டாக்டர் ஜி.ஜான்சன்
அப்போது நான் தமிழகத்தில் சிவகங்கை மாவட்ட திருப்பத்தூரில் பணியாற்றினேன். அது சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை.. அது 300 படுக்கை வசதி கொண்ட பொது மருத்துவமனை. நான்தான் அதன் தலைமை மருத்துவ அதிகாரி.
நிர்வாகப் பொறுப்புடன் மருத்துவப் பிரிவையும் நான்தான் பார்த்து வந்தேன்.
அன்று மாலை என்னைக் காண வந்த நடுத்தர வயதுடைய ஒருவர், கால் வலி என்று கூறி படுக்கையில் தங்க வேண்டும் என்றார். நான் அவரைப் பரிசோதனை செய்ததில் தங்கிப் பார்க்கும் அளவு அவருக்கு காலில் பிரச்னை ஏதும் இல்லை. மருந்து உட்கொண்டால் போதுமே என்று அவரிடம் சொன்னதற்கு ,தனக்கு கால் மிகவும் வலிக்கிறது என்றும் அதனால் குணமாகியபின்பு போவதாகக் கேட்டுக்கொண்டார். வேறு வழியின்றி நானும் சரி என்றேன்
அவரை படுக்கையில் சேர்க்க குறிப்புகளை எழுதியபோது. ” டாக்டர், எனக்கு தனி அறை வேண்டும் ” என்றார்..
ஒரு கணம் அவரை வியந்து நோக்கினேன். இதுபோன்று தனி அறை கேட்பவர்கள் மிகவும் குறைவு.
அது மிஷன் மருத்துவமனை என்பதால் பொதுப் பிரிவில் படுக்கை இலவசம். மருந்துக்கும், வைத்திய செலவுக்கும் கொஞ்சம் கட்டவேண்டும் அதற்கான பணத்தை சுவீடன் மிஷன் ஈடுசெய்தது. ஆனால் தனியறை வேண்டுவோர் இரட்டிப்பாக பணம் செலுத்த வேண்டும். அங்கு அறைக்குள்ளேயே கழிப்பறை, குளியலறை வசதிகள் இருந்தன.மிகவும் வசதியானவர்கள்தான் அதில் தங்குவது வழக்கம். இதுபோன்று பொது வார்டைச் சேர்ந்தமாதிரி மூன்று தனி அறைகள் இருந்தன. இதில் தங்க நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதைவிட இன்னும் பெரிய அறைகளும் சமையல் அறையும் கொண்ட தனி வார்டும் இருந்தது. அதன் பெயர் செட்டி வார்டு. அக்காலத்தில் சுற்று வட்டார வசதிமிக்க செட்டியார்கள் அங்குதான் குடும்பத்துடன் தங்கி சிகிச்சை பார்த்தனர். அதனால் அந்த பெயரே நிலைத்துவிட்டது. அதில் தங்க நாள் ஒன்றுக்கு 300 ரூபாய்.
நான் அவ்வாறு மௌனம் சாதித்ததின் பொருளைப் புரிந்துகொண்டவர்போல், ” என்ன டாக்டர்? பணம் பற்றி யோசிக்கிறீர்கள? அது பற்றிய கவலை வேண்டாம் எவ்வளவு ஆனாலும் கட்டிவிடுவேன்.” அவரின் குரல் கேட்டு அவரைப் பார்த்தேன் .
கருத்த மேனியும்.முறுக்கேறிய உடல்வாகும் கொண்ட அவர் முரட்டுப் பெர்வழி போன்றுதான் தோன்றினார். எட்டு முழ வேஷ்டியும் முழுக்கை சட்டையும் அணிந்திருந்த அவர் ஒரு அரசியல்வாதி போல காணப்பட்டார் .மானகிரியிலிருந்து வந்துள்ள அவர் வசதியானவர்போல்தான் காட்சி தந்தார் சாதாரண கால் வலிக்கு அப்படித் தங்கத் தேவையில்லை என்று மீண்டும் கூறி ஏன் அவரின் கோபத்திற்கு ஆளாகணும் என்ற நினைப்பில் , ” அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் தாராளமாகத் தங்கி அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து பார்த்துவிட்டுகூட செல்லலாம்.” என்றவாறு அவரை நோக்கினேன்.
” அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் டாக்டர். என்னிடம் இரத்தம் எல்லாம் எடுக்காதீர்கள். எனக்கு இரத்தம் என்றாலே பயம் டாக்டர்.. ” என்றார்
” இலேசான இரத்தக் கொதிப்பு மட்டும் உள்ளது. வேண்டும் என்றால் கொலஸ்ட்ரால் அளவு காலையில் பார்க்கலாமே? ‘ என்றேன்
” அது இருந்தால் இருந்துட்டு போகட்டும் டாக்டர். இரவு படுத்து தூங்கிவிட்டால் எல்லாம் சரியாயிடும். நாளைக்கு வெளியாயிடுவேன். ” தனக்கு என்ன வேண்டும் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.
உதவியாளர் மாணிக்கத்திடம் அவருடைய குறிப்புகளைத் தந்து வார்டுக்கு அனுப்பிவைத்தேன்.
அன்று இரவு 9 மணிக்கு வார்ட் ரௌண்ட்ஸ் செய்தபோது அவரை மீண்டும் அறையில் பார்த்தேன். கால் வலி குறைந்துள்ளதா என்று கேட்டபோது கடுமையான வலிதான் என்றார். ஊசி போடவா என்றதற்கு வேண்டாம் என்று சொன்னதோடு ஊசிகூட அவருக்கு பயம் என்று கூறி மறுத்துவிட்டார். மாலை 6 மணிக்கு அவரின் இரத்த அழுத்தம் அதிகமாக இல்லை. காலையில் மீண்டும் பார்ப்பதாகக்கூறி விடை பெற்றேன்.
காலை எட்டு மணிக்கு அவரைப் பார்த்தபோது இரவு நன்றாக தூங்கியதால் கால்வலி முற்றிலும் இல்லை என்றார் வீடு திரும்ப வேண்டும் என்றார். இந்த சிகிச்சையில் எனது பங்கு ஏதும் இல்லைதான். அவராக வந்து கால்வலி என்று சொல்லி இரவு தங்கிவிட்டு காலையில் கால்வலி இல்லை, வீடு போகணும் என்று கூறும் ஒரு வினோத மனிதர் என்றே எண்ணிக்கொண்டேன். இது ஒரு வீண் செலவு என்பதைப் பற்றி கொஞ்சமும் கவலையின்றி போட்ட தொகையை அப்படியே கட்டிவிட்டு உற்சாகமாக வெளியேறினார்.
அன்று காலை பத்து மணிக்கு திருப்பத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெருமாள் என்னைக் காண அலுவலகம் வந்தார். அவர் கூறிய செய்தி என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது!
“: உங்களிடம் ட்ரீட்மென்ட் எடுத்த ஒருவர் கொலைக் குற்றத்தில் மாட்டியுள்ளார்.” நேரடியாக விஷயத்திற்கு வந்தார் பெருமாள் அவர் எனக்கு நல்ல நண்பர்தான்.
” யார் அந்த பேஷன்ட்? ”
:” பெரியகருப்பன் சேர்வை . நேற்று இரவு இங்கு தங்கி காலையில்தான் டிஸ்சார்ஜ் ஆனாராமே? ”
” ஆமாம். கால் வலி என்று சேர்ந்து காலையில்தானே போனார்? ”
” அவரைத்தான் வீட்டில் காத்திருந்து இப்போதான் அரஸ்ட் பண்ணியுள்ளேன். அவர் கொலை நடந்த நேற்று இரவு பதினோரு மணிக்கு இங்கு படுக்கையில் இருந்ததாகக் கூறுகிறார் ”
” உண்மைதான் பெருமாள். இங்குதான் தங்கினார் அவருக்கும் கொலைக்கும் எப்படி தொடர்பு? ”
” தேவகோட்டையில் இந்த கொலை நடந்துள்ளது அரசியல் பின்னணி. இது தொடர்பில் இதுவரை பதினைந்து பேர்களை அரஸ்ட் பண்ணிவிட்டோம். இந்த பெரியகருப்பன் இரண்டாவது முக்கிய குற்றவாளி. இவர்தான் அவரை அரிவாளால் வெட்டியவர் என்பது இறந்தவரின் வாக்குமூலம்! ”
” ஆனால் அது எப்படி சாத்தியமாகும்? இவர்தான் இங்கே இருந்தாரே? ”
” சம்பவத்தின்போது அவர் ஏன் அங்கே போய்விட்டு திரும்பியிருக்கக் கூடாது டாக்டர்? நீங்கள் கடைசியாக அவரை எப்போது பார்த்தீர்கள்? ”
” நான் இரவு ஒன்பது மணி ரௌண்ட்ஸ் செய்தபோதுதான் அவரைப் பார்த்து பேசினேன். ஊசி என்றாலே பயம் என்றுகூட சொன்னாரே? அவரா கொலை செய்திருப்பார்? ”
” நீங்கள் சென்ற பிறகு அவர் புறப்பட்டு தேவகோட்டை சென்று காரியத்தைக் கட்சிதமாக முடித்துவிட்டு திரும்பியுள்ளார்.உங்களை இப்படி ஏமாற்றியவர் இப்ப என்னிடம் மாட்டிக்கொண்டார். இதை வைத்து பெயில் கேட்பார். அதன் பின்பு உங்களையும் வந்து பார்ப்பார்”.
” என்னையா? எதற்கு என்னைப் பார்க்க அவர் வரணும் ? ”
” நீங்கள் நினைத்தால் அவரைக் காப்பாற்றலாம் அல்லவா? ”
” எப்படி? ”
” கொலை நடந்த நேரத்தில் நீங்கள் அவரை இங்கே உங்கள் வார்டில் பார்த்ததாக ஒரு வார்த்தை கோர்ட்டில் சொன்னால் போதும்! அவர் தப்பித்து விடுவார்! அதனால்தான் நீங்கள் இப்போது அவரின் உயிர் காக்கும் தெய்வம்! உங்களை அவர் இனிமேல் விட்டுவிடுவாரா டாக்டர்? ”
இது என்ன புதுக் குழப்பம் என்று நான் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், ” உங்கள் வார்டுபக்கம் போகலாமா? ” என்று கேட்டு எழுந்தேன்.
” எப்போது அட்மிட் ஆனார், எப்போது டிஸ்சார்ஜ் ஆனார் என்பது ரெக்கார்ட்பூர்வமாக எனக்கு வேண்டும்.. நாங்கள் கேஸ் போட்டபின் வக்கீல்கள் வாதாடிக்கொள்வார்கள். ஆனால் நீங்கள்தான் அதில் முக்கிய சாட்சி கூறவேண்டியிருக்கும்.” நடந்துகொண்டே கூறினார்.
எங்களைக் கண்டதும் அமுதா எழுந்து நின்றாள். அவள்தான் வார்டு சிஸ்டர். பெரியகருப்பனின் குறிப்பேடுகள் மேசையின்மீதுதான் இருந்தது.
அதைக் கையில் எடுத்த நான் நள்ளிரவில் இரத்த அழுத்தம் பார்த்துள்ளனரா என்பதைத் தேடினேன். அது காணவில்லை! காலையில்கூட நான் அதைக் கவனிக்கவில்லை! ஆனால் அந்தப் பகுதியில் , ” Patient did not open door :” ( நோயாளி கதவைத் திறக்கவில்லை ) என்று இரவில் வேலை செய்த மல்லிகா எழுதியிருந்தாள்!
” இதைப் பார் பெருமாள்! முறைப்படி அவரின் இரத்த அழுத்தம் நள்ளிரவில் ஒரு முறை பதிவு செய்திருக்கவேண்டும்! ஆனால் அவர் கதவைத் திறக்காமல் தூங்கியுள்ளார்! ” எதையோ கண்டுபிடித்துவிட்டதுபோல் அவரிடம் கூறினேன்.
” தூங்கியது அவர்தான் என்பது என்ன நிச்சயம்? இது நன்கு திட்டமிட்டு நடந்துள்ளது! தூங்கியது அவரில்லை! வேறு ஆள்! அவர்தான் அப்போது தேவகோட்டையில் இருந்துள்ளார்! ” என்று அவர் விளக்கியபோது எனக்கு வியர்த்துக் கொட்டியது!
ஒரு வாரம் அமைதியாகச் சென்றது அதன்பின் பூகம்பம் வெடித்தது.
அன்று இரவு வீடு வாசலில் அம்பாசிடர் கார் வந்து நின்றது. அதிலிருந்து பெரியகருப்பனுடன் இன்னும் நால்வர் வந்திறங்கினர்.
கூடத்தில் அமர்ந்த அவர்கள் தங்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என்று அறிமுகம் செய்துகொண்டனர். அப்போது எம். ஜி. ஆர். முதல்வர். இவர்கள் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள்.
” டாக்டர். உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த தேவகோட்டை கொலை வழக்கில் என்னையும் சேர்த்து குற்றவாளி என்கின்றனர். நான் வார்டில் இருந்தது உங்களுக்குத் தெரியும்தானே? நீங்கள் கோர்ட்டில் வேறு ஏதும் சொல்லவேண்டியதில்லை. அந்த இரவு நான் வார்டில்தான் இருந்தேன் என்று சொன்னால் போதும். மற்றதை எங்கள் வக்கீல் பார்த்துக்கொள்வார் “.
இரவில் அவர் கதவைத் திறக்காதது ஏன் என்று கேட்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்து மௌனம் சாதித்தேன்.
” என்ன டாக்டர் யோசனை? நீங்கள் உதவினால் நாங்கள் உங்களை சரிவர கவனித்துக்கொள்வோம்…இல்லையேல்
தோரணையில் எச்சரிப்பது போன்றிருந்தது! ஆம் இது ஒரு மிரட்டல்தான்!
என் முடிவான பதிலுக்கு அவர்கள் காத்திருக்கவில்லை. எச்சரித்துவிட்டு போவதைப்போல்தான் வீறாப்புடன் வெளியேறினர்!
பெருமாளிடம் இதைச் சொன்னபோது, இது எதிர்ப்பார்ததுதானே என்று கூறிவிட்டார். வேறொரு சிக்கலையும் நான் எதிர்நோக்குவேன் என்பதை அப்போது அவர் சொல்லவில்லை.
மறுநாள் மாலையில் வேறொரு கூட்டத்தினர் என் வீடு தேடி வந்தனர். இவர்கள் உள்ளூர் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். அவர்களில் சிலர் எனக்கு பழக்கமானவர்கள்.
” டாக்டர் . அந்த கொலைகார பாவிகள் உங்களை வந்து பார்த்தது எங்களுக்கும் தெரியும். கொலை நடந்த நேரத்தில் பெரியகருப்பன் வார்டில் இருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளது என்று நீங்கள் நீதி மன்றத்தில் கூறினாலே போதும். அவர்களுக்கு பயந்துகொண்டு வேறுவிதமாகக் கூறினால் பின்பு எங்களுக்கு நீங்கள் பயப்பட நேரிடும்.இது ஒரு கிறிஸ்துவ ஸ்தாபனம். உண்மையைக் கூறுங்கள்.! ” இதுதான் இவர்களின் எச்சரிக்கை!
இதையும் பெருமாளிடம் தெரிவித்தேன்.
” அரசியல்வாதிகள் எல்லாருமே இப்படிதான். நாங்கள் தினசரி எதிர்நோக்கும் பிரச்னை இது. நீங்கள் நீதிமன்றத்தில் யாருக்கும் சாதகமாகப் பேசாமல் வக்கீல்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லுங்கள். ” என்று ஆறுதல் கூறினார்.
நீதிமன்றம்.
” டாக்டர்… நீங்கள் செந்தமிழில் பேசாமல் சாதாரண தமிழில் பேசினால் போதுமானது.” என்று நீதிபதி என்னைப்பார்த்துக் கூறினார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்: டாக்டர், கால் வலிக்கு கட்டாயம் படுக்கையில் தங்கிதான் சிகிச்சை பெறணுமா?
நான்: அது வலியின் தன்மையைப் பொறுத்துள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர்: குற்றம் சாட்டப்பட்டுள்ள பெரியகருப்பன் என்பவர், வார்டிலிருந்து இரவில் வெளியேற முடியுமா?
நான்: முடியும்.
அரசுதரப்பு வழக்கறிஞர்: அவ்வாறு இரவில் வெளியேறி குற்றம் புரிந்துவிட்டு மீண்டும் வார்டுக்கு திரும்பி படுத்துக்கொள்ளலாம் அல்லவா?
நான்: முடியும்.
எதிர்தரப்பு வழக்கறிஞர் : டாக்டர், சாதாரண கால்வலிக்கு யாராவது படுக்கையில் சேரணும் என்று கேட்பார்களா? இல்லைதானே? அதனால் என் கட்சிக்காரர் கடுமையான கால் வலியுடன்தான் உங்களிடம் வந்துள்ளார். இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?
நான்: ஒருவர் கால் வலி என்று கூறினால், அது எவ்வளவு கடுமையானது என்பதை எந்த மருத்துவராலும் கூற இயலாது.
எதிர்தரப்பு வழக்கறிஞர்: அப்படியெனில் அவருக்கு கடுமையான கால்வலியும் இருந்திருக்க வாய்ப்பும் உள்ளதுதானே?
நான்: ஆமாம்.
எதிர்தரப்பு வழக்கறிஞர்: கடுமையான கால்வலியுடன் என் கட்சிக்காரர் அன்று இரவு எழுந்திருக்கமுடியாமல் அயர்ந்து தூங்கியிருக்கலாம் அல்லவா?
நான்: ஆமாம்.
அதன்பின் நான் விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டேன்
அவர்கள் கேட்ட கேள்விகளுக்குத்தான் நேர்மையான பதில் கூறியதாக மனநிறைவு கொண்டேன்.
போதுமான சாட்சியங்கள் இல்லையென வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்று பல மாதங்கள் கழித்து பெருமாள் மூலமாக தெரிந்துகொண்டேன்.
( முடிந்தது )
- இஸ்லாமும் உளவியல் பகுப்பாய்வும்
- விண்கற்கள் தாக்குதலைக் கையாள அகில நாட்டு பேரவைப் பாதுகாப்புக் குடையை அமைக்க ரஷ்யத் துணைப் பிரதமர் அழைப்பு
- ரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்ற ((TAFAREG) விழா!
- கதையும் கற்பனையும்
- நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்
- காரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்
- பிரதிநிதி
- சமாதானத்திற்க்கான பரிசு
- பாசச்சுமைகள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -8
- அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?
- இருள் தின்னும் வெளவால்கள்
- மந்திரச் சீப்பு (சீனக் கதை)
- வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46
- மார்கழி கோலம்
- PAPILIO BUDDHA : Bangalore screening on SUNDAY 3 MARCH 2013
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)
- சுமை
- வெள்ளிவிழா ஆண்டில் “கனவு“ சிற்றிதழ்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..
- மாமன் மச்சான் விளையாட்டு
- நிழல்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
- மிரட்டல்
- கவிதைகள்
- தாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் !
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10
- தன் வரலாற்றுப் பதிவுகளில் அடித்தள மக்கள்
- திருக்குறளில் ‘இயமம் நியமம்’
- அக்னிப்பிரவேசம்-25
- ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2