வாசிக்கப் பழ(க்)குவோமே

author
4
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

மணி.கணேசன்
கடந்த தலைமுறைவரை வாசிப்புப்பழக்கம் என்பது உயர்ந்த,நடுத்தர வர்க்கத்துப் படித்தோரின் குடும்பவழக்கமாக இருந்தது முற்றிலும் உண்மையாகும்.தற்போது மலிந்து வெகுமக்கள் ஊடகமாக விளங்கும் தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்குத் தொடர் அலைவரிசைகளும் நவீன செல்பேசிகளும் அதிகம் புழங்காத அக்காலக்கட்டத்தில் பல்வேறுவகைப்பட்ட வார,மாத இதழ்கள் மக்களிடையே கோலோச்சிக் கிடந்தன.குறிப்பாக,இளைய தலைமுறையினர் பதின்பருவ உளச்சிக்கல்களுக்குத் தம்மை ஆட்படுத்திக் கெடுத்துக்கொள்ளாமல் அவற்றிற்கு வடிகாலாக,புத்தகங்களைத் தேடி வாங்குவதும் அவை வெளியாகும் நாளுக்காகத் தவம்கிடப்பதும் மட்டுமல்லாமல் தொடர்வாசிப்பை அரும்பெரும் நன்னடத்தையாகக் கொண்டு தம்மைத்தாமே நல்வழிப்படுத்திக்கொண்டனர்.அவ்வாசிப்புப் பழக்கம் பெருவாரியான பெண்களிடம் கோலோச்சிக் கிடந்தது.
அறியாமையில் உழலும் மக்களை விழிப்படையச் செய்து அவர்களின் அறிவுப்பசியைப் போக்குவது ஒன்றையே தம் தலையாயக் குறிக்கோளாக எண்ணி அச்சு ஊடகங்கள் அறத்தோடு செயல்பட்டன.இன்று நிலைமை தலைகீழ்.நவீனத்திற்குப் பிந்தைய இக்காலக்கட்டத்தில் தன்னலம்,குறுகிய குழுமனப்பான்மை,வெற்றுப்புகழ்ச்சி,முழு பொழுதுபோக்கு,வியாபார நோக்கு போன்றவை மிகுந்து ஊடகமும் ஒரு பெருவணிகக் குழுமமாக மாறிவிட்டதுதான் சாபக்கேடு.திரைத்துறை சார்ந்த செய்திகளுக்கும் கிசுகிசுக்களுக்கும் பெருவாரியாக முக்கியத்துவம் தந்து வணிக இதழ்கள் தம் நீடித்த நிலைப்பைப் பல்வேறு சமரசங்களுக்கிடையில் தொழில்தர்மத்தை ஓரளவு கடைப்பிடித்து வந்தாலும் பாரம்பரியமிக்க ஊடகங்கள் சில நெறிபிறழாமல் அத்தொழில்தர்மத்தைக் கட்டிக்காத்து வருவதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.
அதேசமயம்,இலக்கியத்தைப் போற்றி வளர்ப்பதாகப் பரப்புரை செய்துகொள்ளும் சிற்றிதழ் உலகத்தின் போக்குகள் மிகவும் விசித்திரமானவை.வீண்தற்புகழ்ச்சிக்கும் தனிநபர் தாக்குதல் வழக்கத்தை பேரளவு ஊக்குவிக்கும் நிகழ்ச்சிக்கும் பொன்னான நேரத்தை மட்டுமல்லாமல் மதிப்புமிக்க பக்கங்களையும் வெறுமனே வீணடித்து வருவது கண்கூடு.தவிர,அவற்றிற்கிடையே காணப்படும் இனக்குழு அரசியலால் ஆக்கப்பூர்வமான மாற்றுக் கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் வழிவிடாமல் இரும்புத்திரை போர்த்தி அந்நியப்பட்டு நின்று அரற்றுவதையும் பெருந்திரளான வாசகர் கூட்டத்தைப்பார்த்துத் தூற்றுவதையும் இவை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.சுருங்கச் சொன்னால் வானொலி,தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் காணப்படும் நிலையக் கலைஞர்கள்போல் அண்மைக்ககாலமாக,இருவேறு ஊடகங்களிலும் நிலைய இலக்கியப் படைப்பாளிகள் மட்டுமே அவற்றை ஆக்கிரமித்துக்கொண்டு புதுவரவுகளுக்கு முட்டுக்கட்டையாக விளங்குவதுகூட வாசக மனநிலையில் ஒருவித சோர்வையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்திவிடுகின்றன.
இத்தகு நோக்கும் போக்கும் ஓர் அறிமுக வாசகனை வாசிப்பிலிருந்து விலக்கிக் கவனத்தைச் சிதறடித்து வந்தாரையெல்லாம் வரவேற்று வாழவைக்கும் மேம்பட்ட தொழிட்நுட்பம் கொண்ட கருத்துக்கும் காட்சிக்கும் பெருவிருந்து படைக்கும் இணைய தளங்களின்மீது தீரா மோகத்தை அவனுக்குள் மூட்டிவிடுவது குறிப்பிடத்தக்கதுமேலும்,.உலகளாவிய அளவில் உடனடியாகக் கிடைக்கப்பெறும் புதுநட்பும் அதனைப் பேணும் அரட்டைக்கச்சேரிகளும் அவ்வாசகனுக்குப் பெரும் ஊக்கமளிக்கின்றன.தொடர்கதைகள் பலவற்றில் மனத்தைப் பறிகொடுத்து அவற்றின் செவ்வியல் தன்மைகள்,ஒழுக்கச்சீல குணங்கள்,உயரிய வாழ்வியல் விழுமியப் பண்புகள் நிறைந்த கற்பனைக் கதைமாந்தர்கள்மேல் அளப்பறிய பற்று கொண்டிருந்த பெண்ணினத்தை இன்று நெடுந்தொடர்கள் பைத்தியமாக ஆட்டிப்படைக்கின்றன என்பது மிகையாகாது.
தனிக்குடும்ப நெறி,தன்முனைப்பு,தற்சார்பின்மை போன்றவை தவறாகச் சித்திரிக்கப்பட்டதன் விளைவும் தனிமனித நுகர்வுக் கலாச்சாரப் பண்பும் வாசிப்பைச் சுமையாக்கிவிட்டன.இயந்திர மயமாகிப் போன மனித வாழ்க்கையில் நல்ல நூல்களை வாங்கியோ அல்லது அருகாமையிலுள்ள நூலகங்களுக்குச் சென்றோ வாசிப்பதைத் தவிர மனிதர்களுக்கு ஏனைய எல்லாவற்றிற்கும் போதிய நேரமிருக்கின்றது.ஆனால் ஒன்றை மறந்துவிடக்கூடாது.நல்ல நூல்களும் வாசிப்பும் மனித வாழ்வை மேம்படுத்த வல்லவை.மானுடத்தைப் போதிப்பவை.வளரச் செய்பவை.
கதைச்சொல்லி சமூகம் நம்முடையது.எல்லாவற்றிற்கும் இங்கு கதைகள் உண்டு.சாதாரண நிகழ்வுகூட நம்மிடையே கதையாக உருப்பெறுவதென்பது வாடிக்கையாகும்.சிலசமயங்களில் வேடிக்கையும்கூட.நன்னெறிக் கதைகளும் வீரதீரக் கதைகளும் முறையே மனிதனை மகாத்மாவாகவும் மாபெரும் வீரனாகவும் ஆக்கியுள்ளன.மனிதநேயமும் மன நல்லிணக்கமும் அவற்றின் அடித்தளங்களாவன.நடப்புச் சூழலில் சமுதாயத்தில் மலிந்து காணப்படும் பல்வேறு சமூகச்சிக்கல்கள்,பொருளாதாரப் பிரச்சினைகள்,பண்பாட்டு நசிவுகள்,நாகரிகச் சீரழிவுகள்,மனிதாபிமானமற்ற போக்குகள்,ஒடுக்குமுறைகள்,ஏற்றத்தாழ்வுகள் முதலியன வெடித்துப்பெருகக் காரணம் வாசிப்புப்பண்பை தனிமனித அளவிலும் குடும்ப அளவிலும் கைவிடப்பட்டுப் புறந்தள்ளியதெனலாம்.
உலகிலேயே ஸ்வீடன்,ஜப்பான் நாட்டுக்காரர்கள் நாளிதழ் மற்றும் புத்தகங்கள் அதிகம் வாங்கிப் பயனுறுவதில் முன்னணி வகிப்பதுபோல் தமிழ்ச்சமூகம் விளங்கவேண்டுமென்பது சமுதாய அக்கறையுள்ள அனைவரின் விருப்பமாகும்.ஏட்டுக்கல்வியுடன் உலகப்பொது அறிவு,நல்ல கலை,இலக்கிய நூல்கள் போன்றவற்றைக் கசடற கற்கும் சமூகமே உலகிற்கு சிறந்ததொரு வழிகாட்டியாகவும் மனித குலத்திற்கு முன்மாதிரியாகவும் திகழ்வது திண்ணம்.அதுபோல்,கலை,இலக்கியம்,அரசியல்,பொருளாதாரம்,அறிவியல்,அறவியல்,நாகரிக வளர்ச்சி,தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலகளவில் மேம்படவும் புத்தாக்கங்கள் தரவும் வாசிப்புப்பழக்கம் இன்றியமையாதது.சுவாசிப்பும் வாசிப்பும் மனிதன் வாழும் காலம்வரை ஒருசேர நிகழவேண்டிய நிகழ்வுகள் என்பது ஆன்றோர் வாக்கு.இருண்டுக் கிடக்கும் வீட்டின் குடும்ப விளக்காக உள்ள பெண்கள் வாசிப்பைத் தம் குடும்ப நிகழ்ச்சி நிரலாகக் கொள்ளும் பட்சத்தில் வீடே பழையபடி அன்பும் பாசமும் நிறைந்து மகிழ்ச்சிப் பொங்கி நாளெல்லாம் திருக்கார்த்திகையாக வண்ணமயமாக ஒளிரும்.
குழந்தைக்குத் தாய்ப்பால் மற்றும் உணவு ஊட்டுவது மட்டும் நல்ல தாயின் தலையாய வேலையல்ல.உடல் வளர்ச்சியோடு உள்ளமும் அறிவும் நன்கு வளர்ச்சியுற புத்தகத் தோழமையும் வாசிப்பும் இன்றியமையாதவை என்பதைத் தாய்மார்கள் தத்தம் பிள்ளைகளுக்கு அன்பொழுக சொல்லித்தர முயலுதல் நல்லது.மதுபானக் கடைகளிலும் திரையரங்குகளிலும் காலந்தோறும் தினசரி நிரம்பி வழியும் கூட்டம் நூலகங்களில் சற்று அலைபாயும் மனத்தைப் புத்தக வாசிப்பில் ஆற்றுப்படுத்தியிருக்குமேயானால் தமிழ்ச்சமுதாயத்தைப் பீடித்த இன்னல்கள் அனைத்தும் எப்போதோ ஒழிந்திருக்கும் எனலாம்.
வீடென்பது வாழவும் வசிக்கவும் உரிய,உகந்த இடமாக இருப்பதுபோல,வாசிக்கவும் வாசித்தவற்றை நல்ல முறையில் கலந்துரையாடல் நிகழ்த்தவும் வல்ல களமாகவும் இருத்தல் மிகுந்த நன்மைப் பயக்கும்.அதற்கு ஒவ்வொரு வீடும் சிறந்ததொரு நூலகமாக மாற்றம் பெற வேண்டும்.விலையுயர்ந்த,நல்ல கட்டுக்கோப்புமிக்க,பக்கம் அதிகமுள்ள,பார்த்ததும் மலைக்கவைக்கும் புத்தகங்களை பெருமைக்காக வாங்கி அழகிய அலமாரிகளில் பாதுகாத்துப் பூட்டிவைப்பதைவிட,விலைமலிந்த நாளிதழ்,வார,மாத இதழ்களைப் படித்துப் பயனுறுவதென்பது சாலச்சிறந்தது.எதையெதையோ விலையில்லாமல் மக்களுக்கு வாரிவழங்கும் மத்திய,மாநில அரசுகள் நல்ல,பயனுள்ள அரசுடைமையாக்கப்பட்ட அறிஞர் பெருமக்களின் நூல்களை விலையில்லாமல் கொடுத்து சமுதாய வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வித்திட முனைதல் நல்லது.

இதுதவிர,பொதுமக்கள் அதிகம் கூடி வெறுமனே மிகுந்த எரிச்சலோடு காத்துக்கிடக்கும் மருத்துவமனைகள்,    பேருந்து,இரயில் நிலையங்கள்,அலுவலகங்கள்,  ஆலயங்கள்,விடுதிகள்,காப்பகங்கள்,பூங்காக்கள் போன்றவற்றை நல்ல நூல்கள் வாசிக்கத்தக்க மையங்களாக ஆக்குதல் அவசர அவசியமாகும்.நல்ல உபயோகமான பொழுதுபோக்கிற்கு உற்ற துணையாகவிருக்கும் இதுபோன்ற குட்டி நூலகங்களைப் போற்றிப் பாதுகாத்தல்; என்பது தனிமனிதனின் தலையாய சமூகக் கடமையென எண்ணி பொறுப்புணர்வுடன் செயல்படுவது மிக முக்கியம்.அரசின் தன்னலம் கருதாத இச்சமுதாயப் பணிக்கு தனிநபர் புரவலர்களும் தன்னார்வ தொண்டு அமைப்புகளும் போதிய ஆக்கமும் ஊக்கமும் வழங்கிடுதல் நற்பலனைத்தரும்.மேலும்,புத்தக வாசிப்பின் அருமை பெருமைகளை இவை பொதுமக்களிடம் பல்வேறு வழிகளில் பரப்புரை செய்வதை வாடிக்கையாகக் கொள்ளவேண்டும்.குடும்ப மற்றும் பொது விழாக்களின்போது கட்டாயம் நூல்களைப் பரிசளிக்க முன்வருதல் நல்லது.குறிப்பாக,பிறந்தநாள் மற்றும் திருமணநாள் கொண்டாடுவோர் புத்தகங்களைப் பரிசிலாகப் பெறுவதையும் மரக்கன்று வளர்த்தலையும் பெரும்பாக்கியமாகக் கருதுதல் அவசியம்.
தொடக்கப்பள்ளிகளில் மாணவரிடையே பொதுவாசிப்புத்திறனைக் கூட்ட புத்தகப் பூங்கொத்துத்திட்டம் நடைமுறையிலிருந்தாலும் அதை சரிவர பள்ளிகளில் செயல்படுத்துவதையும் கண்காணிப்பதையும் உறுதிசெய்திடுதல் இன்றியமையாதது.மேலும்,அனைத்துவகைப் பள்ளிகளுக்கும் நடுநிலைமை கொண்ட நாளிதழ்களும் கல்வி சார்ந்த பருவ ஏடுகளும் கிடைத்திட அரசு வழிவகை காணுதல் நன்மைப்பயக்கும்.வாசிக்கப் பழகுவோம் என்கிற திட்டத்தைப் பள்ளிகள்தோறும் ஏற்படுத்தி வாரமொருமுறை அதற்காகப் பாடவேளையொதுக்கி உயிர்ப்புடன் அதை நடைமுறைப்படுத்துவதன் மூலமாகக் கூடுதல் பலன் கிட்ட அதிக வாய்ப்புண்டு.குறிப்பாக,அரசுப் பொதுத்தேர்வுகள் எழுதவிருக்கும் மன அழுத்தச் சுமையுடன் அல்லாடித் தவிக்கும் மாணவ,மாணவிகளுக்கு இத்திட்டம் உண்மையிலேயே அவர்களின் மனக்காயத்தைப் போக்கவல்ல அருமருந்தாக விளங்கும்.
இனியாவது,ஒவ்வொருவரும் புத்தக வாசிப்பை வீண்வேலைப்பளுவாகக் கருதுவதை விடுத்து மன அமைதிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் உகந்த பொன்னான பொழுது என்றெண்ணி மகிழுதல் அவசியம்.புத்தக வாசிப்புப் பழக்கத்தை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுப்பதில் ஒவ்வொருவருக்கும் கணிசமான பங்கிருப்பதை மறுப்பதற்கில்லை.அதற்கு குடும்பமே முதற்படி.இக்குறிக்கோள் ஈடேற வாசிப்பைத் தனிமனிதன் இன்றே,இப்போதே நேசிக்கத் தொடங்கிடுதல் நலம்.

மணி.கணேசன்

Series Navigationபூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்ததுமருமகளின் மர்மம் – 17தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1நீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜாபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 47ஹாங்காங் தமிழ் மலர்திண்ணையின் இலக்கியத் தடம் – 23குலப்பெருமை
author

Similar Posts

4 Comments

 1. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  வாசிப்பு ஒரு சமூக இயக்கமாக உருவாகவேண்டும். அதற்கு முதல்படி, பெற்றோர் வாசிப்பவர்களாக இருக்கவேண்டும். இல்லையென்றாலும், குழந்தைகளை வாசிப்பதற்கு பழக்கவேண்டும்.

  தேவையற்ற குப்பை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து அவர்களை விடுவித்து நூலகத்திற்கு அழைத்துப்போகவேண்டும். நூலக வசதி இல்லாத ஊர்களிலிருப்போர் நல்ல குழந்தை நூல்களை வாங்கித்தந்து வாசிப்பதன் இன்பத்தை சிறுவயதிலேயே நுகரவைக்கவேண்டும்.

  குறிப்பிட்ட இலக்கு வைத்து (வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு இத்தனை நூல்கள் பயிலவேண்டும் என்பது போன்ற) இலக்கியம், அறிவியல், தேச/உலக வரலாறு, கலைகள் என எல்லா தரப்பு நூல்களையும் வயதிற்கு தக்கவாறு வாசிக்கவைத்து தொடர்ச்சியாக அதை கண்காணிக்கவும் வேண்டும்.

  இப்படி தொடர்ச்சியாக வாசிப்பில் ஈடுபடும் இன்றைய குழந்தைகள்தான் நாளை தமக்கான துறைகளில் சிறப்பான ஆளுமைகளாக பரிமளிக்க இயலும்.

  வாசிப்பே இல்லாத தலைமுறை, தேர்ந்த ரசனையற்ற வெறும் போன்சாய் தலைமுறையாக மட்டுமே இருக்க முடியும்.

 2. Avatar
  meenal says:

  வாசிப்பு ஒழிந்து பல நாட்களாகி விட்டன.அதற்கு, தொலைக் காட்சி தொலைபேசி தொல்லைகளாகிவிட்டன. வாசிப்பு நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்கு என்பதை மறந்தாகிவிட்டது. மொழி வளம் அறிவுசெ செறிவு தரும் பழக்கம் கைநழுவிப் போய்விட்டது. அதனை மூண்டும் கொண்டு வரவேண்டும்.
  எல்லாரும் நூலகத்திற்குச் செநூல்களைப் படிக்க வேண்டும். வேண்டும்.

 3. Avatar
  Arun Narayanan says:

  What a beautiful article! Today, even teachers, both in public and private schools, in general, lack this habit of book reading. Many teachers even discourage or treat indiscriminately those very few (one or two in a class)students who have the habit of reading books. I am one such example. I have changed many schools, because some teachers just hate knowledge. It is true, but one may not agree. Persons like yourself should go to schools and popularise reading habits amongst teachers.

 4. Avatar
  இராய. செல்லப்பா says:

  மிகவும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரை. மாணவர்கள் வெளிப் புத்தகம் படிக்காதிருப்பதின் முழுப் பழியும் ஆசிரியர்களை மட்டும் அல்ல பெற்றோர்களையும் சாரும். தினத்தாள் கூட காசு கொடுத்து வாங்கும் பழக்கம் இல்லாத பெற்றோரகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *