[முன் வாரத் தொடர்ச்சி]
“பிறந்தது மதுரையில். எம்.எஸ்சி. சயன்ஸ் பட்டம் பெற்றது, மதுரைக் கல்லூரியில். பெற்றோர்கள் இருவரும் அங்குதான் சொந்த வீட்டில் இருக்காங்க. காந்தியைப் பின்பற்றி அப்பா 1942 இல் சிறை சென்று, இப்போ தியாகிகள் பென்ஷன் பெற்று ஓய்வில் இருக்கார். அப்பாவுக்கு எழுபது வயது. அம்மாவுக்கு அறுபத்தி ஐந்தைத் தாண்டி விட்டது. நானும் தங்கையும் இரண்டே பேர்கள்தான்”
“உங்க அப்பா சுதந்திரக்குப் போராடிய ஒரு தியாகின்னு பெருமைப் படுறேன். நீங்க ஏன் எஞ்சினியரிங் கல்லூரிக்குப் போகலே?”
“அப்பாவாலே சப்போர்ட் பண்ண முடிய வில்லை. எனக்கும் ஆசை தான். என்ன செய்வது? எம்.எஸ்சி. முடிச்சு வேலைக்குப் போய் சம்பாதிக்கும்படி அப்பாவின் உத்தரவு”
“உங்களுக்குக் கணிதத்திலே எப்படி ஆர்வம் அதிகமாச்சு?”
“மதுரைக் கல்லூரி பிராமணர் நடத்தும் கல்லூரி. மாத்ஸ் பரீட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கிய சில மாணவரில் பிராமணர் அல்லாதவன் நான் ஒருவன் மட்டுமே. வைஸ் பிரின்சிபால் சுப்ரமணிய ஐயர் தனியாக என்னை அவரது ஆபீஸுக்கு அழைத்துச் சென்று முதுகில் தட்டிக் கொடுத்து, கணக்கில் நூற்றுக்கு நூறு நான் வாங்கியதற்குத் தன் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்”
“கணித மேதை ராமானுஜனுக்கு அடுத்த படியா?”
“ராமானுஜன் தெய்வ அருள் பெற்ற ஞானச் சிறுவன்! நான் அவரது கால் தூசிக்குச் சமம்! ஏழு வயதிலேயே அவரது கணித ஞானம் பளிச்சென வெளிப்பட்டது! பன்னிரெண்டு வயதில் கடினமான லோனியின் டிரிகினாமெற்றியைக் கரைத்துக் குடித்தார். பாவம் அந்த கணிதச் சுடர் முப்பத்தி ரெண்டு வயசிலே காச நோயில் அணைந்து போனது! ….. உங்களைப் பற்றி எனக்குச் சொல்லுங்க” என்றான் சிவா.
“பூனேயில்தான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, விவாகம் புரிந்து கொண்டது எல்லாம். எம்.ஏ. லிட்ரேச்சர் பட்டம் வாங்கியது பூனே யுனிவர்ஸிட்டியில். என் பெற்றோரும், கல்யாணமான தங்கையும் அங்கே இருக்கிறார்கள். ஆனந்த், என் கணவர் மிலிடரி கல்லூரியில் படித்து எஞ்சினியரானவர். திருமணம் ஆனதுமே, ஆனந்துக்கு முதல் பணி கோவை ராணுவ பயிற்சி முகாமில் கிடைத்தது. சித்ரா பிறந்தது, இந்தக் கோயமுத்தூரில்தான். காஷ்மீருக்கு மூணு மாசம், ஆறு மாத விஷேச டியூட்டி அடிக்கடி ஆனந்துக்கு வரும். அதில் ஒரு முறைப் பங்கு கொள்ளப் போனவர் திரும்பி ….வரவில்லை” புனிதாவின் தொண்டை சட்டென அடைத்துக் கொண்டது. கண்கள் இரண்டும் மூடின. கண்ணீர் மடை திறந்தது.
சற்று அங்கு மௌனம் நிலவியது. கண்களைச் சேலையில் துடைத்துக் கொண்டாள், புனிதா.
“தமிழில் எப்படி அழகாக உங்களால் பேச முடிகிறது?” என்று கேட்டான் சிவா.
“நானும் ஆனந்தும் மாலை வேளைகளில் தனியாகத் தமிழ் கற்றோம். கோவை ராணுவப் பயிற்சி முகாமல் இருப்பவர் அநேகர் தமிழ்ப் படையாட்கள். தமிழ் தெரியாமல் அவர்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது? கணவர் தமிழ் படிக்கும் போது, நானும் சேர்ந்து கொண்டேன். சித்ரா படித்ததே தமிழ்ப் பள்ளியில்தான். உங்களுக்கு யார் எழுதிய புத்தகங்கள் பிடிக்கும்?” என்று கேட்டாள் புனிதா
“தமிழில் பாரதியாரின் பாக்கள், டாக்டர் மு.வரதராசனார், அகிலன், பார்த்தசாரதி, காண்டேகர் நாவல்கள் என்னைக் கவர்ந்தவை. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஸாவின் நாடகங்கள், ஸோமர்செட் மாகம், பேர்ல் எஸ் பெக், டால்ஸ்டாய் நாவல்கள், எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். உங்களுக்கு யாரெல்லாம் பிடிக்கும்?”
“எனக்கும் உங்களைப் போல் பேர்ல் எஸ். பெக், டெயிலர் கால்டுவெல் மற்றும் பெர்னாட்ஸா, ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பிடிக்கும். எங்க நிர்மாலா கல்லூரியில் ஒவ்வோர் ஆண்டு விழாவிலும் நான் டைரக் செய்யும் நாடகங்கள் அவை. தமிழ் எளிய மொழி! இனிய மொழி! ஒற்றை வரி ஒளவையாரைப் போல, இரட்டை வரி திருக்குறளைப் போல, நால்வரி நாலடியாரைப் போல ஒழுக்க நெறிகள் மராட்டியில் இல்லை! தெள்ளு தமிழில் இனிமையாக ஆண்டாள் எழுதிய திருப்பாவை போல மராட்டியில் எவரும் எழுதவில்லை!”
சற்று மௌனம் நிலவியது. சிவா எதிர்பார்க்காத போது புனிதா சட்டென ஒரு கேள்வியை வீசி, அவனைத் திடுக்கிடச் செய்து, அவனது கண்களை நோக்கினாள்.
வெண்ணிலவு நீ எனக்கு! வீசும் ஒளி நான் உனக்கு!
“ஒரு மராட்டியப் பெண்ணை விவாகம் செய்து கொள்ள .. உங்க அம்மா, அப்பா ஒப்புக் கொள்வார்களா?” …என்று பட்டெனக் கேட்டாள் புனிதா. சிவா பதில் கூற முடியாது நெஞ்சடைத்துக் குரல் விக்கிக் கொண்டது.
“என் அப்பாவும், அம்மாவும் சம்மதம் தர மாட்டார்கள். சுற்றத்தாரின் அவதூறான பேச்சுக்கு அவர்கள் அஞ்சுவார்கள். இந்த விவாகத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்!” என்று சிவா சொல்லியதும் புனிதாவின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தன.
“ஆனால் நான் முழு மனதாய் மணம் செய்து கொள்வேன்” என்று சிவா தொடர்ந்ததும் புனிதாவின் முகத்தில் ஒளி பெருகியது.
“உங்க பெற்றோர் ஒத்துக் கொள்வார்களா?” என்று கேட்டான் சிவா.
“மனப்பூர்வமாய் ஆசீர்வதிப்பாங்க. இதற்கு முன்பு இப்படி நான் இருமுறை முயன்று திருமணம் நின்று போயிருக்கு” புனிதாவின் கண்களில் ஈரத் துளிகள் மிதந்தன.
“அந்தத் தோல்வி உங்களை வருத்துது! ஆனால் எனக்கு எல்லை யில்லா ஆனந்தம் அளிக்குது! புனிதாவின் கைகளை நான் பற்றிக் கொள்ள வேணுமென விதி எழுதி யிருந்தால், யார் அதை மாற்ற முடியும்?” என்று சிவா சொல்லியதும் புனிதா மனம் விட்டுச் சிரித்தாள். அப்போது ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தன!
“நான் கணவனை இழந்தவள் என்று என்மேல் வெறுப்பு இல்லையா?”
“இல்லை. நீங்க பொட்டு வைப்பது, பூ வைப்பது, புத்தாடை அணிவது மிகவும் பிடிக்குது. மறுமணம் புரிய விரும்புவது, எனக்கு ஊக்கம் அளிக்குது! முதல் நாள் பார்த்த போதே, என் மனம் உங்களை நாடியது. அப்போது நீங்க யார் என்றோ, உங்க தனியான வாழ்க்கை பற்றியோ எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் ரூம் ஆண்களுக் கில்லை என்று என்னை விரட்டிய அன்றைய தினமே, என் நெஞ்சில் உங்கள் உருவம் பதிந்து விட்டது. என்னை நீங்க விரட்ட விரட்ட, ஏனோ என் மனம் உங்களைத்தான் விரும்பியது! அன்று திரும்பிப் போகவே மனமில்லை, எனக்கு! போகப் போக என் இதயம் உங்க வசப்பட்டு உறுதியாகி, எப்படி இதைக் கேட்பது என்று தெரியாமல் அலை மோதினேன்”.
அப்போது புனிதாவின் கண்களில் நீரருவி பொங்கியது.
“எனக்குப் பதினெட்டு வயது வயசுக் குமரிப் பெண்ணிருப்பது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?”
“மனக் கஷ்டம் இருக்கு. ஆனால் சித்ரா, உங்க அருமை மகள்! இன்னும் சில வருசங்களில் அவள் கல்யாணமாகிப் போய் விடுவாள். சித்ரா நம் இல்வாழ்வுக்கு இடராகத் தோணவில்லை! அந்த மனத்தாங்கலை நான் தாங்கிக் கொள்ள முடியும்”.
“சித்ரா இப்போ என்னுடன் இந்த வீட்டில் இருப்பது உங்களுக்கு எப்படி தோணுது?”
“அவளுக்கு என்மேல் விரும்பம் இருக்கு. நம்ம விவாகத்தால் சிக்கல் ஏற்படலாம்! முதலில் நம் விவாகத்துக்கு சித்ரா ஒப்புக் கொள்வாளா?”
“அவள் ஒப்புக் கொள்ள மாட்டாள்! அது போகட்டும், சித்ராவை நீங்க விரும்புகிறீர்களா?”
“சித்ரா மீது எனக்கு விருப்பம் இல்லை! எந்த விதத்திலும் அவள் எனக்குப் பொருத்தம் இல்லை”
“சித்ரா நமது விவாகத்தை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆனால் அவள் மராட்டிய வாலிபன் ஒருவனை மணம் புரிய வேண்டுமென நினைக்கிறேன். அவள் மனதில் எந்த நிழல் ஆடுகிறதோ?”
“எனக்கு இந்த விவாகத்தில் முழு விருப்பம். கொஞ்சம் அவகாசம் கொடுங்க. தங்கையின் திருமணம் முடிஞ்சதும் என் பெற்றோரிடம் இதைப் பற்றி நான் பேச வேண்டும்”
“உங்கள் தங்கையை பற்றிச் சில விபரம் அறிந்து கொள்ள ஆவல். என்ன படித்திருக்கிறாள்?”
“ஹைஸ்கூல் முடித்து விட்டு, மதுரைத் தபால் ஆபீஸில் சாதாரண வேலை செய்து வருகிறாள். வயது முப்பதைக் கடந்து விட்டது. உணவைக் கட்டுப் படுத்தி உடல் பெருக்காமல் பார்த்துக் கொள்கிறாள். கடந்த பத்து வருசங்களாக தங்கை கல்யாணத்தை முடிக்க முடியாது, இன்னும் தள்ளிக் கொண்டே போவுது.
பானமடி நீ எனக்கு! பாண்டமடி நான் உனக்கு!
புனிதாவின் சிந்தனையில் சற்று ஆழ்ந்தாள்.
“உங்களுக்கு கொஞ்சப் பண உதவி செய்யலாம் என நினைக்கிறேன், நீங்க ஏத்துக் கொண்டால்”
“வாடகை தர முடியாத நான் எப்படி உங்களிடம் இன்னும் கடன் வாங்குவது?
“என் கணவர் இறந்த பிறகு, ஆயுள் இன்சூரன்ஸ் தொகை பெரு மளவில் கிடைத்தது. பூனேயில் இருந்த அவருடைய பூர்வீக வீட்டை விற்று இன்னும் சேமிப்பு உயர்ந்தது. கல்லூரிச் சம்பளப் பணமே மாதா மாதம் எனக்கு மிஞ்சுகிறது. சித்ராவின் திருமணத்துக்கு வேண்டிய பொன்னும் பொருளும் நிறைவாகவே இருக்கிறது”
“பேர் மட்டும் தெரிந்த என்னை நம்பி பெரிய தொகையைத் தர எப்படி முடிவு செய்தீங்க? எதற்காக உதவி செய்றீங்க?” புனிதா பதில் சொல்ல முடியாமல் சற்று திண்டாடினாள். சொல்ல நினைத்தது மனதுக் குள்ளே சிக்கிக் கொண்டது. புனிதாவின் கண்கள் சிவநாதனின் கண்களை நோக்கின! சிவநாதனின் கண்கள் புனிதாவின் இதயத்தை ஊடுறுவின.
“என்னிடம் சும்மா இருக்கும் பணம் உங்கள் தங்கைக்கு வாழ்வளிக்க உதவட்டும் என்று நினைத்தேன்”
“நான் எப்படி இந்தக் கடனை அடைப்பது? எப்படி வட்டி கொடுப்பது?”
“இந்தப் பணத்துக்கு நான் வட்டி வாங்கவும் விரும்ப வில்லை. முதல் வாங்கவும் விரும்பவில்லை” சிவநாதன் திடுக்கிட்டு அதிர்ச்சி அடைந்தான்.
“நீங்க என்ன சொல்றீங்க?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.
“தயவு செய்து நான் தரும் பணத்தை வரதட்சணையாய் எண்ண வேண்டாம். நம் விவாகம் நடக்காமல் போனாலும், உங்க தங்கையின் திருமணத்துக்குத் தருகிறேன்” அதிர்ச்சி அடைந்த சிவாவின் கண்களில் கண்ணீர்த் துளிகள் அரும்பின.
“இந்த உதவியை நான் மறக்க முடியாது, மிஸ் புனிதா?” எழுந்து போகக் கிளம்பினான் சிவா.
புனிதா முகமலர, “இனிமேல் நீங்க மாடி அறைக்கு வாடகை தர வேண்டாம்! வெளியே ஹோட்டலுக்குச் சாப்பிடப் போக வேண்டாம். எங்க வீட்டிலே தினம் சாப்பிடலாம். சொல்ல மறந்து விட்டேன் சிவா. என்னை மேடம் என்றோ, மிஸ். புனிதா வென்றோ அழைக்க வேண்டாம். புனிதா என்று விளித்தால் போதும்” என்று அழுத்திச் சொன்னாள்.
[தொடரும்]
- ஈழநாடு என்றதோர் ஆலமரம்: ஒரு வரலாற்றுப் பதிவுக்கான அழைப்பு
- ஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதை
- நைஸ்
- எழுந்து நின்ற பிணம்
- உடலின் எதிர்ப்புச் சக்தி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -40 என்னைப் பற்றிய பாடல் – 33
- ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)
- மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்
- உரையாடல் அரங்கு – 13
- மறுநாளை நினைக்காமல்….
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……18
- தலைகீழ் மாற்றம்
- ‘யுகம் யுகமாய் யுவன்’
- முக்கோணக் கிளிகள் ! [4] [நெடுங்கதை]
- புகழ் பெற்ற ஏழைகள் – 23
- கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு
- கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது
- நீங்காத நினைவுகள் 16
- கறுப்புப் பூனை
- மருத்துவக் கட்டுரை மயக்கம்
- திலீபன் கண்ணதாசன் கவிதைகள்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 26
- பால்வீதி ஒளிமந்தையின் அகிலவெளிக் கதிர் வீச்சுகள் [Cosmic Ray Showers] பூகோளம் சூடேறவும், காலநிலை மாறுபாடவும் நேரடித் தாக்கம் விளைவிக்கும்.
- தாகூரின் கீதப் பாமாலை – 80 காலியான என் கூடை .. !