டாக்டர் ஜி.ஜான்சன்
நான் ஒரு விடுமுறையின் போது என் மாமியார் வீடு சென்றிருந்தேன்.அங்கு மூத்த மைத்துனர் யேசுதுரை ஒரு உதவி கேட்டார். நான் என்ன உதவி எனக் கேட்டேன்
கொஞ்சம் பொறுங்கள் என்று கூறியவர் காரில் வெளியேறினார்.அரை மணி நேரத்தில் திரும்பினார். அவருடன் இன்னொருவரும் மெல்ல நடந்து வந்தார். அவரின் நடையைக் கண்டதும் அவருக்கு எதோ உடல் நலப் பிரச்னை என்றுதான் எண்ணிக் கொண்டேன்.
இருவரும் என் எதிரே அமர்ந்தனர்.
” டாக்டர் கணேசனை சந்தியுங்கள் .” புதிதாக வந்தவரை அறிமுகம் செய்தார் மைத்துனர்.
” டாக்டர் கணேசன், எங்கே வேலை செய்கிறீர்கள்? இதற்கு முன் உங்களை நான் இங்கே பார்த்ததில்லையே? ” அவரைப் பார்த்து கேட்டேன்.
அவர் குனிந்த தலை நிமிரவில்லை. பதிலும் கூறவில்லை.
நான் ஒன்றும் புரியாத நிலையில் மைத்துனரை நோக்கினேன்.
” இவரின் கதை பெரியது. இவர் தங்காக்கில் சொந்தமாக கிளினிக் வைத்திருந்தவர். திருமணம் ஆகி இரண்டு பெரிய பிள்ளைகள் உள்ளனர்.சமீபத்தில் மனைவி சண்டை போட்டுக்கொண்டு காதலனுடன் ஓடிப்போய் விட்டாராம். அதன் பின் சித்த பிரமைக் கொண்டவராக கிளினிக் செல்லாமல் மலாய்க்கார போமோவை ( சூனியக்கார மந்திரவாதி ) பார்த்துள்ளார். அவன் இவரின் மனைவிதான் செய்வினை செய்துவிட்டதாகக் கூறி பரிகாரமும் செய்துள்ளான். ஆனால் பலன் இல்லாமல் நிலைமை மோசமாகி வேறொரு சாமியாரிடம் சென்றுள்ளார். அவர் இவரை கோயிலில் தங்க வைத்து மந்திரம் செய்துள்ளார். இவர் சரியாக சாப்பிடாமல் மயங்கி விழுந்தபோது இவரை தங்காக் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு இவருக்கு மனநோய் என்று சொல்லி செகாமட் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். நாங்கள் இவரை அங்கேதான் கண்டோம். ” விவரமாக மைத்துனர் விவரித்துக்கொண்டிருந்தார்.
” நீங்கள் சிகாமட் மருத்துவமனைக்கு ஏன் சென்றீர்கள்? அங்கு இவரை எப்படி பார்த்தீர்கள்? இவரை முன்பே உங்களுக்கு தெரியுமா? ” இடை மறித்து கேட்டேன்.
” எங்கள் ஆலயத்தின் பொதுநலக் குழுவினர் மாதம் ஒருமுறை மருத்துவமனை நோயாளிகளை கண்டு ஆறுதல் கூறி பழங்கள் தருவோம். அவ்வாறு சென்றபோது இவர் தனியாக படுக்கையில் உட்கார்ந்திருந்தார் .பெயர் வெட்டியும் எங்கே போவது என்று தெரியாமல் அங்கேயே உள்ளதாக தெரிந்துகொண்டோம். கொஞ்ச நாள் எங்களுடன் இருக்கட்டும் என்று கூட்டி வந்துள்ளோம்.”
” எங்கே தங்கியுள்ளார்? இங்கு வந்து எவ்வளவு நாட்கள் ஆனது? ” வினவினேன்.
” ஆலயத்தில் ஒரு அறை தந்துள்ளோம். மூன்று மாதம் ஆகிவிட்டது . இப்போது மருந்து சாப்பிடுகிறார். இவர் இப்போது பரவாயில்லை. இனிமேலும் இப்படி சும்மா இருப்பது சரியில்லை போல் தெரிகிறது. இவர் இனிமேல் தொடர்ந்து டாக்டர் வேலையில் சேரலாமா ? அதற்கு உங்களால் உதவ முடியுமா? ” சிக்கலான கேள்விதான் !
தீர யோசிக்கவேண்டிய விஷயம் இது. மனநிலைப் பாதிக்கப்பட்டுள்ள இவர் மருத்துவம் பார்ப்பது சரியாகுமா என்று சிந்த்த்தேன். அதே வேளையில் அவரைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது.ஒருவேளை வேலையில் மீண்டும் ஈடுபட்டால் மனநிலை சீராகலாம் என்றும் தோன்றியது
” எங்கே மருத்துவம் முடித்தீர்கள்? ” அவரைப் பார்த்து கேட்டேன்.
” ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ் ” குனிந்த தலை நிமிராமல் பதில் தந்தார்.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் புகழ் நான் நன்கு அறிந்தவன் நான்கூட இறுதியாண்டு எம். பி .பி .எஸ் . மனை மருத்துவம் ( Clinical Medicine ) தேர்வு செய்ய வேலூரிலிருந்து அங்குதான் சென்றுள்ளேன்.அப்போதெல்லாம் தமிழ் நாட்டின் அத்தனை மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நேரடித் தேர்வுக்கு ஒன்று கூடுவோம்.
” இப்போது மீண்டும் வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா? ஏன் இப்படி குனிந்துகொண்டு பேசுகிறீர்கள்? நேராகவே பார்த்து பேசலாமா? ” தைரியம் தந்தேன்.
” வேலை கிடைத்தால் செய்வேன். இப்போ நன்றாகத்தான் உள்ளேன்.” என்னைப் பார்த்துக் கூறினார். அவர் முகத்தில் ஆழ்ந்த சோக ரேகைகள்தான் படர்ந்திருந்தன. அவருக்கு உதவ முடிவு செய்தேன்.தற்காலிகமாக கொஞ்ச நாட்கள் அவரை வேலையில் சேர்த்து பார்க்கலாம். நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் நான்கு கிளினிக்குகள் உள்ளன. எங்களுக்கும் டாக்டர் அப்போது தேவைப்பட்டது.
அவரைப் பற்றி விசாரித்தேன். பட்டும் படாமலும் சிலவற்றைச் சொன்னார்.
நான் ஜோகூர் பாரு திரும்பி விசாரித்து பதில் சொல்வதாகக் கூறினேன். அது கேட்டு அவர் முகத்தில் நம்பிக்கை ரேகைகள் படர்வது தெரிந்தது.
நான் வேலை பார்த்த நிறுவனத்தின் உரிமையாளன் ஒரு சீனன். அவன் அப்போது பார்த்து போதை மருந்து கடத்தலில் சிங்கப்பூரில் பிடிபட்டு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு ஜாமினில் இருந்தான். அவன் சிறை புகுமுன் டாக்டர்களை சிங்கப்பூருக்கு அழைத்து விருந்து கொடுத்து ஒரு வருட நிர்வாகம் பற்றி திட்டமிட்டான். டாக்டர் பற்றாக்குறை பற்றி விவாதித்தபோது நான் கணேசன் பற்றி கூறி அவனின் சம்மதம் பெற்றேன்.அவரை ஆறு மாதம் ஆய்வு முறையில் ( trial ) சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தான்.
அன்று இரவே மைத்துனரைத் தொடர்பு கொண்டு உடன் கணேசனை கூட்டிவரச் சொன்னேன்.
மறுநாள் மாலையில் அவர்கள் ஜோகூர் வந்தனர்.
நிறுவனத்தின் சார்பில் கணேசனுக்கு தாங்கும் விடுதியில் அறை ஏற்பாடு செய்யப் பட்டது.
அந்த தாங்கும் விடுதி அவர் வேலை செய்யப்போகும் கிளினிக்கின் அருகிலேயே இருந்தது., விடுதியின் கீழ்ப் பகுதியில் தமிழர் உணவகமும் இருந்தது, போக்குவரத்துப் பிரச்னையும் உணவுப் பிரச்னையும் இல்லாமல் மிகவும் கச்சிதமாக அமைந்துவிட்டத்து.
