தினம் என் பயணங்கள் – 7

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

வெகுநாட்களுக்கு பிறகு இந்த தொடர்மூலமாக உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். சமீபகாலமாக எழுத்து என்வசம் இல்லை. மனம் ஒரு குழப்ப நிலையில் சங்கமித்துவிட, என் தொடர்ப் பயணம் எப்படிப் பட்டதாக இருக்கும் என்பது குறித்தான கேள்விகள் என்னை குடையத் தொடங்கிவிட்டன.

 

என் வெற்றியும் தோல்வியும் நிறுத்துப் பார்க்க நான் பயன்படுத்துவது என்னை சுற்றியுள்ளவர்கள் மூலமாகவே, அந்த சுற்றியுள்ளவர்களின் சுட்டுவிரல்கள் என் பக்கமாகத் திரும்பி நீ ஒன்றுக்கும் லாயக்கில்லாதவள் என்று கூப்பாடு போட்டுக் கத்துவதைப் போன்ற பிரம்மை எனக்குள் தோன்றி விட்டது.

 

என்னால் ஊக்கம் பெற்றவர்கள், “எங்களின் அடுத்த நிலை என்ன” என்று என்னிடம் கேள்வி எழுப்ப நான் மனமுடைந்து போனேன். வலிகளை நான் அனுபவித்தது, வலியுடையோரின் மனநிலையை அறிந்து கொள்ளவென்று எண்ணியிருந்தேன்.

 

என்னைப் போன்றோரை வெளிக்கொண்டுவர நான் முதல் பலி என்பது போல எல்லா செயல்களும் இருக்கும். அப்படி இருக்க, எனக்கென்று எந்த வாழ்க்கையும் இல்லை என்று அங்கலாய்த்த என் நண்பனையும், அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை,  அக்கா, மீண்டும் சிறைச் சாலைக்கே வந்துவிட்டது போன்ற உணர்வு என்று, குரல் கம்ம தொண்டை யடைக்கப் பேசிய என் சிநேகிதி நிர்மலாவையும் சந்தித்த பிறகு.

 

என் முயற்சிகள் அத்தனையும் வீண் என்று தோன்றியது. ஒவ்வொரு சேவை நிறுவனங்களுக்குள்ளும் மயிரிழையளவில் ஒளிந்து கிடக்கும் சுயநலம் என் கண்களுக்குப் பெரும் பாதகமாகத் தெரிந்தது.

 

அந்த நிறுனத்தில் இருந்த போது என்னிடம் மூன்று சக்கர வண்டி இருந்தது. என்னால் வெளியில் சென்று எனக்கானவைகளை வாங்கிக் கொள்ள முடிந்தது. மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டேன். வேலைக்கு வந்தால் தான் சைக்கிளாம். அந்த வேலை என்னால் செய்ய முடிய வில்லை. பட்டுப் புழுவிலிருந்து நூல் எடுக்க வேண்டும். உடல் நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. நான் தான் மாமிசம் உண்பவள் அல்லவே அந்த வாடை எனக்கு பிடிக்கவில்லை. வேறு என்ன செய்வது என்று தான் செய்தேன். ஒரு மாதம் ஊதியம் தரவில்லை அக்கா, வெறும் கஞ்சி குடித்துக் கொண்டு அங்கிருந்தேன். உதவிக்கு ஆள் இல்லை. யாரும் என்னைப் பற்றி கவலை கொள்ள வில்லை. மீண்டும் அந்த வேலைக்கு எப்படி போவது ?

 

வீட்டில் அப்பாவிடம் நொண்டிப் பொண்ணு சம்பாதிச்சுதான் நீங்க சாப்பிட போறீங்களான்னு கேக்குறாங்களாம். அப்பா போகாதேன்னு சொல்லிட்டார். ஆனால் பறக்க கற்றுக்கொண்டு பறக்காமல் இருக்க முடியுமா…? நான் பிறந்தது இதற்காக தானா ? சாப்பிடுகிறேன் உறங்குகிறேன் மீண்டும் சாப்பிடுகிறேன் உறங்குகிறேன். என்னுடைய அடுத்த நிலை என்ன? மீண்டும் அந்த ஒன்றும் இல்லாத நிலைக்கு வந்துவிட்டேன்.

 

அவள் சொல்லி முடித்த போது நான் துணுக்குற்றுப் போயிருந்தேன். பழைய தமிழ்ச்செல்வியாய் இருந்திருந்தால்…எதுக்கும் கவலை வேண்டாம், வேறு எதாவது வழியிருக்கிறதா என்று பார்ப்போம் என்று சொல்லியிருப்பேன்.

 

அடுத்த நாளே அதற்கான வழியைத் தேடி அலைந்திருப்பேன்.

 

இந்த இரண்டு மாதங்களில் நானே நிலைகுலைந்து போய் இருக்கிறேன். பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள். வராத என் ஊதியத்திற்காக அலைவதும், வேறு வேலை தேடுவதுமாகக் கழிகிறது என்னுடைய பொழுதுகள். சதா நான் என்னிலே மூழ்கிக்கொண்டிருக்க, இன்றைய பொழுது அந்த எண்ணங்களை உதறி மீண்டும் உற்சாகமடையவே இந்த பதிவு தோழர்களே…!

 

சேவை செய்ய எது வேண்டும்…?

 

எனக்கு நிறை பணம் வேண்டும். என்னிடம் பணமிருந்தால் நான் அநேகருக்கு கொடுத்து உதவுவேன். அவர்கள் குறை தீர்ப்பேன் என்று சொன்னேன்.

 

என் நண்பர் தமிழ்ராஜா சொன்னார் சேவை செய்ய மனம் தான் வேண்டும். அந்த மனம் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்யும் என்று.

 

சில தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளை காண்பித்து சேவை என்கிற பெயரில் நன்கொடைகள் வசூல் செய்வது மனதை கரிக்கச் செய்கிறது. அவர்கள் என்ன செய்து கொண்டாலும் சக மனிதர்கள் என்கிற மனிதாபிமானம் இன்றிப் பேசும் போது மனம் துன்புறுகிறது.

 

உங்களுக்கெல்லாம் எவன் வேலை கொடுப்பான், நீங்க வீட்டுக்கு போனா பிச்சைதான் எடுக்கனும். ஒழுங்கா பட்டு நூல் எடுங்க என்று கத்திய நிர்வாகியின் பேச்சை அவள் கூறியபோது மனம் கசந்து போனது.

 

எல்லா உயிர்களும் வாழப் பிறந்வைகள் தான். தொல்லைகள் தராமல் கை பற்றி உதவி வழி  நடத்தினால் நன்றாக இருக்கும்.

 

[தொடரும்]

Series Navigationமருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்மருமகளின் மர்மம் 18நீங்காத நினைவுகள் – 36கொலுஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சிபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

3 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    அன்பின் ஜி.ஜே.தமிழ்ச்செல்வி,

    தங்களின் கட்டுரை படிக்கும் போது தங்களின்
    எழுத்தின் எழுச்சியைப் பார்த்து பிரமிப்பாகவே இருக்கிறது.
    அதே சமயம் சென்ற கட்டுரையில் தீயாய் கொழுந்து விட்ட
    ஜீவனுள்ள வார்த்தைகள் இந்தக் கட்டுரையில் அங்கங்கு
    சோகம் தலைதூக்கிப் பார்க்கும் போது எங்கே அந்த ஜுவாலை
    அடங்கி விடக் கூடாதே என்ற ஆதங்கம் படிக்கும் போதே
    மனதைப் பற்றிக் கொள்கிறது.

    நிறைய தொண்டு நிறுவனங்கள் மிகவும் நேர்மையாக, தேவையானவர்களுக்கு
    உதவும் கரங்களாகத் தான் தற்போது விளங்குகிறது. நம் அம்மா அரசே அதைத் தானே
    செய்கிறது. டிவி சானலில் நிறைய பேர்கள் உதவி பெறுவதைப் பார்க்க முடிகிறதே.
    தொண்டு செய்ய மனமும் வேண்டும் பணமும் வேண்டும்.
    எத்தனையோ ஐ.டி கம்பெனியில் பணி புரிபவர்கள் குழுமமாச் சேர்ந்து கொண்டு
    பல உதவிகளைச் செய்கிறார்கள். தற்போது இருக்கும் பல இளைய சமுதாயத்தினர்களுக்கு பிறருக்கு உதவும்
    மனப்பான்மை அதிக அளவில் வளர்ந்திருப்பது உண்மை. அதை நாம் பாராட்டத் தான் வேண்டும்.
    பதர்கள் இல்லாத வயல் இருக்காது.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.
    .

  2. Avatar
    ameethaammaal says:

    அன்புள்ள தமிழ்ச்செல்விக்கு
    அரசாங்கத்திடம் ஒரு வேலை ஆகவேண்டுமென்றால் எத்தனையெத்தனை சிரமங்கள் அடேங்கப்பா. உடற்குறையில்லாதவர்கள் தாங்கிக்கொள்கிறார்கள். உடற்குறை உள்ளவர்களை இப்படியெல்லாம் துன்புறுத்த எப்படித்தான் மனம் வருகிறதோ தெரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *