This entry is part 12 of 28 in the series 5 மே 2013

உன்
குற்றப்பத்திரிக்கையின்
கூர்முனையிலிருந்து
வெளிவரத்துடிக்கிறதொரு
நிழல்

உன் புறக்கணிப்பு
கொஞ்சம் கொஞ்சமாய்
எனதிந்த உடலை
திண்ணத் தொடங்க
கொடூரத்தின் கோரத்திலும்
புன்னகித்தபடியே கடக்கிறது

வன்முறையொன்று
ப்ரியத்தின் பொருட்டு
வழக்கொழிந்து போவதாய்
வழமை போலவே நினைக்கிறது
அது

புலங்கப்படா பாதையில்
படிந்திருக்கும் தூசிதனை
தட்டியெழுப்புவது போல் இருக்கிறது
நினைவின் தடம்

செய்யத்துடிக்கும் அனைத்திலும்
செயலின்மையை
கைக்கு கொடுக்கிறது
கையாளாக அன்பு

இறுகப்பற்றுதலிலோ
நீண்ட முத்தத்திலோ
சில துளி கண்ணீரிலோ
மீட்டெடுக்கலாமென நினைக்கையில்
மீண்டுமெனைப் பற்றிக்கொள்கிறது
அந்நிழல்

 

  • ரேவா
Series Navigationஅரிசிபருப்பு சோறு: சுப்ரபாரதிமணியன்செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (9)