துறவியின் இசைக்குறிப்புகள் சண்முகம் சரவணனின் கவிதைத் தொகுப்பு

This entry is part 17 of 28 in the series 5 மே 2013

துறவியின் இசைக்குறிப்புகள் - அட்டைப்படம்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள் 150, விலை : ரூ60

 

எந்தக் காலத்திலும், எந்த மொழியிலும் இயற்கையின் வண்ணங்கள் வடிவங்கள், அர்த்தப்பரிமாணங்களால் ஆட்கொள்ளப்படாத, இயற்கை சார்ந்த உவமான உவமேயங்கள், உருவகங்கள், குறியீடுகளைக் கையாளாத கவிஞர்களே இல்லையெனலாம். இயற்கையை அதன் அழகுக்காக ஆராதிப்பவர்கள் உண்டு. இயற்கைக் காட்சிகள், நிகழ்வுகள், சுழற்சிகளிலிருந்து வாழ்க்கைத் தத்துவங்களை உள்வாங்கிக்கொண்டவர்கள் உண்டு. வாழ்வில் வரவாகும் காயங்களுக்கெல்லாம் வலிநிவாரணியாக இயற்கையைத் தஞ்சமடையும் நெஞ்சங்களும் உண்டு.

 

சில கருப்பொருள்களைக் கையாண்டால் உடனடி தனிக்கவனம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, தற்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற சில பிரச்னைகள், நிகழ்வுகள், அன்னபிற. ஆனால், இயற்கை அப்படிப்பட்டதல்ல. மிகப் பலரால் எடுத்தாளப்பட்ட ஒரு கருப்பொருள் என்ற அளவில் அதைக் கையாளும்போது உடனடி கவனம் கிடைக்க வழியில்லை. மிகப் பலர் மிகப்பலவாகப் பார்த்துவிட்ட, பயன்படுத்திவிட்ட கருப்பொருள் என்ற அளவில் இதனை கவிதையில் கையாள கூடுதலான நுட்பத்துடன் கவிப்பார்வையும், செய்நேர்த்தி யும் தேவையாக இருக்கின்றன.

 

ஆனால், இயற்கையிடம் வலிநிவாரணம் தேடித்தஞ்சமடைந்துவிடும் கவிமனம் இந்த வரவு-செலவுக் கணக்குகளைப் பொருட்படுத்துவதில்லை. பகட்டாரவாரச் சொற்களைப் பயன்படுத்தி இயற்கைக்கு ஜிகினா வேலைப்பாடுகல் செய்து கைத்தட்டலைப் பெற விரும்புவதில்லை.

 

அத்தகைய கவிமனமே தோழர் சண்முகம் சரவணனின் கவிதைத் தொகுப்பான ‘துறவியின் இசைக்குறிப்புகளி’ல் வெளிப்படுகிறது.

 

புல்லோ, பறவையோ, காற்றோ, வானமோ – எல்லாமே கவிமனதில் யதார்த்த வாழ்வின் இறுக்கத்தையும், நெரிசல்களையும், விடைகாணவியலாக் கேள்விகளின் பெருஞ்சுமையையும் குறைத்து, ஆசுவாசமான ஒரு நெகிழ்வை வரவாக்கிவிடுவதை, சமயங்களில் அவற்றிற்கு பதில் வேறுவகையான, தவிர்க்கவியலா, வாழ்வீர்ப்புமிக்கசுமைகள் சேர்ந்துகொள்வதை ஒவ்வொரு கவிதையிலும் உணர முடிகிறது. இயற்கையின் அரவணைப்பில் கவிமனதில் ஊற்றெடுக்கும் அன்பு எல்லையற்றதாய் விரிந்துகொண்டே போகிறது. இந்த ‘மனம் வெளுத்தலு’க்காகவே கவிமனம் மீண்டும் மீண்டும் இயற்கையிடம் தஞ்சமடைகிறது.

‘இயற்கையின் கொடையில்

இதம்கொள்ளும் சிற்றுயிர்கள்

உயிர்ப்பின் மொழியறிந்த ஒருவன்

நேசிக்கிறான் மண்ணையும் விண்ணையும்’     [ பக்கம். 03, கவிதை 2]

 

என்ற வரிகள் _

 

‘ஆளரவமற்ற நீண்ட வெளி

பெருமரங்களின்

இசையில் அமைதி கொள்ள

நேற்றையும் நாளையும்

துறந்து அமைதியுற்றேன்                            [பக்கம்.9, கவிதை 5]

 

என்ற முடிவுவரிகள் –

 

‘பேரருவியின் மடியில்

எழுந்து தவழும் ஓடை

கிணுகிணுக்கும் பாறைகளின் இசையை

எதிரொலிக்கும் வனம்

இளந்தென்றலில் சாரல் மிதக்க

நனையும் காடு

இலைச்செறிவின் மறைவில்

சிறகு போர்த்தி

உறங்கும் பறவைகள்’                         [கவிதை 3, பக்கம் 5]

 

என இயற்கையெழில் கண்டு ஆனந்தமுணரும், காட்சிச் சித்தரிப்பாக விரிந்து மனதை நெகிழ்விக்கும் கவிதைகள் _

 

வலசைப் பறவைகளும் வழிதவறி

பாழ்நிலத்தினூடே அலந்து திரிகின்றன.

சிறுகுஞ்சின் தாகம் அறிந்து

பதறும் பறவைகளுக்கு

மின்னல் கீற்றும் அடர்மேகமும்

சுற்றிலும் சூழ

நம்பிக்கை வழிநடத்திச் செல்கிறது.

எந்நேரமும் துயருற்றுப் போகலாம்.

இந்த உண்மையறியா சிறு பறவைகள்

அமர ஓர் இடம் தேடி

அலைந்து திரிகின்றன                 [கவிதை 6, பக்கம் 11]

 

என்றும் _

 

திசை மறந்து திரிந்த பறவை

கிளைபற்றி அமர்ந்து இளைப்பாறி

தன் திசை தேடிப்

பேசுகிறது இலைகளிடம்                             [ பக்கம் 143]

என்றும் _

 

பறவைகள், கிளைகள், இலைகள், திசை, அடர்மேகம் என இயற்கை சார்ந்த ஒவ்வொரு வார்த்தையும் விவரிப்பும் மனிதர்களுக்கான குறியீடுகளாகி நிற்கும் கவிதைகளும் இந்தத் தொகுப்பை நிறைவான வாசிப்பனுபவம் தருவதாக்குகின் றன.

 

என் துருவம் மறந்து

நீந்திக் கரையேறுகிறேன்

அக்கரை சென்றதும்

அடர்மழை நனைத்துச் செல்கிறது

நிராசைகள் அனைத்தையும்

நீரில் நனைத்தே நிறைவுகொள்கிறேன்

 

_ பக்கம் 138-ல் உள்ள கவிதையின் நிறைவுவரிகளான இவையும்[குறிப்பாக, ‘நிராசைகள் அனைத்தையும் நீரில் நனைத்தே நிறைவுகொள்கிறேன்’ என்ற வரிகள்] உலகாயுத அர்த்தத்தைத் தாண்டியதாய் நிறைவு என்ற சொல்லை விரிக்கிறது! இயற்கையின் அண்மையில் நிறைவுணரும் கவிமனதையும் புலப்படுத்துகிறது.

 

மரங்களில் படிந்த நீர்த்திவலைகள்

கைகள் பற்றிக் கரைந்துருகி

நனைந்தோடுகிறது நதியாய்

 

என்ற வரிகளில் மனிதன் இயற்கையின், பிரபஞ்சத்தின் ஒரு துளி என்பதோடு அவன் இயற்கையோடு இரண்டறக் கலந்துவிடும் தன்மையும் புலப்படுகிறது.

 

கடல் பற்றிய கவிதைகள் தமிழ்க்கவிதைவெளியில் நிறைய உண்டு. இந்தத் தொகுப்பில் பக்கம் 135-ல் இடம்பெறும் கவிதையில் வரும்

 

‘தூரத்தே மிதமான போதையுடன்

தவழ்ந்தாடும் கடல்

 

கடல் குறித்த வித்தியாசமான, நான் படித்தவரையில் எந்தக் கவிதையிலும் இடம்பெறாத அழகிய வர்ணனையாக மிளிர்கிறது!

 

ஒற்றையடிப் பாதை முழுவதும்

முட்களும் புதர்களும் நிரம்பிவழிகிறது

மயானம் முழுவதும் மண்டையோடுகள்

தோண்டுவதற்கு இடமின்றித் தவிக்கிறேன்

சிறுகுழந்தையின் உடலற்ற உயிர்

அமைதியில் துயில்கொள்கிறது

 

பக்கம் 127-ல் இடம்பெறும் ஆறே வரிக் கவிதையின் இறுதி இரண்டு வரிகளில் ‘உயிரற்ற உடல்’ உடலற்ற உயிராகி விடும் ரசவாதத்தை நிகழ்த்திவிடுகிறது கவிமனம்!

 

எந்தவொரு கருப்பொருளையும் தொடர்ந்து கையாள, இழைபிரித்துக்கொண்டே போக, அதன் பல்முகங்களில், பல்பரிமாணங்களில் உண்மையாகவே பரவசம் கொள்ளும், வலிநிவாரணம் பெறும் படைப்புமனதால் தான் முடியும். ‘எல்லோரும் எழுதுகிறார்கள், எனவே நானும் எழுதுகிறேன்’ என்று எழுதுபவர்களால், ஒரு கருப்பொருளை ’இது இப்போது விலைபோகும் சரக்கு, எனவே கையாளலாம்’ என்று கைக்கொள்பவர்களால் அதில் தொடர்ந்து இயங்கமுடியாது. அந்த இயலாமையும், பாசாங்குத்தனமும் கவிதைவரிகளில் வெளிப்பட்டுவிடும். துறவியின் இசைக்குறிப்புகள் கவிதைத்தொகுப்பில் ஒன்றிரண்டு தவிர மற்றவையெல்லாம் இயற்கையை, இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்புறவைக் கருப்பொருளாகக் கொண்டவை. அவற்றில் பாசாங்குத்தனத்தையோ, மேம்போக்குத்தனத்தையோ காணநேரவில்லை என்பது ஆறுதலான விஷயம். தலைப்போ, முற்றுப்புள்ளி, கமா முதலிய நிறுத்தற்குறிகளோ இல்லாமல் விரியும் கவிதைகள் தம்மை இயல்பாக நமக்குக் கட்டவிழ்த்துக்கொண்டே போகின்றன. இந்தக் கவிதைத்தொகுப்புக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள முன்னுரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. இந்தக் கவிதைத் தொகுப்பைக் குறித்து அவர் ‘இந்தக் கவிதைகள் ஆழ்மன இசைக்குறிப்புகளே தான்.  சில குறிப்புகளை கவிஞனே மீட்டிக் காட்டிவிடுகிறார். சிலவற்றை வாசக மனம் மீட்டிக் கொள்ள வாய்ப்பளிக்கிறார். கவிமனமும் வாசக மனமும் இயையும் குறிப்புகளும் அனேகம். இயற்கையைக் கொண்டு கவி செய்யும் சாகசம் இது என்று குறிப்பிடுகிறார்.

 

இந்தத் தொகுப்பைப் படித்துமுடித்ததும் வாழ்வின் நெரிசலில் மறந்துபோய் விட்ட, குழந்தைகளுக்கானதாய் விலகிக்கொண்டுவிட்ட மொட்டைமாடிக்குப் பலநாட்களுக்குப் பிறகு படியேறிச் சென்று சற்றுநேரம் தனியாக அமர்ந்தவாறு வீசும் காற்றை அனுபவித்தபடி வானத்தின் மேகத்தையும் பறவைகளையும் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அங்கேயில்லாத சிற்றோடையின் சலசலப்பையும், சில்லிப்பையும் மனம் உணர்ந்தது!

0

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம்….! 4இன்னொரு எலி
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *