மருமகளின் மர்மம் – 7

This entry is part 28 of 32 in the series 15 டிசம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா

7

grija (1)பணியாள் சாப்பாடு எடுத்து வந்ததில் ரமேஷின் எண்ணங்கள் கலைந்தாலும், மேசையருகே உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிய உடனேயே, அவனது சிந்தனையும் அது நின்ற இடத்திலிருந்து மறுபடியும் தொடங்கிற்று.

ஓர் ஆண் சொல்லும் வழக்கமான சொற்கள் லூசியின் வாயிலிருந்து உதிர்ந்ததை இன்றளவும் அவனால் வியப்புடன்தான் எதிர்கொள்ள முடிந்தது. ‘நாம மனசு விட்டுப் பேசணும், ரமேஷ்! உங்களுக்கு எப்ப சவுகரியம்?’ – இந்த அவளுடைய சொற்கள் அண்மையில்தான் கேட்டவை போன்று அவன் காதுகளில் ஒலித்தன.

அன்று மாலை உயர்தர ஓட்டல் ஒன்றின் அரை வெளிச்சத்தில், இருவரும் குடும்ப அறையின் ஒதுக்கத்தில். நிறையவே பேசினார்கள். கொஞ்சம் உருப்படியான பேச்சு, நிறைய உதவாக்கரைப் பேச்சு என்று இளங்காதலர்களுக்கே உரிய தினுசில் அவர்களது பேச்சு அமைந்தது.

ஆனால் முதலில் உருப்படியாகப் பேசியவன் ரமேஷ்தான். இப்போதாவது தான் அவளை முந்திக்கொள்ள வேண்டும் என்று அவன் அவாவியதே அதற்குக் காரணம். இருக்கைகளில் அமர்ந்ததன் பின் இரண்டாம் நிமிடமே, ரமேஷ் கேட்டுவிட்டான்: ‘உங்களுக்கு என் மேல ஏற்பட்டிருக்கிற ஈடுபாடு வெறும் நட்பு மட்டுந்தானா, இல்லாட்டி.. .. ..’ என்று தான் தொடங்கிய வாக்கியத்தை முடிக்காமல் ஆர்வத்துடன் அவன் அவளைப் பார்த்தான்.

லூசி வெட்கப்பட்டுத் தலையைத் தாழ்த்திக்கொண்டாள். ‘ஒரு பொண்ணு மனசை உங்களால புரிஞ்சுக்க முடியல்லைன்றதை நான் நம்ப மாட்டேன், ரமேஷ்! புரிஞ்சுக்கிட்டே புரியாத மாதிரி இப்படி யெல்லாம் கேள்வி கேட்டு என்னைச் சங்கடப் படுத்தாதீங்க! இந்த அஞ்சாறு மாசமா நீங்க என் கண்ணுல பட்டுக்கிட்டு வர்றீங்க. முதல்ல எல்லாம், ‘யாரு இந்த ஆளு? ஜம்னு ஹீரோ மாதிரி இருக்காரே?’ அப்படின்னு நினைச்சு வெறுமனே உங்க அழகை மட்டும் ஒரு ரசனையோட பாத்தேன். என்னைப் பத்தித் தப்பா எதுவும் நினைச்சுடாதீங்க. அழகுன்றது ரசிப்புக்கும் ஆராதனைக்கும் உரிய விஷயந்தானே? விகல்பமாப் பாத்தாத்தான் தப்பு. இல்லியா?’’

‘ஆமா. மேல சொல்லு.’

‘அப்புறம் போகப் போக உங்க மேல
எனக்கு ஒரு ஈடுபாடே வந்திடிச்சு.’

‘காரணமே இல்லாமயா?’

‘இதுக்கெல்லாம் காரணம் சொல்ல முடியாது, ரமேஷ்! காதலுக்குக் கண்ணில்லைன்ற மாதிரி காதலுக்குக் காரணமும் சொல்ல முடியாதுன்றதும் சத்தியமான வார்த்தை!.. .. .. அது மட்டுமில்லாம, உங்களோட தாராள மனசைத் தெரிஞ்சுக்குற சந்தர்ப்பமும் எனக்குக் கிடைச்சிச்சு.’

‘அட! அது எப்ப? என்ன தெஞ்சுக்கிட்டே?’
“ஒரு நாள் எனக்குப் பஸ்ஸே கிடைக்கல்லே. ஆட்டோ பிடிச்சேன். உங்களோட பைக்கும் என்னோட ஆட்டோவும் முன்னும் பின்னுமா சிக்னலுக்காக நிக்க வேண்டி வந்திச்சு. அப்ப ஒரு பிச்சைக்காரக் கெழவிக்கு நீங்க பத்து ரூவா குடுத்தீங்க, ரமேஷ்!’”

“ஓ! அதுதான் உன்னோட ஈடுபாட்டுக்குக் காரணமா?’

‘அதுவும் ஒரு காரணம். அவ்வளவுதான். அதுக்கு முந்தியே உங்க மேல எனக்கு ஒரு பிடிப்பு வந்திச்சு. அந்தப் பிடிப்பு சரிதான்கிறதை இந்த நிகழ்ச்சி மூலமா நான் தெரிஞ்சுக்கிட்டேன்னு வேணும்னாச் சொல்லலாம். இன்னும் தெளிவாச் சொல்லணும்னா, என்னோட தேர்வு சரியானது – ஒரு நல்ல மனுஷன் மேலதான் என் மனசு போயிருக்கு – அப்படிங்கிறது உறுதிப்பட்டதுன்னு சொல்லலாம்.’

‘நல்லாப் பெசறே! உன்னளவுக்கு
எனக்குப் பேச வராது’
‘அப்படியே இருக்கட்டும். ஆனா உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா இல்லையாங்கிறதைப் பளிச்னு சொல்லிடுங்க. அந்த அளவுக்குப் பேச வருமில்லே?’

‘அது கூடப் பேச வராதவன் ஆம்பளையே இல்லே!’ என்று சிரித்த அவன், ‘ரெண்டு நாளா எனக்கு எந்நேரமும் உன்னோட நெனப்புத்தான். என்னோட மனசை ஆட்டி அலைக்கழிச்ச முதல் பொண்ணு நீதான். இவ்வளவு சொன்னாப் போதுமா, இல்லாட்டி ஒரு காகிதத்துலே, ‘ஐ லவ் யூ’ ன்னு எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தரணுமா?.. .. .. அது சரி, எனக்கு உன் மேல நீ எதிர்பார்க்கிற லவ்வெல்லாம் கிடையாதுன்னு சொல்லிட்றேன்னு வச்சுக்க. அப்ப நீ என்ன செய்யிறதா யிருக்கே? அதுக்கு உன்னோட.. .. ..’

அவன் முடிப்பதற்குள் அவள் அவனைக் கெஞ்சுபவள் போல் ஒரு பார்வை பார்த்தாள். கணத்துக்கும் குறைவான நேரத்துக்குள் அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்துவிட்டன.
‘ச்சூ ச்சூ! ஐம் சாரி, லூசி! என்னை மன்னிச்சுடு!’ என்ற அவன், கை நீட்டி, அக்கம் பக்கம் பார்த்த பின் – அவளது கையில் அழுத்தினான்.

‘என்னமோ தெரியல்லே, ரமேஷ்! உங்க மேல எனக்கு ரொம்பவே ஒரு ‘இது’ ஏற்பட்டுப் போச்சு. விளையாட்டுக்குக் கூட இப்படி ஒரு வார்த்தை சொல்லாதீங்க. என்னால தாங்கிக்க முடியாது!’

‘ஐம் சாரி, லூசிம்மா!’

‘சரி, விடுங்க. இனிமே இது மாதிரி சொல்லாதீங்க. என் மனசு சுக்கல் சுக்கலா உடைஞ்சு போயிடும்.’

பணியாளிடம் நிறைய அயிட்டங்களுக்குப் பணித்துவிட்டு அவற்றை அருந்துகையில் உப்புப் பெறாத விஷயங்களுக் கெல்லாம் வாய்விட்டுச் சிரித்து மகிழ்ந்த பின் இருவரும் ஒட்டி உரசிக்கொண்டு அந்தப் பெரிய ஓட்டலை விட்டு வெளியே வந்தார்கள்.

அந்த நெருக்கமான முதல் சந்திப்பின் முடிவில், ‘அடுத்த சந்திப்பு எப்போ, எங்கே?’ என்று ஆவலுடன் அவன் வினவிய போது, ‘அடிக்கடி வேணாம், ரமேஷ்! என்னோட மாமன் மகன் ஒருத்தன் இருக்கான். அவனுக்கு என் மேல ஒரு கண்ணு. எனக்கு அவனைக் கட்டோட பிடிக்காது. பார்க்க அப்படி ஒண்ணும் பங்கரையா இருக்க மாட்டான்தான். ஆனா, பொறுக்கி. அவன் கண்ணுல நாம ரெண்டு பேரும் பட்டுடக் கூடாது. எங்க வீட்டுக்கு நாலு வீடு தள்ளி அவனோட வீடு. அடிக்கடி வெளியூர் போவான். அவன் ஊர்ல இல்லாத நாள்ல மட்டும் நாம இது மாதிரி சந்திக்கலாம்,’ என்றாள் லூசி.

‘அவன் ஊர்ல இல்லாதப்பல்லாம்
உனக்குத் தெரிய வருமா?’

‘ஆமா. அவனோட அம்மா அப்பப்ப எங்க வீட்டுகு வருவாங்க. சாயங்காலம் நான் வீடு திரும்பினப்புறந்தான் வருவாங்க. அதனால தெரிய வரும்.’

‘ஒருக்கா, உன்னைத் தன்னோட மகனுக்கு வலை வீசிப் பிடிக்கிறதுக்கு வர்றாங்களோ என்னமோ!’

‘இருக்கலாம். ஆனா நான் திட்டவட்டமா சொல்லிட்டேன். எங்க மாமி கிட்டவே சொல்லிட்டேன், அவனை எனக்கு அடியோட பிடிக்கல்லேன்னு.’

‘படிச்சிருக்கானா?’

‘க்ராஜுவேட்தான். பி.எஸ்ஸி.’

‘வேலை ஏதாவது செய்யறானா?’

‘அவன் நிரந்தரமா ஒரு வேலையும் செய்ய மாட்டான். அடிக்கடி ஆ•பீஸ் மாத்திக்கிட்டே இருப்பான். அவனுக்கும் வேலை கிடைச்சுக்கிட்டே இருக்கும். அதான் ஆச்சரியம் – இந்த வேலையில்லாத் திண்டாட்டக் காலத்துலே! எனக்குத் தெரிஞ்சு ஒரு ஆறு மாசம் கூட அவன் தொடரந்து எந்த வேலையிலேயும் இருந்ததில்லே!’

‘அவனுக்குப் பயந்துக்கிட்டு நாம சந்திக்கக் கூடாதுன்றியே? எதனால?’

‘அவன் பொறுக்கின்னு சொன்னேனில்லே? உங்க கையைக் காலை முறிச்சுடுவானோன்னு எனக்கு ஒரு பயம். அப்படியாப்பட்ட ஆளுதான் அவன்.’

‘நம்ம கல்யாணத்துக்கு அப்புறமும்
அவனால அதைச் செய்ய முடியுமே?’

‘வக்கீல் மாதிரி இப்படி ஒரு கேள்வி கேட்டா நான் என்னத்தைச் சொல்லட்டும்? அவனால எப்பவுமே நமக்கு ஆபத்துத்தான். அதுக்காக வம்பை விலைக்கு வாங்குவாங்களா என்ன? அவங்கம்மா அவனோட கல்யாணத்தை முடிச்சுட்டாங்கன்னா, அடங்கிடுவான்னு நினைக்கிறேன்.’

‘அப்படின்னா, நாம ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு அவனுக்குப் பொண்ணு தேடணுமா?’

லூசி விழுந்து விழுந்து சிரித்தாள்.
. .. இப்படியாகத் தொடங்கிய அவர்களது காதல், இரண்டு மாதங்கள் வரை அவ்வப்போதான சந்திப்புகளுடன் தொடர்ந்து வளர்ந்தது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவள்அந்த அதிர்ச்சியான தகவலை அவனுக்குத் தெரிவித்தாள்.

. .. ..வேலைக்காரி வள்ளி வேலைகளை முடித்துவிட்டுப் போனதும், மறுபடியும் கட்டிலுக்குத் திரும்பிய சகுந்தலாவின் சிந்தனைகள் தொடர்ந்தன.

ஸ்டெல்லா டீச்சர் நெஞ்சில் கத்தி செருகப்பட்ட நிலையில் இறந்து கிடந்த தோற்றத்தை அவளால் தனது நெஞ்சிலிருந்து நீக்கவே முடியவில்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அது அவளுள் ஒரு குளிர்வை ஏற்படுத்தியது. மூக்கருகே கை வைத்துப் பார்த்த பின் வியர்வையுடன் நிமிர்ந்த கருணாகரன், ‘எந்திரி, சகுந்தலா! இனி நாம் இங்கே தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு ஆபத்து. ஸ்டெல்லா டீச்சர் செத்துட்டாங்க. வா, வா! போயிடலாம், ‘என்றான் பலவீனக் குரலில்.

சகுந்தலாவுக்குக் கண்கள் இருண்டன. சமாளித்துக்கொண்டு எழுந்தாள். இருவரும் தத்தம் பெட்டி, பைகளை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறமாகவே வெளியேறி இருப்புப்பாதை நிலையம் நோக்கி நடந்தார்கள். தள்ளாடிய கால்களை நிலைப்படுத்திக்கொண்டு எட்டிப் போடுவது இருவருக்குமே சிரமமாக இருந்தது.

ஒருவழியாக நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்கள். சகுந்தலாவை ஒதுக்குப்புறமாக நிற்கவைத்துவிட்டு மதுரைக்கு இரண்டு பயணச் சீட்டுகளைக் கருணாகரன் வாங்கினான். இன்னும் பத்தே நிமிடங்களில் புறப்படத் தயாராக இருந்த வண்டியில் இருவரும் ஏறிக்கொண்டார்கள். வண்டி கிளம்பிய பிறகுதான் அவர்களுக்கு மூச்சே வந்தது. அவர்கள் இருந்த பெட்டியில் கூட்டம் அவ்வளவாக இல்லை. இருந்தவர்களும் தூங்கி விழுந்து கொண்டிருந்தார்கள்.

தங்கள் பேச்சு மற்ற பயணிகளின் செவிகளில் விழாத தொலைவில் தள்ளி உட்கார்ந்துகொண்டாள். அவனும் அவளும் சில கணங்கள் வரை திக்பிரமை பிடித்தவர்கள் போல் அசையாமல் இருந்தார்கள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சமாளித்துக்கொண்டு பேசியவன் கருணாகரன்தான்.

‘சகுந்தலா! இப்ப நாம என்ன பண்ணப் போறோம்? மெட்ராஸ்ல எங்கே தங்கப் போறோம்? எனக்கு ஒரே மலைப்பா யிருக்கு. சினிமாவில வர்ற நம்ப முடியாத நிகழ்ச்சி மாதிரி ஸ்டெல்லா டீச்சரோட உதவி கிடைச்சிச்சு. ஆனா, இப்படிக் குரூரமாக் கைநழுவிப் போயிடிச்சே?’
‘ஸ்டெல்லா டீச்சரை யாரு கொலை பண்ணியிருப்பாங்க?’

‘எனக்கு என்ன தோணுதுன்னா, எவனோ வந்து கதவைத் தட்டி இருக்கான். நாமதான் வந்துட்டதா நினைச்சு டீச்சர் கதவைத் திறந்துட்டாங்க. வந்தது அவங்க தனியா யிருக்கிறது தெரிஞ்ச திருடன். குத்திட்டுக் கொள்ளை யடிச்சுட்டுப் போயிட்டான். அலமாரி எல்லாம் திறந்து கிடந்ததைப் பாத்தா எனக்கு அப்படித்தான் தோணுது.’

‘அப்படித்தான் இருக்கும்.. .. .. மதுரையிலேர்ந்து மெட்ராஸ் போறோமா?’

‘ஆமா.’

‘உங்களோட நான் ஓடிப் போயிருப்பேன்னு ஊகிப்பாங்களாங்க?’

‘சொல்ல முடியாது .. .. அனா, போலீஸ் விசாரணை அது இதுன்னு வந்தா, அக்கம்பக்கத்துல உள்ளவங்களை யெல்லாம் விசாரிப்பாங்க. நீயும் நானும் டீச்சர் வீட்டுக்குப் போனதை யாராச்சும் கவனிச்சிருந்தா அந்த வழியிலேயும் யோசிப்பாங்க. அப்படி யோசிச்சாங்கன்னா வம்புதான். ஆனா எனக்குத் தெரிஞ்சு, யாரும் என் எதிர்ல வரல்லே.’

‘நான் போனப்பவும் யாரும் வரல்லே. நமக்கும் தெரியாம யாராச்சும் கவனிச்சிருந்தாங்கன்னா, வம்புதான்.. .. .. ஆனா, நான் காணாம போனதைப் பொறுத்த மட்டிலே, உங்களோட ஓடிட்டதாத்தான் யோசிப்பாங்க. ஏன்னா, கோவில்ல நம்மளை சிலராச்சும் நிச்சயம் கவனிச்சிருப்பாங்க. போலீஸ் விசாரணையிலே இதுவும் வெளிப்படும்.’

‘பாவம், ஸ்டெல்லா டீச்சர்!’

‘மெட்ரா¡ஸ்ல எங்க தங்குறது?’

‘மெட்ராசுக்கு இதுக்கு முந்தி ரெண்டு தரம் போயிருக்கேன். எக்மோர் ஸ்டேஷனுக்குப் பக்கத்துல ஒரு லாட்ஜ் இருக்கு. அங்க தங்கலாம். என் •ப்ரண்ட் வீடு கூட வேணாம். நமக்கு வீடு உடனே கிடைக்காது. வாடகையும் அதிகம். அட்வான்ஸ் வேற கேப்பாங்க. ஏதாச்சும் ஸ்லம் ஏரியாவில குடிசைதான் தேடணும். பாக்கலாம். கடவுள் ஏதாச்சும் வழி காட்டுவாரு.’

‘ஸ்டெல்லா டீச்சரை வேண்டிக்குவம். அவங்க ஆத்மா வழி காட்டும்.’
சென்னையில் எழும்பூரில் அவன் குறிப்பிட்ட விடுதியில் கணவன் மனைவியாகப் பதிவுசெய்துகொண்டு தங்கினார்கள். கருணாகரன் அவள் கழுத்தில் ஒரு தடிமனான மஞ்சள் கயிற்றை உடனே கட்டிவிட்டான். ஸ்டெல்லா டீச்சரின் அறிவுரைப்படி இருவரும் கற்போடு இருந்தார்கள். விடுதியின் தனிமையில் ஸ்டெல்லா டீச்சரை நினைத்து நினைத்துக் கண்ணீர் உகுத்தார்கள்.

.. .. .. மறு நாள் மாலைச் செய்தித்தாள் ஒன்றில் ஸ்டெல்லாவின் படுகொலை பற்றிய செய்தி வந்திருந்தது. கொள்ளைக்காகச் செய்த கொலை என்று நிகழ்வின் இடத்தில் கிடைத்த கை ரேகைகளிலிருந்து தெளிவாகிவிட்டதாகக் காவல்துறையினர் அறிவித்த செய்தி இருவரையும் அப்பாடா என்று பெருமூச்சு விட வைத்தது. ஆனாலும், முழு நிம்மதி ஏற்படவில்லை. கொலைகாரர்கன் மாட்டுகிற வரை நெஞ்சுப் படபடப்பு இருந்துகொண்டுதான் இருக்கும் என்று இருவருக்கும் தோன்றியது.

.. .. .. கருணாகரன் வேலையில் சேர இன்னும் ஒரு நாள் இருந்தது. கைரேகைகளுக்குரிய பழைய கேடிகள் பிடிபட்டுவிட்ட செய்தி அன்றைய நாளிதழில் வந்திருந்தது. அடுத்து இன்னொரு செய்தியும் வெளியாகி யிருந்தது. கொலைச்செய்தி கேட்டதும் சென்னையிலிருந்து வந்து சேர்ந்த அவருடைய சகோதரி மார்கரெட் ஸ்டெல்லா கொலையுண்ட இரவில் சுமார் எட்டுமணிக்குத் தன்னோடு தொலைபேசியதாகவும் ஓர் இளம் தம்பதியுடன் அவள் அன்றிரவே கிளம்ப இருந்ததாய்ச் சொன்னதாகவும் தெரிவித்திருந்த அந்தச் செய்தி இருவருக்கும் சற்றே கலக்கம் அளித்தது. – தொடரும்

Series Navigationதிண்ணையின் இலக்கியத் தடம்-13ஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *