(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
51. நீக்ரோ இன மக்களின் நம்பிக்கை நட்சித்திரமாய்த் திகழ்ந்த ஏழை…..
“அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்”
அட என்னங்க வரும்போதே பாடிகிட்டு வர்ரீங்க…என்ன போன வாரம் கேட்ட கேள்விக்குரிய விடையக் கண்டுபிடுச்சுட்டீங்களா…என்னது இல்லையா…அப்பறம் என்னங்க பாட்டு…ஓஹோஹோ…ரேடியோவில பாட்டக் கேட்டுட்டுப் பாடிக்கிட்டு வர்ரீங்களா… அப்ப போனவாரம் நான் கேட்ட கேள்விக்குப் பதிலு தெரியலயா…என்னது குழப்பமா இருக்கா…சரி…சரி…ரொம்பக் குழம்பாதீங்க… நானே சொல்றேன்… அவருதாங்க புக்கர் தி.வாஷிங்டன்…
அடிமையிற் பிறந்து அறியாமையில் தவழ்ந்து வறுமையில் வளர்ந்து துன்பங்கள் பலவற்றைக் கடந்து பிறந்த குடியை உயர்த்து நிறுத்திய பெரியார்களுள் ஒருவர்தான் புக்கர் தி, வாஷிங்டன் ஆவார்.
புக்கர் ஓர் அரசரல்லர் ஆயினும் அமெரிக்க மக்களாலும் அரசரெனத் தக்காராலும் பாராட்டப்பட்டவர். அமெரிக்க ஐக்கிய மகாணங்களின் தலைவராக இருந்த மெக்கின்லி என்பவரே புக்கரது அறிவையும் விடா முயற்சியையும் பாராட்டி, “அவர் தேர்ந்த ஆசிரியர் நல்ல சொல் வல்லார் உண்மையாக உதவி செய்பவர்” என்று குறிப்பிடுகிறார். இளமையில் வாழ வகையின்றித் தரையில் கிடந்து பசியால் வாடிய புக்கர் பின்னாளில் பல நகரங்களிலும் தமது சொந்த ஊரிலும் அந்தந்தப் பகுதி மக்களால் வரவேற்கப்பட்டுப் பெருமைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிமையாய்ப் பிறந்த அறிஞர்
புக்கர் தி, வாஷிங்டன் அடிமையாய்ப் பிறந்தார். அடிமைப் பெண்ணிற்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தையார் யாரென்றே அவருக்குத் தெரியாது.1859 ஆம் ஆண்டு புக்கர் தி, வாஷிங்டன் பிறந்தார். அவரது தாய் ஒரு தோட்டத்தில் ஓரறை மட்டுமே உள்ள சிறு வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தாள். அந்தச் சிறிய அறையில்தான் புக்கரும் இரு சகோதரர்களும் அவரது தாயாரும் வறுமையுடன் போராடி வசித்து வந்தனர்.
குளிர் காலங்களில் கடுங்குளிர் அவர்களை வாட்டி எடுக்கும். அக்காலங்களில் அவர்கள் கந்தைகளை விரித்து அதன்மீது படுத்துக் கொள்வர். குளிரிலும் பனியிலும் அவர்கள் பட்ட துன்பங்கள் எடுத்துச் சொல்ல முடியாது. புக்கர் இளம் வயதில் வயலில் வேலை செய்தார். மேலும் வயலில் வேலை செய்பவருக்குத் துண்ணீர் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்தும், கூலங்களை அரைத்துக் கொண்டு வரும் வேலையையும் செய்து வந்தார்.
புக்கர் வேலை செய்யும் வீட்டில் கடுமையாக புக்கரை வேலைவாங்கினார்கள். அவர் சணல் சட்டையையே அணிந்தார். உடுத்திக் கொள்ள வேறு ஆடை கிடையாது. அடிமைகள் அனைவரும் அச்சணலாலாகிய ஆடையையே அணிதல் வேண்டும் என்பது அன்றை எழுதப்படாத சட்டமாக இருந்தது. சணல் சட்டையை அணிவதென்பது குண்டூசியை ஆடையாக அணிந்திருப்பதைப் போன்றதாகும். இருப்பினும் புக்கர் அவ்வாடையை அணிந்தார்.
இந்த நிலையில அமெரிக்க ஜனாதிபதி அபிரகாம் லிங்கன் அவர்களால் 1863-ஆம் ஆண்டு அடிமைத் தளை நீக்கப்பட்டது. நீக்ரோ அடிமைகள் அனைவரும் சுதந்திரமடைந்தார்கள். அனைவரும் மகிழ்ந்தனர். ஆடினர் பாடினர். இருப்பினும் அவர்களது உள்ளத்திற்குள் ஒரு கவலை ஏற்பட்டது. அடிமைத் தளையிலிருந்து விடுபட்டாலும் தாங்கள் எங்கு செல்வது. தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கவலையுற்றனர். பலர் பலவிதமான இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.
புக்கரும் தனது அன்னையாருடன் அவரது சிறிய தந்தையார் இருந்த இடத்திற்கு எழுநூறு கல் தொலைவு நடந்து வந்து மால்டன் நகரைச் சேர்ந்தார். புக்கரின் சிறிய தந்தையார் அவர்களை உப்பளத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். புக்கருக்குப் பள்ளி சென்று பயில்வதற்குக் கொள்ளை ஆசை…ஆனால் அது இயலவில்லை.
நீக்ரோக்களுக்கென்று தொடங்கப்பட்ட பள்ளியில் பலரும் சேர்ந்து படிக்கலுற்றனர். ஆனால் புக்கரின் சிறிய தந்தையார் புக்கர் படித்தால் தனக்கு வருவாய் கிட்டாது போய்விடும் என்று கருதி அவரைப் பள்ளிக்குச் சென்று படிக்க அனுமதிக்கவில்லை. இருப்பினும் புக்கரால் படிக்கும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இரவுப் பள்ளிக்குச் சென்று ஓராசிரியரிடம் கல்வி கற்றார். பிச்சை புகினும் கற்கை நன்றேன்னு நம்ம பெரியவங்க சொல்வாங்கள்ள அதுமாதிரி மிகுந்த துன்பங்களுக்கிடையில் புக்கர் படிச்சாரு…
பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுதல்
எப்படியோ முயன்று பள்ளியில் சேர்ந்த புக்கர் மாணவர்கள் தலையில் தொப்பி அணிந்திருந்ததைக் கண்டு தானும் தொப்பி அணிய ஆசைப்பட்டார். ஆனால் அவரது அம்மாவால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை.. இருப்பினும் தனது மகனின் ஆசையை நிறைவேற்றக் கருதிய அத்தாய் துணியில் ஒட்டுப்போட்டு தொப்பியைத் தயாரித்துக் கொடுத்தார். அதை அணிந்து கொண்டு புக்கர் பள்ளிக்குச் சென்றார். அதனைக் கண்ட மற்ற மாணவர்கள் சிரித்தார்கள். அதைக் கண்டு புக்கர் மனம் கலங்கவில்லை. நன்கு உயர்ந்த நிலையிலும் தனது தாய் தனக்குத் தயாரித்துத் தந்த அந்த தொப்பிதான் மிகச் சிறந்ததாக இருந்தது என்று புக்கர் குறிப்பிட்டது நோக்கத்தக்கது.
பள்ளியில் பயிலும் மாணவர்கள் இரண்டு பெயர்களைச் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தனர். ஒருநாள் ஆசிரியர் அவரிடம் உனது பெயரைச் சொல் என்று கேட்டபோது அவர் புக்கர் தி. வாஷிங்குடன் என்று கூறிவிட்டார். அன்றிலிருந்து அவரது பெயர் அவ்வாறே வழங்கப்பட்டது. பாத்தீங்களா…சாதாரணமா புக்கர் தனது பெயரைக் குறிப்பிட அதுவே நிலைத்து நின்றுவிட்டது… நிலக்கரிச் சுரங்கத்திலும் புக்கர் வேலைபார்த்து வந்தார். அவ்வேலையில் கிடைத்த கூலியில் சிறிய அளவு பணத்தைப் படிப்பதற்காக புக்கர் ஒதுக்கி வந்தார்.
இந்நிலையில் ஹேம்புடன் என்ற இடத்தில் நீக்ரோக்களுக்காக பள்ளிக்கூடம் திறக்க இருப்பதையும் அதில் படிப்பவர்களுக்குத் தொழில் கல்வி கொடுத்து வேலையும் வாங்கிக் கொடுப்பதாகவும் கேள்வியுற்ற புக்கர் அதில் சேர்வதற்காக பெருமுயற்சி செய்து தன் அன்னையிடம் அனுமதி வாங்கிக் கொண்டு 1872-ஆம் ஆண்டில் தனது 14-ஆம் வயதில் ஊரைவிட்டுப் புக்கர் கிளம்பினார்.
கையில் சிறிதளவே பணமிருந்தது. அவரது சகோதரர் ஜான் சிறிதளவு பணத்தைக் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்து நீக்ரோப் பெரியவர்கள் அனைவரும் தங்கள் இனத்திலிருந்து ஒருவன் கல்விகற்கப் போகிறானே என்ற பெருமிதத்தால் தங்களால் இயன்ற வரைக் கால் ரூபாய் அரை ரூபாய் எனப் பணம் கொடுத்து அவரைப் படிப்பதற்கு அனுப்பினர்.
ஹேம்புடன் செல்லுதல்
இவ்வாறு தம்மினத்தவரிடத்திலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட புக்கர் 500 மைல் தொலைவிலுள்ள ஹேம்புடன் நோக்கிப் பயணமானார். இப்போது போல் அன்று போக்குவரத்து வசதியில்லை. நடந்தும் குதிரை வண்டியில் பயணித்தும் செல்ல வேண்டும். கொண்டு சென்ற பணம் யாவும் தீர்ந்து விட்டது. இருப்பினும் ஆங்காங்கே வேலை செய்து கொண்டு பசி பட்டினியுடன் ஹேம்புடன் நோக்கிப் பயணித்தார் புக்கர்.
இறுதியில் ஹேம்புடன் சென்று பள்ளியைப் பார்த்துப் பரவசமடைந்தார். அங்கிருந்த பள்ளித் தலைமையாசிரியையிடம் தம்மைப் பள்ளியில் சேர்க்குமாறு வேண்டினார். அவரது குளிக்காத உறுக்குலைந்து போன தோற்றத்தைக் கண்ட அவ்வம்மையார் அவரைச் சேர்ப்பதற்குத் தயக்கம் காட்டினார். புக்கருக்கு மனம் வேதனையாய் இருந்தது. சில வேலைச் சோதனைக்குப் பின்னர் புக்கர் அப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கேயே அவருக்கு வேலையும் கிடைத்தது. அவ்வேலையை உணவுக்காகச் செய்து கொண்டே புக்கர் படித்து வந்தார்.
தாயின் பிரிவு
ஹேம்புடன் பள்ளியிலேயே தங்கிப் படித்து வந்த புக்கர் திறமையானவராக விளங்கினார். பல துன்பங்களுக்கு ஆளானார். இரண்டு ஆண்டுகள் கழித்துத் தன் தாயையும் சகோதரரையும் மால்டன் வந்து சந்தித்தார். அந்நிலையில் அவரது தாயார் உயிர் நீத்தார். அது புக்கருக்குப் பேரிடியாக இருந்தது. இருப்பினும் தனது கனவை நிறைவேற்ற மனதைத் திடப்படுத்திக் கொண்டு ஹேம்புடன் பள்ளியில் தொடர்ந்து படித்து வந்தார்.
1875-ஆம் ஆண்டு புக்கரது ஹேம்புடன் பள்ளிப் படிப்பு நிறைவடைந்தது. அனைத்துப் பாடத்திலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்தார் புக்கர். பட்டம் பெற்ற புக்கர் ஒரு சிற்றுண்டிச் சாலையில் பணியாளாகச் சேர்ந்தார். பிற்காலத்தில் அச்சிற்றுண்டிச் சாலையில் புக்கர் சிறப்பாக வரவேற்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியராதல்
அதன் பின்னர் அங்கிருந்து தனது ஊரான மால்டன் வந்த புக்கர் நீக்ரோப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அங்கு புக்கர் கடுமையாக உழைத்தார். பகல் பள்ளிக்கூடம் மட்டுமல்லாது இரவுப் பள்ளியும் இவரது முயற்சியால் தொடங்கப்பட்டது. அங்கு மாணவர்களுக்குத் தொழில் பயிற்சியும் உடல் நலக்கல்வியும் வழங்கப்பட்டது.
வாரப் பள்ளிக்கூடம் ஒன்றையும் புக்கர் தொடங்கி நடத்தினார். வார இறுதியில் அப்பள்ளியில் பாடங்கற்பிக்கப்பட்டு வந்தது. மேலும் அங்கிருந்து ஹேம்டன் செல்லும் மாணவர்களையும் புக்கர் ஊக்குவித்து வந்தார் என்பது நோக்கத்தக்கது. தம்மை நாடி வந்த அனைவருக்கும் அமுதசுரபி போல் கல்வியை வாரி வாரி வழங்கினார் புக்கர்.
தனது சகோதரரை ஹேம்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். அவர் படித்து முடித்தவுடன் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். பின்னர் இருவரும் சேர்ந்து அவர்களது ஜேம்ஸ் என்ற இளைய சகோதரனை ஹேம்புடன் பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்க வைத்தனர்.
அதன் பின்னர் மேலும் கல்வி கற்க விரும்பிய புக்கர் வாஷிங்டன் சென்று கல்வி கற்றுத் திரும்பினார். அங்கு பல்வேறு நிலைகளில் அவருடைய மனம் செம்மைப்பட்டது.
பேச்சாளர் புக்கர்
வாஷிங்டனிலிருந்து வந்த புக்கருக்கு மற்றொரு பணி வாய்ப்புக் கிடைத்தது. சார்லெஸ்டன் என்ற ஊரிலுள்ள வெள்ளையர்கள் புக்கரிடம் சார்லெஸ் என்ற ஊரே மேல வர்ஜினியாவின் தலைநகராக வேண்டும் என்று பேசுமாறு கூறினார். அதனை மனமுவந்து ஏற்ற புக்கர் ஊர் ஊராகச் சென்று உரையாற்றினார். முடிவில் அவரது நாவன்மையால் சார்லெஸ் என்ற ஊரே வர்ஜினியாவின் தலைநகரமாக ஆயிற்று. மகிழ்வுற்ற அவ்வூரார் புக்கரை அரசியலில் ஈடுபடுமாறு வற்புறுத்தினர். புக்கர் அதனை மறுத்துவிட்டுத் தனது இனத்தாருக்கு கல்வி வழங்குவதையே தனது தலையாய கடமையாகக் கருதிச் செய்யலானார்.
பாத்துக்கிட்டீங்களா….?சுயநலமி
புக்கரின் பணியைக் கேள்வியுற்ற ஆம்ஸ்ட்ராங்கு என்ற ஹேம்புடன் பள்ளிப் பெரியார் புக்கரை அப்பள்ளிக்கு உரையாற்ற அழைத்தார். அவரது உரையில் மனதைப் பறிகொடுத்த அவர் புக்கரை அங்கு தங்கி மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். புக்கரும் அங்கு தங்கி மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தார். எந்தப் பள்ளியில் ஆறு ஆண்டுகள் துடைப்பத்தைக் கொண்டு பெருக்கி வேலை செய்து கல்வி கற்றாரோ அப்பள்ளியிலேயே ஆசிரியராகப் புக்கர் பணியாற்றியது அவரது உழைப்பிற்குக் கிடைத்த வெற்றியாகும்.
புக்கரின் பணிகள்
அலபமா என்ற இடத்தில் டஸ்கீகி என்ற ஊரில் நீக்ரோக்களுக்காகப் பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும் என்று அவ்வூரார் விரும்பி அதனை ஆம்ஸ்ட்ராங்கிற்குத் தெரியப்படுத்தி உதவுமாறு வேண்டினர். ஆம்ஸ்ட்ராங்கும் புக்கரை அங்கு அனுப்பி பள்ளியைத் தொடங்கி நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்படி புக்கர் டஸ்கீகி என்ற ஊருக்குச் சென்று 1881-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி பள்ளியைத் தொடங்கினார். பலகாலும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி அப்பள்ளியை புக்கர் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. முப்பது மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட பள்ளி நாளாக நாளாக வளர்ச்சியடைந்தது.
புக்கர் பள்ளிக்கென்று தனிக்கட்டடம் ஒன்றையும் தன்னுடைய சொந்த முயற்சியால் கட்டினார். மாணவர்களுக்குக் கல்வியுடன் வேளாண்மை உள்ளிட்ட தொழிலையும் கற்பித்தார். மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் தானே தோட்டத்தில் இறங்கி வேளாண்மைத் தொழிலைச் செய்தார். அதனால் மாணவர்கள் தமது ஆசிரியரான புக்கரின் வழியினைப் பின்பற்றி அவர் கூறியபடியே கல்வி கற்றனர். நீக்ரோக்களுக்கு பல்வேறு வகைகளில் நல்ல பண்பட்ட வாழ்க்கை முறையை புக்கர் கற்றுக் கொடுத்தார். உடைச் சுத்தம், இருப்பிடச் சுத்தம் உள்ளிட்ட நல்ல பழக்க வழக்கங்களையும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களை வாழ்க்கையில் உயர்த்தினார்.
மாணவர்களுக்காகக் கடன்வாங்கிப் பள்ளியைப் புக்கர் நடத்தினார். அவருக்கு ஒலிவியா என்ற பெண் ஆசிரியர் பேருதவி செய்தார். புக்கரும் ஒலிவியா அம்மையாரும் சேர்ந்து பலரிடம் இரந்து பொருள் பெற்று மாணவர்களைக் கொண்டு பள்ளிக்கூடம் கட்டினர். உடல் பொருள் ஆவி அனைத்தையும் புக்கர் இதற்காகச் செலவிட்டார்.
பலரிடமும் புக்கர் கடன்வாங்கிப் பள்ளியைக் கட்டினார். ஆம்ஸ்ட்ராங் புக்கர் கட்டும் பள்ளிக்குத் தான் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் கொடுத்து உதவினார். டஸ்கீகியில் பள்ளி புக்கரின் முயற்சியால் புதுப் பொலிவு பெற்றது.
திருமணமும் தொடர்ந்த துயரமும்
இந்நிலையில் புக்கர் 1882-ஆம் ஆண்டு பேனிஸ்மித் என்ற பெண்ணை மணந்து கொண்டார். இப்பெண்மணி புக்கருக்குப் பலவகையிலும் உதவி செய்து வந்தார். கணவரின் மனமறிந்து பல வேலைகளைச் செய்தார். இதனால் புக்கர் மகிழ்ச்சியடைந்தார். இவ்வில்லற மகிழ்ச்சியில் அவர்களுக்கு போர்ஷியா வாஷிங்குடன் என்ற பெண் குழந்தை பிறந்தது. புக்கர் பெரு மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும் அம்மகிழ்ச்சி நிலைக்கவில்லை.
அவரையும் அவரது குழந்தையையும் தவிக்கவிட்டுவிட்டு பேனிஸ்மித் 1884-ஆம் ஆண்டு இறந்து போனார். புக்கர் மனமொடிந்து போனார். தனக்குப் பல்லாற்றானும் உதவியாய் இருந்த மனைவியார் மரித்துப் போனாரே என்று துயரத்திற்கு ஆளானார் புக்கர்.
இருப்பினும் மனந்தளராது தனது பணியைத் புக்கர் தொடர்ந்தார். செங்கல் சூளை போட்டு அதன் மூலம் செங்கல் தயாரித்து விற்பனை செய்து அதன் வாயிலாகக் கிடைத்த வருவாயைப் பள்ளியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தினார். இதுபோன்றே பல்வேறு தொழில்களும் அங்கு பயின்ற மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. அப்பள்ளி வளர்ந்து கல்லூரியாக உயர்ந்தது. பலரும் அங்கு வந்து அதனைக் கண்டு வியந்தனர்.
அதிலும் குறிப்பாக புக்கருக்குக் கடன் கொடுத்த மார்ஷல் என்பவரும் முதன் முதலில் ஹேம்புடன் பள்ளியில் புக்கருக்கு துடைப்பத் தேர்வு நடத்திகல்வி கற்பதற்கு இடங்கொடுத்து உதவிய மேரி மேக்கி என்ற அம்மையாரும் புக்கரை டஸ்கீகிக்கு அனுப்பிய அவரது வளர்ச்சியில் அக்கறையுடைய ஆம்ஸ்டிராங்கும் வந்து கல்லூரியின் வளர்ச்சியைக் கண்ணுற்றுப் பெரிதும் மகிழ்ந்து புக்கரைப் போற்றினர்.
மாணவர் நலம் பேணிய மாண்பாளர்
மாணவர்களுக்கு உடுக்க உடையும் உண்ண உணவும் இருக்க இடமும் படுப்பதற்கு நல்ல படுக்கையும் கொடுத்து அவர்களை நன்கு தொழிலோடு கல்வியையும் கற்கச் செய்தார் புக்கர். உலகம் வறுமையை மன்னிக்கும் ஆனால் அழுக்கை மன்னிக்காது என்பதற்கேற்ப அக்கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கு நற்பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் புக்கர் கற்றுக் கொடுத்தார்.
மாணவ மாணவிகள் அதிகமாக அங்கு பயில்வதற்கு வந்ததால் அலபாமா ஹால் என்ற ஒன்றை முன்புபோலப் பலரிடமும் பொருளுதவி பெற்றுப் பெரும் முயற்சியால் புக்கர் கட்டி முடித்தார். இந்நிலையில் டஸ்கீகி கல்வி நிலையம் பணமுடையால் தத்தளித்தது. புக்கரும் ஒலிவியா அம்மையாரும் பல இடங்களுக்கும் சென்று பொருள் சேகரித்து தத்தளிப்பைத் தடுக்க முயன்றனர்.
இத்தகைய தருணத்தில் புக்கருக்கு ஹண்டிங்டன் என்ற பெரியார் புக்கரின் தொண்டினையும் அவரது தியாக உள்ளத்தையும் உணர்ந்து ஐம்பதாயிரம் டாலர் கொடுத்து உதவினார். மழையின்றி வாடிய பயிருக்கு வேரில் நன்னீர் ஊற்றியதைப் போல் அவ்வுதவி இருந்தது.
அலபாமா மண்டலம் முதலில் இரண்டாயிரம் நிதி உதவி அளித்து வந்தது. பின்னர் அவ்வுதவியை மூவாயிரமாக அதிகரித்துக் கொடுத்தது. இதற்குப் புக்கரின் கடும் உழைப்பே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமக்குத் தோளோடு தோள் நின்று உதவிய ஒலிவியா அம்மையாரை புக்கர் 1885-ஆம் ஆண்டு இரண்டவதாகத் திருமணம் செய்து கொண்டார். அவ்வம்மையார் பள்ளிக்கும் வீட்டிற்கும் அரிய பல தொண்டுகளைச் செய்தார். அவர் இரு குழந்தைகளைப் பெற்றுவிட்டு புக்கரையும் குழந்தைகளையும் அநாதைகளாக்கிவிட்டுவிட்டு 1889-ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்.
புக்கருக்கு மீண்டும் துன்பம் நேர்ந்தது. அவற்றைப் புக்கர் பொறுத்துக் கொண்டு தமது கடமைகளைச் செய்தார். அட்லாண்டா மகாசபையின் முன்னர் கவர்னர் புல்லட் தலைமையில் புக்கர் அரியதொரு உரையாற்றினார். அவ்வுரையில் வெள்ளையரும் நீக்ரோக்களும் இணைந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது உரையைக் கேட்ட அனைவரும் புக்கரைப் பாராட்டினர்.
புக்கர் 1893-ஆம் ஆண்டு மார்க்கரெட் ஜேம்ஸ் என்ற பெண்மணியை மணந்தார். இவர் டஸ்கீகி கல்வி நிலையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவராவார். இவ்வம்மையார் பிஸக்(Fisk) பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. புக்கர் இல்லாத சமயத்தில் இவரும் வாரன் லோகன் என்பவரும் சேர்ந்து கல்வி நிலையத்தின் பணியைச் செவ்வனே செய்து வந்தனர். புக்கர் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து டஸ்கீகி கல்விநிறுவனத்திற்கு நிதி சேகரித்து அதனை மாணவர்களுக்குப் பயன்படுமாறு செய்தார். மாணவர் நலம் பேணும் மாண்பாளராகப் புக்கர் திகழ்ந்தார்.
மறைந்த மனிதநேயர்
இவ்வாறு மனிதநேயம் மிக்கவராகத் திகழ்ந்த புக்கரை ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உரையாற்றுமாறு அழைத்தன. அவர் அந்நாடுகளில் உள்ளவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணித்தார். அங்கு பல்வேறு நிறுவனங்களில் எழுச்சியுரையாற்றினார். நியுயார்க் நகரத்திற்குச் சென்றார். அந்நகரிலிருந்து 1899-ஆம் ஆண்டு மே மாதம் பத்தாம் நாள் புறப்பட்டார். பலரும் புக்கரை அன்போடு வழியனுப்பி வைத்தனர். அவருடன் அவரது மனைவியாரும் பயணித்தார்.
1896-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் நாள் ஹார்வர்டு(Harvard) பல்கலைக்கழகம் புக்கருக்கு எம்.ஏ பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. இஃது புக்கரின் தொண்டினைப் பாராட்டி வழங்கப்பட்ட பட்டமாகும். நீக்ரோக்களுள் முதன் முதலில் இத்தகைய கெளரவப் பட்டம் பெற்றவர் புக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிமைச் சமுதாயத்திலுள்ள மக்களை முன்னேற்றுவதற்காக புக்கர் ஆற்றிய அரும்பெரும் பணிகளுக்காகவே இப்பட்டம் வழங்கப்பட்டது.
1898-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய மாகாணத்துத் தலைவர் மெக்கன்லி என்பவரும் அவரது அமைச்சர்களும் டஸ்கீகி கல்வி நிறுவனத்திற்கு வருகைபுரிந்து அதன் செயல்பாடுகளைப் பார்வையிட்டனர். இது அந்நிறுவனத்திற்கும் புக்கரின் அபரிமிதமான உழைப்பிற்கும் கிடைத்த பெரும்பேறாகும்.
புக்கர் டஸ்கீகி பள்ளியைத் தொடங்கிய காலத்திலிருந்து இருந்து வந்த எதிர்பார்ப்பு மெக்கன்லி வருகையின்போது நிறைவேறியது. பலரும் வருகைபுரிந்து இந்நிறுவனத்தைப் பார்த்தல் வேண்டும் என்ற புக்கரின் விருப்பம் முழுமை அடைந்தது. அனைவரும் புக்கரையும் அவரது கல்வி நிறுவனத்தையும் பலவாறு புகழ்ந்தனர். அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்விற்கு புக்கர் பட்ட பாடுகளின் வெளிப்பாடாக டஸ்கீகி கல்விநிறுவனம் விளங்கியதைக் கண்டு மெக்கன்லி உள்ளிட்டோர் வியந்தனர்.
மென்கன்லியின் வருகை நீக்ரோ மக்களுக்குப் புத்துணர்ச்சியைத் தந்தது. அவர்கள் அந்நாளைச் சிறப்பானதாகக் கருதிக் கொண்டாடினர். அக்கொண்டாட்டத்தில் வெள்ளையினத்தனவரும் கலந்து கொண்டனர் என்பது சிறப்பிற்குரியதாகும். அவ்விழாவில் பங்கேற்ற மெக்கன்லி புக்கருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
எந்த ஊரில் குடியிருப்பதற்குக்கூட சரியான இடமின்றி தோட்டத்தின் ஒதுக்குப்புறத்தில் அடிமையாக வாழ்ந்து வாழ்ந்து வந்தாரோ அந்த ஊர் மக்கள் அவரை 1900-ஆம் ஆண்டு புக்கரை வரவேற்று சிறப்புரையாற்றுமாறு கூறினர். பாத்துகிக்ட்டீங்களா…நம்ம வள்ளுவப் பெருந்தகை சொன்ன முதுமொழி ஒண்ணு ஒங்க ஞாபகத்துல வருதா….? என்னதுங்குறீங்களா…?
“மிகுதியான் மிக்கவை செய்தாரை தாந்தன்
தகுதியான் வென்று விடல்”
அப்படீங்கற திருக்குறள்தாங்க… எங்க அடிமை வாழ்வு வாழ்ந்தாரோ அந்த ஊர் மக்களே அவரோட தகுதியையும் அறிவையும் பார்த்து வியந்து அவரை அழைத்துப் பல்வேறு சிறப்புகளைச் செய்து பெருமைப்படுத்திப் பேசச் சொன்னாங்கன்னா புக்கருடைய பெருமையை என்னன்னு சொல்லறது…அறிவால புக்கர் சாதிச்சாரு….அறிவுதாங்க எல்லாவற்றிலும் மிகப் பெரியது…அறிவால சாதிக்க முடியாதத எதாலயும் சாதிக்க முடியாது…தெரிஞ்சுக்கோங்க… சரி புக்கரைப் பத்திச் சொல்றேன்…
இப்படி உழைப்பால தானும் உயர்ந்து தன்னைச் சார்ந்தவங்களையும் உயரச் செய்த புக்கர் தி. வாஷிங்டன் 1915-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்து விண்ணுலக வாழ்வை எய்தினார். அவர் மறைந்தாலும் ஒடுக்கப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராக அவர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துக்கிட்டுத்தான் இருக்காரு…அவரோட தியாகம் இன்று வரை ஒளிர்ந்து கொண்டே இருக்குது.
அவர் ஏற்றி வைத்த கல்வி விளக்கு உலகமெல்லாம் பரவி ஒளிவீசிக் கொண்டே இருக்குது. இத்தகைய பெருந்தகையாளரான புக்கரின் திருவுருவச் சிலையானது டஸ்கீகி கல்விநிலையத்தின் முன்பு நிறுவப்பட்டு அவரது தியாக உழைப்பை உலகிற்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. அச்சிலையின் கீழ் “புக்கர் தி. வாஷிங்டன் 1858-1915 அவர் தமது சமூகத்தின்அறியாமையாகிய முகமூடியை அகற்றிக் கல்வியாலும் கைத்தொழிலாலும் முன்னேற்றத்திற்குரிய வழியைக் காட்டி அழகுபடுத்தினார்” என்று எழுதப்பட்டிருக்கின்றது.
“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்”
என்ற திருக்குறளுக்கு உதராணமா வாழ்ந்தாரு புக்கர். அவரோட வாழ்வு நமக்கெல்லாம் ஒரு உந்து சக்திய தருதுல்ல…முயற்சியும் உழைப்பும் இருந்தா இந்த உலகத்துல பெரிய பெரிய சாதனைகளைச் சாதிக்கலாம்…நாமும் உயரணும் நம்மைச் சார்ந்தவங்களையும் உயர்த்தணும்…அப்பத்தான் வாழ்க்கை வசந்தமா இருக்கும்…என்ன புரிங்சுக்கிட்டீங்கள்ள…அப்பறம் என்ன ஒங்களோட குறிக்கோள அடைய பெருமுயற்சி பண்ணுங்க…உழைங்க வெற்றி ஒங்களுக்குத்தான்….
பிறந்த சில வருடங்களில் தந்தையை இழந்தார்….அடுத்து சகோதரன்….அடுத்து சகோதரி…இப்படித் தொடர்ந்த துர்மரணங்கள்…எங்கும் இருள்…இருள்…துன்பம்…இதைத் தவிர அவருக்கு எதுவும் இந்த உலகத்தில் தெரியவில்லை….வாழ்க்கை தந்த வடுக்களாலேயே அவர் தத்துவஞானியாகி விட்டார்….காதல் அவருக்குக் கைகொடுத்தது…பல அறிஞர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது…அமெரிக்காவின் சிறந்த சிந்தனையாளராகத் திகழ்ந்தார்….”வெற்றியின் முதல் ரகசியம் தன்னம்பிக்கையாகும்…” ”அடிமைத்தனமே இருக்கக் கூடாது. அதனால் தீண்டப்படும் ஒவ்வொன்றும் நஞ்சாய் நாசமடையும்” இப்படியெல்லாம் தத்துவங்கள் பலவற்றைச் சொன்னாரு அவரு யாரு தெரியுதா…என்ன யோசிக்கிறீங்க…சரி…சரி யோசிங்க…யோசிங்க…அடுத்த வாரம் பார்ப்போம்…(தொடரும் …………52)
- வாழ்க நீ எம்மான் (2)
- அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலி
- தொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்
- சீன மரபு வழிக்கதைகள் – 1.மெங்கின் பயணம்
- பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]
- மூத்த – இளம்தலைமுறையினர் ஒன்று கூடிய பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்கு
- மருத்துவக் கட்டுரை டிங்கி காய்ச்சல்
- ராதா
- தினமும் என் பயணங்கள் – 10
- திண்ணையின் இலக்கியத் தடம் – 28
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-37
- அன்னம் விருது பெறும் எழுத்தாளர் சங்கரநாராயணன்
- நீங்காத நினைவுகள் 40
- புகழ் பெற்ற ஏழைகள் 51
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அண்டவெளி மோதல்களில் குள்ளக் கோள் சாரிக்ளோவில் வளையங்கள் உண்டானது முதன்முதலில் கண்டுபிடிப்பு
- சென்றன அங்கே !
- ’ரிஷி’ கவிதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3
- சீதாயணம் நாடகப் படக்கதை – 2 6
- நெய்யாற்றிங்கரை
- கவிதைகள்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் படைப்பாளர்கள் அன்புச்செல்வன் – சந்திரகாந்தம் ஆகியோருக்கு அஞ்சலிக் கூட்டமும் அவர்கள் படைப்புக்கள் பற்றிய கருத்தரங்கமும். 6 ஏப்ரல் 2014 (ஞாயிறு)