பாம்பா? பழுதா?

This entry is part 30 of 32 in the series 15 டிசம்பர் 2013

வளவ. துரையன்
”வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்ற பழமொழி சரியாய்த்தான் சொன்னார்கள் போலிருக்கிறது. இரண்டுமே எளிதாகப் பிறர் உதவியின்றி எந்தத் தடங்கலும் வராமல் செய்ய முடியாத செயல்கள்தாம். அப்பப்பா, இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் எத்தனை சோதனைகள், எவ்வளவு சிரமங்கள் எல்ல்லாவற்றையும் சமாளித்து ஒரு வழியாய் முடித்தாகி விட்டது” என்று நினைத்துக் கொண்டான் பரமு.
’பரமேஸ்வரன்’ என்ற பெயரே ’பரமேஸ்’ என்றாகி இப்போது நண்பர் வட்டாரத்துக்குள் ‘பரமு’ என்றாகி விட்டது. எப்படிப்பட்ட பெயர் வைத்தாலும் அதைச் சுருக்கி அழைப்பதில் நம்மவர்களுக்கு ஆனந்தம். சுருக்கவே முடியாது என்றுதான் பரமு அவனுடைய பெயரனுக்கு ’ஆகாஷ்’ எனப் பெயரிட்டான். அதுவும் தற்போது ‘ஆகா’ ஆகிவிட்டது. சில நேரம் இதனால் பால்மாறுபாடே ஆகிவிடுகிறது. அருணாசலம் ’அருணா’ வாகவும், ஜெயகாந்தன் ‘ஜெயா’ வாகவும், மாறிவிடுகிறார்கள். கோவிந்தம்மாள் ‘கோவிந்து’ ஆவது ஒரு தனிக்கதை.
காலை நடை போய்வந்து வாசல் போர்டிகோவில் அமர்ந்து கொண்டிருந்தவனுக்கு வீசிய மெல்லிய காற்று மிகவும் இதமாக இருந்தது. இன்னும் சூரியன் வரவில்லை. ஞாயிறு என்பதால் அவனும் சற்று ஓய்வெடுத்து வருகிறான் போலிருக்கிறது. வேலை நாள்களில் இருக்கும் காலம் தவறாமையும், சுறுசுறுப்பும் விடுமுறை நாள்களில் எங்கோ போய் ஒளிந்து கொள்கின்றன.
புளியைப் பானையில் அடைப்பதுபோல் ஜனங்களை ஏற்றிக் கொண்டு எட்டு மணி நகருந்து சென்றது. பள்ளி செல்லும் மாணவர்கள் சிலர் நடக்கவும், சிலர் மிதிக்கவும் தொடங்கி இருந்தனர். ‘என்ன குடி வந்து விட்டீர்களா? என்று கேட்பதுபோல் வாசல் கோலத்தைக் கொத்தவந்த காகம் இவனைப் பார்த்து ‘கா’ கா’ என்றது. தெருமுனையில் அவிழ்த்துவிடப்பட்ட ஆடுகள் எந்த வீட்டின் கதவு திறந்திருக்கிறது என்று ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டேசென்றன.
”பரமு, காலை வணக்கம்” என்ற குரல் அவனது கவனத்தைக் கலைத்தது. அடுத்த தெருவில் இருக்கும் கண்ணன் தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தார். அவர் பரமுவுடன் அவன் அலுவலகத்திலேயே பணி புரிகிறார்.
”வாங்க, கண்ணன் வாங்க” என்றான் பரமு.
கண்ணனைக் கூட ‘கண்ணா’ என்றழைப்பது அவனுக்குப் பிடிக்காது. வந்தவரை அருகில் இருந்த நாற்காலியைக் காட்டி, ’உட்காருங்க’ என்றான் பரமு.
உட்கார்ந்த கண்ணன் ’நல்லா காத்து வருது, இல்ல’ என்றார்.
பரமு பதிலுக்கு,
“ஆமாம், தெற்குப் பார்த்த வீடுல்ல’ என்று கூறும்போது அவன் மனைவி வெளியில் வந்து,
“வாங்கண்ணே, வாங்க” என்று சொன்னாள். தொடர்ந்து,
”இருங்க, காப்பி எடுத்துகிட்டு வரேன்” என்று கூறி வீட்டினுள் சென்றுவிட்டாள்.
“நல்ல கூட்டந்தான் வந்தது” என்று கண்ணன் சொல்ல ”எதற்கு” என்று புரியாமல் பரமு விழித்தான்.
”அதாம்பா, முந்தா நாள் வெள்ளிக் கிழமை இங்க நடந்ததே, கிரகப்பிரவேசம், அதைதான் சொல்றேன்” என்றார் கண்ணன்
”ஆமாம் கண்ணன் ரொம்ப மகிழ்ச்சியாய்த்தான் இருந்தது; எல்லாருமே வந்திருந்தாங்க; ஒருத்தருமே விடுபட்டுப் போகலே”
என்றான் பரமு சிரித்தபடி.
“அரை சக்கரைதான் போட்டிருக்கேன்” என்று கூறியவாறு பரமுவின் மனைவி காப்பியைக் கொண்டுவந்து கொடுத்தார். ‘இவனுக்கு’ என்று கண்ணன் பரமுவைக் காட்டிக் கேட்டார். “நான் இப்பதாம்பா குடிச்சேன்” என்றான் பரமு.
காப்பியை ஆற்றிக் கொண்டே,
”ஞாயிறாக இருந்தது சவுகரியமாப் போச்சு அலுவலகத்திலேந்து எல்லாரும் வர வசதியாப் போச்சு”
என்றார் கண்ணன்.
பரமுவின் மனைவி “ஆமாங்க, நீங்க கூட உங்க வீட்லயும் கூப்பிடுக்கிட்டு வந்தீங்களே, ஆச்சரியந்தாம்” என்று சிரித்தவாறு சொல்ல பரமுவும் சிரித்தான்.
பெரும்பாலும் கண்ணனின் மனைவி வெளியில் எங்கும் வருவதில்லை. அதைத்தான் பரமுவின் மனைவி சொல்கிறாள் என்பதைக் கண்ணன் புரிந்து கொண்டான்.
”என்னாங்க,நீங்க;ஒங்கவீட்டுநிகழ்ச்சிக்குவராமஇருந்துடுவாங்களா?என்றுகேட்டான் கண்ணன். அவன் குடித்து முடித்த டபரா, டம்ளர்களை பரமுவின் மனைவி உள்ளே எடுத்துச் சென்றாள்.
அவர் உள்ளே சென்று மறைந்து விட்டாரா என்று எட்டிப் பார்த்த கண்ணன் “அழைப்பும் பரவலா வச்சிருக்கீங்க; அதான் அவ்வளவு கூட்டம்” என்றான்.

”இல்ல இல்ல; ஒறவுக்காரங்கள்ளயே நெருக்கமானவங்க, ரொம்பப் பழக்கமான நண்பருக்குதான் வைச்சேன். ஆனா அலுவகத்துல எல்லார்க்கும் வைச்சிட்டேன்” என்று பரமு சொன்னதும் கண்ணன் பேசினான்.
”அதான் என் பொண்டாட்டி சொன்னா” என்று தொடங்கியவன் நிறுத்தி விட்டான். அவனே பேசுவான் என்று பரமு எதிர்பார்த்தான்.
கண்ணனோ தெருவில் சென்ற மாடுகள் நின்று சாணி போடுவதையும் பார்த்துக் கொண்டிருந்தான். மாடுகள் அகன்றும் அவன் பேசவில்லை.
பரமுதான், ”என்னா சொன்னாங்க சொல்லு கண்ணன்” என்றான். ”என்னமோ சொன்னாங்க,விடு பரமு” என்று கண்ணன் கிண்டலாகச் சிரித்தான்
ஏதோ விஷயம் மறைந்திருப்பது பரமுவுக்குத் தெரிந்தது.
“சொல்லு கண்ணன்,எங்கிட்ட என்ன ஒளிவு மறைவு எதா இருந்தாலும் சொல்லு” என்று பரமு வற்புறுத்த,
‘ஒண்ணுமில்ல, கண்ட கரைபோக்குக்கெலாம் கூட பத்திரிக்கை வைச்சிருக்காரு ஒங்க நண்பருன்னு என் பொண்டாட்டி சொன்னா” என்றான் கண்ணன் மீண்டும் வீட்டினுள் பார்த்தபடி.
முகத்தைத் தீவிரமாக்கிக் கொண்ட பரமு, “புரியலயே, யாரைச் சொல்றே” என்று கேட்டான்.
“அதாம்பா; அதுவும் வந்ததுல்ல; அதைதான் கேட்டான்’ என்று சொன்ன கண்ணன் இரு கரங்களையும் வயிற்றுக்குள் வளைத்துக் குண்டாய் இருப்பதுபோல் அபிநயித்தான்.
’யாரு? மாலதியைச் சொல்றயா?” என்று கேட்டான் பரமு.
“ஆமாம்! ஆமாம்! நீதான் நல்லாப் புரிஞ்சுப்பியே” என்றான் கண்ணன் பதிலுக்கு.
மாலதி அவர்கள் அலுவலகக் கடைநிலை ஊழியர். மிகக் குறைந்த சம்பளம். கன்ணன் காட்டுவது போல அத்தனை குண்டாக இல்லை என்றாலும் கொஞ்சம் புஷ்டியான உடம்பு; இருந்தாலும் அவளைக் குறிப்பிட சிலர் ரகசியக் குறியீடாக அவ்வாறு காட்டினார்கள்.
எப்பொழுதும் தேவையில்லாமல் சிரிக்கும் முகம். இழுத்துச் சரியாய் ‘பின்’ செய்யப்பட்ட புடவை. அதையும் மீறிய வாகு. தலை நிறைய பூ. பார்த்தவர்களை மீண்டும் பார்க்க வைக்கும் தோற்றம்.
அலுவலகம் முதலில் வருவதே மாலதிதான். வாசலைப் பெருக்கி மங்களகரமாகக் கோலம் போட்டு, சாமி படங்களுக்குத் தானே சொந்தக் காசு போட்டு வாங்கி வந்த பூ போட்டுப் பின் பானைகளில் குளிர்ந்த நீர் நிறைப்பது எல்லாம் அவள் வேலை.
அலுவலகம் தொடங்கிய பின் எங்கள் எல்லார் குரலுக்கும் ஓடி வந்து, கோப்புகளைப் பரிமாற்றம் செய்வது, தேநீர் போட்டுக் கொடுப்ப்பது, இவையும் அவள் நாள்தோறும் செய்யும் பணிகளில் அடங்கும்.
கணவனுக்குத் திருப்பதி கோயிலில் ஏதோ வேலை எனச் சொல்லி இருக்கிறாள். ஒரே மகன் சென்னையில் விடுதியில் தங்கிக் கல்லூரியில் படிக்கிறானம்.
அனைவருக்கும் பாதி நேரம் அலுவலகப்பணி என்றால் மீதி நேரம் மாலதியைக் கண்காணிப்பதுதான். யார் யாரிடம் எவ்வளவு நேரம் பேசுகிறாள்? எப்படிச் சிரிக்கிறாள்? என்பதெல்லாம் அவரவர் நினைவுகளில் பதியும். சிலநேரம் அவை வெளியில் வரும்.
போன வாரம் இதே கண்ணன்தான் தேநீர் குடிக்கும்போது சொன்னான்
”இன்னிக்கு மாலதி மேனேஜர் அறையில பதினைந்து நிமிஷம் இருந்தா தெரியுமா?
”அப்படியா” நான் கவனிக்கல?” என்ற பரமு மேலும் தொடர்ந்து, “அதுக்கென்ன, ஏதாவது வேலை இருந்திருக்கும்” என்றான்.
’வேலைதான்; வரும்போது அவ தலை எல்லாம் கலைஞ்சு கெடந்தது தெரியுமா?” என்றான் கண்ணன் கொஞ்சம் விஷமச் சிரிப்புடன்.
”சீ, ஒனக்கு எப்பவும் இதே வேலைதான்” என்று ஒதுக்கினான் பரமு.
”என்னா பரமு! பதிலேயே காணோம்” என்ற கண்ணனின் கேள்விக்கு “ஆமா, கண்ணன், அலுவலகத்தில எல்லார்க்கும் வைக்கும் போது அவங்களை மட்டும் எப்படி விட முடியும்?” என்றான் பரமு.
”இல்ல, அவ ஒரு மாதிரின்னு எங்க வீட்டளவு தெரிஞ்சிருக்கு”.
”அவங்களுக்கு எப்படி தெரியும்? நீ ஏதாவது சொல்லியிருப்ப”
”இல்ல,இல்ல போனமாசம் எல்லாரும் திருச்சி, குணசீலம் டூர் போனோம்ல, அப்ப மாலதி பழகியதைப் பார்த்தே என் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சுடுத்தாம்’
கண்ணன் சென்ற பிறகும் அவன் கேட்டுவிட்டுப் போனதே நெஞ்சில் நிலைத்திருந்தது. மறுநாள் காலை நடையின்போது கேசவன் கேட்டது அந்நினைவை அழுத்தமாக்கியது. கேசவன் அலுவலகத்தில் இயங்கும் அதிகாரபூர்வமில்லாத ஒரு வங்கி. அவசரத் தேவைக்கு எல்லார்க்கும் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்.
“என்னா பரமு, ஒரு வாரமா காலையில காணோம்?” என்று தொடங்கினார் கேசவன்.
”இப்பதான் கொஞ்சம் வேலையெல்லாம் முடிஞ்சது. இன்னியிலேந்துதான் வரேன்”என்றான் பரமு.
”அது சரி, நம்ம தகுதி என்ன? பழக்கம் என்ன? நாம எல்லாரும் வர்ற விழாவுக்கு மாலதியும் வரணுமா? ஏன் பரமு பத்திரிக்கை வைச்சே? வந்தவங்க எல்லாம் அவளையேதான் பாத்தாங்க; தெரியும்ல” என்று பொறிந்தார் கேசவ்ன்.
இவரும் அவளுக்குக் கடன் கொடுத்திருப்பதை நினைத்துச் சிரிதுக் கொண்டே,
’வந்தவங்களை வரவேத்து அனுப்பறதிலேயே நான் இருந்திட்டேன்; இதையெல்லாம் நான் எங்கே பாத்தேன்”
என்று கூறிய பரமு, “எல்லாரும் அவளையே பாத்தா நான் என்னா செய்ய
முடியும்” என்று கேட்டு விட்டான்.
கேட்டு விட்டானே தவிர அன்று அலுவலகம் போயும் அவன் எண்ணம் எல்லாம் ஒரே மையத்தில்தான் இருந்தது. எல்லாருமே அவன் முகம் நோக்கி சுட்டுவிரல் நீட்டுவதுபோல் இருந்தது. சகஜமாகப் பேச வந்த மாலதியிடமும் பேச முடியவில்லை. வெள்ளைப் பட்டு நிற சேலையில் வந்த அவளைப் பார்க்காமல் இருக்கவும் முடிய வில்லை.
”இவள் பேச்சும் உடையும் அந்த மாதிரிதானா என்று எண்ணத் தோன்றுகிறது. அதில் தவறில்லை.” என நினைத்தான் பரமு.
மறுநாள் மாலை பரமு சிதம்பரம் போக வேண்டி இருந்தது. போன வேலை சீக்கிரம் முடிந்து விட்டது. போய் நீண்ட நாள்களாயிற்றே என்று நடராஜர் கோயிலுக்குள் நுழைய நினைத்தான். கீழ்ப்புறம் இருந்த அச்சன்னதித் தெருவில் கூட்டம் நிறைய இருந்தது. இருபக்கமும் கடைகள் பாதி வழியை அடைத்துக் கொண்டு நின்றன.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே உள்ளே சென்று ஆடல் வல்லானின் முன் தன்னை மறந்து நின்று வணங்கி வந்த பிறகு மனம் சற்று அமைதியானது போல் இருந்தது.
வெளிப்பிரகாரத்தையும் சுற்றிவந்த பரமு கோயிலை விட்டு வெளியில் அதே சன்னதித் தெரு வழியில் வந்த போது கை கோர்த்தது போலவும் கோர்க்காதது போலவும் நெருக்கமாகப் பேசிக்கொண்டு சற்று தொலைவில் கண்ணனும் மாலதியும் வந்தது அதிர்ச்சியாய் இருந்தது.
இருவருமே இவனைப் பார்த்து விட்டதால் ஒரு கடையில் நுழைந்து ஏதோ பொருள் வாங்குவது போல் முதுகு காட்டி நின்றனர். அவர்களைத் தாண்டும்போது போய்விட்டானா என்று அவர்கள் அவனைப் பார்க்க முயல பரமுவும் சட்டென்று திரும்ப ஆறு கண்களும் கலந்தன.
கண்ணன் திரும்பிவிட மாலதி மட்டும் கண்ணாலேயே சிரித்தது போல இருந்தது. அவனுக்கு நம்ப முடியவில்லை.
மறுநாள் அலுவலகத்தில் கண்ணன் வலுவில் அவனாக வந்து பேசினான்; மெல்லிய குரலில்,
“மாலதி சிதம்பரத்துல நகை எடுக்கணும்; கணக்கு வழக்கு பாக்கணும் பாதுகாப்புக்கு வாங்கன்னு கூப்பிட்டுது. அதான் போனேன், நீ ஒண்ணும் தப்பா நெனக்காத பரமு’ என்றான்.
பரமுவும் பதிலுக்கு, “நான் எப்பவும் யாரையும் தப்பா நெனச்சதுமில்ல; பேசினதுமில்ல’ என்றான்.

.

Series Navigationஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு
author

வளவ.துரையன்

Similar Posts

Comments

  1. Avatar
    ameethaammaal says:

    இந்த ஒரு விஷயத்தில் எவன் அதிகமாக பேசுகிறானோ அவன்தான் இதில் அதிக ஈடுபாடு கொண்டவனாக இருப்பான் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *