ஜோதிர்லதா கிரிஜா
கச்சேரி நாள்கள் தொடங்கிவிட்டன. இந்த சபாக்காரர்கள் ஏன் தான் இப்ப்டி ஒரு நடுக்கும் குளிர் காலத்தில் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்களோ தெரியவில்லை. இசை மீதுள்ள ஆர்வத்தால் தங்கள் உடல்நிலை பாதிக்கப்படக் கூடிய சாத்தியக்கூற்றைக் கூடப் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் மார்கழிக் குளிரில் பாட்டுக் கேட்கக் கூடிவிடுகிறார்கள். கம்பளிச் சட்டை அல்லது போர்வை போன்றவற்றால் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு நெஞ்சின் குறுக்கே அடக்க் ஒடுக்கமாய்க் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்து இசையைக் கேட்கிறார்கள். சிலர் தலைகளிலும் கம்பளிச் சால்வைகள் இருக்கும். பாட்டுப் பிடிக்க வில்லையெனில் காதுகளை அவற்றால் மூடிக்கொள்ளத் தோதாக இருக்கும் என்பது நோக்கமாக இருக்கக்கூடும்.
டிசம்பர்க் குளிர் இருமல், சளி, தொண்டைக்கட்டு, உடல் நடுக்கம் போன்ற உபாதைகளை உண்டாக்கும் என்பதால், ரசிகர்களை விடவும் பாடகர்களே அதிகப் பாவம். இந்தக் குறைபாடுகளை யெல்லாம் கூடியவரையில் சமாளித்துக்கொண்டு பாடகர்கள் பாடும் பாட்டில், அவர்கள் படும் பாடு வெளிப்படையாகவே தெரிகிறது. இதனால் அவர்களது பாட்டு அதன் இயல்பான இனிமையோடு ஒலிப்பதில்லை. ஒரு முறை அமரர் செம்மங்குடி சீனிவாச அய்யர், ‘ இந்தக் குளிர்ல சங்கதி எங்கே வருது? சளிதான் வருது’ என்று ஒலிபெருக்கியில் அங்கலாய்த்து அரங்கத்தில் சிர்ப்பலைகலை உற்பத்தி செய்தாராம்.
வெள்ளைக்காரன் காலத்தில் ஏற்பட்ட இந்த வழக்கத்தை நமது தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப, நமது வசதிப்படி மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே? ஏனோ செய்யாது இருக்கிறார்கள். கோடைக்காலத்தில் கச்சேரிகளை வைத்தால், ரசிகர்கள் இருமிக்கொண்டும். நடுங்கிக்கொண்டும் கச்சேரிகளை ஒரு தண்டனையை அனுபவிப்பது போல் அனுபவிக்க மாட்டார்கள். பாடகர்களும் பாட்டில் கவனம் செலுத்துவதற்குப் பதில் தொண்டைக் குறைபாட்டைச் சமாளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுக் குறைபாடு நிறைந்த இசையை வழங்க மாட்டார்கள். அதிலும் ஏற்கெனவே குரல் நடுக்கம் உள்ள பாடகர்கள் மேலும் நடுங்கி நம்மைச் சோதிக்க மாட்டர்ர்கள்.
தொலைக்காட்சிச் சேனல்களிலும் மார்கழி மாதத்தில்தான் கச்சேரிகள் ஒளிபரப்பாகின்றன. இத்தகைய ஓர் இசைக் கச்சேரியின் இடைவேளையின் போது, ஒருமிகப் பெரிய பாடகியின் சீடர் – மிக நல்ல குரல்வளமும், கல்வியும், தம் குருவைப்போன்றே மிகத் தெளிவான உச்சரிப்பும் கொண்ட வெண்கலக் குரலார் பின்வரும் கருத்தை வெளியிட்டார்:
‘அந்தக் காலத்தில், சில தமிழ்ப் பற்றாளர்கள் தமிழில் பாடினால் மட்டுமே கச்சேரிக்கு வருவோம். தெலுங்கு, சம்ஸகிருதம் ஆகிய மொழிகளில் பாடினால் கேட்க மாட்டோம் என்று கூறிக்கொன்டு அலைந்தார்கள். இசைக்கு மொழி ஏது? எந்த மொழியில் பாடினால் என்ன? தமிழில் பாடினால் மட்டும்தான் கேட்பேன் என்று இதென்ன அர்த்தமற்ற அசட்டுப் பிடிவாதம்?’ என்று அழுத்தந்திருத்தமாய் அவையோரிடம் முறையிட்டுக்கொண்டார். ரொம்பவே சரி.
ஆனால், அந்தக் காலத்துப் பாடகர்களில் பலரும் ‘தெலுங்கும் சம்ஸகிருதமும் தான் கீர்த்தனைகள் இயற்றுவதற்கு ஏற்ற மொழிகள். அந்த அருகதை தமிழுக்குக் கிடையாது’’ என்று பிதற்றிக்கொன்டு அலைந்தார்களே! அது அவருக்குத் தெரியாதிருக்க நியாயமில்லை. ஏனெனில், அறுபதை அணுகிக்கொண்டிருக்கும் பாடகர் அவர். (அவர் தமிழிலும் பாடுகிறவரே.) ‘நானொரு விளையாட்டுப் பொம்மையா?’ எனும் பாபநாசம் சிவன் அவர்களின் ஒரு பாட்டுப் போதாதா தமிழின் அருகதையை மெய்ப்பிக்க? அந்தக் காலத்துப் பாகவதர்கள் தமிழர்களுக்குப் புரிகிற தமிழில் பாட மறுத்தது மட்டும் நியாயமோ? அது ஏன் அந்தப் பாடகருக்குத் தெரியவில்லை?
மொழியைப்பற்றிப் பேசும்போது இன்னொரு நிகழ்ச்சியைப் பற்றிய நினைவு எழுகிறது.
பல்லான்டுகளுக்கு முன்னால் ஹைதராபாத்தில் உள்ள கிருஷ்ண கான சபாவில் பிரபல தமிழகப்பாடகர் ஒருவர் பாடிக்கொன்டிருக்கையில் ஒர் அசம்பாவிதம் நடந்தது என்று கேள்விப்பட்டபோது திக்கென்று ஆனது. அந்தப் பாடகர் தெலுங்குக் கீர்த்தனைகளைச் சரியாக உச்சரிக்காததால் ஆத்திரமடைந்த சில தெலுங்கர்கள் மேடைமீது வீசத்தகாதவற்றை வீசினார்களாம். பாவம்! அந்தத் தெலுங்கர்களுக்குப் பல தமிழர்கள் தமிழையே சரியாக உச்சரிப்பதில்லை என்பது தெரிந்திருக்கவில்லை!
வடமொழியில் ‘’’வ’’ எனும் எழுத்துக்கு அடுத்ததாய் ஒரு “ச’’ உன்டு. அந்த எழுத்தை மெலிதான ‘’ஸ’’ வுக்கும் ‘’ஷ’’ வுக்குமிடையிலான ஒசையுடன் உச்சரிக்கவேன்டும். நம்முடைய பாடகர்களில் பலர் ‘’என்ன தவம் செய்தனை, யசோதா’’ எனும் பல்லவியில் உள்ள ‘’செ’’, ‘’சோ’’ ஆகிய இரன்டு எழுத்துகளையும் அந்த இரன்டுங்கெட்டான் ஒசையுடன்தான் உச்சரிப்பார்கள். சிலர் ‘’ஷ’’ என்றே உச்சரித்து விடுவதுன்டு. அவர்கள் ‘என்னதவம் ஷெய்தனை, யஷோதா?’ என்று பாடும்போது நாராசமாக ஒலிக்கும். நல்லவேளை! ழ, ள, ல ஆகியவற்றில் பெரும்பாலும் யாரும் குளறுபடி செய்வதில்லை.
ஒரு முறை தெலுங்கும் தமிழும் அறிந்த தோழி ஒருவர் கேட்டார் – “உங்கள் பாகவதர்கள் யாரேனும் தெலுங்கரிடம் உச்சரிப்பைக் கேட்டுத் தெரிந்துகொன்டு பாடக்கூடாதா? இப்படி அபத்தமாய்ப் பாடுகிறார்களே! ‘’எந்தரோ மகானுபாவுலு’’ என்பதில் வரும் ‘’த’’ வை மெலிதாக (dha) உச்சரிக்கவேன்டும். ஆனால் அவர்களோ வன்மையோடு (entharo என்று) அழுத்தந்திருத்தமாய் உச்சரிக்கிறார்களே.. அப்புறம், உங்கள் பாகவதர் ஒருவர் அடாணா ராகத்தில் உள்ள பாடலின் முதல் சொல்லாகிய அனுபம (anupama) என்பதை அழுத்தமாய் உச்சரிக்காமல், மெல்லிய ஒசையுடன் (anubhama) என்று உச்சரித்துள்ளாரே..” என்று. தாய் மொழியாகிய தமிழ் தமிழர்களின் வாய்களில் புகுந்து படுகிற பாட்டில், பிற மொழிகளுக்கு ஏது விமோசனம் என்றுதான் நினைக்கத் தோன்றியது.
மொழி பற்றிப் பேசுகையில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. அதே தொலைக்காட்சியில் இசைக்கச்சேரிகள் முடிந்த பின் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை ஆங்கிலத்தில் வெளியிடும்போது பற்றிகொண்டு வருகிறது. ஏதோ லண்டனிலோ, நியூயார்க்கிலோ பிறந்து வளர்ந்து தமிழையே அறியாதவர்கள் போல் அவர்கள் விமர்சிப்பது நாராசம். ஏனாம்? தங்கள் கருத்துகளைத் தமிழில் சொன்னால் அவர்களின் நாக்குகள் வெந்து விடுமாமா?
பழக்கக் குறைபாட்டால் ஏதோ ஓரீர் ஆங்கிலச் சொற்கள் இடையிடையே வரலாம். பெரிய குற்றமன்று. ஆனால் ஆங்கிலக் கட்டுரையையேவா வாசிப்பது?
இசைத்திறன், ரசனை ஆகியவை பற்றிய தம் கருத்தை அதே தொலைக்காட்சி சேனலில் இன்னோர் இசைக் கலைஞர் வெளியிட்டதும் நினைவுக்கு வருகிறது. “கர்நாடக இசையை ரசிப்பதற்குக் கீழ்த்தட்டு மக்கள் அதிகம் வருவதில்லையே? ஏன்? கர்நாடக இசை ஏன் அவர்களை அதிகம் சென்றடையவில்லை?” எனும் அவையினருள் ஒருவரின் கேள்விக்கு இடைவேளையின் போது அவ்விசைக் கலைஞர் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளினார்: ‘ கர்நாடக இசை அவாளுக்கு வராது. அதனால அதை ரசிப்பதற்குரிய ரசனையும் அவாளுக்குக் கிடையாது’ எனும் ரீதியில் அவர் வெளியிட்ட கருத்து ஏற்புடையதன்று. அந்த இசைக் கலைஞர் மிக நல்லவர். அறக்கட்டளை யெல்லாம் நிறுவி, ஜாதி மத பேதம் பார்க்காமல் பணி செய்து வருபவர். எனவே, யோசிக்காமல் பேசிய பேச்சு என்றே தோன்றுகிறது. நாகசுர – நாதசுரக் கலைஞர்கள் யார்? நாவிதர்கள் பரம்பரையில் உதிப்பவர்கள் அன்றோ! அவர்கள் ஒன்றும் “அவாள்” அல்லரே!
அடுத்து, இங்கே திருவையாற்றில் ஆண்டுதோறும் நடக்கும் தியாகய்யர் ஆராதனை பற்றியும் சொல்லத் தோன்றுகிறது. தெலுங்கில் கீர்த்தனைகள் இயற்றிய தியாகய்யரை நினைவு கூர்ந்து அவரை ஆராதிக்கும் விழா இது என்பது அனைவர்க்கும் தெரியும். இதில் பங்கேற்கும் இசைக்கலைஞர்கள் ராக ஆலாபனை, கற்பனைச் சுரம் பாடுதல் போன்றவற்றை விஸ்தாரமாகச் செய்திறார்கள். தியாகய்யரைக் கொண்டாடுவதற்காகச் செய்கிற இசைக்கச்சேரிகளில் பாடகர்களின் இந்தத் திறமை வெளிப்பாடு தேவை யற்றது என்று தோன்றுகிறது. அவருடைய கீர்த்தனை பற்றிய சிறப்பையும் அதன் பொருளையும் அவையினர்க்கு முதலில் ஒரு முன்னுரை போல் ஓரிரு நிமிடங்களில் சொல்லிவிட்டு இசைக்கலைஞர்கள் அந்தப் பாட்டை மட்டும் பாடுதல் நன்று அல்லவா? இதுவே நாம் அவருக்குச் செய்யும் மரியாதையாகும். பாடகர்கள் தத்தம் திறமையைப் பறை சாற்றுவதன்று. பக்க வாத்தியங்கள் இருக்கலாம். அவர்களுக்குத் தனியாகப் பாட்டின் இடையே நேரம் ஒதுக்கத் தேவையில்லை. ஆனால் இதைத் திருவையாற்றில் விழா நடத்துபவர்களும் பாடகர்களும் ஏற்பார்களா? தெரியவில்லை.
இறுதியாக, அமரர் இசை விமர்சகர் சுப்புடு அவர்களின் (கடுமையான) ஜோக்குடன் இதை முடிக்கத் தோன்றுகிறது. ஒரு முறை படே குலாம் அலிகான் அவர்கள் சென்னைக்கு வந்து கச்சேரி செய்தார். அதைப் பெரிதும் புகழ்ந்து சுப்புடு ஒரு வார இதழில் விமர்சித்த பின் அதன் இறுதியில் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டார்:
‘வட இந்தியாவில் உள்ள பாடகர்கள் தங்கள் குரல் வளத்தை மிகுந்த அக்கறையுடன் பேணிப் பாதுகாக்கிறார்கள். ஆனால் நம்மூர் பாகவதர்களுக்கோ அதில் லவலேசமும் அக்கறையே இல்லை. புகையிலை, வெற்றிலை அடிக்கடி போட்டுக் குதப்பிக் குரலைப் பாழாக்கிக்கொள்ளுகிறார்கள். போதுமான சாதகமும் செய்வதில்லை. இப்படி நான் எழுதுவதைப் படித்த பின் அவர்களுக்குக் கோபம் வரும். ஆனால் யாரும் குரல் எழுப்பி என்னோடு சண்டைக்கு வரமாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்குத் தான் தொண்டையே கிடையாதே!”
- சீதாயணம் நாடகம் -11 படக்கதை -11 சி. ஜெயபாரதன், கனடா
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 29
- பெண்ணுக்குள் நூறு நினைவா ?
- (அ)சிங்கப்பூர் அல்லது சிருங்காரப்பூர்
- வாக்காளரும் சாம்பாரும்
- முரண்பாடுகளே அழகு
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே [மீள் பதிப்பு] [பாரதி பிறந்த தினம் : டிசம்பர் 11]
- கர்ம வீரர் காமராசர்!
- ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்
- நீங்காத நினைவுகள் – 25
- அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1
- தாயகம் கடந்த தமிழ் 2014 கோயம்புத்தூர், இந்தியா ஜனவரி 20, 21,22
- மழையெச்ச நாளொன்றில்…
- முதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்
- அன்பின் வழியது
- எஸ்ஸார்சி கனவுமெய்ப்படும் – சாதிய கட்டமைப்பும் கட்டுடைப்பும்.
- அண்ணாத்தே ஹாசாரேயும், கேசரி வாலும்
- இலக்கியச்சோலை- வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி
- நிராகரிப்பு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -53 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் வடிப்பு ..!
- பாதை
- புகழ் பெற்ற ஏழைகள் – 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏழை
- பணம் காட்டும் நிறம்
- சில்லி விண்ணோக்கி முதன்முறையாக இரட்டை ஏற்பாட்டு விண்மீனைச் சுற்றும் விந்தைக் கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.
- நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்
- கடத்தலின் விருப்பம்
- திண்ணையின் இலக்கியத் தடம்-13
- மருமகளின் மர்மம் – 7
- ஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு
- பாம்பா? பழுதா?
- ‘விஷ்ணுபுரம் விருது’