தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை
17. ஏழிசையாய் இசைப்பயனாய் புகழ் பெற்ற ஏழை…
“மன்மதலீலையை வென்றார் உண்டோ?” ….. அடடே வாங்க. என்னங்க பாட்டெல்லாம் பாடிக்கிட்டு ரொம்ப அமர்க்களமா வர்ரீங்க..என்ன வீட்டுல ஏதாவது விசேஷங்களா? இல்ல…வேற ஏதாவது சிறப்பா…ம்…ம்..”நீல கருணாகரனே நடராஜா நீல கண்டனே” …என்னங்க பாட்டா பாடிக்கிட்டே இருக்கீங்க..அட என்னாச்சு உங்களுக்கு… ஓ…ஓ…அவரு யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?..என்ன அட..ஆமா… சரியாச் சொன்னீங்க எம்.கே.தியாகராஜ பாகவதர்தான். தமிழ்த் திரை உலகில் ஒப்பாரும் மிக்காருமில்லாத நடிகராக, இசைத் தமிழின் முடிசூடா மன்னராக, முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய அதே எம்.கே. தியாகராஜ பாகவதர் தான். ஏழிசை மன்னர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
மயிலாடுதுறையில் 1910 மார்ச் முதல் நாள் அன்று கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மா
வீட்டை விட்டு ஓடுதல்
தியாகராஜரின் தந்தையார் நகைகளுக்கு நகாசு செய்யும் தொழில் நடத்தி வந்தார். சிறுவயதில் தியாகராஜன் அதி அற்புதமாக பாடினாலும் அவருடைய தந்தையார் தியாகராஜனை இசை உலகிற்கு அனுப்ப விரும்பவில்லை.அதற்குக் காரணம் அப்போது இசைக்குப் பெரிய அளவில் மதிப்போ வருமானமோ இல்லை. இதன் விளைவாக தியாகராஜன் படிப்பதற்கு திருச்சி பாலக்கரையில் உள்ள பழைய ஜபமாதா கோவில் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். இசையில் இருந்த ஆர்வம் தியாராஜனுக்கு படிப்பில் இல்லை. பள்ளி சென்று வந்ததும் நகைக்கடையில் வேலை. இந்த சூழல் தியாகராஜனுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. தந்தை இல்லாத போது நகைக்கடையில் பாட ஆரம்பித்து விடுவான்தியாகராஜன். தெருவில் போவோர் வருவோரெல்லாம் தியாகராஜனுடைய இசையில் தேனுண்ட வண்டுகள் போன்று மயங்கி நின்று விடுவார்கள்.
தந்தைக்கு தியாகராஜன் பாடியது பிடித்தது. இருப்பினும் அவருக்கு அது வாழ்க்கைக்கு பொருந்தாததாகப்பட்டது. பள்ளிக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு பலமுறை உய்யக்கொண்டான் ஆற்றில் இறங்கி பாட ஆரம்பித்துவிடுவார் தியாகராஜன்.. உய்யக்கொண்டான் ஆற்றில் கரையிலிருக்கும் குழுமியானந்த சுவாமிகள் மடத்திற்குப் போவதையும் சுவாமிகளை தரிசிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார் தியாகராஜன்.
சிறுவயதில் தியாகராஜன் படிக்க வேண்டும் என்பதை அவரது தந்தை வலியுறுத்தியபடி இருந்தார். இறுதியில் தனது தந்தையின் தொல்லை தாங்காமல் திடீரென்று தியாகராஜன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தாயும்தந்தையும் எங்கே தேடியும் அவதிப்பட்ட நிலையில், கடப்பாவில் அவர் இருப்பதாகச் செய்தி வந்தது. தனிமைப்பட்டு, கையில் காசில்லாமல் சென்றவர் எவ்வளவு அவதிப்படுகிறாரோ என்ற கவலையுடன் தந்தை கடப்பா சென்றார். அங்குஅவர் ஆச்சரியப்பட்டார், கடப்பாவில் ஒரு மண்டபத்தில் மக்களின் கூட்டம் அவர் பாடுவதைக் கேட்டு ஆரவாரித்தபடி இருந்தது. தனது மகனின் இசையைக் கேட்ட தியாகராஜரின் தந்தை மனதிற்குள்ளேயே வியந்தார்.
திருச்சி திரும்பிய தியாகரஜரின் இனிய பாடலைக் கேட்டுப் பலரும் அவரைப் பாராட்டினார்கள். அவ்வாறு பாராட்டியவர்களுள் திருச்சியைச் சேர்ந்த எப்.ஜி.நடேச அய்யர் என்பவரும் ஒருவராவார். அவர் தமது திருச்சி ரசிகரஞ்சனி சபா நடத்தும் அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜரை நடிக்க வைப்பதற்கு அவரது தந்தையிடம் அனுமதி வாங்கினார். தியாகராஜரின் நாடக அரங்கேற்றம் நடைபெற்றது. பத்து வயதுச் சிறுவன்திடீரென்று ஓர் இரவில் ஒளிமிக்க நட்சத்திரமாக ஆகிவிட்டார். ஆம்! தியாகராஜரின் ஏழிசை மழையில் அனைவரும் நனைந்து மனதைப் பறிகொடுத்தனர்.
அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த புகழ் பெற்ற வயலின் கலைஞர் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன் அவருக்குக் கர்நாடக இசையை முறையாகக்கற்றுத்தர முன்வந்தார். அதற்கு எந்தவிதமான பொருளோ பணமோ தமக்கு வேண்டாமென்று கூறிவிட்டார். தியாகராஜர் கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற அதேநேரத்தில், நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜவாத்தியாரிடம், நடிப்பதற்குப் பயிற்சி பெற்றார்.
தியாகராஜன் பாகவதர் ஆனது
ஆறு ஆண்டுகள் பயிற்சி தந்தவுடன், தியாகராஜருடைய பாட்டுக் கச்சேரியின் அரங்கேற்றத்தை நடத்த பொன்னு ஐயங்கார் திட்டமிட்டார். அதற்கு அக்காலத்தில், இசைக்கலையில் மிகப் பெரியவர்களாகத் திகழ்ந்தவர்களை அணுகி, தமது மாணவரின் இசைத்திறமையை விளக்கினார். கடைசியாக, தமிழ்நாட்டில் தலைசிறந்த சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜரின் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க முன்வந்தார். தியாகராஜர் தனது 16-ஆம் வயதில் திருச்சி பெரிய கம்மாளத் தெருவில் உள்ள காளிகோவிலில் மதுரை பொன்னு ஐயங்கார் பிடில் வாசிக்க அபிநவநந்திகேஷ்வரர் தட்சாணா மூர்த்திபிள்ளை கஞ்சிரா வாசிக்க தட்சிணாமூர்த்தி ஆசாரி மிருதங்கம் வாசிக்க இசைக்கச்சேரி செய்தார். இது அன்றைய இசை உலகில் மிகப்பெரிய சாதனையாக அனைவராலும்கருதப்பட்டது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் தியாகராஜரின் குரல் வளமும், கர்நாடக இசையின் இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் அமைந்திருந்தது. தியாகராஜர் தொடர்ந்து நான்கு மணி நேரம் கச்சேரியில் பாடல்களைப் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். கச்சேரி முடிந்ததும் தட்சிணமூர்த்தி பிள்ளை அவர்கள் “தியாகராஜர் கர்நாடக இசைக்கு முருகன் அளித்த வரப்பிரசாதம் இதுவரை நான் பலகச்சேரிகள் கேட்டிருக்கிறேன். இது மாதிரி ஒரு அற்புதமான கச்சேரி நான் இது வரைகேட்டதில்லை. இன்று முதல் இந்தப்பிள்ளை வெறும் தியாகராஜன் அல்ல தியாகராஜ பாகவதர்” என்று கூறினார். வெறும் தியாகராஜன் அன்றிலிருந்து தியாகராஜ பாகவதர் ஆனார். இப்பெயரே மக்களிடத்தில் நிலைத்து நின்றுவிட்டது, இன்றும் பாகவதர் என்று குறிப்பிட்டால் அது தியாகராஜரையே குறிப்பிடும் என்பது நோக்கத்தக்கது. இவ்வாறே தியாகராஜ பாகவதர் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
நாடக, திரைப்படக் கலைஞர் பாகவதர்
1926-ஆம் ஆண்டில் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் பவளக்கொடி வேடமேற்றுப் பெண் வேடத்தில் டி.பி.ராமகிருஷ்ணன் என்பவர் நடித்தார். பிறகு அவருடன்இணைந்து நாடகத்தில் பவளக்கொடி வேடத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பெரும் புகழடைந்தனர்.
இதில் குறிப்பாக இவ்விருவரும் சேர்ந்து நடித்த வள்ளி திருமணம், பவளக்கொடி கோவலன், ராணி லலிதாங்கி, நந்தனார் ஆகிய நாடகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தென்னிந்தியாவில் மட்டும் இன்றி அயல் நாடுகளான இலங்கை, பர்மாபோன்ற நாடுகளிலும் தியாகராஜ பாகவதர் எஸ்.டி.சுப்புலக்ஷ்மி நாடகங்களுக்கு பெரிய வரவேற்பிருந்தது. ஒரு பக்கம் கிட்டப்பா-சுந்தாராம்பாள் இணையும் மறு பக்கம் பாகவதர்-சுப்புலட்சுமி இணையும் போட்டி போட்டுக் கொண்டு நாடகத் துறையில் முத்திரை பதித்தனர்.
இதே கால கட்டத்தில் வி.ஏ.செல்லப்பா, எஸ்.வி.சுப்பையா பாகவதர் போன்றோரும் நாடக மேடையில் முத்திரைப் பதித்தார்கள். இப்படி கடும் போட்டிகளுக்கிடையில் தன் திறமையால் மட்டுமே தியாகராஜ பாகவதர் மிக உயர்ந்த இடத்தை பிடித்தார்.
1934- ஆம் ஆண்டில் பாகவதர்-சுப்புலட்சுமி இணை நடித்த பவளக்கொடி நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. இதுவே பாகவதரின் முதல் படமாகும். அந்தப் படத்தில் இருந்த 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார். தமிழ்நாடெங்கும் திரைப்படக் கொட்டகைகளில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி வழிந்தது. பவளக்கொடித் திரைப்படத்திற்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இருந்தது.இத்திரைப்படம் தொடர்ந்து ஒன்பது மாதங்கள் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தியாகராஜ பாகவதரின் புகழ் குன்றிலிட்ட விளக்குபோல் ஒளிர்ந்தது.
அதன்பிறகு பாகவதர் நடிப்பில், நவீன சாரங்கதாரா (1936), சத்தியசீலன் (1936-பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்தது), சிந்தாமணி (1937), அம்பிகாபதி (1937), திருநீலகண்டர் (1939), அசோக் குமார் (1941), சிவகவி (1943), ஹரிதாஸ் (1944) ஆகிய திரைப்படங்கள் ஒன்றைஒன்று மிஞ்சும் அளவுக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன. 1937-ஆம் ஆண்டு வெளிவந்த சிந்தாமணி படம் பெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து ஒரே தியேட்டரில் ஒரு ஆண்டிற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்தப்படம் பாகவதருக்கு முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையைக் கொடுத்தது.
1944-ஆம் ஆண்டு வெளி வந்த ஹரிதாஸ் படம் தொடர்ந்து மூன்று தீபாவளி கண்டு சரித்திரம் படைத்தது. இது வரை இந்தப் படம் ஏற்படுத்திய சாதனை முறியடிக்கப் படிவில்லை. இந்த படம் மூலம் இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு படத்திற்கு ஒரு லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற முதல் ஆண் நட்சத்திரம் என்ற பெருமையை பாகவதர் அடைந்தார். தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தியாகராஜ பாகவதரின் பாடல்களே எதிரொலித்தன.
புகழைக் குலைத்த கொலை வழக்கு
திரையுலகில் பாகவதர் அடைந்திருந்த உன்னதமான புகழையும், பெருமையையும் கண்டு பொறாமையடைந்த சிலர், அவரைப் பற்றி அடிப்படையற்ற அவதூறுகளைக் கிளப்பியவாறு இருந்தனர். இந்தச் சமயத்தில்தான் லட்சுமிகாந்தன் பற்றிய கொலை வழக்குவந்தது.
லட்சுமிகாந்தன் முன்னர் செய்த பல்வேறு குற்றங்களுக்காக ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபொழுது வழியில் காவல்த்துறையிடமிருந்து தப்பியோடி மீண்டும் சென்னையில் பிடிபட்டு அந்தமான் சிறைக்குஅனுப்பப்பட்டார். 1942-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜப்பானியப் படை அந்தமானைக் கைப்பற்றி அங்குள்ள சிறைவாசிகளை வெளியேற்றியதும் சென்னைக்குத் திரும்பிய லட்சுமிகாந்தன், “சினிமா தூது’ என்ற கீழ்த்தரமான மஞ்சள் பத்திரிக்கையின் வாயிலாகப்பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும் இருந்த பலர்மீது பலவிதமான வீண்பழிகளைச் சுமத்தியும், தவறான கருத்துக்களைப் பரப்புரை செய்தும் அவர்களை மிரட்டியும், பணம் பறித்து வந்தார்.
திரையுலக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி சினிமா தூது இதழில் எழுதப்பட்ட அவதூறுகளைக் கண்டித்து பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், சீராமுலு நாயுடு உள்ளிட்ட பலர் ஆளுநர் ஆர்தர் ஹோப்பிடம் சமர்ப்பித்த மனுவின்மீது காவல்த்துறையினர் விசாரணைசெய்து அவதூறுகள் கிளப்பிய சினிமா தூது பத்திரிகையைச் சட்டப்படி தடை செய்தனர். அதன் பிறகு, “இந்து நேசன்’ என்ற மற்றொரு பத்திரிகையின் வாயிலாக மீண்டும் லட்சுமிகாந்தன் வீண்பழிகளைச் சுமத்திப் பணம் பறிப்பதில் ஈடுபட்டார்.
இந்தச் சூழலில் 1944 –ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் நாள் சென்னை வேப்பேரியிலுள்ள கால்நடை மருத்துவமனை அருகில் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்த லட்சுமிகாந்தனைச் சிலர் வழிமறித்துக் கத்தியால் குத்திக் காயப்படுத்தினர். அதையொட்டித் தன்னுடையவழக்கறிஞரின் ஆலோசனைப்படி அருகிலிருந்த காவல்நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட காயம் பற்றிப் புகார் செய்துவிட்டு, சென்னை பொது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டிந்த லட்சுமிகாந்தன் மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில்இறந்துவிட்டார்.
இதற்குக் காரணம் பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனுமே காரணம் என்று 1944-ஆம் ஆண்டு நவம்பர் 27-ம் நாள் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிருவரையும் காவல்த்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஆறு பேர் காவல்த்துறையால் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதே லட்சுமிகாந்தன் கொலைக்குக் காரணம் என்று காவல்துறை குறிப்பிட்டது.
சென்னை மாநில மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நால்வர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்மீதுசெய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
விடுதலையும் வாழ்க்கைச் சரிவும்
லட்சுமிகாந்தன் கொலை வழக்கானது லண்டன் ப்ரிவி கவுன்சில் அமைப்புக்கு முறையீடு செய்யப்பட்டது. வழக்கை மீண்டும் விசாரணை செய்யுமாறு ப்ரிவி கவுன்சில் தந்த உத்தரவின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அவ்வழக்கின் மீது மறுவிசாரணை தொடங்கியது. புகழ்பெற்ற வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் முன்வைத்த வாதங்களும், ஆதாரங்களும் நடத்தப்பட்ட வழக்கில் தரப்பட்ட வலுவற்ற புனைந்துரைகளை முழுமையாகச் சிதறடித்தன. அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும்விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் இவ்வழக்கு பாகவதரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. “ஊழிற் பெருவலி யாவுள” என்ற வள்ளுவரின் வாக்கு பாகவதரின் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
சிறை மீண்டு வந்ததும் திரையுலகில் பாகவதர் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் போனதால், தானே திரைப்படம் எடுக்க முற்பட்டார். அப்படி வந்தது தான் ராஜமுக்தி (1948) திரைப்படமாகும். இப்படத்தில் பாகவதரின் பாட்டுக்கள் சிறப்பாக அமைந்திருந்தாலும் படம்எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
அந்த காலகட்டத்தில் மக்களின் ரசனையும் மாறி இருந்தது ராஜமுக்தி படத்தைத் தொடர்ந்து பாகவதர் அமரகவி (1952), சியாமளா (1952), புதுவாழ்வு (1957), சிவகாமி (1960) ஆகிய படங்களைத் தயாரித்து நடித்தார். ஆனால் அவையும் பாகவதருக்குத் தோல்வியையே தந்தன. எனினும் அப்படத்தில் இடம்பெற்ற அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. பாகவதர் மிகுந்த வறுமைக்கு ஆளானார். அவரிடம் நடிப்பதற்காக முன்பணம் கொடுத்திருந்த தயாரிப்பாளர்கள் தங்களின் முன்பணத்தைக் கேட்டகவே தன்னிடம் இருந்த சொத்துக்களை எல்லாம் விற்றுப் பணத்தைக் கொடுத்தார். இதனால் வறுமை வாய்ப்பட்டார் பாகவதர். பாகவதர் தனக்கென்று எதனையும் சேர்த்து வைக்கவில்லை. ஆடம்பரமாக வாழ்ந்ததால்தான் இந்நிலையை அடைந்தார் என்றும் பலர் கூறுவர். எது எப்படியோ,
“வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”
என்ற திருக்குறள் கருத்து பாகவதரின் வாழ்க்கைக்கு உதாரணமானதாக அமையும். பிற்கால வாழ்க்கைக்கு எதனையும் சேமித்து வைக்காததால்தான் பாகவதர் தனது இறுதிக் காலத்தில் சொல்லொணாத வறுமைநிலையை அடைய நேர்ந்தது.
பண்பாடு நிறைந்த பாகவதர்
பாகவதர் தனக்கு இசையைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களான ஆலந்தூர் வெங்கேடச ஐயர், ஆந்தூர் சகோதரர்கள், பாபநாசம் சிவன் மற்றும் சில இசை வித்வான்களிடமும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். பாபநாசம் சிவன்உட்காரச் சொன்னால் மட்டுமே அவர் உட்காருவார். இல்லையெனில் ஒருபோதும் அவர் முன் பாகவதர் உட்கார்ந்ததுக் கூட இல்லை. இதுதாங்க குருபக்தின்னு. தனக்கு உயர்ந்த நிலை வந்துவிட்டது என்பதற்காக தன் ஆசிரியர்களை மதிக்காத சூழல் இன்று நிலவுகின்றது. ஆனால் பாகவதர், “எழுத்தறிவித்தவன் இறைவனாகும்” என்ற முதுமொழிக்கு ஏற்ப தன்னுடைய ஆசிரியர்களைத் தெய்வமாகவே கருதி மதிப்புடன் நடந்து கொண்டார்.
பாகவதர் உன்னதமான நிலையில் இருந்த போது நலிந்த நாடக் கம்பெனிகளுக்கு, அவர்கள் நடத்திய நாடகத்திற்குத் தலைமை தாங்கி அதிகமான நிதிகிடைப்பதற்கு உதவிபுரிந்தார். பாகவதர் தனக்காக என்று தனியாக பணம் ஏதும்வாங்காமல் இலவசமாக பல நாடகங்களை நடத்திக் கொடுத்தார். பாகவதர் செய்நன்றி மறவாதவர். சிறு வயதில் தான் ஏழ்மையாக இருந்தபோது தனக்கு உதவியவர்களின் இல்லங்களில் நடைபெற்ற அவர்கள் வீட்டு விழாக்களுக்குஇலவசமாகக் இசைநிகழ்ச்சி நடத்திக் கொடுத்தார்.
பாகவதர் பிறர் சொத்துக்கு ஒருபோதும் ஆசைப்படவில்லை என்பதற்குப் பின்வரும் நிகழ்ச்சி சான்று பகர்வதாக அமைந்துள்ளது. பாகவதருக்கு மிகவும் நெருங்கிய முஸ்ஸீம் நண்பர் தனது இரண்டு மகன்கள் மேல் எழுந்தகோபத்தில் தன்னுடைய சொத்து முழுவதும் பாகவதருக்கு எழுதி வைத்துவிட்டார். கோபத்தில் தன் நண்பர் செய்த செயலை அறிந்த பாகவதர், அந்த முஸ்ஸீம் நண்பர் இறந்ததும் அவருடைய மகன்களை அழைத்து அவர்களுக்கு சேரவேண்டிய சொத்துக்களை அவர்களுக்கே எழுதிக் கொடுத்து விட்டார். பாகவதரின் இசைத்தொண்டினைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் பரிசாகக் கொடுத்த கிராமத்தை மறுபடியும் கிராமத்தினரிடமே பாகவதர் கொடுத்துவிட்டார். தனக்கு ஏதாவது கிடைக்காதான்னு அலையிற உலகத்தில் தன்னைத் தேடி வந்தவற்றை ஏற்காது அதனைத் திரும்ப யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அவர்களிடமே கொடுப்பதற்கு ஒரு மனசு வேண்டும். அந்த உயர்ந்த மனசு பாகவதரிடம் இருந்தது. தன்னுடைய உழைப்பில் கிடைத்தவையே தனக்கு உரியது என்று கருதும் உயரிய பண்பாளராகப் பாகவதர் விளங்கினார். பாகவதர் நலிவுற்றிருந்த காலத்தில் அவருக்கு படத்தில் நடிக்க பல வாய்ப்புகள்வந்தும் தன் கொள்கைக்கு புறம்பான படங்களில் பணத்திற்காக நடிக்க அவர் ஒப்பு கொண்டதில்லை. பணம் கிடைக்கின்றதே என்பதற்காக பாகவதர் தனது கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கவில்லை.
இறுதிக் காலமும் இறைவனடி சேர்தலும்
பாகவதர் தனது வயது முதிர்ந்த காலத்தில் மிகுந்த வறுமைக்கு உள்ளானார். வறுமை வந்துற்ற போதும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து ஒருபோதும் இறங்கவில்லை. பாகவதர் பால் பெருமதிப்பு வைத்திருந்த நடிகர்எஸ்.எஸ்.ராஜேந்திரன் பாகவதருக்கு நல்ல முறையில் சென்னையில் மருத்துவம் பார்ப்பதாகக் கூறியும், பாகவதர் தன்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கையை ஆண்டவனிடம் வைத்து ராஜேந்திரன் செய்ய உதவியை மறுத்து விட்டார்.
தியாகராஜபகவதர் நடிப்புலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த போது ஒரு 12 வயது சிறுவன் அவரை பார்ப்பதற்காக அவர் தற்காலிகமாக தங்கியிருந்த உணவு விடுதிக்கு வெளியில் இரண்டு நாட்கள் காத்திருந்தான். உணவுவிடுதி மேலாளர் அவனைப் பார்த்து பரிதாபப்பட்டு தியாகராஜபகவதரை நேரில் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
தியாகராஜபகவதரை சந்தித்த அந்த சிறுவன் அவரது காலில் விழுந்து வணங்கி ஐயா நானும் உங்களைப் போன்று ஒரு பெரிய நடிகனாக விரும்புகிறேன் என்று கூறியபோது தியாகராஜபாகவதர் அவனது தலையைத் தடவி நீ முயற்சிசெய்தால் உனக்கு என்னைவிடப் பெரிய நடிகனாக வரவாய்ப்பு உள்ளது. அது உன்னால் முடியுமென்று வாழ்த்தி அனுப்பினார். அந்த சிறுவன் வேறுயாருமல்ல. அவர்தான் மக்கள் திலகம் என்று மக்களால் பாராட்டப்பெற்ற தமிழகத்தின் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார்.
அந்த சம்பவத்தை அடுத்து புரட்சித் தலைவர் நாடகத்தின்மூலம் அறிமுகமாகி பின்னர் தென்னிந்தியாவின் பிரபல நடிகராகி புகழ் உச்சியில் இருந்த காலத்தில் அவரை சந்திக்க ஒரு முதியவர் இரண்டு நாட்கள் வெளியில் காத்திருந்துஇறுதியில் நான் தியாகராஜபகவதர் உங்களை சந்திக்க விரும்புகிறேன் என்று ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அந்த மாளிகைக்குள் அனுப்பி வைத்தார்.
தியாகராஜபகவதரின் இந்த துண்டைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியும், அதிர்ச்சியுமடைந்த எம்.ஜி.ஆர். வேகமாக மாடியிலிருந்து இறங்கி தியாகராஜபகவதரை பார்த்தார். உடனடியாக அவருக்கு புதிய உடைகளையும் பணமுடிப்புகளையும்கொடுத்த எம்.ஜி.ஆர். ஐயா உங்களுடைய வாழ்த்தினால் தான் நான் நடிப்புத்துறையில் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளேன் என்று தனது நன்றி உணர்வை வெளிப்படுத்தினார். பாகவதர் கூறாமலேயே எம்.ஜி.ஆர். அவருக்குப் பல உதவிகளைச் செய்தார்.
மேலும் எம்.ஜி.ஆர். தியாகராஜபகவதருக்கு வசதியான பெரிய வீடு ஒன்றைக் கொடுத்து அவரது செலவுகளுக்காக மாதந்தோறும் ரூபாய் இரண்டாயிரத்தையும் அனுப்பி வைத்தார். இவ்வுதவியை பாகவதர் இறக்கும்வரை செய்துவந்தார். தியாகராஜபகவதர் இறக்கும் வரை எம்.ஜி.ஆரின் அரவணைப்பில் எவ்வித பணப்பிரச்சினையுமின்றி நிம்மதியாக வாழ்ந்து வந்தார். இசையுலகில் ஏழிசை மன்னராகப் பவனிவந்த தியாகராஜபாகவதர் 1959-ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளன்று இவ்வுலக வாழ்கையிலிருந்து விடுதலை பெற்றார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றும் மக்களின் இதயத்திலிருந்து மறையாது ஒலித்துக கொண்டே இருக்கின்றன. ஏழையாய்ப் பிறந்து ஏழிசை மன்னராக, இசைப் பயனாகப் பரிமளித்து புகழொளி பரப்பி வாழ்ந்த தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
என்னங்க இசையரசரின் வாழ்க்கை மனசக் கலங்கடிச்சுருச்சா…அட..இதுக்கே இப்படி இருந்தீங்கன்னா..இன்னும் பல காலம் நாம வாழணுமே அதுக்கு என்ன செய்யப் போறீங்க… எதைப் பத்தியும் கவலைப் படாதீங்க…சோம்பலை உதறுங்க…பாகவதருடைய வாழ்க்கை நமக்கு ஒரு உந்துதலைத் தருதுல்ல…அப்பறம் என்ன இலக்கை நோக்கிப் பயணமாகுங்க.. மன உறுதியோட செயல்பட்டா உங்களுக்கு எப்பவும் வெற்றிதாங்க…
1967 – ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் கேப்டான் நகரில் எதிர்பாராத கோரவிபத்து ஒன்றினால் ஒரு காரால் மோதித் தள்ளப்பட்டு உயிருக்கு ஊசலாடிய நிலையில் ஓர் இளம்பெண் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவரது உடலில்இதயம் மட்டும்தான் துடித்துக் கொண்டிருந்தது வேறு எந்த அசைவும் இல்லை. அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணின் இதயத்தை அகற்ற வேண்டிய பொறுப்பு ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது… ஆனால் அந்த நாட்டின் சட்டப்படி அவர் அந்தப் பெண்ணைதொடக்கூட முடியாது ஏனெனில் அவர் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த இளம்பெண் டெனிஸ் டார்வால் வெள்ளை இனப்பெண். தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் உச்சகட்டத்தில் இருந்த அந்த சமயத்தில் வெள்ளையர்களின் அறுவை சிகிச்சை அறைக்குள் நுழையவோ மருத்துவமனையில்வெள்ளையர்களை தொடவோ அறுவை சிகிச்சை செய்யவோ கருப்பர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அந்த நிபுணருக்காக மட்டும் ரகசியமாக தனது குருட்டு சட்டங்களை மீற முடிவெடுத்தது அந்த மருத்துவமனை. அதற்கு காரணம் உடல் உறுப்புகளை அறுவைசிகிச்சை செய்து அகற்றுவதில் அவருக்கு இருந்த அசாத்திய திறமைதான். உயர்நிலை கல்விகூட படிக்காத அந்த ஒருத்தரு இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதில் பெரிய நிபுணர்…அவர் வறுமையில் வாடியவர்.. உணவுக்கும் உடைக்கும் படிப்புக்கும் மிகுந்த துன்பப்பட்டார்…யாருங்க அவரு… ……………………………………………………தலைசுத்
(தொடரும்…..18)
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30
- கடவுள்களும் மரிக்கும் தேசம்
- அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]
- நீங்காத நினைவுகள் 12
- வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :
- விண்ணப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ?
- சிரட்டை !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 என்னைப் பற்றிய பாடல் – 27 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) ஊக்கமூட்டும் என் ஆத்மா
- புகழ் பெற்ற ஏழைகள் 17
- டௌரி தராத கௌரி …கல்யாணம்.! – 12
- உயில்
- மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்
- பொசலான்
- 65 மில்லியன் ஆண்டுகட்கு முன்னே மெக்ஸிக்கோவில் முரண்கோள் மோதிப் பிரளயம் விளைவித்தது
- திருட்டு
- காக்காய் பொன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -12 மூன்று அங்க நாடகம்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20
- நேரத்தின் காட்சி…
- ’பிறர் தர வாரா..?’
- தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு
- மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்
- இதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்
- மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…
- ஜென்
- குளம் பற்றிய குறிப்புகள்
- இருபது ரூபாய்
- மாஞ்சோலை மலைமேட்டில்…..
- காதலின் தற்கொலை