பால்வீதி ஒளிமந்தையின் அகிலவெளிக் கதிர் வீச்சுகள் [Cosmic Ray Showers] பூகோளம் சூடேறவும், காலநிலை மாறுபாடவும் நேரடித் தாக்கம் விளைவிக்கும்.

This entry is part 23 of 24 in the series 8 செப்டம்பர் 2013
 
 
 
 Solar Rays and cosmic rays

 

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா  

 

 

சூட்டு யுகப் பிரளயத்தை
மூட்டி விடுவது
சூரியத் தீக்கதிர்களா ?
கிரீன் ஹவுஸ் விளைவில்
திரண்டெழும்
கரிப்புகை வாயுக்களா ?
ஓஸோன் குடையில் விழும்
ஓட்டைகளா ?
பூமியைச் சூடாக்கி வருபவை
சூழ்வெளி மண்டலத்தில்
முகில் மூட்டம் உண்டாக்கும்
அகிலக் கதிர்களா ?
பரமாணுக்கள் என்னும்
அக்கினிப் பூக்களா ?
பம்பரமாய்ச் சுற்றும் பூமியின்
அச்சாணியோ, சுற்றுவீதியோ
சரிந்து போனதா ? அல்லது
எரிமலைக் கண் திறந்து கக்கும்
கரிப்புகை மண்டலமா ?
ஆண்டு தோறும்
நீண்ட மலைத் தொடர்
மரக் காடுகள்
எரிந்து புகை மூட்டம்
எழுப்புவதா ?
பனி யுகமும் கனல் யுகமும்
மாறி, மாறி மீளும் சுற்றில்
பரிதிக் கதிர்கள்  தாக்கித்
திரிபு அடைவதா ?

 

++++++++++++++

 

செர்ன் விரைவாக்கி இயக்கத்தால் விளைந்த “முகில் மாளிகை” [Cosmics Leaving Out door Droplets, called as “CLOUD Chamber”] உருவாக்கும் நியதியின் முக்கியத்துவம் திட்டமிடப் பட்டது.   இந்த நியதி மூலம் கடந்த நூற்றாண்டில் நாம் கண்ட பூமியின் உஷ்ண ஏற்றம் பாதியளவு அல்லது முழு ஏற்றத்துக்கும் காரணம் அறியப் படுகிறது.   அதாவது பூகோளச் சூடேற்றத்துக்குப் பூமியின் உஷ்ண ஏற்ற இறக்க மீள் சுழற்சிக்கு ஓரளவு இயற்கைப் பங்கு உள்ளது.         

ஜாச்பர் கெர்க்பை [செர்ன் விரைவாக்கி விஞ்ஞானி]

Solar Rays and cosmic rays -1

 

“சூரியப் புயலடிப்புத் தீவிரத்துக்கு ஏற்ப அகிலக் கதிர்த் துகள்கள் பல்வேறு அதிர்வுகளில் எல்லாக் கோள்களையும் தாக்கி வருவதால் நமது பூமிக் கோளில் ஒப்பிய உயரத்தில் முகில் மண்டலங்கள் உண்டாகும். தற்போதைய ஆய்வு போல் முந்தைய ஆராய்ச்சி அத்தகைய முகில் கவசம் உயரத்துக்கு ஏற்பத் தோன்றும் என அறிவிக்க வில்லை !  சீரிய ஏற்பாட்டில் அமையும் முகில் கவசங்கள் பூகோளச் சூடேற்றப் போக்கை எப்போதும் மாற்றிவிடும் !  அதாவது அகிலக் கதிர்கள் தூண்டும் முகில் கவசங்களின் மாறுதல் அமைப்புதான் சூரியனையும் காலநிலைத் திரிபையும் இணைக்கும் நீண்ட காலத் தேடல் இயக்கமாகக் கருதப்படுகிறது.”

ஃபாங்குவன் யூ (Fangqun Yu) (State University of New York & Albany) (July 2002)

 

பூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய காரணம் சூரிய ஒளிக்கதிர்கள் & அகிலவெளிக் கதிர்கள்

​ [Cosmic Rays]]​

2011 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பூகோளச் சூடேற்றத்தைப் பற்றி ஓர் அழுத்தமான,  உறுதியான விஞ்ஞானக் கருத்து சான்றுகளுடன் வலுவாகி வெளியிடப் பட்டது.  அதாவது  பூகோளம் சூடேற பிரதான காரணங்கள் இயற்கையான சூரிய ஒளிக்கதிர்களும், அகிலவெளிக் கதிர்களுமே [Cosmic Rays] தவிர மனிதரின் செயற்கை வினைகள் அல்ல என்பது முடிவானது.   இதை 1996 இல் பிரிட்டனில் நடந்த விஞ்ஞானப் பேரவையில் இரண்டு டேனிஷ் விண்வெளி ஆய்வக விஞ்ஞானிகள் முதன்முதல் அறிவித்தனர்.   அப்போது அந்தக் கோட்பாடுக்குப் பேரவையில் பல்வேறு எதிர்ப்புகள் இருந்தன.   ஆனால் அதை 1996 பேரவையில் முற்றிலும் ஆதரித்தவர் நைஜல் கால்டர் என்னும் பௌதிக விஞ்ஞானி.   அதற்கு அடுத்த ஆண்டில் செர்ன் விரைவாக்கி யந்திர தளத்தில் பேரவையில் செர்ன் விஞ்ஞானி, ஜாஸ்பர் கெர்க்பி “முகில் மாளிகை”  [Cosmics Leaving Out door Droplets, called as “CLOUD Chamber”]  ஒன்றை உருவாக்கி நியதியை நிரூபித்துக் காட்டினார்.

 

fig-1-cosmic-rays-cause-the-global-warming1

செர்ன் விரைவாக்கி இயக்கத்தால் விளைந்த “முகில் மாளிகை” 

​ ​

[Cosmics Leaving Out door Droplets, called as “CLOUD Chamber”] உருவாக்கும் நியதியின் முக்கியத்துவம் திட்டமிடப் பட்டது.   இந்த நியதி மூலம் கடந்த நூற்றாண்டில் நாம் கண்ட பூமியின் உஷ்ண ஏற்றம் பாதியளவு அல்லது முழு ஏற்றத்துக்கும் காரணம் அறியப் படுகிறது.   அதாவது பூகோளச் சூடேற்றத்துக்குப் பூமியின் உஷ்ண ஏற்ற இறக்க மீள் சுழற்சிக்கு ஓரளவு இயற்கைப் பங்கு உள்ளது என்று ஜாஸ்பர் கெர்க்பி கூறினார். 

அனுதினம் மனிதரைத் தாக்கும் அகிலக் கதிர்கள் !

மனிதரைத் தாக்கும் இயற்கையான பின்புலக் கதிரியக்கம் இருவகைப் பட்டவை.  ஒன்றாவது: விண்வெளிப் பொழிவான அகிலக் கதிர்கள் !  இரண்டாவது: நீர், நிலம், பாறை, தானிய உணவுப் பண்டங்கள் மூலம் மானிடர் கொள்ளும் பூதளத் தொடர்புகள் !  அனுதினமும் ஒவ்வொரு வினாடியும் ஆயிரக் கணக்கான அகிலக் கதிர்கள் தணிந்த கதிரியக்கத்தில் மனிதர் உடம்பைத் தாக்கி ஊடுருவிச் செல்கின்றன !  மனிதர் வாங்கிக் கொள்ளும் தணிவான பின்புலக் கதிரிக்கக் கதிரடி சுமார் 7%-10% (Background Radiation Dose).  அகிலக் கதிர்களில் பிரதானமாக நேர்முகக் கதிர் ஏறிய புரோட்டான் முதல், இரும்பு அணுக்கரு போன்றவை உள்ளது ஒரு காரணம்.  அடுத்து இரண்டாம் விளைவுக் கதிரியக்க அலை/துகளான எக்ஸ்-ரே, காமாக் கதிர், எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான், ஆல்ஃபாத் துகள், மியூவான், பையான் போன்றவை இருப்பது.

 

Primary Rays

 

அகிலக் கதிர்கள் என்பவை உயர்ச்சக்தி ஏறிய துகள்களை (High Energy Particles) ஏந்திக் கொண்டு விண்வெளியிலிருந்து பூமியில் வீழுகின்ற கதிர்கள்.  அந்தத் துகள்கள் ஏறக்குறைய ஒளி வேகத்துடன் பூமியை எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்குகின்றன !  அகிலக் கதிர்களில் பிரதானத் துகள்களாகப் புரோட்டான்கள், எலெக்டிரான்கள், அடுத்து இரண்டாம் விளைவாகச் சதுர மீட்டரில் வினாடிக்குச் சராசரி 100 எண்ணிக்கைத் திரட்சியில் பெரும்பான்மையாக மியூவான்கள் (Muons) பொழிகின்றன.  பூமியில் விழும் அகிலக் கதிர்களின் அடர்த்தி சிறிதா யினும், விண்வெளியில் அவற்றின் பொழிவு அடர்த்தி மிகையானதால் விண்வெளி வீரருக்குப் பெருங்கேடு விளைவிக்கும்.  அதே சமயத்தில் பூமியில் பொழியும் சிறிதளவுக் கதிரடி அகிலக் கதிர்களால் என்ன பாதகம் விளையும் என்பது யாருக்கும் தெரியாது.  அந்தத் துறையில் இதுவரை ஆராய்ச்சிகள் புரிந்து மனிதருக்கு ஏதேனும் அகிலக் கதிர்கள் தீங்குகள் விளைவிக்கின்றனவா என்பது அறியப் படவில்லை !

பூகோளக் காலநிலை வேறுபாடுகளை அறியச் செய்யப்படும் மின்கணனி முன்னறிவிப்புகள்  (Computer Forecasts) நம்பத் தக்கவை அல்ல !  இந்த யுகம் “அகிலக் கதிர்வீச்சுக் காலநிலை யியல்,” “காலாக்ஸி பௌதிகத் துறைகளில்” (Cosmo-Climatoloy & Galactic Physics) பெரும் புரட்சி செய்திருக் கிறது !  பூமியின் தட்ப-வெப்ப மாறுதல்கள் அறியும் “காலநிலை விஞ்ஞானம்” (Climate Science) வெறும் கிரீன் ஹவுஸ் வாயுக்களின் சேமிப்பில் வடிக்கப் படுகிறது என்பது நேர்மையான விஞ்ஞான மில்லை !

நைஜெல் கால்டர் (Co-Author – The Chilling Stars – A New Theory of Climate Change)

 

Primary Rays -1

பரிதி விண்மீன் உதிர்க்கும் அகில

​வெளி​

க் கதிர்கள்

​ [Cosmic Rays]]​

இங்குமங்கும் அகிலக் கதிர்களைப் பொழியும் ஓர் உற்பத்திச் சாதனமாக சூரியனும் இருந்து வருகிறது.  அவற்றின் கதிரியக்க அணுக்கருவும், எலெக்டிரானும் சூரிய தீ வீச்சுத் தோரணங் களின் (Solar Corona) அதிர்ச்சி அலைகளாலும், காந்த சக்தியாலும் விரைவாக்கம் (Acceleration) பெறுகின்றன.  அகிலக் கதிர்களின் சூரியத் துகள்கள் கூடிய பட்சம் 10 முதல் 100 MeV (Million Electron Volt Energy) சக்தி பெற்றவையாக உள்ளன. சில சமயம் உச்சநிலை ஏறி 1-10 GeV (Gega Electron Volt Energy) சக்தி கொண்டவையாக எழுகின்றன !

விண்வெளியில் வீழும் அகிலக் கதிர்கள் விண்மீன் மந்தைகளின் காந்த மண்டலம் வளைத்து விட்டவையே !  சூரிய மண்டலத்தில் நுழையும் அகிலக் கதிர்கள் அதே போல் தீப்பிழம்பும்   எலெக்டிரானும் நிரம்பிய சூரியப் புயலால் (Solar Wind with Plasma & Electrons) வளைத்து (240 மைல்/வினாடி) 400 கி.மீ/வினாடி வேகத்தில் அனுப்பப் பட்டவை.  ஆனால் அந்தக் கதிர்கள் பரிதி மண்டலத்தின் உள் அரங்கில் புகுந்திட வலுவில்லாதவை !  விண்வெளியில் சூரிய மண்டலத்தின் விளிம்பைத் தாண்டும் விண்கப்பல்கள் காலாக்ஸிகளின் அகிலக் கதிர்களின் தாக்குதலில் பாதிக்கப் படுகின்றன !

 

Solar Rays

“2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங்களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது!  வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதியாக்கப் பட்டது!  அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

“கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடத் தற்போது பூமண்டலம் சூடேறி விட்டதென்று, ஆழ்ந்து செய்த காலநிலை வரலாற்று ஆராய்ச்சிகள் எடுத்துக் கூறுகின்றன!  அதற்குக் காரணம் ஓரளவு இயற்கைச் சம்பவங்களே தவிர, மனிதரியக்கும் தொழிற்சாலை வெளியேற்றும் துர்வாயுக்கள் அல்ல என்று கூறும் மறுப்புவாதிகள் கொள்கைக்கு எதிர்ப்புத் தரும் முறையில் பறைசாற்றப் படுகிறது.”

இயான் ஸாம்பிள் [Ian Sample, “Not Just Warmer: It’s the Hottest for 2000 Years” Guardian Unlimited (Sep 1, 2003)]

Cosmic Rays Shielding

3000 ஆண்டுகளாகக் கனடாவின் வடகோடி ஆர்க்டிக் பகுதியில் துருத்திக் கொண்டிருந்த ஒரு பூதகரமான பனிக்குன்று, கடந்த ஈராண்டுகளாகப் பூகோளச் சூடேற்றத்துக்குப் புதிய சான்றாக உடைந்து கடலில் சரிந்து கரைந்து விட்டது.  ஆர்க்டிக் பகுதியின் மிகப் பெரும் பனியுடைப்பு எனக் கருதப்படும் அந்த புராதன பனிமதில் சிதைவுக்கு, நூறாண்டு காலமாகப் படிப்படியாய் ஏறிய வெப்ப மிகுதியும், 1960 ஆண்டு முதல் விரைவாக எழுந்த வெப்பப் பெருக்கமுமே முக்கிய காரணங்கள் என்று ஆய்வாளர் கூறுகிறார்!”

ஆன்டிரூ ரெவ்கின் [Andrew Revkin, The New York Times (23 September 2003)]

“வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (ஜூன் 23, 1999)]

 

fig-3-intergalactic-cosmic-rays-effects

பூகோளத்தைச் சூடேற்றும் மூலக் காரணங்கள் மூன்று !

21 ஆம் நூற்றாண்டின் முககியப் பிரச்சனைகளில் ஒன்று பூகோளச் சூடேற்றம் (Global Warming).  அதன் மூல காரணங்களை நூற்றுக் கணக்கான உலக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.  அவற்றுள் முக்கிய காரணமாக மனித இனமும், தொழிற் துறைகளும் அனுதினம் உண்டாக்கி வரும் “கிரீன் ஹவுஸ் வாயுக்கள்” (பெரும்பான்மையாக கார்பன் டையாக்ஸடு வாயு) என்று தீர்மானம் செய்யப் பட்டுள்ளது.  அதற்கு “ஹாக்கி விளையாட்டுத் தண்டு போல்” உள்ள உஷ்ணப் பதிவுகளை (Hockey Stick Temperature Chart) வரைந்து காட்டி வெர்ஜீனியா பல்கலைக் கழகப் பேராசியர் மைக்கேல் மான் (Michael Mann) அதை முதலான காரணமாகக் கூறுகிறார். ஆனால் அந்த முடிவைச் சவாலாக ஏற்றுக் கொண்டு தர்க்கமிடுவாரும் புறக்கணிப்பாரும் பலர் இருக்கிறார்கள்.  பூகோளச் சூடேற்றத்துக்குக் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் மட்டும் அல்ல, வேறு மூலக் காரணங்களும் இருப்பதாகக் கூறுவோரும் இருக்கிறார். அதில் இரண்டாவது காரணம் : பிரபஞ்சத்தின் காலாக்ஸி விண்மீன்கள் தோற்ற மூலத்தால் (Stellar Origin) பூமி சூடாகிறது என்று டாக்டர் சூன், டாக்டர் பலிவுனாஸ் (Dr. Soon & Dr. Baliunas) இருவரும் 2003 ஆம் ஆண்டில் வெளியான “காலநிலை வரலாறும் சூரியனும்” என்னும் விஞ்ஞான வெளியீட்டில் கூறியிருக்கிறார்கள்.

 

How cosmic rays make clouds

தர்க்கத்தில் மூன்றாவது காரணமாக ஜெரூஸலம் பௌதிகக் கூடத்தின் வானியல் பௌதிக விஞ்ஞானி டாக்டர் நிர் ஷாவிவ் (Nir Shaviv) ஆட்டவா பல்கலைக் கழகத்தின் பூகோள இரசாயனப் பேராசிரியர் யான் வைஸெர் (Jan Veiser) இருவரும் பூகோளச் சூடேற்றத்தைப் பெருமளவில் பாதிப்பவை பூமியில் பொழியும் அகிலக் கதிர்கள் (Cosmic Rays) என்று அறிவித்தனர்.  அகிலக் கதிர்கள் என்பவை பொதுவாகப் புரோட்டான், எலெக்டிரான்கள் கொண்ட அணுக்கருக்கள் (Atomic Nuclei). அவை பூமியின் வாயு மண்டலத்தை உயர்ந்த சக்தியோடு மோதுகின்றன.  அவ்விதம் தாக்கி வாயு மண்டல மூலக்கூறுகள் வெளியேறிப் பெரும்பான்மை சக்தி வெப்பமாக விடுவிக்கப் படுகிறது. பூகோளச் சூடேற்றம் என்பது மனிதன் உண்டாக்கிய நிகழ்ச்சியன்று !  அது பிரபஞ்சத்தில் சுற்றி மீளும் ஓர் இயற்கை நிகழ்ச்சியாகும் என்பது அவரது முடிவு !

