-ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
‘சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை’ என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார் உசிலம்பட்டிக்குப் பக்கத்து கிராமத்துக்காரரான திலீபன் கண்ணதாசன்; தற்போது மதுரைவாசி! நா.முத்துக் குமார், முகுந்த் நாகராஜ் போன்ற யதார்த்தக் கவிஞர்கள் வரிசையில் இவருக்கும் ஓர் இடம் உண்டு. கிராமத்தின் அழகை, ஜீவா சொன்னதுபோல ‘வேரோடும் வேரடி மண்ணோடும்’ எடுத்துவந்து நம்முன் கவிதைகளாகத் தந்துள்ளார். யதார்த்தக் கவிதைகளில் உண்மையே கவித்துவமாகச் செயல்படும். பாடுபொருள் முன்நிற்க மொழி பின்னால் நிற்கும். திலீபன் கண்ணதாசன் கவிதைகளில் ‘அந்த நாள் ஞாபகம்’ தொடர்பான பதிவுகளும் உண்டு. எளிமையும் கவிநோக்கும் சரளமான வாசிப்புத் தன்மையை உருவாக்கியுள்ளன. கவிதைகளைப் படித்து முடிந்தவுடன் கிராமப் பண்பாடு நம் மனத்தில் மின்மினிப் பூச்சிகளாய் பளிச்சிடுகின்றன.
தலைப்புக் கவிதை… ‘சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை’
பள்ளிக்கூடத்தில்
இடைவேளை விடுகிற
நேரத்தில்
நாக்கில் எச்சி ஊறும்
ஆசைகளுக்கு
தீனியாய்
காத்திருப்பான்
சவ்வு மிட்டாய்க்காரன்…
எண்ணெய் போட்டு
வழு வழு வென
மின்னும் கழியின் உச்சியில்
அழுக்கேறிய பொம்மை
சிரித்துக் கொண்டே
கை தட்டிக் கொண்டிருக்கும்.
இதுதான் திலீபன் நடை. உரைநடைப் பாங்கானதுதான். ஆனால் ஒவ்வொரு சொல்லும் முக்கியமானது. சிறுவனின் கவனிப்பு படம் பிடிக்கப்பட்டுள்ளது. கவிதை மொழியின் விசேஷ அம்சம் ஏதுமில்லாமல் உண்மையே கவித்துவமாய்ச் செயல்படுகிறது. மூளையைக் குழப்பும் முயற்சி ஏதுமில்லாமல் எளிமை புன்னகை செய்கிறது.
ரசம் போன கண்ணாடியில்லாத கிராமத்து ஏழை வீடு ஏது? ‘ரசம் போன கண்ணாடி’ என்ற தலைப்பில் ஒரு கவிதை! சவரத் தொழிலாளி கருப்பையா தாத்தாவிற்கு சவரம் செய்ய வீட்டிற்கு வருவாராம். புளியமர நிழலில் ரசம் போன கண்ணாடி அப்பாவிற்கு, முத்துப்பாண்டி சிகையகத்தில் திராட்சைப் பழங்களோடு சில்க் சுமிதா, மதுக் கிண்ணத்தோடு அனுராதா காலண்டர்களில்… ஆனால் நகரத்தில் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்போர் பட்டியலில் நானும் என் மகனும்’ என்று கவிதை முடிகிறது.
‘மரண வாக்குமூலம்’ – ‘பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் சாகக் கூடாது’ என்ற கருத்தைக் கருவாகக் கொண்டது. அதே நேரத்தில் எப்படிச் சாக வேண்டும் என்ற விருப்பத்தையும் சொல்கிறார் திலீபன்.
‘வீதி வரை உறவுன்னு’
கொழா கட்டி பாட்டுப் போட்டு
கண்ணீர் அஞ்சலி நோடடீச
ஊரெல்லாம் ஒட்டி
ஊர் பொம்பளைங்க கூடி
ஓப்பாரி வச்சு அழுக
வேசக்காரங்க
பாட்டுக் கட்டி ஆடி
பயர அவிச்சு
வந்த மக்களுக்குக் கொடுத்து
கப்பல் கெணக்கா
தேர் செய்து..
ராஜா மாதிரி
சுடுகாடு போகணும்
கிராமிய நாகரிகத்தின் ISI முத்திரை குத்தப்பட்ட கவிதையிது! (யதார்த்தக் கவிதை என்றால் உரைநடைதான்)
‘உருமாற்றம்’ பிள்ளைப் பருவ நினைவுகளை அக்கறையோடு அசைபோடுகிறது.
மாறுவேடப் போட்டியில்
ஒளவையாய் நடித்தவளுக்கு
மாமியார் கொடுமை
நடந்திருக்குமோ?
திருடன்
போலீசில்
எப்போதும்
திருடனாயிருந்த
நான்
வாத்தியாய்…
என்னும் போது ஓர் உயிர்த்துடிப்பு மனத்தில் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்வது ரசிக்கத்தக்கது.
திலீபன் காதலைப் பேசினாலும் சோபிக்கிறது.
நீ
நொண்டி
விளையாடுகையில்
எச்சில்படுத்தி
எறிந்த
ஓடுகளால் ஆனது
என்
காதல் வீடு
மற்றொரு கவிதையில் ஊர் முக்கியஸ்தர்களில் ‘உனக்கு ரவிக்கை தைக்கிற தையக்காரர்’ என்பதில் தொனிப் பொருள், மனத்தில் வசீகரக் கோலமிடுகிறது.
பங்குனிப் பொங்கலுக்கு
இந்த வாட்டி
வீர பாண்டிய கட்ட பொம்மனா…
வள்ளித் திருமணமா…
சாமிக்கு நேர்ந்துவிட்ட
கெடாக் குட்டிய
நான்
வந்த பெறவு வெட்டுங்க…
என்று அம்மாவுக்கு வைக்கும் வேண்டுகோளும் நன்றாகவே இருக்கிறது.
நிறைவாக, இன்னும் பல கவிதைகளைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். யதார்த்தக் கவிதையோடு நிற்காமல், தமிழ் மொழியின் அரிய அழகும் நயங்களும் புதைந்து கிடக்கும் அழகியல் மற்றும் தத்துவக் கவிதைகளையும் திலீபன் எழுத வேண்டுமென்பது என் அவா!
- ஈழநாடு என்றதோர் ஆலமரம்: ஒரு வரலாற்றுப் பதிவுக்கான அழைப்பு
- ஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதை
- நைஸ்
- எழுந்து நின்ற பிணம்
- உடலின் எதிர்ப்புச் சக்தி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -40 என்னைப் பற்றிய பாடல் – 33
- ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)
- மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்
- உரையாடல் அரங்கு – 13
- மறுநாளை நினைக்காமல்….
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……18
- தலைகீழ் மாற்றம்
- ‘யுகம் யுகமாய் யுவன்’
- முக்கோணக் கிளிகள் ! [4] [நெடுங்கதை]
- புகழ் பெற்ற ஏழைகள் – 23
- கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு
- கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது
- நீங்காத நினைவுகள் 16
- கறுப்புப் பூனை
- மருத்துவக் கட்டுரை மயக்கம்
- திலீபன் கண்ணதாசன் கவிதைகள்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 26
- பால்வீதி ஒளிமந்தையின் அகிலவெளிக் கதிர் வீச்சுகள் [Cosmic Ray Showers] பூகோளம் சூடேறவும், காலநிலை மாறுபாடவும் நேரடித் தாக்கம் விளைவிக்கும்.
- தாகூரின் கீதப் பாமாலை – 80 காலியான என் கூடை .. !