தயாவின் கடித வாசகம் சங்கரனின் காதுகளைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவளுக்கு நேர்ந்துவிட்ட அவல வாழ்க்கையை அவனால் சகிக்கவே முடியவில்லை. ஆனால்,அவள் விஷயத்தில் தன்னால் ஒரு விரலைக்கூட அசைக்க
முடியாது என்கிற நிலையே அவளது அவலத்தை விடவும் அவனை அதிகமாய்த் துன்புறுத்தியது.
தயாவின் வீட்டில், எல்லாருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக ரமா தயாவின் கடிதத்தை இரைந்தே படித்தாள். அப்போது பக்கத்தில் இருந்த ஈசுவரனின் முகம் வெளிறிவிட்டது. ரேவதியோ வாயில் புடைவைத் தப?லப்பைப் பந்தாய்ச் சுருட்டி வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். சாம்பவிதான் எல்லாரிலும் மிக அதிகமாய்ப் பாதிக்கப்பட்டவ்ள். ஆத்திரம், அழுகை, வேதனை என்று எல்லாமுமாக அவள் கோபம் வேறு கொண்டாள்: “அவளைக் கட்டாயப் படுத்திக் கல்யாணம் பண்ணிக் குடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கியாச்சு! இதுக்குத்தானே அவளை ரூமுக்குள்ளே போட்டுப் பூட்டிவெச்சேள்? இப்ப திருப்திதானா? ஏழேழு ஜென்மத்துக்கும் நீங்க நன்னாருக்க மாட்டேள்ப்பா! நன்னாவே இருக்கமாட்டேள்!”
ஈசுவரனால் வாயே திறக்கமுடியவில்லை.
சாம்பவி ரமாவிடமிருந்து அந்தக் கடிதத்தை வாங்கித் தானும் ஒரு முறை படித்துவிட்டு ‘ஓ’வென்று இரைந்த குரலெடுத்து அழுதாள். அது ஒண்டுக் குடித்தனம் என்பதால், ஈசுவரன் ஓடிப்போய்க் கதவைச் சாத்திவிட்டு வந்தார்.
“கொழந்தைகளோட சந்தோஷம்தான் தங்களோட சந்தோஷம்னு நினைக்கிறவாதான் நிஜமான அப்பா, நிஜமான அம்மா. மத்தவாள்ளாம் சும்மா! கொழந்தைகள் விஷயத்திலே பெரியவா தலையிட வேண்டியதுதான். நான் வேணாங்கல்லே. ஆனா, அது அவா தப்பு வழியிலே போறப்ப மட்டுந்தான். இல்லேன்னா, அவா ஏமாந்து போய்த் தப்பான ஆளுக்கு வாழ்க்கைப் பட்டுடக் கூடாதுங்கிறதுக்காக மட்டுந்தான்!” என்று பெருங்குரலெடுத்து அவள் போட்ட கூச்சலில் வாயிழந்து போய் ஈசுவரன் தலை குனிந்து பேசாமல் உட்கார்ந்திருந்தார். அவர் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகிற்று.
“இப்ப அழுது என்ன பிரயோஜனம்? எவ்வளவு கெஞ்சினா! நானும் எவ்வளவு சொன்னேன்? முப்பதாயிரம் குடுக்கப் போறான்னு நாக்கைத் தீட்டிண்டேளே ரெண்டு பேரும்? இப்ப என்ன அச்சு? அந்தக் கட்டேல போறவன் வாங்கிப் போட்ட சாமான்களைக்கூட வாரிண்டுன்னா போயிட்டான்? அவனா இனி வந்து பணம் குடுக்கப் போறான்? அதுவும் முப்பதாயிரம்!”
சற்று நேரத்துக்கு அங்கு இறுக்கமான அமைதி நிலவிற்று.
“திருநெல்வேலிக்குப் போய் அவளைக் கூட்டிண்டு வந்துடுங்கோப்பா.. .. கையில இருந்த வேலையையும் விட்டாச்சு. உங்களை எல்லாம் என்ன பண்ணணும், தெரியுமா?”
ரமா குறுக்கிட்டாள்: “ தயா திரும்பி வந்துட்டா, அதே வேலைக்கு எப்படியாவது ஏற்பாடு பண்ணிடலாம்.. எங்க எம்.டி. கிட்ட நான் பேசிப் பாக்காறேன். அவர் கூட ஆச்சரியப்பட்டார், அசலூருக்குப் போய் உக்காந்துண்டு இப்படி திடுதிப்னு ரெசிக்னேஷன் லெட்டர் அனுப்பிட்டாளேன்னு. அப்புறம் அவர் கிட்ட நான் சொன்னேன் – விஷயம் இப்படி இப்படின்னு. ரொம்ப வருத்தப்பாட்டரர்.”
ஈசுவரன் முதன் முறையாக வாயைத் திறந்தார். “மாப்பிள்ளைக்கு இந்த மெட்ராஸ்ல கூட ரொம்ப செல்வாக்கு இருக்கும் போல இருக்கே. அதனாலதானே அடியாள் வெச்சு அந்தப் பையனை அடிச்சிருக்கான்? அதனால அப்படி யெல்லாம் தயாவை உடனே கூட்டிண்டு வந்துட முடியாது. அப்புறம் அடியாள் வெச்சு அவளையும் க்ளோஸ் பண்ணப் பாப்பான். நம்மையும் ஏதானும் பண்ணுவான்.”
“ஆர அமர விசாரிக்கணும். அவசரக் கல்யாணம் பண்ணினா இப்படித்தான். அவசரக்கோலம் போட்ற மாதிரித்தான். அலங்கோலமாயிடும்,” என்று கண்களைத் துடைத்தபடி ரேவதி அங்கலாய்த்தாள்.
“விசாரிக்கிறதுக்கும் கொள்றதுக்கும் எங்கே டைம் இருந்தது?”
“டைம் இருந்திருந்தாப்ல நீங்க நிதானமா விசாரிச்சுட்டுத்தான் பண்ணி யிருப்பேளாப்பா? அந்தக் கடன்காரான் கொண்டுவந்து போட்ட சாமான்களைப் பாத்ததும் உங்களுக்குக் கழுத்தில தலை நிக்கல்லே. இன்னும் கொஞ்சம் சீக்கிரமாவே நடத்திட்டேள்.”
“மயிலாப்பூர்ல அவன் யாராத்துலே தங்கியிருந்தானோ அவாகிட்ட அவனுக்குத் தெரியாம நாசூக்கா விசாரிக்கத்தாண்டி செஞ்சேன். நல்ல சம்பந்தம்னுதான் அவா சொன்னா. பூந்தா பாத்துண்டிருக்க முடியும்?”
“இந்தக் காரணமெல்லாம் நொண்டிச்குப்பா. எனக்குத் தெரியாதா? என் காதுல ஒண்ணும் பூச்சுத்த வேண்டாம். முப்பதாயிரம் தறேன்னதும் – அவன் கொண்டுவந்து போட்ட சாமன்களைப் பாத்ததும் – வாயைப் பொளந்துட்டேள்!”
ரமா ஓர் அன்னியப் பெண் என்கிற உணர்வே இல்லாமல் சாம்பவி கத்திக்கொண்டிருந்தாள்.
“எனக்கு அப்பா இல்லே. கூடப் பொறந்த அண்ணாவும் கிடையாது. இருந்தா ஒரு நடை நான் கூட அவா துணையோட திருநெல்வேலிக்குப் போய் என்ன ஏதுன்னு பாத்துட்டு வருவேன். ஏதாவது பண்ண முடியுமாங்கிறதைப் பத்தியும் அவ கிட்டவே பேசலாம். அதுக்கும் வழி இல்லே,” என்று ரமா புலம்பினாள்.
“நாம தலையிடப் படாதும்மா. அப்புறம் தயாவை அவன் இன்னும் அதிகமாப் படுத்துவான்,” என்று குறுக்கிட்ட ஈசுவரனைச் சாம்பவி முறைத்தாள்:
“அப்ப? கம்னு விட்டுட வேண்டியதுதானா?” என்ற அவள் தன் தலையில் மடேர் மடேர் என்று அடித்துக்கொண்டாள்.
“வேற என்ன பண்றது? பண்ண முடியும்? நாம ஏழைகள். அவா பணக்காரா. தயா அட்ஜஸ்ட் பண்ணிண்டு எப்படியாவது அவாளோட அன்பை சம்பாதிச்சுண்டு சாமர்த்தியமா நடந்துக்கணும். அது ஒண்ணுதான் வழி. அவளோட சந்தோஷம் அவ கையிலதான் இருக்கு!”
“அவ கையில இருந்த அவ சந்தோஷத்தைத் தட்டிப் பறிச்சுட்டு, ஒரு ரவுடி கையிலெ அவளைப் பிடிச்சும் குடுத்துட்டு, இப்ப அவ சந்தோஷம் அவ கையில இருக்குங்கறேளா?”
ஈசுவரனின் தலை தாழ்ந்தது. அவரால் பேசவே முடியவில்லை.
“அப்ப நான் வரட்டுமா, சாம்பவி? எனக்கு நாழியாறதும்மா.”
“சரி, ரமா. போயிட்டு வா.”
தயாவின் கடிதத்தைத் திருப்பி வாங்கிக்கொண்ட ரமா கனத்த இதயத்துடன் அங்கிருந்து புறப்பட்டாள்.
.. .. .. “சங்கர்! இதில நாம என்னடாப்பா பண்ணியிருந்திருக்க முடியும்? நாமளும் ஏழைகள், அவாளும் ஏழைகள். நாம அந்தப் பொண்ணைக் கொண்டுவந்து வெச்சிண்டு இருந்திருக்க முடியுமாடா? அதெல்லாம் நடக்கிற காரியமாப்பா? அப்புறம் ஊர்ல நாலு பேரு நாலு தினுசாப் பேசமாட்டாளா?”
ராமலட்சுமி சொன்னது ஒரு வகையில் சரிதான் என்றாலும், தான் மட்டும் அடித்துப் போடப் படாமல் இருந்திருந்தால், தன்னால் ஏதேனும் செய்திருந்திருக்க முடியும் அன்று சங்கரன் நம்பினான். ‘எப்படியோ! தயாவோட வாழ எனக்குக் கொடுத்து வைக்காமல் போய்விட்டது. எவ்வளவு நல்ல பெண் தயா! நான்தான் என்ன? கெட்டவனா? இல்லையே? அப்புறம், ஏனிப்படி நல்லவர்களுக்குத் துன்பமே வருகிறது?’
தயா அவனது அலுவலகத்தில் வேலையில் சேர்ந்தபோது அவனுக்கு அங்கே மூன்று ஆண்டுப் பணிக்காலம் ஆகியிருந்தது. அவன்தான் அவளுக்கு வேலை கற்றுக்கொடுத்தான். அவனது பிரிவிலேயே அவள் நியமிக்கப்பட்டது இருவருக்கும் நெருங்கிப் பழக ஒரு நல்ல வாய்ப்பாயிற்று. பழகத் தொடங்கிய மிகச் சில நாள்களுக்குள்ளேயே தங்களிடையே ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டதை இருவருமே உணர்ந்தார்கள். ஆனால், வாய் திறந்து அதை வெளிப்படுத்திக்கொள்ளத்தான் இல்லை. இயல்பில் கூச்சம் உள்ள சங்கரன் அதை ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தான். எனினும், வேறு யாரேனும் தயாவைத் தட்டிக்கொண்டு போய்விடுவார்களோ என்கிற அச்சம் மட்டும் அவனுக்கு வரவே இல்லை. காரணம் அவள் தன்னைக் காதலித்துக்கொண்டிருந்தாள் என்பதும், அவன் மனத்தையும் புரிந்துகொண்டிருந்தாள் என்பதும், அவனது அதன் வெளிப்பாட்டுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் என்பதும் அதுவரையில் வேறு யாருடனும் தன் திருமணம் நிகழ அவள் சம்மதிக்க மாட்டாள் என்பதும் அவனுக்கு உள்ளுணர்வாய்ப் புரிந்திருந்ததுதான்!
கடைசியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு வழியாக, ஒரு தோதான நேரத்தில் எப்படியோ அவன் தனது உள்ளக்கிடக்கையை அவளுக்குத் தெரிவித்துவிட்டான்.
“என்ன, தயா? உங்க கிட்ட ஒண்ணு சொல்லணுமே? நீங்க எப்ப ·ப்ரீ?”
“ஏன்? இப்பவே சொல்லலாமே? நான் ·ப்ரீயாத்தானே இருக்கேன் இப்ப?”
“சொல்லட்டுமா, இல்லேன்னா, எழுதிக்கட்டட்டுமா?”
“உங்க இஷ்டம்.”
அவன் உடனே ஒரு வெள்ளைத்தாளில், ‘ நான் உன்னைக் காதலிக்கிறேன். நீயும் என்னைக் காதலிப்பதாக நான் நம்பலாமா?’ என்று ஆங்கிலத்தில் எழுதி அவளிடம் கொடுத்தான்.
அவள் அதைப் படித்துவிட்டு, “ஓ! நம்பலாமே!” என்று தமிழில் பதில் சொன்னாள்.
அதை இப்போது ஞாபகப் படுத்திப் பார்த்த சங்கரனின் இதழோரத்தில் புன்னகை அரும்பிற்று.
அதன் பிறகுதான் அவர்கள் மிகவும் மனநெருக்கம் கொண்டார்கள். காலையில் அலுவலகம் தொடங்குவதற்குச் சற்று முன்னாலேயே வந்து இருவரும் கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டிருப்பார்கள். இருவரையும் அலுவலகத்தினருக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அவர்களின் திருமணத்தை மிகுந்த ஆவலுடன் எல்லாருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். இருப்பினும், இருவர் குடும்பங்களிலும் இருந்த பிரச்சினைகளால் அது தாமதப்படும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.
‘அத்தனை பேர்களுடைய வாழ்த்துகளும், ஆசிகளும் இருந்தும் எங்கள் காதல் நிறைவேறாமல் போய்விட்டதே!.. .. அதைப் பற்றிக் கூடப் பரவாயில்லை. போன இடத்தில் தயா சந்தோஷமாக இருக்க மாட்டாள் என்பது உண்மையே ஆனாலும், குறைந்த பட்சம் கஷ்டப்படாமலாவது இருக்கக்கூடாதா? பாவம், தயா! அவள் மனம் என்ன பாடு பட்டதோ? இப்போதும் பட்டுக்கொண்டிருக்கிறதோ? இன்னும் படப் போகிறதோ?.. . . ..’
ரமா வந்து சென்ற அன்றிரவு முழுவதும் சங்கரன் கண்ணைக் கொட்டவில்லை.
ஓட்டலில் ஒதுக்கமான இடந்தேடி ராதிகாவும் ராகேஷும் உட்கார்ந்தார்கள்.
”என்ன சாப்பிட்றே?”
”சாப்பிட்டுட்டுத்தானே கிளம்புனேன்? காப்பி மட்டும் வேணும்னா குடிக்கலாம்.”
“எனக்கும் பசி இல்லே. செர்வர்! ரெண்டு காப்பி கொண்டாங்க.”
”இப்ப சொல்லுங்க, ராகேஷ். நான் ஏன் அந்த சிந்தியா மேடத்தைச் சந்திக்க்க் கூடாது?”
”சொல்றேன், சொல்றேன். ஆனா நான்சொல்ல்ப்போற தகவல் உனக்கு அதிர்ச்சியா யிருக்கும்.”
”பரவால்லே. எதுவானாலும் சொல்லுங்க!… முதல்ல, அவங்களை எப்படித் தெரியும்னு சொல்லுங்க. ஆனா, அவங்க விக்கச் சொன்ன டிக்கெட்டுகளைத்தான் அன்னைக்கு நீங்க வாங்கிக்கிட்டீங்க. அது தெரியுமா உங்களுக்கு?”
“இல்லே. தெரியாது. முதல்ல கவனிக்கல்லே. பிற்பாடுதான் செக்ரிடரின்ற் பதவிப்பேருக்கு மேல – ரப்பர் ஸ்டம்ப்ல – அவங்க பேரைப் பாத்தேன். முதல்லயே கவனிச்சிருந்தா ஒரு டிக்கெட் கூட வாங்கி யிருந்திருக்க மாட்டேன்”
”ஓ! அந்த அளவுக்கு அவங்க மேல வெறுப்பா! அப்படி அவங்க என்ன செஞ்சாங்க?… உங்களுக்கு அவங்களை எப்படித் தெரியும்னு கேட்டேனே?”
“சொல்றேன். வரிசையாச் சொல்றேன். … நாங்க இப்ப இருக்கிற பங்களாவுக்குக் குடி வந்து ஒரு வருஷந்தான் ஆகுது. அதுக்கு முந்தி ஷெனாய்நர்ல இருந்தோம். அப்ப இந்த சிந்தியா எங்க வீட்டுக்கு அடுத்த விட்டில இருந்தாங்க. …”
“அப்படின்னா ரொம்பவே பழக்கமாயிருப்பாங்களே!”
“எனக்கு ரொம்பப் பழக்கம்னு சொல்ல மாட்டேன். ஆனா எங்கம்மா, அக்கா இவங்களுக்கெல்லாம் நல்ல பழக்கம்.”
“சரி, அப்புறம்?”
“எனக்கு அந்த வார்த்தையைச் சொல்றதுக்கே கூச்சமா யிருக்கு. ஆனாலும் சொல்லித்தான் ஆகணும்…ஹ்ம்… சுருக்கமா ஒரே வார்த்தையில சொல்லணும்னா அவங்க ஒரு ப்ராஸ்டிட்யூட்….”
”வ்….வாட்! என்னது! என்ன சொல்றீங்க! ப்ராஸ்டிடுயூட்டா! நம்ப முடியல்லே. உடம்பைக் கண்டவனுக்கும் விக்கிற ஒருத்திக்கு இம்புட்டு ஆரோக்கியம் இருக்கவே இருக்காது. சுண்டினா ரத்தம் தெறிக்கிற மாதிரி இருக்காங்க. அவங்களைப் போயி…என்னால நம்ப முடியல்லே, ராகேஷ்!”
“நீ நம்பினாலும் நம்பாட்டியும், அதுதான் உண்மை, ராதிகா! முதல்ல, உன்னை மாதிரி அழகான் பொண்ணுங்களை சிநேகம் பிடிச்சு வளைச்சுப் போடுவா. வீட்டுக்கு வரச் சொல்லி அன்பாப் பேசிப் பழகுவா. ரெண்டு மூணுதரம் வந்து போனதுக்கு அப்புறம் அடுத்த விசிட்டப்போ, மயக்க ஊசி போட்டோ, இல்லாட்டி சாப்பாட்டுல மயக்க மருந்து கலந்தோ, அந்தப் பொண்ணை மயங்க வெச்சு, வாடகை ஆம்பளைங்களை வரவழைச்சு அவளைக் கெடுத்துடுவா. பெறகு, அதையெல்லாம் வீடியோ எடுத்து அவளை ப்ளேக்மெய்ல் பண்ணி, அவளை ஒரு கால் கேர்ள் ஆவோ ப்ராஸ்டிட்யூட் ஆவோ வாழ்க்கை நடத்த் வேண்டிய நிர்ப்பந்த்த்துக்கு ஆளாக்கிடுவா. இதுதான் அவளோட தொழில். அநாதை விடுதி,சமூக சேவை, அது இதுன்றதெல்லாம் சுத்தப் பொய்! பேருக்கு சில அநாதைங்க இருப்பாங்கதான். உள்ளே போய்ப் பாத்தா நிறைய இளம் பெண்கள் இருக்கிறதும், அவங்கள்லே பெரும்பாலானவன்ங்க அழகாய் இருக்கிறதும் தெரியவரும்…. அதனால, நீ அந்த சிந்தியாவோட சிநேகத்தை விட்டுடு, ராதிகா. வேணாம். நல்லதில்லே. என்ன, அப்படி பிரமிச்சுப் போய் உக்காந்துட்டே? நான் சொன்னதெல்லாம் நிஜமான நிஜம், ராதிகா. பாம்பு படம் விரிச்சு ஆடுறப்ப எம்புட்டு அழகாயிருக்கும்! அதே மாதிரிதான் அவளும்! அவாய்ட் ஹெர்! அவளோட எஹதுவும் வெச்சுக்காதே. அவ இருக்கிற பக்கம் தலை வெச்சுக்கூடப் படுக்காதே! என்ன? உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்!”
“என்னால நம்பவே முடியல்லீங்க!”
“நம்பித்தான் ஆகணும்! அவ எப்படிப்பட்ட பொம்பளைன்றது தெரிய வந்த்தும் வீட்டுக்காரன் அவளைக் கட்டாயப் படுத்திக் காலிபண்ண வெச்சுட்டான்…”
“ஏதோ சஸ்பென்ஸ்ன்ற அளவுக்கு ஊகிச்சேனே தவிர, இவ்வளவு மோசமான சேதியைச் சொல்லுவீஙகன்னு நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கல்லீங்க! ஆச்சரியமா யிருக்கு!”
“ஆமா. சில உண்மைகள் ஆச்சரியமானவைன்னு சொல்லுவாங்அ. அது சரிதான்.”
காப்பி வந்தது. அதை மெதுவாக உறிஞ்சிக் குடித்து முடிக்கிற வரையில் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ளவில்லை. பில்லுக்குப் பணம்கொடுத்து ஓட்டலை விட்டு வெளியே வந்து பின்னர் தத்தம் பைக்கில் ஏறிக்கொன்டார்கள்.
“நேரே காலேஜுக்குத்தானே போறே?”
“ஆமா.”
“நான் சொன்னது நெனப்பு இருக்கட்டும். அந்தப் பொம்பளைப் பொறுக்கியோட எந்தச் சங்காத்தமும் வெச்சுக்காதே! என்ன?”
“சரி.”
…. கல்லூரிக்கு வந்து சேர்ந்த ராதிகாவின் மனம் ஒரு நிலையில் இல்லை. ராகேஷ் சொன்னதை அவளால் நமபவும் முடியவில்லை, நம்ப்பாதிருக்கவும் முடியவில்லை.
அன்று பிற்பகல் சிந்தியா அவளை மறுபடியும் தொலைபேசியில் அழைத்தாள்.
“ஐம் சாரி. என்னால வர முடியாதுங்க.”
“ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?”
“அதை எதுக்குங்க நான் சொல்லணும்? வேணாம்னா விட்றுங்க.”
“நீ யார் பேச்சையும் கேக்காம இங்க வாம்மா, ராதிகா. என் வீட்டுக்கு நீ வரக் கூடாதுன்னு யாரு உன்னைத் தடுத்தானோ அவனைப்பத்தின சில உண்மைகளை நான் உனக்குச் சொல்லணும். நான் உன்னை வர்ச்சொன்னதே அதுக்குத்தான். ஆனா அவன் முந்திக்கிட்டான்! வந்தா உனக்கு நல்லது.. என்னை நம்பும்மா. எப்பவுமே ரென்டு கட்சிப் பேச்சையும் கேட்டுட்டுத்தாம்மா ஒருத்தரைப் பத்தி முடிவு பண்ணணும். நீ படிச்ச பொண்ணு. உனக்குத் தெரியாதா?”
சில கணங்கள் போல் மவுனித்த ராதிகா, பின்னர், “சரி, மேடம். பெர்மிஷன் போட்டுட்டு வர்றேன்.”
“நீ கட்டாயம் வரணும்மா. உன் வருங்காலத்தைப் பத்தின கவலையால உன்னை வரச் சொல்றேன், ராதிகா! புரிஞ்சுக்கோ. சந்தேகப்படாதேம்மா.”
“சரிங்க. வர்றேன்.” – இவ்வளவு வற்புறுத்துகிற சிந்தியாவைச் சந்தித்து அவள் என்னதான் சொல்லுகிறாள் என்பதையும் கேட்கலாமே என்று திடீரென்று தோன்ற, கணத்துள் ராதிகா முடிவெடுத்தாள். தன்னைத் தடுத்தவன் ராகேஷ்தான் என்பதை அவள் புரிந்துகொன்ட்டுவிட்டாள் என்னும் ஊகமும் அவளை அயர்த்தியது.
பத்மஜா அன்று கல்லூரிக்கு வந்திருக்கவில்லை. சிந்தியா தன்னை வரச்சொல்லி முந்தின நாள் தொலைபேசியது பற்றி ராதிகா அவளிடம் சொல்லவில்லை..
“என்னோட வீடு எங்க இருக்குன்னு தெரியுமா? நீயும் கேக்கல்லே, நானும் சொல்லல்லே.”
“தெரியும், மேடம் டெலிஃபோன் டிரெக்டரியில பாத்துத் தெரிஞ்சுக்கிட்டேன். “
“சரி, வா. அவனோட இன்னைக்கு சாயந்தரம் வெளியே எங்கேயும் போற ப்ரோக்ராம் இல்லியே?”
“……..”
“என்ன, மவுனமாயிட்டே? நான் உங்க ரெண்டு பேரையும் அன்னிக்கு ஓட்டல்ல பாத்தேனே! உன்னைத் தெரிஞ்சதா அவனுக்கு முன்னால காட்டிக்கக் கூடாதுன்னுதான் உன்னைக் கவனிக்காத மாதிரி இருந்துட்டேன். அவனையும் கன்டுக்கல்லே மறுபடியும் சொல்றேன் – நீ வந்து என்னைச் சந்திச்சியானாத்தாம்மா உனக்கு நல்லது. வர்றேன்னு சொல்லிட்டு வராம இருந்துடாதே. வந்தா உன் வருங்காலம் நல்லாருக்கும்.. இல்லாட்டி, பின்னால வருத்தப்படுவே.”
“சரிங்க. கன்டிப்பா வர்றேன்.”
“தேங்க்யூ!”
சிந்தியாவின் குரலில் ததும்பிய கரிசனமும் அன்பும் பொய்யல்ல என்று அவளுக்கு உள்ளுணர்வாய்ப் புலப்பட்ட்து.
அனுமதி பெற்றுக்கொண்டு அவள் சற்று நேரம் கழித்துப் புறப்பட்டாள்.
– தொடரும்
jothigirija@live.com
- ஈழநாடு என்றதோர் ஆலமரம்: ஒரு வரலாற்றுப் பதிவுக்கான அழைப்பு
- ஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதை
- நைஸ்
- எழுந்து நின்ற பிணம்
- உடலின் எதிர்ப்புச் சக்தி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -40 என்னைப் பற்றிய பாடல் – 33
- ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)
- மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்
- உரையாடல் அரங்கு – 13
- மறுநாளை நினைக்காமல்….
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……18
- தலைகீழ் மாற்றம்
- ‘யுகம் யுகமாய் யுவன்’
- முக்கோணக் கிளிகள் ! [4] [நெடுங்கதை]
- புகழ் பெற்ற ஏழைகள் – 23
- கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு
- கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது
- நீங்காத நினைவுகள் 16
- கறுப்புப் பூனை
- மருத்துவக் கட்டுரை மயக்கம்
- திலீபன் கண்ணதாசன் கவிதைகள்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 26
- பால்வீதி ஒளிமந்தையின் அகிலவெளிக் கதிர் வீச்சுகள் [Cosmic Ray Showers] பூகோளம் சூடேறவும், காலநிலை மாறுபாடவும் நேரடித் தாக்கம் விளைவிக்கும்.
- தாகூரின் கீதப் பாமாலை – 80 காலியான என் கூடை .. !