பூமியில் பொழியும் அகிலக் கதிர்களின் போக்கு

வரைபடத்தைப் பாருங்கள் :

பூமியில் விழும் “அகிலக் கதிர்களின் திரட்சி” (Cosmic Ray flux) மிகையாகும் போது, பூகோளத்தின் உஷ்ணம் இறங்குகிறது !  அதுபோல் அகிலக் கதிர்களின் திரட்சி குறைவாகும் போது பூகோளத்தின் உஷ்ணம் ஏறுகிறது.  அகிலக் கதிர்களின் திரட்சி அளவு மாறு படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒரு காரணம் சூரியப் புயல் !  பூமியைப் பொருத்த மட்டில் “சூரியப் புயல்” (Solar Wind) மாறுபாடு புரியும் ஒரு விண்ணியல் நிகழ்ச்சியாய்க் கருதப்படுகிறது.  விண்வெளியில் சூரியப் புயல் அடிப்புச் சமயங்களில் பூமியின் மேல் பொழியும் அகிலக் கதிர்களின் எண்ணிக்கைக் குறைகிறது.  சூரியப் புயல் அடிப்புப் பலவீனமாகும் போது அகிலக் கதிர்களின் திரட்சி மிகையாகிறது.  அப்போது அதற்கேற்ப பூமியின் சூடேற்றமும்  மாறுபடுகிறது !

Fig 6 Cloudy Outlook of Global Warming

அண்டவெளியில் அகிலக் கதிர்களின் திரட்சிப் போக்குகளை அனுதினமோ, மாதத்திலோ அல்லது வருடமாகவோ கண்காணித்துக் கணக்கெடுத்துப் பதிவு செய்யலாம். குறிப்பிட்ட கால ஆண்டு களுக்கு இடையே விஞ்ஞானிகள் பூமியில் வீழ்ந்த அகிலக் கதிர்த் திரட்சியானது கீழ் உயர வாயு மண்டலத்தில் ஆக்கிய மேகக் கவசத்தை (Cloud Cover in the Lower Atmosphere) கணித்திட முடியும்.  சுருக்கமாகச் சொன்னால் மிகையான அகிலக் கதிர் திரட்சி மிகையான மேக மண்டலத்தை உண்டாக்கி சூரிய வெப்பத்தை திருப்பி மேலே எதிரனுப்பும் !  அதாவது மிகையான மேக மண்டலம் பூகோளச் சூடேற்றத்தைக் குறைக்கும்.  அதுபோல் அகிலக் கதிர் திரட்சி குறையும் போது மேக மண்டலத் தோற்றம் குறைந்து சூரிய வெப்பம் மிகையாகப் பூமியைச் சூடேற்றுகிறது. முகில் கவசம் கூடும் போதோ அல்லது குன்றும் போதோ அந்த மாறுதல் பூமியின் “பரிதி ஒளிப் பிரதிபலிப்பைப்” (Earth’s Albedo) பாதிக்கிறது !  சூரிய ஒளி முகில் மண்டலத்தைத் தாக்குக் போது ஓரளவு சூரிய சக்தி (சூரிய வெப்பம்) பிரதிபலித்துத் திருப்பி விண்வெளியில் அனுப்பப் படுகிறது. மேகக் கவசங்கள் கூடுதலாக இருந்தால் மிகையான சூரிய வெப்பம் பிரதிபலித்துத் திருப்பப் படுகிறது.  அப்போது உஷ்ணம் குன்றி பூகோளச் சூடேற்றம் தணிகிறது.  வரைபடத்தில் கார்பன் டையாஸைடு (CO2) அளவைப் பொதுவான கண்ணோட்டத்தில் பார்த்தால் பூகோளம் சூடேறப் பெரும்பான்மைக் காரணம் CO2 என்பது தெளிவாகத் தெரிகிறது.

Fig 9 Voyager Findings

மிகையான CO2 சேரும் போது பூமியில் சூடேற்றம் மிகுதியாக ஏறுகிறது.  அப்படியானால் பூர்வ வரலாற்று உஷ்ணக் கணக்கீடுகளோடு (Phanerozoic Temperature Measurements) ஒப்பிட்டால் CO2 அளவு மாறுபட வேண்டுமல்லவா ?  அவ்விதம் மாறவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.  CO2 அளவுகள் உஷ்ணப் பதிவுக் கோட்டுக்கு ஒப்பாக ஏறாமல் தணிகின்றன.  ஷாவிவ்-வைஸெர் வெளியீட்டின்படி CO2 பூகோளச் சூடேற்றத்துக்குப் பங்கேற்றாலும் அந்த மதிப்பளவு முன்பு எண்ணயதை விடக் குறைந்ததாகவே கருதப்படுகிறது !

கால நிலைக் கோளாறை விளக்க ஒரு புதிய நியதி !

“பூகோளச் சூடேற்றம்” ஓர் விஞ்ஞான நிகழ்ச்சி என்பது சமீபத்தில் (செப்டம்பர் 2007) கண்டுபிடிக்கப் பட்டு வெளியான ஒரு தகவல் மூலம் தெரிகிறது !  மனிதர் உற்பத்தி செய்யும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் ஓரளவு வெப்ப ஏற்றத்துக்கு உதவினாலும் பெரும்பான்மை விளைவு இயற்கையின் கோளாறுகளால் நிகழ்கிறது.  ஹென்றிக் ஸ்வென்ஸ்பார்க் & நைஜெல் கால்டர் எழுதிய புதிய நூலில் பூகோளச் சூடேற்ற விளைவுகளைப் பற்றிக் கூறுகிறார்.  அவர்கள் ஆராய்ச்சிகள் புரிந்த ஆய்வுக்கூடம் : டேனிஷ் தேசீய விண்வெளி மையம்.  ஸ்வென்ஸ்மார்க் முயற்சிகள் கோடான கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் அகிலக் கதிர்வீச்சு, சூரியப் புயல் வேறுபாடு, முகில் மந்தை அமைப்பாடு, பூகோள வெப்ப ஏற்ற இறக்கம் ஆகியவற்றுக்குள் இருக்கும் ஓர் உடன்பாட்டு இயக்கத்தைக் கண்டறிந்தன !  அந்த நூலின் முன்னுரையில் “சூரியப் புயலைக்” கண்டுபிடித்த விஞ்ஞானி யுஜீன் பார்க்கர் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.  “ஸ்வென்ஸ்மார்க் பூகோளச் சூடேற்ற வெப்பக் கட்டுப்பாட்டில் முகில் மண்டலக் கவசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்.  ஏனெனில் சூரியன் வெளிவிடும் ஒளிக்கற்றை முகில் கூட்டம்தான் பிரதிபலிக்க வைத்து திருப்பி அனுப்புகின்றன !

 

Galactic cosmic rays

 

மேலும் அவர் கண்டது முகில் மண்டலத்தை உண்டாக்கும் நீர்த் துளிகள் பெரும்பான்மையாக “அயனிகள்” எனப்படும் மின்கொடை ஏறிய துகள்கள் (Ions or Charged Particles) !  அந்த மின் அயனிகளை உண்டாக்குபவை அண்டவெளியில் உள்ள அகிலக் கதிர்கள் !  அந்த நிகழ்ச்சியே அகிலக் கதிர்த் திரட்சி பூமியின் வாயு மண்டத்தில் சூரிய ஒளியை மீள் திருப்பும் முகில் மந்தைகளை உண்டாக்குவது !  அந்தக் கொள்கையே அகிலக் கதிர்களுக்கும், பூகோளச் சூடேற்றத்துக்கும் ஒரு பிணைப்பைப் படைத்திருக்கிறது.  அதாவது பூமியின் மேல் மிகையான அகிலக் கதிர்கள் பொழிவு நேர்ந்தால், அதிகமான முகில் கூட்டம் பெருகிக் காலநிலை தணிந்த வெப்பத்தில் அமைப்பாகிறது.  மனிதர் உண்டாக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்களால் பேரளவு பூகோளம் சூடாவது மீண்டும் செம்மையாக ஆராயப்பட வேண்டும் என்பது நூலாசிரியர்கள் கருத்து.  அதற்கு நூலாசிரியர் நைஜெல் கால்டர் கூறும் காரணம் இதுதான் : பூகோளக் காலநிலை வேறுபாடுகளை அறியச் செய்யப்படும் மின்கணனி முன்னறிவிப்புகள் (Computer Forecasts) நம்பத் தக்கவை அல்ல !  இந்த யுகம் “அகிலக் கதிர்வீச்சுக் காலநிலையியல்,” “காலாக்ஸி பௌதிகத்” துறைகளில் (Cosmo-Climatoloy & Galactic Physics) பெரும் புரட்சி செய்திருக்கிறது !  பூமியின் தட்ப-வெப்ப மாறுதல்கள் அறியும் “காலநிலை விஞ்ஞானம்” (Climate Science) வெறும் கீரீன் ஹவுஸ் வாயுக்களின் சேமிப்பில் வடிக்கப் படுகிறது என்பது நேர்மையான விஞ்ஞான மில்லை என்று ஆலோசனை கூறுகிறார் நைஜெல் கால்டர் !

அகிலக் கதிர்கள் பூகோளச் சூடேற்றத்தைப் பற்றி விளக்குவ

​ ​

தில்லை !அகிலக் கதிர்கள் பூமி சூடாவதைப் பற்றிச் செம்மையாக விளக்குவதில்லை என்று சில விஞ்ஞானிகள் புதிய நியதிக்கு எதிர்ப்புக் கூறியிருக்கிறார்கள்.  அதாவது அகிலக் கதிர்களால் முகில் மந்தைகள் உண்டாகி சூரிய வெப்பத்தை மீள்திருப்பிச் சூடேற்றத்தைக் கூட்டுவதோ குறைப்பதோ மிகச் சிறிதளவு என்பது அவர்கள் 2008 டிசம்பர் 17 ஆம் தேதி வெளியிட்ட சில விஞ்ஞானி

​ ​

களின் கருத்து !  ஆஸ்லோ பல்கலைக் கழகத்தின் நார்வே வாயு மண்டல ஆய்வகத்தின் விஞ்ஞான வெளியீட்டில் “அகிலக் கதிர்கள் பூகோளச் சூடேற்றத்தைப் பாதிக்கின்றன” என்பது நிகழ முடியாத ஒரு சம்பவம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது ! 

fig-7-causes-of-global-warmingபூகோளச் சூடேற்றத்திற்கு முக்கிய காரணம் பரிதியும் பூமியும் !

பூகோளச் சூடேற்றத்திற்கு முக்கிய காரணம் பரிதி, கார்பன் டையாக்ஸைடு அல்ல என்னும் புது நியதி பரவி வருகிறது!  அவ்விதிப்படி மனிதர் உண்டாக்கும் கார்பன் டையாக்ஸைடு இரண்டாம் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது!  4.6 பில்லியன் ஆண்டுகளாக நாமறிந்த பூகோளத்தின் வரலாற்றில் பரிதியை வலம்வரும் பூமியின் பாதை மாற்றம், சுழலச்சுத் திரிபு போன்ற மாறுதல்களே பூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய காரணம் என்பது உறுதியாக்கப் பட்டிருக்கிறது.  சுழலச்சின் கோணம் 23.5 டிகிரி என்பதும், பூமிக்கும் பரிதிக்கும் உள்ள தூரம் 90 மில்லியன் மைல் என்பதும், பூமி வலம்வரும் பாதை வட்டவீதி என்பதும் நிலையான பரிமாணக் கணிப்புகள் அல்ல!  அவை மூன்றும் மெதுவாக ஆமை வேகத்தில் விண்வெளியில் மாறி வருகின்றன.  அம்மாறுதல்களே பூகோளத்தின் வெப்ப மீறல், பனிப்படிவுக்கு முக்கிய காரணம் என்பது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் உறுதி செய்யப் பட்டன!  கடந்த இரண்டு மில்லியன் ஆண்டுகளாக தற்காலப் பனியுகத்தில் ஏற்பட்ட தோற்றம், அழிவுக் கோளாறுகள், பரிதியை வலம்வரும் பூகோளத்தில் மாறி, மாறி மீளும் வட்டவீதி நீட்சி, சுழலச்சின் சாய்வு, துருவத் தலையாட்டம் [Eccentricity, Axial Tilt, Precession] எனப்படும் மூவகைத் திரிபுகளால் நேருகின்றன என்பது 20 ஆம் நூற்றாண்டின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  பூகோள நகர்ச்சியின் அந்த மூன்று சுழற்திரிபுகளே “மிலான்கோவிச் சுழற்சிகள்” [Milankovitch Cycles] என்று அழைக்கப் படுகின்றன.  சுழற்திரிபுகளின் பரிமாணத்தையும், மீளும் காலத்தை ஆண்டுகளில் கணக்கிட்டுக் காட்டியவர் செர்வியாவின் வானியல் விஞ்ஞானி [Serbian Astronomer] மிலான்கோவிச்.  பரிதியை வலம்வரும் வட்டவீதி சிறிது நீண்டு நீள்வட்டமாகி மீண்டும் வட்டவீதியாகும் காலப் பரிமாணம் சுமார் 100,000 ஆண்டுகள் என்றும்,  பூகோளத் துருவத் தலையாட்ட மீட்சி 25,800 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றும், சுற்றும் அச்சு 21.5 டிகிரி முதல் 24.5 டிகிரி வரை திரிபு எய்தி மீண்டும் வர சுமார் 41,000 ஆண்டுகள் ஆகும் என்றும் மிலான்கோவிச் கணித்து அறித்தார்.

 

Fig 8 Earth Rotating Axis Tilt

பூகோளச் சுழலச்சின் சாய்வு [Earth’s Axila Tilt]

பூகோளச் சுழலச்சு, சுற்றுப் பாதை மட்டத்துக்குச் சரிந்துள்ள கோணமே சாய்வுக் கோணம் [Tilt Angle]  எனப்படுகிறது.  அந்தச் சரிவுக் கோணம் 22.5 டிகிரி முதல் 24.5 டிகிரி வரை 41,000 ஆண்டுகளில் மாறி, மாறி மீண்டும் பழைய கோணத்துக்கே வருகிறது.  பூமியின் நான்கு காலநிலை மாறுதல்

​ ​

களுக்குப் பூமியின் சுற்றச்சின் சரிவே கரணம்.  குன்றிய சரிவுக் கோணம் பூமத்தியப் பகுதிக்கும், துருவப் பகுதிக்கும் உள்ள வெப்ப உறிஞ்சல் வேறுபாட்டை மிகையாக்குகிறது.  குன்றிய சரிவுக் கோணத்தில் அதிகமான பனித்தட்டுகள் துருவங்களில் உருவாகின்றன.  அதாவது சூடான குளிர்காலத்தில், சூடான வாயு மிகையான நீர்மை ஆவியை [Moisture] உட்கொண்டு, பிறகு பனிப் பொழிவாகப் பெய்கிறது.  மேலும் வேனிற் காலம் மித வெப்பத்தில் நிலவி, பனிப்பாறை உருகுதல் வேகம் குறைகிறது.  தற்போது சரிவுக் கோணம் [23.5] சுமாராக நடுவில் உள்ளது.  பூகோளத் தலையாட்டம் துருவ நட்சத்திரம், வேகா நட்சத்திரம் என்னும் இரண்டு விண்மீன்களின் [Pole Star & Vega Star] இடையே நிகழ்கிறது.  அந்தத் தலையாட்டம் 23,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீள்கிறது.  சுற்றும் பம்பரத்தின் தலையைப் போல் பூமியின் சுற்றச்சும் சுழல்கிறது!  அந்தத் தலை யாட்டத்தால், பூகோளத்தின் வடகோளம், தென்கோளம் ஆகிய பகுதிகளில் குறிப்பிடத் தக்க வெப்பக் குளிர்ச்சி மாறுபடுகள் உண்டாகுகின்றன.
 

(தொடரும்)

++++++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – What Does Anti-Matter Exist ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20 Science Daily – Cosmic Rays Linked to Global Warming (July 31, 2002)
21 A Cloudy Outlook of Global Warming (Aug 22, 2003)
22 No Link Between Cosmic Rays & Global Warming By : Fraser Cain (July 3, 2007)
23 Cosmic Rays Blamed for Global Warming By : Richard Gray (Feb 11, 2007)
24 The Chilling Stars – A New Theory of Climate Change By : Henrik Svensmark & Nigel Calder  (Sep 26, 2007) Totem Books (256 Pages $ 15.95)
25 Discover Magazine : Cosmic Rays & Global Warming By : Phil Plait Danish National Space Center (July 3, 2007)
26 Environmental Research Web : Could Cosmic Rays Cause Global Warming ? [Apr 3, 2008]
27  Physorg.com – Space & Earth Science – Cosmic Rays Do Not Explain Global Warming [Dec 17, 2008]

28  http://www.skepticalscience.com/cosmic-rays-and-global-warming-advanced.htm

29  http://www.sott.net/article/234213-Global-Warming-Caused-by-Cosmic-Rays-and-the-Sun-Not-Humans  [August 26, 2011]

30  http://www.popsci.com/science/article/2011-08/cern-experiment-finds-fragile-link-between-cosmic-rays-and-cloud-formation-climate-change  [August 25, 2011]

31  http://blogs.telegraph.co.uk/news/tomchiversscience/100136713/cosmic-rays-not-causing-global-warming/ [February 10, 2012]

32  http://www.spacedaily.com/reports/Cosmic_ray_finding_999.html [September 5, 2013]

33 http://www.dailygalaxy.com/my_weblog/2013/09/ecoalert-milky-ways-cosmic-rays-have-direct-impact-on-earths-weather-climate.html  [September 4, 2013]

 

******************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) (September 8, 2013)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 26தாகூரின் கீதப் பாமாலை – 80 காலியான என் கூடை .. !
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *