மருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை) அத்தியாயம் 1

This entry is part 20 of 26 in the series 27 அக்டோபர் 2013

ஜோதிர்லதா கிரிஜா
1.

grija (1)“என்ன, சாரதா! நம்ம மருமகளைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என்றவாறு வழிபாட்டு அறைக்குள் நுழைந்த சோமசேகரன் சாரதா கண் மூடியவாறு கடவுள் படங்களுக்கு முன்னால் கை கூப்பி நின்றிருந்ததைக் கண்டதும் தன் வாயை மூடிக்கொண்டார். கண்மூடிக் கைகூப்பிப் பிரார்த்தித்து நிற்கும் போது சாரதாவின் செவிகளில் எதுவும் விழாது – அப்படியே விழுந்தாலும் அவள் பதில் சொல்ல மாட்டாள் – என்பது அவர் அறிந்திருந்த ஒன்றாதலால், அவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் தாமும் கண்மூடிக் கைகூப்பி அவளுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டார். சரியாக ஒரு நிமிடத்துக்குப் பிறகு கண் திறந்த சாரதா, “என்ன கேட்டீங்க?” என்றாள்.

வாய் அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்க, அவளது கை தீபாராதனைத் தட்டில் கற்பூரங்களைப் பரப்பி ஏற்றிக்கொண்டிருந்தது.

“நம்ம மருமகளைப் பத்தி நீ என்ன நினைக்கிறேன்னு கேட்டேன்.”

“முதல்ல கற்பூரத்தை ஒத்திக்குங்க,”என்ற அவள் தீபாராதனைத்தட்டை நீட்ட, அவர் கற்பூரங்களின் ஜுவாலையை உள்ளங்கைகளில் பரவவிட்டு முகத்தில் பொத்திக்கொண்டார். பிறகு சாமி படங்களுக்கு முன்னால் விழுந்து வணங்கினார். தட்டைக் கீழே வைத்துக் கற்பூரம் ஒற்றிக்கொண்டபின் சாரதா தானும் வணங்கி எழுந்தாள்.

பிறகு, “நீங்கதான் சொல்லுங்களேன்!” என்றாள்.

“எனக்கென்னமோ நல்ல பொண்ணத்தான் தெரியுது. அடக்க ஒடுக்கமா இருக்கா. குடும்பப் பாங்காவும் இருக்கா. தனிக் குடித்தனத்துக்குத் தூபம் போடக்கூடிய அளவுக் கெல்லாம் போகப்பட்ட பொண்ணாத் தெரியல்லே. நீ என்ன சொல்றே?”

“உங்க கணக்குத் தப்பாப் போகுமா? எனக்கும் அதே கணிப்புத்தான். கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்றா. அநாவசியப் பேச்சுக் கிடையாது. சிடுசிடுப்பும் இல்லே. ஆனா .”

“அதென்ன, ஆனா, ஆவன்னான்னு இழுக்கறே?”

“வாயைத் திறக்காம இருக்கிறவங்களை நம்பக்கூடாதுன்னு சொல்லுவாங்க.”

“அப்படின்னா?”

“நான் ஒண்ணும் நிர்மலாவைப்பத்தித் தப்பா நினைக்கல்லீங்க. நல்ல பொண்ணாத்தான் தெரியுது. பொதுவா அதிகம் பேசாத ஆளுங்க உள்ளுக்குள்ள வேற மாதிரி இருப்பாங்கன்னு நான் கேள்விப்பட்டதைச் சொல்ல வந்தேன். அவ்வளவுதான். வேற ஒண்ணும் பெரிசா இல்லே. நீங்க சொல்ற மாதிரி குடும்பப் பாங்கான பொண்ணு, நம்மைத் தவிர வேற யாரும் இல்லாத பொண்ணு.” .

“ஆமாமா. நீ சொல்றதுலேயும் ஒரு முக்கியமான பாயிண்ட் இருக்கு. தனிக்குடித்தனம் அது இதுன்னெல்லாம் வெவகாரம் பண்ணாது. பண்ணினா அதுக்குத்தான் நஷ்டம். ஏன்னா அம்மாவும் இல்லே, அப்பாவும் இல்லே அதுக்கு.”
“அப்படின்னா, ஒரு நிர்ப்பந்தத்துனாலதான் அது அடங்கி இருக்குன்னு சொல்ல வர்றீங்களா?” என்று கேட்டவாறு சாரதா கீழே சிதறிக் கிடந்த உதிரிப்பூக்களைச் சேகரிக்க முனைந்தாள்.

“என்னது நீ! என் வாயைப் பிடுங்கறே? ஒண்ணு சொன்னா ஒம்பது சேர்த்துப்பே போலிருக்கே? நீ இப்ப சொன்னியே, அதிகம் பேசாத ஆளுங்க உள்ளுக்குள்ள வேறமாதிரி இருப்பாங்கன்னு, அந்த மாதிரியான ஆளா இருந்தாலும் கூட அடங்கி இருக்க வேண்டிய கட்டாயத்திலே இருக்கிற பொண்ணுன்னு சொல்ல வந்தேன். அவ்வளவுதான்.”

“அதுக்கு ஏன் இப்படிப் பட படன்றீங்க? விடுங்க. நமக்குள்ள எதுக்கு வீணான ஆராய்ச்சியும் வாக்குவாதமும்? இந்தக் காலத்துப் பொண்ணுங்களோ¡ட ஒப்பிட்டா, அது எதிர்த்துப் பேசாம பதவிசா நடந்துக்கிட்டு இருக்குல்ல? அது போதும்.”

“ரமேஷ் வேற இப்ப இங்கே இல்லியே? இருந்தாலும், கொஞ்சம் முன்ன பின்ன இருக்க முயற்சி பண்ணுவா. அவன் அமெரிக்காவிலேருந்து திரும்பி வர்ற வரைக்கும் அவ நம்மை அனுசரிச்சுக்கிட்டு இருந்துதான் ஆகணும். வேற புகலிடம் இல்லியே?”

“பாத் ரூம் கதவு ஓசைப்படுது. வரா போலிருக்கு. இத்தோட நிறுத்திக்கலாம்.”

இருவரும் அதன் பிறகு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கழுவுதொட்டியில் வாய் கொப்பளித்த பின் கூடத்துக்கு வந்த நிர்மலாவை நோக்கிப் புன்னகை செய்த சோமசேகரன், “போம்மா! போய், தீபாராதனை ஒத்திக்க,” என்றார்.

நிர்மலா வழிபாட்டு அறைக்கு விரைந்தாள். அவளைப் பார்த்ததும் தீபாரதனைத் தட்டை எடுக்கக் குனிந்த சாரதாவை நோக்கிக் கையமர்த்திய நிர்மலா, “அப்படியே இருக்கட்டும், அத்தை. நீங்க எதுக்குக் குனியறீங்க?” என்றவாறு தானே குனிந்து கற்பூர ஜுவாலையைக் கண்களில் ஒற்றிக்கொண்டபின் சாமி படங்களுக்கு முன்னால் பணிந்து வணங்கி எழுந்தாள்.

எழுந்த மருமகளின் விழிகள் சற்றே கலங்கி இருந்ததைக் கவனித்த சாரதா, ‘பக்திப் பரவசமா, இல்லேன்னா வேற எதாவது காரணமா?’ என்று தன்னைத் தானே வினவியபடி ஓரத்து விழிகளால் அவளைக் கவனித்தாள். மாமியார் தன்னைக் கவனித்துக் கொண்டிருந்தது தெரியாமல், தலையைப் பக்க வாட்டில் நிர்மலா திருப்ப, இருவர் பார்வைகளும் சந்தித்துக்கொண்டன.

மருமகளின் கண்கள் கலங்கி யிருப்பது பற்றிக் கேட்காதிருப்பது சாரதாவுக்குச் சரியாகப் படாததால், “என்னம்மா? ஏன் கண்ணெல்லாம் கலங்கி யிருக்கு?” என்று கேட்டுவிட்டாள்.

“ஒண்ணுமில்லே, அத்தை!” என்று சன்னமான குரலில் சொன்ன போதே அவளது குரல் குழறி, உதடுகள் துடித்துவிட்டன.

“என்னம்மா? எதுவானாலும் எங்கிட்ட சொல்லு. நான் உன்னோட அம்மா மாதிரி!” என்ற சாரதா ஆதரவாய் அவளது முகவாயை நிமிர்த்தினாள்.

“அதை நினைச்சுத்தான் கண் கலங்கினேன், அத்தை! வேற ஒண்ணும் இல்லே,” என்றபடி நிர்மலா சேலை முன்றானையால் தன் கண்களை ஒற்றித் துடைத்துக்கொண்டாள்.
அவளது முகவாயைப் பற்றி யிருந்த தன் கையை விலக்கிக்கொண்ட சாரதா, “ அதிலே கண் கலங்குறதுக்கு என்னம்மா இருக்கு?” என்று கேட்டுப் புன்னகை செய்தாள்.

“சந்தோஷத்திலேதான் அத்தை கண் கலங்கிடிச்சு. எனக்குன்னு யாருமே இல்லே. எல்லாமே எனக்கு நீங்கதான். நீங்க அம்மான்னா, மாமா எனக்கு அப்பா! எனக்குன்னு எந்த நாதியும் இல்லே. உங்களுக்கு நிலையான சுமையா யிருக்கப் போறேன் நான்!”

மருமகளாக அந்த வீட்டுக்குள் நுழைந்த பிறகு சற்றே நீளமாக அவள் பேசிய முதல் பேச்சே அதுதான் என்கிற உணர்வுடன் சாரதா அவளை அன்புடன் ஏறிட்டாள். நிர்மலாவின் கண்களில் மறுபடியும் கண்ணீர் திரண்டு நின்றது.

“சீச்சீ! கண்ணைத் துடைச்சுக்கம்மா. கிருத்திகையும் அதுவுமாக் கண் கலங்காதே.”

“சாரி, அத்தை!”

“சரி, சரி. வா. மூணூபேரும் ஒண்ணா உக்காந்து சாப்பிட்டுடலாம்.”

“நீங்களும் மாமாவும் உக்காருங்க, அத்தை. நான்
பரிமார்றேன்.”

“அதுக்கு அப்புறம் நீ மட்டும் தனியா கொட்டு கொட்டுனு உக்காந்துக்கிட்டு சாப்பிடுவியா? வேணாம்மா. நேத்து வரைக்கும் உன்னோட உக்காந்து சாப்பிட ரமேஷ் இருந்தான். இனிமே தனியா சாப்பிட வேணாம்மா,” என்றபடி சாரதா வழிபாட்டு அறைய்¢லிருந்து வெளியேற, நிர்மலா அவளைப் பின்தொடர்ந்தாள்.

அன்றைய நாளிதழில் கடைசிப் பக்கத்தில் இருந்த சோமசேகரனை நோக்கி, “வாங்க. சாப்பாட்டுக் கடையை முடிக்கலாம்,” என்றவாறு நடந்த மனைவிக்குப் பின்னால் தலை குனிந்தபடி போய்க்கொண்டிருந்த மருமகள் மீது அவர் பார்வை படிந்தது. ‘முகம் வாடி இருக்கு. இருக்காதா பின்னே? தாலி கட்டின ரெண்டே மாசத்துலே புருஷன் அமெரிக்காவுக்குப் போயிட்டான்னா, வருத்தம் இருக்கும்தானே? இன்னும் ஆறு மாசம் பிரிஞ்சு இருக்கணுமே?’

கைகழுவிய பிறகு சாப்பாட்டு மேசைக்கு வந்து அவர் அமர்ந்த போது, சாப்பாட்டு அயிட்டங்கள் அனைத்தும் அதன் மேல் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. நிர்மலா பரிமாறி முடித்து அவருக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். சாரதா எலுமிச்சங்காய் ஊறுகாய் ஜாடியுடன் வந்து உட்கார்ந்தாள்.

“உக்காரும்மா, உக்காரு. நாங்க உக்காந்ததும்தான் நீயும் உக்காரணும்னு ஏதாவது தீர்மானமா?மரியாதை மனசில இருந்தா போதும்மா. நாங்க ரெண்டு பேரும் பெத்த அம்மா-அப்பாவா யிருந்தா இப்படித்தான் நிப்பியா?” என்று சிரித்த சோமசேகரன் கத்திரிக்காய்க் குழம்பை ஆள்காட்டி விரல் நுனியால் ஒற்றி எடுத்து நுனி நாக்கில் வைத்துச் சப்புக்கொட்டி, “பிரமாதம்! அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணுன்னு யாரு சொல்லுவாங்க உன்னை?” என்று பாராட்டிப் புன்னகை செய்தார். நிர்மலாவும் புன்னகை செய்தாள்.

“ஆமா? உனக்கு கார்டியனா யிருந்த அந்த மேரி சமையலெல்லாம் கூட கத்துக் குடுத்தாங்களா? ஏம்மா, நிம்மி?”
“ஆமா, அத்தை!”

“என்னது! நிம்மியா! நிம்மியாவது, அம்மியாவது! நிர்மலான்னு அழகான பேரு இருக்கிறப்ப, நிம்மின்னு எதுக்குக் கூப்பிட்றே?” என்றவாறு சோமசெகரன் அடுத்து உருளைக் கிழங்குக் கறியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.

சாரதா சிரித்துவிட்டு, “ரமேஷ் அவளை அப்படித்தான் கூப்பிட்றான்!” என்றாள்.

“அவன் செல்லமா அம்மி, பொம்மின்னும் இன்னும் என்ன வேணும்னாலும் சொல்லிக் கூப்பிடுவான். நீயும் அப்படிக் கூப்பிட்றதா? அசடு! ரஷ்யாவில தன்னோட பொண்டாட்டியைப் புருஷன்காரன் ‘என் அன்பான பன்னிக்கறியே’ன்னு கூடக் கூப்பிட்டுக் கொஞ்சுவானாம். அப்படிப் பாத்தா நம்ம ரமேஷ் , ‘உருளைக் கிழங்ககுக் கறியே’ ன்னு கூடக் கொஞ்சுவானா யிருக்கும். நீயும் அப்படிக் கூப்பிடுவியா? அம்மா, நிர்மலா! உருளைக்கிழங்குக் கறி பிரமாதம்மா. இது மாதிரி உங்க அத்தை பண்ணினதே இல்லே. புது ருசியா யிருக்கு. பஜ்ஜி வாசனை வருது.”

“சரியாச் சொல்லிட்டீங்க, மாமா.”

“நானே கேக்கணும்னு நினைச்சேன். எப்படிப் பண்ணினே?”

“பஜ்ஜி மாவைப் பிசிறாப் பிசைஞ்சுக்கிட்டேன். அதுல கொஞ்சம் மிளகுத் தூளும் கலந்துட்டு, உருளைக் கிழங்குத் துண்டங்களை அந்த மாவிலே நல்லாப் புரட்டி எண்ணெய்யில போட்டுப் பொறிச்சு எடுத்தேன், அத்தை! வாழைக்காய், குடமிளகாய் இதுலே யெல்லாம் கூட இப்படிக் கறி பண்ணலாம். நல்லாருக்கும்.”
“அதுக்கென்ன? வாங்கிட்டு வந்துட்றேன்.”

“சரியான சாப்பாட்டு ராமன்!”

“என்னது! மருமக முன்னாடி மரியாதை இல்லாம பேசறே?”

“சரி. மரியாதையாவே சொல்றேன். சாப்பாட்டு ராமர்ர்ர். . .” என்று ‘ர்’- ஐ அழுத்திச் சாரதா உச்சரிக்க, நிர்மலா பற்கள் தெரியச் சிரித்தாள்.

பிறகு மூவரும் அவசியத்துக்கு மட்டும் பேசியபடி சாப்பிடுவதில் ஆழ்ந்தார்கள்.

“ஆமா? என்ன, நிர்மலா, இது? நாங்க இன்னும் குழம்பு சாதமே சாப்பிடல்லே. அதுக்குள்ள நீ ரசஞ்சாதம் சாப்பிடத் தொடங்கிட்டே? நல்லா சாப்பிடும்மா.”

“போதும், மாமா. அப்புறம் உடம்பு குண்டாயிடும்.”

“ரமேஷ் அமெரிக்காவிலேருந்து வந்ததும், உன்னைப் பாத்துட்டு, ‘யார் இந்த குண்டுப் பொண்ணு’ன்னு கேட்டுடக் கூடாது! அதானே உன் கவலை?”

நிர்மலா பதில் சொல்லாமல் வெட்கத்துடன் சோற்றை அளைந்துகொண்டிருந்தாள்.

“ரொம்பவும் குண்டாயிடக் கூடாதுதான். ஆனா, அதுக்குன்னு ஈர்க்குச்சி மாதிரியும் இருக்கக்கூடாதில்லே? அப்புறம், ‘நீ எம் பொண்டாட்டிக்குச் சரியாச் சாப்பாடு போடலியா’ ன்னு அமெரிக்காவிலேருந்து வந்ததும் ரமேஷ் கேட்டா நான் என்ன பதில் சொல்றதாம்?”
“அதானே?” என்றவாறு சோமசேகரன் இன்னும் கொஞ்சம் கறியை எடுத்துப் போட்டுக்கொண்டார்.

“தவிர, குண்டாயிருக்கிறதுலேயும் ஒரு தளதளப்பான அழகும் செழுமையும் இருக்கும்மா!”

“ஓ ஹோஹோஹோ!” என்று சத்தம் போட்டுச் சிரித்துவிட்டு, நிர்மலாவைப் பார்த்துக் கண் சிமிட்டிய சோமசேகரன், “உன்னோட அத்தை எம்புட்டு கெட்டிக்காரி பாத்தியாம்மா? . . . இத பாரு, சாரதா. நீ குண்டாயிருக்கேன்றதை வேணா ஒத்துக்கலாம். ஆனா அழகாய் இருக்கேன்றதையோ இல்லாட்டி அவலட்சணமா யிருக்கேன்றதையோ நான்னா சொல்லணும்?” என்றார். நிர்மலா சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

“போதும், நிறுத்துங்க. வழிய வேணாம்!” என்று முகம் சிவந்து வெட்கிய சாரதா, “ நல்லாச் சாப்பிடும்மா. இந்த வயசில சாப்பிட்றதுதான் உடம்பில ஒட்டும்,”.

நிர்மலா சிரித்துவிட்டு, “சரி, அத்தை!” என்றாள்.

“ரமேஷ் அநேகமா இன்னைக்கே •போன்ல பேசினாலும் பேசுவான்.”

“ஆமா, அத்தை! இன்னைக்கே பேசறேன்னிருக்காரு.”

சரியாக மறு நிமிடம், அந்தக் கூடத்தின் மூலையில் இருந்த தொலைபேசி மணியடித்தது.

“அட! ஆயுசு நூறு!” என்று சாரதா சிரிக்கவும், “ அய்யே! இது லோகல் காலும்மா, ” என்று சோமசேகரன் அவளைத் திருத்தினார்.

நிர்மலா விரைந்து சென்று, இடக்கையால் ஒலிவாங்கியை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு, “ஹல்லோ!” என்றாள்.

“ஹல்லோ! எப்படி இருக்கே, பேபி?” என்று ஒலித்த கரகரப்பான குரல் யாருடையது என்பது தெரியாத நிலையில் – ஆயினும் ஓர் எச்சரிக்கை உணர்வுடன் – நிர்மலா சன்னமாக, “யாரு?” என்றாள். மறுமுனையில் ஒலித்த சிரிப்புச் சத்தம் அவளது முதுகுத் தண்டில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

“என்னம்மா, கண்ணு! என்னோட குரல் உனக்குத் தெரியல்லியா?”

ஒலிவாங்கியைப் பற்றி யிருந்த நிர்மலாவின் விரல்கள் அதிர்ந்தன. அவற்றில் சட்டென்று ஓர் ஈரப் பிசுபிசுப்புத் தோன்றியது. மனத்தில் எழுந்த கிலி தன் குரலில் தெரியாதிருக்க வெகு பாடுபட்ட வண்ணம், “நீங்க சொல்ற பேர்ல இந்த வீட்டில யாரும் இல்லீங்க. ராங் நம்பர்,” என்று கூறிச் சமாளித்துவிட்டு அவள் ஒலிவாங்கியைக் கிடத்தினாள். தலையைக் குனிந்துகொண்டு சாப்பாட்டு மேசைக்குத் திரும்பினாள். அவளது இதயத்தின் திடீர் விரைவுத் துடிப்பு அவளுக்கே கேட்டது. கால்கள் சற்றே தள்ளாடின. முகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொள்ள அவள் செய்த முயற்சி வெற்றிபெற வில்லை என்பதை, அவள் உட்கார்ந்ததும், சாரதா கேட்ட கேள்வி உணர்த்தியது.

“ஏம்மா ஒரு மாதிரி இருக்கே? திடீர்னு டல்லாயிட்டியே?”

“ஒண்ணுமில்லே, அத்தை!”

“யார் வேணுமாம் அவங்களுக்கு?”

“யாரோ நவனீதகிருஷ்ணன் வேணுமாம். இங்கே எங்கே போறது, நவனீதகிரு¢ஷ்ணனுக்கும் நந்தகோபாலனுக்கும்?” என்று கேட்டுச் சிரித்து இயல்பான நிலைக்குத் திரும்ப முயன்ற நிர்மலா சோமசேகரன் தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்ததைத் தலை உயர்த்திப் பார்க்காமலே உணர்ந்து சற்றே திகிலடைந்தாள். தன் மீது படிந்திருந்த அவர் விழிகளில் ஒரு நம்பாமை இருந்ததாக அவளது உள்ளுணர்வுக்குத் தோன்றியது.

“நவனீதகிருஷ்ணந்தானே? இன்னும் ஒண்ணரை வருஷம் கழிச்சுக் கூப்பிடச் சொல்லு! தொட்டில்ல காலை உதைச்சுக்கிட்டுப் படுத்திருப்பான். என்னங்க! நம்ம ரமேஷ்க்குக் கொழந்தை பொறந்தா – ஆம்பளைப் பிள்ளையா யிருந்தா – நவனீதகிருஷ்ணன்னே பேரு வச்சுடலாமா?”

“வச்சுட்டாப் போச்சு. ஆனா, அது அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணவேண்டிய விஷயம். நவநாகரிகமா வேற பெரு வைப்பாங்களோ என்னமோ!” என்று சிரித்த சோமசேகரன், “என்னம்மா, யோசிக்கிறே?” என்றார் நிர்மலாவைப் பார்த்து.

நிர்மலாவின் மூளையில் ஒரு மழுங்கல் ஏற்பட்டிருந்தது. மிக வித்தியாசமான அந்தக் கரகரப்புக் குரலுக்குச் சொந்தக்காரனால் தனக்கு என்ன மாதிரியான ஆபத்துகளும் தொல்லைகளும் ஏற்படப் போகின்றனவோ என்னும் திகிலில் இருந்ததால், அவர் கேட்டதை மனத்தில் வாங்காமல், நிர்மலா, “ஆங்?” என்றாள்.

“என்னம்மா, திடீர்னு ஏதோ யோசனையில ஆழ்ந்துட்டே?” என்றார் சோமசேகரன் மறுபடியும்.

“ரமேஷ்னு நெனச்சுக்கிட்டுப் போய் எடுத்தா. அது வேற ஏதோ கொரங்கு. ஏமாத்தமாயிடிச்சு. அதான்!”

“அதுதான் •பாரின் கால் இல்லேன்னு எடுத்த எடுப்பிலேயே தெரிஞ்சிடிச்சே?.. . . ஆமா? அதென்ன, ‘ரமேஷ் கொரங்கு இல்லே, வேற ஏதோ கொரங்கு’ன்ற மாதிரி சொல்றே?” நிர்மலா கோவிச்சுக்கப் போகுது!” என்ற சோமசுந்தரம் மனைவியைச் சீண்டினாலும், அவரது பார்வை என்னவோ ஆழமாக நிர்மலாவின் மீது படிந்திருந்தது. நிர்மலா தலையைக் குனிந்துகொண்டு சிரிக்க முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றாள். ஆனால் அந்தச் சிரிப்பில் உயிர் இல்லாததைக் கவனித்தவர் சோமசேகரன் மட்டும்தான்.

(தொடரும்)

Series Navigationதூக்கமின்மைதாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது .. !
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *