குறு நாவல் அத்தியாயம் – 2 நன்றியுடன் என் பாட்டு…….

author
0 minutes, 0 seconds Read
This entry is part 31 of 31 in the series 31 மார்ச் 2013

Vallabhan-1
-தாரமங்கலம் வளவன்

பட்டாபி தன் மகளின் இந்த கேள்வியை கேட்டு சங்கோசப்பட்டு, பேச்சை மாற்றுவதற்காக,

“ தம்பி, நீங்களும் சினிமாவில பாட்டு பாடியிருக்கிங்களா… என்னா மாதரி பாட்டு…. நா சினிமா பாட்டு கேட்டது இல்லீங்க… கர்நாடக சங்கீதம் கொஞ்சம் கேட்பேன்… இதுல பாருங்க… பகவானோட விளையாட்டு….. எங்க அப்பாவோட சங்கீத ஞானம் எங்களுக்கு வர்ல…. முறுக்கு, பலகாரம்னு வீடு வீடாய் போய் வித்து கஷ்டப் பட்டுக்கிட்டு ஜீவனம் நடத்திகிட்டு இருக்கேன்…உங்க அப்பாவுக்கு அந்த ஞானம் வந்திருக்கு….. எனக்கு இன்னும் கூட ஞாபகம் இருக்கு.. அந்த காலத்திலேயே எங்க அப்பா சொல்வாரு…. உங்க அப்பா நல்லா கத்துகிறதாவும்… சங்கீதத்தில பெரிய ஆளா வருவாருன்னு….. அதே மாதரி வந்துட்டாரு பாருங்க..” என்றார் பட்டாபி.

உள்ளேயிருந்து இதைக்கேட்ட கல்யாணி, “ தாத்தாவோட சங்கீத ஞானம் மகனுங்களுக்கு தான் வரல….. ஆனா பேத்திக்கு வந்திருக்குன்னு சொல்லுங்கப்பா…….”

இதைக் கேட்டு சந்தானத்திற்கு லேசாய் சிரிப்பு….

மறுபடியும் சங்கோசப்பட்டு, சமாளிக்கும் விதமாக பட்டாபி,

“ ஆமா….. கல்யாணி நல்லா பாடுவா….. அவளோட தாத்தா பெரிய கர்நாடக சங்கீத மேதை… எத்தனை பேருக்கு கத்து கொடுத்திருப்பாரு… உங்க அப்பா உட்பட….. இப்ப அவரோட பேத்திக்கு கத்து குடுக்கிறதுக்கு இங்க யாரும் இல்ல….” சொல்லி விட்டு நிறுத்தினார்.

“ நீங்க ஏன் கத்துக்கில…….” வாய் வரைக்கும் வந்த கேள்வியை அடக்கிக் கொண்டான். பட்டாபியின் மனதை புண்படுத்த கூடாது என்பதிற்காக.

பட்டாபி தொடர்ந்தார்.

“ அப்படி கத்து குடுக்கிறதுக்கு யாராவது கெடைச்சாலும் அனுப்பி படிக்க வைக்கறதுக்கு எங்கிட்ட பணமும் இல்ல……” நிறுத்தினார்.

“ பாட்டு கூட அவளே எழுதுவா… சில கவிதைகள் பத்திரிக்கையில வந்திருக்கு.. தானே பாட்டு எழுதி பாடறது அவளுக்கு ரொம்ப பிடிக்கும். பண வசதிக் குறைவு தான் அவளை அழுத்தி வைச்சிருக்கு…” என்றார் தன் மகளைப் பற்றி.

இதைக் கேட்ட சந்தானத்திற்கு மனது வலித்தது. இது என்ன கடவுளின் விளையாட்டு…

ஊரும் நாடும் போற்றிய ஒரு இசை மேதையின் குடும்பத்திற்கு இப்படி ஒரு சோதனையா…… ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் எப்படிப்பட்ட மாற்றம்… தலைகீழாக திருப்பி போட்டது மாதரி……

ஒவ்வொரு ஆண் மகனும் தன் எதிர் கால வாழ்க்கைகான ஆதாரங்களை சின்ன வயதிலேயே சரியாக உணர்ந்து திரட்டி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்…

அப்படி ஒருக்கால் தங்களுக்கு சங்கீத ஞானம் வரவில்லை என்றால், ஒரு மாற்று பாதையை இவர்கள் தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டிருக்க வேண்டாமா..

அப்படி தங்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திகொண்ட பிறகுதான் தங்களின் கல்யாணத்தைப் பற்றி இவர்கள் யோசித்திருக்க வேண்டும்…..

தங்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன் கல்யாணம் செய்திருப்பார்கள்… அதனால் தான் தங்கள் வீட்டை விற்று விட்டு இந்த ஒண்டு குடித்தனத்திற்கு வாடகைக்கு வந்திருப்பார்கள் என்பது புரிந்தது.

மாற்று பாதை படிப்புதான் – அது இவர்களுக்கு வாழ்வதாரமாக இருந்திருக்க முடியும்……

இவர்கள் ஒழுங்காக படித்திருந்தால், கண்டிப்பாக கல்லூரிப் படிப்பு தன் மகன்களுக்கு அந்த இசை மேதையால் கொடுத்திருக்க முடியும்…

அப்படி தங்கள் அப்பாவின் வருமான காலத்தில் அதை உபயோகப் படுத்தி படித்திருந்தால் ஒரு சம்பளத்திற்கு வந்திருக்க முடியும்…..

தானும் அப்படிப் பட்ட ஒரு தவறை செய்கிறோமா என்று தோன்றியது. அப்பா அம்மா எவ்வளவோ வற்புறுத்தியும் இவ்வளவு நாளும் கல்யாணம் வேண்டாம், பெரிய பாடகனாக வந்த பிறகு தான் கல்யாணம் என்று சொல்லி வந்த தான் கல்யாணியை பார்த்த பிறகு மாறி விட்டதாக தோன்றியது.

அப்பா அம்மாவை கேட்காமல் கூட கல்யாணியை பெண் கேட்டது பற்றியும் அதற்கு அவள் மறுத்தது பற்றியும் குறித்து சற்று வெட்கமாய் போய் விட்டது. தன்னுடைய படிப்பு கூட குறைவு தான். அப்பாவின் திரண்ட சொத்தை பார்த்து எத்தனையோ பேர் பெண் கொடுக்க தயார் என்றாலும், தான் இது வரை மறுத்து வந்தது சரி என்றே பட்டது.

கல்யாணி டீ கப்பை வைத்தவிட்டு போக,

“ என்னங்க யோசிச்சுக் கிட்டு இருக்கீங்க… டீ சாப்பிடுங்க….” என்று பட்டாபி சொன்னபோது போது நினைவுக்கு திரும்பியவன், கல்யாணிக்கு இருக்கும் ஒரே விருப்பம் பாட்டு கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்பதை புரிந்து கொண்டான்…

முதலில் அதற்கு அவளுக்கு உதவி செய்ய வேண்டும்…..

கல்யாணியை ஒரு நல்ல பாட்டு வகுப்பில் சேர்க்க வேண்டும்….

முடிந்தால் அவளை திரை இசையிலும் நுழைக்க முயல வேண்டும்…..

அவளை பாடகி ஆக்கி விட்டால்…

அதற்கு பிறகு அவள் தன்னை மணம் செய்து கொள்ள சம்மதிக்கலாம்…..

அதற்கான இடம் எது…… திருவாரூரா…. சென்னையா…..

திருவாரூரில் அந்த காலத்தில் பெரிய இசை மேதைகள் இருந்திருக்கலாம்….. இப்போது……

மேலும் கல்யாணியை சென்னைக்கு அழைத்து வந்தால், தான் கல்யாணியை பார்க்கவும் பேசவும் முடியும் என்ற ஒரு எண்ணமும் தோன்றியது..

சென்னையில் தான் அவளுடைய மனதை கவர முடியும்…..

இதைப் பற்றி உடனே பேசுவதை விட கொஞ்சம் யோசித்து நாளைக்கு பேசலாமா என்று நினைத்தான்..

அதே சமயத்தில் இப்போதே சொன்னால், நாளையோ, நாளை மறு நாளோ சென்னைக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகளை அவர்களால் செய்ய முடியும் என்பது தோன்ற விஷயத்தை சொன்னான்..

பட்டாபிக்கு இதைக் கேட்டு முகம் சுருங்கியது. அவருக்கு பண உதவி வாங்கிக் கொள்ளலாம் என்று பட்டது. முன் பின் தெரியாத ஒரு ஆணுடன் எப்படி பெண்ணை சென்னைக்கு அனுப்புவது….

ஆனால் கல்யாணிக்கு தன்னுடன் சென்னைக்கு வர விருப்பம் என்பது அவனுக்கு புரிந்தது….

கல்யாணியின் மனதை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை தெரிந்து கொண்டான்.

“ யோசிச்சு சொல்றோம்.. நாளுக்கி வாங்க……” என்றார் பட்டாபி.

“ சரிங்க…. ரூம் போட்டிருக்கேன்…… தங்கிட்டு நாளைக்கு வர்ரேன்..

யோசிச்சு சொல்லுங்க……” என்று புறப்பட்டான்..

ஞாபகம் வந்தவனாக, பட்டாபியிடம் திரும்பி கேட்டான்,

“ புறப்படும் போது அப்பா சொன்னாங்க… உங்களுக்கு ஒரு பிரதர் இருக்கிறதா… அவரு என்னா பண்றாறு….” சந்தானம்..

பட்டாபி பதில் சொல்ல வில்லை.

“ சித்தப்பா திருச்சி சென்ரல் ஜெயில்ல இருக்காரு……” கல்யாணி பட்டென்று பதில் சொன்னாள்….

சந்தானம் அதிர்ச்சி அடைந்தான்…

-தொடரும்

Series Navigationவிஸ்வரூபம் – பறவைகளை நஞ்சு தாங்கிகளாக்கும் மனித அவலங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *