குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20
ஜோதிர்லதா கிரிஜா
கல்லூரியில் தங்களால் இயன்ற அளவுக்கு டிக்கெட்டுகளை விற்ற பிறகு, எஞ்சியவற்றை வெளியே சென்று விற்க ராதிகாவும் பத்மஜாவும் முடிவு செய்தார்கள். அவை பெரும்பாலும் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் டிக்கெட்டுகள்.
அடையாற்றில், ஒரு பெரிய பங்களாவின் சுற்றுச் சுவர் வாசலருகே அவர்கள் சென்ற நேரத்தில் அதிலிருந்து யமஹா பைக்கில் ஓர் இளைஞன் வெளிப்பட்டான். அவர்களைப் பார்த்ததும் வண்டியை நிறுத்திய அவன், “யெஸ்?” என்றான். இருவரையும் நோக்கிப் பொதுவாய் இவ்வாறு வினவிய பின், அவனது கூறிய பார்வை ராதிகாவின் மீது ஆழமாய்ப் பதிந்தது.
“ஒரு அநாதை விடுதிக்காக டொனேஷன் டிக்கெட்ஸ் விக்கணும். உங்க பங்களாவைப் பார்த்ததும் ஆயிரம் ரூபாய் டிக்கெட்டா யிருந்தாலும் தயங்காம வாங்கிப்பீங்கன்னு ஒரு நம்பிக்கை. அதான் – உள்ளே போகலாமான்னு தயங்கினப்ப நீங்க் வெளியே வந்தீங்க…” – சொன்னது பத்மஜாதான்.
தன் வெண்மையான வரிசைப் பற்கள் பளீரென்று வெளித் தெரிய, அந்த இளைஞன் சத்தமாய்ச் சிரித்தான்: “வாங்க, வாங்க. உள்ளே வாங்க…”
“நீங்க எங்கேயோ வெளியே கெளம்பிட்டு இருந்தீங்க போல இருக்கே?” என்றாள் ராதிகா.
“அதெல்லாம் இப்ப அவ்வளவு முக்கியமில்லே. ரெண்டு அழகான பொண்ணுங்க வீடு தேடி வந்திருக்கிறப்ப, அவங்களைக் கவனிக்கிறதை விட வேற என்ன வேலை என்னை மாதிரி பேசிலர்களுக்கு இருக்க முடியும்? சொல்லுங்க!… தப்பா எடுத்துக்க வேண்டாம். நான் கொஞ்சம் ஜோவியல் டைப். வாங்க, வாங்க. வீட்டில எங்கம்மா, எங்கக்கா எல்லாரும் இருக்காங்க. அவங்க பசங்கல்லாம் இருக்குதுங்க. அதனால பயப்படாம உள்ளே வாங்க….” என்ற அவன் பைக்கிலிருந்து இறங்கி அதை உள்ளே உருட்டிக்கொண்டு செல்ல, இருவரும் சற்றே யோசனையுடன் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.
சமையற்கட்டிலிருந்து வந்த இரண்டு பெண்மணிகளின் பேச்சிலிருந்தும், கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்-சிறுமியரின் கூக்குரலிலிருந்தும் அவன் சொன்னது உண்மைதான் என்பதைத் தெரிந்து கொண்டு சிரிப்புடன் இருவரும் உள்ளே போனார்கள்.
சோபாவில் அவர்களை உட்காரப் பணித்த பின் அவன் உள்ளே போனான.
“யாரு வந்திருக்காங்க், ராகேஷ்?”
“ஏதோ சமூக சேவை விடுதியிலேர்ந்து வந்திருக்காங்க,” என்று சுருக்கமாய்ப் பதிலிறுத்துவிட்டு அவன் கூடத்துக்கு வந்து அவர்கள் முன்னால் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான்.
“எத்தினி டிக்கெட்ஸ் வெச்சிருக்கீங்க? என்ன டினாமினேஷன்?”
“அம்பது ரூபாயில இருபது, நூறு ரூபாயில இருபது…”
“உங்க பேரெல்லாம் என்ன? ஐம் ராகேஷ்…”
“நான் ராதிகா; இவ பத்மஜா…நாங்க ஸ்டெல்லா மாரிஸ் காலேஜ்ல படிச்சுட்டு இருக்கோம். நீங்க?”
“நான் எக்செலெண்ட் இம்ப்போர்ட்டர்ஸ் கம்பெனியில பார்ட்னர். எங்க கம்பெனி அம்பத்தூர்ல இருக்கு. கேள்விப்பட்டதுண்டா? அடிக்கடி அட்வெர்டைஸ் பண்ணுவோம்!”
“தெரியுமே….” என்ற பத்மஜா, ‘எக்செலெண்ட், எக்செலெண்ட், எங்கள் பணிகள் எக்செலெண்ட்…’ என்று விரல் சொடுக்கித் தாளம் போட்டு அந்த விளம்பரப் பாடலைப் பாடியே காட்ட, ராகேஷ் கை தட்டி மகிழ்ந்தான்.
ராதிகா சிரிப்பை யடக்கிக்கொண்டாள்.
“சரி. நான் மொத்தம் எவ்வளவு கொடுக்கணும்?.. நான் கணக்குல கொஞ்சம் வீக். நீங்களே சொல்லிடுங்க…”
“என்ன டினாமினேஷன்ல எத்தனை டிக்கெட் எடுக்கப் போறீங்கன்னு சொல்லுங்க.”
“உங்ககிட்ட மீதிருக்கிற எல்லா டிக்கெட்ஸையும் வாங்கிக்கிறேன்…’
“என்னது! எல்லாத்தையுமா!” – “மெய்யாலுமா!” என்று இருவரும் ஒருசேர வியந்தார்கள்.
“ஆமா.”
“அம்பதுல இருபது, நூறுல இருபது. ஆக மொத்தம் மூவாயிரமில்ல ஆகுது!”
“அது முப்பதாயிரமாவே இருக்கட்டுமே. இருங்க வர்றேன். ஒரே நிமிஷம்! …” என்று அங்கிருந்த அறையினுள்ளே சென்ற அவன் முப்பது நூறு ரூபாய் நோட்டுகளுடன் திரும்பி வந்தான். ராதிகா நன்றி கூறிப் பணத்தைப் பெற்றுக்கொண்டு இரண்டு டிக்கெட் புத்தகங்களையும் அவனிடம் கொடுத்தாள்.
“உங்க வீட்டில திட்ட மாட்டாங்களா?” என்று பத்மஜா வினவ, “அவங்க திட்டுவாங்கதான். நாம ஒரு நல்ல காரியம் பண்ணும்போது, மத்தவங்க திட்டுறதையெல்லாம் காதுலயே போட்டுக்கக் கூடாது….. சரி… நான் கெளம்பணும். ஏற்கெனவே லேட்டாயிடிச்சு… பை!” என்று அவன் எழ, அவர்களும் மீண்டும் நன்றி கூறி எழுந்தார்கள்.
ராகேஷ் பைக்கில் கிளம்பியதைப் பார்த்த பின் இருவரும் வெளியேறினார்கள். வழியில் இருவரும் சிறிது நேரம் போல் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மிகுந்த வியப்பில் ஆழ்ந்திருந்தார்கள். பத்மஜாவை விடுத்து ராகேஷ் தன்னுடனேயே பேசிக்கொண்டிருநத்தால் ராதிகா கூச்சமுற்றிருந்ததும் அவளது மவுனத்துக்கு மேலும் ஒரு காரணம்.
சற்றுப் பொறுத்து, “அந்த ராகேஷுக்கு ரொம்பவே தாராளமான மனசு!” என்று பத்மஜா புகழ்ந்தாள்.
பத்மஜா இப்படிப் புகழ்ந்த போதிலும், ராகேஷைப் பற்றிய அவளது முழுக் கருத்தையும் அறியும் பொருட்டு, ராதிகா, “சில ஆம்பளைங்க நம்மள மாதிரிப் பொண்ணுங்களைப் பாத்தா வழிவாங்க. ஒருக்கா அந்த ரகமாயிருக்கும்!” என்றாள்.
“கிடையவே கிடையாது. அவனைப் பாத்தா அப்படித் தெரியல்லேடி, ராதிகா.”
“உங்கிட்ட நல்ல செர்ட்டிஃபிகேட் வாங்கற ஆம்பளை நல்லவனாத்தான் இருப்பான்!”
…அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால், வழியில் ஓர் ஓட்டலில் காப்பி மட்டும் குடித்துவிட்டு, இருவரும் தத்தம் வீடு நோக்கிப் பயணித்தார்கள்.
வழியெல்லாம் ராதிகாவுக்கு ராகேஷின் நினைப்பாகவே இருந்தது. ‘எவ்வளவு தாராளமான மனசு அவனுக்குத்தான்! அப்படியே சொளையா மூவாயிரம் ரூபாயைத் தூக்கிக் குடுத்துட்டானே – கொஞ்சங்கூடத் தயங்காம! ஒரு பொது நலத்துக்காக் உடனே பெரிய தொகையைத் தூக்கிக் குடுக்கணும்னா அவன் சமுதாய உணர்வு உள்ளவனாத்தான் இருக்கணும்….வீட்டுக்குப் போனதும் அப்பா கிட்ட சொல்லணும்…..’
… அவள் வீட்டை யடைந்த போது முற்பகல் மணி பதினொன்று ஆயிற்று. தமது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தீனதயாளன் அன்றைய நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தார்.
“என்னம்மா? எல்லா டிக்கெட்டும் வித்திடிச்சா? திரும்புறதுக்கு மூணி மணியாச்சும் ஆகும்னு சொல்லிட்டுப் போனியே?”
“ராகேஷ்னு ஒரு ஆளுப்பா. இத்தனைக்கும் சின்னவர்தான். எங்ககிட்ட இருந்த அம்பது ரூவா டிக்கெட், நூறு ரூவா டிக்கெட்டுங்க எல்லாத்தையும் தானே வாங்கிட்டு மூவாயிரம் ரூவா குடுத்துட்டாருப்பா. அதனால நாங்க அலைய வேண்டிய வேலையே இல்லாம போயிடிச்சு!”
“அட!”
“பணம் நிறைய இருந்துட்டாப்ல ஆச்சாப்பா? குடுக்கிறதுக்கும் ஒரு மனசு வேணுமில்ல? அந்த மனசு சிலரு கிட்டதாம்ப்பா இருக்கு!”
“கரெக்ட்!’ என்ற தீனதயாளன் மகளைக் கொஞ்சம் தீவிரமாய்க் கவனித்தார். அவள் முகத்தில் ஒரு புது மலர்ச்சி ஏற்பட்டிருந்ததாய் அவருக்குத் தோன்றியது. ‘அந்தப் பையன் ராகேஷைச் சந்திச்சது ஒருக்கா அதுக்குக் காரணமா யிருக்குமோ? மூவாயிரம் ரூபாயை உடனே தூக்கிக் குடுத்து ஒத்தை ஆளாக அத்தனை டிக்கெட்டுகளையும் வாங்கிட்ட தாராள குணத்தைப் பாத்து இவ மயங்கிட்டாளோ!… அந்தப் பையனுக்குக் கல்யாணம் ஆகி யிருக்குமா? விசாரிக்கணும். சின்னவன்னு சொன்ன்னாளே?’ – ராதிகா சாதாரணமாக யாரையும் புகழ்ந்து பேசி அவர் கேட்டதில்லை. இதனால் அவருக்குக் கொஞ்சம் நம்பிக்கை உண்டாயிற்று.
ராதிகா வாய்க்குள் ஒரு பாட்டை முனகிக்கொண்டே தன்னறைக்குள் நுழைந்தது கண்டு அவருள் பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவளிடம் இருந்து வந்த இறுக்கம் சற்றே தளர்ந்திருந்ததாய்த் தோன்றியதில் அவருக்கும் விசிலடித்துப் பாட வேண்டும் போல் இருந்தது.
தன்னறையை அடைந்து சாதாரண வீட்டு உடைக்கு மாறிய நேரத்தில் கூட, ராகேஷ் பற்றிய ஞாபகம்தான் ராதிகாவின் நெஞ்சு முழுக்க நிறைந்திருந்தது. ‘ஓர் அநாதை விடுதிக்கு மூவாயிரம் ரூபாயை உடனே தூக்கிக் கொடுக்க ஒருவருக்கு மிகப் பெரிய மனமும் நல்ல குணமும் இருக்க வேண்டும்…. அவன் நல்லவனாக இருந்தாலென்ன, கெட்டவனாக இருந்தாலென்ன? இதென்ன வீண் ஆராய்ச்சி? அவன் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கென்ன வந்தது? … ஆனால் இது நாள் வரை நான் எந்த ஆண்பிள்ளையைப் பற்றியும் இப்படி யெல்லாம் யோசித்ததே இல்லையே! என் மனம் ஏன் அவனையே சுற்றிச் சுற்றி வருகிறது? அப்படியானால் … அப்படியானால், விந்தையான இந்தச் சிந்தனைக்கு என்ன காரணம்? ராகேஷ் என் மனத்தைக் கவர்ந்து விட்டான் என்பதா? …. சேச்சே… நான் ஏன் இப்படி யெல்லாம் நினைக்கிறேன்? கண்டதும் காதலா! … ஏன் வரக் கூடாது? கண்டதுமே ஒருவரைப் பிடித்துப் போய் அதன் விளைவாக ஆத்மார்த்த நட்பு இரண்டு பேர்க்கிடையே மலர்ந்து விடும் போது, காதல் மட்டும் வராதா! காதலும் ஓர் உணர்வுதானே? அது மட்டும் ஏனைய உணர்வுகளிலிருந்து வித்தியாசப்படும் அடிப்படையில் எழுமா என்ன! இன்னதென்று புரியாத காரணத்தால் எனக்கு அவனைப் பிடித்துவிட்டது. … இல்லை, இல்லை. புரியாத காரணம் என்று நான் ஏன் நினைக்கிறேன்? புரிந்த காரணம்தான். அதாவது அவனது கொடைக்குணம், உதவ நினைக்கும் பண்பு. இது எல்லாருக்கும் இருக்குமா என்ன! சமுதாயப் பிரக்ஞை உள்ளவர்களுக்குத்தான் பெருந்தொகையைக் கொடுக்க மனசு வரும்.’
உடை மாற்றிக்கொண்ட பின் ராதிகா நேரே சமையற்கட்டுக்குப் போனாள்.
“அம்மா!”
“வாடி! … சாப்பிடலாமா? உங்கப்பாவைக் கூப்பிடு. தட்டுகளை எடுத்து மேசை மேல வை. நான் பதார்த்தங்களை யெல்லாம் எடுத்துக்கிட்டு வர்றேன்…”
“சரிம்மா,” என்ற ராதிகாவின் உதடுகள் சன்னமாய் ஒரு பாட்டை முனகியது கேட்டு தனலட்சுமிக்கு வியப்பாக இருந்தது: “என்னடி, பாட்டெல்லாம் பலமா யிருக்கு? எல்லா டிக்கெட்டும் வித்துப்போட்ட சந்தோசமா?”
“ஆமா. அதே தான்.”
“நீ அப்பா கிட்ட சொன்னது காதில விழுந்திச்சு. மொத்த டிக்கெட்டுகளையும் உங்கிட்டேருந்து வாங்கினானே, அவனுக்கு எத்தினி வயசு இருக்கும்?”
“ஒரு இருபத்தாறு – இருபத்தெட்டு வயசு போல இருக்கும். ஏம்மா?”
“சும்மாத்தாண்டி. அது சரி, கல்யாணம் ஆனவனா, இல்லாட்டி ஆகாதவனா?”
“ஒண்ணு வேணாப் பண்ணட்டுமா? இப்பவே போயி, உன்னோட கேள்விக்குப் பதிலைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு வர்றேன்….”
மகளின் குரலில் குறும்பு ததும்பினாலும், அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டிருந்ததைக் கவனிக்கத் தனலட்சுமி தவறவில்லை. “கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு வந்து சொன்னியானா – கல்யாணம் ஆகாத பிள்ளையாண்டானா யிருந்தா – வெரசா விசயத்தை முடிக்கலாம்!“ – ஓரத்து விழிகளால் ஏறிட்ட போது, மகளின் முகம் சிவந்திருந்ததையும் அவள் கவனித்தாள்.
“சீச்சீ! என்னங்கம்மா இது! என்னென்னமோ சொல்லிக்கிட்டு!” என்று சொல்லிவிட்டு ராதிகா முகத்தைத் திருப்பிக்கொண்டு நகர்ந்தது அர்த்தமுள்ள செயலாகவும் அவளுக்குப் பட்டது.
மசளைத் தொடர்ந்து விரைவாய்க் கூடத்துக்கு வந்த தனலட்சுமி, “என்னாங்க! மொத்த டிக்கெட்டுகளையும் வாங்கிக்கிட்டானாமே, அந்தப் பிள்ளையாண்டானை நம்ம ராதிகாவுக்குப் பாக்கலாங்க – அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகாம இருந்தா!” என்றாள்.
“எனக்கே அப்படித்தான் தோணிச்சு. நீ சொல்லிட்டே! விசாரிக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதை யெல்லாம் நானும் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.”
இதற்குள் ராதிகா தன்னறைக்குச் சென்று விட்டிருந்தாலும், இருவரது உரையாடலும் அவள் செவிகளுள் தேனாய்ப் பாய்ந்தது. கட்டிலில் படுத்துக்கொண்டு கையில் ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டாலும், அவள் மனம் மீண்டும் ஒரு சுய அலசலில் ஈடுபட்டது: ‘இதற்கு முன்னால் நான் யாரைப் பற்றியாவது, ‘இந்த ஆள் நல்லவனாய்த் தெரிகிறான்’ என்று நினைத்திருக்கிறேனா?… இல்லை…’ ‘இவன் அழகானவன்’ என்று நினைத்து அவனை மனக்கண்ணால் பார்த்திருக்கிறேனா? … இல்லை… ‘இவனுக்கு ரொம்ப நல்ல மனம் என்று தோன்றுகிறது’ என்று எவனைப் பற்றியாவது கணித்திருக்கிறேனா? … இல்லை … அம்மாவோ அப்பாவோ கல்யாணப் பேச்சை எடுத்த போது வெட்கப்பட்டதுண்டா? …. இல்லை … வேறு எவனைப்பற்றியேனும் அம்மா சொன்னபோதெல்லாம் முகக் கடுப்புக் காட்டியுள்ள நான், இப்போது மட்டும் எரிச்சலடையாதது ஏன்? … இந்தக் கேள்விகளுக்குத்தான் விடைகள் தெரிய வேண்டும்…. இதில் தெரிவதற்கு என்ன இருக்கிறதாம்? ராகேஷ் என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டான் என்பதுதான் இவற்றுக்குச் சரியான ஒரே விடை! விந்தைதான்! காதல் இவ்வளவு விரைவுடன் திடுதிப்பென்று ’திடீர் இட்லி’, ‘திடீர் சாம்பார்’ மாதிரியெல்லாம் ஒரு பெண்ணின் உள்ளத்தில் மலர்ந்து விடுமா! … ஆனால், மலர்ந்து விட்டதே! ‘கண்டதும் காதல்’ என்பதையே நான் ஒப்புக்கொள்ளாமல் சில எழுத்தாளர்களை எவ்வளவு கேலி செய்திருக்கிறேன்! எனக்கே இப்படி ஒரு நிலையா! நம்பவே முடியவில்லையே! படிப்பே ஓடவில்லையே! படித்தாலும் ஒரு வரி கூட மனத்தில் பதிய மாட்டேனென்கிறதே! மறுபடி மறுபடி அந்த ராகேஷின் முகம்தானே மனக்கண் முன் தோன்றியவண்ணம் இருக்கிறது! இதென்ன மாயம்! முன் பின் அறிமுகமற்ற அந்த இளைஞன் என் உள்ளத்தில் இடம் பெற்று விட்டது தெரிய வந்தால் பத்மஜா கேலி மேல் கேலி செய்து என்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாளே!….’ – இப்படி யெல்லாம் ஒரு கதாபாத்திரம் தன்னைத் தானே கேள்வி மேல் கேள்விகளாய்க் கேட்டுக்கொள்ளுவது போல் கற்பனைக் கதையில் படிக்க நேரும் போது, அவளுக்குச் சிரிப்பு வரும் – இத்தனை கேள்விகளா என்று. ஆனால், இப்போது தன்னைத் தானே இத்தனை கேள்விகள் கேட்டுக்கொள்ளுவதை நினைத்துப் பார்த்ததில் அவளது சிரிப்பு அதிகமாயிற்று.
அழைப்பு மணி அப்போது வீறிட, ராதிகா எழுந்து வெளியே வந்தாள். தீனதயாளனும் தமது சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து வந்தார். ராதிகா முன்னும் அவர் பின்னுமாகக் கதவை அணுகினார்கள். ராதிகாதான் கதவைத் திறந்தாள். வெளியே சிந்தியா நின்றுகொண்டிருந்தாள். தீனதயாளனின் காலடியோசை பின்புறம் கேட்டதால், கதவுக்கு அப்பால் நின்றுகொண்டிருந்த சிந்தியாவைப் பார்க்கும் போது அவரது முகம் எப்படி மாறும் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் ராதிகா தன்னையும் அறியாது பின்னால் திரும்பினாள். ஆனால், அந்தக் கணப் பொழுதுள் இருவரும் ஒருவரை நோக்கி யொருவர் ஜாடை செய்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்றும் உடனே ஊகித்தாள். ஏனெனில் இருவர் கண்களிலும் எந்த எதிரொலியும் இல்லை!.
விழிகளை விரித்த சிந்தியா, “அட! நீயாம்மா! வாட் எ சர்ப்ரைஸ்!” என்றாள் இரைந்த குரலில்.
தொடரும்
jothigirija@live.com
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30
- கடவுள்களும் மரிக்கும் தேசம்
- அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]
- நீங்காத நினைவுகள் 12
- வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :
- விண்ணப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ?
- சிரட்டை !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 என்னைப் பற்றிய பாடல் – 27 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) ஊக்கமூட்டும் என் ஆத்மா
- புகழ் பெற்ற ஏழைகள் 17
- டௌரி தராத கௌரி …கல்யாணம்.! – 12
- உயில்
- மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்
- பொசலான்
- 65 மில்லியன் ஆண்டுகட்கு முன்னே மெக்ஸிக்கோவில் முரண்கோள் மோதிப் பிரளயம் விளைவித்தது
- திருட்டு
- காக்காய் பொன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -12 மூன்று அங்க நாடகம்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20
- நேரத்தின் காட்சி…
- ’பிறர் தர வாரா..?’
- தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு
- மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்
- இதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்
- மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…
- ஜென்
- குளம் பற்றிய குறிப்புகள்
- இருபது ரூபாய்
- மாஞ்சோலை மலைமேட்டில்…..
- காதலின் தற்கொலை