அதோடு வேலை நேரமும் அவருக்கு எளிதாக்கப் பட்டது. மாலை ஐந்து முதல் மறுநாள் காலை வரை வேலை. நள்ளிரவுக்குப் பின் அதிக வேலை இருக்காது. கிளினிக்கில் நன்றாக தூங்கிவிட்டு காலையில் கையில் ஐநூறு வெள்ளி வாங்கிக்கொண்டு விடுதிக்கு திரும்பலாம்.
கணேசன் கைக்கூப்பி நன்றி தெரிவித்தார்.
அன்றன்று கிடைக்கும் பணத்தை அருகிலுள்ள வங்கியில் போட்டு வைக்குமாறு கூறினேன். அவரும் சரி என்றார். அவரது அறையில் அன்று இரவு வெகு நேரம் பெசிக் கொண்டிருந்துவிட்டு வீடு திரும்பினேன்.
நோயாளிகளை நன்றாகவே கவனித்தார். மருத்துவ ஞானம் நிறைய இருந்தது . தான் ஒரு நரம்பியலார் ( neurologist ) ஆகவேண்டுமென கனவு இருந்ததாகக் கூறினார்.
தினமும் ஒரு முறையாவது அவரின் அறைக்குச் சென்று பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். பாவம். அவருக்கு வேறு யாரும் இல்லை.அவரும் என்னைத் தன்னுடைய பாதுகாவலர் ( guardian ) என்று கூறிக் கொண்டார்.
பல மாதங்களாக கையில் பணம் இல்லாமல் இருந்தவருக்கு அன்றாடம் ஐநூறு வெள்ளி கையில் கிடைப்பது அவருக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்தது. சாப்பாடு செலவுதான் அவருக்கு. விடுதி வாடகையை நிறுவனம் கட்டியது.
கை நிறைய பணம் கிடைத்ததும் கிடு கிடுவென சில பொருட்களை வாங்கினார்.
கேமரா கைப்பேசி வாங்கியபின் அதில் பழைய தமிழ்ப் பாடல்களைப் பதிவு செய்து உரக்க ஒலிக்க வைத்து, சிகரட் புகைத்துக்கொண்டு நடந்து மகிழ்வார். அவர் மனநிலை மாற அவ்வாறு பாடல்களில் மனதை திசை திருப்புவது நல்லது என்று எண்ணினேன்.
அவரது அறையில் ஏற்கனவே தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது இவர் ஒரு வீ .சீ .டி ( video compact disc player )வாங்கினார். சில ஆங்கிலப் பட குறுந்தகடுகள் ( compact discs )வாங்கினார். கொஞ்ச நாளில் ஏராளமான ஆபாசப் படங்களை ( blue films ) வாங்கிவிட்டார். தனி மனிதனாக இருப்பவர்தானே என நான் ஏதும் சொல்லவில்லை.
ஒரு மாதம் ஒழுங்காக வேலை செய்தவர், ஒரு நாள் வேலைக்கு வரவில்லை. கைபேசி மூலம் தொடர்பு கொண்டதில் உடல் நலமில்லை என்றார். நான் அவர் அறைக்கு விரைந்தேன், கதவைத் திறந்ததும் பீர் வாடையும் சிகரட் வாடையும் கலந்து வீசியது. தள்ளாடிதான் நடந்து வந்தார்.வயிறு வலி என்று சொல்லி உடன் படுத்துக்கொண்டார். படுக்கையின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் நிறைய காலி பீர் குவளைகள் ( beer tins ) கிடந்தன.
அவரின் வயிற்றை அழுத்தி பரிசோதனை செய்தேன். இரைப்பை அழற்சி ( gastritis ) போன்றிருந்த்தது.
” கேஸ்ட்ரைட்டிஸ் போல் உள்ளதே. இப்படி குடித்தால் எப்படி? ” அருகில் அமர்ந்து கூறினேன்.
” கவலையில் நிறைய குடித்துவிட்டேன். சாரி .” என்றார்.
” குடித்தால் கவலை போய்விடுமா? இன்னும் அதிகம் அல்லவா ஆகிவிடும் இங்கு வந்து இப்போது நல்லாதானே இருக்கிறீர்கள்? பின் எதற்கு பழைய கவலை எல்லாம். அவற்றை மறந்துவிட்டு புது வாழ்வு தொடங்கலாமே? ”
” என் கவலை உங்களுக்கு தெரியாது. அவள் இப்போ எதோ செய்து கொண்டிருக்கிறாள். அதனால்தான் இப்படி.,”
” நீங்களாகக் குடித்துவிட்டு எங்கோ ஓடிப்போன உங்கள் மனைவி மீது பழி போடுவது எப்படி?”
” இல்லை. அவள் என்னை வாழ விடமாட்டாள் உன்னை சாகடிக்காமல் விடமாட்டேன் என்று சவால் விட்டவள் .அவளுக்கு சக்திவாய்ந்த போமோவின் ( சூனியக்கார மந்திரவாதி )
துணை இருக்கு. அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.”
:” ஒரு டாக்டராக இருந்துகொண்டு போமோ மந்திரவாதியை நம்பலாமா? இதெல்லாம் போலி என்பது தெரியலையா? ”
” நான் இந்த நிலைக்கு உள்ளானதற்குக் காரணமே அந்த போமோதானே? அவனை வைத்து தான் என் வயிற்றில் மருந்து வைத்து விட்டாள் .அதுதான் இன்னும் வேலை செய்யுது.”
அவர் அந்த நேரத்தில் முற்றிலும் மாறுபட்ட மனிதராக மாறிவிட்டார். போதையில் பேசினாலும் நிதானமாகவே பதில் கூறினார்! காதலனுடன் ஓடிப்போன மனைவி தனக்கு செய்வினை செய்துவிட்டாள் என்று திடமாகவே நம்பிவிட்டார். அந்த எண்ணத்தை அவரின் ஆழ் மனதிலிருந்து அகற்றுவது சிரமம் என்பதை நான் அறிவேன்.
அன்றிலிருந்து அவரின் வேலையின் தரம் பாதிப்புக்கு உள்ளாகியது. அடிக்கடி வயிற்று வலி என்று சொல்லி அறையிலேயே இருந்துவிடுவார். உணவகத்தில் விசாரித்த பொது ஒழுங்காக சாப்பிட வருவதில்லை என்றனர்.
ஒரு நாள் என்னை உடன் வரச் சொன்னார். நான் விரைந்து அவரின் அறைக்குச் சென்றேன். பணம் காணவில்லை என்றார். எவ்வளவு என்று கேட்டதற்கு ஐயாயிரம் வெள்ளி இருக்கலாம் என்றார்.
நான் கூறியபடி பணத்தை வங்கியில் போடவில்லை.அன்றன்று கிடைக்கும் பணத்தை சுருட்டி ஒரு சாதாரண பிரயாணப் பையில் வைத்துள்ளார்.அந்தப் பையை பூட்டவும் முடியாது.
அவர் இல்லாத சமயம் விடுதியின் இந்தோனேசியப் பணிப்பெண்தான் அறையைக் கூட்டிப் பெருக்க வருவாள் என்றார். ஆனால் அவள் மிகவும் நல்லவள் என்றார். வேறு யாரும் அப்படி வர முடியுமா என்று கேட்டேன். விடுதியில் எடுபிடி வேலை பார்க்கும் ஒரு தமிழ்ப் பெண்ணிடம் சாவி கொடுப்பாராம். அவள் பழைய துணிமணிகளைத் துவைத்து தருவாளாம்.அவள்கூட இவருக்கு பல விதங்களில் உதவுவாளாம். அவளுக்கு நிறைய பணம் கொடுத்துள்ளதால் அவள் திருட மாட்டாள் என்றார்.
விடுதி உரிமையாளரிடம் புகார் செய்தேன். அந்த சீனன் கை விரித்து விட்டான்.
பணத்தை ஏன் வங்கியில் போடவில்லை என்று கேட்டததற்கு போட முடியாது என்றார். அவர் பென்ஸ் ( Benz ) கார் வைத்திருந்தார். அதை மனைவி ஓட்டிச் சென்று விட்டாள். இவர் தவணைப் பணம் செலுத்தவில்லை. அதனால் தவறு இழைத்தோர் பட்டியலில் ( black list ) சேர்க்கப் பட்டுள்ளார். என்னிடம் பணத்தைத் தந்தால் நான் பத்திரமாக வைத்திருப்பதாகச் சொன்னேன். அவர் யோசித்தார்.
பின்னொரு நாள் இரவில் அவர் வேலைக்கு வரவில்லை. அவரும் என்னை அழைக்கவில்லை. நேராக அறைக்குச் சென்று கதவைத் தட்டினேன்.பதில் இல்லை. கைப் பேசியில் அழைத்தேன். அப்போதும் பதில் இல்லை. விடாமல் கதவைத் தட்டியபின் திறந்தார். அவரின் முகத்தில் அசடு வழிந்தது.கதவருகில் ஒரு பெண்ணின் காலணி !
” இது யாருடையது? ” என்றவாறு அறையை நோட்டமிட்டேன். குளியல் அறை சாத்தி இருந்தது.
” ஒரு…. தாய்லாந்து….. பெண் . ” தயங்கியபடி கூறினார்.
கதவைத் தாளிட்டு விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டேன்.
” அவளை வெளியே வரச் சொல்லுங்கள். ”
” நிர்வாணமாக உள்ளாள் .”
” இருந்தால் என்ன?. பணம் தானே தருகிறீர்கள். நானும் அவளைப் பார்க்கிறேன். ”
அவளிடம் ஆங்கிலத்தில் வெளியே வரச் சொன்னார்.
பதினாறு வயதுடைய ஓர் இளம் பெண் இடுப்பில் மட்டும் துண்டைச் சுற்றிக்கொண்டு வெளியே வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள் . மின்சார விளக்கொளியில் அந்த தங்க நிற மேனியாள் கவர்ச்சியாகத்தான் இருந்தாள் .
” ஒரு இரவுக்கு எவ்வளவு? ” அவளைப் பார்த்தவண்ணம் அவரிடம் கேட்டேன்.
” இருநூற்று ஐம்பது “: என்றார் சர்வ சாதாரணமாக.
ஏற்கனவே கணேசனுக்கு மன அழுத்தம் ( depression ) உள்ளது எனக்குத் தெரியும்.சிகாமட் மருத்துவமனையில் அதற்கான சிகிச்சையும் அளித்துள்ளனர். அவரும் தினமும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை ( antidepressants ) உட்கொண்டுதான் வருகிறார்., அதோடு மதுவையும் உட்கொள்வது தவறு.காரணம் மதுவும் மன அழுத்தத்தையே உண்டு பண்ணிவிடுகிறது! மது அருந்துவதால் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் செயல்படாமல் போகலாம்.
இது அவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் அது பற்றி கவலை கொள்ளவில்லை. கவலை மறந்து தூங்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தார். இரவில் வேலை செய்ததால் பகலில் கட்டாயம் தூங்கியாக வேண்டும்.
இப்படி தொடர்ந்து மன அழுத்தத்தால் பாதிக்கப் படுபவர்களுக்கு சில பொதுவான அறிகுறிகள் உண்டாவது இயல்பே.எரிச்சல், கோபம், எதையோ யோசித்துக் கொண்டிருப்பது ( preoccupations ) தாழ்வு மனப்பான்மை ( inferiority complex ),,கவலை, குற்ற உணர்வு , இல்பொருள் காணலும் கேட்டலும் ( visual and auditory hallucinsations ), தற்கொலை எண்ணங்கள் ( suicidal thoughts ) போன்றவை அவற்றில் குறிப்பிடத் தக்கவை.
இவை அனைத்தும் அவரிடம் உள்ளது. தற்கொலை எண்ணங்களும் அவருக்கு வருவதுண்டு. ” இனி நான் யாருக்காக வாழ வேண்டும்? சீக்கிரம் செத்துவிட்டால் நல்லது . ” என்று அடிக்கடி கூறுவது அவரின் வழக்கமாகிப் போனது.
அவரின் மன அழுத்தம் மோசமானதால் நானே அவரைக் கட்டாயப்படுத்தி ஜோகூர் சுல்தானா அமீனா மருத்துவமனையில் சேர்த்தேன். அங்கு மனநோய் நிபுணர்கள் அவருக்கு மின் வலிப்பு சிகிச்சை ( electro convulsive therapy ) தரவேண்டும் என்று முடிவு செய்தனர்.
ஆனால் அதற்கு அவர் சம்மதிக்காமல் அவர்களிடம் மன அழுத்தம் பற்றி பெரிய விவாதம் செய்து சண்டை போட்டுக்கொண்டு அன்றே வெளியேறி விட்டார். அவர்களுக்கு தன்னுடைய வியாதி பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று என்னிடம் புகார் செய்தார்.
அன்று காலையில் நான் தேசா செமெர்லாங் மில்லினியம் கிளிக்கில் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கைப்பேசி ஒலித்தது. அவர்தான் அழைத்தார்.
” நீங்கள் உடன் புறப்பட்டு என் அறைக்கு வாங்க..நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் செத்து விடுவேன். ” இவ்வாறு சொன்னவர் அழைப்பைத் துண்டித்து விட்டார்.
நான் பதறிப்போய் உடன் அங்கு காரில் விரைந்தேன்.
கதவைத் தட்டியபோது அவர்தான் திறந்தார். அவர் கையில் ஒரு கத்தி இருந்த்தது!
” என்ன ஆயிற்று? ” என்று கேட்டேன்.
” இனி நான் வாழ்ந்து பயன் இல்லை. நான் சாகணும் . நிறைய குடித்துவிட்டேன். நான் என்னைப் பற்றி உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லவில்லை. இதற்கெல்லாம் காரணம் என் மனைவிதான். அவள் காதலனை வைத்து என்னை அடித்துவிட்டாள் . போமோவை வைத்து என்னை பைத்தியமாக்கிவிட்டாள் . என்னைப் பற்றிய தகவல்கள் அந்த பெட்டியில் உள்ளன. நான் செத்த பிறகு அதை திறந்து பார்க்கவும். ” இப்படிக் கூறியவர் ஒரு சாவியை என்னிடம் நீட்டினார். நான் அதை வாங்க வில்லை.
” ஏன் திடீர் என்று இப்படி? அதெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாமே உங்களின் மனப் பிரமை..பேசாமல் படுத்துத் தூங்குங்கள் எல்லாம் சரியாகிவிடும் ” கொஞ்சம் சிரமப் பட்டு கத்தியை அவரிடமிருந்து பறித்துகொண்டேன் .
” கத்தி இல்லாவிட்டால் என்ன? இந்த ஜன்னல் வழியாக கீழே குதித்து விடுவேன்.” என்றவாறு எழ முயன்றார் . அந்த அறை இருந்தது மூன்றாவது மாடி.
நான் தடுத்து நிறுத்தி கட்டிலில் படுக்க வைத்தேன். எதோ முனகிக் கொண்டிருந்தவர் கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டார்.
இரண்டாவது தடைவை நான் மாசாய் கிளினிக்கில் இருந்தபோதும் அதே மாதிரியான அழைப்பு வந்து விரைந்து சென்றேன்.
கதவைத் திறந்து வைத்து படுத்திருந்தார். கையில் ஷெல்டாக்ஸ் தெளிப்பி ( Shelltox spray ) இருந்தது. அது கொசு, கரப்பான் பூச்சி கொல்ல பயன்படுத்துவது.
அதை அவரிடமிருந்து பிடுங்கினேன்.
” இதை தொண்டையில் நிறைய அடித்துவிட்டேன். சீக்கிரம் செத்துவிடுவேன். அந்த பெட்டியின் சாவியை எடுத்துக்கொள்ளுங்கள் ” நல்ல போதையில் இருந்தார்.
” உங்களுக்கு டிப்ரெஷன் அதிகமாகி விட்டது அதனால்தான் இப்படியெல்லாம் செய்கிறீர்கள். வாங்க மருத்துவமனைக்கு! ” விடுதியாளரின் உதவியுடன் அவரைக் காரில் ஏற்றினேன்.
மூன்றாவது முறை நான் முக்கிய வேலையாக ஜோகூர் பாருவிற்கு மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தேன். அவர்தான் அழைத்தார்.
” இன்று நான் நிச்சயமாக செத்து விடுவேன். உடனே வாங்க .” என்று கூறிவிட்டு துண்டித்துவிட்டார்.
இதுவும் புலி வருது புலி வருது என்ற கதைதான் என்று எண்ணியபடி திரும்பியபின் போகலாம் என்ற முடிவுடன் பிரயாணத்தைத் தொடர்ந்தேன்.
போன வேலை தாமதமானதால் வீடு திரும்ப மாலை ஆகிவிட்டது. அதுவரை அவரிடமிருந்து வேறு அழைப்பு இல்லை.
ஒருவித சந்தேகத்துடன், நான் அவரைக் கைப்பேசியில் அழைத்தேன். அழைப்பு மணி ஒலித்தது. ஆனால் பதில் இல்லை. ஒரு வேளை தூங்கலாம் அல்லது நான் உடன் வரவில்லை என்ற கோபத்திலும் இருக்கலாம் என்றுதான் தோன்றியது.
நேராக அறைக்குச் சென்று கதவைத் தட்டினேன்.பதில் இல்லை.கதவு உள்ளே தாழிடப் பட்டிருந்தது. கைப்பேசியில் மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தேன். பயன் இல்லை.
அப்போதுதான் லேசான பயம் உண்டானது.
விடுதி உரிமையாளரிடம் பேசினேன். அவன் மாற்றுச் சாவியுடன் வந்தான்.ஆனால் உள்ளே தாழிடப் பட்டிருந்ததால் திறக்க முடியவில்லை.
எவ்வளவு பலமாக உரக்க தட்டியும் ஒரு பயனும் இல்லை.
வேறு வழியின்றி கதவை உடைத்தான்.
உள்ளே நுழைந்து பார்த்தோம்.
கட்டிலில் அவர் பிணமாகக் கிடந்தார்
தரையில் காலி பீர் குவளைகளும், புகைத்து வீசிய சிகரட் துண்டுகளும், தூக்க மாத்திரைகளின் காலி உறைகளும் நிறைய கிடந்தன!
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -5 மூன்று அங்க நாடகம்
- ஆன்மிகமோ, அன்னைத் தமிழோ- அன்பேயாகுமாம் எல்லாம்!! -தமிழறிஞர் திரு.கதிரேசனைத் தெரிந்துகொள்வோம்!
- வெளியிடமுடியாத ரகசியம்!
- மீள்பதிவு
- நாளைக்கு இருப்பாயோ நல்லுலகே…?
- பிறவிக் கடல்.
- ’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை
- மலேசியா ரெ கார்த்திகேசுவின் “நீர் மேல் எழுத்து” சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து…
- சற்று நின்று சுழலும் பூமி
- புலி வருது புலி வருது
- அணுப்பிளவை முதன்முதல் வெளியிட்ட ஆஸ்டிரிய விஞ்ஞான மேதை லிஸ் மெயிட்னர்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -19 என்னைப் பற்றிய பாடல் – 12 (Song of Myself) ஆத்மக் கதிர் உதயம்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 16
- மந்திரமும் தந்திரமும் – ஜப்பானிய நாடோடிக்கதை
- தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !
- குருஷேத்திர குடும்பங்கள் 6
- நீர்நிலையை யொத்த…
- கவிதை
- உன்னைப்போல் ஒருவன்
- கடல் நீர் எழுதிய கவிதை
- புகழ் பெற்ற ஏழைகள் 3. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏழை – கலைவாணர்
- நீல பத்மம் – திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்
- குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?
- குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா? – 1
- ஆதாமும்- ஏவாளும்.
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 2
- அக்னிப்பிரவேசம்-30 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா
- ஒரு காதல் குறிப்பு
- இந்தியாவில் பிரேயிலின் எதிர்காலம் – வாய்ப்புகள்+சவால்கள்.
- தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் – ஆவணப்படம்
- விஸ்வரூபம் – விமர்சனங்களில் அரசியல் தொடர்ச்சி
- நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 4 – 5