காணிக்கை

author
0 minutes, 3 seconds Read
This entry is part 6 of 29 in the series 24 மார்ச் 2013

                                     சத்தியப்பிரியன்

            “மதம் என்பது மக்களின் எளிமையான வாழ்வில் ஆன்ம பலத்தையும் , நம்பிக்கையையும் வளர்ப்பதற்கு பதில் அவ்ர்களைச் சுரண்டுகிறது.” என்றேன்.

            “By  an elaborated fine processed way “ என்று என் நண்பன் என்னை ஆமோதித்தான்.

             மதம் தொடர்புடைய சிறுகதை என்பதால் தன்னிலை ஒருமையில் எழுத வேண்டியுள்ளது.

எங்கள் பயணம் ஒரு மோட்டார் சைக்கிளின் மீது சுட்டெரிக்கும் கத்திரி வெயிலில் பத்து கிலோமீட்டர் தூரம் நீண்டு கொண்டிருந்தது.

“ கூட்டம் என்ற பெயரில் எங்கள் ஆலயத்தில் ஒரு கட்டப் பஞ்சாயத்து நடைபெற உள்ளது ,வர்றியா ? “ என்றான் என் நண்பன்.

என் நண்பன் அவன் மதத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவன் .முக்கிய பொறுப்பில் இருப்பவன் .

மதப் பொறுப்பாளர்கள் நடுவில் கட்டப் பஞ்சாயத்து என்பது சகஜமாகிப் போய்விட்ட இந்த நாட்களில் அப்படி ஒன்றை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் நான் உடன் செல்ல சம்மதித்தேன் .

அவர்களது ஆலயம் எங்கள் ஊரில் முக்கியமான இரண்டு இடங்களில் உள்ளது .இறைநம்பிக்கை நன்னெறி என்பதைக் கடந்து மத நிறுவனங்களாக மாறும் பொழுது உண்டாகும் மாற்றங்களை நாம் பல்லாயிரம் வருடங்களாகக் கண்டு வருகிறோம். அவன் ஆலயமும் மதமும் அதற்கு சாட்சியங்கள்.

வழிபாட்டுத் தலம் என்றளவில் சின்னஞ்சிறிய கூரையின் கீழ் அந்த ஆலயம் பல ஆண்டுகளாக இயங்கி வந்ததை நான் அறிவேன். சிறிய கூடம் : ஆலயத்தை பிரகடனப் படுத்த உயர்ந்த கட்டிடம் ஒன்று .: மதச் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல மதத் தகவல் பரப்பாளர்கள்  ஓரிருவர் : கூட்டு வழிபாடு, பாடல் வழிபாடு, மௌன வழிபாடு என ஆலயம் என் கண் முன்னால் வளர்வதைக் கண்டு வந்தவன் நான்.

ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் இருந்த ஆலயம் செங்கல் சிமெண்ட் கலவையில் உருவாகத் தொடங்கியது, இரண்டரை ஏக்கர் நிலத்தில் பாதிப் பரப்பளவை ஆலய கட்டிடம் ஆக்கிரமிக்க தொடங்கியது. மிக உயர்ந்த கட்டிடம் .: பெரிய விதானம்: தூபம் என அதன் பளிங்கு பிருமாண்டம் பார்ப்போரை மிரள வைத்தது. எளிய முறையில் ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டைக் கட்டி முடிக்க ஒரு நடுத்தரவர்கத்திணன் படும் அவஸ்த்தையைப்  பற்றி சொல்ல வேண்டியதில்லை.

“ எப்படி ? “  என்றேன் நண்பனிடம்.

“ காணிக்கை “ என்றான் நண்பன்.

“ வெறும் காணிக்கையிலா ? “

“ ஆமாம் . எங்கள் கடவுள் புதியவர் அன்று. ஏற்கனவே நிறுவப்பட்டவர். தொடக்கத்தில் தன்னை ஸ்தாபித்துக் கொள்ள அவர் பட்ட பாடும் இன்னல்களும் இந்த உலகம் அறிந்த விஷயம். அவருடைய இன்னல்களும் பாடுகளும் மீண்டும் மீண்டும் உருவேற்றப்பட்டு  அவரது ஸ்தாபிதத்தை நிலை நிறுத்தின. நிறுவப் பட்டு விட்ட கடவுளுக்கு காணிக்கை பெறுவது பெரிய விழயமில்லை. “ என்றான் நண்பன்.

“ இப்படி ஒரு விரிவாக்கத்துக்கு வெறும் காணிக்கை மட்டும் போதுமா ? “

“ கண்டிப்பாக போதும் .நிறுவப்பட்ட கடவுளுக்கு உலகம் பொதுவானது. இதன் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடவுள் நம்பிக்கையாளர்கள் தோன்றுகிறார்கள். கடவுள் நம்பிக்கையாளர்களை அடித்தளமாகக் கொண்டு கடவுள் வழிபாட்டாளர்கள் தோன்றுகிறார்கள். சென்ற நூற்றாண்டுகளில் மன்னர்களாக விளங்கிய வழிபாட்டாளர்கள்  நாகரீக வளர்ச்சியில் பெரூ முதலாளிகளாகவும், குடியாட்சித் தலைவர்களாகவும் மாறினார்கள். பெரு முதலாளிகளுக்கும் , குடியாட்சித் தலவர்களுக்கும் நேர்மையான வாழ்வியல் நெறி இருக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை. நிறுவப்படும் கடவுள்கள் அனைவருமே எளிமையிலிரூந்து தோன்றுவதால் நம்பிக்கையும், ஆறுதலும் ,இரக்கமுமே  கடவுள் நம்பிக்கையாளர்களின் சமனாகும். எளிய மக்கள் இல்லாமல் கடவுள் இல்லை. பெருமுதலாளிகள் இல்லை: குடியாட்சித் தலைவர்கள் இல்லை: எளிய மக்களின் காணிக்கை நம்பிக்கை. பெருமுதலாளிகளின் காணிக்கை கரன்சி நோட்டு. கடவுளின் புரதச் சத்து குறைவதே இல்லை. புரிகிறதா ? “

அவன் சொன்னது உண்மை என்பதை நிருபிக்கும் விதமாக அவர்களது ஆலயம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. வழிபாட்டு நெறிகள் ஒரு ஒழுங்கு முறைக்கு கொண்டு வரப்பட்டன. மதப் பரப்பாளர்கள் எண்ணிக்கையில் அதிகரித்தனர். வழிபாட்டு முறைகள் மாற்றப் பட்டதால் ஒருங்கிணைப்பும் ,அதற்கான கருவிகளும்,சாதனங்களும் , உபகரணங்களும் பெருகத் தொடங்கின. ஒரு சின்ன உதாரணம்,எல்லா மதத்தினரும் தங்கள் கடவுளை நிறுவ வழிபாட்டுப்  பாடல்களை பெரிதும் நம்புகின்றனர். ஆதிகாலம் தொட்டு கதைப் பாடல் மூலம் கடவுள் செய்தி சொல்வது எளிய வழியாக உள்ளது.பாடல் மூலம் கடவுள் நிறுவப்படுவதில் கற்பனை விரிவுக்கு அதிக இடம்  உள்ளது. இசைக் கலைஞர்கள் ,இசைக் கருவிகளள், கவிஞர்கள் , அச்சு,ஊடகம் என்ன தன சார்ந்தோரை நிறுவிக் கொல்வதோடு கடவுள் தன்னையும் நிறுவிக் கொள்கிறார்.. உணவு ,மருந்து கல்வி, சுகாதாரம், இன்பம், துன்பம், செல்வம், வறுமை என சகல விஷயங்களிலும் கடவுள் புகுந்து தோன்றும் பொழுது அவருடைய இருப்பை யாராலும் அசைக்க முடியாமல் போகிறது.

                வேகமாகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தன் நிலை இழந்து சாலையில் அங்கும் இங்கும் தடுமாறியது .என் நண்பன் வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தினான் பின் டயர் பங்ச்சர் .இன்னும் இருநூறு மீட்டர் தொலைவில்தான் அவனுடைய மதத்தின் ஆலயம் இருந்தது .ஆலயச் சொத்துக்களில் ஒன்றான பள்ளிகூடத்தின் நீள மைதானத்தின் முன்புதான் வண்டி நின்றது.

மைதானத்தின் முன்பு இருந்த மரத்தின் பலவீனமான மரத்தில் கட்டப்பட்ட கிழிந்த போர்வையில் ஒரு வெயில் தடுப்பு. சின்ன தகர டின். துருப்பிடித்த  சேர் .அடுக்கி வைக்கப்பட்ட  பழைய டயர்கள் . ஒரு சைக்கிள் பம்ப். கால்களால் இயக்கப் படும் காற்று பம்ப் ஒன்று. ஸ்பானர்கள் அடங்கிய அலுமினியப் பெட்டி ஒன்று : இதுதான் அந்த பங்ச்சர் ஒட்டும் கடையின் அடையாளங்கள். .ஒரு விரிப்பின் மீது முக்கால்  பேண்ட்  அணிந்த 50 வயதைக் கடந்த ஒருவன் இருந்தான்.

“ பங்ச்சர் ஓட்டிட்டுப் போயிடுவோம் “ என்றான் நண்பன்.

‘ கூட்டம் ஆரம்பிச்சிடாதா ? ’ என்றேன்.

மூன்றைக்குதான் . இன்னும் அரைமணி நேரம் இருக்கே ‘ என்றான் நண்பன்.

பங்ச்சர் ஓட்டுபவன் வண்டியை சாலையின் ஓரமாக மெயின் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான்.

மதக் அடையாளங்கள் மக்களைப் பிரித்துக் காட்டி விடுகின்றன. மண் , சாம்பல் , மாலை, குறுந்தாடி போன்ற அடையாளங்கள் . அவனது பெயரே ஒரு அடையாளமாய் அவன் மதத்தைச் சொன்னது.

“ கல்யாணம் ஆயிடுச்சா ? “என்றான் என் நண்பன் அவனிடம்.

“மூணு பசங்க இருக்காங்க.மூத்தவன் தனியார் குரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான் .அடுத்தவன் பிஈ முடித்து விட்டு எம்பிஏ படிக்கிறான். மூணாவது பையன் டிப்ளமா படிக்கிறான்.”

“ வருமானம் போதுமா? “

“ ஒரு பங்க்ச்சருக்கு 50 ரூபாய் வாங்குறேன் ஒரு நாளைக்கு.நாலு பங்ச்சர் வந்தா போதும்.”

“ குடிப் பழக்கம் உண்டா? ‘

“இல்லை”

“ சலிப்பா இல்லியா இந்த வாழ்க்கை? “

“ இந்த ஊரில் எங்கப்பாவுக்கு நெலம் நீச்சு வீடு வாசல்னு எல்லாம் இருந்துச்சு .குடி கூத்தியான்னு சொத்தப் பூரா அழிச்சாரு. சொத்தெல்லாம் போய் நாங்க நடுத் தெருவில நின்னோம் . அப்பொ வராத சலிப்பா இப்ப வரப் போவுது? ”.

´எந்த நம்பிக்கையின் பெயரில் வாழ்க்கையை ஓட்டுற? “

‘ அவரு இருக்காருல்ல….. “ என அவர்கள் மதக் கடவுள் இருப்பிடத்தை பார்த்து கையை நீட்டியபடி  அவன் “ அவரு என் பசங்களையும் என்னையும் நல்ல வெச்சுப்பாரு” என்றான்.

“ ஆனா உன் கடவுள் பெரிய கட்டிடம் கட்டிட்டு காற்றோட்டதோட பல வேளை உணவுடன் இருக்காரே  “ என்றேன் நான் பொறுக்க முடியாமல்.

என் கேள்வியின் உக்கிரம் அங்கு பெரிய மௌனத்தை ஏற்படுத்தியது.

“ நீ ஏன் கோவில் சார்ந்தவர்களிடம் தடுப்புச் சுவர் கூரையுடன் ஒரு சாலை அமைத்துத் தரச் சொல்லக் கூடாது?? “ என்றான் நண்பன்.

“பஞ்சர் ஓட்றவன், பூ விகிரவங்க, செருப்பு தைக்கிறவங்க, கறிகாய் விக்கிறவங்கன்னு எத்தினி பேரு இந்த ஊரில் மழை வெயில் பாரமா இருகிறாங்க தெரியுமா? என்னிக்காவது இவங்களுக்கு சாலை அமைச்சுத் தரச் சொல்லி கேட்டிருப்பிங்கள? “ என்றான் பொட்டில் அறைந்தது மாதிரி.

“ஆனா உன் கடவுள் பக்கத்தில் இருக்கிறப்போ உன் கடவுள் சார்ந்தவர்களிடம் நீ விண்ணப்பிக்கலாமே ? : என்றான் நண்பன்.

“ நான் என் மதத்தின் வேறு பிரிவைச் சார்ந்தவன். ஒரு வழிப் போக்கனுக்கு உதவி செய்வதன் மூலம் அவர் தாழ்ந்து போவதைக் கடவுள் சார்ந்தவர்கள் அனுமதிப்பதில்லை.” என்றான் அவன் . சொல்ல வேண்டியதைத் தெளிவாகச்  சொல்ல வாழ்க்கை அவனுக்கு நேர்த்தியாகக் கற்று கொடுத்திருக்கிறது.

என் நண்பன் ஐம்பது ரூபாயைக் கொடுத்து விட்டு வண்டியைப் பெற்றுக் கொண்டான்.

                     ஆலயத்தின் நுழைவாயிலை ஒட்டிய இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தோம். பெரிய படிக்கட்டுக்கள். பெரிய கூடம். பெரிய பெரிய தூண்கள். மிக உயரமான மேற்கூரை என  கட்டிடத்தை மட்டுமே விவரிக்க மத ரீதியாக என் ஜனநாயக எல்லை உள்ளது.

என் நண்பனைப் பார்த்ததும் ஒரு கறுப்புக் கண்ணாடிக்காரர் வரவேற்றார்.

“ கூட்டம் தொடங்கிடுச்சா? “

“ ஆலயத்தின் தலைமைப் பொறுப்பாளர் வந்தப்புறம்  “ என்றார் கறுப்புக் கண்ணாடிக்காரர் .

வழிபாட்டு இடத்திற்கு பின்புறம் ஒரு பெரிய அறை இருந்தது  அந்த அறையின் சுவரை ஒட்டி நீளமான தேக்கு மர மேசைகளும் ,தேக்குமர நாற்காலிகளும் போடப் பட்டிருந்தன.அவற்றில் ஏற்கனவே சிலர் அமர்திருந்தனர். அவர்களில் எங்கள் ஊர்ப் பிரமுகர்கள் சிலர் இருந்தனர். . தணிக்கையாளர்கள், கல்வியாளர்கள், வழக்குரைஞர்கள் , கல்வியாளர்கள் , மருத்துவர்கள் , தொழில் அதிபர்கள் போன்றோர். என்னை மிகவும் கவலைப் பட வைத்த விஷயம் ஒரு காவல் அதிகாரி தன் சீருடையைக் கூடக் களையாமல்   அமர்ந்திருந்ததுதான் .

“ யார் இவர்” என்றார் காவல் அதிகாரி என்னைப் பார்த்து.

“ என் நண்பர் “ என்றார் என் நண்பர்.

“ வெளியில் போகச் சொல்லுங்க . அந்நியர்களுக்கு அனுமதியில்லை . “

“ தலைமைப் பொறுப்பாளர் அனுமதியோடதான் கூட்டிட்டு வந்திருக்கேன் “

“ வெளியாட்களை கூட்டிட்டு வந்து மிரட்டறீங்களா? சொல்லி இருந்தா நானும் நாலு குண்டர்களைக் கூட்டிட்டு வந்திருப்பேனே “என்று கல்வியாளர் தவ்வினார்.

“ என்னிடம் கத்தி இருக்கு. “ என்று வழக்குரைஞர் தன வயிற்றுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த முக்கால் அடி நீள கத்தியை காண்பித்தார்.

“ என்னிடம்  தோட்டா நிறைந்த துப்பாக்கி இருக்கு. “  என மருத்துவர் தன் கால்சராய்ப் பையிலிருந்து துப்பாக்கி ஒன்றை உயரே தூக்கி காண்பித்தார்.

“ இது ஆலயம் “ என்று காவல் அதிகாரி அலறினார்.

“ ஆனா இங்க நடப்பது ஆலயம் தொடர்பான விஷயங்களா தெரியல்ல “

என்றார் தொழில் அதிபர்.

“ அப்படி என்ன முறைகேட்ட விஷயம் நடக்குது? “ என்றார் தணிக்கையாளர்.

“ எது முறையா நடக்குது ? “ என்று மருத்துவர் இருக்கையை விட்டு வெளியில் வந்து விட்டார்.

“ அன்னியர் முன்னாடி அடிச்சுக்க வேணாம் . அவரை வெளியப் போகச்சொல்லுங்க.”

நான் எழ முற்சித்தேன் . என் நண்பான் தடுத்தான்.

“ வேண்டாம் நண்பரே, என்னால உங்களுக்கு சங்கடம் வேணாம். “ என உதறி விட்டு வெளியில் வந்தேன். என் நண்பனும் உடன் வந்தான் .

அந்த பெரிய அறைக்கும் கடவுள் இருப்பிடத்திற்கும் இடையில் ஒரு சின்னஞ்சிறு  அறை இருந்தது. அதிலிருந்து கடவுளின் அறையையும் விவாத அறையையும் ஒரே நேரக் கோட்டில் பார்க்க முடியும்..வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லாத அந்த அறையில் ஒரு நாற்காலியில் அமரச் சொன்னான்.

“ இங்க நடக்குற கூத்தைப் பார்க்கத்தான் அனுமதி வாங்கியிருக்கேன். கெடுத்தாட்டுனுங்க . இங்க உட்காருங்க நண்பரே தெளிவா நடக்குற கூத்தை பார்க்கலாம் “

                               வழிபாட்டு நேரம் தொடங்கியது. கடவுளின் அறையான பெரிய கூடத்தில் கடவுள் நம்பிக்கையாளர்கள் வரத் தொடங்கினர். கடவுளின் இருப்பிடம் ஒரு உயர்ந்த பளிங்கு மேடையில் அமைந்திருந்தது. கடவுளின் இருப்ப்பிடத்திற்கும் கடவுள் நம்பிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கும் இடையில் குறைந்தது ஐம்பது  அடி  தொலைவிற்கு இடைவெளி இருந்தது.

சற்று பருமனான கடவுள் கோட்பாளன் ஒருவன் கடவுளின் இருப்பிடத்திற்கு சற்று முன்பாக _ அது கடவுள் நம்பிக்கையாளர்கள் நின்று கொண்டிருந்த முதல் வரிசைக்கு மிக அருகில் _ ஒரு பெரிய துருவேராத இரும்பில் பளபளக்கும் அண்டா போன்ற பாத்திரத்தை அதற்கென்று அமைக்கப் பட்டிருந்த பீடத்தில் வைத்தான். ஒரு தூய துணியால் அதனை முழுவதும் மூடினான் அதன் மேல் பகுதி குழிவாகஇருந்தது காணிக்கை செலுத்த வசதியாக துநிடின் நடுவில் ஒரு பெரிய கீறல்  இருந்தது.  அந்தத் துணியின் வெளிப்பகுதி முழுவதும்  அவர்கள் மதத்தின் குறியீடுகள் பொறிக்கப் பட்டிருந்தன.

 

“ கடவுள் வல்லவர். நீங்கள் அவரை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அவர்   உங்களை நோக்கி நூறடி எடுத்து ஓடோடி வருவார். உங்கள் துன்பங்களைப் பார்க்கும் கண்கள் கடவுள். உங்கள் ஆசைகளைக் கேட்கும் செவிகள் கடவுள். உங்கள் தேவைகளை நிறைவேற்றும் கரங்கள் கடவுள். ஒரு நாணயம் காணிக்கையாக செலுத்தினால் அவர் உங்களுக்கு பத்து நாணயங்களாகத் திருப்பித் தருவார். “ மைக்கில் கடவுள் நம்பிக்கையாளன் ஒருவன் முழங்கிக் கொண்டிருந்தான்.

எனக்கு அந்த நேரம் கடவுள் ஒரு சந்தைப் பொருளாக காட்சி அளித்தார்.   A marketing commodity.

கடவுள் வழிபாடு தொடங்கியது. சலிப்பூட்டும் நெடிய பொழுதுகள் .நான் கவனத்தை விவாத அறைக்கு திருப்பினேன்.

மதத்தின் தலைமைப் பொறுப்பாளர் விவாத அறையின் மைய்யப் பகுதியில் அமர்ந்திருந்தார். அவர்களது வைதீக முறையில் ஆடை உடுத்தி உயர்வான இருக்கையில் அமர்ந்திருந்தார்.

“ வசந்தகால விழாவின்பொழுது அனைத்து ஆலயப் பணிகளுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கான ஏலம் முறையாக நடக்கவில்லை. “ என்றார் ஒரு தொழில் அதிபர்.

“ முறைகேடு எதுவும் நடக்கவில்லை “ என்றார் தணிக்கையாளர்.

“ குறுக்கு வழிகளும், தெரிந்தவர்களுக்கு சலுகைகளும் வழங்கப் பட்டன. “ என்றார் வக்கீல்.

“ நிரூபிக்க முடியுமா? “ என்றார் மருத்துவர்.

“ அரசியல் பின்னணி உள்ளவர்களை எப்படி குற்றம் சொல்ல முடியும்? “

“ எந்த கட்சி ? என்ன சாட்சி? “

“ சீருடையில் வந்திருக்கும் காவலர் சாட்சி.போதுமா? “

“ கேடு கெட்டவனே “

“ திருடா “

“ அயோக்கிய நாயே “

“ பொறுக்கி “

“ மொள்ளமாறி “

“ …….. மவனே “

“ ட் ட் ட் ட் டேய் ……….ங்கோ ……..”

பெரிய கைகலப்பு நிகழத் தொடங்கியது. யார் யாரை அடித்தார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. தலைமைப் பொறுப்பாளருங்கூட சிறிதும் தயக்கம் இன்றி தன்னைச் சுற்றி இருந்தவர்களைக் கைகளால் தாக்கிக் கொண்டிருந்தார். ஓரிரு முகங்களில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டன. என் நண்பன் தலை தலையாக அடித்துக் கொண்டு வெளிக் கதவை மூடினான். இப்பொழுது நான் அவர்களிடமிருந்து முற்றிலும் துண்டிக்கப்ப் பட்டேன்.

           வழிபாடு ஒரு முடிவை எட்டத் தொடங்கியது. கடவுள் நம்பிக்கையாளர்கள் கடவுளின் இருப்பிடம் நோக்கி நகர்ந்தனர்.  கடவுளைத் தொழுது விட்டு திரூம்பும்பொழுது அந்தப் பெரிய துணியால் மூடிய பாத்திரத்தில் தாராளமாக காணிக்கை இட்டுச் சென்றனர். பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே ஒரு இளைஞன் பெரிதாக அழுதபடி தன கழுத்தில்  அணிந்திருந்த முரட்டுத் தங்கச் சங்கிலியைக் கழற்றி அந்தப் பாத்திரத்தில் போட்டான். ஒரு முதியவர் புத்தம் புதிய கரன்சி நோட்டுக் கட்டு ஒன்றை போட்டார். மோதிரம், வளையல் ,சங்கிலி என அந்த பாத்திரம் பசி அடங்காமல் விழுங்கிக் கொண்டே இருந்தது.

அறைக்கதவு திறந்தது. என் நண்பன் மட்டும் வெளிடில் கிளம்பி வந்தான்.

“ வாங்க தோழரே போகலாம்  “

“ என்ன ஆச்சு?” என்றேன்.

“ எதுவும் கேட்க்காதிங்க .தலைமை மதப் பொறுப்பாளர் பதவி ஆட்டம் கண்டிடுச்சு. போட்டி நடக்கப் போவுது. பண பலம் ,குண்டர் பலம் எல்லாம் வெளியில் தெரியப் போகும் மதத் தலைவர் போட்டி. தலைமைப் பொறுப்பின் வீச்சை இன்றுதான் பாத்தேன். கடவுள் ஒரு மையப் புள்ளி என்றால் அதைச் சுற்றி இயங்குபவர்கள் கடவுளை விட வல்லமை படைத்தவர்கள் என்பது இன்னிக்குத்தான் புரிஞ்சது. ஆன்மா என்பது ஞானத்திற்குக் கட்டுப்  படுவதில்லை  பணத்திற்கு  கட்டுப்படும்.அம்மம் பணத்திற்கு மட்டும் கட்டுப்படும். .கடப்பாரை தூக்குபவந்தான் கடவுள் பொறுப்பாளன் இங்கே.”

                  நாங்கள் வெளியே வந்தபொழுது பங்ச்சர் கடைக்காரன் கடவுள் நம்பிக்கையாளர்களின் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தான்.

“ நீ ஏது இந்தப் பக்கம்? “ எனக் கேட்டார் நண்பர்.

“ வழிபட வந்தேன் “

“ உன் பிரிவு இது கிடையாதே “

“ ஆனாலும் இதுவும் ஒரு வகையில் என் கடவுளை தன்னிடம் கொண்ட மதம்தானே “

“ வேறு காரணம் உண்டா? “

“ காணிக்கை செலுத்த வந்திருக்கிறேன் “

“ காணிக்கையா? எதுக்கு? “

“ ஒரு நாள் வருமானம். “

“ அது என்ன கணக்கு ஒரு நாள் வருமானம் என்று? “

“ ரயில்வே எக்ஸாமில் என் பையன் பாஸ் பண்ணனும் ,. அப்படி பாஸ் பண்ணினா ஒரு நாள் சம்பளத்தை காணிக்கையா போடறதா  வேண்டிக்கிட்டேன் .கொஞ்ச நேரத்திற்கு முன்னால்தான் தான் பாஸ் பண்ணிட்ட்டதா என் மகன் நல்ல செய்தி சொன்னான் .”

“ இன்னிக்கு எவ்வளவு ஒரு நாள் வருமானம் எவ்வளவு? ”

“ கடவுளின் வல்லமையைப் பாருங்கள்.என்னிக்கும் இல்லாம இன்னிக்கு மட்டும் மொத்தம் 21 பங்க்ச்சர் . ஆயிரம் ரூபாய் வருமானம் . கடவுள் வல்லவர்தானே?” அவன் அவரை மீண்டும் ஒருமுறைத் தொழுதான்.

என் நண்பர் என்னைப் பார்த்து சிரித்தார்.

கடவுள் இடத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த கடவுள் பரப்பாளர் ,“கடவுளுக்கு ஒரு நாணயம் காணிக்கையாக செலுத்தினால் அவர் உங்களுக்கு பத்து நானயங்களாகத் திருப்பி கொடுப்பார். “ எனக் கூவிக் கொண்டிருந்தார்.

##################

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -16 என்னைப் பற்றிய பாடல் – 9 (Song of Myself) விடுதலைக் குரல்கள் ..!‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……22 வல்லிக்கண்ணன் – ‘வல்லிக்கண்ணன் கடிதங்கள்’
author

Similar Posts

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *