மலேசியா ரெ கார்த்திகேசுவின் “நீர் மேல் எழுத்து” சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து…

This entry is part 8 of 33 in the series 14 ஏப்ரல் 2013

கரிகாலன் விருது :

“புன்னகை ஒரு கீற்று போலச் சிறியதாக இருந்தாலும் வசீகரமானது”

மலேசியா ரெ கார்த்திகேசுவின் “நீர் மேல் எழுத்து” சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து…

 

 

       சுப்ரபாரதிமணியன்

 

தஞ்சை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை மூலம் வழங்கும் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை சார்பான           ”கரிகாலன் விருது “  பெற்றிருக்கும் மலேசியா ரெ.கார்த்திகேசு அவர்களின் தொகுதி

” நீர் மேல் எழுத்து “

 

கல்கி வைரவிழா போட்டியில் ரெ. கார்த்திகேசுவின் “ஊசி இலை மரம்” பரிசு பெற்றபோது அயலக இலக்கியத்திற்கு கிடைத்த கௌரவம் குறித்த பெருமிதமும் முணுமுணுப்பும் இருந்தது. அந்த முணுமுணுப்பு 2003ல் அவரின் சிறுகதைத் தொகுப்பு “ஊசி இலை மரம்” வெளிவந்த பின் அவரின் படைப்புகள் தொகுப்பாக வெளிவராரது குறித்ததாக பின்னர் இருந்தது. அந்த முணுமுணுப்பை உடைத்துக் கொண்டு வந்திருக்கிறது இத்தொகுப்பு நீண்ட இடைவேளைக்குப்பின்.

இரண்டாம் குழந்தைப் பருவமான முதுமையில் பெரியவர்களை மிகவும் பாதிப்பவர்களும், அவர்களுடன் இணக்கமாக இருப்பவர்களும் குழந்தைகள்தான். அக்குழந்தைகளை உலகத்தில் இதில் மூன்றில் ஒரு பங்கு சிறுகதைகளில் காட்டுகிறார். மல்லி என்ற குழந்தை மழை நிறத்தை, வயிற்றுக்குள் இருக்கும் எலியை, மூளை வளர்ச்சி குறைந்த பையனை என்று பலவற்றை அணுகும் குழந்தைத்தனமான அனுபவங்களாய் விரிகின்றன. முதுமையும் குழந்தைமையும் ஒன்றாகிறது. ரெ.கா. தொடர்ந்து விஞ்ஞானச் சிந்தனைகளை சிறுகதைகளுக்குள் கொண்டு வருகிறவர். இத்தொகுப்பில் இன்னொரு மூன்றிலொரு பங்கு கதைகள் கடவுள் என்ற மாயை மற்றும் மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி பற்றியும் விரிவாய் பேசுகின்றன. அணு ஆயுத மோதல் உலகையே நிர்மூலமாக்கி விடுவது பற்றிய அச்சம் விரவியிருக்கிறது. சூன்ய உலகத்தை தவிர்க்கிற முயற்சிகளை விளக்குகிறார். விஞ்ஞான தேடல் சாதாரண வாழ்க்கையை நிர்மூலமாக்குவதையும் பாலியல் உணர்வு அற்றுப் போன உலகில் ஒரு விஞ்ஞானி வாழ முடியாத ஆதங்கத்தையும் மூத்த விஞ்ஞானியை சகா இளைய வயது விஞ்ஞானி கொல்வதை உச்சமாய் எடுத்துக் காட்டுகிறார். விஞ்ஞான உலகின் இன்னொரு அபாயபுறம் சுட்டிக் காட்டப்படுகிறது. இதில் குறிப்பாக கணினி உலகத்தில் மனிதம் மரத்துப்போய் குடும்பத்திலிருந்து அந்நியமாகும் சூழலும் காட்டப்படுகிறது. “எதிர்காலம் என்ற ஒன்று” என்ற கதை முதல் பல கதைகள் சுஜாதாவின் நீட்சியாக வெளி வந்துள்ளன. அதை சுஜாதாவும் உலகளாவிய இணையச் சிறுகதைப் போட்டியின் மூலம், அங்கீகரித்திருக்கிறார்.

எவ்வளவு பெரிய முரடனுக்குள்ளும் ஒரு மனிதன் உள்ளார்ந்து இருப்பதை கொண்டாடும் கதைதான் ‘கொஞ்சம் மனிதன்.’ வேலப்பனின் முரட்டுத்தனம் உருகி கைகுலுக்கிச் செல்லும் மனிதனாக மாறிவிடுகிற அற்புதம் மனித நேயத்தை சுலபமாகச் சுட்டுவதாகும். மௌனமாய் எல்லாவற்றையும் எதிர் கொள்ளும் முதியவர் ஒருவர் அவர் பார்வையில் வியாபார ரீதியாய் அணுகும் மகனை ஒரே வார்த்தை பதிலால் குப்புற வீழ்த்தி விடுகிறார். விளிம்பு நிலையிலான ஒரு பெண், வழக்கறிஞர் பெண்ணொருத்தி ஆகியோரை முன் நிறுத்தி நியாயங்கள் எதிர் கொள்ளும் அவமானங்கள் “சேர்ந்து வாழலாம் வா” குறுநாவலில் விரித்து சொல்லப்படுகிறது. எந்த நிலையிலான பெண்ணாக இருந்தாலும் சரி அவன் முன் நிறுத்தப்படும் துரோகங்களுக்கு எல்லையில்லைதான்.

எழுத்தாளன் என்ற வகையில் அவன் எதிர் கொள்ளும் உலகம் அவ்வளவு உவப்பாகத்தானில்லை. எழுத்தாளனுக்கு உலகம் தரும் கௌரவமும் அத்தகையதே. அதுவும் சிறு பத்திரிகை வாசிப்பும், தொடர்ந்த செயல்பாடுகளும் மனிதனை சற்றே வக்கிரமாக்கி விடுவதும் தெரிகிறது. அதிகமாக சிறுபத்திரிகைகள் படிப்பதனால் ஏற்படும் தாக்கம் விசனத்திற்குரியதாக சிந்தனையை மாற்றி விடுகிறது. இதை பலர் குறிப்பிடுவதை கவனித்திருக்கிறேன். இதை இவரும் சில கதைகளில் குறிப்பிடுகிறார்.

‘ஆக்கலும் அழித்தலும்’ கதையில் குழந்தை கிறுக்கி சுவரைக் கெடுத்துவிட்டதாக அங்கலாய்ப்பு கொள்ளும் வேளையில் அதை சுலபமாக சுத்தமாக்கி பிரச்னை தீர்வது போலத்தான் சிறுபத்திரிகை படைப்பு சார்ந்த அதீத குழப்பங்களும், சிடுக்குகளும் என்பதை சில இடங்களில் குறிப்பிடுகிறார். தான் கொண்டாடும் படைப்புகள் மேல் சுமத்தப்படும் வீணான குற்றச்சாட்டுகள் மனதை நோகடித்திருப்பதை சில இடங்களில் காணலாம். சிடுக்கான சுந்தர ராமசாமியின் கதையொன்றை முன் வைத்து எழுப்பப்படும் கேள்வி அதற்கு எதிர்வினையாக இன்னொரு கதையை பகடி செய்து எழுத வைத்திருக்கிறது.

பிற கதைகளில் உள்ளார்ந்து விரவிக் கிடக்கும் கிண்டல் தன்மை இக்கதையில் உச்சமாகி இருக்கிறது. எளிமையும், தீர்க்கமான உண்மையும் விரிந்து பரவும் இத்தொகுப்பின் கதைகளை அவ்வகை சிடுக்கு கதைகளுக்கு எதிர்வினையாகவே அமைந்திருப்பதை தீவிர வாசகன் கண்டடைவான். அது முதிய எழுத்தாளரின் பக்குவப்பட்ட தன்மையையே காட்டுகிறது. புன்னகை ஒரு கீற்று போலச் சிறியதாக இருந்தாலும் வசீகரமானது என்று ஒரு அமிர்த வரியை ஒரு சிறுகதையில் கார்த்திகேசு எழுதியிருக்கிறார். வக்கிர மனங்களின் ஆழமான வடுக்கள் எவ்வளவு அபாயகரமானது என்பதை இக்கதைகள்மலேசியா சூழலில் தீவிரமாகக் காட்டத் தவறதில்லை.

 

(விலை: RM 25/- உமா பதிப்பகம், கோலாலம்பூர், மலேசியா.)

Series Navigation’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரைசற்று நின்று சுழலும் பூமி
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *