(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
19. புதுயுகம் படைத்த படிக்காத ஏழை …..
வாங்க ….. வாங்க…. எப்படி இருக்கீங்க… நல்லா இருக்கீங்களா?…அப்பறம் ஏன் பேசமாட்டேங்குறீங்க… விடை தெரியவில்லையா.. சரி….சரி.. மனசப் போட்டுக் குழப்பிக்காதீங்க… நானே சொல்லிடுறேன்… அந்த மேதைதான் மைக்கேல் ஃபாரடே. இப்ப நினைவுக்கு வந்திருச்சா..ஆமா…மா…டைனமோ
ஆமாங்க… இங்கிலாந்திலே பிறந்த மைக்கேல் பாரடே என்கிற ஒரு மாமனிதன் 1831-இல் மின்சாரம் என்கிற ஒன்றைக் கண்டுபிடிக்கவில்லைன்னு வச்சிக்குங்க இன்னமும் இந்த உலகம் இருட்டில்தான் இருந்திருக்கும். அதற்கு முன்பும் பல்வேறு அறிவியல் மேதைகள் மின்சாரத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளிலே ஈடுபட்டார்கள். ஆனாலும் அவர்களால் முடியவில்லை. மின்னியல் யுகம் மைக்கேல் ஃபாரடேவுக்குப் பின்னர்தான் தொடங்கிற்று.
இந்த உலகத்தை ஒவ்வொரு யுகமும் ஆட்சி செஞசிருக்கு. யுகங்களை புராணிகர்கள் துவாபரயுகம், திரேதாயுகம், கிருதயுகம், கலியுகம் என்று பிரிப்பார்கள். ஆனால் இவ்யுகங்களை அறிவியல் அடிப்படையிலே பிரிப்பது என்றால், வேளாண்மை யுகம், தொழில் துறையுகம், மின்னியல் யுகம். மின்னணுவியல் யுகம், அணுயுகம் என்று ஐந்தாகப் பிரிக்கலாம். ஆனால் இன்றைக்கு இருக்கிற அணு யுகத்திற்கும் அதற்கு முந்தைய மின்னணுவியல் யுகத்துக்கும்கூட இந்த மின்னியல் யுகம்தான் அடிப்படைக் காரணமா அமைஞ்சிருக்கு. மின்சாரம் என்கிற ஒன்று, இந்த உலகத்தின் முகத்தை முற்றிலும் மாற்றிப்போட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
19-ஆம் நூற்றாண்டினுடைய மையப் பகுதியில் மின்சாரம் கண்டறியப் பட்டாலும், ஏறத்தாற 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேதான் மெல்ல மெல்ல நடைமுறைக்கு வந்தது. 1831-இல் மின்சாரத்தினுடைய ஒரு கண்டறிதலை மைக்கேல் ஃபாரடேயும், அதற்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு சீமென்ஸ் என்கிற அறிவியல் மேதை மின்சாரத்தை உற்பத்தி செய்கிற கருவியையும் கண்டுபிடித்தார்கள். அதற்கும் 23 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்குகளைக் கண்டுபிடித்தார். மின்சாரம், மின்சாரத்தை உற்பத்தி செய்கிற கருவி, மின்சாரத்தால் பயன்படுகிற பொருள்கள் என்று அந்த மூன்று நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக உலகில் உருவாக ஏறத்தாழ 50 ஆண்டுகளாயிற்று, பிறகு நடை முறைக்கு வருவதற்கு இன்னொரு கால் நூற்றாண்டுகளானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மின்சாரத்தைக் கண்டறிந்து உலகிற்கு ஒளிகாட்டிப் புதுயுகம் படைத்தவர்தான் மைக்கேல் ஃபாராடே.
பிறப்பும் வறுமை வாழ்வும்
படிப்பறிவே இல்லாத ஒருவர் பார்போற்றும் விஞ்ஞானியான கதைதான் அவரது கதை. ஆம் அவர்தான் மைக்கேல் ஃபாரடே என்ற அறிவியல் மேதை.
மைக்கேல் ஃபாராடே 1791 – ஆம் ஆண்டு செப்டம்பர் 22 – ஆம் நாள் இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் புறநகர்ப் பகுதியிலுள்ள நியூலிங்டன் என்ற சிற்றூரில் நமய நம்பிக்கைகளில் ஆழ்ந்த பற்றுள்ள குடும்பத்தில் ஒரு கொல்லருக்கும், இல்லதில் பணி செய்த பணிபெண்ணுக்கும் மகனாகப் பிறந்தார். ஃபாரடே நான்கு பிள்ளைகளில் மூன்றாமவர். அவரது குடும்பம் மிகுந்த ஏழ்மையில் வாடியது. அவரது பெற்றோருக்குப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்கூட அதிகமான துயரம். ஏழ்மைநிலையின் காரணமாக அவரது கல்வி எண்ணும் எழுத்தும் கற்றதோடு முடிவுக்கு வந்தது.
ஒவ்வொரு திங்கட் கிழமையன்றும் மைக்கேலின் தாய் அவருக்கு ஒரு ரொட்டியைத் தருவார். அந்த ரொட்டிதான் மைக்கேலின் ஒருவார உணவு அந்த ரொட்டியைப் பதினான்கு துண்டுகளாகப் பிரித்து ஒரு நாளைக்கு இரண்டு துண்டுகள் வீதம் மைக்கேல் உண்பார். அப்படிப்பட்ட ஏழ்மையில் வாழ்ந்தாலும் பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் புத்தகங்களைப் படிப்பதில் மைக்கேலுக்கு அளவுகடந்த ஆசை இருந்தது. இந்தப் பழக்கம்தான் மைக்கேல் ஃபாரடே வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அடித்தளமாய் அமைந்தது.
லண்டனில் புகழ்பெற்ற ச்சேரிங் க்ராஸ் என்ற பகுதியில் பழைய புத்தகக் கடைகள் நிறைய இருக்கும். மைக்கேல் அங்கெல்லாம் சென்று அவசர அவசரமாக அவற்றை புரட்டிப்பார்த்து படிப்பார். நூல்களைப் பணம் கொடுத்து வாங்க முடியாததால் அவரைக் கண்டவுடனேயே எல்லாக் கடைக்காரர்களும் விரட்டத் தொடங்குவர். ஆனால் ஜார்ஜ் ரீபார்க் என்ற ஒரு கடைக்காரர் மட்டும் மைக்கேலின் மீது இரக்கப்பட்டுத் தன் கடையில் இருந்த புத்தகங்களைப் படிக்க அனுமதி கொடுத்தார். மணிக்கணக்கில் மைக்கேல் புத்தகங்களை படிப்பதைப் பார்த்து வியந்த அவர் மைக்கேலின் குடும்ப நிலையைத் தெரிந்துகொண்டு அவருக்கு ஒரு வேலையையும் கொடுத்தார். வாரம் மூன்று சிலிங்குகள் ஊதியம். மைக்கேலுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
லண்டன் முழுவதும் புத்தகங்களைக் கொண்டு சென்று கொடுப்பதும், அவற்றை வாங்கி வருவதும்தான் மைக்கேலின் முதல் வேலை. அந்த வேலையை மைக்கேல் சிறப்பாகச் செய்யவே புத்தகங்களுக்கு பைண்டிங்க் செய்யும் வேலையைத் தந்தார் அந்த முதலாளி. பைண்டிங்க் பணிக்காக வரும் புத்தகங்களில் அறிவியல் தொடர்பானவையும் நிறைய இருக்கும். அவற்றை பைண்ட் செய்யும் அதேவேளையில் அவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படிப்பார் மைக்கேல் அவற்றில் உள்ள பல செய்திகள் புரியாது. நம்மில் பலருக்கு புரியாத செய்திகள் என்று வந்தால் நாம் அதனை அப்படியே விட்டுவிடுவோம்.
ஆனால் மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? அந்த புத்தகங்களை பைண்ட் செய்து அவற்றை உரியவர்களிடம் கொடுக்கும்போது தன் சந்தேகங்களை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்; புரியாதவற்றுக்கு விளக்கம் தேடிக்கொள்ள வேண்டும் என்ற அந்த முனைப்புதான் பிற்காலத்தில் அவரை பார்போற்றும் அறிவியல் மேதையாக உயர்த்தியது.
திசைதிருப்பிய உரை
அந்தக்கால கட்டத்தில் லண்டனில் அறிவியல் தொடர்பான சொற்பொழிவுகள் அதிகம் நடைபெறும். அதனைக் கேட்க வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டும். அந்தச் சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டுமென்று மைக்கேலுக்கு ஆசை. அவரது ஆசையை உணர்ந்த அந்த முதலாளி ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் சொற்பொழிவுக்கு நுழைவுச்சீட்டு கொடுத்து மைக்கேலை அனுப்பி வைத்தார். அந்த சொற்பொழிவுதான் மைக்கேலின் வாழ்க்கையைத் திசை திருப்பியது. அந்த சொற்பொழிவை நிகழ்த்தியவர் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் சர் ஹம்ப்ரி டேவி. மின்சாரம் பற்றியும், வேதியியல் பற்றியும் அவர் பேசியதை மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருக்க, மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? சர் ஹம்ப்ரி டேவி கூறியதை ஒன்றுவிடாமல் அப்படியே முழுமையாக குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார். சொற்பொழிவு முடிந்ததும் வீட்டிற்கு வந்து குறிப்புகளை மீண்டும் அழகாக எழுதி சில வரைபடங்களை வரைந்து அதனை அழகுறப் பைண்ட் செய்து அறிஞர் ஹம்ப்ரி டேவிக்கு அனுப்பி வைத்தார். இரண்டுநாள்களுக்குப் பின்னர் அதனைப் பெற்றுக் கொண்ட ஹம்ப்ரி டேவி அதனைப் பார்த்து மலைத்துப்போனார். தனது சொற்பொழிவு அப்படியே அழகாக எழுதப்பட்டிருந்ததைக் கண்ட அவர் மைக்கேலிடம் ஏதோ திறமை இருப்பதை உணர்ந்து அவரைத் தன் உதவியாளராக சேர்த்துக் கொண்டார். அகமகிழ்ந்துபோன மைக்கேல் சர் ஹம்ப்ரி டேவியுடன் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு அவரது சொற்பொழிவுகளில் கலந்து கொண்டார். அவரது ஆராய்ச்சிகளிலெல்லாம் உதவி புரிந்தார்.
முதலில் உதவியாளராக மைக்கேலைப் பார்த்த ஹம்ப்ரி டேவி பிறகு அவரைத் தன்னுடன் பணியாற்றும் அறிவியல் அறிஞராகக் கருதி அவ்வாறே அவரை நடத்தினார். ஆனால் விரைவில் ஹம்பரி டேவியுடன் ஃபாரடேவிற்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. டேவி கண்டுபிடித்த சுரங்கத்தினுள் பயன்படுத்தப்படும் அபாயமற்ற விளக்கு குறித்த கருத்தினை பிரிட்டிஷ் பாராளுமன்றம் மைக்கேல் ஃபாரடேயின் கருத்தினைக் கேட்டது. ஃபாரடேயின் கருத்துப்படி டேவி கண்டுபிடித்த விளக்கு நூற்றுக்கு நூறு அபாயமற்ற விளக்கு அல்ல. தனது ஆசிரியருடைய கெளரவத்தை விடச் சுரங்கத் தொழிலாளர்களின் உயிர் உயரியதாக ஃபாரடேவிற்குத் தெரிந்ததால் அதன் குறைபாட்டை அரசாங்கத்திற்குச் சுட்டிக் காட்டினார். நம்மிடம் பணியாளாய் இருந்தவர் நமது ஆராய்ச்சியை மதிப்பீடு செய்வதா என்று டேவி ஃபாரடேவின் மீது ஆத்திரமடைந்தார். இதனால் ஃபாரடேவிற்கும், டேவிக்கும் இடையில் கருத்துவேறுபாடு எழுந்தது. இருப்பினும் ஃபாரடே தம் ஆசிரியராகிய டேவியிடம் கொண்ட மதிப்பை சிறிதும் மாற்றவில்லை. அவரைத் தம் வழிகாட்டியாகவே எண்ணி பணிவாக நடந்து கொண்டார். இந்தப் பணிவு அவரைப் பலவகையிலும் வாழ்வில் உயர்த்தியது.
டைனமோ கண்டுபிடிப்பு
மைக்கேல் ஃபாரடே தனது 30 – ஆவது வயதில் செரா பர்னாட் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். எந்த நேரமும் ஏதாவது ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார் மைக்கேல் அதற்குச் சராவும் உதவி புரிந்தார். பாருங்க மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்பாங்க. அது ஃபாரடேவுக்குச் சரியாப் பொருந்தும். அவரது மனைவி சாரா அவருக்கு வேண்டியதை மனங்கோணாமல் குறிப்பறிந்து செய்தார். அதனாலதான் ஃபாரடேவுக்கு ஆய்வுல தொடர்ந்து எவ்வித இடையூறுமில்லாம ஈடுபட முடிஞ்சது.
மைக்கேலின் ஆய்வு தொடர்ந்தது. அவரது ஆராய்ச்சிகளை சிறிது சிறிதாக இங்கிலாந்து போற்றத் தொடங்கியது. மைக்கேலுக்கு 40 வயதானபோது காந்தத்தினால் மின்சார சக்தியை உருவாக்க முடியும் என்பதை விளக்கிக் காட்டினார். மைக்கேல் ஃபாரடே 25 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததன் பலன் மின்சக்தியின் வேகத்தை மாற்ற உதவும் ட்ரான்ஸ்பார்மர், மின்சக்தியை உற்பத்தி செய்யும் டைனமோ ஆகிய கருவிகளைக் கண்டுபிடித்தார். பாத்தீங்கள்ள சும்மா இருந்தா எதுவும் நடக்காது. உழைப்புத்தான் நம்மை உலகத்துல முன்னேற்றும். இதை முதல்ல ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதனாலதான் நம்முடைய முன்னோர்கள்,
“உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ”
அப்படின்னு சொன்னாங்க. நாம உழைக்கின்ற உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டுங்க. அதப் புரிஞ்சிக்கோங்க. நமக்கிட்ட ஒண்ணுமில்லையேன்னு புலம்பாம அத முதல்ல உதறிவிட்டுட்டு நம்முடைய வெற்றிய நோக்கிப் பயணப்படனும். மைக்கேல் பாரடே கடுமைய உழைத்ததனாலதான் ட்ரான்ஸ்பார்மரையும் டைனமோவையும் கண்டுபிடிக்க முடிஞ்சது.
மைக்கேல் ஃபாரடே மட்டும் இந்த இரண்டு கண்டுபிடிப்புகள கண்டுபிடிக்காம இருந்திருந்திருந்தால் நவீன கருவிகளை உலகம் பார்த்திருக்கவே முடியாது. இன்று நாம் பயன்படுத்தும் வானொலி, தொலைக்காட்சி, சினிமா, கணிணி, குளிர்சாதனப்பெட்டி, சமையலறை மின்சாரம் சார்ந்த பொருள்கள் உள்ளிட்ட மின்கருவிகளுக்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது மைக்கேல் கண்டுபிடித்த டைனமோதான். இப்பத் தெரிஞ்சிக்கோங்க மைக்கேல் ஃபாரடேவின் கண்டுபிடிப்பு எவ்வளவு உயர்ந்ததுன்னு.
உயர்ந்த உள்ளம்
சில அறிஞர்கள் தங்கள் கண்டுபிடிப்பினைக் கொண்டு பணம் சேர்க்கப் பார்ப்பாங்க. சிலபேரு மக்களுக்குப் பயன்படட்டுமே என்ற உயர்ந்த உள்ளத்தோட மக்களுக்கு அந்தக் கண்டுபிடிப்பை உரிமையாக்கிடுவாங்க. மைக்கேல் ஃபாரடே இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவரு. அவர் ஏழைதான். அவரு நெனச்சிருந்தாருன்னா நெறையப் பணத்தைச் சேர்த்திருக்கலாம். ஆனா அவரு பணத்தைப் பெரிசா நெனக்கல.
மைக்கேல் ஃபாரடே பணம் சேர்த்து வைப்பதைப் பாவமாகக் கருதிய ‘சேண்டிமேனியன்’ என்ற கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் தனது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமம் பெறவோ அவற்றால் பணம் சம்பாதிக்கவோ அவர் முயலவில்லை. தனது கண்டுபிடிப்புகள் மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்பட வேண்டும் என்று மட்டுமே நினைத்தார். இக்கண்டுபிடிப்புகள் வாயிலாக மனித குலத்திற்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று நினைத்தார் ஃபாரடே. தனது கண்டுபிடிப்புகளை வைத்துப் பெருமளவில் செல்வத்தைக் குவிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைக்கவில்லை.
தன் துன்பம் நிறைந்த குழந்தைப் பருவத்தை மறக்காத மைக்கேல் ஃபாரடே தன்னைப் போன்ற ஏழைச் சிறுவர்களும் அறிவியலின் அற்புதங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கருதி காப்புரிமம் பெறுவதையும், அதனைக் கொண்டு பணம் சம்பாதிப்பதையும் மறுத்துவிட்டார். ஃபாரடே எப்படிப்பட்ட அதிசயமான அறிவியல் மேதையா வாழ்ந்திருக்காரு பாருங்க. பணத்துக்காக அல்லாடுற உலகத்துல இப்படிப்பட்ட பண்பாளர்களும் இருக்குறாங்க. சில பேருக்கு தங்களோட நிலை மாறிட்டா உடனே தங்களோட குணத்தை மாத்திக்குவாங்க. ஆனா ஃபாரடே எந்தச் சூழலிலும் தனது குணத்தை மாத்திகவே இல்லை. பிறருக்கு உதவக்கூடிய பண்பாளராகவே வாழ்ந்தார். தாயுமானவர் குறிப்பிட்டதைப் போன்று,
“எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே”
என்ற உயர்ந்த உளம் படைத்த உத்தமராக மைக்கேல் ஃபாராடே வாழ்ந்தார்.
இத்தகைய பண்பாளரை அனைவரும் பாராட்டினார்கள். ஒருமுறை அறிவியல் மேதை சர் ஹம்ப்ரி டேவிடம் உங்கள் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது எது? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சட்டென்று “மைக்கேல் ஃபாரடே” என்று பதிலளித்தார். ஒரு அறிவியல் மேதையின் வாயாலேயே மேதை என்று புகழப்பட்ட மிக உயர்ந்த அறிஞராக, படிக்காத மேதையாக, பண்பட்டவராக விளங்கினார் மைக்கேல் ஃபாரடே. ஆமாங்க ஹம்பரிடேவி மட்டும் ஃபாரடேவை அடையாளங் கண்டு அவரைத் தன்னுடைய உதவியாளராகச் சேர்த்திருந்திருக்கலே இந்த மனித குலம் ஒரு மாணிக்கத்தை இழந்திருக்கும். டேவி, ஃபாரடேவை அடையாளங் கண்டு அவரை ஊக்கப்படுத்தினாலும் அதனைச் சரியாப் பயன்படுத்திக்கிட்டாரு ஃபாரடே. தனக்கு வந்த அந்த வாய்ப்ப ஃபாரடே வீணாக்கலே. அதனைப் பயன்படுத்திக்கிட்டு மேலும் மேலும் முன்னேறினாரு. ஹம்பரிடேவியின் கண்டுபிடிப்பு நிச்சயமா உன்னதமான கண்டுபிடிப்புத்தான்.
எந்த ஆய்வுக் கூடத்துல 1813-ஆம் ஆண்டில் பணியாளராகப் ஃபாரடே சேர்ந்தாரோ அதே ஆய்வுக் கூடத்தின் இயக்குநராக 1831-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் 1824-ஆம் ஆண்டில் ராயல் அகாடமி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டேவியின் சொற்பொழிவுகளைக் கேட்கச் சென்ற ஃபாரடேயின் வெள்ளிக்கிழமைச் சொற்பொழிவுகளைக் கேட்க ஏராளமான இளைஞர்கள் திரண்டனர். ஆய்வுக் கூடத்தில் ஆய்வுக் குழாய்களைச் சுத்தப்படுத்தியவரின் ஆய்வு மிக அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அமைந்தது. பார்த்தீங்கள்ள… எல்லாம் முயற்சியும் உழைப்பும் இருந்தா நாமளும் ஃபாரடே மாதிரி வரலாம். இந்த உலகத்துல முடியாததுன்ன எதுவுமில்ல. இதப் புரிஞ்சுக்கோங்க…இதுக்கு ஃபாரடேவின் வாழ்க்கையே நமக்கு முன்மாதிரியா இருக்கு.
மறைதல்
எவ்வளவு உலகப் புகழ் பெற்றாலும் ஃபாரடே ஆடம்பரமா வாழவில்லை. இறுதிவரை எளிமையையே விரும்பி எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தார். அவ்வாறு வாழ்ந்த அறிவியல் மேதை மைக்கேல் ஃபாரடே 1867 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 – ஆம் நாள் தனது 76 -ஆவது வயதில் இவ்வுலகில் இருந்து விடைபெற்றார். பல புகழ்பெற்ற அறிஞர்களைப் போலவே அவரது நல்லுடலும் ‘Westminster Abbey’ யில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவர் விரும்பியபடியே ஒரு சாதரண இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஃபாரடே மறைந்தாலும் மின்சாரம் இருக்கும் வரை அவரது புகழ் மறையாது. என்றும் மின்சாரம் போன்று முன்னேறத் துடிக்கும் பலருக்கும் மன ஆற்றலைத் தந்து கொண்டே இருக்கும்.
வாழ்க்கை கரடு முரடா இருந்தாலும் நம்பிக்கையோட போராடினா நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும். தொடர்ந்து முயற்சி செய்யணும்; உழைக்கணும். அப்படிச் செஞ்சா நிச்சயம் வெற்றி நமக்குத்தான். இதை நாம மைக்கேல் ஃபாரடேயின் வாழ்க்கையிலிருந்து தெரிஞ்சுக்கலாம். நம்பிக்கையோட உழைப்பதற்குத் தயாராகிட்டீங்கள்ள… அப்பறம் என்ன உலகம் உங்க கையிலதான்..
எந்தப் பின்னணியுமில்லாம ஒருத்தரு தன்னோட முயற்சியால ஒரு நாட்டின் அதிபராக வந்தாரு..அவரு வறுமையில பிறந்தாரு… சிறுவனாக அவர் இருந்தபோதே அவருடைய தந்தையார் இறந்துட்டாரு..குடும்பமே வறுமையில தத்தளிச்சது..இருந்தாலும் அவரு நம்பிக்கை இழக்கல…முயன்று படித்தார்…சிங்கப்பூர் நாட்டின் அதிபராக வந்தார். அவரு அதிபராக வந்ததோடு மட்டும் சிறப்பில்ல..மக்கள் போற்றும் மக்கள் அதிபராத் திகழ்ந்தாரு…அவர மக்கள் தங்கள் வீட்டுல ஒருத்தரா நெனச்சாங்க… சிங்கப்பூரின் நான்காவது அதிபரா வந்தாரு அவரு யாரு தெரியுமா?….என்ன யோசிக்கிறீங்க… யோசிச்சிக்கிட்டே இருங்க அடுத்தவாரம் பார்ப்போம்….(தொடரும்….20)
- லெனின் விருது – 2013 – அழைப்பிதழ்… நாள்: 15-08-2013, வியாழக்கிழமை
- ஒற்றைத் தலைவலி
- இப்படியாய்க் கழியும் கோடைகள்
- தீர்ப்பு
- புகழ் பெற்ற ஏழைகள் 19
- தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருதையொட்டி ஏழு நாள் தொடர் திரையிடல்
- மங்கோலியன் – I
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -36 என்னைப் பற்றிய பாடல் – 29 (Song of Myself) என் அடையாளச் சின்னங்கள் .. !
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………30 வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
- அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 14
- தாகூரின் கீதப் பாமாலை – 77 உன் ஆத்மாவைத் திறந்து வை .. !
- தீவு
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 22
- கவிதைகள்
- இரகசியமாய்
- தனக்கு மிஞ்சியதே தானம்
- நீங்காத நினைவுகள் 14
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -14 [ இறுதிக் காட்சி ]
- வேர் மறந்த தளிர்கள் – 26-27-28
- டௌரி தராத கௌரி கல்யாணம் …! – 14
- ஸூ ஸூ .
- இரு துருவங்களை இணைக்கும் கவித்வம் – ஒரு துருவம் மனுஷி, இன்னொரு முனையில் நாஞ்சில் நாடன்
- நோவா’வின் படகு (Ship of Theseus)
- சாகச நாயகன் 2. நாயக அந்தஸ்து
- முடிவை நோக்கி ! [விஞ்ஞானச் சிறுகதை]
- பால்காரி .. !
- தாயுமானாள்!
- பேச்சரவம் – தியடோர் பாஸ்கரன் – ஒலி வடிவில்…
- 2013 ஆம் ஆண்டு இறுதியில் பரிதியிலே துருவ மாற்றம் நிகழப் போகிறது .. !