தமிழ்ச்செல்வியின் முதல் கவிதை நூல் பற்றி

தமிழ்ச்செல்வியின்  முதல் கவிதை நூல் பற்றி
This entry is part 15 of 26 in the series 27 அக்டோபர் 2013

சி. ஜெயபாரதன், கனடா

image (1)காதல் உறவைப் பற்றி எழுதிக் கம்பனும், காளிதாசனும், பாரதியும், பாரதிதாசனும், கண்ணதாசனும் பல்வேறு காவியங்கள் படைத்துள்ளார். இன்பத்துப்பால் என்று வள்ளுவர் காதலைப் பற்றியும், காமத்தை பற்றியும் எழுதி இருக்கிறார். ஆனால் காதலைப் பற்றிக் கவிதைகள் எழுதித் தமிழில் காவியம் படைத்த பெண்டிர் மிக மிகச் சிலரே. பொதுவாகப் பெண்டிர் காதலைப் பற்றி வெளிப்படையாகச் சொல்ல மாட்டார், சொல்லக் கூடாது, சொன்னால் பலருக்குத் தாங்காது, மனம் உடைவார். பெரும்பான்மைப் பெண்டிர் விரும்பினாலும் சொல்லத் தயங்குவார். காரணம் அவளது பெற்றோர், சுற்றத்தார் திட்டுவார், அண்ணன், தம்பி வெறுப்பார். கணவன் இப்படி எழுதும் மனைவியைத் தள்ளி வைத்திடுவான். சமூகம் அவளைக் காமாந்தகி என்று ஏசும், கற்பில்லாதவள் என்று மாசு கற்பிக்கும். துணிச்சலுடன் உள்ளத்தில் எழும் தூய காதல் உணர்ச்சிகளை, தமிழ்ச்செல்விபோல் எழுத்து வடிவில் காவியம் படைக்க முன்வரும் பெண்டிர் கோடியில் ஒருசிலரே. ராஜபுத்திர வம்ச மகாராணி மீரா, தனது கணவரான மன்னவர், ராணாவைப் புறக்கணித்து, அரண்மனை விட்டுச் சென்று ஆலயம் தோறும் சுற்றுலா செய்து, கண்ணன் மீது காதல் கொண்டு உருக்கமான அற்புதக் கீதங்கள் பாடினார். அதுபோல் கண்ணன் மீது காதல் கொண்டு தமிழில் பாக்கள் எழுதி திருப்பாவை, திருவெம்பாவை காவியங்கள் படைத்தாள் கவிக்குயில் ஆண்டாள். அந்தக் கலாச்சாரக் காவிய வழியில் உதித்த காதல் உள்ளக் கவிதாயினிகளில் ஒருவர்தான் தமிழ்ச்செல்வி.

இந்தக் கவிதை முத்துக்களில் ஒரு பெண் காதல் உணர்வுகளை வெளிப் படையாகக் குறிப்பிடுவதாய்ச் சிலருக்குத் தோன்றலாம். சிலருக்கு வீணான வேலையாய்த் தெரியலாம். சிலர் இவற்றைப் புறக்கணிக்கலாம். சிலர் படித்துக் கேலி செய்யலாம். காதல் உறவில் மூழ்கிடும் ஆண்-பெண் இருபாலரில் சரிபாதியான பெண்டிர் குழாம் காதலைப் பற்றி இப்படி வெளிப்படையாக எழுதுவதா என்று கோபப்படும் ஆடவர், மாதர் பலர் இருக்கலாம். ஆனால் இவ்விதச் சிந்தையிலிருந்து சற்று வேறுபட்டுச் சமூகத்தில் நாகரீக, மனித நேயப் பக்குவ மனங்கொண்ட வாலிப, முதிய மானிடரே படித்துத் தமிழ்ச்செல்வியின் இலக்கியப் படைப்புத் திறனை வரவேற்றுச் சுவைக்க முடியும் என்பது என் கருத்து.

இத்தகைய உருக்கமான, அழுத்தமான காதல் கவிதைகளை, அணு அணுவாய் விளக்கி படிப்படியாய் எடுத்துக் கூறி, ஓரிளம் மாது ஏன் எழுதினார், அந்த மர்மக் காதலன் யார் என்று துப்புவேலை துவங்காது, கவிதைக் கனிகளைச் சுவைத் தின்ன வேண்டுவதே என் அன்புக் கட்டளை. தன் கவிதைகள் வாசகர் மனதில் எவ்வித ஆதரவு, எதிர்ப்புக் கொந்தளிப்புகளை உண்டாக்கும் என்று இந்தக் கவிதாயினி ஏதும் கவலைப் படவில்லை. போற்றுபவர் போற்றட்டும், தூற்றுபவர் தூற்றட்டும், தொடர்ந்து சொல்வேன்; தன் உள்ளம் ஏற்றதொரு கருத்தை வாசகர் முன் வைக்கிறேன் என்று தைரியமாக எழுதுகிறார்.
காதல் இனியது, கசப்பது, காயப் படுத்துவது, தேய்வது, முறிவது, மறைவது. கரும்பு நுனிபோல் துவங்கி முடிவில் இனிக்கலாம். இல்லை கரும்பு அடிபோல் முதலில் இனித்துப் பின்னால் சப்பென்று சக்கையாய்ப் போகலாம். காதல் தோல்விக்கு முதல் காரணம்: காதல் அனுதினமும் புதுப்பிக்கப் படாமல் மங்கிச் சிக்கலாகிப் போவது. புதுபிக்கப் படாத காதல் கறைபிடித்து துருப்பிடித்துப் போகும். ஏமாற்றமும், துயரும் நேராத காதல் உறவுகள் மிக மிகச் சொற்பம். காதல் திருவிளை யாடல்களில் முடிவில் காயமடைவது பெரும்பாலும் காரிகையே.

அவர் எழுதிய சிலவரிகளின் மெய்ப்பாடுகளை முன் வைத்து வாசகரே அவரை வரவேற்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

1. நகர்வாயோ நடப்பாயோ பறப்பாயோ ?
முறைகள் அல்ல

தொடர் இயக்கம் தான் வாழ்வு.

2. சுற்றங்களின் முன்

அவமானச் சின்னமாக நிறுத்தப்படுகிறேன்

கழுத்தில் இல்லாத தாலி

பேச்சுப் பொருளாகிறது அவர்களுக்கு

நமக்குள் நடந்த

உடன் படிக்கைக்கு

சாட்சி யார்?

இதுதான் ஏமாறும் மாதருக்குக் கிடைக்கும் காதல் வெகுமதி.

3 கண்ணீர் ததும்புகிறது
நீ என் வாழ்வின் இறத்தல் அடையாளம்
என் உணர்வுகள் பகிரப்படாமல்
முடக்கப் பட்டதே.
என் கனவுகளுக்கு இறக்கை
ஒடித்து இறகுகள் பிய்க்கப்பட்டதே !
4 என் உணர்வே பெண் உணர்வே

இத்தனை காலம் எங்கிருந்தாய்…?
ஆண் வலி தரும் வலியன்
என அறிந்தும் கூட
ஏனடி அவன் பின் சிறகடித்தாய்…?

தமிழ்ச்செல்வியின் முதல் கவிதை நூலிது. குடத்து விளக்காய் மறைந்துள்ள இந்தக் கவிக்குயிலுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.

சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++++

நூல் பெயர்: இது நிகழாதிருந்திருக்கலாம்

ஆசிரியர் : ஜி.ஜே. தமிழ்ச் செல்வி

பக்கங்கள் :

​88
விலை : ரூ. 80

வெளியீடு : தாரிணி பதிப்பகம் [திரு. வையவன்]

4 ஏ – ரம்யா பிளாட்ஸ்

32 – 79 காந்தி நகர் 4வது மெயின் ரோடு

அடையார்

சென்னை – 600020.

Series Navigationவணக்கம் சென்னைபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை

4 Comments

  1. அன்புள்ள தமிழ்ச்செல்விக்கு

    வணக்கம். இத்துடன் இது நிகழாதிருந்திருக்கலாம் கவிதைத் தொகுதியின் பீடீஎப் அனுப்பியுள்ளேன்.அண்மையில் வெளி வந்த பொய்ம்மை யற்ற காதல் கவிதைத் தொகுப்பு இது. தங்கள் இணைய நண்பர்கள் அனைவரும் காணவேண்டியது. யார் வேண்டுமானாலும் திறந்து வாசிக்கலாம். யார் யாருக்கெல்லாம் அனுப்ப முடியுமோ அன்புகூர்ந்து அனுப்பி வையுங்கள் அவர்களிடம் மதிப்புரை வாங்கி அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

    Idhu Nigazhaadhu irundhirukk.pdf
    1217K View Download

    மிக்க அன்புடன்
    வையவன்

  2. ஜி. ஜே. தமிழ்ச்செல்வியின் ” இது நிகழாதிருந்திருக்கலாம் ” எனும் கவிதை நூலுக்கு திரு சி. ஜயபாரதனின் அறிமுகவுரை காதல் பற்றிய கருத்துரையாகவும், படிப்பதற்கு இனிமையாகவும் உள்ளது. காதல் பற்றி ஒரு பெண் கவிதையில் கூறுவது என்ன என்பதை அறியும் ஆவல் உண்டானது. தமிழ்ச்செல்வியுடன் ஒருமுறை நான் பேசியுள்ளேன். அவருடைய கவிதைகளை திண்ணையில் படித்துள்ளேன்.. இந்த நூலுக்கு நல்ல வரவேற்பு கிட்டும் என்பது திண்ணம்….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  3. நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

    உங்களுக்குத் தமிழ்ச்செல்வியின் கவிதைத் தொகுப்பு நூலை PDF FILE மூலம் அனுப்புகிறேன். மேலும் விரும்பும் நண்பர்கள் ஈமெயில் அனுப்பினால் அவருக்கும் அனுப்பி வைக்கிறேன்.

    பாராட்டுக்கும் நன்றி நண்பரே.

    உங்கள் படைப்பு நூல் “உடல், உயிர், ஆத்மா” மின்னஞ்சலில் கிடைக்குமா ?

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *