நீங்காத நினைவுகள் 39

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

Vaali-famous-Tamil-poet-and-lyricist

கவிஞர் வைரமுத்து அவர்கள் எங்கள் மாவட்டக்காரர் என்பதில் எல்லாருக்கும் இருப்பது போல் எனக்கும் பெருமை உண்டு.  அவர் மதுரைப் பக்கத்துக் கொச்சைத் தழிழில் படைத்த கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப் போர் ஆகியவை அவரைச் சிறந்த நாவலாசிரியராகவும் இனங்காட்டின என்பதில் கடுகளவும் ஐயமில்லை. அவர் ஊரான வடுகபட்டி எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள ஊராகும்.

போற்றுதலுக்குரிய இந்நாவல்களை வைரமுத்து படைப்பதற்குப் பல நாள்களுக்கு முன்னால் கவிஞர் அமரர் வாலி அவர்களைப் பற்றிய கட்டுரை ஒன்று பிரபல வார இதழ் ஒன்றில் வெளிவந்தது. பெண்ணுரிமைவாதிகளுள் ஒருவர் அவரை ஏக வசனத்தில் விளித்ததுமல்லாமல், “டா” போட்டும் ஒலிபெருக்கியில் விளித்துத் திட்டியது பற்றிய தகவலை உள்ளடக்கிய கட்டுரை அது. பெண்கள் “வயது”க்கு வரும் அந்தரங்கத்தைப் பற்றி வினவி அவமதிக்கும் ஒரு திரைப்படப் பாடலை எழுதியதற்காகவே அந்தச் சாடல்.

அப்பெண்மணியின் ஆவேசப் பேச்சை அவ்விதழ் வைரமுத்துவின் கருத்துடன் வெளியிட்டிருந்தது. வைரமுத்து விமர்சகர்களைக் குறைகூறியதுடன் கவிஞர் வாலிக்கு ஆதரவான கருத்தையும் தெரிவித்திருந்தார்.

அதற்கு எதிரொலியாக நான் எழுதியது கீழே வருகிறது. அவ்விதழ் அதன் பெரும்பகுதியை ஒதுக்கிவிட்டு வாலியை நான் தாக்கிய பகுதியை மட்டுமே வெளியிட்டது. அவர்கள் அந்த அளவுக்கேனும் அதை வெளியிட்டதே பெரிய விஷயம்தான். எனவே அதை மிகவும் சுருக்கியது பற்றி எனக்கொன்றும் மனத்தாங்கல் இல்லை.  எனினும் நான் எழுதியது முழுவதும் கீழே வருகிறது. அடைப்புக் குறிகளுள் சாய்ந்த எழுத்துகளில் இருக்கும் பகுதிகள் மட்டும் வெளியாகவில்லை.

(மதுரை மாவட்ட வடுகபட்டி வைரமுத்து

      மதுரமாய் எழுதுகின்ற பாக்களுக்கு

மட்டுமே நாம் வாங்குவோம் வக்காலத்து;

இதுகாறும் வேறெவர்க்கும்

கிட்டிடா விருதுள் பெற்ற நீ எமது பொதுச் சொத்து;

ஆனாலும் –

குதிரை யொன்று இடறி விழலாகாதென்பது எம் கருத்து!

 

தாய்க்குலம், தாய்க்குலமென்று போற்றிகொண்டே

பேய்க்குலங்கள் சில திரையுலகில் வளருகின்றன;

வாய்க்குவரும் வரம்பு கடந்த வார்த்தைகளை மசிதனில்

தோய்த்தெழுதிப் புண்படுத்தி ஏதேதோ உளறுகின்றன!

 

நீங்கள் நினைப்பது போல், பலர்க்கும் உங்கள் மீது பொறாமை இருப்பது உண்மைதான். இங்கே விமரிசனக் கலை வளரவில்லை என்பதும் உண்மைதான். விஷயங்களை விடுத்து விஷமங்களைச் சிலர் கக்குகிறார்கள் என்பதும் உண்மைதான்  ஆனால் எல்லா விமரிசகர்களும் விஷம் கக்குகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.  அவர்கள் எழுப்புகின்ற விஷயமுள்ள கேள்விகளுக்குக்கூட உரிய பதில்களைச் சொல்லாமல் இவ்வாறு திசைதிருப்பி நழுவுதலும் தகாது..) 

அவ்விதழில் வெளிவந்த பகுதி பின் வருமாறு:

கவிஞர் வாலியின் ஒரு திரைப்படப் பாடலை மேடையில்  மேற்கோள் காட்டி, “என்னடா எழுதுகிறாய், தரங்கெட்டவனே! நீயெல்லாம் தங்கையோடு பிறக்கவில்லையா? தாயோடு இருக்கவில்லையா?” என்று ஏகவசனத்தில் வாலியை ஏசிய பெண்மணி யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால், வாலியின் “எப்படி? எப்படி……” பாடலால் தான் அவர் அந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். ஒரு பெண்மணியை அந்த அளவுக்குக் கோபப்படச் செய்ததும்,  தம் வசமிழக்கச் செய்ததும் அந்தப் பாடலின் மிக மோசமான தரங்கெட்ட தனமே என்பதை வைரமுத்து ஒப்புக்கொள்ள வேண்டும். ‘இப்படி யெல்லாம் எழுத நான் மறுத்தால், அந்த வாய்ப்பைப் பிடித்துக்கொண்டு முன்னேற இன்னொருவர் காத்துக் கொண்டிருக்கிறார்; எனவே அதை நானே எழுதிவிட்டுப் போகிறேனே! என்ன தப்பு?’ என்றும்  ‘நான் ஒருவன் எழுத மறுத்தால், திரைப்படப் பாடல் ஆபாசம் ஒழிந்துவிடப் போகிறதா என்ன?’ என்றும் திரைப்படக் கவிஞர்களோ அல்லது பிறிதொரு துறையைச் சேர்ந்தவர்களோ தங்களுக்குத் தாங்களே செய்துகொள்ளும் சமாதானம் சமுதாயப் பொறுப்பின்மையையே காட்டும்.

“எப்படி” எப்படி….” பாடலைப் பாடிக்கொண்டு தன் மனைவியையோ அல்லது மகளையோ ஒரு பொறுக்கி பின் தொடர்ந்தால் தமக்கு எப்படி எப்படி யெல்லாம் ஆத்திரம் வரும் என்று கண நேரமேனும் கற்பனை செய்திருந்தாலும், வாலி அந்தப் பாடலை எழுதியிருந்திருக்க மாட்டார். உங்களுடைய நண்பர் வாலியைப்பற்றிக் குறிப்பிட்டதன் வாயிலாக அவருக்கும் சேர்த்து நீங்கள் வக்காலத்து வாங்கியதால் இப்படி எழுத நேர்ந்தது.

(பாத்திரத்தின் குரலைப் பிடித்துக் கொடுப்பதுதான் கவிஞனின் கடமைஎனும் உங்களது கூற்று ஆத்திரத்தையே விளைவிக்கிறது.  தரக்குறைவான பாடல்களை எழுதக் கட்டாயப் படுத்தும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குக் கவிஞர்கள் காசுக்காக அடிமைபட்டுக் கிடக்கும் நிலை இது. கவிஞர் கா.மு. ஷெரீஃப் இப்படியெல்லாம் எழுத மறுத்துத் திரைப்படத்துறையை விட்டே நீங்கி விலகிவிட்ட மாண்பை நினைவுகூராதிருக்க முடியவில்லை.   ‘பெண்களைப் புண்படுத்தும், இழிவுபடுத்தும், தாக்குறைவாகக் கிண்டல் செய்யும் வசனங்களை சொல்ல மாட்டேன்என்று, திரைப்படத் துறைக்கு வருவதற்கும் முன்னரே, மறுத்துக்கொண்டிருந்த நாடக நடிகர்  அமரர் ‘டணால் தங்கவேலு பற்றியும் நினைவு கூராதிருக்க இயலவில்லை. )

தாய்மையின் சின்னங்களான் பெண்களின் உடல் உறுப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் கிண்டல் செய்பவர்கள் பெருகும் வண்ணம் பாடல்கள் எழுதுகிறவர்கள தாய்மையைப் போற்றுவதாய்ச் சொல்லுவதும், தாயைப் போற்றிப் பாடுவதும் பச்சைப் பொய்கள். அதற்கான விளக்கத்துக்குப் பாத்திரப் படைப்பின் மீது பழி போடுவது கேவலம்!

(என் பாடலால் / எழுத்தால் சிலர் திருந்தி யிருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் கவிஞரோ அல்லது எழுத்தாளரோ, அதே போன்று அவற்றால் மனிதர்கள் கெட்டுப்போகவும் கூடும் என்பதை ஏனோ வசதியாய்ப் புறக்கணிக்கிறார்கள்.                                                                              

சிலருக்குத் தொழில் பேச்சு… சிலருக்குத் தொழில் கவிதை எழுதுவது… என்பது உண்மைதான்.  ஆனால் தொழில் நாணயம் என்று ஒன்று உளதே! கலப்படம் செய்து மனித உடம்புகளை நோயுறச் செய்யும் வியாபாரிகள் குற்றவாளிகளெனில், உள்ளங்களைக் கெடுப்பதன் வாயிலாகப் பெண்களுக்குப் பாதுகாப்பாற்ற ஒரு சமுதாயச் சூழலை ஏற்படுத்துகிற எழுத்தாளர்கள் மட்டும் விதிவிலக்குகளா என்ன! இதென்ன அயோக்கியத்தனம்! கேட்டால், ‘அது எங்கள் வயிற்றுப் பிழைப்பு!என்ரு கூசாமல் சிலர் சொல்லுகிறார்கள். திரைப்படத் துறையில் பெரும்பணம் சம்பாதித்து ஐந்தாறு பங்களாக்கள், சில கார்கள், இலட்சக்கணக்கில் வங்கியில் சேமிப்பு என்று வைத்துள்ளவர்களும் கூட, இதையே சொல்லுகிறார்கள். இரண்டு மூன்று தலைமுறையினர் தாக்குப் பிடிக்கிற அளவுக்குச் சேர்த்துவைத்துள்ள இவர்கள் வயிற்றுப் பிழைப்பைப் பற்றிப் பேசுவதும்,‘நாங்கள் பிழைக்க வேண்டாமா?என்று கேட்பதும் விந்தையிலும் விந்தை கேவலத்திலும் கேவலம!  

 ‘பணத்துக்காக எதையும் எழுதுவார்கள் என்று கவிஞர்களை எடை போட்டுவிடக் கூடாது என்கிறீர்கள்.எதையும் என்று நீங்கள் எதைச் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை. எப்படி, எப்படி” போன்ற  கண்ணியமற்ற பாடல்களைவிடவும் மோசமானவற்றைக் குறிப்பிடுகிறீர்களா? (!

சில நாள்களுக்கு முன் வெளியான  நீங்காத நினைவுகள் 15 இல் கீழ்க்கண்டபடி குறிப்பிட்டிருந்தேன்:

ஒருவர் மரித்த பின், அவரைப் பற்றிய நல்லவற்றைப் பற்றி மட்டுமே நினைவுகூர்தல் வேண்டும்   என்று சொல்லுவோருண்டு. பலரும்   அதை ஒரு பண்பான மரபாகவே கடைப்பிடித்தும் வருகிறார்கள்.  இந்தப் பண்பாடு சார்ந்த மரபு சாமனியர்களுக்கு மட்டுமே பொருந்து மென்பது நமது துணிபு. சமுதாயத்தைக் கெடுக்கிற வண்ணமோ, மனிதர்க்குத் தீங்கு செய்து அவர்களைப் பண்பற்ற வழியில் செலுத்துகிற வண்ணமோ தம் செயல்களை அமைத்துக்கொள்ளும் மனிதர்களை – அதிலும், அவர்கள் லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கும் துறையில் இருப்பவர்கள்  எனில் – இந்தப் பண்பாட்டின் அடிப்படையில் மட்டும் விமர்சிப்பது நியாயமாக இருக்க முடியாது. எனினும் இப்போதைக்கு நண்பர் வாலி அவர்களை விட்டுவைக்க உத்தேசம். அவர் காலமாகி மிகச் சில் நாள்களே ஆகின்றன என்பது அதற்கான காரணமன்று. நேற்று மரணித்தவர் என்றாலும் நியாயம் நியாயமே. அதில் தள்ளுபடி எதுவும் இருத்தலாகாது.  ஆனால் பெரிய கட்டுரையாக எழுதுகிற அளவுக்கு அதில் விஷயம் இருக்காது என்பதால் மட்டுமின்றி, அந்தத் தலைப்பின் தொடர்பாக வேறு பலரைப் பற்றியும் எழுதும்போது அவருக்கும் எனக்கும் ஒரு வார இதழில் நடந்த “சன்டை” பற்றிக் குறிப்பிடலாமே என்று தோன்றுவது ஒரு கூடுதல் காரணமாகும்.

       அப்போது சொன்னதை இப்போது எழுதிவிட்டேன்.

………

Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

6 Comments

 1. Avatar
  mahakavi says:

  வைரமுத்து வாலியை ஆதரித்து எழுதியது ஒன்றும் வியப்பில்லை . அவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். சினிமா கவிஞர்கள் (அவர்கள் கவிஞர்களா என்பது வேறு விஷயம்) பணத்துக்காக எதையும் எழுதுவார்கள். சந்தேகம் வேண்டாம். தயாரிப்பாளர்களும் அவ்வாறு எழுதக் கோருகிறார்கள். நாய் விற்ற காசு குறைக்குமா என்பது அவர்கள் வாதம். ஒழியட்டும். உங்களது moral indignation பாராட்டத்தக்கது

 2. Avatar
  ஷாலி says:

  // கவிஞர் கா.மு. ஷெரீஃப் இப்படியெல்லாம் எழுத மறுத்துத் திரைப்படத்துறையை விட்டே நீங்கி விலகிவிட்ட மாண்பை நினைவுகூறாதிருக்க முடியவில்லை.//

  “திருவிளையாடல்” படத்தில் இடம்பெற்ற அந்த கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார் ஏ.பி.என்.அவர்கள். இறைவனே இறங்கி வந்து பாடும் பாடல் அது. அவன் பாடுகையில் இந்த ஜீவராசிகள் அனைத்தும் அசைய வேண்டும். பாட்டை நிறுத்துகையில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிட வேண்டும். அப்படியொரு எஃபெக்டை கவியரசர் கண்ணதாசனிடம் இருந்து ஏ.பி.என் எதிர்பார்த்தார்.

  Homer sometimes nods. ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பார்கள். கிட்டத்தட்ட ஒரு டஜன் பாடல்கள் எழுதி, எழுதி கொடுத்துப் பார்த்து சளைத்து விட்டார் கவியரசு. ஏ.பி.நாகராஜனின் பெரும் எதிர்பார்ப்புக்கு அந்த பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியவில்லை. இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவனையும் அவைகள் திருப்தி படுத்த முடியவில்லை.

  ‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்’ என்று ஏ.பி.என். நினைத்தாரோ என்னவோ. தன் ஆத்ம நண்பர் கா.மு.ஷெரீப்பை அழைத்து பாடல் எழுதச் சொன்னார். சிறிது நேரத்தில் பாடலும் ஒகே ஆகிவிட்டது. அதுதான் இறைவனின் நாட்டம் போலும்.

  ‘திருவிளையாடல்’ படம் வெளிவந்த நேரம் கண்ணதாசனின் புகழ் உச்சாணியில் இருந்தது. படம் அமோக வெற்றியைப் பெற கண்ணதாசனின் பெயர் தேவைப்பட்டது இயக்குனருக்கு. அனைத்து பாடல்களும் கண்ணதாசன் எழுதியிருக்க ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வேறொரு கவிஞரின் பெயரைப்போட மனது ஒப்பவில்லை ஏ.பி.என்.நாகராஜனுக்கு. நண்பரின் மனதைப் புரிந்துக் கொண்ட கவி.கா.மு.ஷெரீப் அவர்கள், “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.

  -திரு.ஜெயகாந்தனின். “ ஒரு இலக்கிய வாதியின் கலையுலக அனுபவங்கள்” பக்கம்.112.

  (திரு கா.மு.ஷெரீஃப் அவர்கள் சிவலீலா என்னும் நாடகத்திற்காக எழுதிய பாடல்-பாட்டும் நானே பாவமும் நானே…திருவிளையாடல் படத்திற்குப் பாடல் தேவைப்பட்டபோது ,இதைப் பயன்படுத்த ஏபிஎன் விரும்பினார்.திரு காமு ஷெரீஃப் அனுமதியுடன் கண்ணதாசன் பெயரில் பாடல் வெளிவந்தது.காமு ஷெரிஃப்- கண்ணதாசனுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் அவர் பெயரில் போட்டுக் கொள்ளட்டும்.கண்ணதாசன்–திரு ஷெரீஃப் அய்யாவிற்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதமே.இவ்வாறு ஒரு பத்திரிகைச்செய்தி)

  கவிஞர் கா.மு. ஷெரீஃப் அவர்கள் திரைத்துறையில் பல சிறப்பான பாடல்களை எழுதி புகழ் பெற்றவர்.அவர் ஒருபோதும் ஆபாசப் பாடல் எழுதி பொருள் ஈட்டியதில்லை. அவரது திரை இலக்கிய பாடல்கள் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. “டவுன்பஸ்’ என்ற படத்திற்காக எழுதிய “ சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? “,மாங்கல்யம் படத்தில் இடம்பெறும் “ பொன்னான வாழ்வு மண்ணாகலாமா?”, எனும் சோகப்பாட்டு, பணம் பந்தியிலே- படத்திற்காக, “ பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லை பிழைக்கும் மனிதனில்லை”, சிவகாமி படத்தில் வரும் “ வானில் முழு மதியைக்கண்டேன் “, மக்களைப்பெற்ற மகராசியில் “ ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக்காதல் மாறிப்போகுமா?, அன்னையின் ஆணையில், “ அன்னையைப்போல் ஒரு தெய்வம் இல்லை, அவர் அடி தொழ மறந்தவர் மனிதனில்லை”. நான் பெற்ற செல்வத்தில் இடம் பெரும் மிகப்பிரபலமான பாடல் “ வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா!” அருமையான மேட்டில் வரும், 1957 ல் வெளிவந்த “முதலாளி” திரைப்படத்தில் “ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே! “போன்ற பாடல்கள் என்றும் நெஞ்சில் நிறைந்தவை.

  கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி. கா.மு.ஷெரீப். “அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. “ஒளி” என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்” என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.

  சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரத்தின் மனச்சாட்சியின் காவலராய் இருந்தவர். பட அதிபர் எம்.ஏ. வேணுவின் இதயத்தில் கொலுவிருந்தவர். இத்தனை வாய்ப்புகள் வைத்துக் கோடிக்கு அதிபதியாய்க் கோபுரத்தில் உட்கார்ந்திருக்க முடியும். ஆனால், கடைசி வரை வாடகை வீட்டில் குடியிருந்தார். “உங்களுக்குத்தான் முதலமைச்சர் மிகவும் வேண்டியவராயிற்றே… ஒரு வீடு கேளுங்களேன்…!’ என்றனர் நண்பர்கள். “நான் வல்ல இறைவனையன்றி வேறு எவரிடமும் கையேந்த மாட்டேன்!” என்றார் அவர்.

  தான் பெற்ற பிள்ளைக்கு அரசாங்கப் பதவி கேட்கச் சொன்ன உறவினர்களுக்கு நமது கவிஞர் தந்த பதில், புன்முறுவல்தான். எம்.ஜி.ஆர். தன் மனத்தில் வைத்துப் போற்றிய மகத்தான மனிதர் இவர். அவர் முதல்வரானதும் தன் தூதுவர்களை அனுப்பி, எத்தனையோ முறை தன் இல்லத்திற்கு அழைத்தார். நான், “ராமாவரம் போகாவரம் வாங்கி வந்திருக்கிறேன்…!’ என்றார் இவர். ஆம்! துறவிக்கு வேந்தனும் துரும்பு.

  திருச்சி லோகநாதன்,ஜிக்கி பாடிய “வாராய் நீ வாராய்” என்ற அருமையான பாடலில் உள்ள புதுமை இதை மருதகாசி, கா.மு. ஷெரீஃப் இரண்டு கவிஞர்கள் எழுதியிருப்பதுதான். எந்த வரி யாருடையது என்று தெரியாது.இதே படத்தில் இடம்பெற்ற “உலவும் தென்றல் காற்றினிலே” பாடல் கூட இரு கவிஞர்களும் எழுதியதுதான்.

  இப்படி ஒன்றுபட்ட இரு கவிஞர்கள் எழுதிய பாடல்கள் இன்று காண முடியாது.ஆனால் இதே தேவரின் “ தேர்த்திருவிழா “படத்தில் எம் ஜி ஆர்-ஜெயலலிதா டூயட்டுக்காக கவிஞர் மருதகாசி எழுதிய

  ஏ…குட்டி! என்னா குட்டி… எகுறிப்போகும் கன்னுக்குட்டி!
  உட்டாலக்கடி கும்தலக்க கும்மா!
  உசிலம்பட்டி வயசுக்குட்டி ஒய்லாட்டும் கன்னுக்குட்டி!
  உட்டாலக்கடி கும்தலக்கடி கும்மா!

  இந்த உட்டாலக்கடி பாடலைக் கேட்டவுடன், இனிமேல் நான் திரைப்படத்திற்கு பாடல் எழுதப் போவதில்லை, என்று கூறி கவிஞர் கா.மு. ஷெரீஃப் திரைப்படத்துரையிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.

  “கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்” என்று சொன்னவர் கவி கா.மு.ஷெரீப். அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.

  காசுக்கு காலைத்தூக்குபவர்கள் போல், எழுது—கோலைத் தூக்குபவர்களே இன்றைய கவிஞர்கள். எப்படியாவது பொருள் தேடவேண்டும்.சமூகம் நாசமாகப் போவது பற்றி எந்தக்கவலையும் இவர்களுக்கு இல்லை.

  சகோ.ஜோதிர்லதாகிரிஜா அவர்களின் சமூகத்தின் மீதுள்ள தாயின் கருணை போற்றுதலுக்குரியது.எமக்குத் தொழில் எழுத்தென்றான் பாரதி.இன்று அநேக எழுத்தாளர்கள் “தோலை”வைத்துத்தான் தொழில் செய்து பிழைக்கிறார்கள். நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு.

 3. Avatar
  jyothirllata girija says:

  கவிஞர் கா.மு. ஷெரீஃப் பற்றி இத்தனை தகவல்கள் உங்களிடமிருந்து வெளிவர என் கட்டுரை காரணமாக இருந்தது பற்றி நான் மகிழலாம்தானே! மிக்க நன்றி திரு ஷாலி அவர்களே, மிக்க நன்றி. அன்புடன், ஜோதிர்லதா கிரிஜா

 4. Avatar
  IIM Ganapathi Raman says:

  பின்னூட்டத்தைப்படித்தவுடன் கவிஞர் கா.மு. ஷெரீஃப் கவிதைத் தொகுப்பு ஒன்றை வாங்கி விட்டேன். என் நன்றிகளை ஜோதிர்லதா கிரிஜாவும் ஷாலியும் பாதிபாதி பகிர்ந்து கொள்ளவும்.

 5. Avatar
  jyothirllata girija says:

  கணபதி ராமன் அவர்களே! கவி கா.மு. ஷெரீஃபின் கவிதைத் தொகுப்பை யார் வெளியிட்டுள்ளார்கள் என்பதைத் தெரிவிக்க முடியுமா? முன்கூட்டிய எனது நன்றி. அன்புடன், ஜோதிர்லதா கிரிஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *