ஆஸ்திரேலிய மண்ணைத் தொட்ட பின் தான் வாழ்க்கை என்ன என்பதை உணர முடிந்தது. விமான நிலையத்தில் பையை வைத்துக் கொண்டு பெற்றோரைத் தேடி அலைந்தான். அவர்கள் சொன்னஎந்தக் குறியீடுகளும் அங்கு இருக்கவில்லை. கூட்டம் அதிகமாக இருந்தது. சீன மொழி பேசுவோர் ஒருவரும் இருக்கவில்லை. சின்ன சீட்டில் வீட்டு முகவரியை வைத்துக் கொண்டு அலைந்தான். அங்கிருக்கும் மனிதர்களிடம் கேட்கலாம் என்றால், நீண்ட முடியும், ஆசிய உருவமும் சாதாரண உடையும் அவர்களை ஓட வைத்தன. அங்கே தனித்துவிடப் பட்டான். அதுவும் அன்னிய நிலத்தில். இறுதியில் ஒரு விமான பணிப்பெண், சீன மொழி தெரிந்திருந்ததால், அவனிடம் வந்து பேசினாள். “எங்கே போக வேண்டும்?” “நான் இந்த முகவரிக்குப் போக வேண்டும்” என்று கூறிவிட்டு, சீட்டைக் கொடுத்தான். அவள் அதை வாங்கிப் பார்த்தாள். “இந்த இடம் சிட்னி. இந்த முகவரி கான்பராவில் இருக்கிறது” என்று சொன்னதும் அதிர்ந்து போனான். தவறான இடத்திற்கு வந்து விட்டோமோ .. இனி என்ன செய்வது? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, “நீங்கள் இன்னொரு விமானத்தில் அங்கு போக வேண்டும்” என்று கூறினாள். அதைக் கேட்டதும், “அது எங்கே இருக்கும்?” என்று உடனே கேட்டான். விமானப் பணிப்பெண் அவன் செல்ல வேண்டிய விமானம் நிற்கும் இடத்தைக் காட்டி விட்டுச் சென்றாள். பயந்து கொண்டே சென்றான். இன்னும் என்னவெல்லாம் பட வேண்டுமோ? ஆங்கிலம் தெரியாமல் திண்டாட வேண்டியிருக்கிறதே என்று வருந்தினான். கான்பரா சென்று சேர்ந்ததும், அங்கும் தன் பெற்றோரைத் தேடினான். அரைமணி நேரம் தேடினான். அவர்களைக் காணவில்லை. தான் வந்த இடம் சரிதானா என்ற ஐயம் ஏற்பட்டது. இனி தன் கதிஅதோ கதி தான் என்று எண்ணி, மிகச் சோர்வுடன், வெறுத்துப் போய் ஒரு நாற்காலியில் தன் பையை தொப்பென்று போட்டு விட்டு, முகத்தை மூடிக் கொண்டு என்ன செய்வதென்று யோசிக்கத்தொடங்கினான். ஹாங்காங் தான் மோசம் என்றால், இங்கு அதை விடவும் மோசமல்லவா? யார் என்னைப் புரிந்து கொள்வார்கள்? பெற்றோரிடம் கொண்டு சேர்ப்பார்கள்? அப்போது யாரோ தோளைத் தொட்டது போல் தோன்றியது. நிமிர்ந்து பார்த்தான். அதீத மகிழ்ச்சி. நின்றிருந்தது அவனது தாய். “அம்மா..” அப்படியே மகிழ்ச்சியில் கத்தினான்.…