கவிதைகள்

This entry is part 15 of 22 in the series 30 மார்ச் 2014

வாய்ப்பு

 

அந்த சொல்

உச்சரிக்கப்பட்டுவிட்டது

அப்போது நீ

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாய்

தேநீர் குடித்துக் கொண்டிருந்த

போது தான்

அந்தச் செய்தியை

கேள்விப்பட்டேன்

விரல்களிலின்றி மொக்கையாக

இருக்கும் கைகள் அடிக்கடி

நினைவுக்கு வந்தன

கழிவிரக்கம் கொள்வதற்கு

ஊனமாய் இருக்க வேண்டிய

அவசியம் இல்லை

பள்ளிகளில் பென்சிலைக் களவாடியது

ஏனோ ஞாபக அடுக்குகளில்

வந்து போகிறது

கவிதை எழுத ஆரம்பித்ததிலிருந்து

மதுவில் நீந்துவதை மறந்திருந்தேன்

எத்தனையோ ரட்சகர்கள் தோன்றினாலும்

வாழ்க்கையை நேர்த்தியாக்க

யாருக்கும் வழங்கப்படவில்லை

மீண்டும் ஒரு வாய்ப்பு.

 

 

 

 

 

 

எத்தகைய வழிகளை கடந்துவந்து

நான் இந்த நிலையை

அடைந்து இருக்கிறேன்

எந்த இலக்கை நோக்கி

விரைந்து கொண்டிருக்கிறேன்

நான் எடுத்து வைக்கவேண்டிய படியை

யார் நிர்ணயிப்பது

என் ஆன்மத்தீயை

தூண்டிவிடும் புத்தகத்தை

யார் எழுதியிருப்பது

என்னுடன் பழக வேண்டிய நபர்களை

யார் தீர்மானிப்பது

யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத விஷயத்தை

என்னுள் முணுமுணுத்துக் கொள்கிறேன்

கடந்த காலங்களில்

நடந்த விஷயங்களுக்காக

என்னை நானே இகழ்ந்து கொள்கிறேன்

சிநேகிதமாக கைகுலுக்கிய நபர்கள் தான்

நம்பிக்கைத் துரோகம் செய்வது

மடியில் முகம் புதைத்து அழுவதற்கு

தோளில் சாய்த்து ஆறுதல் சொல்வதற்கு

வெற்றி பெற்றதும்

பேருவகை கொள்வதற்கு

தன்னை என்னில் கலந்த

தோழி அமைந்தால்

வாகை சூடலாம்

இலட்சியத்தோடு

வாழ்ந்து பார்க்கலாம்.

 

 

 

பள்ளியறை

 

இரண்டு வார்த்தைகளுக்கு

இடைப்பட்ட தருணத்தில்

மௌனம் வெளிப்படுகிறது

துயரங்களுக்கு வருந்துவது

படைப்பை கேலி செய்வது போல

மரணம் தவணை முறையில் தான்

நடக்கிறது கவலை வேண்டாம்

உனக்கு அபயமளிக்க

ஆயிரம் தெய்வங்கள் இங்குண்டு

என்றோ வரப்போகும்

சாவை எண்ணி இன்று

வருத்தப்பட்டு என்ன பயன்

சண்டாளனுக்கு ஆளக்கிடைக்கிறது

சாம்ராஜ்யம்

பாவக் கறை படிந்த மனது

கொலைபாதகம் செய்கிறது

காத்து ரட்சிக்க வேண்டிய கடவுள்

பாற்கடலிலா பள்ளிகொள்வது.

 

 

 

தலைமறைவு

 

ஆளாய்ப் பறக்கிறார்கள்

சால்வைக்காக, மலர் மாலைக்காக

அரசியல் கட்சிகளின் நிழலில்

பவிசாக வாழ்கிறார்கள்

விலை கொடுத்து வாங்கி

விருதுகளை குவிக்கிறார்கள்

கூட்டத்தை கூட்டி வைத்து

மேடையில் முழக்கமிடுகிறார்கள்

சுழல் விளக்கு பொருத்திய வாகனத்தில்

பயணிக்கிறார்கள்

போலீஸ் பாதுகாப்பில்

அதிகார மையமாக

வலம் வருகிறார்கள்

நாற்காலிக்காக சுவரொட்டி மூலம்

சுவற்றினை நாறடிக்கிறார்கள்

மூளைச் சலவை செய்யப்பட்ட மக்கள்

அவர்களை பின்பற்றுகிறார்கள்

கோட்டையைப் பிடிக்க

வாக்காளர்களிடம் கையேந்துகிறார்கள்

தேர்தல் முடிந்ததும் ஐந்து ஆண்டுகளுக்கு

தலைமறைவாகிவிடுகிறார்கள்.

 

 

 

இங்கொன்றும் அங்கொன்றும்

 

முடிக்காமல் விட்ட புத்தகங்கள்

என்னை வாவென்றழைக்கின்றன

ஈக்களைப் போல

அங்கொன்றும் இங்கொன்றுமாக

மேய்கிறேன் புத்தகங்களை

எங்கிருந்தேனும் அசைபோடுவதற்கு

வார்த்தைகளை சேகரித்துக் கொள்கிறேன்

இருளடைந்த வீட்டில் புத்தகங்கள்

தீபமேற்றிச் செல்கின்றன

போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய

சிந்தனையை சிறை வைக்க முயல்கிறார்கள்

புரட்சியாளர்கள் சாவதில்லை

எழுத்தின் மூலம வாழ்கிறார்கள்

புத்தகங்கள் வெற்றுக் காகிதங்களல்ல

சாமானியரை சாதனையாளர் ஆக்குபவை

எழுத்தை வைத்து யுத்தம் செய்வோம்

எஞ்சியது சாம்பலானால்

சாவைக் கூட சிநேகிதம் கொள்வோம்.

 

 

 

ப.மதியழகன்

Series Navigation
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *