[சென்ற வாரத் தொடர்ச்சி]
சீதாயணம் படக்கதை -11
நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா
வடிவமைப்பு : வையவன்
ஓவியம் : ஓவித்தமிழ்
படம் : 20 & படம் : 21 [இணைக்கப் பட்டுள்ளன]
[படம் :1]
இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு.
நேரம்: மாலை வேளை
பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதா, இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, ஆசிரமச் சீடர்கள். மலை மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை கட்டப்பட்டுள்ளது.
(இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது, லவா, குசா இருவரும் குதித்தோடிச் சென்று மறிக்கின்றனர்
இராமன்: கண்மணிகளே! உங்கள் அன்னைக்குத் தண்டனையிட்ட நான், உங்கள் முன்னின்று பேசச் சக்தியற்று நிற்கிறேன். பேசிட நாக்கு கூசுகிறது!
லவா, குசா: நாங்கள் அன்னையிடம் அழைத்துச் செல்கிறோம், வாருங்கள். (தந்தையின் கரங்களைப் பற்றி இருவரும் தாயிடம் அழைத்துச் செல்கிறார்கள். வால்மீகி, பரதன், இலட்சுமணன், சத்துருகனன் அனைவரும் தொடர்ந்து பின்னே செல்கிறார்கள்.)
வால்மீகி: [கீழே குனிந்திருக்கும் சீதாவைப் பார்த்து] சீதா! உன் துயர்கள் எல்லாம் முடியும் நேரம் வந்து விட்டது. நீ இராப்பகலாய் நினைத்துக் கொண்டிருக்கும் உன் பதி இதோ உன்னெதிரில் வந்து நிற்கிறார். அரண்மனைக்கு உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். நீயும் உன் சிறுவர்களும் அயோத்திய புரிக்கு உன் பதியோடு செல்ல வேண்டுகிறேன். என் பணி இன்றுடன் முடிந்து விட்டது.
சீதா: மகரிஷி! செய்யாமல் செய்த உங்கள் உதவிக்கு வையகமும், வானகமும் கூட ஈடாகாது! உங்கள் உதவிக்கு எங்கள் நன்றி. மகரிஷி! நான் பாலகருடன் பதியோடு வாழ விரும்புகிறேன். ஆனால் உத்தரவு எங்கிருந்து வர வேண்டுமோ, அந்த உதடுகள் ஊமையாக உள்ளனவே! இன்று அவரது ஓரக்கண் கூட என்னைக் கண்டு கொள்ள வில்லையே! என்னை அழைத்துப் போக என் பதி விரும்புகிறாரா ? கேளுங்கள் மகரிஷி! இதுவரை அவரது விழிகள் என்னை நோக்க வில்லையே !
வால்மீகி: மாமன்னா! அரண்மனை மாளிகையில் வசிக்க வேண்டிய மிதிலை நாட்டு அரச குமாரி இந்த மண் குடிசையில் வாழக் கூடாது! உன் பட்டத்துச் சிங்கக் குட்டிகள் உன் மடிமீது விளையாட வேண்டியவர், இந்தக் காட்டுப் புழுதி மண்ணில் விளையாடிக் கொண்டிருக்கலாமா ? சீதாவையும், இரட்டைச் சிறுவர்களையும் அயோத்திய புரிக்கு அழைத்துச் செல்ல வேண்டியது உன் கடமை! என் ஆழ்ந்த வேண்டுகோளும் அது! நீங்கள் சேர்ந்து கொள்ள இறைவன் அடுத்தோர் வாய்ப்பை அளித்துள்ளான். அழைத்துச் செல் மூவரையும் மாமன்னரே !
இலட்சுமணன்: அண்ணா! அண்ணி போனபின் அரண்மனை ஒளியற்று இருண்டு போய் உள்ளது! மனைக்கு வேண்டும் விளக்கு! உங்களுக்கு வேண்டும் துணைக்கு! அரண்மனை கலகலப்பாக இருக்க இரட்டைக் கண்மணிகள் நம்மோடு வர வேண்டும். இன்னும் எத்தனை வருடம் வனவாசத்தில் அண்ணி தனிமையாகத் துயர்ப்பட வேண்டும் ? இதுவரை கொடுத்த தண்டனை போதும். எத்தனை வருடம் நீங்களும் தனியாக வாழ வேண்டும் ? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
சத்துருகனன்: அண்ணியை நாடு கடத்திய அநீதி நம்மை அலங்கோல நிலைக்குத் தள்ளி யிருக்கிறது! ஒருவராகக் கடத்தப்பட்ட அண்ணி, இப்போது மூவராய்த் திரும்பட்டும்.
பரதன்: அண்ணா! வாய் திறந்து பேசுங்கள்! அழைத்திடுங்கள் அண்ணியை! இம்முறை கூட்டிச் செல்லா விட்டால், இனி நான் அரண்மனையில் கால் வைக்க மாட்டேன்.
இராமன்: [சீதாவை நேராக நோக்காமல்] மகரிஷி! இம்முறை லவா, குசா இருவரையும் நிச்சயம் கூட்டிச் செல்ல முடிவு செய்கிறேன்.
இலட்சுமணன்: அண்ணியை அழைத்திடுங்கள் அண்ணா! உங்கள் கனிவுள்ளம், கண்ணியம், கடமை எங்கே போயிற்று ? அண்ணியைப் புறக்கணிக்காது மீண்டும் ஏற்றுக் கொள்வது உங்கள் கடமை. உங்கள் இல்லற நியதி. அண்ணியை மணந்த போது ஜனக மாமன்னருக்கு நீங்கள் அளித்த வாக்கு. இதுவரை நடந்ததை மறப்போம். இனிமேலும் அறத்துடன் நடப்போம்.
லவா, குசா: அருமைப் பிதாவே! அன்னையை ஏன் அழைக்க வில்லை ? எங்களால் அன்னையைப் பிரிந்து வாழ முடியாது! … அன்னை வராமல் நாங்களும் வரப் போவதில்லை. இதுவரை தந்தைக் காணமால் காட்டில் வாழ்ந்தோம்! இனி தாயைக் காணாமல் மாளிகையில் வாழ்வதா ? … என்ன முரண்பாடான வாழ்க்கை இது ? தந்தையைத் தெரியாமல் இருந்தோம், எந்தப் பிரச்சனையும் இல்லை! பிறந்தது முதல் என்றும் நாங்கள் அன்னையைப் பிரிந்தது கிடையாது. தந்தையின் ஆடம்பர மாளிகை வேண்டாம்! எங்கள் தாய் வாழும் ஆசிரமக் குடிசையே போதும். தந்தை யின்றி வாழ்ந்தோம்! தாயின்றி வாழ முடியாது! அருமைப் பிதாவே! அன்னை யிடமிருந்து எங்களைப் பிரிக்காதீர்! வேரில்லாத விழுதுகளாகப் போய்விடுவோம்!
[படம் : 2]
இராமன்: அருமைச் செல்வர்களே! நீங்கள் அரண்மனைக்கு உரியவர்கள்! கோசல நாட்டை எதிர்காலத்தில் ஆளப்போகும் என் பட்டத்து இளவரசர்கள்! அங்குதான் நீங்கள் வளர வேண்டும். ஆனால் உங்கள் அன்னையின் நிலமை வேறு!
லவா: ஆம் பிதாவே! அந்தப் பட்டத்து இளவரசர்களைக் உங்களுக்குப் பெற்றுத் தந்தவர் எங்கள் தாய்! நீங்கள்தான் கைவீட்டீர்கள். தாயைக் காப்பது எங்கள் பொறுப்பு! எங்கள் கடமை! ஆனால் நாங்கள் தாயைக் கைவிட மாட்டோம்.
வால்மீகி: மாமன்னா! சீதாவின் புனிதத்தில் இனியும் சந்தேகம் வேண்டாம். இதுவரை சீதா உயிருடன் இருந்து உன்னருமைச் சிறுவரைப் பெற்றுத் தனியாக உன்னுதவி இல்லாமல் வளர்த்து ஆளாக்கி விட்டதே, அவளது புனிதத்தை நிரூபிக்கிறது.
இராமன்: மகரிஷி! எனக்குச் சீதாவின் புனிதத்தில் எள்ளளவு சந்தேகமும் இல்லை! ஆனால் கோசல நாட்டுக் குடிமக்களுக்கு நான் என்ன காரணம் சொல்வேன் ? அவரது ஐயப்பாட்டை எப்படித் தீர்ப்பேன் ? என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலை எனக்கு! சீதாவை அயோத்திய புரிக்கு அழைத்து வந்தால், குடிமக்களின் புகாருக்கு நான் மீண்டும் ஆளாவேன்! மக்கள் என்னை மறுபடியும் ஏசுவார்! அவமானப் படுத்தி என்னைப் பேசுவார்! என் புத்திரர் இருவரையும் ஏளனம் செய்வார்! கோசல மன்னரும் அவரது சந்ததிகளும் ஏசப்பட்டு நகைப்புக்கிடமாக வேண்டுமா ? காட்டு ராணியை பனிரெண்டு வருடங் கழித்து அழைத்து வந்து, மீண்டும் நாட்டு ராணி ஆக்கிக் கொண்டான் இராமன் என்று வீதிக்கு வீதி குடிமக்கள் முரசடிக்கப்பட வேண்டுமா ? என்னை மீண்டும் அவமானம் செய்ய வேண்டுமா ?
சீதா: [சீற்றத்துடன்] மகரிஷி! தயவு செய்து அவரைக் கெஞ்சாதீர்கள்! நான் என்றோ தீண்டப்படாதவள் ஆகிவிட்டேன்! அயோத்திபுரி நரகத்தில் ஆடம்பரமாகச் சாவதை விட, வனவாச ஆசிரமத்தில் அபலையாக வாழ்வதில் ஆனந்தம் அடைகிறேன்! ஆத்மா நீங்கிய எனது வெற்றுடலை இராவணன் தீண்டியதைவிட, ஆத்மா தாங்கிய மனைவியை ஏற்க மறுக்கும், பதியின் புறக்கணிப்பு என் நெஞ்சைப் பிளக்கிறது. அன்று அசோக வனத்தில் சிறைப்பட்ட போது, என்னை மீட்க என் கணவர் வருவார் என்று நம்பி உயிரை வைத்திருந்தேன். இன்றைய வனவாசத்தில் என்னை மீட்டுச் செல்ல எவரும் வரப் போவதில்லை! எனக்கு முடிவு இனி இங்குதான்! நான் தீண்டப்படாத சாபம் பெற்றவள்! நிரந்தரமாகத் தள்ளப் பட்டவள்! பாழாய்ப் போன குடிமக்கள் பதியைத்தான் பிரித்தார்கள்! இப்போது என் கண்மணிகளையும் பிரிக்கப் போகிறார்கள்!
(சீதா கோவென்று அழுகிறாள்)
[படம் :3]
லவா, குசா: (தாயின் கண்ணீரைத் துடைத்து) அம்மா! அழாதீர்கள்! நாங்கள் உங்களை விட்டுப் பிரிய மாட்டோம்! தந்தை வேண்டாத தாயிக்குப் பிறந்தவர்கள் நாங்கள்! சந்தேகப் பிதாவுக்குப் பிறந்தவர்கள் நாங்கள்! (இராமனைப் பார்த்து) குடிமக்கள் எங்கள் பிறப்பைப் பற்றியும் புகார் செய்தால், எங்களையும் நீங்கள் ஒருநாள் காட்டுக்கு துரத்தி விடுவீர்களா ? அன்னியப் பெண்டிர் கரம் எங்கள் மீது பட்டுவிட்டால், நாளைக்கு குடிமக்கள் எங்களையும் புகார் செய்வார்களா ? அவ்விதம் உங்கள் காதில் பட்டால் உடனே நாங்களும் நாடு கடத்தப் படுவோமா ? அன்னிய ஆடவன் தொட்டால் பெண் தீண்டப்படாதவள் ஆகிறாள்! அதைப்போல் அன்னியப் பெண் தொட்டால் ஆணும் தீண்டப்படாதவன் ஆகிவிடுவானா ?
சீதா: அருமைக் குமாரர்களே! உங்கள் பிதா குடிமக்களின் குரலுக்கு முதல் மதிப்பளித்தாலும், அதிலும் ஏற்றம் இறக்கம் உண்டு. ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை! என் இதயக் கோயிலில் அவரது உருவம் ஒன்றுதான் உள்ளது! ஆனால் அவரது நெஞ்சில் யாருமில்லாத பாலை வனம்தான் உள்ளது. ஊர் மக்களுக்கு ஏக பத்தினி விரதியெனக் காட்டிக் கொண்டு, அரண்மனையில் ஒப்புக்காக என்னுருவில் ஒரு தங்கச் சிலையைப் பக்கத்தில் வைத்திருகிறார்! உயிருள்ள மனைவி தனியே காட்டில் தவிக்கும் போது, உயிரற்ற சிலையை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து வருவதுபோல் காட்டுவது தர்மமா ? மகரிஷி! என் சிலையை உடனே அவர் அகற்ற வேண்டும். என் சிலைகூட அவரை ஒட்டி இருக்கக் கூடாது! என் உருவம், ஓவியம் எதுவும் அலங்காரப் பொருளாக அரண்மனையில் காட்சி தரக் கூடாது!
ஆனால் அவரது நெஞ்சில் யாருமில்லாத பாலை வனம்தான் உள்ளது.
**********
தகவல்
1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]
2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma
3. Mahabharatha By: Rosetta William [2000]
4. The Wonder that was India By: A.L. Basham [1959]
5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]
6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]
**************
S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]
http://jayabarathan.wordpress.
- சீதாயணம் நாடகம் -11 படக்கதை -11 சி. ஜெயபாரதன், கனடா
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 29
- பெண்ணுக்குள் நூறு நினைவா ?
- (அ)சிங்கப்பூர் அல்லது சிருங்காரப்பூர்
- வாக்காளரும் சாம்பாரும்
- முரண்பாடுகளே அழகு
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே [மீள் பதிப்பு] [பாரதி பிறந்த தினம் : டிசம்பர் 11]
- கர்ம வீரர் காமராசர்!
- ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்
- நீங்காத நினைவுகள் – 25
- அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1
- தாயகம் கடந்த தமிழ் 2014 கோயம்புத்தூர், இந்தியா ஜனவரி 20, 21,22
- மழையெச்ச நாளொன்றில்…
- முதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்
- அன்பின் வழியது
- எஸ்ஸார்சி கனவுமெய்ப்படும் – சாதிய கட்டமைப்பும் கட்டுடைப்பும்.
- அண்ணாத்தே ஹாசாரேயும், கேசரி வாலும்
- இலக்கியச்சோலை- வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி
- நிராகரிப்பு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -53 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் வடிப்பு ..!
- பாதை
- புகழ் பெற்ற ஏழைகள் – 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏழை
- பணம் காட்டும் நிறம்
- சில்லி விண்ணோக்கி முதன்முறையாக இரட்டை ஏற்பாட்டு விண்மீனைச் சுற்றும் விந்தைக் கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.
- நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்
- கடத்தலின் விருப்பம்
- திண்ணையின் இலக்கியத் தடம்-13
- மருமகளின் மர்மம் – 7
- ஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு
- பாம்பா? பழுதா?
- ‘விஷ்ணுபுரம் விருது’