியும், ஆடுமாடுகளை மேய்த்தும் குறிஞ்சி முல்லை நிலங்களில் வாழ்ந்த கால கட்டத்தில் அந்நிலங்களில் வரகு, சாமை, தினை முதலியவற்றையும்  உழுந்து, பயறு அவரை முதலியவற்றையும் விளைவித்தான். ஆனால் விளைச்சலின் பயன் அவனுக்குப் போதுமானதாக இல்லை. தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்றுவதற்கு வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்த உழவர்கள் கடன்பட்டுப் வாழ்க்கை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை,

‘‘எருதுகாலுறாஅ திளைஞர் கொன்ற
சில் விளைவரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு கடைதப்பலின்
ஒக்கல் ஒற்கஞ் சொலியத் தன்னூர்ச்
சிறு புல்லாளர் முகத்தளவை கூறி
வரகுக் கடனிறுக்கும் நெடுந்தகை ’’ ( புறநானூறு : 327-வது பாடல்)

என்ற புறநானூற்றுப்பாடல் மொழிகின்றது.

எருதுகளைப் பிணித்து அவற்றின் காற்கீழ்ப் பெய்து கடாவிடுதலின்றி இளையர்கள் காலால் மிதித்தெடுத்த வரகாகிய புல்லிய குவியலில், வளைத்துக் கொண்ட கடன்காரருக்குக் கொடுத்தது போக எஞ்சியதைப் பசித்து வந்த பாணர் உண்டு வெளியேறினாராக, புறங்கடை வறிதாகலின் சுற்றத்தாருடைய வறுமையைக் களைய வேண்டித் தன்னூரில் வாழும் சிறிய புல்லாளர் முன்னே தனக்கு வேண்டுமளவைச் சொல்லி வரகைக் கடனாகப் பெறும் நெடிய புகழுடைய தலைவன் என்று, உழவன் தன் சுற்றுத்தாருடைய வறுமையைக் களைய வேண்டி வரகைக் கடனாகப்; பெற்ற செய்தியைப் மேற்குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கின்றது.

உழவர்கள் கடுமையாகப் பாடுபட்டாலும் அவர்கள் வறுமை மிக்க வாழ்க்கையையே வாழ்ந்தனர். வரகுந்தினையுமாகத் தன்மனையில் உள்ளவற்றை யெல்லாம் இரவலர் உண்டதனாலும் கொண்டதனாலும் தீர்ந்தன. தம் மனைக்கு விருந்தினராக வந்த பாணரை உண்பித்தற்பொருட்டு, வரகைக் கடனாகப் பெற முடியாமையால் கதிரிடத்தே முற்றி உலரவிட்ட விதைத்தினையை உரலிற் பெய்து குற்றிச் சமைத்து மனைத்தலைவியானவள் உணவிட்டாள் என்று உழவனின்  வறுமை நிலையினை,

‘‘வரகுந்தினையுமுள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுணக் கொளத்தீர்ந்தெனக்
குறித்து மாறெதிர்ப்பைப் பெறாஅ மையிற்
குரலுணங்கு விதைத்தினையுரல் வாய்ப்பெய்து
சிறிது புறப்பட்டன்றோவிலள்”  ( புறநானூறு : 333-ஆவது பாடல்)

என்ற புறநானூற்றுப் பாடல் இயம்புகின்றது. குறிஞ்சி நிலத்திலும், முல்லை நிலத்திலும் வாழ்ந்த இவ்வுழவர் பெருமக்கள் வறுமையில் வாடினாலும் பண்பில் உயர்ந்து ஓங்கி நின்றதைக் காண்கிறோம். இவ்வுயர்வுக்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அவர்கள் ஒருங்கிணைந்து குழுச்சமூகமாக வாழ்ந்தனர். அது பொதுவுடைமை வகைப்பட்ட கணசமூகமாகத் திகழ்ந்தது.

வேளாண் சார்ந்த தொழில்கள்

உழைக்கும் மக்களாகிய களமர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் உழைப்பால் உழவுத்தொழில் சிறப்புப்பெற்றது. ஆறு குளம் ஏரி முதலிய நீர் நிலைகளில் இருந்து உழவர்கள் வயலுக்கு நீர்பாய்ச்சினர், உழுது சேறாக்கித் தொளி கலக்கினர். பரம்படித்துப் பண்படுத்தினர். நாற்று நட்டனர். களை பறித்தனர். நீர்பாய்ச்சினர். பறவைகளும் விலங்குளும் பயிரை அழித்து விடாமல் பாதுகாத்தனர். நெல்லறுத்துப் போரடுக்கினர். பிணையல்அடித்துப் பொலி தூற்றினர். நெல்லை மலைபோலக் குவித்தனர். குவித்த நெல்லை நிலக்கிழார்களின் மனைகளில் இருந்த நெற் கூடுகளில் இட்டு நிரப்பினர். இத்தொழிலில் அடிமைகளான களமரின் உழைப்பு மிகவும் கடுமையானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உழவர்கள் உழுத உழவினை,‘நல்லேர் நடந்த நசைசால் விளைவயல் ’’ என்றும் ‘எருதெறிகளமர் ஓதை ’’ என்றும் சங்க இலக்கியங்கள் உழவு பற்றிக் கூறுகின்றன. உழவர்கள் வயலில் நீர் பாய்ச்சித் தொளிகலக்கி உழுது சேற்றை நிரவிப் பண்படுத்திய செய்தியை,

‘‘மிதியுலை கொல்லன் முறிகொடிறன்ன
கவைத் தாளலவன் அளற்றளை சிதையப்
பைஞ்சாய்கொன்ற மண்படு மருப்பிற்
காரேறு பொருத கண்ணகன்செருவின்
உழா நுண்டொளி நிரவிய வினைஞர்”

என்று பெரும்பாணாற்றுப்படை (207 -11) கூறுகிறது.

மெத்தென்ற துருத்தியை அமுக்கி ஊதுகின்ற உலையிற்கொற்றொழில் செய்கின்றவனுடைய முறிந்த கொடிற்றை யொத்த கப்பித்த கால்களையுடைய நண்டினது சேற்றின்கண் உண்டாகிய முழை கெடும்படி பசிய கோரையை அடியிலே குத்தியெடுத்த மண்கிடக்கின்ற கொம்பையுடைய கரிய கடாக்கள் தம்மிற் பொருத இடமகன்ற செய்யின்கண், தாம் உழப்படாத நுண்ணிய சேற்றை உழவர் ஒக்க மிதித்து நிரவினர் என்று நாற்று நடுவதற்கேற்ப நிலம் பண்படுத்தப்பட்ட உழவரின் செயல் இப்பெரும்பாணாற்றுப்படை வரிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

நாற்று நடுதலும் களைபறித்தலும்

தொளி கலக்கிப் பண்படுத்திய வயல்களில் கடைசியர் நெல்நாற்றை நடவு செய்தது பற்றியும் களைபறித்தது பற்றியும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ‘முடிநாறழுத்திய நெடுநீர்ச் செறு” என்று பெரும்பாணாற்றுப்படை இதனைக் குறிப்பிடுகிறது. வயலில் கடைசியர் களைபறித்தது குறித்தும் அந்நூல் கூறுகிறது. கடைசியர் களையாகப் பறித்த தண்டினை தமது கைகளில் வளையலாக அணிந்து அழகு பார்த்ததனை ‘கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்” என்று புறநானூறு  எடுத்துரைக்கிறது.

வயலிற்களை பறித்த கடைசியர் நெய்தற் பூவையும் முள்ளியின் பூவையும் தண்டாங்கோரையைப் பல்லால் சவட்டிக் கிழித்ததில் தொடுத்து ஈர் நிறைந்த தலையிற் சூடிக் கொண்டதை,

‘‘களைஞர் தந்த கணைக்கால் நெய்தல்
கட்கமழ் புதுப்பூ முனையின் முட்சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளிக்
கொடுங்கால் மாமலர் கொய்து கொண்டவண
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி
யீருடை யிருந்தலையாரச் சூடி’’

என்று பெரும்பாணாற்றுப் படை (211-18)  மொழிகிறது.

கொண்டையாகிய மயிரையும் குளிர்ந்த தழையுடையையும் உடைய கடைசியர், மலங்கு மீன் பிறழ்கின்ற செய்யில் நெய்தலையும் ஆம்பலையும் களைந்ததை,

‘‘கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்

சிறுமாணெய்தல் ஆம்பலொடு கட்கும்

மலங்குமிளிர் செறு.”

 

என்று  புறநானூறு (61) கூறுகிறது.

வயலுக்கு நீர் பாய்ச்சுதல்

களமர் கடைசியர் கடையர் என்று அழைக்கப்பட்ட உழைக்கும் மக்ககள் வரிசையாக நின்று இடா, ஏற்றம், பூட்டைப் பொறி, பிழா, பன்றிப் பத்தர் முதலியவற்றால் குளங்களில் இருந்து வயல்களுக்குத் தண்ணீர் இறைத்த காட்சியைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. வயல் தழைக்கும்படி நீரை நிறைத்தற்குக் காரணமான குளங்களில் நிரையாக நின்று தொழுவர்கள் நீரை இடாவால் முகந்து ஒலிக்கும் ஓசை : ஏற்றத்துடனே உலாவும் அகன்ற பன்றிப் பத்தரின் ஓசை: மெத்தென்ற கட்டுக்களையுடைய பூட்டைப்பொறியின் ஓசை : எருதுகள் பூண்ட தௌ்ளிய மணிகளின் ஓசை : பயிர்களிற் படியும் கிளி முதலியவற்றை ஓட்டும் ஓசை ஆகியன பற்றியும் சங்க இலங்கியங்கள் செய்தி கூறுகின்றன. பனையோலை யாற் செய்த பிழா என்னும் ஓலைப் பெட்டியால் உழவர் ஆற்றில் இருந்து வயலுக்கு நீர் இறைத்த செய்தியைச் சிலப்பதிகாரமும் மதுரைக்காஞ்சியும்,

‘‘நீர்த் தெவ்வு நிரைத் தொழுவர்
பாடு சிலம்பின் மிசை ஏற்றத்
தோடு விளங்கும் அகலாம்பியிற்
கயனகைய வயல் நிறைக்கும்
மென்றொடை வன்கிழார்” – மதுரைக் காஞ்சி : 89 – 95

‘‘ஆம்பியும் கிழாரும் வீங்கிசை ஏற்றமும்” (சிலம்பு)

என்று எடுத்துரைக்கின்றன.

நெல்லறுவடை செய்தல்

ஆறுகள் வெள்ளம் மாறாமல் வந்து விளைதல் பெருகுகையினாலே முற்றின நெல்லு காற்றடித்து அசைதலினாலே எழுந்த ஓசை, நெல்லரிவாரது ஓசையினை,

‘‘வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை’’( மதுரைக்காஞ்சி : 109 – 10)

என்று வயல்களில் வெள்ள நீர் பாய்ந்தமை குறித்தும் விளைந்த நெல்லைக் களமர் அரிந்தது பற்றியும் மதுரைக்காஞ்சி இயம்புகின்றது.

நீர் நிறைந்த வயல்களில் ஏர்கள் உழுதமை குறித்தும் ஆண்டைகளின் மனைகள் நெல்லால் நிறைந்தமை குறித்தும் அவர்கள் வாழும் தெருக்கள் பொன்னால் நிறைந்தமை குறித்து,

‘‘ஏர்பரந்த வயல் நீர்பரந்த செறு
நெல்மலிந்த மனை பொன்மலிந்தமறுகு” (புறநானூறு : 338)

என்று புறநானூறு காட்சிப்படுத்துகின்றது.

பயிர்களைப் பாதுகாத்தல்

பழந்தமிழகத்தில் மக்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டு வரகு தினை முதலியவற்றைச் சாகுபடி செய்த காலம் முதலே பயிர்களைப் பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். குறிஞ்சி முல்லை நிலங்களில் வரகும் தினையும் பயிரிட்ட எயினர்கள் யானை மான், பன்றி முதலிய விலங்குளாலும் கிளி மயில் புறா முதலிய பறவைகளாலும் பயிருக்கு ஏற்படும் சேதங்களினின்றும் அவற்றைப் பாதுகாக்கப் பரண் அமைத்துக் காவல் காத்தனர், பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் காவற்பணியில் ஈடுபட்டனர்.  குறிஞ்சி நிலத்தில் மகளிர் பகற்பொழுதில் பரண்மீதமர்ந்து கிளிகடி கருவிகளைக் கொண்டு பறவைகளை ஓட்டிக் காவல் காத்தமை பற்றி,

‘‘நெற்கொணெடு வெதிர்க்கணந்தயானை
முத்தார் மருப்பினிறங்குகை கடுப்பத்
துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல்
நற்கோட் சிறுதினைப் படுபுள்ளோப்பி
எற்பட வருதியரென நீ விடுத்தலிற்
கலிகெழு மரமிசைக் சேணோன் இழைத்த
புலியஞ்சிதண மேறி யவண
சாரற் சூரற் றகைபெற வலந்த
தழலுந் தட்டையுங் குளிரும் பிறவும்
கிளிகடி மரபினூழூழ் வாங்கி
யுரவுக் கதிர் தெறூஉம்”

என்று மதுரைக் காஞ்சி (35-45) கூறுகிறது.

இரவில் தினைப் புனங்காத்த எயினரைச் சேவல் கூவித்துயில் எழுப்பியது குறித்து,

‘‘வட்டவரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்”

என்று புறநானூறு (28) கூறுகிறது.

மருதநிலத்தில் வயல்களில் விளைந்துநின்ற நெற்பயிர்களைப் பாதுகாக்கும் பணியில் உழைக்கும் உழவர்களில்  ஆடவரும் மகளிரும் ஈடுபட்டிருந்தனர்.  இதனை,

‘கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து” – புறநானூறு 396

என்று புறநானூறு எடுத்தியம்புகின்றது.

மேலும், மகளிர் புதலிடத்தே மலர்ந்த தவள முல்லையின் பூவைத்தலைவிற் சூடிக் கொண்டு அரித்த ஓசையுடைய கிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த நெற்கதிர்களை உண்ணுவதற்கு வந்து படியும் பறவைகளை யோட்டிய நிகழ்வினை,

‘‘புதற்றளவில் பூச்சூடி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து” ( புறநானூறு : 395)

என்று புறநானூறு கூறுகிறது.

மலைபோல் தோன்றும் நெற்பொலி

களமர் வளைந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லையறுத்து நாடோறும் கடாவிட்டு மேருவென்னும்படி திரட்டின தொலையாத நெற்பொலியை நெருங்கத்தெற்றின குதிரின்கண் வெற்றிடம் இல்லை எனும்படி பெய்தனர் என்பதை,

‘‘கூனி குயத்தின் வாய் நெல்லரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவை இய குன்றாக் குப்பை’’

என்று பொருநராற்றுப்படை (242 – 48) கூறுகிறது.

கழனிகள் நீங்காத புதுவருவாயையுடையவை , அவற்றில் நெற்பயிர் விளைந்து முற்றியிருந்தது. பசுமையறும்படி முற்றின பெரிய கதிர்கள், அறுப்பார்க்கும் சூடாக அடுக்குவார்க்கும் பிணையலடித்துக் கடாவிடுவார்க்கும் பெரிதும் துன்பம் விளைப்பன, குளவிகள் கொட்டினாற் கடுப்பது போலக் கடுக்கும் தன்மையன, களமர் அக்கதிர்களின் திரண்டதாளையறுத்துக்கட்டுக்களாகக் கட்டிப் பிணையலடித்தனர். எருதுகள் போன பின்பு வைக்கோலையும் கூளத்தையும் நீக்கினர். ஈரம் உலரா நிற்க, பொலியை மேல் காற்றிலே கையாலே தூற்றினர். தூற்றிய நெல் மேருமலை போலக் குவிந்து கிடந்த காட்சியை,

‘‘நீங்காயாணர் வாங்கு கதிர்க் கழனிக்
கடுப்புடைப்பறவைச் சாதியன்ன
பைதற விளைந்த பெருஞ்செய் நெல்லின்
தூம்புடைத்திரள் தாள் மிதுத்த விளைஞர்
பாம்புறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலிபெறு வியன்களமலிய வேற்றிக்
கணங் கொள் சுற்றமொடு கைபுணர்ந்தாடும்
துணங்கையம் பூதம் துகிலடுத்தவை போல்
குழுமுநிலைப் போரின் முழு முதல் தொலைச்சிப்
பகடூர் பிழிந்த பின்றைத்துகள் தப
வையுந் துரும்பும் நீக்கிப் பைதறக்
குடகாற்றெறிந்த குப்பை வடபாற்
செம்பொன்மலையின் சிறப்பத்தோன்றும்”

என்று பெரும்பாணாற்றுப்படை (228-241) காட்சிப்படுத்துகிறது.

சூடடித்தல்

வயலில் களை பறித்த கடைசியர், வயலில் பிறழ்ந்து துள்ளிய மலங்கு, வாளை முதலிய மீன்களைத் தளம்பு என்றும் சேறு குத்தியால் பிடித்து வந்தனர். அதனைத் துண்டு துண்டாக அறுத்துச் சமைத்ததனைப் புதிய நெல்லில் சமைத்த வெள்ளிய சோற்றுக்கு மேலீடாகக் கொண்டு விலாப்புடைக்கத் தின்ற களமர், குனியமாட்டாதவராய், சூட்டை இடும் இடம் அறியாமல் தடுமாறிய காட்சியை,

‘‘கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாணெய்தல் ஆம்பலொடுகட்கும்
மலங்குமிளிர் செறுவிற்றளம்பு தடிந்திட்ட
பழனவாளைப்பரூ உக்கட்டு ணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கையுறையாக
விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனி சூடு தடுமாறும்
வன்கை வினைஞர்”  (புறநானூறு :61)

என்று கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் சுவைபட எடுத்துரைக்கின்றார்.

ஆமை முதுகில் கதிர் அறுக்கும் அரிவாளைத் தீட்டல்

உழவர்கள் வயலில் நெல்லறுத்துக் கொண்டிருந்தபோது அரிவாள் முனை மழுங்கிவிட்டது. அதனால் அவர்கள் விரைந்து நெற்கதிர்களை அறுக்க முடியவில்லை. அறுவடைக்குப் பயன்படும் கதிர் அரிவாளைத் தீட்டிக் கூராக்கினால் தான் தொடர்ந்து விரைவாக அறுக்க முடியும். எனவே களமர் வயலில் கிடந்த ஆமையின் முதுகில்முனை மழுங்கிய அரிவாளைத் தீட்டிக் கொண்டார்களாம். இக்காட்சியைப் புறநானூறு (379)

‘‘நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கிற்
பின்னை மறத்தோடரியக் கல் செத்து
அள்ளல் யாமைக் கூன்புறத்துரிஞ்சும்
நெல்லமல் புரவு ’’

என்று தெளிவாகக் காட்டுகிறது.

தானியங்களைச் சேமித்தல்

பழங்காலத்தில்விளைந்து வந்த வரகும் தினையும் குதிர்களில் சேமிக்கப்பட்டன. சேமிக்கப்பட்ட அவை அனைவருக்கும் பொதுவாக இருந்தன. அதன் அடையாளமாக அக்குதிர்கள் பொது இடமாகிய அரணின் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்தன. அவை யானைக் கூட்டம் போல் காட்சியளித்தன என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. நெல் விளைவிக்கப்பட்டு அந்நெல் நெற் கூடுகளில் சேமிக்கப்பட்டது. அக்கூடுகள் வளமனைகளில் தான் அமைக்கப்பட்டிருந்தன. ஏணிக்கு எட்டாத உயரமுடைய அக்கூடுகளில் களமர் தாம் விளைவித்த நெல்லைக் கொண்டு போய்ப் பெய்து சேமித்தனர் . இதனை,

‘‘ஏணி எய்தா நீணெடு மார்பில்
முகடு துமித் தடுக்கிய பழம்பல்லுணவிற்
குமரி மூத்த கூடோங்கு நல்லில்”

என்ற பெரும்பாணாற்றுப்படை (245- 47) வரிகள் எடுத்தியம்புகின்றன.

இங்ஙனம் செவ்விலக்கியங்கள் அக்கால மக்களின் தலையாய தொழிலாக விளங்கிய உழவையும், அத்தொழில் செய்துவந்த உழவர் பெருமக்களின் வாழ்க்கையையம் அழகுற எடுத்தியம்புகின்றன. உழைக்கின்ற மக்களின் உழைப்பும், அவர்களது பொதுவுடைமை மனப்பான்மையும் செவ்விலக்கியப் பாடல்களில் மிளிர்வது சிந்தனைக்குரியது.

 

Series Navigation5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலைவிஸ்பரூபம் : புரியத்தான் இல்லை
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *