எஸ் ஜெயலட்சுமி
”திருமால் புகழ் பாடும் திருப்புகழ்” என்ற இந்தத் தலைப்பைக் கேட்ட என் தோழி ”திருமால் புகழ் பாடுவது திருவாய் மொழியல்லவா? முருகன் புகழ் பாடுவது தானே திருப்புகழ்? திருமாலின் புகழையும் திருப் புகழ் பாடுகிறது என்றால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கு” என்றாள். ஆமாம் திருப்புகழ் முருகனின் புகழோடு திருமாலின் புகழையும் பாடுகிறது.
முருகனின் தீவிர பக்தரான அருணகிரிநாதர் சைவ வைணவ பேதமின்றி முருகனின் புகழோடு திருமாலின் புகழையும் பல பாடல்களில் பாடியி ருக்கிறார்.திருமாலின் பஞ்ச ஆயுதங்கள், துளபமாலை, மார் பில் குடி கொண்டிருக்கும் திருமகள், அவர் பள்ளி கொண்டி ருக்கும் திருப்பாற்கடல், அவருக்கு மெத்தையாக விளங்கும் ஆதிசேஷன் பற்றியும் பாடியிருக்கிறார்.
மேலும் திருமால் திருப்பாற் கடலைக் கடைந்து அமுதம் வழங்கியது, ஆனைக்கருள் செய் தது பற்றியும் போற்றிப் பரவுகிறார். இன்னும் சொல்லப் போனால் ஆழ்வாராதிகளைப்போல திருமாலின் பல அவ
தாரங்களையும் பாடியிருக்கிறார்.
திருமால் தோற்றம்
திருமால் எப்படிக் காட்சியளிக் கிறார்? அவர் ஆதிப் பரம்பொருள். சங்கு சக்ரதாரி. அவர் பிரமனின் தந்தை. திருமாலின் நாபியிலிருந்து தோன்றியவர் பிரும்மா. திருமாலுக்கு மிகவும் பிரியமானது துளசிமாலை. திருமகள் “அகலகில்லேன்” என்று இவருடைய மார்பிலேயே நித்யவாசம் செய்கிறாள். வேதங்கள் எல்லாம் போற்றும் வேதியன். இதையெல்லாம் தொகுத்து,
ஆதிநாரணன் நற்சங்க பாணி
ஓதுவார்கள் உளத்தன்பன் மாதவன்
நான்முகன் நற்தந்தை, ஸ்ரீதரன்
என்றும்
சுருதிமொழி வேதியன் வானவர் பரவு
கேசவன், ஆயுதபாணி நல் துளவ
மாலையை மார்பணி மாயவன்
கதை, சார்ங்க, கட்கம், வளை, அடல்
சக்ரம் தரித்த கொண்டல்
என்றும் திருமாலின் ஐந்து ஆயுதங்களையும் காட்டுகிறார். திருமாலின் சங்கு பாஞ்ச ஜன்யம், சக்ரம் சுதர்ஸனம்,
கதை கௌமோதகி, வில்லின் பெயர் சார்ங்கம். வாளின் பெயர் நாந்தகம். இன்னும்
ப்ரசித்த நெடியவன், ரிக்ஷீகேசன்,
உலகீன்ற பச்சை உமை அண்ணன்,
வடவேங்கடத்தில் உறைபவன், உயர்
சார்ங்க, சக்ர கரதலன்
என்று உமா தேவியின் அண்ணன் என்ற உறவு முறையை யும் காட்டுகிறார்.
திருப்பாற்கடல்
திருமாலின் இருப்பிடத்தையும்
பார்ப்போம். அவருக்கு மிகவும் விருப்பமான இடம் திருப் பாற்கடல். இதைப் பல பாடல்களில் குறிப்பிடுகிறார். கடல் வண்ணனான திருமால் திருப்பாற்கடலில் பள்ளி கொண் டதை
ஆரவாரம் செய்யும் வேலைமேல்
கண்வளர்ந்த ஆதிமாயன்
என்றும்
ஆலப் பணி மீதினில் மாசறும்
ஆழிக்கிடையே துயில் மாதவன்
என்றும்
பாற்கடலில் பள்ளி கொண்டதைப் பாடுகிறார்.
உரகசயனன்
பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனுக்குப் படுக்க மெத்தை வேண்டாமா? அந்த மெத்தை எப்படியிருக்கிறது? பெருமாளை விட்டுப் பிரியாத ஆதி சேஷனே மெத்தையாகிப் பெருமாளைத் தாங்குகிறான். இதை
”உரகபட மேல் வளர்ந்த பெரிய
பெருமாளரங்கர்”
என்றும்
வெமர அணையில் இனிது துயிலும்
விழிகள் நளினன்
என்றும்
”பாலாழி மீது அரவின் மேல்
திருவோடே அமளி சேர் நீலரூபன்”
எனவும்
நச்சு வெண்பட மீதணை வார்முகில்
பச்சை வண்புயனார், கருடாசனர்
என்றும்
ஞாலவட்டம் முற்ற உண்டு
நாகமெத்தையில் துயின்ற நாரணன்
என்றும் நாக சயனத்தில் பள்ளி கொண்டதைப் போற்றுகிறார்.
கடல்கடைந்தது.
இப்படி யோக நித்திரை செய்யும் பெருமானைத் தேவர்கள் தஞ்சம் என்று வந்தடைகிறார்கள்.
துர்வாசரின் சாபத்தால் தன் செல்வமனைத்தையும் இழந்த தேவேந்திரன், தேவர்களோடு வந்து முறையிடுகிறான். அவ னுடைய செல்வங்களெல்லாம் மீட்கப்பட வேண்டுமென்றால்
திருப்பாற்கடலைக் கடைய வேண்டுமென்கிறார் திருமால். திருப்பாற்கடலைக் கடைய வேண்டுமென்றால் சாமானிய மான காரியமா? அதற்குத் தக்க மத்தும் கடைகயிறும் வேண்டுமே! எத்தனை பேர் வேண்டும்?
பெருமான் சொன்னபடி மேரு மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் கடைகிறார்கள். இதிலி ருந்து கிடைத்த அமுதத்தைத் தேவர்களுக்கு வழங்கி அவர் கள் பசி போக்குகிறார் திருமால் இதை எப்படி வருணிக்கிறார்
அருணகிரிநாதர்!
தமரமிகு திரை எறி வளை கடல் குடல்
மறுகி அலைபட விடநதி உமிழ்வன
சமுகமுக கண பண பணி பதி நெடு வடமாகச்
சகல உலகமும் நிலைபெற நிறுவிய
கனககிரி திரிதர வெகுகரமலர் தளர
ஒரு தனி கடையா நின்று
அமரர் பசிகெட உதவிய க்ருபை முகில்
என்று கடல்கடைந்து அமுது வழங்கிய நிகழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
கடலில் கிடைத்த செல்வம்
தேவர்களும் அசுரர்களும் கடை
யும் போது அவர்கள் கைசோர்ந்த போது வாலியும் ஒரு பாதி பிடித்துக் கடைகிறானாம். அப்போது பாரிஜாதம், காமதேனு, உச்சைசிரவஸ் என்ற குதிரை, ஐராவதம் இவற்றோடு லக்ஷ்மிதேவியும் அமுதமும் வருகின்றன. லக்ஷ்மிதேவி திருமாலை அடைகிறாள். இதை
பாரமேரு பருப்பத மத்தென
நேரிதாக எடுத்துடன் நட்டு
உமைபாகரார படப்பணி சுற்றிடு–கயிறாகப்
பாதி வாலி பிடித்திட மற்றோர்
பாதி தேவர் பிடித்திட, லக்ஷ்மி,
பாரிஜாத முதல் பல சித்திகள்—வருமாறு
கீர வாரிதியைக் கைவித்து
அதிகாரியாய் அமுதத்தை அளித்த
க்ருபாளுவாகிய பச்சை வரு அச்சுதன்
என்று கடல் கடைந்து அமுதளித்ததை விரிவாகப் பாடுகிறார்.
ஆனைக்கருள்
திருமால் தேவர்களுக்கு மட்டுமா அருள் செய்கிறார். ஆதிமூலமே! என்றழைத்த ஆனைக்கும் அருள் செய்கிறார். ஆனைக்கும் ஓடோடி வந்து அருள் செய்த எளிமையை ஆழ்வார்கள் வாயாரப் பாடியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே அருணகிரிநாதரும் பெருமான் ஆனைக்கருள் செய்த கருணையைப் பல பாடல்களில் பாடியிருக்கிறார்.
கஜேந்திரன் என்ற யானை பெருமாளுக்குச் சமர்ப்பிக்க பூக்கொய்ய குளத்திற்குச் செல் கிறது. அங்கிருந்த முதலை யானையின் காலைப்பிடிக்க, யானை தன்னை விடுவிக்க மிகவும் போராடிக் களைத்து விடுகிறது. உடனே யானை, ஆதிமூலமே! என்று அபயக் குரல் எழுப்புகிறது. இதைக் கேட்ட பெருமாள் மேலாடை குலைய அவசர அவசரமாகக் கருடன் மேலேறி வந்து தன் சுதர்ஸனச் சக்கரத்தை ஏவுகிறார். முதலை இறக்க கஜேந் திரன் தன் துதிக்கையில் இருந்த தாமரைப் பூவைத் திருமாலுக்கு சமர்ப்பிக்கிறது
வாரணம் மூலமென்ற போதினில்
ஆழிகொண்டு வாவியின் மாடு
இடங்கர் பாற்படவே எறிந்த மாமுகில்
போல் இருண்ட மேனியனாம் முகுந்தன்
பருவராலுற்று மடுவின் மீதுற்ற
பகடுவாய் விட்ட மொழியாலே
பரிவினோடுற்ற திகிரியே விட்ட பழைமாயன்
என்றும், இன்னொரு பாடலில்
வெங்கை யானை வனத்திடை
துங்க மாமுதலைக்கு வெருண்டு
மூலமெனக் கருடனில் ஏறி
விண்பராவ, மண்பராவ அதற்கு
விதம் பராவ அடுப்பவன்
என்றும்
சுவடு பார்த்தட வரு கராத்தலை
தூளாமாறே தானா, நாராயணனே!
நல்துணைவ! பாற்கடல் வனிதை சேர்ப்ப
துழாய் மார்பா! கோபாலா! காவா எனவே
கைக்குவடு கூப்பிட உவணி மேல்
கனகோடு தாவானே போதாள்வான்”
இந்தப் பாட்டைப் பார்த்தால் இது ஆழ்வார்களின் பாசுரங்க ளில் ஒன்றோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அவதாரங்கள்
திருமால் எடுத்த அவதாரங்க ளையும் பல திருப்புகழ்ப் பாடல்களில் இடம்பெறச் செய்துள் ளார் அருணகிரிநாதர். ராம, கிருஷ்ண அவதாரங்களை மிக விரிவாகப் பாடியுள்ள இவர் மற்ற அவதாரங்களையும் பாடி யிருக்கிறார். குறிப்பாக நரசிம்ம அவதாரத்தை ஒரு நாடகம் போலவே பாடியுள்ளார்.
ஆதி சரண் எனக் கயங்குலாவ முதலையைக்
கிடங்கில் ஆர உடல்தனைப் பிளந்த அரிநேமி
ஆமை, கயல், எனச் சயங்கொள் கோல குறள்
அரித்தடங்கையான அரவணைச் சயந்தன்
என்று திருமாலின் அவதாரங்களைப் போற்றுகிறார்.
. மத்ஸ்ய அவதாரம்
ஒருசமயம் பிரம்மாவிடமிருந்து வேதங்களை யெல்லாம் அபகரித்துக் கொண்டு போய் விடு கிறான் அசுரன் ஒருவன். பிரமன் முறையிட திருமால் மத்ஸ்யாவதாரம் (மீன் அவதாரம்) எடுத்து அசுரனோடு போர் செய்து வேதங்களை மீட்கிறார். இந்த நிகழ்ச்சியை
சிறுத்த செலுவதனுள்ளிருந்து
பெருத்த திரை உததி கரந்து
செறித்த மறை கொணர நிவந்த ஜெயமாலே
என்று மத்ஸ்யாவதாரத்தைப் போற்றுகிறார்.
வராக அவதாரம்
பூமாதேவியைக் கவர்ந்து சென்ற அசுரனான இரண்யாட்சனை வராக அவதாரம் எடுத்துக் கொன்று பூமிப் பந்தைத் தன் கொம்பில் தூக்கி வந்து மீட்கிறார் திருமால்.
கோல உருவாய் எழுந்து பார்தனையே இடந்து
கூவிடு முராரி விண்டு திருமார்பன்.
என்று வராக அவதாரத்தைப் பாடுகிறார்.
நரசிம்ம அவதாரம்
பிரும்மாவிடமிருந்து விசித்திர மான பல வரங்களைப் பெற்ற இரணியன் தேவர்களைக் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். எல்லோரும் இரண்யாய நம: என்று தன் பெயரையே ஜபிக்க வேண்டுமென்று ஆணை யிட்டான். ஆனால் அவன் ஐந்து வயது மகன் பிரஹலா தனோ நாராயண நாம மகிமையைப் போற்றி சக மாணவர் களுக்கும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.
இதைக் கண்ட இரணியன் தன் மகனே தனக்கு எதிரியாக வருவதைக் கண்டு மிகவும்
ஆத்திரமடைந்தான். “நீ சொன்ன ஹரி நாராயணன் இந்தத் தூணில் இருக்கிறானா?” என்று கேட்டுக் கொண்டே தன் கையால் தூணை அறைந்தான்.தூணின் உள்ளேயிருந்து பாதி மனிதனும் பாதி சிங்கமுமாக நரசிங்க வடிவத்துடன் தோன் றிய திருமால் இரணியனை வென்று அவனைத் தன் மடி யில் கிடத்தித் தன் கூரிய நகங்களால் அவன் குடலைக் கிழித்து மாலையாகப் போட்டுக் கொண்டார். இரணியன் உடலிலிருந்து பீறிட்ட இரத்தத்தையும் குடித்தார்.
இந்த நிகழ்ச்சிகளையெல்லாம்
ஒரு நாடகம் போல பாடிக்காட்டுகிறார் அருணகிரிநாதர்.
உரிய தவநெறியில் நாராயணாய என
ஒரு மதலை மொழியளவில், ஓராத
கோபமுடன், “உனது இறைவன் எதனில்உளன்?
ஓதாயடா எனுமுன்
உறு தூணில், உரமுடைய அரி வடிவதாய்
மோதி வீழ
விரல் உகிர் புதைய, இரணியனை மார்பீறி
வாகை புனை உவணபதி நெடியவன்
என்றும். இன்னொரு பாடலில்,
அருமறை நூலோதும் வேதியன்
இரணிய ரூபா நமோவென
அரிகரி நாராயணாவென ஒருபாலன்
அவன் எவன்? ஆதாரம் ஏதென?
இதனுளனோ? ஓவாது நீ யென
அகிலமும் வாழ்வான நாயகன் எனஏகி
ஒருகணை தூணோடு மோதிட
விசைகொடு தோள்போலு வாளரி
உகிர்கொடு வாரா நிசாசரன் உடல் பீறும்
உலகொரு தாளான மாமன்
என்றும் அந்தக் காட்சிகளைக் கண்முன் கொண்டு வருகிறார்.
மற்றொரு பாடலில்
பூசுரன் ஓமென்றதற்கு அந்தரன்
இரணியாய நமவென
நாராயணாய நமவென்றோதுங்
குதலை வாய்ச் சிறியோனுக்காகத்
தூணில் தோன்றிய வசபாணிப்
பலநக நுதியின் நிசாசரன் ஆகம் கிழித்தணிந்து
அளைந்தணி துளசியோடு சிறுகுடல்
தோள் மாலையாக அணியுங் கோவும்
ஒரு சிறுவனின் வார்த்தைக்காகத் திருமால் எப்படித்
தூணில் தோன்றி இரணியனைக் கொன்றார் என்று காட்டு கிறார்.இவர் போற்றிப் பரவுவதைப் பார்த்தால் இவர் நரசிம்ம பக்தரோ என்று கூடத் தோன்றுகிறது. நரசிம்ம அவதாரம் பற்றி சுமார் பத்து பாடல்களுக்கு மேல் கொண்டாடுகிறார்.
வாமனாவதாரம்
அடுத்ததாக வாமனாவதாரம்.
கர்வம் கொண்ட மகாபலியின் கர்வத்தை அடக்க எண்ணிய திருமால் வாமனனாகக் குள்ள வடிவத்துடன் மகாபலியின்
யாகத்திற்குச் செல்கிறார். ஒரு அழகிய அந்தணச் சிறுவன் வருவதைக் கண்ட மகாபலி ”என்ன வேண்டுமோ கேள். என்னிடம் வந்தவர்கள் இன்னொருவரிடம் சென்று தானம் கேட்கக் கூடாது. அதனால் என்ன வேண்டுமோ கேள் தருகிறேன்” என்கிறான்.
வாமனன் வடிவில் வந்த திரு மால், என் காலடியால் மூவடி மண் வேண்டும் என்கிறார்.
இதோதருகிறேன் என்ற மகாபலியைத் தடுக்கிறார் அசுர குரு வான சுக்கிராச்சாரியார். ஆனால் கொண்ட கொள்கையை விடாத மகாபலி மூவடி மண் தானம் செய்யத் தன் மனை வியை நீர்வார்க்கும் படி சொல்கிறான். உடனே சுக்கிராச்சாரி யார் வண்டு உருவம் கொண்டு கெண்டியில் நீ வரும் வழியை அடைக்கிறார். இதைக் கண்ட வாமனன் தன் கையி
லிருந்த தர்ப்பைப் புல்லால் வண்டின் கண்களைக் கிளறு கிறார். தானம் நிறைவேறுகிறது.
ஆனால் இது என்ன அதி சயம்! வாமனன் எங்கே? ஆகாயம் அளவும் திரிவிக்ரமனாகி
ஆகாயத்தையும் பூமியையும் இரண்டு அடிகளாக அளந்த பின் மூன்றாவது அடி எங்கே என்று கேட்கிறார் திருமால்.
மகாபலி அடிபணிந்து தன் தலையைக் காட்டுகிறான். மகா பலியைப் பாதாள உலகத்திற்கு அனுப்புகிறார் திருமால்.
இந்தக் கதையை
சிற்பரத் திட்பதம் வைத்துச்
சக்ரவர்த்திக்குச் சிறையிட்டுச்
சுக்கிரன் அரிய விழிகெட இருபதமும்
உலகடைய நெடியவர் திருவும் அழகியர்
என்றும்
ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள
விதரண மாவலி வெருவ மகாவ்ருத
வெள்ள வெளுக்க நின்ற நாராயணன்
என்றும் தோத்திரம் செய்கிறார் அருணகிரிநாதர். மேலும்
மாவலியைச் சிறை மண்ட
ஓரடி ஒட்டி அளந்து
என்றும்
பூவுலகமெலாம் அடங்க ஓரடியினால் அளந்த
பூவை வடிவானுகந்த
என்ற வரிகளிலும் வாமனாவதாரத்தைப் புகழ்ந்து பாடுகிறார்.
இவ்வாறு அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் “திருமால் புகழ் பாடும் பக்தராகவும் காட்சியளிக்கிறார்.
*************************************************************
- மோட்டூர்க்காரி!
- “இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” – திரு கர்ணன்
- திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013
- சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. !
- நினைவு மண்டபம்
- மருத்துவக் கட்டுரை நிமோனியா
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23
- மொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்
- நீங்காத நினைவுகள் – 6
- வெற்றி மனப்பான்மை
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -5
- திருமால் புகழ்பாடும் திருப்புகழ்
- அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்
- நான் இப்போது நிற்கும் ஆறு
- மதுரையில் ஆடிய குரவைக்கூத்து
- NH அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் – இளஞ்சேரலின் சிறுகதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 6,7
- அக்னிப்பிரவேசம்-37
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13
- புகழ் பெற்ற ஏழைகள் – 10
- செவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது
- விஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா?