இந்தியாவில் பிரேயிலின் எதிர்காலம் – வாய்ப்புகள்+சவால்கள்.

This entry is part 30 of 33 in the series 14 ஏப்ரல் 2013

இந்தியாவில் பிரேயிலின் எதிர்காலம்

– வாய்ப்புகள்+சவால்கள்.

 முனைவர். கோ. கண்ணன்

இணைப் பேராசிரியர்,

தமிழ்த் துறை,

அரசு கலைக் கல்லூரி,

தருமபுரி.

 

 image002

*அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு புது டில்லி [aicb delhi all India confidaration for the blind] நடத்திய  கட்டுரைப் போட்டியில் தமிழ் மொழியில் மூத்தோருக்கான நிலையில் முதல் பரிசு பெற்ற கட்டுரை.

 


 

 

இருட்டில் படிக்கும்

எமது விழிகள்

விரல்கள்!  

இருட்டையும் அழிக்கும்

ஈடில்லா விழிகள்!

இந்த விரல்கள்

 

 

image003

 லூயி பிரேயில்

என்று நான் எழுதிய கவிதை வரிகள் பிரேயில் எழுத்துமுறையின் முக்கியத்துவம் குறித்து, பார்வையற்றோரின் வாழ்வில் பிரேயில் முறை அழுத்தமாக உருவாக்கியுள்ள சாதிக்க பொறியின்மை தடையன்று  என்ற உந்துதலையும், முயற்சித் திருவினை ஆக்கும் என்ற குறுகத் தரித்த குறளின் பொருளையும் புலப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை. அத்தகு சிறப்பு பெற்ற பிரேயில் முறை பல மொழிகளும், பழக்க வழக்கங்களும்,கலைகளும், நாகரிகங்களும், பண்பாடுகளும் கொண்டுள்ள இந்த பாரத தேசத்தில் எப்பொழுது முறையாக அங்கீகரிக்கப்பட்டது? இந்த பிரேயில் முறை யால் நமக்கு இப்போது கிடைத்துள்ள வாய்ப்புகள் யாவை? பெருமைமிக்க பிரேயில் முறைக்கு சவால்களாக உள்ள தடைகள் எவை? எதிர்காலத்தில் பிரேயில்முறை மேலும் சிறக்க வழிகள் எவை? என்பது போன்ற வினாக்களை எழுப்பிக் கொண்டு விடை தேடலே கட்டுரையின் நோக்கமாகும்.

 

பிரேயில்முறை விளக்கமும்-பயனும்.

 image005

 

ஆறே புள்ளிகளில் 63 வடிவங்களை அடிப்படையாக கொண்டு அகிலமெங்கும் வாழும் பார்வைமாற்றுத் திறனாளிகளுக்காக லூயிபிரேயில் என்ற ஞான சூரியன் உருவாக்கித் தந்த சீதனம்[பிரேயில்]என்ற  எழுத்துமுறை சாதனம். பிரேயில் உரு வாக்கிய எழுத்துமுறைக்கு அடிப்படையாக அமைந்தது சார்லஸ்பார்பியர்  கண் டறிந்து அளித்த 12 புள்ளிகள் கொண்ட போர் வீரர்கள் இருட்டில் தமக்குள் மறைவாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ளுவதற்கான ‘இரவு எழுத்து முறை ஆகும். இம்முறையை நுட்பமாக ஆராய்ந்து பார்வைமாற்றுத் திறனாளிகள் எளிதாகவும் சிக்கல் இன்றியும் கையாளும் வகையில் 12 புள்ளிகளை சரி பாதியாக  குறைத்து, அதாவது, 6 புள்ளிகள் என்ற வகையில் 1829-ம் ஆண்டு  அறிவுச்சுடராம் லூயி பிரேயில் அவர்களின் அளப்பறிய உழைப்பின் பயனால் விளைந்ததே  பார்வைக் குறைபாடுடையவர்கள் இன்று பயன்படுத்தி வரும் பிரேயில் எழுத்துமுறையாகும்.

 

 

பிரேயில் முறையின் விளைவுகள் பார்வைமாற்றுத் திறனாளிகளிடையே உருவாக்கிய தாக்கம்தான் என்ன?

 

பிரேயில் முறை தோன்றியதால் பூதலத்தே விழி இலா மகளிர் விலை மகளிர் பயனிலா ஆடவரோ இட்டதைத் தின்றுழலும் நாய்களினும் இழிபிறவிகள் என்ற சமூக மனோபாவம் சரிந்தது.  திண்ணமாய் நம்  அறியாமை என்னும் காரிருள் அகன்றது. பருதி பட்ட பனித் துளி போல தொலைந்தன நம்மைப் பீடித்த வறுமை நோயும் மூடப் பேயும். இன்று  பார்வை மாற்றுத் திறனாளிகள் சக மனிதருக்குச் சமமாய் கல்வி அறிவும், கணினித் தொழில்நுட்பமும், படைப்பாற்றலும், பலப்பல  கலைகளில் தேர்ச்சியும் பெற்றுத் திகழ்கிறார்கள். மகாகவி பாரதியார் மொழிந்த தைப் போல “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில்” பார்வைமாற் றுத் திறனாளிகளுக்கும் கைகூடியுள்ளது! இந்த மேம்பட்ட நிலைப்பாட்டுக்கு மூல காரணமாக அமைவது பிரேயில் முறை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி  போன்று புலனாகும் உண்மை. சுருங்கச் சொல்லின் நாம்விரல் நுனியில் விடு தலை பெற்றுள்ளோம் எனக் கூறினால் அது மிகைக் கூற்றல்ல.

 

பிரேயில் எழுத்துமுறை:

 

நமக்கு சுயமாக சிந்திக்கவும், சுதந்திரமாக நினைத்தவற்றை எழுதவும், படைப்பாற்றலை துல்லியமாகவும் முழுநிறைவோடும் வெளிப்படுத்தவும், வாசிக்கவும் அமைந்த அற்புதமான கருவியாகும் இந்த பிரேயில் முறை. இந்த புள்ளி எழுத்து முறை எப்பொழுது நம் பாரத மண்ணில் பரவியது? புள்ளி எழுத்துக்களுக்காக தம் வாழ்வையே அர்ப்பணித்த லூயி அவர்கள் மெய் வருத்தம் பாராமல், பசிநோக்காமல், கண் துஞ்சாமல் காலம் கருதாமல்  போராடியதன் விளைவால் அவர் தம் மறைவுக்கு பின்பே 1856-ம் ஆண்டு அளவிலேயே பிரேயில் முறை ஃபிரான்ஸில் அங்கீகரிக்கப்பட்டதாக அறிகிறோம். அதுபோலவே  1873-ம் ஆண்டு ஐரோப்பாவில் நடைபெற்ற பார்வையற்ற ஆசிரியர்கள் மாநாட்டுக்கு பின்பே நாடுக ளுக்கிடையே பிரேயில்முறை படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. இம்முறை மேன்மை பெற காரணமாக இருந்தவர் டாக்டர் தாமஸ் ரோட்ஸ் ஆர்மிட்டேஜ் [Thomas Rhodes Armitage] ஆவார்.

 

சர். சி. வி. இராமன் கண்டறிந்த ஒளி விலகல் கொள்கை எப்படி அவர் நினைவாக இராமன் விளைவு என வழங்கப்படுகிறதோ அவ்வண்ணமே லூயி பிரேயில் கண்டறிந்த புள்ளி எழுத்து முறை [பிரேயில்முறை] என போற்றப்படுகிறது. அன்மையில் 2009-ம் ஆண்டு லூயி பிரேயிலின் 200ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை உலகெங்குமுள்ள பார்வை மாற்றுத் திறனாளிகளும் பார்வையற்றோருக்கான அமைப்புகளும் நிறுவனங்களும் சிறப்புறக் கொண்டாடி லூயி அவர்களுக்கு நன்றி பாராட்டி மகிழ்ந்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தியாகும். லூயி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பெல்ஜியம், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகள் இரண்டு ஈரோ நாணயங்களையும், அமரிக்க நாடு 1 டாலர் நாணயத்தையும், நம் பாரதநாடு 2 ரூபாய் நாணயமும் வெளியிட்டு பிரேயிலை கௌரவப்படுத்தியுள்ளன.

 

image006

 

1887-ம் ஆண்டு இந்தியாவில் அமிர்தசரஸ் என்னும் இடத்தில் தொடங்கப்பட்ட பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் நிறுவனம் புனித காதரின் நிறுவனமாகும். இந்த நிறுவனமே இந்தியாவின் முதல் பார்வையற்றோர் பள்ளி என கருதப்படுகிறது. பிரேயில் முறை இல்லாமல் ஒரு பார்வையற்றோர் பள்ளியா? அது சாத்தியம் இல்லையல்லவா!

 

முதல் முதலில் இந்திய பார்வையற்றோருக்கு பிரேயில்முறையை அறிமுகப்படுத்தியவர் செல்வி அன்னிஷார்ப்அம்மையார் [Annie Shorp] ஆவார். இவ்வம்மையார் இந்திய பார்வையற்றோரின் கல்வி உபகரணத் தாய் என்னும் பெருமையினைப் பெற்றவராவார். இந்த அம்மையாரைப் போன்றே பிரேயில்முறை இந்தியாவில் பரவ உழைத்தோர் பலர். அவர்களுள் நீல்கந்த்ராய் தயாபாய் சத்திரபதி என்பவர்  முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவரா வார்.

 

இந்தியாவில் விடுதலைக்குப் பின் பார்வையற்றோர் பள்ளிகளில் 10 வகையான பிரேயில் முறைகள் பயிற்றுவிக்கப்பட்டதாக அறிகிறோம். 1951-ம் ஆண்டு இந்திய தேசிய பார்வை யற்றோர் சம்மேளணம் உள்ளிட்ட பார்வையற்றோருக்கான அமைப்புகள் ஒன்று கூடி விவா தித்து தரப்படுத்தப்பட்ட பிரேயில்முறையை உருவாக்கி பயன்படுத்தவேண்டும் என   தீர்மானித்தன.  இந்த தீர்மானத்தின் விளைவால் உருவானதே பாரதி பிரேயில்  என்ற இந்தி யாவுக்கான பிரேயில் முறையாகும். அதாவது இந்திய தேசமெங்கும் ஒரே மாதிரியான பிரேயில்முறையை பின்பற்றவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

[தகவல்: லூயி பிரேயில் விக்கிப்பீடியா, மற்றும் பாரதி பிரேயில் விக்கிப்பீடியா].

 

பிரேயில் முறை இன்றய காலகட்டத்தில்.

 

நம் நாட்டில் இன்று ஏறத்தாழ முப்பது மில்லியன் அல்லது மூன்று கோடி பார்வை மாற்றுத் திறனாளிகள் வாழ்வதாக சுகாதாரத் துறையின் 20011-ம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக் கிறது. அவர்களுள் ஏறத்தாழ 20 சதம் பார்வையற்றோர் பிரேயில் முறையை கற்றவர்கள் என ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. தற்போது இந்தியாவில் ஆங்கிலம் தவிர 10 மொழிகளில் பிரேயில் இதழ்கள் வெளி வருகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, வங்காளி, மராத்தி, குஜராத்தி, சிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகள் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பிரேயில் இதழ்களையும் நூல்களையும் வழங்குகின்றன. புகழ் பெற்ற சமய நூல்களான பகவத் கீதை, திருக்குரான், பைபிள், ஆகிய படைப்புகளும், உலகப் பொதுமறை யாகிய திருக்குறளும்  பிரேயிலில் வாசிக்கக் கிடைத்தல் என்பது விழித் திறனற்றோருக்கு கிடைத் துள்ள வரப்பிரசாதமாகும்.மேலும் இந்திய பார்வையற்ற சகோதர சகோதரியருக்கு அவரவர் தாய்மொழிகளில் உள்ள இலக்கியங்களும், பல் துறை சார்ந்த நூல்களும் தாமே வாசிக்க கிடைத்துள்ளமையும் பிரேயிலின்  நடப்பியல் பயன்பாடு எனலாம்.

image008

 image010

வாய்ப்புகளும்-சவால்களும்

 [] வாய்ப்புகள்.

 

இன்று நமக்கு பிரேயிலில் பலவகையான மணிப்பொறிகள், கணினி-அலைபேசி முதலிய வற்றுக்கான தொடுதிரைகள் முதலியவைகள் பிரேயில் முறைக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள தாக அறிகிறோம். பிற உலக நாடுகளைப் போலவே நம் நாட்டிலும் பிரேயிலில் வாக்குச் சீட்டு வசதி வழங்கப்படுதலால் பார்வை மாற்றுத் திறனாளிகளின் வாக்கு உரிமையும் எவருக்கு வாக்களித்தோம் என்ற ரகசியமும் பாதுகாக்கப்படுகிறது.  தமிழக அரசு அன்மை யில் பார்வை மாற்றுத் திறனாளிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான கேள்வி களை கேட்கவும் அதர்க்கான பதிலை பிரேயிலிலேயே வழங்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.  தேசிய  பார்வையற்றோர் சம்மேளனம் [NIVH] இணையம் வழி மின்நூல்களை இலவசமாக   பதிவிறக்கம் செய்து பிரேயிலில் வாசிக்க வகை செய்துள்ளதாகவும் ஒரு செய்தித்  தகவல் தெரிவிக்கிறது.  அண்மையில் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு [UGC] {பிரேயில் முறையை மேம்படுத்த வேண்டும்} என கருத்து வெளியிட்டுள்ளது.

 

 

 

[] சவால்கள்.

 

அளப்பறிய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக பிரேயில்முறை நலிந்துவிடுமோ? பார்வை மாற்றுத்திறனாளிகள் பிரேயில்முறையை புறக்கணித்துவிடுவார்களோ?   என்னும் அச்சமும் நமக்கு எழாமல் இல்லை. பார்வைமாற்றுத் திறனாளர்கள் இன்று அதிகம் கேட்டல் சார் கருவிகளையேதம் வாசிப்புக்கு  நம்பும்  நிலையே நடப்பியல் உண்மை. அதனால் பிரேயில் முறையின் நிலைமை  எதிர்காலத்தில் என்னவாகும்?  என்ற சவாலான கேள்வி நமக்கு எழாமல் இல்லை. கேட்டல் சார் கருவிகளான ஐபாடு, மனன  அட்டை[memorycard],  குறுவட்டுஒலிப்பான்கள்[c d players], அலைபேசி,பலவகைக் கணினி வகைகள், மனன பெட்டி [memorybox] உள்ளிட்ட பலப்பல கேட்பொலி கருவிகள் குறைந்த செலவில் எண்ணியும் பார்க்கமுடியா அளவுக்கு தகவல்களை கேட்டல் வழித்  தெரிந்துகொள்ள உதவுகின்றன. மேலும், கேட்டல்வழிக் கருவிகள் தேவைக்கு ஏற்ப தகவல்களைத் சேமித்துக்கொள்ளவும்  வேண்டாதபோது அழித்துக்கொள்ளவும் வசதி அளிக்கின்றன.

image014

ஆனால், பிரேயில் முறையோ கேட்டல்வழிக் கருவிகளைக் காட்டிலும் தகவல்களை சேமித்தல், பராமரித்தல் முதலியவற்றில் ஓரளவு சிக்கலைத் தரும் முறையாகவே கருதப் படுகிறது. உதாரணமாக பிரேயில் நூல்களை எடுத்துச்செல்லுதலும் சேமித்துப் பாதுகாத்து வைத்தலும் சற்றே கடினம் என்பது வெளிப்படையான உண்மை. அதுபோலவே, பிரேயில் நூல்களை உருவாக்க ஏற்படும்  பொருளாதாரச் செலவும் அவற்றை வைத்துக்கொள்ளுவதற் கான  இடப்பற்றாக்குறையும்  தவிர்க்கமுடியாத  சிக்கல்களே.  உதாரணமாக, அண்மையில் மதுரையில் உள்ள இந்திய பார்வையற்றோர் சங்கம் [IAB] வெளியிட்டுள்ள ’க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி’ நூலின் விலை 15,000 ரூபாய் ஆகும். அந்த அகராதியின் பிரேயில் வடிவ தொகுதிகளின்  எண்ணிக்கை 53 பகுதிகளாகும். அதே க்ரியாவின் தற்கால தமிழ் அகராதியின் அச்சு வடிவம் ஒரே தொகுதியில் அடங்குகிறது. மேலும், அந்த நூலின் விலை 500 ரூபாய்மட்டும்.

 

நாம் பொருளாதாரச் செலவு, இடப் பற்றாக்குறை முதலிய காரணங்களைக் கொண்டு பிரேயில் முறையை எளிதாகப் புறக்கணித்துவிட முடியுமா? அல்லது, பார்வைமாற்றுத் திறனாளர்களுக்கு பிரேயில்முறை தேவையற்றது என்ற முடிவுக்கு வந்துவிடலாமா? என்பது சிந்தனைக்கு உரிய வினாவாகும். மேலும், பிரேயில் முறையில் வாசிக்கவும் எழுதவும் காலக் கழிவும் உடல் உழைப்பும் மிகுதி என்று கூறுவோரும் உள்ளார்கள். இந்தக் கூற்றில்  உள்ள  உண்மையை முழுமையாக மறுக்கவியலாது. ஆயினும், பிரேயில் முறையில் உள்ள வசதிகளையும் தொழில்நுட்பக் கருவிகளில் உள்ள குறைகளையும் நாம் நிச்சயமாக கணக்கில் கொள்ளவேண்டும்.

 

தொழில்நுட்பக் கருவிகள் இயங்க கண்டிப்பாக மின்வசதி தேவை. மின்சாரமோ மின்கலன் களோ இல்லாவிட்டால் கேட்டல்வழித் தகவல்களை வழங்கும் தொழில்நுட்பக் கருவிகள் செயலற்றுவிடும். ஆனால், பிரேயில் முறையைக் கையாளுவதில் இந்த சிக்கல் கிடை யாது. பிரேயில்முறையைக் கற்றலும் கையாளுதலும் வெகு எளிது. ஆனால் கணினி    உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவிகளைக் கையாள ஓரளவேனும் தொழில்நுட்ப அறிவு இன்றி யமையாதது. குறிப்பாக, பார்வை மற்றும் செவித்திறன் குறையுடையோர் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும் தகவல்களைப் பெறவும் பிரேயில்முறையை மட்டுமே நம்பும் நிலை உள்ளது. அவர்கள் கணினியைக் கைய்யாளும்போதும் மாற்றியமைக்கும் கணினித் ’தொடு திரை’, அதாவது, refreshable Braille display என்ற கருவியைக் கொண்டுதான் தகவல்களைப் பெறமுடியும். மேலும் நாம் கேட்டல்வழிக்  கருவிகளைக் கையாண்டு தகவல்களைப் பெறும்போது அது நம் அருகில் உள்ளோருக்கு இடர்ப்பாட்டை அளிப்பதாக பிறர் கருதவும் இடம் உண்டு. நாம் காதொலிக் கருவி அதாவது [earphone] பயன்படுத்தி தகவல்களைக் கேட்டாலும் செவிக்குக் களைப்பும் நாளடைவில் செவித்திறன் படிப்படியாக குறையும் வாய்ப்பும் மிகுதி. இத்தகைய சிக்கல்கள் பிரேயில் முறையால் ஏற்படாது.

 

பிரேயில் முறையைக் கையாளுதலில் மேற்குறிப்பிட்ட சில சவால்கள் நமக்கு இருப்பினும் பிரேயில் முறையே அடிப்படையான  மாறாத நிலையான  கற்றல் முறை என்பது உறுதி. தொழில்நுட்பக் கருவிகள் ஒரு வேளை ’அகலக் கற்றலு’க்கு உதவலாம். ஆனால், ஆழக் கற்றலுக்கு பிரேயில்முறையே ஏற்ற சாதனமாகும். ஆழக் கற்றலோடு நுட்பமாகக் கற்ற லுக்கும் மநநம் செய்தலுக்கும் பிரேயில் முறையே ஏற்றதென்பது மிகை கருத்தல்ல.

 

 

பிரேயில்முறை எதிர்காலத்தில் மேம்படுதற்கான வழிகள்.

 

நம்மில் சிலர் நினைப்பதுபோல எதிர்காலத்தில் பிரேயில்முறை அழிந்தேபோய்விடும் என்பது தவறானதொரு கருதுகோளாகும். கணினி வழி மின்நூல்களை  பார்வை உள்ளவர்கள் வாசிக் கும் வாய்ப்புகள் மிகுதி. ஆனாலும், இன்றும் பார்வையுள்ளோரில் பலரும் அச்சிட்ட நூல்க ளையே வாசிக்க விரும்புகின்றனர். காரணம் கணினி வழி வாசித்தல் அலுப்பையும்,  கண்க ளுக்கு சலிப்பையும், மூளைக்கு சோர்வையும் உண்டாக்குவதாக மருத்துவ தகவலும் பட்டறி வும் தெரிவிக்கின்றன. இந்த நிலையே பார்வையற்ற நமக்கு தொழில்நுட்பக் கருவிகளை மட்டுமே சார்ந்திருப்பதால்  உண்டாகும்  அனுபவப் பாடம் எனலாம்.  பார்வையுள்ளவர்கள் எப்படி அச்சிட்ட நூல்களை வாசிக்க விரும்புகின்றனரோ அது போன்றதுதான் பிரேயில் நூல் களும் நமக்கு. மேலும் பிரேயில் புள்ளிகளைத் தடவி வாசிக்கும்போது நம் தொடு உணர்ச்சி கூர்மை பெறுகிறது. வாசிக்கும் தகவல்கள் மனத்தில்வெகு இயல்பாகப் பதிகிறது.

 

மேலும், பிரேயில் முறையின் மற்றொரு சிறப்பு பிரேயில்முறை  சீன மருத்துவமுறையான அக்குபஞ்சர் முறைக்கு மிக நெருக்கமானதெனவும் மருத்துவக் கட்டுரைத் தகவல் ஒன்று   தெரிவிக்கிறது. எனவே, பிரேயில் முறைக்கான மதிப்பும் தேவையும் ஒருபோதும் குறை யாது.

 

கண் உடையவர் என்பவர் கற்றோர் என்பது வான்மறை வகுத்த  வள்ளுவரின்      வாய் மொழியாகும். பார்வையற்றோரைப் பொறுத்தவரை, அவர்கள் எத்தனைதான் கற்றிருந் தாலும், பட்டங்கள் பெற்றிருந்தாலும் பிரேயிலில் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தால் அவர்கள் படிக்காதவராகவே கருதப்படுவர். எனவே, அனைத்து விழித் திறனற்றோருக்கும் பிரேயில் கல்வி இன்றியமையாதது.

நம் அரசாங்கம் பிரேயில் தெரிந்த பார்வையற்றோருக்கு மட்டுமே தேசிய அடையாள அட்டை, அரசு வழங்கும் சலுகைகள், வேலை வாய்ப்பில் முன்னுரிமை முதலியவற்றை  வழங்கவேண்டும். மேற்கூறிய கருத்துக்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் சட்டமும் இயற்றவேண்டும்.

 

பார்வையற்றவர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் பார்வையற்றோர் பள்ளிகளை அதிகப்படுத்தவேண்டும். இருக்கும் பார்வையற்றோர் பள்ளிகளுக்கான வசதி களை மேம்படுத்தவேண்டும். பார்வையற்ற பள்ளிகளில் தேவையான பிரேயில் உபகரணங் களை உருவாக்கித் தரவேண்டும். அதற்கு அனுபவம் வாய்ந்த பிரேயில் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்.

 

மாணவர்களுக்கு தொடக்கம் முதல் பிரேயிலின் சிறப்பை வலியுறுத்தி எல்லா பாடங்க ளையும் பிரேயிலிலேயே கற்பிக்கவேண்டும். தொடக்க கல்வி முதல் 10-12 ஆம் ஆண்டு பொதுத்தேர்வுகள், அனைத்துப்  பட்டத்  தேர்வுகள், வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகள் என எல்லாவகைத் தேர்வுகளையும் அரசாங்கம் பிரேயிலிலேயே நடத்த வேண்டும். திருத்துவதற்கு  பிரேயில் முறையை நன்கு அறிந்த பார்வையற்ற கல்வியாளர் களை நியமிக்கவேண்டும். இப்படிச் செய்தால்தான் பிரேயில்முறையின் முக்கியத்துவம் முழுமையாக பார்வையற்றோரால்  உணரப்படும்.

 

 

நிதி உதவி

 

அரசாங்கம் அல்லது சமூகநலத்துறை அதிக நிதியினை பிரேயில் உபகரணங்கள் வாங்கவும் பிரேயில் புத்தகங்கள் வாங்கவும் ஒதுக்கீடு செய்து அந்த நிதியினை  முறையாக செலவிட வேண்டும்.

 

பார்வையுள்ள குழந்தைகளுக்குவழங்கப்படுவதுபோலவே பார்வையற்ற குழந்தை களுக்கும் பாட நூல்கள் இலவசமாகவோ பள்ளிகள் வாங்கித்தரும் வகையில் மிகக் குறைந்த விலையிலோ கிடைக்க வகைசெய்தல்வேண்டும்.

 

அதுபோலவே, பார்வையுள்ளவர்களுக்கு அச்சிடப்பட்ட புத்தகம் கிடைக்கும் அதே விலையில் பிரேயில் புத்தகங்கள் பார்வையற்றோருக்கும் கிடைக்க வகை செய்தல்வேண்டும்.

 

அரசாங்கம் தம் நூல்களை பிரேயிலில் அச்சடிக்க உரிமையளிக்கும் பதிப்பகங்களுக்கு மானியமும் ஊக்கத் தொகையும் அளித்து குறித்த பதிப்பகங்களை கௌரவப்படுத்த வேண்டும்.

 

மேலும்,  பிரேயில் நூல்களை இலவசமாகவோ அல்லது பார்வையற்றோர் வாங்கும் வகை யில் குறைந்த விலைக்கோ பதிப்பிக்கும் நிருவனங்களுக்கும் மானியமும் ஊக்கத் தொகை யும் அளித்து அத்தகய நிருவனங்களை ஊக்குவிக்கவேண்டும்.

 

உயர் கல்வி கற்கும் பார்வையற்ற மாணாக்கருக்கு அரசாங்கம் இலவச மடி கணினி வழங்குவதைப் போல இலவசமாக பிரேயில் தட்டச்சுப் பொறி[braille typewriter]  வழங்க வேண்டும். அப்போது மாணவர்கள் தங்கள் தேர்வுகளை பிரேயிலில்  பார்வையுள்ள  மாண வரைப் போல விரைவாக எழுதமுடியும்.

 

 

 

 

 

நூலகமும் நூல்களும்.

image016

படிக்கும் ஆர்வமுள்ள பார்வையற்றோருக்கு பல்துறை நூல்களும் பன்மொழி நூல்களும் பிரேயிலிலேயே வாசித்துப் பயன் பெறவகை செய்தல்வேண்டும்.

 

வெளிநாடுகளில் பிரேயில் புத்தகங்களை உருவாக்க ஊதியத்துக்கு பிரேயில் புத்தக உருவாக்குனர்கள்[Braille transcripters] அமர்த்தப்படுகின்றனர். அதுபோல நம் அரசாங்கமும் பிரேயில் புத்தக உருவாக்குனர்களை அமர்த்தி மேலும் பலருக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கலாம்.

 

குறிப்பிட்ட நகரம், மாநகரம், அல்லது ஊர்களில் வாழும் பார்வையற்றோரின் எண்ணிக் கைக்குஏற்ப பார்வையற்றோர் பயன்பெறும்வகையில் பிரேயில் நூலகங்களை அரசாங்கமோ தொண்டு நிறுவனங்களோ, பார்வையற்றோருக்கான அமைப்புகளோ  உருவாக்கவேண்டும்.    இந்த நூலகங்கள் பார்வையற்றோர் எளிதில்சென்று பயன்பெறும் வகையில் போக்குவரத்து வசதி நிறைந்த இடத்திலும் அமைக்கப்படுதல்வேண்டும்.

 

பிரேயில் நூல்களைப் பராமரிக்கும் வகையில் நூலகங்கள் தரமான கட்டிட வசதியுடனும்  பார்வையற்றோர் அமர்ந்து வாசிக்கும் வகையில் போதிய அளவு மேசை நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகளுடனும்  அந்த நூலகம் அமைந்திருத்தல்வேண்டும். அது சாத்தியப்படா விட்டாலும் அண்ணா நூலகத்தைப் போல பொதுநூலகங்களில் பார்வையற்றோருக்கு நூலகங்களில் தனிப் பிரிவையாவது உருவாக்கித் தரவேண்டும்.

 

பார்வையற்றோரும் கணினிஅறிவைப் பெருக்கிகொள்ளவும் கணினி மென்பொருள் சார் தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும் வேண்டிய நிலை உள்ளது. ஆகவே அவர்கள் கணினியில் குரல் மென்பொருட்களை பயன்படுத்துவதைப் போல பிரேயில் தொடுதிரைகளையும் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த தொடுதிரைகளின் விலை எளிய, நடுத்தர பார்வையற்றோர் வாங்கிப் பயன்படுத்தமுடியா நிலை உள்ளது. காரணம் தொடுதிரைகளின் உச்சநிலை விலையாகும். அரசாங்கம் பார்வையற்றோர் பிரேயில் தொடுதிரைகளை வாங்கிப் பயன்படுத்தும் வகையில் அவற்றின் விலையை குறைத்து எளிதில் பார்வையற்றோருக்கு கிடைக்க மானியமோ கடன் வசதியோ அளிக்கலாம்.

 

மேற் குறிப்பிட்ட கருத்துக்கள் நடைமுறை படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் பிரேயில் முறை மேம்பாடு அடையும் என்பது உறுதி.

 

தேசிய கவி பாரதி மொழிந்ததைப்போல, சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்ன்ற கருத்தினை  பிரேயில் முறைக்கும் நடைமுறைப் படுத்த வேண்டும். பார்வைமாற்றுத்திறன் சமூகத்தில் எங்கும் பிரேயில், எதிலும் பிரேயில், எதற்கும் பிரேயில்   என்ற நிலைப்பாடு உருவாகவேண்டும்.

 

மின்முகவரி: gkannanlect@gmail.com

 

 

 

 

 

0

Series Navigationஒரு காதல் குறிப்புதமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் – ஆவணப்படம்
author

முனைவர். கோ. கண்ணன்

Similar Posts

0 Comments

 1. Avatar
  கவிஞர் இராய. செல்லப்பா. says:

  ‘பிரெயில்’ என்று நீண்ட நாட்களாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதன் எழுத்து வடிவம் என்ன என்பது இந்தக் கட்டுரையைப் படித்தபின்பு தான் தெரிந்தது. கட்டுரையாளருக்கு நன்றி.
  வசதியான குடும்பத்தில் பிறந்தும் பிற்பட்ட சாதி என்ற ஒரே காரணத்திற்காக கோடிக்கணக்கில் சலுகைகளைத் தின்றுகொண்டிருக்கும் நாட்டில், இருகண்ணும் இழந்து பிரெயில் ஒன்றையே நம்பியிருக்கும் இவர்களின் கல்வித்தேவைக்காகவும் பிரெயில் நூல்களை வெளியிடவும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் ஒதுக்கவேண்டியது அரசின் கடமையே.–
  நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.

 2. Avatar
  Dr.G.Johnson says:

  பிரேயில் முறையில் கல்வி கற்பது விழி இழந்தோருக்கு வரப்பிரசாதமாகும்.சில தனியார் நிறுவனங்கள் விழி இழந்தோர் பள்ளிகளை நடத்தி வருகின்றன.இவற்றின் மேம்பாட்டுக்கு அரசு தாராளமான நிதி உதவி வழங்கி ஆதரவு தரவேண்டும். மேல்நாடுகளின் நிதி உதவிகள் நின்ற நிலையில் சில விழி இழந்தோர் பள்ளிகள் மூடப்படும் நிலைக்குள்ளாகியுள்ளன.இதுபோன்ற நிலையில் அரசு தலியிட்டு அவற்றையும் எடுத்து நடத்தவேண்டும். உதாரணமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்வீடிஷ் மிஷன் நடத்திய பள்ளிகூட மேல்நாட்டு நிதி நிறுத்தம் காரணமாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.குறைத்த நிதி நிலையில் சிரமத்துடன் அப் பள்ளி தொடர்ந்து நடத்தப்படுகின்றது. இதைத் தொடர்ந்து நடத்த அரசு முன்வரவேண்டும்.

  பிரேயில் பற்றி அருமையாக விளக்கி எழுதியுள்ள முனைவர் கோ. கண்ணன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!…டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *