அன்பு மகளுக்கு..

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

– சுப்ரபாரதிமணியன்.,

நேரு தன் மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதங்களின் தொகுப்புதான் “ கண்டுணர்ந்த இந்தியா “. (டிஸ்கவரி ஆப் இந்தியா )

இன்று நீ கண்டுணர்ந்த இந்தியா, கண்டுணரும் இந்தியா என்று நான் குறிப்பிடும் விசயங்கள் கசப்பானவை. ஆனாலும் பகிர்ந்து கொள்ளத்தானே வேண்டும்.

” மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ- இந்தப்
பாரில் அறங்கள் வளரும் ,அம்மா “ ( கவிமணி தேசிக விநாயகம் )

” மாபாதகம் “ செய்தவர்களாக இந்திய இளம் பெண்கள் மாறிப் போய் விட்டார்கள்.1. கவுரவக் கொலைகள் 2, அகவுரவக் கொலைகள்…..தொடர்கின்றன.

இளம் பெண்களின் காமம் சேர்ந்த காதல் அவர்களை சீரழித்து விடுகிறது.தனிமை தரும் உற்சாகம் எல்லை மீறி அவர்களைச் சிதைக்கிறது.

இதை மீறி காதல் என்ற அனுபவமோ அல்லது திருமணம் என்ற நிகழ்வோ அவர்களை புதிய உலகிற்குள் கொண்டு செல்கிறது. இந்த அனுபவத்தை மன முதிர்ச்சியுடன் அணுகும் இளம் பெண்கள் கவுரவமான வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். அல்லாதோருக்கு கவுரவக் கொலைகள் என்ற பெயரில் சித்ரவதைகள் தொடர்கின்றன.பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது காவல்துறையினரின் வழக்காய் மாறாத வரைக்கும் கண்ணாமூச்சி காட்டி மறைந்து போகிறது.

புது தில்லியில் நிர்பயா ( பயமற்றவள் ) விற்கு நேர்ந்த பாலியல் வன்முறைக்குத் தீர்வாக வழக்கு எட்டு மாதங்கள் முடிந்து தீர்ப்பு வந்திருக்கிறது. 18 வயதிற்கு குறைவான ஒருவரைத் தவிர மீதி நான்கு பேருக்கும் மரணதண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தண்டனைகள் எந்தக் குற்றத்தையும் தடுக்குமென்பது முழு உண்மையல்ல. ஆனாலும் தண்டணைகள் நிச்சயம் தேவை. பெண்கள் மீதான பல வல்லுறவுகளில் கொடிய மவுனங்கள் நீடிக்கவே செய்கின்றன, நடத்தை கெட்ட பெண்கள் என்ற முத்திரையைக் குத்தி பாலியல் உறவு கொண்டு தூக்கி எறியப்படும் பெண்களின் வழக்குகள் நிறைய உள்ளன.

நிர்பயா வழக்கைப் போல் எழுச்சிகளும், சரியான தீர்ப்புகளும் எல்லா வழக்குகளிலும் வெளிப்படவேண்டும்.பெண் என்ன வகை உடையை உடுத்த வேண்டும், எதைப் படிக்க வேண்டும், ஆண்களுடன் நட்பு கொள்ளலாமா, திருமணம் இன்றி வாழலாமா, எந்த மாதிரியான வேலைக்குப் போகலாம், தன் மீதான வன்முறையை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி சிந்திக்க சுதந்திரமும், கட்டுப்பாடின்மையும் விரிந்து கிடக்கின்றன.

சமூகத்தின் வன்மத்தின் வன்முறையை எதிர் கொள்ள சரியான கல்வியும், பகுத்தறிவும் வழிகாட்டும்…. கல்வி என்பதில் அரசியல் கல்வி முதல் சமூக அனுபவங்கள் வரை எல்லாம் உள்ளடங்கும். அந்த அனுபவத்தை நீ இப்போதைக்கு புத்தகங்கள் மூலம் பெற முடியும். வாசிப்பு தரும் அனுபவம் மன எழுச்சிக்கோ, போராட்ட எண்ணங்களுக்கோ சரியாக வழிகாட்டும்… புத்தகங்களிலிருந்து நீ ஆரம்பி மகளே.

Series Navigation
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *