மொழிபெயர்ப்புக் குறுநாவல் – ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்

This entry is part 10 of 21 in the series 2 ஜூன் 2013

aramburu

(ஃபெர்னாண்டோ அரம்புரு 1959ல் சன் சபாஸ்தியனில் பிறந்தவர். சியெல்ஓசி என்கிற கலை-எதிர்கலை அமைப்பின் நிறுவனர் அவர். கலாச்சார எதிர்க்குரலான மிகையதார்த்த எள்ளல் வகை அமைப்பு இது எனக் கொள்ளலாம். கன்ட்டில் என்கிற இலக்கிய இதழில் பணியாற்றியபடியே எழுதியும் வந்தார். ஹிஸ்பேனிய மொழி இலக்கியப் பட்டதாரி. பல வருடங்களாக ஆசிரியப் பணி ஆற்றிவிட்டு 1985 முதல் தீவிர இலக்கியவாதி ஆனார். முதலில் கவிஞராகவே அவர் அறிமுகமும் பெயரும் பெற்றார்.)

பெர்னாண்டோ அரம்புரு (ஸ்பெயின்)

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

அவன் அப்பா அவனிடம் சொல்கிறார். மகனே, உள்ளே போகச்சில நான் அழ ஆரம்பித்தால், பயந்துறாதே. நீ பாட்டுக்கு மேற்கொண்டு போ. அதெல்லாம் என் தனிப்பட்ட சமாச்சாரம். அதுல உனக்கு பிராப்தி எதுவும் இல்லை. இங்கே வர்றதே என் நெஞ்சை அடைச்சிருது. ஆனால் ரொம்ப நாளா உனக்கு நான் தாக்காட்டி வந்த விஷயத்தை, இன்னிக்கு செஞ்சிறலாம்னு முடிவு பண்ணிவிட்டேன். இனியும் அதைத் தவிர்ப்பதோ, தள்ளிப் போடுவதோ வேண்டாம், போர்ஜா.

அது வேறொரு மார்ச். மதியம் மழை வரலாம்னாங்க. – உங்களுக்கு சகிக்க முடியாதுன்னா நாம உள்ளவரை போக வேணாம் அப்பா. எல்லாம் அதான் நீங்களே சொல்லிட்டீங்க. ரயில் நிலையத்தை வெளிய இருந்தே பார்ப்போம். போதும்.

சிவப்பு பெஞ்சுகள். தூணில் நிறுத்தப்பட்ட மேல்கூரை. அதன் ஒரு தூணில் கடிகாரம். நடைமேடை முன்னிலும் பிரகாசமாய் இப்போது அழகுபடுத்தப் பட்டிருக்கிறது போல. அல்கலா நோக்கிப் போகிற ரயில் உள் வருகிறது. ஜனங்கள் இறங்குவதும், ஏறுவதும். கையில் சின்ன நாய்க்குட்டி யேந்தி மாது ஒருத்தி. நாய்க்குட்டியே கதகதப்புக்கு உறை மாட்டியிருக்கிறது. ரயில் கதவுகள் மூடுமுன் காதில் இசைப்புனல் மாட்டிய விடலை ஒன்று உள்ளே பாய்கிறது.

எல்லாரும் உயிர்த்துடிப்பான இயக்கத்தில். அதில் என்ன சந்தேகம். அவர்கள் நடமாட்டம். சுவாசித்தல்… எல்லாமே தான் இருக்கிறது. ரயில் கிளம்பிவிட்டது. வேகம் பிடிக்கிறது ரயில். தூரம் போய் ரயில் மறைகிறது. ரயில்பாதையில் தலைமேல் மின் கம்பிகள். கீழே தண்டவாளப் பளபள. ரயில் போனபின் விடுபட்ட ஆகாயம் இப்போது தெரிந்தது. மேகங்கள்.

திரும்ப இங்க வருகிறபோது எனக்கு என்ன ஆகிறது, எனக்குச் சொல்ல வரவில்லைடா, என்றார் அப்பா. நடைமேடையில் அங்கே அப்போது அப்பாவும் மகனும் மாத்திரமே. மாடப்புறா ஒன்று கொறிக்க இரை தேடி, தலையை வெடுக் வெடுக்கென உதறியபடி திரிகிறது. புறாக்கள் எல்லாமே ஒரேமாதிரி அலட்டிக் கொள்கின்றன.

… தோ அங்கதான் அது நடந்தது. ரயில் ரயிலாப் போகிறாப் போல பல வருடங்கள் கடந்துவிட்டன. ஒண்ணு. அடுத்தது. மூணாவது. அப்பாவின் தொய்ந்து தொங்கும் முழுக்கை காட்டிய இடத்தை மகன் நோட்டமிடுகிறான். அந்த சிவப்பு குப்பைத்தொட்டி, பார்த்தியா? புறா ஒன்று அதன் பின்பக்கமாய்ப் போகிறது. கிட்டத்தட்ட அதே இடத்தில் தான்… நான்… தூக்கி வீசப்பட்டேன். அந்தக் குப்பைத் தொட்டி அப்ப இருந்ததா, நினைவில்லை. ம். எப்பிடி ரயிலுக்கு வெளிய வந்தீங்கன்னு என்னைக் கேட்காதே. எனக்கே தெரியாது. நான் பறந்து வந்திருக்கலாம். எதோ கொதிக்கிறாப் போல முகத்தில் உணர்வு தட்டியது. நான் தரையில் அப்படியே என்னை இழுத்துக்கிட்டு ஊர்கிறேன். சதை எதோ கருகுகிற நெடி. அந்த வெக்கை என் தோளுக்கு இடம் பெயர்கிறது. அப்படியே… நினைச்சிப்பாரு, இன்னுமாய் அது கீழ வருது. நெஞ்சில் இருந்துன்னு நினைச்சேன். ஆனால் அது கைன்னு தான் இருக்கணும். அப்டியே என் தொடையிடுக்குக்கு அந்த வலியும் வெக்கையும் இறங்கிய கணம்… ஙொம்மாள, சோலியே முடிஞ்சிட்டதுன்னு நினைச்சேன். ரமோன்**… அப்படியே குழி விழுந்தாப்ல. கதையே முடிஞ்சிட்டாப் போல. (**கடவுளே.)

அந்த அமைதி. புகைப்படலம். அது அமைதி கூட அல்ல. காது கிழிந்து கேட்கும் திறனை இழந்துட்டாப் போல. ஒரு வழியா, சனங்கள் உதவிக்கு எங்களை நோக்கி ஓடி வருகிறார்கள். கால் நல்லா இருக்கிறவர்கள் எங்களை விட்டு ஓட்டமெடுக்கிறார்கள். கண் நல்லா இருக்கிறவர்களும், உடம்பு சேதாரம் இல்லாமல் இருக்கிறவர்களும் ஓட்டமெடுக்கிறார்கள். ரொம்ப அதிர்ஷடம் பண்ணியவர்கள் அப்பா அவர்கள்… என்றார் அப்பா. சிலாட்களுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வழிகிறது.

காலையில் மணி இன்னும் எட்டு ஆகவில்லை. தபாருடா, இப்ப்பிடி தலையை லேசா உசத்தி, அந்த வேக்காடு எங்க போச்சின்னு ஒரு நோட்டம் பார்க்கிறேன். இப்ப உடம்பில் ஒரு துடிப்பு, நடுக்கம் வந்தாப் போலிருந்தது. அதிகரித்துக்கொண்டே வரும் அந்த படபடப்பு. உடம்பில் ஓட்டை எதுவும் ஏற்படவில்லை. என்ன பார்த்தேன்னால்… என் கையில் பாதி… முழங்கைக்குக் கீழே… ஒண்ணுமே இல்லை. வெறும் ரத்த ஒழுகலில் நனைந்து துணிக் கிழிசல். உடனே உங்கம்மா ஞாபகம் தான் வந்தது. அப்பறம் உன் ஞாபகம்டா மகனே. ரொம்ப சின்ன வயசு உனக்கு. தொட்டிலில் கிடந்தாய் நீ. நல்லுறக்கத்தில் நீ இருந்தாய் அப்போது… உன்னை வாரியணைத்துக் கொள்ள என்னால் எப்படி முடியும்? போய்விட்டதே கை.

>>

கை. போர்வைக்குள் இருந்து வெளிநீட்டித் தெரிந்தது கை மாத்திரமே. பளபளவென சிவப்பு நகப்பூச்சுடன் அழகான கை. விரலில் மரகத மோதிரம். அந்தப்பெண்ணை தரையிறக்கும் வரை அவளிடம் அசைவு இருந்தது. நம்ம ரோமானியன் ஆள் அவளை சட்டைசெய்யவில்லை. அவங்கதையே இங்க பெரிய கதையாய் இருக்கிறது. போலிஸ்காரன் சொன்னபடி கேட்டான் அவன். காயம் பட்ட மத்தாட்களுடன் அநன் நடந்து வோயிஸ் டி வெலார்தி விளையாட்டகத்துக்குப் போனான். ஸ்பானிய மொழி உங்களுக்குப் புரியுங்களா? ம், என்றான். சரி. போயி அந்தச் சுவர்ப்பக்கமா நில்லுங்கள். அங்கிருந்து நகரவேண்டாம். கூடிய சீக்கிரம் கவனிப்பார்கள். விளங்குதுங்களா?

ஷ¨க்கள் எங்கேயோ சிதறியிருக்க வேண்டும். வெறும் கால்களாய் இருந்தன. காயத்தில் போட்ட கட்டுத்துணியை இழுத்து தலையில் இருந்து வழியும் ரத்தத்தில் அமுக்கி ஒழுகலைக் குறைக்க முயன்றான் அவன். ரெண்டு நிமிடத்தில், இரு மருத்துவ ஊழியர்கள் வந்து, அவனுக்கு ஒரு ரெண்டுமீட்டர் தள்ளி அந்தப்பெண்ணை இறக்கி வைத்தார்கள். அவள் முகம் தெரியாமல் கூந்தல் விரவிக்கிடந்தது. முதலில் அவளிடம் சற்றே அசைவு தெரிந்தது. கால்கள். முதுகு. கொஞ்சமே கொஞ்சம் துடித்தபடி யிருந்தன. லேசான பூகம்ப அதிர்வு போல. மெல்ல அடங்கும் அதிர்வுகள். அசைவு அப்படியே நின்றது. அதன்பின் தான் அவளைக் கவனிக்க வந்தார்கள். மெல்ல அவளை அவர்கள் புரட்டினார்கள். அசைத்துப் பார்த்தார்கள். ம்ஹ§ம். ஒண்ணும் பயனில்லை. சிறிது நேரத்தில் அவளை போர்வையில் மூடிவிட்டார்கள். ஒரு கை, வெளியே நீட்டிக்கிடந்தது. மெலிவான அழகான கை. இனி அது அசையவே போவதில்லை. அவர்கள் அடுத்த உடலை கவனிக்கப் போய்விட்டார்கள்.

மெல்ல சுவரில் சிறிது சரிந்தான் ரோமானியன். கண்கள் செருகின. ஐய நான் தூங்கிறப்டாது, என அவன் போராடினான். ஆனால் கண்கள் விருட் விருட்டென உள்ளிழுத்தன. …ழுத்தன. …தன… ஒரு அலைபேசியின் சுதாரித்த குரலெடுப்பு அவனை உலுக்கியது. என்னவோ உற்சாக மெட்டு. சுற்றிலும் தேடி, ஒரு ரெண்டுமீட்டர் தள்ளியிருந்து… போர்வைக்கு உள்ளேயிருந்து.

உச்சஸ்தாயி உற்சாக மெட்டு. நிற்பதாயில்லை. இங்கே அவன் அலைபேசி அமைதிகாத்தது. நடந்ததை வீட்டுக்கு அவன் ஏற்கனவே தெரியப்படுத்தி யிருந்தான். மெட்டு அடங்காமல் வேண்டுகோளை மன்றாடி முன் வைத்தபடி – சுற்றிலும் அத்தனை களேபரம். படுகாயத்துடன் உடல்கள் சிதறிக் கிடந்தன – அவன் போர்வைக்கு நகர்ந்தான். போர்வையை விலக்கினான். உருக்குலைந்த கோட் பையில் பாதி எட்டிப்பார்த்தபடி அலைபேசி. யாரோ மூதாட்டி எதோ பாஷை பேசுகிறாள். போலிஷ்? ரஷ்யன்? தன்னால் அவளுக்கு நிலைமையைப் புரியவைக்க முடியவில்லை என்பதை அவன் உணர்ந்தான். அந்த மூதாட்டியின் குரலில் கலவரம். அவள் திரும்பத் திரும்ப என்னவோ – ஒருவேளை அது ஒரு பெயராக… இந்தப் பெண்ணின்… இருக்கலாம். பாம் அம்மா. ரயிலில் குண்டு. வெடிகுண்டு… புரியுதுங்களா? அப்படியே அலைபேசியை அணைத்தான். திரும்ப தான் முன்பு நிற்கவைக்கப் பட்டிருந்த இடத்துக்கு நகர்ந்தான், சுவருக்குப் பக்கமாக. சில விநாடிகள் கழித்து திரும்ப அந்த அலைபேசி ஒலித்தது. அவன் அசையவில்லை. அடி நீ வேற, எம் பொழப்பே பெரும் பாடாயிருக்குது. உற்சாக மெட்டு அதுபாட்டுக்கு அடித்துக் கொண்டே யிருந்தது. நாத ஒலி. மூடிய போர்வை.

>>

போர்வை பத்தி அவன் ஏன் முன்னே யோசிக்கவில்லை? வாகனத்தில் பெட்டிக்குள் வைத்திருந்தான். முன்பே அதை எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவனை அத்தனைக்கு அவசரப்படுத்தி விட்டார்கள். வேலைக்கு என்று காலை வண்டி எடுத்த ஜோரில் பரபரப்பு.

அவெந்தா என்ட்ரிவியாசில் ஒரு மத்தியப் பாதுகாவலன் அவனை நிறுத்தினான். ஐயோ. யுத்த களமா இது? களேபரமாய்க் கிடந்தது இடம். செய்தி கூட இன்னும் வானொலியில் வெளியிடப்படவில்லை. குண்டுவெடிப்பு என்று எதுவும் காதில் விழவில்லை யானாலும் புகை. சனங்கள் ரத்தத்தில் குளித்தபடி. இதையே கவனிக்காமல், 24 எண் பேருந்தைப் பிடிக்க ஓடும், காயம் பட்ட ஒரு கூட்டம். மணி எட்டு அஞ்சு, எட்டு பத்து இருக்கலாம். ஹா. மறக்க முடியுமா இந்த நிமிடத்தை. அவன் திடுக்கிடவில்லை. சுதாரித்தபடி சூழலை ஆராய்ந்தான். பஸ் நிறுத்த குடையடியில் காயம்பட்டவர்கள் அப்பிக்கிடந்தார்கள். பார்க்கவே திரும்ப உள்ப் பதட்டமாய் இருந்தது. அட சனியனே. என்ன காட்சி இது. அப்படியே தாக்குப் பிடிச்சி நில்லுங்க. எலேய் செத்துறாதீங்க. இங்க, என் கண் முன்னால… வேண்டாம் அது. இதோ உதவி. நாங்கள் வந்துருவோம். வழியில்வந்த காரின் கதவை அவர்களே திறந்து, ஒருத்தனை உள்ளே செலுத்தினார்கள். சிக்கிரம் கிளம்பு. கதவு சாத் – ச். பாவம். 18 20 வயசுக் குழந்தையப்பா. பின் இருக்கையில் கிடத்தப்பட்டது. போலிஸ் சொன்னான். நேரா ஆஸ்பத்திரி, ஐயா. அக்டோபர், 12. அந்த ஆஸ்பத்திரிக்கே சவாரிவிட்டான். அவன் கண்ட முதல் அவசரவூர்தி… எதிர்ப்புறமாய் விரைகிறது.

அவன் கைக்குட்டை வைத்துக்கொள்வதே கிடையாது. அவன் பெண்டாட்டிக்கு கைக்குட்டைப் பழக்கமே பிடிக்கவில்லை. அது ஆரோக்கியமில்லாத பழக்கம், என்றாள் அவள். இப்பவுந்தான் சொல்லிட்டிருக்கிறாள். அதுக்கு, க்ளினெக்ஸ் பரவாயில்லை. துடைச்சி வீசியெறிஞ்சிறலாம் இல்லே? கண்ட கலிஜையும் பைக்குள்ள சுமந்து திரிய வேண்டியது இல்லையில்லையா? சலிச்சிக்காமல் குத்திப் பேசாமல் அதுக்குப பேசவே தெரியாது. லங்கிணி. அவசரத்தைக் காட்ட – கைக்குட்டைஇல்லை -¢ கந்தல் ஒன்றை வெளியே படபடக்கிறாப்போல கட்டினான். ஏ வழி விடுங்க. எனக்கு அவசரம். கொண்டை விளக்கு இல்லை. வட்டார காவல்காரன்… அவனுக்கு குண்டுவெடிப்பு பற்றி, சேதி எட்டியிருந்தது… இன்னும் வேகாமாப் போ என தூண்டினான்.

அடிபட்ட அந்தச் சின்னப்பொண்ணு. வெளிக்கண்ணாடி மூலம் பின்புறம், குழந்தையைப் பார்க்க முடியவில்லை. பாவம் அது. ஒரு வார்த்தை பேசவில்லை. ஒரு முனகல் இல்லை. அமைதியா இரு அம்மா. தோ ஒற்ற நொடி. நாம ஆஸ்பத்திரியை எட்டிறலாம். அக்டோபர் 12ல் நல்ல மருத்துவர்கள் இருக்காங்க. என் பெண்டாட்டி அங்கவெச்சிதான் பெண் குழந்தை பெத்தெடுத்தாள். கச்சிதமா இருக்கும் அந்த ஆஸ்பத்திரி. துப்புரவா, சுதாரிப்பா இருப்பார்கள். நீ அமைதியா இரு பெண்ணே. அது ஒரு கப்சா. அவன் பெண்டாட்டி பிரசவித்தது இங்கே அல்ல. அது ஃபூவென்லாப்ரதா மருத்துவமனை. அட அதைப்பத்தி என்ன. நான் அந்தப்பெண்ணுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

என்னவோ கருகும் வாசனை. முதலாளி அறிந்தால்… என்னடா இத்தனை ரத்தத்துடன் பின் இருக்கையை நாசமாக்கி… பாப்பா, உனக்கு புண்ணியம். வாந்தி எடுக்காம, வந்தாலும் அடக்கிக்க. சரி. அடக்க முடியல்லியா. இருக்கைல வேணாம். தரைல குனிஞ்சி வாந்தியெடுத்திரு. பரவால்ல. என்ன பண்றது… விடாமல் பேசியபடியே வந்தேன்.

எப்பவாச்சிம், வித்தியாசமான நபர்கள் அவன் வண்டியில் ஏறுகிறது உண்டு. உம்மணாமூஞ்சிகள். கீழ இறங்கற வரையில் ஒருவார்த்தை பேசாது. சில ராத்திரி வேலைகளில்… ஏடாகூடங்கள் நிகழ்வதும் நடந்திருக்கிறது. அவன் பெண்டாட்டி, அறிவுரை வள்ளல், உஷாரா இருக்கணும் ராத்திரிகளில். யாராவது உங்களைக் களவாட முயன்றால்… இருக்கறதை வாய்பேசாமல் குடுத்துருங்க. எதிர்க்கறது, முரண்டு பிடிக்கறது… வேணாம். ஆனால் இந்தச் சூழல் வேறுவிதம். இந்தாள்… முனகவே இல்லை. அமுக்குணி. ஐய ஒருவேளை காருக்குள்ள ஏத்தினாங்களே அப்பவே கதை முடிஞ்சிருக்குமா? ஆஸ்பத்திரியின் சிவப்பு முகப்பு தூரத்தில் கண்ணில் பட்ட கணம் பேச்சை நிறுத்திவிட்டேன்… இதுவரை வழியெல்லாம் என்னென்னவோ பேசியபடியே வந்திருந்தேன். காயம்பட்ட பாப்பாவை ஆஸ்பத்திரி ஊழியர்கள் வந்து பெற்றுக்கொண்டார்கள். இறந்துகொண்டிருக்கும் குழந்தை… இறந்திருந்தது அது. அதனிடமிருந்து சதை கருகிய நெடி எழும்பிக்கொண்டிருந்தது. அதுவரை எனக்கு இது உணர்வுதட்டவில்லை. ஏ வழிய அடைக்காதே. மத்த வண்டிங்க வரும் இல்லே? அவசர ஊர்தி ஒலிகள் இன்னும் இன்னுமாய் அதிகரித்து கிட்டே அருகே நெருங்கி வந்தன.

அவன் நிதானித்தான். முதல் வேலை, மனைவியை எழுப்பினான். ஏ டி.வி. பார்… சேதி பார்த்தியா? என்ன பண்ணவேண்டும்? பயப்படாதே. தைரியமாய் முதலாளியைக் கூப்பிடு. அவர் நிலைமையைப் புரிஞ்சுக்குவாரு. கட்டாயம். முதலாளியை அழைத்தான். அவசரம் சார். போர்வையை வெளியே எடுக்க நேரம் இல்லாமல் போயிட்டது.. பின் இருக்கையில்… ரொம்ப ரத்தமாயிருக்கிறது. எவ்வளவு ரத்தம் வேலஸ்? வந்து… சார். அங்க யாரும் உட்கார ஏலாது. இல்ல முதலாளி. அது எப்பிடி முடியும்? ஆங்காரப் படாதே வேலஸ். என் பெண்டாட்டி கூடச் சொன்னாள். பேசாமல் வண்டிய இங்க கொண்டாந்துருங்க. நாமளே அதை சுத்தம் பண்ணிக் குடுத்திறலாம்னாள். ஏ பொறுமையா பேசுன்றேன்னே… இல்ல பரவால்ல ஐயா. அதை சுத்தம் பண்ற செலவை நான் ஏத்துக்கறேன். அது என் தப்பு ஒண்ணும் இல்லையே. இன்னாலும் பரவால்ல. ஏத்துக்கறேன். ஏ விடப்பா. பெரிசா என்னென்னவோ பேசிட்டிருக்கே. டாக்சியை இங்க எடுத்திட்டு வந்திரு. நான் பாத்துக்கறேன். இன்னிக்கு ஊருக்கே சிரமமாய்த்தான் இருக்கப் போகுது. திகைக்கப் போகுது ஊர்.

>>

ஊர். சனிக்கிழமை காலை. காருக்குள்ளே யிருந்து பார்த்தால்… ஓரளவு ஊர் சகஜமாயிட்டாப் போலத்தான் தெரிந்தது எனக்கு. அத்தனைக்குக் கொடூரமாய் இப்போது எதுவுமே, அடையாளமே இல்லை. அந்தலூசியா நிழல்சாலை வழியாக, தெற்குப்பக்க சடலஅறைக்குப் போகிற வழி அது… அப்பா காரோட்டினார். ரெண்டுபேர் ஓட்டுகிற வேன் ஒன்று சிவப்பு விளக்கு என்று நின்றிருந்தது. எங்கள் கார்க்கண்ணாடி ஏத்திவிட்டிருந்தாலும், அந்த வாகனத்தில் இருந்து கேட்கிறது இசை இரைச்சல். ச். அம்மா சொன்னாள். இப்பல்லாம் அவனவனுக்கு முப்பது வயசிலேயே காது கோளாறாயிருது. எங்களுக்கு தான் இப்படி துர்சம்பவமும் துரதிர்ஷ்டமும் என நினைத்துக் கொண்டோம். தொலைக்காட்சியில், தினசரியில் சேதி தெரிந்த கணம் அப்படி தான் இருந்தது. மத்த சனங்கள் திரும்ப கலகலப்பாய் சிரிக்க, தங்கள் சொந்த சோலிகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டிருந்தார்கள்.

ஹ்ம். அதான் வாழ்க்கை என நினைக்க வேண்டியிருக்கிறது. என் கூடப் பிறந்தவனேயானாலும் நானும் அவனை கொஞ்சநாளில் மறந்து விடுவேன். முழுசாய் என்றில்லை. முதலில் அவனை மறக்க முடியாமல் தத்தளிப்பேன். அப்புறம்… தானாகவே அவன் உருமங்குவான். இந்த குண்டுவெடிப்பின் நிலைகுலைவு, மணியாக ஆக மெல்ல தூசியடங்கியது போல… மாட்ரிட் மக்கள் இப்போது அதைப்பற்றிப் பேசுகிறதையும் நினைப்பதையும் அடக்கிக் கொண்டு விட்டார்கள்.

தாத்தா நானும் கூட வருவேன் என அடம் பிடித்தார். வியாழக்கிழமைலேர்ந்து அவர் ஒரே பல்லவியைத் திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருந்தார். தெளிவான உறுதியுடன் அவர் கத்திச் சொன்னது நாங்கள் அவரவர் படுக்கையறையில் இருந்தாலும் கேட்க முடிந்தது. நான் இதை மறக்கவே மாட்டேன். மன்னிக்கவே மாட்டேன். நான் அழப் போவது இல்லை. அந்தக் கேடுகாலிகளுக்காக நான் ஒரு சொட்டு கண்ணீர் விடவும் தயாரில்லை. அவர்கள் ஈ.ட்டி.ஏ**யா இருந்தால் என்ன, அல் கொய்தாவானால் என்ன? (**ஈ.ட்டி.ஏ. – 1959ல் துவங்கிய, மேற்கு பைரன்னிஸ் பகுதியை ஸ்பெயினில் இருந்து தனிநாடாகப் பிரிக்க என்று போராடும் தீவிரவாதக் குழு.) அது எந்த எமனாகவும் இருக்கட்டும்.

எங்களுக்கு அவரவர் துக்கமே பெரிசாய் இருந்தது. அவருக்கு யாரும் பதில் சொல்லவில்லை. அப்பா மாத்திரம் போய் மெல்ல தாத்தாவின் தோளைத் தட்டிக் கொடுத்தார். அறுதல் படுத்து முகமாக மாத்திரம் அல்ல. இப்ப இப்படி பிரதாபத்துக்கு நேரம் இல்லை, என்கிற குறிப்பு.

பத்து மணி. சடலஅறை வாசல் முழுசாய் சனங்கள். பிராந்திய போலிஸ் சொன்ன இடத்தில் வண்டியை விட்டுவிட்டோம். வராந்தா வளாகத்தில் கணினிப்பெட்டி. என் சகோதரனின் பெயரை அந்தப் பட்டியலில் தேடினேன். இதோ. அம்மா காட்டினாள். அவனைக் கிடத்தியிருக்கிற அறை எண்ணையும் காட்டினாள். அப்பா வரிசையில் நின்றார். எல்லாரும் துக்க உடையில் வந்திருந்தார்கள். அந்த வரிசையில் நின்று நாம் போக வேண்டிய அறைக்கு வழி விசாரிக்க வேண்டியிருந்தது.

ஏழெட்டு பேர் விரைந்து பதிலளித்துக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டுக்கொண்டு வந்து மெல்ல எங்களுக்கு வழிகாட்டி அழைத்தார். வழியெங்கும் ஒரே முட்டு மோதல்கள். தூக்கமில்லாத, அழுதுசிவந்த விழிகள். ஒருத்தரை ஒருத்தர் கட்டிக்கொள்ளுதல். உரையாடல் சலசலப்பு. கீழ்த்தளத்தில் காயம் பட்டவர்களுக்கும், குடும்பத்தாருக்குமாய் இலவச உணவு என அறிவிப்பு ஒன்று.

என் சகோதரனின் அறை தெரியவில்லை. செஞ்சிலுவை நபர்களிடம் அப்பா விசாரித்தார். அவர்களே தன்மையாய் எங்களை அழைத்துப் போனார்கள். இதன் நடுவே தாத்தா, அவரது முத்தாரமான த்வனியில் அதே பல்லவியை உரக்க ஆரம்பித்திருந்தார். ஆ. நான் அழப் போவது இல்லை. அழ மாட்டேன் நான். ஒரு சொட்டு கண்ணீர் சிந்த மாட்டேன். செஞ்சிலுவை பெண்ணிடமும், பையனிடமும் இதை வலியுறுத்திச் சொன்னார். நான் அழவே மாட்டேன். உடனே அவர்கள், மாடியில் மனநல மருத்துவக் குழு கூட உதவிக்குத் தயாராய் இருக்கிறார்கள், என்றார்கள். நான் அழுகிறது இல்லை. எனக்குன்னு தன்மானம் இல்லையா?… என்றார் தாத்தா அவர்களிடம்.

ஒரு அறைக் கதவில் ஈக்வதோரா கொடி. இன்னும் தாண்டி சிலி நாட்டுக் கொடி. லத்தின் அமெரிக்க நாடுகளின் நிறையப் பேரை எங்களுக்கு சாயல் தெரிந்தது. உடல்ரீதியாக மாத்திரம் அல்ல. அந்த மெல்லிய அதிராத உச்சரிப்பு. ஒரு பாதிரியார் எங்களுடன் கைகுலுக்க வந்தார். தாத்தா திருமப ஆரம்… ஆனால் அம்மா அவர் கையை அழுத்தி… தயவுசெஞ்சி வேணாம், என வேண்டிக்கொண்டாள். கல்லறை வரை எங்களுடன் வர அவர்கள் முன்வந்தனர். இல்ல பரவால்ல, என்றுவிட்டோம். கீழ் தளத்துக்கும் நாங்கள் போகவில்லை. சாப்பாடே வேண்டியிருக்கவில்லை அப்போது. என்றாலும், நிஜத்தை சொல்கிறேன். எனக்கு பசியாய் தாகமாய்த்தான் இருந்தது.

திரும்ப காருக்கு வந்தோம். காரை வெளியே எடுக்… விநோதமாய் ஒரு சப்தம் என் பக்கத்தில் இருந்து. ஒருமாதிரி அழுகை ஊளை. ஊ….ளை. யாரோ அழுவதாய் வேடிக்கை காட்டுவது போலிருந்தது முதலில். திகில் படங்களில் வருமே காற்றின் ஓசை, அது மாதிரி. திரும்பிப் பார்த்தால்… தாத்தா முகமே வெளிறி நெளி நெளியாய் வலி. அடக்க மாட்டாத விம்மலுடன் தாத்தா அழ ஆரம்பித்தார். நடுங்கும் குரலில் வீறிட்டார். கொலைகாரர்கள்! கொலைகாரர்கள்! கடவுளே இல்லை! கடவுளே இல்லை!

அவரிடமிருந்து எங்கள் எல்லாருக்குமே அழுகை தொற்றிக்கொண்டது. முதல்நாளை விட இப்ப நாங்கள் ஓரளவு நிதானப்பட்டிருந்தோம், தேறியிருந்தோம் என்றாலும்… சட்டென காருக்குள் வெடித்தது அழுகை. அழுகை கண்ணை மறைத்ததில் அப்பா காரை அப்படியே ஓரங் கட்டிவிட்டார். எங்களால் பேசவே முடியாமல் போனது. உறைந்துபோன ஐந்து நிமிடங்கள்.

>>

ஐந்து நிமிடங்கள். ரயில் 21431 வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன். அட்டோச்சா ரயில் நிலையம். இவள் கருப்பு பர்க்கா உடை. மைனா. அவள் பச்சைவண்ண ஆட்டுத்தோல் மேல்கோட்டுக்காரி. கிளி. பேசிவைத்துக் கொண்டாப்போல இருவரும் ரயில் நிலையத்தில் சந்திக்கிறார்கள். அது வியாழக்கிழமை. இருவரும் ஒன்றாய் ரயிலேறி அவரவர் அலுவலகம் போகிறார்கள். கிளி உதட்டுச் சாயத்தை ஒழுங்கு செய்தாகிறது. கைப்பைக்குள் இருந்து எடுத்த சின்னக் கண்ணாடியில் ஒப்பனையை சரிபார்த்தாகிறது. மைனா பெரெஸ் ரெவர்த்தே எழுதிய நாவல் ஒன்றின் கடைசி சில பக்கங்களைப் படிக்க மும்முரப்படுகிறாள். இவள் வசிப்பது கெதாஃபேயில். அந்த அவள், கிளி பர்லாவில் வசிக்கிறவள். மைனாவுக்கு ஆந்தெஸ் பகுதிச் சாயல். கிளிக்கு மத்தியதரைக்கடல் பகுதியின் அடையாளங்கள் இருக்கின்றன. அட்டோச்சா நிலையத்தில் காலைரயிலில் ஏறி இறங்கும் மாணவ மகா வெள்ளத்தின் இரு துளிகள் இவர்கள் இருவரும்.

ஒருத்தருக்கொருத்தர் முகப் பரிச்சயம் உண்டே தவிர பேச்சுப் பரிமாற்றம் இல்லை. ஒரு ஹலோ, கூட இல்லை. அல்கலா டி ஹெனாரஸ்சிலிருந்து வரும் அல்கோபென்தாஸ் வரை போகிற ரயிலையே இருவரும் பிடித்து வேலைக்குப் போகிறார்கள். நியூவோஸ் மினிஸ்டேரியோஸ் நிறுத்தத்தில் ஒருத்தி சுரங்கப்பாதைக்குப் போக, மற்றவள் தெருவில் நடக்கிறாள். அதற்குப் பிறகு அடுத்தநாளைக்கு தான் அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கவே வாய்க்கிறது. ஆனால் அட்டோச்சாவில் இருவரும் வேறு வேறு வண்டி பிடித்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்கவே முடியாமல் போவதும் உண்டு. அதாவது அப்போது அட்டோச்சா நிலையத்திலேயே கூட அவர்கள் சந்திப்பு நிகழ்ந்திருக்காது.

மார்ச் 11. குளிராய் மங்கலாய்க் கிடந்தது ஊர். என்றாலும் சாதாரணமான ஒரு நாள். ரயில் இன்னும் வரவில்லை என்றாலும் நேரமாகி விட்டதாக எஸ்கலேட்டரில் அரக்க பரக்க ஓடிவரும் இரு சிறார்கள். ஒருவேளை வேடிக்கையாகக் கூட ஓட்டம் காட்டியிருக்கலாம். தண்டவாளப் பாதையில் மூஞ்சூறுச் சத்தம். அல்கலாவில் இருந்து ரயில். தண்டவாளத்தின் மேல் ரயில் ஓடிவந்ததில் மூஞ்சூறு மறைந்தது. ரயில் நிற்க, கதவுகள் திறக்கின்றன. சனங்கள் இறங்குகிறார்கள். ஏறுகிறார்கள். கெதாஃபேக்காரியின் விரல்கள் பெரெஸ் ரெவெர்த்தேயின் நாவலின் புத்தகத்துக்குள். பாதி படித்த பக்கத்தின் அடையாளம் அது. பர்லாக்காரி அவளும் உள்ளே நுழைந்து அருகே வந்தமர்கிறாள்.

அவர்கள் பேசிக்கொள்வது இல்லை. ஏற்கனவே ஒருத்தரையருத்தர் ஒரு பார்வைப் பரிமாற்றம், ஆயிற்று. திரும்ப ஒருதரம் அது நிகழாது. ரயில் கதவுகள் சாத்திக்கொள்கிற பீப் பீப் பீப் முன்எச்சரிக்கை ஒலி கேட்க அவர்கள் காதுகள் தயாராயின. ஆனால் அவர்கள் தயாராய் இல்லாத வேறொன்று நடந்தது. டமாரென்று மகா பயங்கர வெடிச் சத்தம். மொத்தப் பெட்டியுமே குலுங்கி அதிர்ந்தது. மின்சாரம் போய் பெட்டியே இருளில் மூழ்கியது.

கிளி ரயிலைவிட்டு வெளியேறினாள். அவளுக்கு வலதுபுறம் நெடுந் தொடராய் பெட்டிகள்… குபு குபுவென்று கோபுரமாய் எழுகிறது புகை. அவள் பின்பக்கம் இருந்து யாரோ கேட்டார்கள். எதும் வண்டியோட வண்டி மோதிக்கிட்டதோ. சில விநாடியில் மைனா நடைமேடையில் இறங்கிவருகிறாள். அலறல்கள் சன்னமாய் அவளை எட்டின. தரையில் கண்டதுண்டமாய் சிதறிக் கிடந்த உடல்களூடே சில கரு உருவங்களாக பரிதவித்து ஓடும் பிழைத்தவர்கள். தன்னைப்போல ஓ பரிசுத்த அன்னையே, என அரற்றினாள். சடாரென்று தன் அலைபேசியைப் பைக்குள்ளிருந்து எடுத்தாள்.

கிளி எதுவும் பேசவில்லை. அவளோ எஸ்கலேட்டரை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள். அதேசமயம் அங்கே நடமாடிக் கொண்டிருந்தோர் அவளளவுக்கு அவசரங் காட்டவில்லை. எஸ்கலேட்டரில் மாடிக்குப் போன ஜோரில் திரும்பி கீழே நடைமேடையைப் பார்த்தாள். தூரத்தில் புகையெழும்பிக் கொண்டிருந்தது ஒரு பெட்டியில் இருந்து. குத்துயிராய்ப் பிழைத்து நடைமேடையில் விழுந்துகிடந்தவர்கள் எப்படி தரையோடு தங்களையே இழுத்து ஒதுங்க முயற்சி பண்ணுவார்கள், என பாதி தூரக்காட்சியாகவும், பாதி உணர்வாகவும் பெற்றாள். இத்தனைக்கு நடுவிலும், அதோ மைனா. கையில் விரலிடுக்கில் பக்க அடையாளம் கொண்ட புத்தகத்துடன். எஸ்கலேட்டருக்கு அவளும் வந்தாள். ஒருத்தி மேலே. இன்னொருத்தி கீழே. ரெண்டு கண்ணும் ஒரு சிறு விநாடி சந்திக்கின்றன. அதற்குள் மைனாவின் பின்பக்கமாய் இன்னொரு மகா வெடிச்சத்தம். நடைமேடையே குப்பென்று தீப்பற்றுகிறது. அத்தனை நடைபாதை சனங்களையும் சுற்றி வளைத்தாப்போல தீப்பிழம்பு. புகை.

கிளி பார்த்தபோது மைனா எஸ்கலேட்டரை கிட்டத்தட்ட எட்டியிருந்தாள். வெளியே அவள் ஓடி வாசலை எட்டுமுன் இன்னொரு டமால். இது ரொம்ப கிட்டத்தில். அப்படியே நிலைதடுமாறி தரையில் விழுந்துவிட்டாள். பின்பக்கம் வந்துகொண்டிருந்த இளைஞன் ஒருவன், அவனும் தடுமாறி அவள்மேல் விழுந்தான். அப்படியே ஒரு புகை மேகம், தூசிப்புயல் அவர்களை மறைத்தது. இருமல். கண் எரிச்சல். தெருவுக்கு ஓடி தொலைந்து போனாப்போல பதட்டத்துடன் ஓடினாள்.

பாஸ்கோ தெல் ப்ராதோ வரை நடை. திரும்பிப் பார்க்க தைரியம் இல்லை. ஒரு டாக்சியை நிறுத்தினாள். அவள் அலுவலகம் எட்டுமுன் செய்தி எல்லாருக்கும் எட்டியிருந்தது. அவள் சுய நிலையிலேயே இல்லை என்பது அங்கே எல்லாருக்கும் தெரிந்தது. அவர்களே அதிகாரியிடம் போய் அவளை வீட்டுக்கு அனுப்பிவிடச் சொன்னார்கள். அவர் சம்மதித்தார். ம்ஹ§ம் வேணாம். திரும்ப வீடுசெல்ல அவளுக்கு பயமாய் இருந்தது. இங்கேயும் அவளுக்கு முடிக்கவேண்டிய வேலைகள் கொஞ்சம்  இருந்தன. கூட வேலைபார்க்கிற நபர் அவளை பர்லா வரை அவள்வீட்டுக்கே கொண்டுபோய் விட்டார். அதற்குள் வெயிலேறி விட்டிருந்தது.

நாட்கள் வந்தன. போயின. ஒரு மதியப்போதில் இணையத்தில் தேடி வெடிவிபத்தில் இறந்த நபர்களின் புகைப்படங்களை யெல்லாம் ஆராய்ந்தாள் அவள். வரிசையான முகங்கள். ஆந்தெஸ் பகுதி சாயலுடன் அவள் முகம் எதுவும் இருக்கிறதா என்று தேடினாள். மைனா இருக்கிறாளா? இருந்தால்…. அடியில் தான் அவள் பேரே, இப்பதான் அவளுக்குத் தெரியவரும். கிட்டத்தட்ட 200 படங்கள். கவனமாய் உற்றுப் பார்த்தாள். தேடினாள். அவள் படம் அவற்றில் இல்லை. குறித்த வயதுப் பெண்கள். இளம் பெண்கள். சிறுமிகள். அவள் தேடும் அந்தப் பெண் படம் அவற்றில் இல்லை.

ஹா, என நிம்மதியடைந்தாள். அவள் சிநேகிதன் வந்தான். என்ன பண்ணிட்டிருக்கே இவளே. ச். இந்தப் பாவப்பட்ட முகங்களுடனே நானும் இருந்திருப்பேனாக்கும்… சொல்கையிலேயே முகத்தில் விசனக் குறிகள். ஏன் அபபிடிச் சொல்றே…. நான் அவங்களுக்கு எதும் உதவி செஞ்சிருக்கலாம். ஆனால்… நானோ ஓடிவந்திட்டேன். அவன் அவளைத் தேற்றுகிறான்.

அடுத்த சில வாரங்கள். வேலைக்குப் போக வழியை அவள் மாற்றிக்கொண்டாள். ரயில் பயணம் இல்லை. இது சுத்து வழி, என்றாலும் பழைய நினைவுக் குப்பைகளைத் திரும்ப அவள் கிளறிவிட பயந்தாள். ஏற்கனவே இரவில் தூக்கம் கெட்டுப் போயிற்று. மார்ச் இறுதிவரை வேறு வழியிலேயே அலுவலகம் போய்வந்தாள். ஆனால் இப்படியே எத்தனை நாள் தவிர்ப்பது? திரும்ப அட்டோச்சா காலை ரயில்ப் பயணம்…

கோடையின் ஆரம்ப நாள் ஒன்று. மணி ஏழரைக்கு மேல். அல்கலா போகும் ரயிலுக்கு அவள் காத்திருந்தாள். தண்டவாள இடுக்குகளில் மூஞ்சூறுகள் ஓடின. அதைப் பார்த்தபடி யிருந்தாள். திடீரென்று தானறியாமல் திரும்பிப் பார்க்கிறாள், ஆ, அந்த மற்றவள். கோடை என்பதால் லேசான உடைகள். இன்னுமாய் அவள் இவள்கிட்டே வந்தாள். கன்னத்தில் இருந்து கழுத்துக்கு இறங்கிய காயம். தழும்பு. சிவப்பாய்த் தெரிகிறது.

கெதாஃபே பெண் அவளைப் பார்க்க வந்தாள். ஒரு கஜ தூரத்தில் அவள் எதிரே நின்றாள். ஓரிரு விநாடிகள் அவர்கள் ஒருவரை யருவர் பார்த்தார்கள். விழுங்கிவிடுகிற பார்வை. திடுதிப்பென்று… வாய்ச்சொற்களே இல்லை. அந்த நடைமேடையின் நடுத்தளத்தில் பாய்ந்து ஆரத்தழுவிக் கொண்டார்கள். அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் தழுவிக்கொண்டே வரவேற்பார்கள் இப்போதெல்லாம். ஒவ்வொரு காலையிலும்!

முடிவுப் பகுதி அடுத்த இதழில்

In Spanish – “Carne Rota” – Fernando Aramburu.

Mangled Flesh – English Translation Valerie Miles.

Courtesy – Words without borders, March 2013

 

 

 

 

 

Series Navigationசல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…தாகூரின் கீதப் பாமாலை – 67 தனித்துக் கிடக்கிறாய் நீ .. !
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *