ஜோதிர்லதா கிரிஜா
புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாயிபாபா அவர்களைப் பற்றி நான் சொல்லப் போவதை உங்களில் எத்தனை பேர் நம்புவீர்களோ, அல்லது நான் பொய்களைப் புனைந்துரைப்பதாய் நினைத்து என் மீது ஐயுறுவீர்களோ, தெரியாது! எனினும், யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, இந்தக் கட்டுரையில் உள்ளவை யாவும் உண்மைகளே என்று என் எழுதுகோலின் மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். இதற்குப் பிறகும் சந்தேகப் படுபவர்களைப் பற்றிக் கவலைப் படப் போவதில்லை!
மிகச் சிறிய வயதில் சத்திய சாயி பாபா அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஷிர்டி சாயி பாபா அவர்களைப் பற்றித்தான் தெரிந்திருந்தது. அது கூட, ஷிர்டி என்னும் ஊரின் பெயர் இன்றி, வெறும் ‘சாயிபாபா’ என்பது மட்டுமே தெரிந்திருந்தது. எங்கள் ஊரின் அக்கிரகாரத் தெரு ஒன்றில் ஓர் அம்மாள் பஜனை மடம் நடத்தி வந்தார். ஷிர்டி சாயிபாபா பிரபலம் அடையத் தொடங்கிய காலகட்டத்தில் வியாழக்கிழமை தோறும் அவர் சாயிபாபா பஜனையைத் தொடங்கினார். எல்லாச் சிறுவர் சிறுமியருடனும் நானும் பஜனைக்குப் போவேன். வெள்ளியில் அமைந்த சாயிபாபாவின் சிறு தொங்கட்டான் ஒன்றை நானும் நான்கணாவுக்கு வாங்கிப் பவளமாலையில் கோத்துக்கொண்டேன்.
கொஞ்ச நாள்கள் கழித்து, புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாயி பாபா அவர்களைப் பற்றிய செய்திகள் அடிபடத் தொடங்கின. அவர் கண்ணனின் அவதாரம் என்கிற வதந்தியோடு, அவரைப் பற்றிய அவதூறுகளும் செவிகளில் விழுந்தன.
பாபாவின் மிகச் சிறு வயதுப் புகைப்படத்துடன் நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவரின் புகைப்படமும் அச்சாகியிருந்த ஒரு பத்திரிகைச் செய்தியைக்காண வாய்த்தது. பலசரக்குக் கடையில் ஏதோ சாமான் வாங்கிய பொட்டலத்தைப் பிரித்த துண்டுக் காகிதம் அது. அந்தப் படத்தில் பாபா ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பார். அவருக்குப் பின்னாலோ, அருகிலோ அந்த அம்மையார் நின்றுகொனண்டிருப்பார். தாயும் மகனும் போன்ற – அல்லது அக்காளும் தம்பியும் போன்ற – வயதினரான இருவரையும் இணைத்து ஓர் அவதூற்றுச் செய்தி அதன் கீழே அச்சாகியிருந்தது. அதிக விவரம் தெரியாத வயதாயினும், அது கெட்ட செய்தி என்பது மட்டும் ஓரளவுக்குப் புரிந்தது. மனம் அருவருப்படைந்தது. ‘’சீ” என்று முணுமுணுக்கத் தோன்றியது.
ஆனால் அந்தப் பெண்மணி சத்திய சாயிபாபாவைக் கண்ணனின் அவதாரம் என்று நம்பிய பக்தை என்பதும், பாபாவைக் காண வரும் பிற அடியார்களுக்குத் தம் இல்லத்தில் உணவு அளித்து உபசரித்து மகிழ்ந்தவர் என்பதும் பின்னாளில் பாபாவின் வரலாற்றைப் படித்தபோது தெரியவந்தது. (விவேகானந்தரைப்பற்றியே அவதூறு பேசும் இயல்பைக்கொண்ட பொழுது போகாத பொம்முகள் நிறைந்த நாடாயிற்றே இதுதான்! பாபாவைப் பற்றி வம்பு வளர்க்கக் கேட்பானேன்!)
எனினும், விவரமில்லாத வயது ஆதலால், பாபாவைப் பிடிக்காமல் போயிற்று. அதன் பின் பாபாவைப் பற்றிய ஞாபகமே இல்லாதும் போயிற்று என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால், பல ஆண்டுகள் சென்ற பின், சென்னையில் தபால்–தந்தி இலாகாவின் தலைமை அலுவலகத்தில் பணியில் சேர்ந்த பிறகு ஒரு நாள் பாபாவைப் பற்றிய சேதி காதில் விழுந்தது. எங்கள் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் உறவினர் வீட்டில் அவரின் குடும்பத்தார் தங்கள் வழிபாட்டு அறையில் வைத்துத் தொழுது கொண்டிருந்த சத்திய சாயி பாபாவின் படத்திலிருந்து திருநீற்றுத் துகள்கள் உற்பத்தியாகி உதிர்ந்துகொண்டே இருப்பதாக அவள் சொன்னதும் எங்கள் அலுவலகத் தோழியர் சிலர் இராயபுரத்தில் இருந்த அவர் வீட்டுக்குச் சென்றார்கள். நானும் அவர்களுடன் சென்றேன். எதைப் பற்றியுமே சிறிதளவேனும் கூடத் தெரிந்துகொள்ளாது அதைக் கண்மூடித்தனமாக ஏற்பதும் தவறு, நிராகரிப்பதும் தவறு என்கிற கொள்கையின் விளைவே அந்தப் பயணம்.
அந்தப் பெண் சொன்னது உண்மைதான் என்பது கண்கூடாய்த் தெரிந்தது. பாபாவின் படத்திலிருந்து விபூதித் துகள்கள் இடைவிடாது உதிர்ந்துகொண்டே இருந்தன.படத்தின் முன்னால் விழுந்து குவிந்தவண்ணம் இருந்ததிருநீற்றை அவ்வீட்டின் அம்மையார் அள்ளி அள்ளி வந்தவர்களுக் கெல்லாம்விநியோகம் செய்தார். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல் திருநீறு கொட்டியவாறே இருந்தது. எனினும் இதனால் பாபாவின் மீது பெரிய நம்பிக்கை ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. மந்திரவாதச் செயல் போல் தான் தோன்றியதே ஒழிய அதில் தெய்விகம் எதுவும் இருந்ததாய் நினைக்கவில்லை. மாங்கொட்டையைத் தெரு மண்ணில் குழி தோண்டி விதைத்து அதை ஒரு கூடையால் மூடிய பின் சில நிமிடங்களில் கூடையை அகற்றியதும் அங்கே ஒரு மாஞ்செடி முளைத்திருப்பதைக் காட்டும் செப்படி வித்தைக்காரரின் செயல்தான் நினைவுக்கு வந்தது. மொத்த்தில் பாபாவின் மீது எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை.
என் தோழி அனசூயா தேவி பாபாவின் பக்தை. அவளும் அங்கு வந்திருந்தாள். கருத்துக் கேட்ட போது நான் அசுவாரசியமாய்ச் சூள் கொட்டிவிட்டு மாங்கன்று விஷயம் பற்றிச் சொல்லிச் சிரித்தேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை.
சில நாள் கழித்து, ஒவ்வோர் இரவும் படுக்கப் போகும் முன் ஏதோ ஒரு மாத்திரையைச் சாப்பிட்டே ஆகவேண்டிய இதய நோயாளியான அவள் என்னிடம் ஒரு சேதியைச் சொன்னாள்: நேற்றைக்கு முன் தினம் மாத்திரை தீர்ந்துவிட்டது. வாங்கிவைக்கும்படி என் அப்பாவிடம் சொல்ல மறந்துவிட்டேன். நேற்று ஏதோ படித்துக்கொண்டிருந்ததில் படுக்கப் போகும் போது மணி பதினொன்று ஆகிவிட்டது. அருகில் மருந்துக் கடை எதுவும் இல்லை. தவிர அந்த நேரத்தில் யார் கடையைத் திறந்து வைத்திருப்பார்கள்? ஆனால் அந்த மாத்திரையைச் சாப்பிடாவிட்டால் எனக்கு நெஞ்சு வலி வந்து விடும். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போய் பாபாவின் படத்துக்கு முன் நின்று அங்கலாய்த்தேன். பிறகு சமையல் கட்டுக்குப் போய்த் தண்ணீர் குடித்துவிட்டு வந்து விளக்கை அணைக்கப் போனபோது பாபாவின் படம் இருந்த பீடத்தில் ஒரு மாத்திரை இருந்தது. எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்! ஏன் தெரியுமா? அன்று காலையில்தான் பாபாவின் பீடத்தைத் துடைத்துத் துப்புரவு செய்திருந்தேன் …நீ நம்பவில்லைதானே?”
நான் நம்பவில்லைதான். அவள் பொய் சொன்னதாக நினைக்கவில்லை. அது ஏற்கெனவே அங்கே விழுந்திருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவள் மனம் புண்படும் என்பதால் அதைச் சொல்லவில்லை.
“இவள் புளுகுகிறாள் என்று மனசுக்குள் சிரிக்கிறாய்தானே? அல்லது கவனக் குறைவால் தப்புக் கணக்குப் போடுகிறாள் என்றாவது நிச்சயம் நினைப்பாய்!” என்று என் தோழி சிரித்தாள்.
“சேச்சே! அது உனது நம்பிக்கை. அதை விமர்சிக்க நான் யார்?” என்று பட்டுக்கொள்ளாது பதில் சொன்னேன். உண்மையில் அவளைக் கேலி செய்து மனத்துள் சிரிக்காவிட்டாலும், ஏற்கெனவே தவறி பாபா படத்துக்கு முன் விழுந்திருந்த மாத்திரையை அவரே தனக்காக வரவழைத்து உதவியதாய் அவள் நம்பியது ஏற்புடையதாக இல்லை. தற்செயல் நிகழ்வுகளுக்கெல்லாம் கடவுளருள் எனும் சாயத்தைப் பூசி இப்படித்தான் நம்மில் பலர் மூடர்களாக இருக்கிறோம் என்று மட்டும் நினைத்துக்கொண்டேன்.
நாள்கள் நகர்ந்தன. சத்திய சாயி பாபா எனது நினைப்பிலிருந்து மறைந்தே போனார் என்றே சொல்லிவிடலாம்.
1992 ஆம் ஆண்டில், டிசம்பர் மாதத் தொடக்கத்தில் என் தோழி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவ்வப்போது வந்து ஒரு வாரம் போல் எங்கள் வீட்டில் தங்கிச் செல்லும் வழக்கம் உள்ளவர். என்னை விட மூத்தவர். வந்த மறு நாளே, தாம் புட்டபர்த்திக்குப் போய் பாபாவைத் தரிசிக்க விரும்புவதாகக் கூறி, தம்மோடு துணைக்கு வர முடியுமா என்று கேட்டார். சம்மதித்தேன். என் தங்கையும் எங்களுடன் புறப்படத் தயாரானாள். கிளம்பினோம்.
ஒரு சிறு வீட்டை அமர்த்திக்கொண்டு புட்டபர்த்தியில் மூன்று நாள்கள் தங்கினோம். மூன்று நாள்களிலும் பாபாவின் தரிசனம் நிறையவே கிடைத்தது. பாபா பக்தர்களிடையே வலம் வந்த போது, பலர் அவரிடம் தங்கள் வேண்டுதல் மனுக்களை நீட்டினார்கள். சிலரிடமிருந்து மட்டும் அவற்றை அவர் கை நீட்டிப் பெற்றுக்கொண்டார். வெற்றி பெறாத மக்கள் மறு நாளுக்குக் காத்திருக்க முற்பட்டார்கள்.
கூட்டமான கூட்டம்! லட்சக் கணக்கான மக்கள் குழுமி யிருந்த இடத்தில் ஒருவர் பெருமூச்சு விட்டால் கூடக் காதில் விழும் அளவுக்கு அந்தப் பெரிய வளாகத்தில் அமைதி நிலவியது. நம் இந்துக் கோவில்களில் இருக்கும் இரைச்சலும், சளசளப்பும் கடுகளவும் அங்கே இல்லை. நம் நாட்டின் அதே மக்களா இவ்வளவு கட்டுப்பாட்டுடன் இங்கே அமைதியாக இருக்கிறார்கள் எனும் வியப்பு ஏற்பட்டது. அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் அரிய ஆன்ம சக்தி இருந்தாலல்லாது இது சாத்தியமாகுமா எனும் கேள்வி முதன் முறையாக என் மனத்தில் எழுந்தது. (ஆனால் அதற்காக நான் எனது அவநம்பிக்கையினின்று மீண்டுவிடவில்லை. இதுவும் ஒரு மந்திர சக்தியின் விளைவாக இருக்கலாம் என்று அடுத்த கணமே என் (குரங்கு) மனம் நினைத்தது.)
பாபாவைப் பற்றி ஜெர்மானியர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த நூல் ஒன்றை வாங்கினேன். அன்பான பார்வையாலும், அழகான சிரிப்பாலும் எவரையும் கவர்ந்து விடும் பாபாவின் புகைப்படங்கள் சிலவும் வாங்கினேன்.
புட்டபர்த்தியிலிருந்து நாங்கள் புறப்பட இருந்த நாளில் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட செய்தி வந்தது. எனவே மேலும் ஒரு நாள் தங்கிவிட்டுக் கலவரம் நிகழக்கூடிய அபாயம் இருந்த வழித்தடத்தைத் தவிர்த்து, பங்களூர் வழியாகச் சென்னைக்குப் பயணமானோம்.
சென்னைக்குத் திரும்பிய பின், என் அம்மாவின் விருப்பம் போல் நின்றுகொண்டு ஆசிவழங்கும் தோற்றத்தில் பாபா இருந்த நாள்காட்டியைக் கூடத்தில் மாட்டிவைத்தேன். எனினும் புட்டபர்த்தி விஜயம் என்னுள் குறிப்பிடத்தக்க மாற்றம் எதையும் விளைவிக்கவில்லை.
இதன் பின் ஒரு வாரம் கழித்து ஓர் இரவில் என் அறையைத் துப்புரவு செய்தேன். மேசை மீதிருந்த தமிழ்த் தட்டெழுத்துப் பொறியைக் கொண்டு போய்க் கூடத்தில் இருந்த மேசை மீது வைத்து விட்டு, எனது அறைக்குத் திரும்பி வந்து என் மேசை இழுப்பறையிலிருந்து பேனாக்கள் வைத்திருந்த ஒரு நீள் சதுரப் பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த பேனாக்களை இழுப்பறைக்குள் போட்டுவிட்டுத் தூசு படிந்திருந்த அந்த டப்பாவைச் சோப்புப் போட்டுக் கழுவி ஒரு துணியால் துடைத்த பின் அதை மேசை மீது அதன் ஈரம் காய்வதற்காக வைத்துவிட்டு, அப்படியே மேசையையும் ஓர் ஈரத்துணியால் துடைத்தேன் பிறகு, என் அறைக் கதவைச் சாத்திவிட்டு, கூடத்துக்குப் போய்ப் படுத்தேன்.
மறு நாள் காலையில் வழக்கம் போல் காஃபி போடப் பால் பையை எடுப்பதற்காக ஃப்ரிட்ஜைத் திறந்தேன். அதன் கதவை அவசரமாய்த் திறந்த அதிர்வில் அதன் மீது அதன் கதவை ஒட்டினாற்போல் வைக்கப்பட்டிருந்த ஒரு பொருள் தவறித் தரையில் விழுந்து சிதறியது. அது ஒரு கண்ணாடிக் குப்பி. மிகச் சிறிய, அழகான வாசனைத் தைலக் குப்பி. என் தங்கை மகன் அதை ஃப்ரிட்ஜின் மீது வைத்திருந்திருக்கிறான். அடிக்கடி ஆர்வத்துடன் அவன் முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அந்தக் காலிக் குப்பி சிதறிவிட்டது கண்டு நான் சற்றே அதிர்ந்து போனேன். அவன் தூங்கி எழுந்ததும் அது விழுந்து உடைந்து போய் விட்ட விஷயத்தை எப்படி அவனிடம் சொல்லப் போகிறோம் என்று மலைப்பாக இருந்தது.
பால் பையை எடுத்துக்கொண்டு ஃப்ரிட்ஜை மூடிய கணத்தில் அருகில் கைகளை உயர்த்தி ஆசி வழங்கும்கோலத்தில் கூடத்துச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த நாள்காட்டியில் இருந்த பாபாவின் படம் பார்வையில் பட்டது. அதைக் கண்டதும் என் மனத்தில் சட்டென்று குறும்புத்தனம் நிறைந்த எண்ணம் ஒன்று தோன்றியது. பாபா! உன்னை எல்லாரும் கண்ணனின் அவதாரம் என்பதாய் நம்பிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சிறிதேனும் உண்மை இருந்தால், உடைந்து சிதறிச் சுக்கல் சுக்கலாய்ப் போய்விட்ட சென்ட் பாட்டிலைத் திருப்பிக் கொண்டு வா, பார்ப்போம்!” என்று அவரை மரியாதையற்று ஒருமையில் விளித்துச் சவால் விட்ட பின், பால் பையை மேசை மீது வைத்து விட்டு, தரையில் சிதறிக்கிடந்த கண்ணாடித் துகள்களை விளக்கு மாற்றால் குவித்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அதன் வாயைக் கட்டிய பின் தெருவுக்குப் போய்ச் சுற்றுச் சுவருக்கு வெளியே போட்டுவிட்டுத் திரும்பினேன்.
பிறகு பால்பையுடன் அடுக்களைக்குப் போய்க் காஃபி போட்டு நான் மட்டும் குடித்தேன். (மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.)
பின்னர், ஃப்ரிட்ஜைக் கடந்து, வழியில் ஆசிவழங்கிக்கொண்டிருந்த பாபாவை நோக்கி ஒரு கேலிப் புன்னகை புரிந்த பின் என் அறைக்குப் போனேன். அறையின் சன்னல் கதவுகளைத் திறந்த எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்த்து. முந்திய இரவு நான் கழுவிக் காலியாய் வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பாவில் பளபளப்பாய் ஏதோ ஒளிர்ந்தது. நான் திகைப்புடன் நெருங்கிப் பார்த்தேன். அதைக் கையில் எடுத்துப் பார்த்து அதிர்ந்தும் திகைத்தும் போனேன்.தூள் தூளாய்ச் சிதறிப் போன பின் தெருவில் வீசப்பட்ட அதே போன்ற ஒரு கண்ணாடிக் குப்பிதான் அந்தப் பொருள்!
நான் சிலிர்த்துப் போனேன். என்னால் நம்பவே முடியவில்லை. ‘அது கனவா, நினைவா என்பது புரியாமல் அவள் தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டாள்’என்று எழுத்தாளர்கள் எழுதும் சொற்கள்தான் நினைவுக்கு வந்தன. நான் அதற்கு முன்னர் உணர்ந்தே அறிந்திராத ஒரு பரவசத்தில் மனம் ஆழ்ந்தது. விழிகள் கலங்கின. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஒரு சிலிர்ப்புப் பரவிப் பின் சில நொடிகளில் நின்று போனது. அந்தக் கண்ணாடிக் குப்பியை எடுத்துத் திரும்பத் திரும்பத் தொட்டுப் பார்த்தபின், யாரேனும் என்னைப் பார்த்துச் சிரிக்கப்போகிறார்களே என்னும் கூச்சத்தால், இன்னும் யாரும் விழித்தெழவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டபின், பாபாவின் படத்துக்கு எதிரே கைகூப்பி நின்று, பாபா! என்னை மன்னித்துவிடுங்கள்! நீங்கள் கடவுளாக இல்லாதிருக்கலாம். ஆனாலும் தெய்வாம்சம் நிறைந்தவர் என்பதைப் புரிந்துகொண்டேன்!” என்று முணுமுணுத்துக்கொண்டேன்.
‘நான் பாபாவை வேண்டிக்கொண்டேன். அதன் பின் மந்திரம் போட்டது போல் என் உடல்நிலை சரியானது’என்று எவரேனும் சொன்னால், அது காக்கா உட்காரப் பனம்பழம் விழுந்த கதை என்று சொல்லிவிடலாம். அல்லது மூட நம்பிக்கை, பிரமை என்றெல்லாம் கிண்டலடித்துச் சிரிக்கலாம். ஆனால், கடுகுகளின் அளவில் சுக்கலாகிப் போன ஒரு கண்ணாடிக் குப்பி மீண்டும் அதே உயரம், அதே பருமன், அதே வேலைப்பாடு போன்றவற்றுடன் என் மேசைக்குத் திரும்பி வந்த நம்பத்தகாத நிகழ்வுக்கு அறிவுஜீவிகளும், விஞ்ஞானிகளும் என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்? நான் பாபாவிடம் விட்ட சவால் எப்படி அவருக்குத் தெரிந்த்து? (ஆனால் எனக்கு ஏற்பட்ட பரவசத்திலும், வியப்பிலும் நான் வீசிய பை சுற்றுச்சுவர்க்கு அருகில் கிடந்ததா என்பதைப் பார்க்க எனக்குத் தோன்றவில்லை. மறு நாள் தான் அந்த எண்ணம் வந்தது. ஆனால் அது அங்கே இல்லை. குப்பையள்ளுபவர் எடுத்துச் சென்றிருக்கக்கூடும் என்று தோன்றியது.)
அன்றிலிருந்து நான் புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் பக்தை யானேன். அவரது தெய்வத்தன்மை மீது நம்பிக்கை கொண்டவளானேன். இன்று வரை தொடரும் அந்த நம்பிக்கை என்றும் தொடரும்.
என் தங்கைகளுக்கு மட்டும் அந்த அதிசய நிகழ்வு பற்றிச் சொன்னேன். அதற்கு முன்னர் வரை நான் பாபாவை நம்பாதவளாக இருந்ததால், நான் சொன்னது உண்மையே என்று அவர்கள் நம்பினார்கள். உடனே என் தோழி அனசூயாவின் ஞாபகம்தான் வந்த்து. பாபாவின் பீடத்தில் இதய நோய்க்கான மாத்திரை திடீரென்று முளைத்ததாய் அவள் சொன்னதை ஏற்காததற்கும் சேர்த்து பாபாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். இதனிடையே என் தோழி காலமாகிவிட்டிருந்ததால் அவளிடம் அது பற்றி மனசிகமாக மட்டுமே பேச முடிந்தது.
jothigirija@live.com
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30
- கடவுள்களும் மரிக்கும் தேசம்
- அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]
- நீங்காத நினைவுகள் 12
- வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :
- விண்ணப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ?
- சிரட்டை !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 என்னைப் பற்றிய பாடல் – 27 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) ஊக்கமூட்டும் என் ஆத்மா
- புகழ் பெற்ற ஏழைகள் 17
- டௌரி தராத கௌரி …கல்யாணம்.! – 12
- உயில்
- மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்
- பொசலான்
- 65 மில்லியன் ஆண்டுகட்கு முன்னே மெக்ஸிக்கோவில் முரண்கோள் மோதிப் பிரளயம் விளைவித்தது
- திருட்டு
- காக்காய் பொன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -12 மூன்று அங்க நாடகம்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20
- நேரத்தின் காட்சி…
- ’பிறர் தர வாரா..?’
- தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு
- மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்
- இதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்
- மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…
- ஜென்
- குளம் பற்றிய குறிப்புகள்
- இருபது ரூபாய்
- மாஞ்சோலை மலைமேட்டில்…..
- காதலின் தற்கொலை