தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தில் கூட்டு மருந்து சிகிச்சை ( Multi -Drug Therapy – MDT ) முறை நடைமுறைப் படுத்தப்பட்ட காலம் அது.
உலகிலேயே அதிகமான தொழுநோயாளிகள் ஆசியாவில் இருந்தனர். இவர்களில் மிக அதிகமானோர் இந்தியாவில் இருந்தனர். இந்தியாவில் அதிகமானோர் இருந்த மாநிலம் தமிழ் நாடு. தமிழ் நாட்டில் அதிகமானோர் இருந்த மாவட்டங்கள் சிவகங்கை.மதுரை, இராமநாதபுரம்.இங்கே 1000 பேர்களில் 35 பேர்களுக்கு தொழுநோய் இருந்தது. இது உயர்ந்த நிகழ் அளவு ( high incidence rate ) எனலாம். இதை ஐந்துக்குக் கீழே கொண்டு வருவதுதான் புதிய கூட்டு மருந்து சிகிச்சை திட்டத்தின் குறிக்கோள்.
சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இத் திட்டம் சிறப்பாக நடைபெற்று வந்தது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தொழுநோய் மருத்துவ அதிகாரியின் தலைமையில் இந்த புதிய இயங்கியது.
மாதந்தோறும் அவர் ஒவ்வொரு மையத்திற்கும் வருகை புரிந்து சிகிச்சையின் முன்னேற்றத்தை மறு ஆய்வு ( review ) செய்வார்.
சிவகங்கை மாவட்டத்தின் அதிகாரி டாக்டர் செல்வராஜ். மிகவும் நல்லவர். பணியில் சிறப்பு மிக்கவர்.எனக்கு நல்ல நண்பர்.
நான் அப்போது திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையில் தொழுநோய்ப் பிரிவில் பொறுப்பு மருத்துவராகப் பணியாற்றினேன்.
மத்திய அரசின் ஆய்வு ,கல்வி ,சிகிச்சை திட்டடத்தை ( Survey, Education ,Treatment – SET Programme ) நாங்கள் அமுல்படுத்தி வந்தோம்.அதற்காக வருடந்தோறும் நான்கு இலட்சம் ரூபாய் மானியமாகப் பெற்றோம்.
இந்த திட்டத்தில் தொழுநோயாளிகளுக்கு வாழ்நாள் முழுதும் டேப்சோன் ( Dapsone ) மாத்திரை மட்டும் தரப்பட்டது.
ஆனால் நோய்க் கிருமிகள் இந்த மருந்துக்கு பழக்கப்பட்டு, எதிர்ப்பை வளர்த்துக் கொண்டதால் ,( drug resistance ) சிகிச்சை பலனின்றி, நோய் பரவியே வந்தது.
இந்த திட்டத்தில் நாங்கள் களப்பணியில் ஈடுபட்டோம். சுற்று வட்டார கிராமங்களுக்கு மருத்துவ மனை வாகனத்தில் காலையிலேயே சென்று விடுவோம் பெரும்பாலும் ஊரின் ஒதுக்குப் புறத்தில் ஒரு ஆல மரத்து நிழலில் வாகனத்தை நிறுத்தி விடுவோம். தொழுநோயாளிகள் அங்கு வந்து காத்திருப்பார்கள்.
இதற்குமுன் ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் சென்று அனைவரையும் பரிசோதித்து நோய் உள்ளவர்களை தெரிந்துகொண்டு சீட்டு தந்து விடுவார்கள் எங்கள் களப் பணியாளர்கள்.
எங்களிடம் பயிற்சி பெற்ற பத்து பேர் பணி புரிந்தனர். இவர்கள் அன்றாடம் கிராமம் கிராமமாகச் சென்று நோயாளிகளைச் சேகரிப்பார்கள். ஒரு கிராமத்தை முடித்ததும் சிகிச்சைக்கான நாள் குறிக்கப்படும். அன்று நான் அவர்களுடன் செல்வேன். அவர்கள் வரச் சொன்ன அனைவரையும் நான் பரிசோதித்து வியாதி உள்ளதை நிச்சயம் செய்தபின் அன்றே மருத்துகள் தரப்படும்
புதிய கூட்டு மருந்து சிகிச்சை முறையில் நோயை நாங்கள் வேறு கோணத்தில் அணுகினோம்.மக்களிடையே இந்த நோய் வராமல் அடியோடு ஒழிப்பதே இதன் நோக்கம்!
தொழுநோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை தொற்றும் வகை தொற்றாத வகை என்பவை.
உடலில் காணப்படும் உணர்விழந்த தேமல்களின் அளவை வைத்து இந்த இரண்டு வகைகள் பிரிக்கப்படுகின்றன.
தோலில் ஆறுக்கும் குறைவான உணர்சியற்ற வெளிறிய தேமல்கள் ( hypopigmented patches ) இருந்தால் அதை குறைந்த கிருமிகள் ( Paucibacillary ) வகை என்போம். இதுவே தொற்றாத வகை. இவர்களுடன் நெருங்கிப் பழகினாலும் நோய் தொற்றாது.
தோலில் ஆறுக்கும் அதிகமான உணர்ச்சியற்ற வெளிறிய தேமல்கள் இருந்தால் அதை அதிக கிருமிகள் ( Multibacillary ) வகை என்போம். இது தோற்றும் வகை. இவர்களுடன் நெருங்கி பழகினால் எளிதில் தொற்றும். இவர்கள் இருமினால் கிருமிகள் பரவும். இவர்களின் தோலிலும் நரம்புகளிலும் நிறைய கிருமிகள் காணப்படும். மற்றும் நுரையீரல்,மூளையைத் தவிர உடலின் அனைத்து உறுப்புக்களிலும் தொழுநோய்க் கிருமிகள் அதிகமாகக் காணப்படும்.
.இந்த புதிய திட்டத்தில் தொற்றாத வகைக்கு ஆறு மாத சிகிச்சையும் தொற்றும் வகைக்கு இரண்டு வருட சிகிச்சையும் தரப்பட்டது.
இதில் மிகவும் முக்கிய அம்சம் என்னவெனில் சிகிச்சை எங்களின் கண்காணிப்பில்தான் ( under supervision ) நடைபெறும்.
மருந்தை நோயாளிகளின் கைகளில் தந்துவிட்டால் அவர்கள் அவற்றை முறையாக தவறாமல் உட்கொள்ள மாட்டார்கள் என்பதால் எங்கள் கண்ணெதிரே மாத்திரைகள் தரப்பட்டு அவர்களை அவற்றை விழுங்க வைப்போம்.
தொற்றாத வகை நோய் உள்ளவர்களுக்கு தினமும் டேப்சோன் மாத்திரை 100 மில்லிகிராம் தரப்படும்.இதை அவர் வீட்டில் உட்கொள்ளலாம். ஆனால் மாதம் ஒரு முறை தரப்படும் ரிபாம்பிசின் 600 மில்லிகிராம் கூடு ( capsule ) மருந்தை எங்கள் முன்தான் உட்கொண்டாக வேண்டும்.இது மாதிரி இவர்களை மாதம் ஒரு முறை நான் நேரில் பார்ப்பேன். இத்தகைய சிகிச்சை முறை ஆறு மாதங்கள் தொடர்ந்தால் போதுமானது. நோயாளி பூரண குணமடைவார்.
தொற்றும் வகை நோய் உள்ளவர்களுக்கு டேப்சோன் 100 மில்லிகிராம், குளோபேசிமின் 50 மில்லிகிராம் ( Clofazimine ) தினமும் உட்கொள்ள நோயாளியிடம் தரப்படும்.மாதம் ஒருமுறை நாங்கள் இவர்களைச் சந்தித்து ரிபாம்பிசின் 600 மில்லிகிராம் , குளோபேசிமின் 300 மில்லிகிராம் நேரில் தந்து விழுங்கச் செய்வோம். இவ்வாறு இவர்களை மாதந்தோறும் இரண்டு வருடம் நாங்கள் சந்திப்போம் . அதன் பின்புதான் அவர்களுக்கு விடுதலை!
இவ்வாறு நான் களப்பணியில் ஈடுபட்டிருந்ததால் அனேகமாக எல்லா தொழுநோயளிகளையும் எனக்கு தெரியும். நான்தான் மாதந்தோறும் அவர்களப் பார்த்து நலன் விசாரிக்க வேண்டியுள்ளதே!
அப்படித் தெரிந்தவன்தான் பொசலான் . அவனுக்கு வயது பதினெட்டு. குட்டையாக கருத்த நிறத்தவன். அவனுக்கு மூக்கு சப்பையாகி, கண் புருவங்கள் உதிர்ந்துபோய், காதுகள் இரண்டும் தடித்து தொங்கின. இதை சிங்கத்தின் முக அமைப்பு ( leonine facies ) என்போம். கை விரல்கள் முடங்கி ( மடங்கி ) கால்களில் ஆழமான புண்களுடன் , உடல் முழுதும் தடித்த தேமலுடன் நோய் முற்றிய நிலையில் இருந்தான்.அவனுக்குத் தொற்றும் வகையான தொழுநோய். அவனுடைய உடலில் தொழுநோய்க் கிருமிகள் அதிகமிருந்தன.இது கிருமிகள் நிறைத்த வகை. இதற்கு தீவிர சிகிச்சை தந்தாக வேண்டும்.இல்லையேல் அவன் மூலமாக நோய் மற்றவருக்கும் பரவும்.அவனும் நடைப் பிணமாவான் !
இளம் வயதில் தாய் தந்தையை இழந்தவன். ஒரு குடிசையில் தனியாக வாழ்பவன்.அந்த வடிவிழந்த கைகளுடன் வெளிக்காட்டு வேலைகள் செய்து பிழைத்து வருபவன்.அவனைப் பார்த்தாலே கடின உழைப்பாளி போன்று தோற்றமளித்தான் .
அவனுக்கு உதவி ஒரு நல்ல வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் அமைத்துத் தர முடிவு செய்தேன்.
அவனை மருத்துவமனைக்கு வரச் சொன்னேன்.
அப்போது நான் ஆரோக்கியநாதர் ஆலயத்தின் செயலாளர்.புதிதாக ஆலயம் பெரிய அளவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.ஆலயத்தின் பின்புறம் காலியான சதுர நிலம் இருந்தது. அந்த இடத்தை தென்னந்தோப்பாக மாற்ற எண்ணம் கொண்டிருந்தேன். ஆலய வளாகத்திற்கு அதனால் அழகு கூடும்.பிற்காலத்தில் தேங்காய்கள் மூலம் ஆலயத்துக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்பதும் என் நோக்கம்.இந்த வேலைக்கு பொசலான் தகுந்தவன் என்று தோன்றியது.
காலியான இடத்தில் ஒரு மூலையில் அவனுக்கு சிறிய வீடு ஒன்றைக் கட்டி தந்தேன்.அங்கு தங்கிக்கொண்டு குழிகள் தோண்டும் பணியில் அவன் ஈடுபட்டான்.ஆலய நிதியிலிருந்து அவனுக்கு மாதம் முன்னூறு ரூபாய் ஊதியமாகத் தரப்பட்டது.நானும் எடுபிடி வேலைகளுக்கு அவனைப் பயன்படுத்தி கைச்செலவுக்கு பணம் தருவேன்.
புதிய பணியில் அவன் மும்முரமாக ஈடுபட்டான்.சற்றும் எதிர்ப்பாராத இந்த வாய்ப்பால் அவன் பெரும் மகிழ்ச்சி கொண்டான்.
நாற்பது குழிகள் தொண்டப்பட்டன.நல்ல ஜாதி தென்னங்கன்றுகளை நான் குன்னக்குடியில் வாங்கி வந்தேன். அவனும் நானும் அவற்றை நட்டோம்!
ஆலய கிணற்றில் நீர் நிறைந்திருந்தத்து. ஒரு மோட்டார் பம்ப் மூலம் நீர்ப் பாய்ச்சினோம்! நீர் பாய்வதற்கு அழகான வாய்க்கால்கள் வெட்டியிருந்தான் பொசலான் ! கட்டாந்தரையாகக் கிடந்த தரிசு நிலம் பச்சைப் பசேலென்று கொடி செடிகளால் பசுமை நிறைந்த தென்னஞ் சோலையாக மாறிவிட்டது! அதைக் காணும் போதெல்லாம் நான் அடைந்த உவகையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை!
ஐந்து ஆண்டுகள் உருண்டோடின.
நாற்பது தென்னை மரங்களும் மெல்ல மெல்ல எழுந்து வளர்ந்து இளநீரும் தேங்காயுமாகக் காய்த்துக் குலுங்கின!அந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மாலையிலும் பொசலானுடன் நான் அவை வளர்வதைக் கண்டு இரசித்தேன்..
உள்ளூர் மக்கள் , ஆலய சபையினர் , மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனைவருமே நாங்கள் உருவாக்கிய அந்த தென்னஞ் சோலையைப் பார்த்து வியந்தனர்!
இந்த ஐந்து வருடங்களில் பொசலானின் நோய்க்கு எனது நேரடிப் பார்வையில் கூட்டு மருந்து சிகிச்சை முறையாகத் தரப்பட்டு குணப்படுத்தப்பட்டான். ஆனால் தொடர்ந்து டேப்சோன் மாத்திரை மட்டும் தரப்பட்டது.அவனின் உடல் நலத்தில் மாற்றம் உண்டாகி இருபத்து மூன்று வயதுடைய இளைஞனாக வளர்ந்துவிட்டான்.
இளநீரும் தேங்காயும் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை ஆனது. ஞாயிறு தோறும் ஆலய ஆராதனைக்குப் பின் அவை ஏலம் விடப்படும்.ஆலயத்தின் வருமானமும் பெருகியது.
பொசலானின் கடின உழைப்பைப் பாராட்டும் வகையில் ஆலயத் தோட்டவேலையுடன், இரவுப் பாதுகாவலன் வேலையும் தரப்பட்டு, அவனின் சம்பளமும் உயர்த்தப்பட்டது. இரவில் ஆலயத்தின் முகப்பில் படுத்திருப்பான்.
ஞாயிறு ஆராதனைகளின் போது அவனும் ஆலயத்தின் வெளியில் மணல் பரப்பில் உட்கார்ந்து ஒலிபெருக்கியின் மூலம் அனைத்தையும் பயபக்தியுடன் கவனிப்பான்.
ஒரு நாள் மாலையில் வழக்கம்போல் எங்கள் தென்னந்தோப்பில் சந்தித்தோம்.
” ஐயா. உங்களிடம் ஒன்று சொல்லணும்.” அவன் என்னை அப்படிதான் அழைப்பது வழக்கம்.
” டேய் பொசலா . நீ என்னுடைய செல்லப் பிள்ளையடா ! உனக்கு என்ன வேண்டும் ? தாராளமாகச் சொல். ” என்றேன் .
” நீங்கள் எனக்கு கடவுள் போல் ஐயா! உயிருள்ள மட்டும் உங்களை மறக்க மாட்டேன்.நானும் உங்கள் ஆலயத்தில் சேர்ந்து கொள்கிறேன்.எனக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்.ஐயா. ” உருக்கமாகவே கேட்டான்
இத்தனை வருடங்களில் நான் இதுபற்றி அவனிடம் பேசியதேயில்லை . இது அவனாகக் கேட்டது.அவனின் ஆசையை நிறைவேற்றுவதாக அன்று உறுதியளித்தேன் .
ஒரு மாதத்தில் ஒரு ஞாயிறு அராதனையின்போது ஆலய பீடத்தின் முன் என் அருகில் அவன் நிற்க சபையாரின் சாட்சியுடன் பொசலான் ஏசுதாஸ் ஆனான்!
சில மாதங்கள் கழிந்தன.
ஒரு நாள் மாலையில் அவன் ஒரு சிறுமியைத் தூக்கி வந்தான். அந்த சிறுமி அவனிடம் ஒட்டிக்கொண்டு கையில் வைத்திருந்த பன் ரொட்டியைத் தின்று கொண்டிருந்தாள்.
” யாரடா இது? எங்கிருந்து தூக்கி வருகிறாய் ” வியந்து கேட்டேன்.
” நம்ப வார்டில இருந்துச்சு.” என்று மட்டுமே பதில் கூறினான்.
அந்த சிறுமிக்கு சுமார் நன்கு வயது இருக்கும்.
” உன் பேர் என்ன பாப்பா? ” அவளின் கன்னத்தை செல்லமாகத் தட்டிக் கேட்டேன்.
திரு திருவென்று விழித்தவண்ணம் ” லெட்சுமி ” என்று கூறினாள் .
” அம்மா எங்கே ”
” அங்கே ” மருத்துவமனையைக் காட்டினாள் .
தொழுநோய் வார்டில் இந்த குழந்தையுடன் ஓர் இளம் விதவைப் பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.அங்
மறு நாளே வார்டில் அந்த பெண்ணைப் பார்த்தேன். பெயர் ராமாயி.அவள் இளம் வயதுடையவள்.பக்கத்துக்கு கிராமத்தைச் சேர்ந்தவள்.இளம் விதவை. ஜோடிப் பொருத்தம் நிறையவே இருந்தது.அவளும் பொசலானின் அன்பு உள்ளத்தை விரும்பினாள் .
ஆலயச் செலவில் அவர்களின் திருமணம் நடந்தேறியது . ராமாயி எலிசபெத் ஆனாள் .. லெட்சுமி விக்டோரியா என்று பெயர் பெற்றாள் .பொசலானின் வாழ்வு நிறைவு பெற்றது.
அந்த சின்ன பாப்பா லெட்சுமி ( விக்டோரியா ) இன்று வளர்ந்து பெரியவளாகி விட்டாள் . அவளின் கல்விக்கு நான் உதவினேன்.இப்போது அவள் இரத்தப் பரிசோதனை பயிற்சி பெற்று தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறாள்.
சில வருடங்களுக்கு முன் நான் தமிழகம் சென்றபோது அவர்களைப் பார்த்தேன். சொந்த வீட்டில் அவர்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவது கண்டு மகிழ்ந்தேன்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது இனிய அனுபவம்!
( முடிந்தது )
”
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30
- கடவுள்களும் மரிக்கும் தேசம்
- அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]
- நீங்காத நினைவுகள் 12
- வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :
- விண்ணப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ?
- சிரட்டை !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 என்னைப் பற்றிய பாடல் – 27 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) ஊக்கமூட்டும் என் ஆத்மா
- புகழ் பெற்ற ஏழைகள் 17
- டௌரி தராத கௌரி …கல்யாணம்.! – 12
- உயில்
- மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்
- பொசலான்
- 65 மில்லியன் ஆண்டுகட்கு முன்னே மெக்ஸிக்கோவில் முரண்கோள் மோதிப் பிரளயம் விளைவித்தது
- திருட்டு
- காக்காய் பொன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -12 மூன்று அங்க நாடகம்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20
- நேரத்தின் காட்சி…
- ’பிறர் தர வாரா..?’
- தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு
- மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்
- இதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்
- மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…
- ஜென்
- குளம் பற்றிய குறிப்புகள்
- இருபது ரூபாய்
- மாஞ்சோலை மலைமேட்டில்…..
- காதலின் தற்கொலை