ரேபீஸ்

author
23
0 minutes, 24 seconds Read
This entry is part 2 of 31 in the series 31 மார்ச் 2013

 

டாக்டர் ஜி.ஜான்சன்

இரவு பத்து . அவசரப் பிரிவிலிருந்து அழைப்பு வந்தது. மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு கடுமையான குளிர் காய்ச்சல்.

நான் அன்று அவசர அழைப்பு மருத்துவர்( on call doctor ). இரவு முழுதும் வரும் அவசர நோயாளிகளைப் பார்த்து தேவையெனில் வார்டில் சேர்க்கவேண்டும். அதன் பின்பு வார்டு மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்துக் கொள்வார்கள்.

நான் வீட்டில்தான் இருப்பேன். நோயாளி வந்தால் மட்டுமே வெளியேறுவேன். அவசர அவசரமாகப் புறப்பட்டு அவசரப் பிரிவிற்குச் சென்றேன்.

சிவகங்கை திருப்புத்தூர் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை அப்போது சுற்றுவட்டார மக்களுக்கு சிறப்பான சேவை செய்து வந்தது. ஏழை எளியோருக்கு இலவசை சிகிச்சை தரப்பட்டது. அதே வேளையில் வசதி படைத்தொரிடமிருந்து சிறு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பொது மருத்துவமனை அது, மருத்துவம், அறுவை சிகிச்சை, பெண்கள் வியாதி, மகப்பேறு, குழந்தை வைத்தியம், கண் , தொழு நோய்ப் பிரிவு என்று முந்நூறு படுக்கைகள் கொண்ட வசிதிகள் இருந்தன. வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்து இயங்கியது.

தொடக்க காலத்தில் ( 100 வருடங்களுக்கு முன் ) சுவீடன் நாட்டு மருத்துவர்கள் இங்கு பணி புரிந்தபோது மேல் நாட்டு பாணியில் இதை நடத்திவந்தனர். அவர்கள் நிரந்தரமாக திரும்பிப் போனபின்பும் அதே முறையில்தான் அனைத்தும் இயங்கியது.

 

அவசரப் பரிசோதனை அறையில் இரவு தாதியர் பலர் ஒரு கட்டிலைச் சூழ்ந்திருந்தனர். அந்த கட்டிலில் மித்திரன் படுத்திருந்தார். அவர் குளிரில் நடுங்குவது தெரிந்தது. ஆனாலும் அறை வேப்பமாகத்தான் இருந்தது .  அவருடைய மனைவி மரியம்மாள் சோகத்துடன் அருகில் நின்றார்.

” என்ன மித்திரன்? என்ன ஆனது? நேற்று பார்த்தபோது நன்றாகத்தானே இருந்தீர்கள்? இப்படி நடுங்குகிறீர்களே? ” அருகில் சென்று நெற்றியைத் தொட்டுப் பார்த்தேன். காய்ச்சல் கொதித்தது.

” ஆமாம் டாக்டர். கொஞ்ச நாளாக ஒரு மாதிரிதான் இருந்தது. இன்றுதான் இப்படி.” அவரால் அதிகம் பேச முடியவில்லை.

” இல்லையே? நேற்று இரவு சிஸ்டர் பாலின் வீட்டு பிறந்தநாள் விருந்தில் நன்றாகதானே இருந்தீர்கள்? ”

” அப்போதே எனக்கு சாப்பிட குடிக்க பிடிக்கலை டாக்டர். வேறு வழி இல்லாமல்தான் சமாளித்தேன்.. இப்போ என்னால் முடியலை டாக்டர். ”

சுற்றி இருந்த தாதியர் விலகிச் சென்றனர். அவசரப் பிரிவு தாதி அமுதா மட்டும் உடன் இருந்தாள் .

” டெம்பெரேச்சர் 40 டிகிரி செல்சியஸ் . பீ. பி . 130/ 90 ” என்று தெரிவித்தாள்.

மித்திரனை பரிசோதனை செய்து பார்த்ததில் வேறு ஏதும் தெரியவில்லை. இரத்தப் பரிசோதைகள் செய்து பார்த்தால்  ஏதாவது புலப்படும் என்ற நோக்குடன் அவரை படுக்கையில் சேர்த்தேன்.

” சரி இரவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் மித்திரன். காலையில் பார்ப்போம் .” அவரிடமிருந்து விடை பெற்றேன்.

மருத்துவரின் அறைக்குச் சென்று குறிப்புகளை எழுதி முடித்தேன். அமுதா அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எனக்கு மிகவும் அபிமானமானவள். அதற்கு ஒரு காரணமும் இருந்தது. அவள் என் மாணவியாக இருந்து தாதி ஆனவள்.

அவள் எங்கள் தாதியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றபோது நான் மருத்துவ வகுப்புகள் எடுத்துள்ளேன். அப்போது அவள் வகுப்பில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தவள்.

பளிச்சென்ற பொன்னிற மேனியும் கறுகறுவென்று கார்மேகக் கூந்தலும் கொண்டவள் அமுதா.தாதியர்களில் தனி அழகுடன் பவனிவரும் இருபது வயதுடைய பருவ நிலா அமுதா!

” தேநீர் வேண்டுமா டாக்டர்? ” என்று கேட்டதற்கு சரி என்றேன்.

சிறிது நேரத்தில் தேநீர் கிண்ணத்துடன் அருகில் வந்தாள் .

தேநீர் அருந்திய போது மித்திரனின் குரல் கேட்டு இருவரும் அவரிடம் சென்றோம்.

” டாக்டர்.. ரொம்ப குளிருது . அந்த பேன் ( fan ) வேண்டாம் . குளிர் காத்து பிடிக்கலே. ” கெஞ்சாத குறையாகக் கேட்டார். உடன் அமுதா அந்த சுழல் மின்விசிறியை நிறுத்தினாள்.

பொதுவாக இதை வைரஸ் காய்ச்சல் என்றுதான் சிகிச்சை தருவோம். அப்போது டெங்கி காய்ச்சல் அப் பகுதியில் இல்லை இதுபோன்று இரவு நேரத்தில் குளிர் காய்ச்சல் வந்தால் மலேரியா அல்லது பைலேரியா ( filaria ) காய்ச்சலாக இருக்கலாம். அதனால் நள்ளிரவு இரத்தப் பரிசோதனை செய்வது வழக்கம்.அதையும் செய்யச் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

இரண்டு மணியளவில் அமுதா தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு இரத்தப் பரிசோதனையில் மலேரியா, பைலேரியா இல்லை என்று தெரிவித்தாள். இது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான் என்ற முடிவுடன் படுத்துவிட்டேன்.

காலை எட்டு மணிக்கு மீண்டும் வார்டு சென்றபோது, மித்திரன் வேறு விதமாகக் காணப் பட்டார். எதையோ இழந்து போனேவர் போல் பரபரப்புடன் எழுவதும், படுப்பதுமாக இருந்தார்.கண்களும் ஒரு நிலையில் இல்லாமல் இங்குமங்கும் மாறிமாறி பார்த்தன. ஒருவகையில் சுயக் கட்டுப்பாடு இழந்தவராகவும் தென்பட்டார்.

அதிகமான காய்ச்சலில் ஒரு சிலருக்கு டெலிரியம் ( delirium ) ஏற்படுவதுண்டு.டெலிரியம் என்பது நச்சுத்தன்மைமிக்க குழப்ப நிலை ( toxic confusional state ) என்றும் அழைக்கப்படும்.மூளையின் செயலிழப்பால் கவனம் செலுத்துவது பாதிக்கப்பட்டு, இதுபோன்று , பார்ப்பதும் கேட்பதும் புரியாமல் உண்டாகும் குழப்பமான மனநிலை இது. அதிகமான கிருமித் தோற்றாலும் ( infection ), இரத்தத்தில் நச்சுத்தன்மை பரவிவிட்டாலும் ( septicaemia ) இதுபோன்று டெலிரியம் தோன்றலாம்.

ஆனால் மித்திரனுக்கு நேற்றுதானே காய்ச்சல். ஒரு நாளில் இப்படி மூளையையோ இரத்தத்தையோ எந்த காய்ச்சலும் பாதிக்கும் வாய்ப்பு இல்லையே என்று அவரைவிட நான் அதிகம் குழம்பி போனேன்!

இரவு செய்த இரத்தப் பரிசோதனைகளில் வெள்ளை இரத்த செல்களின் ( white blood corpuscles ) அளவு 10.000 மேல் உயர்ந்து கிருமித் தோற்றுதான் ( infection ) என்பதை உறுதிப் படுத்தியது. ஆனால் அது என்ன கிருமி?

செபுராக்சிம் எண்டிபையாட்டிக் ( Cefuroxime ) ஊசி மருந்தை ட்ரிப் வழியாக தந்து விட்டு வெளிநோயாளிகள் பிரிவிற்கு சென்று நோயாளிகளைப் பார்க்கத் துவங்கினேன்.

சுமார் பாத்து மணியளவில் சிஸ்டர் பாலின் என்னைக் காண வந்தார்.

” டாக்டர், உங்களிடம் ஒன்று சொல்லணும். மித்திரன் பற்றியது. ” பரபரப்புடன்தான் அவர் காணப்பட்டார்.

” வாங்க சிஸ்டர் உட்காருங்கள். சரி சொல்லுங்கள் சிஸ்டர். நானும் அவரைப் பற்றிதான் எண்ணிக் கொண்டிருந்தேன்.அவரின் காய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.இது சாதாரண காய்ச்சல் இல்லை ”

சிஸ்டர் பாலின் மருத்துவமனையில் பல வருடங்கள் பணிபுரியும் மூத்த தாதி. என்ன கூற வந்துள்ளார் என்று அவரைக் கூர்ந்து பார்த்தேன்.

” டாக்டர். எனக்கு ஒரு சந்தேகம்.இரண்டு வாரத்துக்கு முன் மித்திரன் ஒரு நாய்க் குட்டியை எங்கிருந்தோ தூக்கிவந்து வளர்க்க எண்ணினார்  ஆனால் அன்றே அது அவரின் விரலைக் கடித்து விட்டது. அவர் உடன் கழுவி ஹேண்டி பிளாஸ்ட் ( handy plast ) போட்டுக்கொண்டார். என்னிடம்  சொன்னபோது உடன் ஒரு ஏ.டி .டி . ( A.T .T .) போட்டுக் கொள்ளச் சொன்னேன். பொட்டுக்கொண்டாரா என்று தெரியலை . எனக்கு என்னமோ அதனால் ….? ” அவர் கூறி முடிக்காமல் மழுப்பினார்.

நான் உடன் இருக்கையில் இருந்து எழுந்து விட்டேன்.

” வாருங்கள் சிஸ்டர் வார்டுக்கு .” வேகமாக வெளியேறினேன். அவரும் பின்தொடர்ந்தார்.

” ஆமாம் சிஸ்டர். அவர் வலது கை ஆள்காட்டி விரலில் ஒரு சின்ன பிளாஸ்டர் போட்டிருந்தார். நான் அது பற்றி ஏதும் கேட்கவில்லை..” போகும்போது அவரிடம் கூறினேன்.

மித்திரன் அறுவை சிகிச்சை அறையில் ( operation theatre ) உணர்வு அகற்றுநராக ( anaesthetist ) பணிபுரிபவர்.ஆண் தாதியரான அவர் சிறப்பு பயிற்சி பெற்றவர். அவருடைய மனைவி மரியம்மாளும்கூட அதே பிரிவில் பணி புரியும் தாதிதான்.

வார்டில் அப்போது மரியம்மாள் இருந்தார்.

” சிஸ்டர் பாலின் அந்த நாய்க் குட்டி பற்றி சொன்னார்கள். உடன் ஊசி போட்டுக்கொண்டாரா? ” அவரைப் பார்த்து கேட்டேன்.

” நானும் சொன்னேன் டாக்டர். இவர் குட்டி நாய்தானே என்று சொல்லிவிட்டார். ஏன் டாக்டர் அது பற்றி கேட்கிறீர்கள்? ” அவரின் மனதிலும் அந்த சந்தேகம் இப்போது வந்திருக்கலாம்.

” அந்த நாய்க் குட்டி வீட்டில் இப்போது எப்படி உள்ளது? ” இது எனது அடுத்த கேள்வி.

” ஆத்திரத்தில் அதை அடித்துக் கொன்றுவிட்டார் டாக்டர்.”

மித்திரன் செய்த பெரும் தவறு இது! கிடைத்த ஒரேயொரு தடயமும் இப்போது கை நழுவி விட்டது!

அப்போது மித்திரன் மூச்சு திணறுவது தெரிந்தது. உடன் நகர்த்தும் எக்ஸ் -ரே ( portable X -Ray ) கொண்டு வந்து நெஞ்சு படம் எடுத்துப் பார்த்தேன். நுரையீரலில் நீர் கோத்துள்ளது ( pulmonary oedema ) தெரிந்தது. உடன் பிராண வாயு தர ஏற்பாடு செய்தேன்.

இதுவரை சாதாரண காய்ச்சல் என்று எண்ணியிருந்த மரியம்மாவின் முகத்தில் முதல்முறையாக பீதி பரவியது.

” இது என்னவாக இருக்கும் டாக்டர்? இப்படி மூச்சு வாங்குதே! ” அவள் கண்கள் கலங்கின.

அப்போது சிஸ்டர் பாலின் ஒரு கிளாசில் தண்ணீர் ஊற்றி அதை மித்திரனிடம் காட்டி குடிக்கச் சொன்னார்.

அதைக் கண்ட அவர், முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு , ” அதைக் கொண்டு பொங்கள் ! வேண்டாம்! வேண்டாம் ! ” என்று பீதியுற்ற நிலையில் கத்தினார்.

இது ஹைட்ரோபோபியா! ( hydrophobia ) சந்தேகமே இல்லை! மித்திரனுக்கு ரேபீஸ் ! ( rabies )

ரேபீஸ் என்பது வெறி நாய்க் கடி நோய் ! இது ரேபீஸ் வைரஸ் கிருமியால் உண்டாவது. கடி பட்ட இடத்தில் கிருமி பரவி பெருகி உடன் நரம்பு வழியாக மூளையை தாக்கவல்லது. மூளை நரம்புகள் பாதிக்கப்படுவதால் தொண்டையில் ஆகாரம் நீர் விழுங்க உதவும் நரம்புகள் செயல் இழந்து விழுங்க பயம் உண்டாகும் . இதனால் நீரைப் பார்த்தால் பீதியுறுவர் .இதுதான் ஹைட்ரோபோபியா!

இத்துடன் காற்றும் பீதியை உண்டுபண்ணும்! இதை ஏரோபோபியா ( aerophobia ) என்று பெயர். இதனால்தான் மித்திரன் கூட மின்விசிறியை நிறுத்தச் சொல்லியுள்ளார்!

அப்போது மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியாக டாக்டர் பிரட்ரிக் ஜான் இருந்தார். அவருடன் உடன் தொடர்பு கொண்டேன். அவரும் உடன் விரைந்து வந்தார்.

மித்திரன் பற்றி அனைத்தையும் அவரிடம் கூறினேன் உடன் அவரை மதுரைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தோம்.அங்கு பிரபல நரம்பியல் மருத்துவரான டாக்டர் ராமமூர்த்தியிடம் காட்டலாம் என்று கிளம்பினோம்.

மருத்துவமனை அவரசர விரைவு வண்டியில் ( ambulance ) மித்திரனை ஏற்றுவதில் சிரமம் உண்டானது. அவர் கீழே இறங்கி ஓடப் பார்த்தார். அவரைப் பிடித்து உட்கார வைத்துக் கொண்டு போக நால்வரின் துணையும் தேவைப் பட்டது. அவ்வளவு மூர்க்க குணம் !

டாக்டர் ராமமூர்த்தி மேலும் சில பரிசோதனைகள் செய்து பார்த்தார். அதில் முக்கியமானது மூளை – தண்டுவட – நீர் ( cerebro – spinal – fluid ) பரிசோதனை. இது மூளைப்படல அழற்சி ( meningitis ) உள்ளதா என்பதைப் பார்க்கும் பரிசோதனை. ஆனால் இந்த பரிசோதனை ரேபீஸ் வியாதியை நிச்சயப் படுத்தாது. நோயாளியின் உமிழ்நீரை எடுத்து புளுவோரெஸ்சென்ட் எண்டிபாடி ( fluorescent antibody ) பயன்படுத்தி ரேபீஸ் எண்டிஜென் ( rabies antigen ) உள்ளதா என்று கண்ட பிடிப்பதே நிச்சயமான முறை. இந்த முறை அப்போது மதுரையில் இல்லை. அது செய்யாதபோது நோயாளியின் அறிகுறிகளை வைத்தே ரேபீஸ் தீர்மானிக்கப்பட்டது

ரேபீஸ் நோய் பற்றி மேலும் விளக்கினார் டாக்டர் ராமமூர்த்தி :

” ரேபீஸ் வியாதி இரு வகையானது. வீறுமுள்ள ரேபீஸ் ( furious rabies ) முதல் வகை. இதுவே பரவலாக காணப்படுவது. அடுத்தது ஊமை ரேபீஸ் ( dumb rabies ).இதில் கால்களில் இருந்து மேல்நோக்கி வாதம் ( ascending paralysis ) உண்டாகும். இந்த வகையானது

வெளவால் கடியால் உண்டாவது. வெறி நாய் கடித்து சில வாரங்களில் இருந்து சில மாதங்கள் வரைகூட நோய் மறைந்து இருக்கலாம் ( incubation period ).அதன்பின்பே அறிகுறிகள் தென்படும்.

காய்ச்சல், தலைவலி, பலவீனம் போன்றுதான் முதலில் தோன்றும். பத்து நாட்கள் கழித்து பயம், பரபரப்பு, அமைதியின்மை , மன அழுத்தம் அல்லது மன அதிர்ச்சி , இல்பொருள் காண்தல் ( hallucination ) , இயல்புக்கு மாறான நடத்தை ( bizarre behaviour ) , வாதம் போன்றவை ஏற்படலாம்.

இயல்புக்கு மீறிய தூண்டுதல் ( hyper – excitability ) இந்த வகை ரேபீஸ் வியாதியின் முன்னோடி அறிகுறியாகும் பார்வையாலும் செவியாலும் உண்டாகும் தூண்டுதல்கள் ( auditory and visual stimuli ) இதைத் துரிதப் படுத்தும்.

அதோடு, விழுங்கவும்,சுவாசிக்கவும் உதவும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் ஹைட்ரோபோபியா, ஏரோபோபியா எனும் நீருக்கும் காற்றுக்கும் பீதி உண்டாகும்.

இறுதியில் பத்து முதல் பதினான்கு நாட்களில் வலிப்பு ( convulsion ) , மூச்சு விடுதல் தடைப்பட்டு, இருதயம் தாறுமாறாக துடித்து உயர் பிரியும்!

இவ்வளவும் விளக்கிய அவர் மித்திரன் இறந்து போவது உறுதி என்று கூறிவிட்டார்! இது கேட்ட மரியம்மா அங்கேயே மயங்கி விழுந்தார்! எங்கள் அனைவரின் கண்களும் கலங்கின!

” இப்போது என்னதான் செய்யலாம் டாக்டர்? ” பதற்றமுற்ற நிலையில் அவரை வினவினோம்.

” என்னை மன்னிக்கவும். வேறு ஏதும் செய்ய இயலாது. இவர் இன்னும் மூர்க்கமாகலாம். அப்போது கட்டுப்படுத்துவது சிரமம். பேசாமல் தனி அறையில் ( cell ) பூட்டி வைப்பதுதான் நல்லது. “.

அது கேட்டு நாங்கள் அனைவருமே அதிர்ச்சியுற்றோம்! இப்படியும் ஒரு வியாதியா? இதற்கு மருந்தே கிடையாதா? இவ்வளவு கொடியதா ரேபீஸ்! இதுபற்றி நான் படித்தபோது இதன் கொடூரம் எனக்குத் தெரியவில்லை. நேரில் பார்த்தபின்தான் அதை உணர முடிந்தது.

ஒரு நோயாளியை மரண தண்டனைக் கைதியைப்போல் இவ்வாறு தனி அறையில் பூட்டி வைப்பது பெரும் கொடுமையாகத் தோன்றியது.

திரும்ப திருப்புத்தூருக்குக் கொண்டு சென்று எங்கள் மருத்துவமனையில் பராமரிப்பது என்ற முடிவுடன் விடை பெற்றோம்.

திரும்பும் வழி நெடுக என் மனதில் வேறொரு பீதி குடிகொண்டது.

” அதோடு இவரை சிகிச்சை செய்தவர்கள் கையுறைகள் இல்லாமல் தொட்டிருந்தால், அவர்கள் ரேபீஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது நல்லது. காரணம் ரேபீஸ் கிருமிகள் வியர்வை, எச்சில் வழியாகவும் பரவும் வாய்ப்பு உள்ளது. எதற்கும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது . ” நாங்கள் புறப்பட்டபோது டாக்டர் ராமமூர்த்தி சொன்னது செவிகளில் ரீங்காரமிட்டன! அமுதாவும் நானும் மித்திரனை அதிகம் தொட்டுள்ளோம். நாங்கள் இருவருமே தொப்புளைச் சுற்றி ஐந்து நாட்கள் எச்.டீ சி வீ ( HDCV ) தடுப்பு ஊசி போட்டுக்கொளவேண்டும். இல்லையேல் …..? நினைக்கவே  உடல் நடுங்கியது. இதுவே மரண பீதி என்பது!

திரும்பியதும் முதல் வேலையாக ஸ்வீடனுக்கு தொலை அழைப்பு ( trunk call ) போட்டு உதவி கோரினோம். அவர்கள் உடன் அடுத்த விமானத்தில் , ” மனித ரேபீஸ் இமுனோகுளோபின் ” ( human rabies immunoglobin ) ஊசி மருந்து அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தனர்.அப்போது இந்த ஊசி மருந்து இந்தியாவில் கிடைக்கவில்லை. ஆனால் இது கடி பட்ட உடனே போடவேண்டும்.இருப்பினும் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் உடன் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வாகனம் அனுப்பப்பட்டது.

மருத்துவமனையில் சகல வசதிகளும் கொண்ட ஈரோப்பியன் வார்டில் ( European Ward ) சேர்த்தோம். அது தனியான ஒரு கட்டிடம் சிவகங்கை மன்னரால் கட்டப்பட்டு அவரின் ராணியின் பிரசவத்திற்குப் பின் தானமாக தரப்பட்டது.

மித்திரனுக்கும் தனக்கு என்ன என்பது ஓரளவு தெரிந்துள்ளது . சில சமயங்களில் அமைதியுற்ற வேளையில் , ” டாக்டர்…கிட்ட வராதீங்க. கடிக்கணும் போல் உள்ளது .” என்று எச்சரிப்பார். அந்த நேரம் அவரின் வாய் ஓரத்தில் எச்சில் வழியும்.

திடீர் என்று எழுந்து வெளியில் ஓடியபோது மிகவும் சிரமப்பட்டு அவரைப் பிடித்து வந்து கட்டிலுடன் சேர்த்து கட்டி வைத்தோம். விடுவிக்கச் சொல்லி கூக்குரலிடுவார்.கட்டிலோடு சேர்ந்து எழும் அளவுக்கு புது பலம் தென்பட்டது. அவரை அமைதி படுத்த வேலியம் ( valium ), மார்பின் ( morphine ), பெத்திடின் ( pethidine ) என்று தூக்க ஊசிகள் போடப்பட்டன. ஆனால் அவை பயன் அற்ற நிலைக்குள்ளாயின! அவரின் மூளை அவ்வளவு துரிதமாக தூண்டப்பட்டிருந்தது!

அன்று இரவு முழுதும் கொஞ்சமும் தூங்காமல் உரக்க கத்திக் கொண்டுதான் இருந்தார். மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் மித்திரன் சாகப் போகிறார் என்பது தெரிந்து விட்டது.அவர்களும் வார்டைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். அவ்வப்போது உள்ளே நுழைந்து பார்த்துவிட்டு போயினர்.

அந்த அறை இருட்டாக்கப்பட்டு சத்தமின்றி பாதுகாக்கப் பட்டது.

மறு நாள் உள்ளூரிலும் செய்தி பரவி விட்டது.வரும் நோயாளிகள்கூட அங்கு வந்து விசாரித்தனர். அவர்களில் ஒருவர் புதுக்கோட்டையில் ஒரு பிரபல நாட்டு வைத்தியர் நாய்க் கடியை குணமாக்குவார் என்று கூறினார். உடன் அவரையும் மருத்துவமனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அந்த நாட்டு வைத்தியரை அழைத்து வர விரைந்தனர். அப்படி அவரால் குணப்படுத்த முடிந்தால் ஆயிரம் ரூபாய் சன்மானம் தருவதாகவும் ஒப்புக்கொண்டோம்!

மித்திரனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற கடைசி முயற்சி அது. அதில் கொஞ்சமும் கெளரவம் பார்க்கவில்லை.

இரண்டு மணி நேரத்தில் நாட்டு வைத்தியர் வந்து சேர்ந்தார். கடி பட்ட விரலை கீறி அதில் பச்சிலை வைத்து ஒரு எலுமிச்சம் பழத்தினுள் விரலை நிழைத்து கட்டு போட்டார். இன்னும் 24 மணி நேரத்தில் விஷம் இறங்கிவிடும் என்றார். இதில் எனக்கு நம்பிக்கை இல்லைதான். வேறு என்னதான் செய்வது ? ஒன்றும் செய்யாமல் ஒரு உயிர் போவதைவிட இதுவும் செய்து பார்ப்போமே என்றுதான் அப்போது தோன்றியது.

மித்திரனின் நிலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

மறு நாள் காலையில் சுவீடன் மருந்து கிடைத்து அதையும் ஊசி மூலம் ஏற்றினோம்.

மித்திரனின் ஆவேசமும், மூர்க்கமும் கொஞ்சமும் குறைந்த பாடில்லை. அவரின் மூச்சுத் திணறலும் அதிகரித்தது.

ஆலய சபைகுரு அவருக்காக ஜெபம் செய்து இராபோஜனம் வழங்கினார். மித்திரன் சுய நினைவு இல்லாமல் திமிறிக்கொண்டும் உரக்க கத்துவதுமாகவே இருந்தார்.இரவு பகலாகே தூக்கமே வரவில்லை.

முயற்சிகள் அனைத்துமே தொல்வியுற்ற நிலையில் அவருடைய மரணத்தை , மிகுந்த மன பாரத்துடன் எதிர்நோக்க தயார் ஆனோம்

அவர் படும் துன்பத்தைக் குறைப்பது நல்லது என்று முடிவு செய்யப்பட்டது. இனி அவர் இப்படி தூங்காமல் விழித்திருந்து ஓலமிடுவது தேவையில்லை என்று முடிவு செய்தோம்.அவர் படும் வேதனைகள் போதும்! நிம்மதியாக நினைவை இழக்கச் செய்வதே மேல் என்ற நிலைக்கு உட்பட்டோம்.

உணர்வு அகற்றுநராக பணிபுரிந்த மித்திரனை அதே முறையில் உணர்வு இழக்கச் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். அவரின் மனைவி மரியம்மாளும் அதற்கு உடன்பட்டார்.

மித்திரன் பயன்படுத்திய அதே உணர்வு அகற்றும் எந்திரம் ( anaesthesia machine ) கொண்டுவரப்பட்டது. அவருக்கு மயக்கம் தரப்பட்டது. அவர் உடன் நினைவிழந்து அமைதியானார். அதன்பின் அவர் மீண்டும் உயிருடன் எழவேயில்லை!

Series Navigationகாவல் நாய்‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’
author

Similar Posts

23 Comments

 1. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  நெஞ்சைக் கீறும் ஓர் அவல மரணக் கதை. இந்த உண்மைச் சம்பவத்தைச் சிறிதளவும் மறக்காமல் மருத்துவ நுணுக்கத்தில் துடிப்பு நடையில் எடுத்துச் சொல்லிய உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.
  மரணத்தைத் தடுக்க முடியாதவாறு தவிக்கும் ஒரு டாக்டரின் மனப் போராட்டத்தை வாசகர் முன்னால் திரைப்படம் போல் காட்டியுள்ளீர்கள், டாக்டர் ஜி. ஜான்சன்.

  சி. ஜெயபாரதன்

 2. Avatar
  Dr.G.Johnson says:

  அன்பு நண்பர் ஜெயபாரதன் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் கூறியுள்ளது உண்மையே. இது நடந்து சுமார் 20 வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் நடந்தவை அனைத்துமே மனதில் பசுமரத்து ஆணிபோன்று பதிந்துவிட்டது. அது இப்போதுதான் கதை வடிவில் வெளிவந்துள்ளது. எந்த முயற்சியும் பயன் அளிக்காத நிலையில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் இவை. காண சகிக்க முடியாத நிலையில் அந்த இறுதி முடிவெடுத்தோம்.எத்தனையோ நோயாளிகள் இறந்துபோவதைப் பார்த்திருந்தாலும் மித்திரனை மறக்க முடியவில்லை…பாராட்டுக்கு நன்றி நண்பரே….டாக்டர் ஜி.ஜான்சன்.

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   டாக்டர் ஜி. ஜான்சன்,

   ரேபீஸ் கதைகள்போல், மருத்துவ நுணுக்கக் கலைப் படைப்புகளில் நீங்கள், வாசகருக்கு நோய் தீர்க்கும் கசப்பு மருந்தை தேனில் குழுப்பித் தெரியாமல் கொடுக்கிறீர்கள்.

   புது கலைப் படைப்பு முறை.

   வாழ்க நீங்களும், உங்கள் வாரிசுகளும்.
   சி. ஜெயபாரதன்.

 3. Avatar
  Bala says:

  இந்தக்கொடிய நோயால் இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறந்துகொண்டிருக்கின்றனர். வழக்கம்போல் இதைத் தடுப்பதற்கும் முயற்சிகள் அப்படியொன்றும் அதிகம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை.(வல்லரசு என்று பீற்றிக்கொள்வதைத் தவிர)

 4. Avatar
  paandiyan says:

  //
  ரேபீஸ் என்பது வெறி நாய்க் கடி நோய் ! இது ரேபீஸ் வைரஸ் கிருமியால் உண்டாவது. கடி பட்ட இடத்தில் கிருமி பரவி பெருகி உடன் நரம்பு வழியாக மூளையை தாக்கவல்லது. மூளை நரம்புகள் பாதிக்கப்படுவதால் தொண்டையில் ஆகாரம் நீர் விழுங்க உதவும் நரம்புகள் செயல் இழந்து விழுங்க பயம் உண்டாகும் . இதனால் நீரைப் பார்த்தால் பீதியுறுவர் .இதுதான் ஹைட்ரோபோபியா!//

  மாரடைப்பு உள்ளவர்கள் ஒரு asprin போட்டுகொண்டு மெதுவாக ஹோஸ்பிடல் போய் அவர்கள அட்மிட் செய்துகொள்ளலாம், அதுதான் முதலுதவி என்று dr. சொக்கலிங்கம் சொன்னதாக ஒரு நினைவு. அதை போல இதற்கு ஏதும் வழி , முதலுதவி எதாவது இருக்கின்றதா?

 5. Avatar
  Dr.G.Johnson says:

  அன்பு நண்பர்கள் திரு. சி. ஜெயபாரதன், திரு.பாலா, திரு. பாண்டியன் அவர்களே,

  ரேபீஸ் சிறுகதை படித்து கருத்தும் ஊக்கமும் தந்துள்ளதற்கு நன்றி.

  ரேபீஸ் பற்றி தனியாக ஒரு மருத்துவக் கட்டுரையே எழுதலாம்.

  இது ஒரு கொடிய வைரஸ் வியாதி. இன்னும் சரியான சிகிச்சை இல்லை எனலாம். இதன் அறிகுறி வந்தபின் மரணம் நிச்சயம்.அவ்வளவு கொடூரமான நோய் ரேபீஸ்.

  உலகில் ரேபீஸ் நோயால் உயிர் இழப்பவர்களில் 36 சதவிகிதத்தினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதற்கு முக்கிய காரணம் நமது கிராமங்களில் பெருகிவரும் நாய்களின் இனம்.தற்போது சுமார் 25 மில்லியனுக்கு மேலான நாய்கள் உள்ளன! இவற்றில் பெரும்பாலானவை தெரு நாய்கள். இவை அனைத்துக்கும் ரேபீஸ் தடுப்பு ஊசி போடுவது இயலாத காரியம்.

  வேறு வழி இல்லை. கடி பட்டபின் உடன் என்ன செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே பரப்பப்பட வேண்டும்.

  அதற்கு முன் வெறி நாய் என்பது எது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். வெறி நாய் காரணமின்றி தானாக நம்மைத் துரத்தி கடித்துவிடும். கடித்தபின்பு சரியாக உணவு உண்ணாமலும் ,நீர் பருகாமலும் தானாக 10 முதல் 15 நாளில் இறந்துவிடும். இதுதான் வெறி நாய் என்பது.

  தெரு நாய்கள் கடித்தபின்பு எங்கு சென்றன என்பதைக் கண்காணிப்பது இயலாது. ஆகவே தெரு நாய் கடித்தால் அது வெறி நாய் என்றுதான் ஒரு யூகத்தில் சிகிச்சை செய்தாகணும்.

  சிகிச்சை முறை வருமாறு

  1. கடிபட்ட காயத்தை சோப்பு போட்டு நன்றாக உடன் கழுவ வேண்டும்.

  2. உடன் மருத்துவ மனை விரைந்து செல்லவேண்டும்.

  3. Injection A .T .T . ஒரு ஊசி போடப்படும்.

  4. Rabies Immune Globulin ஊசி கடிபட்ட காயத்திலும், கையிலும் போடப்படும்.

  5. Rabies Vaccine முதல் ஊசி போடப்படும்.

  6. பின்பு 3, 7, 14, 28 ஆம் நாட்களில் மீண்டும் Rabies Vaccine போட்டுக்கொள்ளவேண்டும்.

  Rabies Immune Globulin கடிபட்ட இடத்தில் வைரஸ் கிருமிகள் பெருகாமலும், நரம்பு வழியாக மூளைக்குச் செல்லாமலும் தடுக்கிறது.

  Rabies Vaccine ரேபீஸ் வைரசுக்கு எதிர்ப்பு சக்தியை ( Antibodies ) உண்டுபண்ணுகின்றது.

  இதுவே சரியான சிகிச்சை முறை. ஆனால் இந்தியா போன்ற பரந்த நாட்டில், பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் வெறி நாய்க் கடிக்கு இந்த வகையில் முறையான சிகிச்சை தருவது இயலுமா என்பது பெரிய கேள்விக்குறியே!….டாக்டர் ஜி.ஜான்சன்.

 6. Avatar
  வாணிஜெயம் says:

  மதிப்பிற்குரிய டாக்டர் அவர்களுக்கு,ஒரு உண்மை சம்பவத்தை உயிரோட்டமான புனைவாக தந்து மனதை அதிர வைத்துவிட்டீர்கள்.வாசிக்கத் தொடங்கியபோது ஏற்பட்ட பரபரப்பு வாசித்து முடிக்கும் வரையில் கொஞ்சமும் குறையவில்லை.அத்துடன் தெளிந்த விளக்கம் தந்துள்ளது இன்னும் சிறப்பு.நன்றி.

 7. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள வாணி ஜெயம் , ரேபீஸ் சிறுகதை உங்களைக் கவர்ந்த்துள்ளது குறித்து மகிழ்ச்சி, தீவிர வாசகியும், மலேசியாவின் முன்னணி படைப்பாளருமான தங்களின் பாராட்டுக்கு நன்றி…டாக்டர் ஜி. ஜான்சன்.

 8. Avatar
  சான்றோன் says:

  நான் சிறுவனாக இருந்த போது நான் வளர்த்த நாய்க்குட்டி விளையாட்டாக என்னை கடித்துவிட்டது [ முப்பது வருடங்களுக்கு முன்பு ] ‘……அப்போது எங்கள் நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் அந்த நாயை அடித்துக்கொன்று விட்டனர்……… உடனடியாக என் தந்தை என்னை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்…..மருத்துவர் கேட்ட முதல் கேள்வியே நாய் உயிரோடிருக்கிறதா என்பதுதான்…… நாய் கொல்லப்பட்டுவிட்டது என்று தெரிந்தவுடன் , சந்தேகத்தின் அடிப்படையில் ரேபீஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்……..அப்போதெல்லாம் ரேபீஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள குன்னூர் செல்லவேண்டும்…..என்னுடைய அதிர்ஷ்டம் , எனக்கு முன்பாக எங்கள் ஊரில் நாய்க்கடிபட்ட ஒருவருக்காக அந்த மருந்து தருவிக்கப்பட்டது இன்னொரு செட் இருந்தது…… தொப்புளை சுற்றி பத்து ஊசிகள்.தினமும் அர‌சு மருத்துவமனைக்கு சென்று போட்டுக்கொள்ள வேண்டும்…………..அந்த மருந்து கரைய வெகு நேரம் எடுத்துக்கொள்ளும்…….அதுவரை சித்ரவதைதான்……..

  என் தந்தை ஓரளவு படித்த‌வராகவும் , விபரம் அறிந்தவராகவும் இருந்ததால் தப்பித்தேன்……. குட்டி நாய்தானே என்று மித்ரன் அவர்களைப்போலவே என் தந்தையும் நினைத்திருந்தால்? ஒருவேளை அந்த நாய்க்குட்டிக்கு ரேபீஸ் தொற்று இருந்திருந்தால்? ….. நினைத்துப்பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது….அதே சமயம் ஒரு மருத்துமனை ஊழியரே தன் அஜாக்கிரதை காரணமாக உயிரை இழந்ததை நினைத்தால் வருத்தமாகவும் இருக்கிறது……..

 9. Avatar
  Dr.G.Johnson says:

  இந்த சந்தர்ப்பத்தில் சொந்த அனுபவத்தைச் சொல்லி நாய்க் குட்டிதானே என அலட்சியம் கூடாது என்ற கருத்துக்கு வலு சேர்த்துள்ள திரு. சான்றோன் அவர்களுக்கு நன்றி…டாக்டர் ஜி.ஜான்சன்.

 10. Avatar
  Arun Narayanan says:

  It is like reading a thrill and suspense built story. Dr. Jhonson’s writings are so real and at the same time it is like a cinema. He beautifully takes the readers with him till the end; and one is simply moved more after reading the story. Great Doctor. Thank you.

 11. Avatar
  Rajan says:

  பெங்களுருவில் ஒவ்வொரு தெருவுக்கும் இருபதில் இருந்து முப்பது நாய்கள் இருக்கின்றன, வருடா வருடம் அவற்றுள் சிலதுக்கு வெறி பிடித்துவிடுகிறது. நாய்கள் பெருக்கத்திற்கு காரணம் இந்த முட்டாள் மக்களே, வீதியில் உணவு மற்றும் மாமிச குப்பைகளை கண்டபடி வீசி எறியவேண்டியது. நான் ஒரு ஆறு ஏழு வெறி பிடித்த நாய்களை அவற்றின் இறுதிக்காலம் வரை பார்த்துவிட்டேன், சகிக்க முடியாத கொடுமை அவற்றின் சாவு. இங்கே மாநகராட்சி இலவசமாக வந்து தடுப்பூசிகளைப் போடுகிறது, மேலும் கட்டுக்கடங்காத அவற்றின் இனப்பெருக்கத்தை குறைக்க அறுவை சிகிச்சையும் செய்கிறது, எவ்வளவோ பணம் இதற்காக ஒதுக்கப்படுகிறது, ஆனாலும் முழு வெற்றி இல்லை, மக்கள் ஒத்துழைத்தால்தானே. அவரவர் வீட்டின் முன் இருக்கும் நாய்களை சரியாக கவனித்துக்கொண்டாலே இந்த கொடிய வியாதி இல்லாமல் ஒழித்துவிடலாம்.

 12. Avatar
  ஜெயஸ்ரீ. says:

  அன்பின் டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களுக்கு,

  உங்கள் அனுபவங்கள் அனைத்தும் நிஜத்தில் நெஞ்சத்தை விட்டு நீங்காதவை தான்.
  உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் நாடகமாக நடிக்கின்றது. மனதோடு ஒன்றி நெஞ்சத்தை பாரமாக்குகிறது. ரேபிஸ் வந்து எத்தனை பேர்கள் இது போன்ற ஒரு முடிவைக் கண்டிருப்பார்…

  அதில் நீங்கள் செய்தது ஒரு விதத்தில் புண்ணியமான காரியம் தான்…மயக்க மருந்து போட்டு அறுவை சிகிச்சை செய்பவர்….அவரது இறுதி நிமிடங்களுக்கு அதே மருந்து காவலாக இருந்தது அமைதியான ஆன்மாவின் பயணத்திற்கு உதவியது. கோரம் தான். விதி வலியதா? அதனால் தான் குட்டி நாய் தானே என்று இருக்கத் தோன்றியதா? ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டும். நினைக்கவே மனதுக்கு சோகமாக இருந்தது.

  உங்கள் அனுபவங்கள் அனைவருக்கும் வாழ்க்கைப் பாடங்கள்.

  அன்போடு
  ஜெயஸ்ரீ.

 13. Avatar
  Dr.G.Johnson says:

  ரேபீஸ் சிறுகதை படித்து கருத்தும் பாராட்டும் தெரிவித்துள்ள திரு. அருண் நாராயணன், திரு., ராஜன், திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு எனது நன்றியை ஏறெடுக்கிறேன்…டாக்டர் ஜி. ஜான்சன்.

 14. Avatar
  புனைபெயரில் says:

  தயவு செய்து நீங்கள் மருத்துவ கட்டுரைகளை தமிழில் வழங்கலாமே..? அதுவும் போக, அவசர சிகிச்சை, முதல் உதவி போன்ற கையேடு குறிப்புகளை வழங்கலாமே..? கதையோடு போதனை, சிரிப்புடன் இழவு செய்தி என்பன போன்ற பாணி உங்களுக்கு வேண்டாமே..? அதற்கு டன் கணக்கில் ஆட்கள் இருக்கிறார்கள்… உங்கள் தனித்துவத்தை கட்டுரைகளில் காண்பியுங்கள்.. உங்கள் சேவை தேவை…

 15. Avatar
  Dr.G.Johnson says:

  அன்பு நண்பர் புனைபெயரில் அவர்களுக்கு, வணக்கம். உங்களின் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி. இன்னும் கதை வடிவில் சொல்ல வேண்டியவை உள்ளன.அவற்றையும் சொல்லி முடித்தபின் மருத்துவக் கட்டுரைகள் நிச்சயம் எழுதுவேன். நான் மலேசியா தமிழ் நாளிதழ் “: தமிழ் நேசனில் ” கடந்த 20 வருடங்களாக ” மருத்துவ கேள்வி – பதில் ” ஞாயிறுகளில் எழுதி வருகிறேன். அதுபோல் திண்ணையிலும் எழுதினால் பலருக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றே நம்புகிறேன்., திண்ணை நிர்வாகம் இதற்கு சம்மதிக்க வேண்டும் நன்றி. டாக்டர் ஜி.ஜான்சன்.

 16. Avatar
  பவள சங்கரி says:

  அன்பின் மரு.திரு. ஜான்சன்,

  அற்புதமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் படைப்பு. மருத்துவ அறிவியல் தமிழ் வார்த்தைகளை அழகாக பயன்படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது. வெளிநாட்டு மருத்துவர்கள் போல நம் நாட்டு மருத்துவர்கள் நோயைப் பற்றிய முழுமையான விவரங்களை சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்வது அரிதுதான். நோயின் தன்மை பற்றி நோயாளிகளுக்கு புரியும்படி சொல்ல வேண்டியது மருத்துவர்களின் முக்கிய கடமை என்பதையும் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளீர்கள். மனிதருக்கு பெரும் சேவை இது! நம் ஊர்களில் தெரு நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை. அரசாங்கம் இதையெல்லாம் கவனிக்க நேரம் ஒதுக்குவதில்லை. பல முறை புகார் கொடுத்தாலும் எளிதில் காரியம் நடப்பதில்லை. சுகாதாரத்துறை என்ற ஒன்று இருப்பதே நம்மாட்கள் பலருக்குத் தெரிவதே இல்லை..

  நன்றி ஐயா.

  அன்புடன்
  பவள சங்கரி

 17. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள பவள சங்கரி அவர்களுக்கு, ரேபீஸ் பற்றிய தங்களது உண்மையான கருத்துக்கு நன்றி. இவ்வளவு ஆபத்தான ஒரு நோயைப் பரப்பக்கூடிய தெரு நாய்களை எதிர்கொள்வது மிக முக்கிய சுகாதார செயல்பாடாகும். இதை அரசும் தன்னார்வமிக்க சமுதாய இயக்கங்களும் சேர்ந்து மேற்கொள்ளவேண்டும். வாழ்த்துகள் …டாக்டர் ஜி.ஜான்சன்.

 18. Avatar
  மேகலா இராமமூர்த்தி says:

  ‘ரேபிஸ்” பற்றிய மிகத் தெளிவான பதிவாக உள்ளது உங்கள் கதை மருத்துவர் ஜான்சன் அவர்களே. பாராட்டுக்கள்!!

  மருத்துவ அறிவியல் மிகவும் வளர்ந்துவிட்டது என்று என்னதான் நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும் ஆரம்ப நிலையில் நாம் கவனிக்கத் தவறுகின்ற பல நோய்களை இன்றைய மருத்துவமும் குணப்படுத்த இயலாத நிலையில்தான் உள்ளது என்பதே கசப்பான உண்மை. அத்தகைய நோய்களில் ஒன்று ‘ரேபிஸ்’ என்பதைத் தங்கள் கதையும் உறுதிசெய்கின்றது.

  இளம் வயதில் தெருநாயால் கடிக்கப்பட்ட என் தந்தையின் நண்பர் ஒருவர் நாய்போலவே சில நாட்கள் குரைத்துவிட்டுப் பின்பு இறந்ததாக என் தந்தை என்னிடம் கூறியிருந்த ஓர் உண்மைச் சம்பவம் தங்கள் கதையைப் படித்தவுடன் மீண்டும் நினைவில் நிழலாட மனம் வேதனையில் ஆழ்ந்தது.

  உங்கள் எழுத்தாற்றல் உண்மையிலேயே பிரமிக்கும்வகையில் உள்ளது. தொடர்ந்து உங்கள் ஆக்கங்களைக் குறிப்பாக மருத்துவ அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி!

  …மேகலா

 19. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள திருமதி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கு வணக்கம். தங்களின் அருமையான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். இது போன்ற மருத்துவ அனுபவங்களை எல்லா மருத்துவர்களாலும் இவ்வாறு பகிர்ந்துகொள்ள இயலாது. பகிர்ந்தால்தான் மருத்துவத் துறையில் உள்ள சிக்கல்கள் புரியும். இது ஒரு வகையில் விழிப்புணர்வை உண்டுபண்ணும் நோக்கத்தில் எழுதப்பட்டது.அதே வேளையில் மறக்க முடியாத சில அனுபவங்களை புனைவாக அழகு படுத்தியும் எழுத முயன்றுள்ளேன். இதற்கு இத்தகைய நல்ல வரவேற்பு உள்ளது கண்டு உவகையும் கொள்கிறேன். குறிப்பாக சிறந்த படைப்பாளர்களும் படித்து பின்னூட்டம் எழுதுவது சிறப்பு அம்சமாகும் …நன்றி….அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

 20. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பர் ஜான்சன் அவர்களது இன்னொரு நிஜக்கதை.

  கதை மூலம் ரேபிஸ் பற்றிய விழிப்புணர்வு பகிர்ந்ததற்கு நன்றி.

  நாய் மட்டுமின்றி பூனை, குரங்கு போன்ற மற்ற விலங்குகள் கடித்தாலும் முறையான Anti Rabis சிகித்ஸை எடுக்க வேண்டுமா?

 21. Avatar
  Dr.G.Johnson says:

  திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு வணக்கம். ரேபீஸ் என்றதும் நாய்க் கடிதான் நினைவில் வரும். ஆனால் ரேபீஸ் வெறிகொண்ட நாய் வேறு எந்த மிருகத்தைக் கடிக்க நேர்ந்தாலும் அந்த மிருகத்துக்கும் ரேபீஸ் வரலாம். பூனையை நாய் கடித்து அதற்கு ரேபீஸ் கண்டால் அதன் அறிகுறியும் நாய்க்கு உள்ளதுபோலவே இருக்கும் அந்த பூனை கடித்தாலும் ரேபீஸ் உண்டாகும். கடித்த பூனை பத்து நாளில் இறந்து விடும். ரேபீஸ் கண்ட குரங்கும் பத்து நாளில் இறந்து போவதால் அது காட்டில் இருந்து வெளியே வந்து கடிப்பது சிரமம்.

  நம்மை நாய் பூனை கடித்தால், அது ரேபீஸ் வெறிகொண்ட நாய் பூனையா என்பதை அறிய வேண்டுமானால், அது இறந்தபின் அதன் மூளையை பரிசோதனை செய்யும் வழியாகவே நிச்சயப் படுத்தலாம். அந்த பரிசோதனைக்கூடம் கூனூரில் உள்ளது…டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *